எகிப்தில் நூற்றுக் கணக்கில் கடவுளர்கள் உண்டு என்பதைக் குறித்து நமக்கு முன்பே தெரியும். எல்லாக் கடவுளர்களுக்கும் தோற்றம் குறித்த கதை உண்டா என்றால் நிச்சயமாக இல்லை. மிகக் குறிப்பிட்ட முக்கியமான கடவுளர்களுக்கு மட்டுமே தோற்றக் கதைகள் உண்டு. அந்தக் கதைகளும் எகிப்தியர்களின் உலகத் தோற்றக் கொள்கையுடன் தொடர்புடையது. இந்தக் கதைகள் ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லக் கூடியவை கிடையாது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவில் உலகத் தோற்றம் குறித்தும் அதன் மூலம் உருவான கடவுளர்கள் குறித்தும் சொல்லும். ஓல்ட் கிங்டம் பப்பைரஸ் மற்றும் கல்லறை எழுத்துக்கள் உலகத் தோற்றம் குறித்தும் கடவுளர்கள் குறித்தும் ஒரு விதமாகச் சொன்னால், மிடில் கிங்டம் மற்றும் நியூக் கிங்டம் எழுத்துக்கள் வேறு கதைகளைச் சொல்லும். ஆனால் இந்தக் கதைகளில் சம்பந்தப்பட்ட கடவுளர்கள் மட்டுமே ஒரே பெயரில் இருப்பார்கள். இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு விசயத்தை மட்டும் ஒத்தக் குரலில் சொல்கின்றன. அது உலகத் தோற்றம், குழப்பம் நிறைந்த Nan என்று அழைக்கப்படும் நைல் நீரின் வெள்ளப் பெருக்கில் இருந்து தோன்றியது என்பது. இது குறித்து நாம் முன்பே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.
குழப்பம், இருள் மற்றும் உருவம் அற்ற இந்த உலகத் தொடக்க நிலையின் பகுதிகளாக நான்கு கடவுளர் சோடிகள் குறிப்பிடப்படுகின்றன. இந்தச் சோடிக்கு ஓக்டாட் என்று பெயர். நுண் நுவுனெட் ஹெ-ஹவுயெட், கூக - கவுகெட் அமூன்- அமூனெட் ஆகியவர்கள் அந்த எட்டுக் கடவுளர்கள். சில கதைகள் இந்த எட்டுக் கடவுளர்களின் பெயர்களாக வேறு ஒன்றைத் தரும். ஆனால் எட்டு என்ற தொகை மட்டும் எல்லாக் கதைகளிலும் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த எட்டு கடவுளர்களையும் 6000 வருடங்களுக்கு முற்பட்ட எகிப்தியர்கள் கெம்னு என்கிற வரலாற்றுக்கு முந்தைய பழமையான நகரில் வழிப்பட்டிருக்கிறார்கள். கெம்னு என்றால் எட்டு நகரம் என்று பொருள். கிரேக்கர்கள் கெம்னு நகரை ஹெர்மோபோலிஸ் என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் இந்த நகரம் நிலாக் கடவுளான தோதின் புனித நகரமாக மாறிப்போனது. தோத் கடவுள்தான் எகிப்திய எழுத்து முறையைக் கண்டுபிடித்து எகிப்தியர்களுக்கு வழங்கியவர். ஹெர்மோபோலிஸ் நகரமே எகிப்திய மந்திர தந்திர வித்தைகளுக்கும் அது தொடர்பான பப்பைரஸ் ஆவணங்களுக்கும் பெயர் போனது. அன்றைய உலக மக்கள் அனைவரும் இந்த நகரின் மந்திர தந்திர செயல்பாடுகள் குறித்து நன்றாகவே அறிந்துவைத்திருந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
