Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பாரோ ஆமோஸ் I கி.மு. 1539 – 1514 (18-வது அரச பரம்பரை, புதிய அரசாட்சி காலகட்டம்)

பன்னிரெண்டாவது அரச பரம்பரையின் முடிவில் அதாவது கி.மு. 163()-களுக்கு முன்பு கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து குடி பெயர்ந்து வந்த மக்களினம் ஒன்று எகிப்தின் வடக்குப் பகுதிகளில் குடியேறியது. இவர்களை வரலாற்றுப் பதிவுகள் ஹிக்சோஸ் என்று அழைக்கிறது. இந்த மக்களினத்தின் பூர்வீகம் எதுவாக இருக்கும் என்று இந்த நிமிடம் வரை ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டங்களில் கிழக்கு ஆசியப் பகுதிகளில் மிக வலிமையான நாகரீகமாக இருந்தது திராவிட நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகம், சமயம், சமூகம், பொருளாதாரம், இராணுவம், தொழில் நுட்பம் என்று அனைத்து நிலைகளிலும் பல படிகள் வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்தவர்கள் சிந்து சமவெளி திராவிடர்கள். சிந்து சமவெளி திராவிடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் நகர விரிவாக்கம் செய்தபடி இருந்திருக்கிறார்கள். இந்த நகர விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சிந்து சமவெளி திராவிடர்கள் கி.மு. 1631-களில் எகிப்தின் வடக்குப் பகுதிகளில் வந்து குடியேறி நகர மற்றும் நாடு உருவாக்கம் செய்திருக்கவேண்டும்.

மேலும் சிந்து சமவெளி நகரங்களான அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ போன்றவை கி.மு.1700-கள் வாக்கில் அழியத் தொடங்கியிருக்கிறது. இதற்குச் சிந்து நதியின் வெள்ளப் பெருக்குக் காரணமாக இருக்கலாம் என்று இன்றைய தொல்லியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சிந்து நதியின் வெள்ளப் பெருக்குக் காரணமாக இந்த நகரங்களைக் கைவிட்ட சில சிந்துவெளிதிராவிட மக்கள் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து சிந்து வெளிப் பகுதிகள் போன்றே செழிப்பான எகிப்தின் வடக்கு டெல்டாப் பகுதிகளில் குடியேறி தங்களுக்கான புதிய அரசை நிறுவியிருக்கவேண்டும். பின்னாட்களில் இவர்கள் எகிப்தியர்களுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கினார்கள். அடுத்த நூறு ஆண்டுகளில் இவர்கள் எகிப்தின் தீப்ஸ் நகரம் வரை தங்களுடைய ஆட்சியதிகாரத்தை விரிவாக்கம் செய்துவிட்டார்கள். இதற்குக் காரணம் இவர்களிடமிருந்த வளர்ச்சி பெற்ற இராணுவத் தொழில் நுட்பங்கள். ஹிக்சோஸ்கள் வலிமைப்பெற்ற இந்த நூறு ஆண்டுகளில் எகிப்தில் ஐந்து பாரோ அரச பரம்பரைகள் வந்துப்போய் விட்டன.

ஆனால் எந்த அரசப் பரம்பரையின் பாரோவும் ஹிக்சோஸ்களை எதிர்க்கும் அளவிற்கு இராணுவ பலம் பெற்றவர்களாக இருக்கவில்லை . பாரோ பதவியைப் பிடிப்பதில் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டதால் வடக்குத் திசையில் வலுப்பெற்று வந்த ஹிக்சோஸ்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இது ஹிக்சோஸ்களுக்கு வசதியாகப் போய்விட எகிப்தின் பெரும்பான்மையான வடக்குப் பகுதி அவர்கள் வசமாகிப்போனது. அதாவது ஒட்டுமொத்த எகிப்தின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு ஹிக்சோஸ்களின் ஆட்சியின் கீழ். எகிப்திய குடிமக்கள் ஹிக்சோஸ்களுக்கு வரிக்கட்டும் அளவிற்குப் போய்விட்டது நிலைமை. இந்த நிலைக்கு ஒரு முடிவுக் கொண்டுவர துணிந்த ஒரே பாரோ பதினேழாம் அரச பரம்பரையின் இறுதிப் பாரோவான காமோஸ் கி.மு. 1542 – 1539. பாரோ காமோஸ் பதவியேற்றபோது வடக்கில் ஹிக்சோஸ்களும் தெற்கில் குஷைட்களும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு பலம் பொருந்திய எதிரிகளையும் எதிர்க்கத் துணியாத காமோஸ் ஒப்பீட்டளவில் எந்த எதிரி பலம் குறைந்தவனாக இருக்கக் கூடும் என்று கணித்துத் தெற்கில் இருந்த குஷைட்களைத் தாக்க முடிவு செய்தான்.

