Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

கல்லறை திருடர்கள் மற்றும் சாபங்கள்

சத்தம் எழுப்பவேண்டாம் மெதுவாக வாருங்கள். புரிகிறது இருட்டில் தட்டு தடுமாறி நடந்துகொண்டிருக்கிறோம் இதில் சத்தம் எழுப்பாமல் வரச் சொல்கிறானே என்று நீங்கள் மனதிற்குள் முனகிக்கொள்வது எனக்குக் கேட்காமல் இல்லை. சத்தம் எழுப்பினால், அதோ தொலைவில் மேற்கு பாலைவன நெக்ரோபோலிசில் ரோந்து போய்க் கொண்டிருக்கும் காவலர்களின் காதுகளில் விழுந்து நாம் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளலாம். இன்னும் கொஞ்சத் தொலைவுதான். இம் இதோ இங்கே நின்றுகொள்ளுங்கள். இப்பொழுது வந்துவிடுகிறேன்.

நல்லது. இவர்தான் அமென்பினோபர். பதினெட்டாம் அரசப் பரம்பரைப் பாரோவான அமெனோதெப் (அமெனோதெப் / கி.மு. 1514 - 1493 புதிய அரசாட்சி காலகட்டம்) கல்லறையில் வேலை செய்யும் கட்டிடக் கலை வல்லுநர். நாளை இரவு இவரும் இவருடைய கூட்டாளிகளும் பதினேழாம் அரசப் பரம்பரை பாரோவான சோபிகேம் செப்பின் பிரமிடில் திருடப் போகிறார்கள். இவருடன் சேர்ந்து நாமும் போகலாம். நம்மையும் உடன் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். இந்த விசயம் உங்களின் மனதிற்குள்ளேயே இருக்கவேண்டும். வேறு யாரிடமும் மறந்தும் சொல்லிவிடாதீர்கள். அப்படி யாரிடமாவது இது பற்றி உளறிக்கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிவு செய்து கொள்ளுங்கள் நாம் அனைவரும் உயிருடன் எறிக்கப்படுவது நிச்சயம் என்று. ஆம் கல்லறைத் திருட்டிற்குத் தண்டனை உயிருடன் எறிக்கப்படுவதுதான். சரி வாருங்கள் வந்த சுவடே தெரியாமல் இருட்டில் மறைந்துவிடுவோம். கல்லறைத் திருட்டைத் தடுக்கத்தான் நெக்ரோபோலிசில் காவலர்கள் ரோந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இரவும் பகலும் அவர்கள் ரோந்துப் பணியில் இருப்பார்கள்.

மேற்குக் கரை பாலைவனமான தி லேண்ட் ஆப் டெட்டில் நூற்றுக்கணக்கான மஸ்டபாக்களும் பிரமிடுகளும் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் காவலர்களைப் போடுவது என்றால் அது எப்பேர்பட்ட சிக்கலான பணி என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் பாரோக்களுக்கு வேறு வழியில்லை நூற்றுக் கணக்கில் இதற்கென்றே காவலர்களைப் பணியில் அமர்த்தவேண்டும். இந்தக் காவலர்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் அந்த அந்தப் பகுதி நோமார்கிடம் கொடுக்கப்பட்டிருக்கும். கல்லறைத் திருடர்கள் மஸ்டபாக்களுக்குள்ளும் பிரமிடுகளுக்குள்ளும் திருட்டுத் தனமாகப் புகுந்து அவற்றில் இருக்கும் தங்கப் பொருட்களைத் திருடிவிடாமலிருக்கத்தான் இந்தக் காவல் ஏற்பாடு. இந்தக் காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத்தான் நாளைக்கு நாம் அமன்பினோபருடன் பிரமிடிற்குள் திருடச் செல்லப்போகிறோம். என்னது பயமாக இருக்கிறதா பிறகு எப்படிக் கல்லறைத் திருட்டைக் குறித்து அறிந்துக்கொள்வீர்களாம்.

