Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

ஸ்பிங்ஸ் மற்றும் கீசா பிரமிட் மர்மங்கள்

கீசா பிரமிட் இருக்கும் பகுதியிலேயே ஸ்பிங்ஸ் சிலையும் இருக்கிறது என்பதை நாம் முன்பே பார்த்தோம். இந்தச் சிலையின் உடல் பகுதி பல ஆண்டுகள் நீரில் முழ்கியிருந்ததற்கான அழிக்க முடியாத நிலவியல் ஆதாரம் இருப்பதையும் பார்த்தோம். ஆனால் பாரம்பரிய எகிப்தியாலஜி இந்தச் சிலை அடி முதல் முடி வரை பாரோ காஃப்ரியால் கட்டப்பட்டது என்று அடம் பிடிக்கிறது. இவன் பாரோ கூஃபுவின் மகன். நிலவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஸ்பிங்சின் உடல் பகுதி பாரோ காஃப்ரி காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்கின்றன. அதாவது மிகச் சரியாகச் சொல்வதென்றால் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே. பாரோ காஃப்ரி அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டுப் பாழடைந்து கொண்டிருந்த ஸ்பிங்ஸ் சிலையின் தலைப் பகுதியை மட்டும் செப்பனிட்டுப் புதுப்பித்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை வளப்படுத்த அவர்கள் தரும் வரலாற்று ஆதாரம் 'இன்வென்டரி ஸ்டிலே'. இது கீசா பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுப் பலகை.

இது பாரோகூஃபுவால் வெளியிடப்பட்டது. இந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி, ஸ்பிங்ஸ் சிலைக்கு அருகில் ஒரு கோயில் கட்டப்படவேண்டும் என்பது. அதாவது கூஃபுவின் காலத்திலேயே இந்த ஸ்பிங்ஸ் சிலை அங்கே இருந்திருக்கிறது அதன் பக்கத்தில் ஒரு கோயில் கட்டப்படவேண்டும் என்பது கூஃபுவின் கட்டளை. கூஃபுவின் காலத்திலேயே இருந்த ஒரு சிலையை அவனுடைய மகன் காஃப்ரி எப்படிக் கட்டியிருக்க முடியும்? நியாயமான கேள்விதானே. அப்படியென்றால் யார் இந்த ஸ்பிங்ஸ் சிலையைச் செதுக்கியிருப்பார்கள்? என்ன நோக்கத்திற்காகச் செதுக்கியிருப்பார்கள்? இந்தக் கேள்விகளுக்கு இரண்டு விதமான பதில்களை ஆராய்ச்சியாளர்கள் தருகிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய நாகரீகத்திற்கு முன்பிருந்த பிறகு அழிந்துப்போன அட்லாண்டிஸ் நில மக்கள் இந்தச் சிலையைச் செதுக்கியிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அட்லாண்டிஸ் நில அழிவிற்கான வலுவான மறுக்க முடியாத வரலாற்று ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் இந்தப் பதில் இப்போதைக்கு வெறும் கற்பனையாக மட்டுமே இருக்க முடியும். ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் மற்றொரு கருத்து ஸ்பிங்ஸ் சிலையை எகிப்தியர்கள்தான் கட்டியிருக்க வேண்டும் ஆனால் கி.மு. 10,000 வருடங்களுக்கு முன்பே இதை அவர்கள் செய்திருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தச் சிலை கட்டப்பட்டதன் நோக்கம் வானியல் நிகழ்வு ஒன்றை அடையாளப்படுத்தத்தான் என்றும் சொல்கிறார்கள். அந்த நிகழ்வு, சூரியன் நில நடுக்கோட்டிற்கு மேலும் கீழும் பயணம் செய்து கீழ் வானில் உதிக்கும் நிகழ்வுதான், ஒவ்வொரு 21600 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன் பல விண்மீன் கூட்டங்களின் பின்னணியில் கீழ் வானில் உதிக்கும். கடந்த 2000 வருடங்களாக (இப்போது நாமிருக்கும் காலகட்டத்தையும் சேர்த்து) சூரியன் கீழ்வானில் பிசிஸ் தி ஃபிஷ் நட்சத்திரக் கூட்டத்திற்கு நேராக உதிக்கிறான்.