உலகத் தோற்றம் குறித்த கதைகளில் ஒரு கதையைச் சொல்லும் எழுத்துக் குறிப்புகளில் மிகப் பழமையானது புக் ஆப் ஓவர்துரோயிங் அபெப். அபெப் என்பது பாம்பு வடிவில் இருக்கும் கெட்ட சக்தி. இன்னொரு உலகத் தோற்றக் கதை அதும்-ரா என்கிற ஒற்றைக் கடவுளில் இருந்தே உலகமும் அதன் உயிரினங்களும் தோன்றியதாகச் சொல்கிறது. அதும் ரா ஒரே உருவில் ஆண் பாகமும் பெண் பாகமும் கொண்ட கடவுள். இவருக்குத் தலையில் நெற்றிக் கண்ணும் உண்டு. அதும் தன்னுடைய ஆண் குறியை கையில் எடுத்து அதிலிருந்து விந்துவைத் தெளித்துக் காற்றுக் கடவுளான ஸ்ஸு (ஆண் கடவுள்)-வையும், நீர் கடவுளான டெஃப்னெட்டையும் (பெண் கடவுள்) படைக்கிறார். ஸ்ஸுவும், டெஃப்னெட்டும் நுண் நிலையின் இருளுக்குள் என்ன இருக்கிறது என்று ஆராயச் செல்கிறார்கள், ஆராயச் சென்றவர்கள் தொலைந்துவிட அதும்-ரா தன் நெற்றிக் கண்ணை எடுத்துத் தொலைந்த இருவரையும் கண்டுபிடிக்க இருளுக்குள் அனுப்புகிறார். இந்த நெற்றிக்கண்ணே சூரியன், இந்த நெற்றிக்கண் வேறு பல பெண் கடவுளர்களின் உருவத்தையும் எடுக்கக் கூடியது. உதாரணமாக அத்தோர், செக்மெட் மற்றும் வாடிஜெட் கடவுள்கள். இவர்கள் அதும்-ராவின் பெண் குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள். அதும்- ராவின் நெற்றிக் கண் நுன் இருளை வெளிச்சப் படுத்தித் தொலைந்த ஸ்ஸூவையும், டெஃப்னெட்டையும் அதும்-ராவிடம் மீட்டு வருகிறது. இந்த நெற்றிக் கண் ஸ்ஸு, டெஃப்னெட்டை தேடிச் சென்ற சமயத்தில் அதும்-ரா தனக்கு வேறு ஒரு நெற்றிக் கண்ணை உருவாக்கிக்கொள்கிறார்.
இந்தச் செயல் முந்தைய நெற்றிக் கண்ணுக்கு பொறாமையையும் கோபத்தையும் உண்டாக்க அதும்-ராவிடம் கோபித்துக்கொண்டு எகிப்தின் தெற்கிலிருக்கும் துபியப் பாலைவனப் பகுதிக்குப் போய்விடுகிறது (இது இன்றைய சூடான் நாடு). அங்கே அது காட்டுப் பூனை (பெண் சிங்கமாகவும் இருக்கலாம் வடிவம் எடுத்து வசித்து வருகிறது. இந்த நிலையில் உலகில் குழப்ப நிலைக்கும். நியாயத்திற்கும் பெரும் சண்டை
மூண்டுவிடுகிறது. இதைச் சரி கட்ட அதும்-ராவிற்குக் கோபிந்துக்கொண்டு போன நெற்றிக் கண்ணின் உதவித் தேவைப்படுகிறது. பூனை வடிவிலிருக்கும் நெற்றிக் கண்ணைச் சமாதானப்படுத்தி அழைத்துவர ஸ்ஸுவை அனுப்புகிறார் அதும்-ரா. சில கோயில் பப்பைரஸ் எழுத்துக்கள் தோத் அனுப்பப்பட்டதாகச் சொல்கின்றன. தோத் குரங்கு வடிவம் எடுத்து எகிப்தின் தெற்குப் பாலைவனப் பகுதிக்குச் சென்று நெற்றிக் கண்ணைச் சந்திக்கிறார். இன்னாப்பா இராமாயணக் கதையையும் சிவபுராணக் கதையையும் ரீ-மிக்ஸ் பண்ணி சொம்மாங்காட்டியும் அட்சிவுட்றியா - இப்படியெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். ஆனால் நான் இங்கே சொல்லிக்கொண்டிருப்பது இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு விசயத்தை, குரங்கு வடிவிலிருக்கும் தோத், பூனை வடிவிலிருக்கும் நெற்றிக் கண்ணைச் சமாதானப்படுத்தி அதும்-ராவிடம் அழைத்து வருகிறார்.