கல்லறைத் திருட்டில் பெரிதும் ஈடுபட்டவர்கள் பிரமிட் கட்டுமான அனுபவம் கொண்ட வல்லுநர்களும் உள்ளூர் ஆளுநர்களுமே. இது ஊரறிந்த இரகசியம். பாரோக்களுக்கும் கூட இது அரசல் புரசலாகத் தெரியும். இருந்தும் யாரையும் கையும் களவுமாகப் பிடிக்க முடியாத காரணத்தால் கல்லறைத் திருடர்களை அடையாளம் கண்டு தண்டிக்க முடியாத நிலையே இருந்து வந்தது. அவ்வளவு தெளிவாகத் திட்டம் போட்டுக் கல்லறைகளைத் திருடியிருக்கிறார்கள் இந்தக்களவாணிகள், பொருளாதாரநெருக்கடி ஏற்படும் காலங்களிலும், அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சிகள் ஏற்படும்போதும் எகிப்திய குடிமக்களும் கூடப் பிரமிடுகளுக்குள்ளும் கல்லறைகளுக்குள்ளும் புகுந்து திருடியிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களாகத் திருடத் திருடக் குறைவில்லாமல் ஒவ்வொரு பிரமிடும் கல்லறையும் திருடுபவர்களுக்கு வாரி வழங்கியிருக்கின்றன என்றால் எவ்வளவிற்கு அதிகமாக விலை மதிக்க முடியாத பொருட்கள் அவை ஒவ்வொன்றிர்குள்ளும் வைக்கப்பட்டிருந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு பாரோவின் கல்லறையும் பிரமிடும் இந்தக் கல்லறைக் களவாணிகளின் கண்களிலிருந்தும் கைவரிசையிலிருந்தும் தப்பியது கிடையாது. இவர்களுக்குப் பயந்து பாரோக்கள் வானத்தில் தங்கள் பிரமிடுகளையும் கல்லறைகளையும் கட்டாததுதான் மிச்சம் மற்றபடி பூமிக்குள்ளும் யார் கண்ணிலும் படாதபடி தங்களுடைய கல்லறையைக் கட்டியும் பார்த்து விட்டார்கள். ஆனால் பூமிக்கு அடியில் கட்டிய கல்லறையிலும் பொருட்கள் திருடு போனதுதான் உச்சக்கட்டக் கொடுமை. இந்தக் கொடுமைக்கு மிகச் சிறந்த உதாரணம் பன்னிரண்டாவது அரசப் பரம்பரையைச் சேர்ந்த பாரோ சென்வொஸ் ரெட் (செனோஸ் ரெட் III கி.மு. 1836-1818 இடை அரசாட்சி காலகட்டம்) கல்லறை. இந்தப் பாரோ தனக்கென்று ஒரு பிரமிட் கட்டியிருந்தாலும் அவனுடைய மம்மியும் தங்கப் பொருட்களும் வைக்கப்பட்டதென்னவோ மலைக் குன்று அடியில் கட்டப்பட்ட கல்லறையில்தான். இந்தக் கல்லறை இருப்பது அபைடோஸ் நகரிலிருக்கும் மெண்டேன் ஆப் அனுபிஸ் மலைக் குன்றுக்கு அடியில், இந்த மலைக் குன்றுக்கு அடியில் பூமியைக் குடைந்து யார் கண்ணிலும் பட்டுவிடாத இடத்தில்தான் இந்தப் பாரோவின் கல்லறைக் கட்டப்பட்டிருந்தது. பிரமிட் கட்டுமானத்திற்கு எப்படி மஸ்டபாக்கள் முன்னோடியோ அதே போலத் தி வேலி ஆப் தி கிங்சில் இருக்கும் குடைவரை கல்லறை கட்டிடக் கலைக்கு முன்னோடி பாரோ சென்வொஸ் ரெடின் மலைக் குன்றுக்கு அடியில் இருக்கும் இந்தக் கல்லறை.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பாலைவனத்தில் துருத்திக்கொண்டிருக்கும் இந்த மலைக் குன்று மட்டுமே கண்ணில் படும். இதற்கு அடியில் ஒரு பாரோவின் கல்லறை இருக்கிறது என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் இந்தக் கல்லறையிலும் கைவரிசையைக் காட்டிவிட்டார்கள் கல்லறைக் களவாணிகள், இருபதாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளர்கள் எதேச்சையாக இந்தக் கல்லறையைக் கண்டுபிடித்தபோது பல முறை இந்தக் கல்லறையில் திருட்டு நடந்திருப்பதற்கான தடயங்களையும் கண்டுபிடித்தார்கள். என்ன அமன்பினோபருடன் செல்லத் தயாராகிவிட்டீர்களா, திருடுவது சட்ட விரோதம் அதனால் வரமாட்டீர்களா. நீங்கள் சொல்வதும் சரிதான். யார் அந்த அமன்பினோபர் என்று தெரியவேண்டுமா. சொல்கிறேன். பிரமிடுகளையும் கல்லறைகளையும் திருடுவதில் பெயர் போனவன். இவன் இந்தக் காரியத்தில் கெட்டிக்காரன் என்று 3.5000 வருடங்களுக்கு முற்பட்ட பப்பைரஸ் ஆவணங்களே சொல்கின்றன. ஆனால் இவனைக் கையும் களவுமாகப் பிடிக்கத்தான் எந்தச் சாட்சியமும் இறுதி வரை கிடைக்கவேயில்லை. கல்லறைத் திருட்டு வழக்குத் தொடர்பாக இன்னொரு சம்பவமும் பப்பைரஸ் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. அது பாரோ ராமேசிஸ் IX (ராமேசிஸ் IX A. மு. 1124 BC-1106 BC, 20-வது அரச பரம்பரை புதிய அரசாட்சி காலகட்டம்) காலத்தில் நடந்த வழக்கு. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தீப்ஸ் நகரின் நோமார்க், கல்லறைத் திருட்டு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் மேற்கு தீப்ஸ் நகரின் நோமார்க் அவருடைய பெயர் பவேரா,