இதற்கு முந்தைய இரண்டாயிரம் ஆண்டுகளில் 'டாரவுஸ் திஃபுல்' நட்சத்திரக் கூட்டத்திற்கு நேராக உதித்தான். அதே போலக் கி.மு. 10,000 ஆண்டுகளில் லியோ தி லையன் நட்சத்திர கூட்டத்திற்கு நேரே உதித்திருக்கிறான், இது கி.மு. 10,970 - 8810 ஆண்டுகள் வரை நீடித்திருக்கிறது. ஸ்பிங்ஸ் சிலையின் முகமும் மிகத் துல்லியமாக்கக் கீழ் வானில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும் இடத்தைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்றையிலிருந்து பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சூரியன், லியோ தி லையன் நட்சத்திர கூட்டத்திற்கு நேரே உதித்ததை அடையாளப்படுத்தவே சிங்க உடலில் மனித தலைக்கொண்ட ஸ்பிங்கசை அன்றைய எகிப்தியர்கள் செதுக்கியிருக்கவேண்டும். இதுவே எல்லா வகையிலும் ஏற்றப் பதிலாக இருக்கிறது. அது சரி ஸ்பிங்ஸ் நட்ட நடுப் பாலைவனத்திலிருக்கிறது பிறகு அது எப்படிப் பல ஆண்டுகள் நீரில் மூழ்கியிருந்திருக்க முடியும். நிலவியல் ஆதாரம் சொல்லும் நீர் அரிப்பு அதில் ஏற்பட சாத்தியக் கூறு பாலைவனத்தில் எப்படி என்று நீங்கள் யோசிக்கலாம். நானும் யோசித்தேன். அதே நிலவியல் ஆராய்ச்சிகள் இன்னொரு விசயத்தையும் சொல்கிறது அது எகிப்திய பாலைவனம் முழுவதும் ஒரு காலத்தில் கடலில் மூழ்கியிருந்திருக்கிறது என்பது. இன்றைக்கு எகிப்தியப் பாலைவனத்தில் கடல் சிப்பிகள் கிடைப்பதும் இதற்கான வலுவான ஆதாரம்.

அப்படியென்றால் கடல் நீர் எகிப்திற்குள் புகுந்தது எப்போது? எதனால்? ஸ்பிங்ஸ் சிலை செதுக்கப்பட்ட பின்பே கடல் நீர் எகிப்திற்குள் புகுந்திருக்கவேண்டும். அதாவது கி.மு. 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு. கடல் நீர் உள்ளே புக வேண்டிய காரணம் என்ன என்கிற இடத்தில்தான் அட்லாண்டிஸ் மித் உள்ளே வருகிறது. இத்தோடு மூன்று முறை அட்லாண்டிஸ் என்கிற பெயரை நாம் கேட்டுவிட்டோம்தானே. அட்லாண்டிஸ் என்கிற பெயரை முதலும் கடைசியுமாக இந்த உலகத்திற்கு அறிவித்தது கூட எகிப்துதான் பிளாட்டோ கி.மு. 3600 வாக்கில் எழுதிய 'கிரைடியாஸ் & டையாமேஸ்' என்கிற புத்தகத்தில் அட்லாண்டிஸ் குறித்துச் சொல்கிறார். இந்தப் புத்தகத்தில் சோலோன் என்கிறவர் அட்லாண்டிஸ் குறித்துச் சொல்வது போலப் பிளாட்டோ எழுதியிருக்கிறார். அட்லாண்டிஸ் குறித்த சொன்ன ஒரே நபரும் பிளாட்டோ மட்டும்தான். சோலோன் வரலாற்றில் வாழ்ந்த மனிதர். மிகச் சிறந்த வணிகர் மற்றும் துறவி. இவர் கிரேக்க நாட்டின் சார்பில் வணிகம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த எகிப்திற்குச் சென்றிருந்த சமயத்தில் சாயிஸ் என்கிற நகரில் சோன்சிஸ் என்கிற எகிப்திய பூசாரி ஒருவரைச் சந்தித்ததாகவும் அவர் அட்லாண்டிஸ் நிலப் பகுதிக் குறித்துத் தனக்கு விளாவாரியாகச் சொன்னதாகவும் சோலோன் சொல்வது போலப் பிளாட்டோ எழுதியிருக்கிறார்.