எகிப்தின் தெற்கில் பாதுகாப்பு அரணாக இருந்த கோட்டை பூஹென். இதைக் குஷைட்டுகள் பிடித்துக்கொண்டதால் இதை முதலில் மீட்பது என்கிற திட்டத்துடன் தன்னுடைய இராணுவத்தைத் தெற்கு நோக்கி நகர்த்தினான் காமோஸ். இது நடந்தது அவனுடைய இரண்டாம் ஆட்சியாண்டில், பூஹென் கோட்டையின் குடியானவர்கள் எகிப்தியர்கள் என்பதால் எல்லா வகையிலும் காமோசின் இராணுவத்திற்கு உதவி செய்து அவன் இந்தக் கோட்டையைப் பிடிக்கப் பெரும் உதவி செய்தார்கள். இந்த முக்கிய வெற்றிக்குப் பிறகு அவன் குறிவைத்தது எகிப்தின் வடக்கிலிருந்த ஹிக்சோஸ்களை ஹிக்சோஸ்களைத் தாக்க அவன் வகுத்த போர் தந்திரம் எதிர்பாராத தாக்குதல். எதிர்பாராத தாக்குதல் செய்யும் அதே வேகத்தில் பின் வாங்கிவிடுவது. இதுதான் அவனுடைய போர் திட்டம். திட்டம் வகுத்துவிட்டு வெட்டியாக நேரத்தைக் கடத்த அவன் விரும்பவில்லை, எகிப்தின் வடக்கு நோக்கி தன்னுடைய இராணுவத்தை நகர்த்தினான். இதை அவனுடைய வார்த்தைகளிலேயே இதோ கேளுங்கள், "அமூன் கடவுளின் கட்டளைப்படி தெற்காசியர்களை விரட்டியடிக்க வெற்றி வேந்தனாக நான் நைல் நதியில் பயணித்தேன்..... நெருப்பு பிழம்புகளாக எனக்கு முன்பாக என்னுடைய வீரம் மிகுந்த படை" அவனுடைய முதல் இலக்கு நெஃரூசி நகரம். விடியற் காலையின் முதல் சூரிய கிரணத்தின் வெளிச்சம் சோம்பல் முறித்துக்கொண்டு கீழ் வானத்திற்கு அடியிலிருந்து எட்டிப்பார்க்கும் வேலையில் காமோசின் இராணுவம் நெஃரூசி நகரத்தின் தலையில் இடியை இறக்கியது. இந்தத் தாக்குதல் குறித்தும் காமோசின் வார்த்தைகளிலேயே இதோ, "பருந்து போல நான் அவன் சூழ்ந்து கொண்டேன்..... இறையைக் கவ்வி இழுத்துச் செல்லும் சிங்கத்தைப்போல எனது படைகள் எதிரிகளைச் சின்னாபின்னமாக்கினார்கள்" சந்தேகமேயில்லாமல் நெஃரூசி நகரவாசிகளைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது காமோசின் படை தாக்கி சின்னாபின்னமாக்கிய அதே வேகத்தில் எகிப்திற்குள் திரும்பியும் விட்டது காமோசின் படை இந்த எதிர்பாராத தாக்குதலின் வேகமும் அழிப்பின் வீரியமும் ஹிக்சோஸ்களைக் கதிகலங்கடித்துவிட்டது. இதன் பிறகு மீண்டும் ஒரு தாக்குதலை நைல் நதியின் வழியே ஹிக்சோஸ்கள் மீது நடத்தினான் ஆனால் இந்த முறை வெற்றி தேவதை அவன் பக்கம் இருக்கமாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதால் காமோஸ் தோல்வியுடன் தீப்ஸ் திரும்பினான்