பவேராவின்கூட்டாளிகள் பிரமிடுகளில் திருடும்போது ரோந்துப்பணியில் ஈட்டுப்பட்டிருந்த நெக்ரோபோலிஸ் காவலர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அகப்பட்டவர்கள் இரண்டு பேர். அவர்கள் இருவரையும் விசாரிக்கும் நடவடிக்கைகளை அப்படியே பதிவு செய்திருக்கிறது அந்தப் பப்பைரஸ் ஆவணம். அந்த இரண்டு கல்லறைத் திருடர்களும் இறுதிவரை தங்களுடைய தலைவரான பவேராவைக் காட்டிக்கொடுக்கவேயில்லை, வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் இருவரும் கல்லறைத் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபனமாகிறது. அவர்கள் திருடியது உண்மைதான் என்று உறுதி செய்ததே அவர்களுடைய தலைவரான பவேராதான். அப்படியிருந்தும் தீப்சின் நோமார்குக்குப் பவேரா மேல் இருந்த சந்தேகம் போகவேயில்லை. அவர்பவேராவுக்கும் இந்தத் திருட்டில் பங்கிருக்கிறது என்று குற்றம் சுமத்துகிறார். ஆனால் தண்டனைக்கு ஆளானது என்னவோ அகப்பட்ட அப்பாவிகள் இருவர்தான். எகிப்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பை விட மிக மிகக் கொடுங்குற்றம் கல்லறைத் திருட்டுதான். கல்லறைத் திருட்டுக் குற்றத்தில் அகப்பட்டுக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம். உயிருடன் எரித்துக் கொல்வதுதான் அந்த மரண தண்டனை. எகிப்தியர்கள் மறு உலக வாழ்வில் நம்பிக்கை உடையவர்கள் என்பது நமக்குத்தான் தெரியுமே. மறு உலக வாழ்விலும் உயிருடன் திரும்ப எழும்போது இந்த உலக வாழ்வில் அவர்களின் உயிர் எந்த உடலில் இருந்ததோ அதே உடல்தான் மறு உலக வாழ்விலும் உதவும் என்பதை அவர்கள் திடமாக நம்பினார்கள்.