எகிப்திய பூசாரி சோன்சிஸ் செல்வதின்படி அட்லாண்டிஸ் நிலப் பகுதி எகிப்திற்கு மேற்கிலிருந்திருக்கிறது. அதுவும் நடுக் கடலில் ஒரு தீவு நாடாக. அவர் காலத்திற்குச் சுமார் 7000 வருடங்களுக்கு முன்பு அதாவது இன்றையிலிருந்து 9000 வருடங்களுக்கு முன்பு அட்லாண்டிஸ் நிலம் கடலுக்குள் மூழ்கிவிட்டது என்று சோன்சிஸ், சோலோனிடம் சொல்லியிருக்கிறார். சுமார் 9000 வருடங்களுக்கு முன்பு நடந்த இயற்கை பேரிடர் ஒன்று உலகின் பல பாகங்களைக் கடலுக்குள் மூழ்கடித்திருந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் அட்லாண்டிஸ் நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கி அழிந்துவிட்டதைப் போல எகிப்தும் கடலுக்குள் மூழ்கியிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சோன்சிஸின் கூற்றுப்படி அட்லாண்டிஸ் எகிப்திற்கு மேற்கே அட்லாண்டிக் கடலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய நவீன தொழில் நுட்பங்களைக்கொண்டு அட்லாண்டிக் கடலில் ஆராய்ச்சிகள் செய்து பார்த்ததில் எத்தகைய தீவும் அந்தக் கடலுக்குள் மூழ்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த முடிவுகளே அட்லாண்டிஸ் நிலப் பகுதி ஒரு மித் என்கிற முடிவிற்கு வர சில ஆராய்ச்சியாளர்களைத் தூண்டிவிட்டது. ஆனால் இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் அட்லாண்டிஸ் நிலப் பகுதி உண்மையில் இருந்திருக்கலாம் ஆனால் அது அட்லாண்டிக் கடலில் இல்லாமல் வேறு கடலில் இருந்து பின்பு கடலுக்குள் மூழ்கியிருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அட்லாண்டிஸ் நிலப் பகுதியையும் லெமூரியக் குமரி கண்டத்தையும் முடிச்சிப்போட்டு பேசும் ஆராய்ச்சியாளர்களும் கூட இருக்கிறார்கள். அட்லாண்டிஸ் நில மக்களின் ஒரு காலனியாக எகிப்திய நாகரீகம் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் கூட உண்டு. அட்லாண்டிஸ் நில மக்களிடமிருந்தே எகிப்தியர்கள் கட்டிடக் கலை அறிவையும், வானியல் அறிவையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்,

அட்லாண்டிஸ் நிலப் பகுதி உண்மையோ இல்லையோ ஆனால் அது அழிந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் உலகின் பல பாகங்கள் கடலுக்குள் மூழ்கியது என்பது மட்டும் உண்மை. நம்முடைய தொல்காப்பியம், சுமேரியர்களின் கில்காமேஷ் மற்றும் பைபிள் போன்றவையும் இது குறித்துப் பேசுகின்றன. ஆக ஸ்பிங்ஸ் சிலையில் எப்படிக் கடல் நீர் அரிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கான பதிலும் கிடைத்துவிட்டது. ஆனால் கீசாப் பிரமிடிற்குள் எப்படிக் கடல் உப்புப் படிவம் வந்திருக்க முடியும்? அப்படியென்றால் கீசா பிரமிடும் ஸ்பிங்ஸ் சிற்பத்துடன் ஒரே காலத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்ததா? அப்படிப் பார்த்தால் கீசாப் பிரமிடும் கி.மு. 10,000 ஆண்டுகள் வாக்கில்தானே கட்டப்பட்டிருக்கவேண்டும்? கி.மு. 2000-ங்களில் வாழ்ந்த பாரோ கூஃபு எப்படிக் கட்டியிருக்க முடியும்? இப்படியான தொடர்ச்சியான கேள்விகள் எழுவது நியாயம்தான். ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத்தான் காண முடியவில்லை. இந்தத் தொடர் கேள்விகளுக்குப் பதிலாகச் சில அனுமானங்களையே முன்வைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவற்றைக் கேட்பதற்கு முன்பு கீசா பிரமிடிற்குள் கடல் உப்புப் படிவங்களை முதலில் கண்டவர் யார் என்பதை உங்களுக்குச் சொல்லாமல் விட்டுவிட்டால் எப்படி

