Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

கிளியோப்பாட்ராVIIA.மு. 51-30 (தாலமிகாலகட்டம்)

எகிப்தில் இருபதாம் அரச பரம்பரை முடிவிற்கு வந்தவுடன் சுமார் 2000 வருட பாரோனிக் சிறப்பும் முடிவிற்கு வந்துவிட்டது. இருபதாம் அரச பரம்பரையின் இறுதி பாரோ ராமேசிஸ் XI (கி.மு. 1099-1069), முதல் பாரோவான நார்மர் கி.மு. 30000-த்தில் தொடங்கி வைத்த பாரோனிக் சாம்ராஜ்யத்தை ராமேசிஸ் XI A.மு. 1059 முடித்து வைத்தான். இருபத்தியொராம் அரச பரம்பரையின் தொடக்கம் என்பது கிட்டத்தட்ட எகிப்திய பாரோனிக் சாம்ராஜ்யத்தின் சாவு மணி. வலிமை மிக்கப் பாரோ யாரும் அடுத்து அரியணைக்குத் தயாராக இல்லாததால் கத்தியின்றி இரத்தமின்றி எகிப்திய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்திய லுபிய நாட்டைச் சேர்ந்தவர்களே (எகிப்திற்கு மேற்கில் லிபியா இருக்கிறது) எகிப்தின் பாரோக்களாக வந்தமர்ந்தார்கள். லுபியர்கள் கால் நடை மேய்க்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எகிப்தின் பாரோ பதவியைக் கைப்பற்றியதும் தங்களுடைய கால் நடை சமூகப் பழக்க வழக்கங்களை எகிப்திர்குள் புகுத்தினார்கள். அரசு, சமூகம், கலை, இலக்கியம், கட்டிடக் கலை என்று அனைத்திலும் புதிய மாற்றம் நிகழ்ந்தது. எகிப்தியர்கள் பாரோவின் கல்லறை சார்ந்த வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டவர்கள், லுபியர்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். இறந்த உடலை வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டும் பழக்கமெல்லாம் இல்லாதவர்கள். புதைத்தோமா மூன்றாம் நாள் காரியம் செய்தோமா வேறு வேலையைப் பார்க்கப் போகவேண்டியதுதான் என்று தோள் துண்டை உதறிக்கொண்டு நடையைக் கட்டும் பாரம்பரியம் உடையவர்கள். இதன் காரணமாக எகிப்தில் கல்லறைக் கோயில்களுக்கும் மம்மிகளுக்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது. இதனால் எகிப்தியர்கள் ஒரு புதிய சமூக வாழ்க்கை முறைக்குப் பழகவேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்கள்.

போதாததற்கு வடக்கிலிருந்து பெர்சியர்களின் படையெடுப்பும் தெற்கிலிருந்து நுபியர்களின் படையெடுப்பும் எகிப்தியர்களின் வாழ்வை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தது. கெட்டக் குடியேதானே கெட வேண்டும் அதன்படி புதிய வாழ்க்கை முறை, அந்நியப் படையெடுப்புகள் என்று பாடாய்ப் பட்டுக்கொண்டிருந்த எகிப்தியர்கள் கூடவே உள் நாட்டுக் கிளர்ச்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் ஆளானார்கள். இந்த நிலை 31-ஆம் அரச பரம்பரை காலம் வரை நீடித்தது. அதாவது சுமார் 700 ஆண்டுகள். எகிப்தியர்களின் இந்தப் பாடுகளுக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தது அலெக்சாண்டரின் எகிப்தியப் படையெடுப்பு. அலெக்சாண்டரின் சிறிய படை கி.மு. 332 வருடத்தின் இறுதி மாதங்களில் எகிப்தை வென்றது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நைல் நதி மெடிடீரினியன் கடலில் கலக்கும் முகத்துவார டெல்டாப் பகுதியில் அலெக்சாண்டிரியா என்கிற நகரை உருவாக்கினான் அலெக்சாண்டர். எகிப்தை அவன் வென்றதற்கு அடையாளமாக இந்த நகரம் அவன் பெயரிலேயே உருவாக்கப்பட்டது. இந்த நகரத்திற்கு வரலாற்றில் மற்றொரு சிறப்பும் உண்டு. அது உலகின் மிகப் பெரிய நூலகம் ஒன்றும் இந்த நகரத்திலிருந்ததுதான். அலெக்சாண்டர் தான் வென்ற எகிப்தில் மொத்தமாகத் தங்கியிருந்தது நான்கு மாதங்கள் மட்டுமே. ஏப்ரல் மாதம் கி.மு. 331 வருடம் அவன் எகிப்தை விட்டு மேலும் கிழக்கு நாடுகளைத் தாக்க கிளம்பிவிட்டான்.