இந்த உலகில் அவர்கள் உயிர் இருந்த உடல் மறு உலக வாழ்வில் கிடைக்கவில்லை என்றால் அவர்களுடைய ஆன்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு இந்த உலகிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை. அவர்களைப் பொறுத்தவரையில் இது ஆன்ம ஈடேற்றம் இல்லாத நிலை. இப்படி ஒரு நிலையைக் கல்லறைத் திருடர்களுக்கு உண்டாக்கத்தான் அவர்களுடைய உடலை இந்த உலகிலேயே எறிக்கும் தண்டனை. இறந்த உடல் சாம்பலாகி விட்ட பிறகு கல்லறைத் திருடர்களின் ஆன்மா மறு உலகத்திற்கு எப்படிப் போக முடியும். போனாலும் உடலுக்குப் பதிலாக எறிக்கப்பட்ட சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும். இப்படியான தண்டனை எல்லாம் கல்லறைத் திருடர்களை இம்மியளவிற்குக் கூட அச்சுறுத்தவில்லை.

பிரமிடுகளிலும், கல்லறைகளிலும் ஆளைக் கொல்லும் சாபம் இருக்கும் என்பதற்கே அசறாதவர்கள் இதற்கெல்லாமா அலறுவார்கள். ஒவ்வொரு பாரோவிற்கும் தலைமை பூசாரி ஒருவர் இருப்பார். பூசாரி என்பது கொஞ்சம் மென்மையான பெயராகத் தோன்றுகிறது காரணம் உண்மையில் அவர்கள் மந்திரவாதிகள். இப்படியான மந்திரவாதி பூசாரியின் சமயப் பணிகளில் மிக முக்கியமான பணி கல்லறைத் திருடர்களுக்கு எதிராகப் பாரோவின் பிரமிடுகள் மற்றும் கல்லறைகளின் மீது சாபத்தை இறக்கி வைப்பது. தன்னுடைய சாபம் போதாது என்று கடவுள் ஓசிரிசின் சாபத்தையும் சேர்த்தே மந்திரவாதி பூசாரி பிரமிடுகள் மற்றும் கல்லறைகளில் கல்வெட்டாக எழுதிவைத்து விடுவார். இந்தச் சாபங்கள் கல்லறைத் திருடர்களைக் கொன்று விடும் என்பது நம்பிக்கை. தங்கத்தைத் திருட பிரமிடுகளுக்குள் நுழைபவர்கள் கொடூரமாக இறந்துப்போவார்கள். அந்தக் கொடூர மரணத்தை வைத்தே கல்லறைத் திருடர்களை அடையாளம் காண்பதுடன், அந்தக் கொடூர மரணம் மற்றவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதும் பொதுவான நம்பிக்கை, ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடைபெற்றதாக எவ்வித வரலாற்று ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பிரமிடுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் சாபங்களில் சில இதோ. இது கடவுள் ஓசிரிசின் சாபம்.

"பாரோவின் கல்லறைக்குள் நுழைபவன் மீது மரணம் பறந்து வந்து கவிழும்". இந்தச் சபிக்கும் வரிகள் மரணத்தின் புத்தகத்தில் இருப்பவை. மேலும் சில சாபங்கள் இதோ,

"இந்தக் கல்லறையை உடைத்து நுழைந்து தொல்லைத்தருபவன், என்னுடன் நியாயம் தீர்க்கப்படுவானாக"

"எவன் ஒருவன் இந்தக் கல்லறைக்கு எதிராகச் செயல்படுவானோ, அவனை நைல் நதி முதலை விழுங்க, நிலத்தில் பாம்பு அவனைக் கொத்த, கடவுள் அவனை நியாயம் தீர்க்கட்டும்"

மேலே நாம் பார்த்தவை பழைய அரசாட்சி காலகட்ட மஸ்டபாக்களில் இருக்கும் சாபங்கள்.