அரோன் அல்-ரசித் என்றால் நிச்சியம் யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆயிரத்து ஒரு இரவு கதையில் வரும் அரசன் என்றால் நிச்சயம் உங்களுக்குத் தெரியும்தானே. இவரை மையமாக வைத்து அன்றைய காலங்களில் பல புனைவுக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஆயிரத்து ஓர் இரவு கதைகளும். இவருக்கு அல்-அமீன், அப்துல்லா அல் மாமூன் என்று இரண்டு மகன்கள் உண்டு. அப்துல்லா அல்-மாமூன் அவருடைய தந்தைக்குப் பிறகு கி.பி. 873-ல் பாக்தாதில் களிப்பாவாகப் பதவியேற்றவர். இவருடைய மிகப் பெரும் விருப்பங்களில் ஒன்று பாக்தாதை கல்வியில் சிறந்த நகரமாக மாற்றவேண்டும் என்பது. உலக ஞானிகளின் உறைவிடமாகப் பாக்தாதை மாற்றுவதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்தார் அவர். அதில் ஒன்று இவரால் பாக்தாத்தில் நிறுவப்பட்ட ஹவுஸ் ஆப் விஸ்டம் என்கிற நூலகம். அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்திற்கு அடுத்து உலகின் மிகப் பெரிய நூலகமாக இருந்தது இந்த நூலகம்தான். அதே போன்று உலகின் மிகச் சிறந்த வானியில் ஆராய்ச்சிக் கூடத்தையும் அவர் உருவாக்கினார். இதன் நோக்கம் வானிலிருக்கும் திசை காட்டும் நட்சத்திரங்களைக் குறித்த ஒரு வரை படத்தை உருவாக்கவேண்டும் என்பது. பூமியின் சுற்றளவை தெரிந்து கொள்வதில் இவருக்குத் தீராத ஆர்வம். அதற்காக வட திசையிலும் தெற்கு திசையிலும் வானியியலாளர்களை அனுப்பிவைத்தார். அவர்கள்தான் முதன் முதலில் பூமியின் சுற்றளவு 23,1800 மைல்கள் என்கிற ஓரளவு சரியான அளவைக் கண்டுபிடித்தவர்கள் (சரியாள அளவு 24,9000 மைல்கள்).

அவரிடம் எகிப்தின் கீசா பிரமிடில் நட்சத்திரக் கூட்டங்களின் வரைபடமும். நிலவியல் வரைபடமும் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றைத் தான் உருவாக்கிய நூலகத்திற்குக் கொண்டு வந்துவிட முடிவு செய்த அவர் கி.பி. 820-ல் பாக்தாதின் சிறந்த கல்வியாளர்களையும் பொறியியலாளர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு எகிப்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு எகிப்து அவருடைய ராஜ்யத்தின் ஒரு பகுதி. எகிப்தில் அவர் போய் நின்றது கீசா பிரமிடில். அவருடைய காலகட்டத்தில் கீசாப் பிரமிடிற்கான உண்மையான நுழைவாயிலை அறிந்தவர் யாரும் இல்லை. அவராலும் அவர் அழைத்துச் சென்ற பொறியியலாளர்களாலும் கூடக் கீசா பிரமிடிற்குள் நுழைவதற்கான வாசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரமிடின் கீழ் பகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்த அல்-மாமூன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே அவருடைய படையால் கீசா பிரமிடின் அடிப் பகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முடிந்திருக்கிறது. கீசா பிரமிடிற்குள் இருக்கும் மூன்று முக்கிய அறைகளுக்கு அரசிகள் அறை, அரசர்கள் அறை, பாதாள அறை என்று பெயர் கொடுத்தவரும் இவரே. உலக வரைபடத்தையும், நட்சத்திரங்களின் வரைபடத்தையும் தேடிச் சென்றவருக்கு மிகுந்த ஏமாற்றம். அவர் எதிர்பார்த்துச் சென்ற பொருள்களோடு சேர்த்துக் கீசா பிரமிடிற்குள் எவ்வித பொருளும் எப்பொழுதும் இருந்ததற்கான சிறு கீறல் அடையாளம் கூட இல்லாதது அவரையும் அவருடைய ஆட்களையும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