அடுத்து வந்த எட்டு ஆண்டுகளில் அலெக்சாண்டர் ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தைவிட்டே கிளம்பிவிட்டான். அவன் இறந்ததும் அவனுடைய தளபதிகளுக்கிடையே அவன் விட்டுச் சென்ற மிகப் மிகப் பெரிய சாம்ராஜ்யம் குறித்த குடுமி பிடி சண்டைத் தொடங்கியது குழந்தைப் பருவத்திலிருந்து அலெக்சாண்டரின் நெருங்கிய நண்பனாகவும், அவனுடைய தளபதிகளில் ஒருவனாகவும் இருந்த தாலமி, நடந்த குடுமி பிடி சண்டையில் தன் பங்காக எகிப்தை பெற்றுக்கொண்டான். இந்த வெற்றியை உறுதி செய்ய அவன் அலெக்சாண்டரின் பிணத்தையே ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டான். அலெக்சாண்டரின் உடலை எகிப்தின் மெம்பிசில் புதைப்பதன் மூலம் தான் எகிப்தின் அடுத்தப் பாரோவாகப் பதவியேற்றுக்கொள்வதை ஒருவரும் கேள்விக்கேட்டுவிட முடியாதபடி பார்த்துக்கொள்வது என்பது அவனுடைய திட்டம். எகிப்திலும், அவனே முன் நின்று அலெக்சாண்டரின் உடலுக்கு இறுதி காரியங்கள் செய்வதன் மூலம் தானே அதிகாரப் பூர்வ அடுத்தப் பாரோ என்கிற செய்தியை எகிப்தியர்களுக்கு உணர்த்துவதற்கும் வசதியாக இருக்கும் என்பது அவனுடைய ஒரு பிணத்தைக் கொண்டு இரண்டு நன்மைகள் என்கிற திட்டம்.

அலெக்சாண்டர் பாபிலோனில் இறந்ததால் அவனுடைய உடலை அவனுடைய தாய் மண்ணான மாசிடோனியாவின் ஹெல்ஸ்பாண்டில் புதைப்பது என்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. அதன் படி அவனுடைய உடல் அடங்கிய சவ ஊர்வலம் பாபிலோனிலிருந்து ஹெல்ஸ்பாண்டிற்குச் சென்றுகொண்டிருந்தது. செல்லும் வழியில் சிரியாவில் வைத்து தாலமி அந்த ஊர்வலத்தை இடைமறித்து அலெக்சாண்டரின் உடலை எகிப்திற்குக் கொண்டு வந்துவிட்டான். இந்தச் சவ ஊர்வலத்தின் போதுதான் அலெக்சாண்டர் தன் இரண்டு கைகளையும் சவப் பெட்டிக்கு வெளியே விரித்துக்காட்டித் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது ஒன்றையும் கொண்டு செல்லவில்லை என்று உலக மக்களுக்குச் செய்தி சொல்லும்படி தன்னுடைய இறுதி நிமிடங்களில் சொல்லியதாக ஒரு செய்தி உண்டு. இது முழுக்க முழுக்கக் கற்பனையான செய்தி. அப்படியொன்றும் நடக்கவேயில்லை. மாறாக உலகத்தையே வென்றே அலெக்சாண்டரின் உடல் எகிப்திற்குக் கடத்தப்பட்டதுதான் நடந்தது. உலகத்தையே வென்றவனுக்குத் தன் உடல் கடத்தப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்று வேண்டுமானால் தத்துவப் பித்தில் உளறிக்கொள்ளலாம்.