இவனுடைய இந்த வெற்றியும் தோல்வியும் இப்ட்சட் நகரில் இருக்கும் அமூன் கோயிலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவனுடன் கோபித்துக்கொண்டு போன வெற்றி தேவதை சும்மாயில்லாமல் மரணத் தேவதையைப் பிடித்துக் காமோசிடம் அனுப்பிவிட்டால். கி.மு. 1539-ஆம் வருடம் காமோஸ் மரணத் தேவதையின் பாசக் கரங்களைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திற்குச் சென்றுவிட்டான். அவன் எப்படி இறந்தான் என்பது குறித்த எத்தகைய வரலாற்றுத் தகவல்களும் இன்றைக்கு நமக்குக் கிடைக்கவில்லை. அடுத்தப் பாரோவாகப் பதவியேற்றவன் சிறுவனான ஆமோஸ். ஆமோசின் தாய் ஆவோதெப் கிரேக்க மின்னோவன் பகுதியைச் சேர்ந்த இளவரசன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்ததாக இப்ட்சட் நகரிலிருக்கும் அமூன் கோயில் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ஆக ஆமோஸ் எகிப்திய பாரோ அரச பரம்பரையில் வந்தவனாகத் தெரிகிறது. ஆமோஸ் பாரோவாகப் பதவியேற்றபோது சிறுவனாக இருந்ததால் அவனுடைய தாய் ஆவோதெப் அவனுக்குப் பதிலாக எகிப்தின் அரசவை நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டாள்.

ஆமோஸ் பாரோவாகச் செயல்படுவதற்கான வயதை அடைந்ததும் ஆவோதெப் ஆட்சியை அவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட்டிருக்கிறாள். பாரோ ஆமோஸ் எகிப்தின் 18-வது அரச பரம்பரையைத் தொடங்கிவைத்தான். இவனுக்கு முன்பே எகிப்தின் தெற்கிலிருந்த குஷைட்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டதால் எகிப்தின் தெற்குப் பகுதி அன்னியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றுவிட்டிருந்தது. இருந்தும் எகிப்தின் பெரும் பகுதியை ஹிக்சோஸ்கள் தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். ஹிக்சோஸ்கள் மீதான இறுதியான அதே சமயத்தில் உறுதியான தாக்குதலை தொடங்கிவைத்தான் ஆமோஸ். இந்தத் தாக்குதல்களில் ஆமோசுக்கு பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது எகிப்தியர்களின் கப்பல் படையே ஹிக்சோஸ்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூறு வருடங்களுக்கும் மேலாக அன்னியர்களின் ஆட்சியின் கீழிருந்த எகிப்தியர்களை மீட்டெடுத்த பெருமையை முழுமையாகத் தனதாக்கிக்கொண்டான் ஆமோஸ். ஆமோசின் இந்த வெற்றி கிட்டத்தட்ட முதல் பாரோவான நார்மரின் செயலுக்கு ஒப்பானதாகப் பிற்காலப் பாரோக்களால் போற்றப்பட்டிருக்கிறது. எகிப்திய நாகரீக வரலாற்றிலும் இந்த வெற்றியானது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பெண்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்துவிட முடியுமா என்ன. அதே போலப் பெண் ஆளுமைகள் இல்லாத எகிப்திய நாகரீகத்தையும் கற்பனை செய்துவிட முடியாது. எகிப்திய பெண் ஆளுமைகளிலேயே உச்சப் புகழையும் பெயரையும் பெற்ற ஒரு பெண் குறித்துத்தான் அடுத்து உங்களுக்குச் சொல்லப்போகிறேன். இவரைப் பெண் பாரோ என்று சொன்னாலும் அது வரலாற்றுப் பிழையாகாது. அந்தப் பெண்ணின் பெயர் ஹெத்செப்சத்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.