அரசர்கள் அறையில் காலியாகக் கிடந்த சர்கபேகசைத் தவிர வேறு எதையும் பெயரளவிற்குக் கூடக் காண முடியாததைக் கண்டு அல்-மாமூன் கடுப்பாகிவிட்டிருக்கிறார். அந்தக் கடுப்பிலும் அவர் தவறாமல் கவனித்த ஒரு வினோதமான விசயம் அரசர்கள் அறையின் தரைப் பகுதியிலும் சுவர் பகுதியிலும் நாட்ரன் (கடல் உப்பு படிவம் இருப்பதை, இது அவருக்குப் பெரும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. அதன் பிறகு இவ்வளவு தூரம் தன்னுடன் கீசா பிரமிடை திறக்கப் பாடுபட்ட தன்னுடைய படையை ஏமாற்ற விரும்பாத அல்-மாமூன் தன்னுடைய ஆட்கள் அறியாத வண்ணம் இரவோடு இரவாகக் கீசா பிரமிடிற்குள் தங்கப் பொருட்கள் சிலவற்றை எடுத்துவந்து போட்டுவிட்டு மறுநாள் காலை கீசா பிரமிடிற்குள் புதையல் பொருட்கள் இருப்பதாகச் சொல்லி அவருடன் வந்த ஆட்களை அவற்றை எடுத்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார். கீசா பிரமிடிற்குள் உப்புப் படிவம் இருந்ததற்கான முதல் வரலாற்று பதிவைத் தருவது அல்-மாமூனின் இந்தப் பயணம்தான்.

கீசா பிரமிடிற்குள் கடல் உப்புப் படிவம் இருந்தமைக்கான காரணமாக ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கும் அனுமானம் கீசா பிரமிடும், ஸ்பிங்ஸ் சிலைப் போன்றே பாரோ கூஃபு காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு ஸ்பிங்ஸ் சிலை போலவே கீசா பிரமிடும் கடலுக்குள் மூழ்கியிருந்தது என்பதுதான். இது தொடர்பாக அவர்கள் மேலும் தரும் விளக்கம், கீசா பிரமிட் ஒரு நபரால் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்க முடியாது என்றும் அது மூன்று கட்டமாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பல தலைமுறை மக்களால் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பது. கீசா பிரமிட்பூமிக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்கிற்கு மேல் கட்டப்பட்ட கட்டிடம். அதோடு மட்டுமில்லாமல் கீசா பிரமிட் இருக்கும் இடம் பூமியின் மிகத் துல்லியமான நடுமையம் கூட இதைக் கி.மு. 10,000 வருடங்களுக்கு முன்பிருந்த எகிப்தியர்கள் தங்களுடைய வானியல் அறிவு மூலம் உணர்ந்திருக்கவேண்டும். இதை அடையாளப்படுத்தும் விதமாக அந்த இடத்தில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறையைக் குடைந்து இன்றைக்குப் பிட் சேம்பர் என்று அழைக்கப்படும் அறையை முதலில் கட்டியிருக்கவேண்டும்.

இதற்குப் பிறகு சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து அதாவது முதல் பாரோவான நார்மருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இன்றைக்கு நாம் பார்க்கும் கீசா பிரமிடின் அடிப்பாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அடிப்பாகத்தைக் கட்டியவர்கள் பிரமிடின் நான்கு பக்க மூலையும் மிகத் துல்லியமாக்கப் பூமியின் நான்கு திசைகளோடும் ஒத்துப்போகும் வகையில் கட்டியிருக்கிறார்கள். இதற்கடுத்து பாரோ கூஃபு தன்னுடைய காலத்தில் இந்த அடிப்பாகத்திற்கு மேல் இன்றைய கீசா பிரமிடின் மேல் பாகத்தைக் கட்டியிருக்க வேண்டும். அதாவது அரசிகள் மற்றும் அரசர்கள் அறைகள் இருக்கும் பகுதிகள். மேலும் இந்த இடத்தின் வானியல் முக்கியத்துவம் கருதியே பாரோ கூஃபுவும் இரண்டு அறைகளின் இரண்டு திசைகளிலும் இரண்டு சன்னல்களை வைத்து இந்தச் சன்னல்கள் மிகச் சரியாக வானில் சிரஸ் எனப்படும் டாக் நட்சத்திரத்தை பார்க்கும் வண்ணமிருக்கிறது) கட்டியிருக்கிறான். ஆராய்ச்சியாளர்களின் இந்த அனுமானத்தை வலுப்படுத்த மேலும் சில புறக் காரணங்கள் இருக்கின்றன. அதாவது எகிப்தில் கட்டப்பட்டிருக்கும் மற்ற எல்லாப் பிரமிடுகளிலும் (கீசா பிரமிடிற்குப்பின்புகட்டப்பட்ட பிரமிடுகளையும் சேர்த்து) பாரோவின்மம்மிவைக்கப்படும் அறையானது ஒன்று பூமிக்கு அடியில் இருக்கிறது அல்லது தரை மட்டத்திலிருக்கிறது. கீசா பிரமிடில் மட்டுமே இந்த அறை தரை மட்டத்திற்கு மேலிருக்கிறது. அதே போலக் கீசா பிரமிடில் மட்டுமே ஏகப்பட்ட அறைகள் (நான்கு பக்கமும் மூடப்பட்ட இருக்கின்றன. அதே போலக் கீசா பிரமிடிற்குள் எந்தக் காலத்திலும் எந்த ஒரு பாரோவின் மம்மியும் வைக்கப்பட்டதற்கான அடையாளமும் இல்லை. பிரமிடின் உள் அறைகளில் எத்தகைய மந்திர எழுத்துக்களும் ஓவியங்களும் எழுதப்படவோ வரையப்படவோ இல்லை. இது பிரமிட் கட்டுமான விதிக்கு முற்றிலும் வினோதமானது.