எகிப்திற்குக் கடத்தப்பட்ட அலெக்சாண்டரின் உடல் எகிப்திய பாரோக்களின் பாரம்பரிய தலைநகரமான மெம்பிசில் புதைக்கப்பட்டது. எகிப்திய பாரோவாக இருந்தாலும் அவனுடைய உடல் மம்மியாக மாற்றப்படவில்லை. எகிப்தில் பாரோக்களை மம்மி செய்யும் வழக்கமெல்லாம் அவனுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே தலை முழுகப்பட்டுவிட்டதே பிறகு எப்படி, அலெக்சாண்டர் ஒரு முறை இறந்தாலும் அவனுடைய உடலுக்கு இரண்டு முறை சவ அடக்கம் நடந்தது. அலெக்சாண்டரின் உடலை எகிப்தில் புதைத்து தாலமி தான் எகிப்தின் அடுத்தப் பாரோ என்று உணர்த்திக்கொண்டாலும் அவனுடைய அலெக்சாண்டர் உடல் கடத்தல் செயல் அலெக்சாண்டரின் மற்ற தளபதிகளுடனான தொடர்ச்சியான சண்டைகளுக்கு வழி வகுத்தது. அடுத்து வந்த 35 ஆண்டுகள் தாலமியும் அலெக்சாண்டரின் மற்ற தளபதிகளும் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள். ஒரு வழியாக இந்தச் சண்டை முடிவிற்கு வந்ததும் தாலமி முறைப்படி எகிப்தின் பாரோவாகப் பதவியேற்றுக்கொண்டான். பாரோவான உடன் அவன் செய்த முதல் காரியம் எகிப்தின் தலை நகரத்தை மெம்பிசிலிருந்து அலெக்சாண்டிரியா நகரத்திற்கு மாற்றியது. இது நடந்தது கி.மு. 304 சனவரி 12-ல். மெம்பிசிலிருந்து அலெக்சாண்டிரியாவிற்குப் போனவன் கையோடு மெம்பிசில் புதைக்கப்பட்டிருந்த அலெக்சாண்டரின் உடலையும் தோண்டியெடுத்துக்கொண்டு போனான். உடல் என்றால் அலெக்சாண்டரின் எலும்புக் கூடுகளைத்தான். நாம் மேலே பார்த்த அதே நாளில் அலெக்சாண்டரின் உடல் எலும்பு கூடு ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு அதற்கென்றே கட்டப்பட்ட கல்லறையில் வைக்கப்பட்டது. இரண்டாம் முறையாக அலெக்சாண்டரின் உடல் அடக்கம் இப்படியாக நடைபெற்றது.

தாலமி எகிப்தின் பாரோவாகப் பதவியேற்றுக்கொண்டதன் மூலம் எகிப்து இரண்டாம் முறையாக அந்நியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த முறை அது கிரேக்க மாசிடோனியர்களின் ஆட்சியின் கீழ், இந்த மாசிடோனிய தாலமியின் வம்சத்தில் வந்தவளே நாம் நன்றாக அறிந்திருக்கும் கிளியோப்பாட்ரா. இவள் உண்மையில் மாசிடோனிய வெள்ளை இனத்தைச் சேர்ந்தவள். எகிப்திய கருப்பினத்தை சேர்ந்த அழகியல்ல அவள். அவளுக்கும் எகிப்திய இனத்திற்கும் எத்தகைய இரத்த தொடர்பும் கிடையாது. உடல் நிறத்திலிருந்து நடை உடை பாவனை என்று அனைத்திலும் அவள் கிரேக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவள். பிறகு எப்படி அவளை எகிப்தின் கருப்பழகி என்று வரலாறு சொல்கிறது என்று நீங்கள் கேட்கலாம். வரலாற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று நடுநிலை வரலாற்றை மட்டுமே பேசும். மற்றது பொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே பேசும். எங்கேயும் எப்போதும் பொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே பேசும் வரலாற்றின் குரல்தான் பலமாகக் கேட்கும். அதைத்தான் பெருவாரியான மக்களும் கேட்கும்படி நேர்கிறது.