நெற்றிக் கண்ணைச் சாந்தப்படுத்தும் விதமாக அதும்-ரா அதை இராஜ நாகமாக மாற்றித் தன்னுடைய புருவங்களில் ஒன்றாக வைத்துக்கொள்கிறார். அவரை எதிர்க்க வரும் எதிரிகள் மீது நெருப்பைக் கக்கி அதும்-ராவைப் பாதுகாக்க இந்த ஏற்பாடு. இதற்குப் பிறகு அவர் தன்னுடைய உடல் வியர்வைத்துளிகளிலிருந்து மற்ற நூற்றுக்கணக்கான கடவுளர்களையும், அவருடைய கண்ணீர் துளிகளிலிருந்து மனித இனத்தையும் உண்டாக்குகிறார். உலகத்தைப் படைத்த அதும் ராவிற்கே எதிரிகளா? ஆம் மானிடப் பதர்கள்தான் அவருடைய எதிரிகள் என்று தி புக ஆப்தி ஹெவன்லிகவ் சொல்கிறது. இந்தப்புத்தகம் பாரோதுத்தன்காமூனுடைய கல்லறையிலும் மற்ற சில கல்லறை சுவர்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் மனிதர்கள் எப்படி அதும்-ராவிற்கு எதிராகக் கலகம் செய்து அவரை எதிர்த்தார்கள் பிறகு எப்படி அவர்கள் அடக்கப்பட்டார்கள் என்று சொல்கிறது. இப்படியே பல கதைகள் போய்க் கொண்டேயிருக்கிறது. இவற்றுக்கு ஒரு முடிவேயில்லையா என்று கேட்கும் அளவிற்கு, அந்தக் கதைகள் அனைத்தையும் இங்கே சொல்வதென்றால் கேட்கும் உங்களுக்கும் சொல்லும் எனக்கும் மண்டைக்காய்வதென்பது நிச்சயம்.
பாரோக்களின் பிரமிடுகளும், குடைவரைக் கல்லறைகளும், கல்லறைக் கோயில்களும், கடவுளர்களின் கோயில்களும் இத்தகைய கதைகள் அடங்கிய எழுத்துக்களுக்கும். பப்பைரஸ் ஆவணங்களுக்கும் பாதுகாவல் இடங்களாக இருந்திருக்கின்றன. இந்த உலகத் தோற்றக் கதைகள் ஒருபுறம் என்றால் மந்திர தந்திரம் குறித்த எழுத்துக்களும், பப்பைரஸ் ஆவணங்களும் பாரோக்களின் கல்லறைகளிலும், பிரமிடுகளிலும், கல்லறைக் கோயில்களிலும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. மந்திர தந்திரத்தை எகிப்தியர்கள் ஹெக்கா என்கிற சொல்லாலும் அக்கு என்கிற சொல்லாலும் குறிக்கிறார்கள். இன்றையிலிருந்து 40000 வருடங்களுக்கு முற்பட்ட மந்திர வித்தைகளுக்கான சடங்குகள் அடங்கிய பப்பைரஸ் ஜுமில்ஹாக் ஆவணம் இப்பொழுது கிடைத்திருக்கிறது. இந்த ஆவணத்திலிருக்கும் எழுத்துக்கள் பிரமிடிற்குள்ளே பாரோவின் மம்மி வைக்கப்படும் அறை சுவர்களிலும், கல்லறைக் கோயில் சுவர்களிலும் எழுதப்பட்டுமிருக்கிறது.
இதேப் போன்று மிகப் பழமையான தி பிரமிட் டெக்ஸ்ட் மற்றும் தி கஃபின் டெக்ஸ்ட் பப்பைரஸ் சுருள்கள் கிடைத்திருக்கின்றன. இவையும் இறப்பிற்குப் பிறகான மறு வாழ்வுக் குறித்த மந்திரங்களும், மறு வாழ்வில் இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திரங்களும் அடங்கியவை. மேலும் பிரமிடிற்குள் புகுந்து திருடுபவர்களையும், பிரமிடிற்குச் சேதம் ஏற்படுத்துபவர்களையும் நாசமாகப் போகும்படி சபிக்கும் மந்திர எழுத்துக்களும் இவற்றில் உண்டு. இந்த எழுத்துக்கள் மஸ்டபா மற்றும் பிரமிடிற்குள் மம்மி வைக்கப்படும் அறை சுவர்களிலும், மம்மி வைக்கப்படும் சர்கபேஃகசின் உள்ளேயும் வெளியேயும், சிலைகளின் கீழேயும், ஓவியங்களின் கீழேயும் எழுதி வைக்கப்படும். எழுத்தாக எழுதப்படும் மந்திர சொற்களுக்கு சக்தியும் வீரியமும் அதிகம் என்று நம்பினார்கள் எகிப்தியர்கள். இந்த நம்பிக்கையின் காரணமாகவே கடவுள் சேத் (Seth) குறித்த மந்திர சொற்களை அவ்வளவாகப் பயன்படுத்தவே மாட்டார்கள் எகிப்தியர்கள். காரணம் சேத் இந்த உலகில் தீமைகளையும் பேராபத்துக்களையும் கொண்டுவரும் தீயக் கடவுள் அல்லது சக்தி.