ஆராய்ச்சியாளர்களின் இந்த விளக்கங்களும் முழுமையான விளக்கங்களாக இல்லை. பாரோ கூஃபு மூன்றாம் கட்டமாக அவனுடைய காலத்தில் அரசிகள் அறை மற்றும் அரசர்கள் அறையைக் கட்டியிருந்தால் அதற்குள் எப்படிக் கடல் உப்புப் படிவம் வந்திருக்க முடியும்? இப்படிக் கீசா பிரமிட் குறித்த கேள்விகள் எழும்பியபடியே இருக்கின்றன. இத்தகைய சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருக்கவேண்டிய எகிப்திய பப்பைரஸ் ஆவணங்களும் இந்த விசயத்தில் வாய் திறக்காமல் மௌனமாகவே இருப்பது எறிகிற சந்தேகத்தில் நெய் ஊற்றுவது போல் இருக்கிறது. சரி கீசா பிரமிட் குறித்த சந்தேகங்களை ஆராய்ச்சியாளர்களிடமே விட்டுவிட்டுக் கீசா பிரமிட் வளாகத்திலேயே 1954 மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அற்புதத்தைக் குறித்துப் பார்க்கலாம். இந்த அற்புதம் தென்னிந்திய தமிழர்களுடன் தொடர்புடையது. இந்த அற்புதத்தைக் கண்டுபிடித்தவர் கமால் எல்-மாலாக். கீசா பிரமிடின் தெற்குத் திசையில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் அவர். அவர் கண்டு பிடித்தது 103 அடி நீளமும், 17 அடி ஆழமும் கொண்ட சதுரமான குழியை. குழியைக் கண்டுபிடிச்சதுல என்னாய்யா அதிசயம் கிடக்கு என்று நீங்கள் நான் சொல்ல வருவதை முழுதாகக் கேட்பதற்கு முன்னாலேயே அலுத்துக்கொண்டால் எப்படி அற்புதமே அவர் அந்தக் குழிக்குள் என்ன பொருளை கண்டுபிடித்தார் என்பதில்தானே இருக்கிறது. அந்தக் குழியின் ஆறாவது அடியில் 15 டன் எடைக் கொண்ட சுண்ணாம்பு பலகை கற்களால் ஆன தளம் போன்ற அமைப்பு இருக்கிறது. அதற்குள்ளே மிக நீளமான கப்பல் ஒன்றின் அக்கு அக்காகப் பிரிக்கப்பட்ட மரப் பலகைகள் இருந்தது. இந்தப் பலகைகள் தேவதாரு மரத்திலிருந்து செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பலகைகளை வைத்து மீண்டும் அந்தக் கப்பலைக் கட்ட இன்றைய எகிப்திய ஆராய்ச்சியாளர்களுக்கு முழுதாகப் பதினான்கு வருடங்கள் பிடித்திருக்கிறது. கட்டி முடித்ததும் அவர்கள் கண் முன் நின்றது 143 அடி நீளம் கொண்ட கப்பல் ஒன்று. இந்தக் கப்பல் எத்தகைய சந்தேகமும் இல்லாமல் கடல் பயணத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட கப்பல். அதிலும் மிக முக்கியமாக நடுக்கடல் பயணத்திற்கென்று. அதாவது நடுக்கடலில் பயணித்துக் கண்டம் விட்டுக் கண்டம் செல்வதற்காகக் கட்டப்பட்ட கப்பல். இதுவும் சில கேள்விகளை ஆராய்ச்சியாளர்களுக்கு எழுப்பிவிட்டு விட்டது. எகிப்தியர்களுக்கும் கடலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படியிருக்க நடுக்கடலில் பயணம் செய்வதற்கான கப்பலை பாரோ கூஃபு கட்டுவதற்கான தேவையென்ன? பாரோக்கள் இறந்த பிறகு மறு உலகிற்குச் செல்வதற்கு அவர்கள் படகில்தான் போவார்கள் அதற்காக இது கூஃபுவின் பிரமிடிற்குப் பக்கத்திலேயே வைக்கப்பட்டிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் பாரோக்களின் மறு உலகப் பயணமும், ரா கடவுளுடனான விண் பயணமும் படகில்தான் நிகழும், இவ்வளவு பெரிய கப்பலில் அல்ல.