கிளியோப்பாட்ரா என்கிற பெயரில் அவளுக்கு முன்பே ஆறு பெண்கள் இருந்திருக்கிறார்கள். நாம் பரவலாக அறிந்திருக்கும் கிளியோப்பாட்ரா அந்தப் பெயர் கொண்ட ஏழாவது பெண்மணி. கிளியோப்பாட்ரா அவளுடைய தந்தை பாரோவாக இருக்கும் போதே துணை பாரோவாக அறிவிக்கப்பட்டவள். இது நடந்தது கி.மு. 52-ல். எகிப்து கண்ட இரண்டாவது பெண் பாரோ கிளியோப்பாட்ரா VII ஆனால் அந்நிய இனத்தைச் சேர்ந்தவள், ஒரு பெண் எத்தகைய உயர்ந்த சக்திமிக்க இடத்திலிருந்தாலும் கெட்ட நேரமும் துரதிர்ஷ்டமும் ஆணைவிடப் பெண்ணை எவ்வளவு தூரம் பாடாய்ப்படுத்தும் என்பதற்குச் சிறந்த உதாரணம் கிளியோப்பாட்ரா. பெண் என்றால் பேய் மட்டும்தான் இறங்கும் போலிருக்கிறது கெட்ட நேரமும் துரதிர்ஷ்டம் வேடிக்கை பார்க்கும் போல. கெட்ட நேரமும் துரதிர்ஷ்டமும் கூடி கும்மியடித்தாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் இறுதி மூச்சு வரையிலும் துணிச்சலுடன் வாழ்வை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணப் பெண் கிளியோப்பாட்ரா.

அவள் பாரோவாகப் பதவியேற்றுக்கொண்டாலும் அவளுடைய தம்பியும் துணைப் பாரோவாகப் பதவியேற்றுக்கொண்டிருந்ததால் அவளுக்குப் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஒரு கட்டத்தில் எகிப்திய மக்கள் அவளுடைய தம்பிக்கு ஆதரவாகவும் இவளுக்கு எதிராகவும் போய்விட்டார்கள். கிளியோப்பாட்ராநாட்டைவிட்டு வெளியேறியே ஆகவேண்டிய சூழ்நிலையும் கூட ஏற்பட்டுவிட்டது. அவளும் நாட்டைவிட்டு வெளியேறி பாலஸ்தீனத்தின் எல்லையில் தஞ்சமடைந்தாள். அங்கிருந்து கொண்டே தன் தம்பிக்கு எதிராகப் படை திரட்டி அவனுடன் போருக்கு தயாரானாள். இந்தச் சமயத்தில் ரோமில் நடந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக ரோமின் தளபதிகளான ஜூலியஸ் சீசருக்கும், பாம்பேயிக்கும் அதிகார போர் நடந்துகொண்டிருந்தது. இந்தப் போரில் உயிர் பிழைக்க ரோமிலிருந்து தப்பி எகிப்திற்கு வந்த பாம்பேயை கிளியோப்பாட்ராவின் தம்பி கொலை செய்தான். தான் செய்த இந்தக் கொலை தனக்கு ரோமில் சீசரின் நட்பையும் ரோம செனட்டின் நம்பிக்கையையும் பெற்றுத் தரும் என்பது அவனுடைய அரசியல் கணக்கு,

ஆனால் கணக்கு தவறாகிப் போனதுதான் மிச்சம். தன்னுடைய எதிரி தன் கையால் சாகாமல் எகிப்திய மண்ணில் புற முதுகில் குத்திக் கொலை செய்யப்பட்டது சீசருக்கு கடும் கோபத்தைக் கிளப்பிவிட்டுவிட்டது. சீசர் நேரடியாக எகிப்தில் வந்து உட்கார்ந்து கொண்டு இந்தக் கொலைக் குறித்த விசாரணையில் ஈடுபட்டான். ரோமிலிருந்து வீசும் காற்று தன் தம்பிக்கு எதிராகப் போவதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கிளியோப்பாட்ரா எகிப்திற்குள் இரகசியமாக நுழைந்து சீசரை சந்தித்தால். அரைக் கிழடாக இருந்த சீசருக்கு இருபத்திரண்டு வயதே ஆன கிளியோப்பாட்ராவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப்போய்விட்டது. பிடித்துவிட்டால் பிறகு என்ன காதலில் விழுந்துவிடவேண்டியதுதானே, அரைக் கிழடு சீசரும் காதலில் விழுந்தார். இத்தனைக்கும் பார்த்த மாத்திரத்தில் கவ்வி இழுக்கும் பேரழகியெல்லாம் கிடையாது நாம் அறிந்த கிளியோப்பாட்ரா. சுமாரான அழகுதான். சீசர் காதல் என்கிற பெயரில் அவளுடைய காலில் விழுந்துவிட்டதை உணர்ந்து கொண்டகிளியோப்பாட்ராகும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த கதையாக அந்த வாய்ப்பையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டாள்.