ஸக்கரா பகுதியில் இருக்கும் அன்க்மஹோர் என்கிற மந்திரவாதி பூசாரியின் கல்லறையில் இருக்கும் சாபம் இதோ,

"மேற்கிலிருக்கும் எனது கல்லறைக்குள் நீங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களும் உங்களின் சொத்துக்களின் மீதும் வரக்கடவதாக, எல்லா மந்திர தந்திரங்களும், இரகசிய சாபங்களும் அறிந்த தலைமை பூசாரி நான். தீய எண்ணத்துடன் எனது இந்தக் கல்லறைக்குள் நுழைபவர்கள் அசுத்தமானவற்றைத் தின்ற பாவத்திற்கு ஆளாகிப்போவார்கள், நான் அத்தகையவர்களின் கழுத்தை நெறித்துப் போடுவேன். அதே சமயத்தில் எனது கல்லறைக்குள் சுத்தமாகவும் தூய எண்ணத்துடனும் நுழைபவர்களின் காவலனாக நான் இருப்பேன்."

கல்லறைத் திருடர்கள் மேல் மந்திரவாதி பூசாரிகள் இறக்கி வைத்த ஒட்டுமொத்த சாபங்களின் பட்டியலை அறிந்து கொள்ள நமக்கு உதவுவது அமனோதெப், சன ஆப் ஹாப்பு என்பவனின் கல்லறை. இவன் 18-வது அரச பரம்பரையைச் சேர்ந்தவன், பூசாரி, கட்டிடக் கலைஞன், எழுத்தாளன், கண்காணிப்பாளன் என்று பல அரச பதவிகளில் இருந்தவன். இவனுடைய கல்லறை சாபங்களின் ஒரு பெரிய பட்டியலையே தருகிறது. அந்த நீ.....ண்டப் பட்டியலில் இருக்கும் அனைத்தும் சாபங்களும் அவனுடைய கல்லறையைத் திருடும் களவாணிகள் மேல் இறங்கும் என்கிறது அந்தச் சாபங்களின் கல்வெட்டு. அந்த நீண்டப் பட்டியலை இங்கே தர முடியாது. அதிலிருந்து ஒரு பகுதி மட்டும்,

"இம்மணுலக ஆஸ்திகளையும் அந்தஸ்துகளையும் இழந்துப்போவார்கள், நரகத்தின் தீயில் சாம்பலாகிப் போவார்களாக, கட்டுண்டு கடலில் மூழ்கிப்போவார்களாக, வாரிசுகள் இல்லாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு என்று சொந்தமாகக் கல்லறையும் இறுதிச் சடங்கு படையல்களும் இல்லாமல் சாவார்கள், அவர்கள் பிணம் அழுகி நாறி எலும்புகள் நசிந்துப்போகும்"

நல்லவேளை நாம் அமன்பினோபருடன் சேர்ந்துக் கல்லறைத் திருட்டிற்குப் போகவில்லை. போயிருந்தால் இந்த அத்தனை சாபங்களும் நம் தலையிலும் இறங்கியிருக்குமே என்று நீங்கள் பீதியுடன் பார்ப்பது எனக்குத் தெரியாமலில்லை. கொஞ்சம் எனக்கு அருகில் வாருங்களேன். உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா இந்தச் சாபங்கள் எல்லாம் ஒரு பிரமிடிற்குள் முதன் முறையாகச் செல்லும் கல்லறைத் திருடர்கள் மீது மட்டுமே வேலை செய்யும். அடுத்தடுத்து அந்தப் பிரமிடிற்குள் திருடச் செல்வோர்கள் மீது இந்தச் சாபங்கள் வேலை செய்யாது. உண்மை என்னவென்றால் எந்த ஒரு கல்லறைக் களவாணி மீதும் இந்தச் சாபங்கள் வேலை செய்ததாக எகிப்திய வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் பதிவேயாகவில்லை. இறுதியாக ஒரு வினோதமான சாபம் குறித்தும் சொல்லட்டுமா, கழுதை முகம் கொண்ட கடவுளான செத் கல்லறைக் களவாணிகளைக் கற்பழித்துவிடுவார் என்கிற சாபமும் இந்தச் சாபங்களில் அடக்கம்.

இந்தச் சாபங்கள் அனைத்தும் கடவுளர்களின் பெயராலும் மந்திரத்தாலும் கட்டப்பட்டவை என்பதால் அவை குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். வேண்டாம் என்றா சொல்வீர்கள்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.