இவ்வளவு பெரிய கப்பல் நிச்சயம் கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வணிகக் கப்பல், பாரோ கூஃபுவின் காலகட்டத்தில் அதாவது இன்றையிலிருந்து 45000 வருடங்களுக்கு முன்பிருந்த எகிப்திய மற்றும் சுமேரிய நாகரீகத்திற்கு நடுக்கடல் பயணத் தொழில் நுட்பம் என்பது தெரியாத ஒன்று. அன்றைய காலகட்டத்தில் நடுக்கடல் பயணச் சூட்சமமும் அதற்கான பெரிய கப்பலைக் கட்டும் தொழில் நுட்பமும் அறிந்திருந்த ஒரே மக்களினம் தமிழினம்தான். இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் தேவதாரு மரத்தில் செய்த கப்பல் ஒன்று கீசா பிரமிடின் அருகில் புதைக்கப்பட்டிருக்கிறது என்பது அற்புதமான விசயம்தானே.

இந்த அற்புதம் இத்துடன் நின்றுவிடவில்லை. கிரஹாம் அன்காக் என்கிற ஆராய்ச்சியாளர் எகிப்தின் அபைடோஸ் நகரில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நைல் நதியின் கரையிலிருந்து எட்டு மைல் தொலைவில் இருந்த ஒரு புதைபொருள் இடத்தைக் கண்டுபிடித்தார். இந்த இடத்தில் 12 கப்பல்கள் அப்படியே புதைக்கப்பட்டிருந்ததை வெளியே கொண்டுவந்தார். இந்தக் கப்பல்கள் அனைத்தும் 72 அடி நீளம் கொண்டவை. இவற்றின் காலம் பாரோ கூஃபுவின் காலத்திற்கும் முற்ப்பட்டவைகள் என்று அவர் கார்டியன் பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் - கார்டியன் ரிப்போர்ட் (21, டிசம்பர் 1991). அதாவது இன்றையிலிருந்து சுமார் 200 வருடங்களுக்கும் முற்பட்டது. இந்த 12 கப்பல்களும் நடுக்கடலில் பயணம் செய்வதற்கென்று கட்டப்பட்ட கப்பல்கள். அனைத்தும் தமிழர்கள் கட்டியவையாகத்தான் இருக்க முடியும். ஆனால் இவற்றை வெளியுலகத்திற்கு ஆணித்தரமாக எடுத்துச் சொல்லத்தான் நமக்கு விதியில்லை. இதற்காக இனியொரு விதியா செய்ய முடியும்! அப்படியா என்று வாயைப் பிளந்து கேட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்க போகவேண்டியதுதான்.

கூஃபுவின் காலத்தில் உச்சத்தைத் தொட்ட பிரமிட் கட்டிடக்கலை அதன் பிறகு வந்த பாரோ பரம்பரையினரின் காலத்தில் வீழ்ச்சியடைந்துவிட்டது. நாமும் போதுமான அளவிற்குப் பிரமிட் கட்டிடக் கலையைக் குறித்துத் தெரிந்துக்கொண்டுவிட்டோம். என்னத்தான் எகிப்திய நாகரீகம் பாரோவின் கல்லறையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும் இலக்கிய வளர்ச்சியும் அந்த நாகரீகத்தில் ஏற்படாமலில்லை. இது குறித்துத் தெரிந்து கொள்ள நாம் பாரோ அமினமெத் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நாம் பாரோ கூஃபு காலத்திலிருந்து சுமார் 20 வருடங்கள் முன் நோக்கி வரவேண்டும். வாருங்கள் செல்வோம்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.