இவர்களின் காதல் கிளியோப்பாட்ராவின் தம்பி காதுகளுக்குப் போக, அவன் இருவரையும் அந்த அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான். ரோமிலிருந்து சீசருக்கு உதவ ரோமானியப் படை எகிப்திற்கு வந்திறங்கியது. இந்தப் படைக்கும் எகிப்தியர்களுக்கும் நடந்த சண்டையில் கிளியோப்பாட்ராவின் தம்பி நைல் நதியில் மூழ்கி இறந்துப்போனான். கிளியோப்பாட்ராவிற்குப் பாரோ பதவி பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக எவ்வித தடையும் இல்லாமல் அவள் கைகளில் வந்து சேர்ந்தது. எகிப்தியர்களுக்கும் அவளை மீண்டும் பாரோவாக ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிக் கிடையாது. இப்போது அவள் பலம் பொருந்திய ரோமானிய தளபதி சீசரின் காதல் மனைவியும் ஆகிவிட்டாலே, சீசருக்கும் கிளியோப்பாட்ராவிற்கும் சிசேரியன் என்று ஆண் குழந்தைப் பிறந்தது. சீசர் கிளியோப்பாட்ராவை எகிப்தில் விட்டுவிட்டு ரோமில் அடுத்த மன்னனாக முடிசூட்டிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள ரோமிற்குத் திரும்பிச் சென்றான்,

எகிப்தில் கிளியோப்பாட்ராவின் பாரோ ஆட்சி எவ்வித சிக்கலும் இல்லாமல் தொடரத்தொடங்கியது. அவளுக்கு முன்பிருந்த மாசிடோனிய கிரேக்கப் பாரோக்கள் போலக் கிடையாது கிளியோப்பாட்ரா. அவளுக்கு எகிப்திய நாகரீகத்தின் மீது தனிக் காதலே இருந்தது என்று சொல்லலாம். முதல் மாசிடோனிய பாரோவான தாலமித் தொடங்கி அவளுடைய தந்தையான பாரோ தாலமி வரைக்கும் அனைவரும் கிரேக்க ரோமக் கலாச்சாரத்தையே பின்பற்றியவர்கள். அவர்கள் ஆட்சி செய்தது எகிப்திய மக்கள் என்றாலும் அவர்கள் பேசியதெல்லாம் கிரேக்க ரோமானிய மொழிகள்தான். அவர்களுடைய வாழ்க்கை முறையும் கட்டிடக் கலையும் கிரேக்க ரோமானிய கலாச்சாரத்தை ஒட்டியே இருந்தன. ஆனால் இதில் கிளியோப்பாட்ரா முற்றிலும் வேறுப்பட்டிருந்தாள். எகிப்திய மொழியை ஆர்வமுடன் கற்றுக்கொண்டு எகிப்தியர்களுடன் அவர்களின் தாய் மொழியிலேயே பேசிய முதலும் கடைசியுமான கிரேக்க மாசிடோனிய பாரோ கிளியோப்பாட்ரா மட்டுமேதான். எகிப்தியர்களின் கட்டிடக் கலையிலேயே அவள் பாரோவாகத் தான் கட்டிய கட்டிடங்களையும் கட்டினாள்.