தி பிரமிட் டெக்ஸ்ட் மற்றும் தி கஃபின் டெக்ஸ்ட் புத்தகங்கள் பாதாளத்தின் புத்தகங்கள் (books of underworld) என்று அடையாளப்படுத்துகிறார்கள் எகிப்திய மந்திரவாதிகள். தி புக் ஆப்தி டெட் புத்தகமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். இதே வகையில் வரும் மற்ற மந்திர புத்தகங்கள் தி புக் ஆப் தி பிரிதிங் தி புக் ஆப் தி டூ வேஸ், தி புக் ஆப் தி லைப் தி புக் ஆப் தி என்ட் ஆப் தி இயர் மற்றும் தி புக் ஆப் தி லாஸ்ட் டே ஆப் தி இயர். இதில் இறுதியாகக் கூறப்பட்டிருக்கும் இரண்டு புத்தகங்களும் கைகளில் கட்டும் தாயத்து மற்றும் வீடுகளில் வைக்கும் யந்திரத் தகடு ஆகியவற்றில் பொறிக்கப்படும் மந்திரங்களைக் கொண்டவை. இந்தப் புத்தகங்கள் பல பப்பைரஸ் பிரதிகளாக எழுதப்பட்டு நூற்றுக் கணக்கில் எகிப்து முழுவதும் இருக்கும் கோயில் நூலகங்களிலும், பாரோவின் அரண்மனை நூலகங்களிலும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகங்களின் சில பிரதிகளைக் கல்லறைக் கோயில்களிலிருந்தும் கூட ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கிறார்கள்.
இத்தகைய மந்திரங்களை எல்லாம் கடவுளர்கள் எகிப்திய பாரோக்களுக்கும், தலைமை பூசாரிகளுக்கும். பூசாரி மந்திரவாதிகளுக்கும் சொல்லிக்கொடுத்திருப்பதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். எகிப்திய பூசாரி மந்திரவாதிகள் எகிப்தின் எதிரிகளுக்குச் சூனியம் வைக்கக் கூடியவர்கள் என்றும் நம்பப்பட்டது. ஆனால் சூனியம் மூலம் எகிப்தின் எந்த ஒரு எதிரியும் தோற்கடிக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம்தான் இல்லவே இல்லை. சூனியம் வைப்பதற்கான மந்திர சடங்குகளைச் செய்வதற்கு ஏற்ற வேளைகளாக அதிகாலை நேரமும், அந்தி சாயும் நேரமும் மந்திரப் புத்தகங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. சூனியம் வைக்கும் சடங்கை செய்யும் பூசாரி மந்திரவாதி எத்தகைய புற சுத்தத்துடன் இருக்கவேண்டும் என்றும் சொல்கின்றன. பூசாரி மந்திரவாதிகளும், தலைமை பூசாரிகளும், பாரோக்களும் தங்கள் தலைமுடியை மழித்துக்கொண்டு தலையை மொட்டையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இந்தப் புத்தகங்கள் சொல்கின்றன. இத்தகைய சடங்குகளுக்கு ஏற்ற நாட்களையும் கூட அவை குறித்துத் தருகின்றன. கெட்ட சக்திகளிடமிருந்தா காத்துக்கொள்ள மந்தரித்துச் செய்யப்பட்ட தாயத்துக்கள் எகிப்து முழுவதும் பிரசித்தம். பிரமிடுகளிலும், கல்லறைக் கோயில்களிலும், கடவுளர் கோயில்களிலும் செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின் போது பெருவாரியாகக் கிடைத்தவை இந்தத் தாயத்துகள்தான். இந்தத் தாயத்துக்களை எகிப்தியர்கள் கைகளின் மணிக்கட்டிலும், புஜத்திலும், கால்களிலும் கட்டியிருந்திருக்கிறார்கள்.
இதுவரை நாம் பார்த்த அனைத்து விசயங்களும் எகிப்திய நாகரீகம் குறித்த ஒரு புரிதலை உங்களுக்குக் கொடுத்திருக்கும். எகிப்திய நாகரீகத்தை உருவாக்கிய நைல் தொடங்கிப் பாரோக்கள், பிரமிடுகள், மம்மிகள், கல்லறைத் திருடர்கள், வாய் பிளக்க வைக்கும் பிரம்மாண்ட கட்டிடங்கள். சாபங்கள் என்று எகிப்தின் அனைத்துச் சுவாரசியங்கள் குறித்தும் இந்தப் புத்தகத்தின் அளவு அனுமதிக்கும் வரையறைக்குள் உங்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டதாக நம்புகிறேன். இங்கே நான் சொல்லாமல் விட்ட விசயங்கள் இன்னும் இன்னும் பல இருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் சொன்னதுபோல எகிப்திய வரலாறு என்பது ஒரு கடல். இந்தப் புத்தகம் அந்தக் கடலின் கரையில் நிற்கும் அனுபவத்தையே உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இனி அந்தக் கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்க வேண்டியது உங்களின் பொறுப்பு.