அவளுடைய நடை உடை பாவனைகள் கிரேக்க கலாச்சாரத்தை ஒட்டியிருந்தாலும் முடிந்தவரை எகிப்தியர்களைப் போலவே இருக்கப் பெரும் முயற்சிகளை செய்திருக்கிறாள் அவளுடைய மகன் சற்று பெரியவனானதும் அவனைத் துணைப் பாரோவாக அறிவித்தாள். ஆனால் அவள்தான் எகிப்தின் கடைசிப் பாரோ என்கிற விதியை எகிப்தியக் கடவுளர்கள் முன்பே எழுதிவிட்ட சங்கதியை யார்தான் முன் கூட்டியே அறிந்திருக்க முடியும். எகிப்திய பூசாரிகளாலும் கூட இந்த விதியை முன் கூட்டியே அறிந்து சொல்ல முடியவில்லை. ரோமிற்குச் சென்ற ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப்பட்ட பிறகு ரோமின் பலம் பொருந்திய தளபதியாக உருவெடுத்தவன் மார்க் ஆண்டனி. ரோம செனெட் இவனுடைய தலைமையின் கீழ் மத்திய கிழக்கில் எஞ்சியிருந்த இருந்த ஒரே பலம் மிக்க எதிரியை அடக்கப் படையை அனுப்பியது. மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்குவதற்கு முன்பாகத் தன்னுடைய படையை நிலை நிறுத்துவதற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடிய ஆண்டனியின் கண்களில் பட்டது எகிப்து. இது குறித்துப் பேசுவதற்காகக் கிளியோப்பாட்ரா தன்னை வந்து சந்திக்கும்படி அவன் செய்தி அனுப்பினான். மீண்டும் ஒருமுறை பழம் நழுவி பாலில் விழுந்த வாய்ப்பு ஏற்பட்டது கிளியோப்பாட்ராவிற்கு.

சீசரை காதல் பார்வைக் காட்டி கவிழ்த்ததைப் போல ஆண்டனியையும் கவிழ்த்துவிடவேண்டும் என்று திட்டம் செய்திருந்ததாலோ அல்லது ரோமானிய தளபதிகள் எல்லாம் காதல் விசயத்தில் கொஞ்சம் 'வீக்' என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்ததாலோ அவள் ஆண்டனியை சந்திக்கச் செல்லும் நிகழ்வைப் படு பிரம்மாண்ட ஊர்வலமாக மாற்றிவிட்டாள். தேவதைகள் பொறாமை கொள்ளும் அளவில் தன்னை அலங்காரித்துக்கொண்டு ஆண்டனி முன் போய் நின்றாள். பிறகு என்ன ஆண்டனி வாயைப் பிளந்து கொண்டு காதலில் விழவேண்டியதுதானே. அதுதான் நடந்தது. இத்தனைக்கும் அவனை விடப் பதினைந்து வயது மூத்தவள் கிளியோப்பாட்ரா. காதலுக்குக் கண்ணு, மண்ணு, வயசு கன்றாவி இதெல்லாம் தெரியவாப் போகிறது. ஆண்டனிக்கும் இதெல்லாம் தெரியவில்லை. கிளியோப்பாட்ரா மட்டும் உலக அழகியாகத் தெரிந்திருக்கிறாள். குடும்பம் குட்டி என்று போகவேண்டியதுதானே மிச்சம். இருவருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. சீசரைப் போலவே ஆண்டனியும் சிறிது காலம் கிளியோப்பாட்ராவை ரோமில் தன்னுடன் தங்க வைத்து அழகுப் பார்த்தான்.

வல்லரசு என்றாலே அரண்மனை சூழ்ச்சிகளுக்குக் குறைச்சல் இல்லாமலா இருக்கம். ஆண்டனிக்கு எதிராகவும் அரசியல் சூழ்ச்சி நடந்தது. இதற்குக் காரணம் ஆண்டனி மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த போர்களில் தொடர்ச்சியாகத் தோற்றுக்கொண்டே வந்ததுதான். இந்த நிலையில் அடுத்தப் பலம் பொருந்திய தளபதியாக உருவெடுத்தவன் ஆக்டோவியன். இவன் ஜூலியஸ் சீசரின் உறவினன். ஆண்டனிக்கு எதிராக ரோமானியர்கள் மத்தியில் வெறுப்பை விதைக்க வேண்டுமென்றால் அவனுடைய எகிப்தியக் காதல் மனைவியே இலக்கு என்பதை நன்கு உணர்ந்து வைத்திருந்தான் ஆக்டோவியன். கிளியோப்பாட்ரா ஜூலியஸ் சீசரின் விதவை மனைவி என்கிற வகையில் அவனுக்கு உறவுதான் என்றாலும் அவன் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. ரோமில் கிளியோப்பாட்ராவிற்கும் ஆண்டனிக்கும் எதிர்ப்பு அதிகமாக இருவரும் தப்பித்து எகிப்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆண்டனியை உயிருடன் விட்டால் அது தனக்கு ஆபத்து என்பதை நன்கு உணர்ந்திருந்த ஆக்டோவியன் அவர்களுக்குப் பின்னாலேயே ரோமானியப் படையை அனுப்பிவைத்தான். ஆண்டனியின் கதையை முடிக்க, ஆனால் அந்தப் படை இறுதியில் ஒட்டுமொத்த எகிப்தையும் ரோமானிய ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்துவிடும் என்பதை யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்.

எகிப்தில், தான் முன்புத் தலைமைத் தாங்கிய படையுடனேயே இப்போது மோதிய ஆண்டனி தோற்றுப்போனான். கிளியோப்பாட்ரா எகிப்தை விட்டுத் தப்பித்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய்விடுவது என்றும் அவளுடைய மகனான சிசேரியனை கப்பல் மூலம் தென்னிந்தியாவிற்கு அனுப்பிவிடுவது என்றும் திட்டம் வைத்திருந்தாள். ஆனால் அவள் எகிப்தை விட்டுத் தப்பித்துப் போகத் தயார் செய்து வைத்திருந்த அனைத்துக் கப்பல்களும் எதிரிகளால் எறித்து அழிக்கப்பட்டுவிட்டது. ஆண்டனியும் கிளியோப்பாட்ராவும் பொறிக்குள் சிக்கியது கணக்காக எகிப்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டார்கள். ஆண்டனி தன் வாளாலேயே குத்தி தற்கொலை செய்துகொண்டான் என்பது மட்டும் சந்தேகமில்லாமல் தெரிகிறது. அதே சமயத்தில் கிளியோப்பாட்ரா எப்படி இறந்தாள் என்பது மட்டும் இன்றைக்கு வரைக்கும் மர்மமாகவே இருக்கிறது. அவள் எகிப்தின் கொடிய விசம் கொண்ட பாம்பின் விசம் அருந்தி இறந்துவிட்டாள் என்று ஒரு செவி வழி செய்தியும், வைரத்தை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாள் என்று ஒரு செவி வழி செய்தியும் சொல்கின்றன. இதில் எது உண்மை என்று தெரியவில்லை. கிளியோப்பாட்ராவின் இறப்பின் மூலம் ஓட்டுமொத்த எகிப்தும் ரோமானிய ஆட்சியின் கீழ் போனது.

முதல் பாரோநார்மர் தொடங்கிவைத்த பாரோபாரம்பரியம் முற்றிலுமாக முடிந்துப்போனது சுமார் 3000 வருடங்களாக எகிப்து கண்டுவந்த பாரோ பாரம்பரியம் கிளியோப்பாட்ராவின் இறப்புடன் முடிவிற்கு வந்தது. தாங்கள் கடவுளர்களின் பிரதிநிதிகள், மறு அவதாரங்கள் என்று சொல்லிக்கொண்ட பாரோக்கள் ஒரேயடியாக எகிப்தியக் கடவுளர்களிடமே போய்ச் சேர்ந்து கொண்டார்கள். மீண்டும் அவர்கள் எகிப்தில் தலைகாட்டவே இல்லை. இந்த நொடி வரை இனியும் அது முடியாதுதானே.

போதும். பாரோக்கள் குறித்துப் போதும் போதும் என்கிற அளவிற்குப் பார்த்தாகிவிட்டது. வாருங்கள் இனி நாம் கல்லறைத் திருடர்களைப் போய்ச் சந்திப்போம். ஆம் அவர்களேதான். பிரமிடுகளையும், குடைவரைக் கல்லறைகளையும் தங்கத்திற்காகச் சூறையாடி பாரோக்களைக் கதறவிட்டார்களே அதே கல்லறைத் திருடர்களைத்தான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.