Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பாரோ அமினமெத் | கி.மு. 1938-1908 (12-வது அரச பரம்பரை, இடை அரசாட்சி காலகட்டம்)

பாரோ அமினமெத் எகிப்தின் பன்னிரெண்டாவது அரச பரம்பரையைத் தொடங்கிவைத்தவன். அதாவது நேரடிப் பாரோ பரம்பரையில் வந்த பாரோ கிடையாது இவன் பதினொராவது அரச பரம்பரையின் கடைசிப் பாரோவான மென்டோதெப் II (கி. மு. 1948-1938)-யின் வலது கரமாக இருந்தவன் அமினமெத். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பாரோவின் நம்பிக்கையைப் பெற்று பாரோவின் வலது கரமாக இருந்து செயல்படும் அளவிற்கு உயர்ந்தவன். பாரோ மென்டோதெப் இறந்த பிறகு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடுத்தப் பாரோவாகத் தன்னை அறிவித்துக்கொண்டு எகிப்தின் 12-வது அரச பரம்பரையைத் தொடங்கிவைத்தான் அமினமெத். பப்பைரஸ் ஆவணங்கள் இவன் பாரோவான விதம் குறித்து ஏதும் நமக்குச் சொல்வதாக இல்லை, இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அமினமெத் சூழ்ச்சி செய்து கொல்லைப் புறம் வழியாகத்தான் அரியணை ஏறியிருக்கவேண்டும் என்று.

அதற்கேற்றபடி உள் நாட்டிலும் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி, வேலை நிறுத்தம், கொள்ளை போன்ற அமைதியற்ற நிலையும் பஞ்சமும்தலைவிரித்தாடி இருக்கிறது. இப்படியே போனால் தலையிலிருக்கும் பாரோ கிரீடத்தை எடுத்துவிட்டுத் துண்டுதான் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை முன் கூட்டியே கணித்துவிட்ட அமினமெத், பாலைவனத்தில் வேட்டையாடி திரிந்து கொண்டிருந்த கேய் என்கிற கொள்ளையனை நாட்டிற்குள் அழைத்து வந்து அவனுக்குக் கீழ் கூலிப் படையையும் ஏற்பாடு செய்து தன்னுடைய ஆட்சிக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களுடைய குரல்வளையிலேயே குத்துவதற்குத் திரைமறைவு காய் நகர்த்தினான். இதற்குச் சாட்சி சொல்லும் வாசகத்தைக் கேய் தன்னுடைய கல்லறை கற்பலகையில் இப்படிப் பொறித்துவைத்திருக்கிறான். “நான் மேற்குப் பாலை சோலையை வந்தடைந்தேன். அதன் அனைத்துப் பாலைவன வழித்தடங்களையும் தீவிரமாகக் கண்காணித்து. அங்கு ஒளிந்திருந்த கிளர்ச்சியாளர்களைப் பிடித்துக்கொண்டு திரும்பினேன்"

இத்தோடு நிற்காமல் பதினொராவது பாரோவின் அரசவையில் இருந்த அனைத்து அதிகார வர்க்க ஆட்களையும் ஏறக்கட்டிவிட்டு தன்னுடைய கையாட்களையும் தனக்கு அடிமையாக இருந்து ஆதரவுத் தெரிவித்தவர்களையும் அந்த இடங்களுக்கு நியமித்தான். இதன் மூலம் எகிப்திற்குள் அவனுக்கு எதிராக எத்தகைய புரட்சியோ கிளர்ச்சியோ எதிர்ப்புக் குரலோ எழாதபடி செய்துவிட்டான். வினை விதைத்தவனுக்குக் கையோடு வினையையும் அறுவடை செய்யவேண்டியிருக்கும் என்பது தெரியாதா என்ன, அதுவும் உலகின் சக்தி வாய்ந்த அரச கிரீடத்தைச் சூழ்ச்சி செய்து கைப்பற்றிய அமினமெத்துக்குத் தெரியாதா என்ன! தான் பாரோவாக இருக்கும் போதே தன்னுடைய மகனான ஸ்னெசுரெட்டை இளைய பாரோவாக அறிவித்துவிட்டான். தான் பாரோவின் அரச பரம்பரையில் வந்தவன் இல்லை என்பதாலும், பாரோ பதவியைச் சூழ்ச்சி செய்து பெற்றதாலும் தனக்குப் பின் வேறு யாரும் அப்படிச் செய்து தன்னுடைய வாரிசு அடுத்தப் பாரோ ஆவதைத் தடுத்துவிடுவார்கள் என்கிற அச்சத்தில் தான் பாரோவாக இருக்கும் போதே தன்னுடைய மகனையும் துணை பாரோவாக அறிவித்துவிட்டான். எகிப்து இதற்கு முன்பு கண்டிராத சர்வாதிகாரியாகப் பரிணாம வளர்ச்சியடைந்தான் அமினமெத்,

சூழ்ச்சி மற்றும் சர்வாதிகாரப் போக்கு இது இரண்டுமே பாரோ அமினமெத்தின் உயிரைக் குடித்துவிட்டது. ஒரு நாள் இரவு உணவு முடிந்து படுக்கை அறைக்குச் சென்ற அவன் சூழ்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டான். அடுத்தப் பாரோவான ஸ்னெசுரெட் தன்னுடைய தந்தையின் படுகொலையை மையமாக வைத்து ஒரு கதையை எழுதவைத்து அதை எகிப்து முழுவதும் சுற்றில் விட்டான். ஸ்னெசுரெட்டின் இந்தச் செயலை அதற்கு முன்பு எகிப்து கேள்விப்பட்டிருந்தது கூடக் கிடையாது.

பொதுவாகத் துன்பகரமான விசயங்களைப் பொது வெளியில் பேசுவதைக் கேவலம் என்று தடுத்து வைத்திருந்தது அன்றைய எகிப்திய நாகரீகம். இந்தத் தடையை முதல் முறையாக உடைத்தான் ஸ்னெசுரெட். எகிப்து முழுவதும் சுற்றில் விட்ட கதையின் மூலம் தன்னுடைய தந்தை படுகொலை செய்யப்பட்டதற்கு எகிப்திய மக்களிடையே அனுதாபத்தை உருவாக்கிவிட்டான். தன்னுடைய தந்தை தியாகி போலவும் அவருடைய வாரிசானத் தான் அவருடைய தியாகத்தை முன்னெடுக்கும் சீடன் போலவும் அந்தக் கதையின் மூலம் ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்பித் தந்தையைக் கொன்ற அரண்மனை சூழ்ச்சியாளர்களைக் கதிகலங்கடித்தான். ஸ்னெசுரெட் இப்படி இலக்கியத்தைக் கையிலெடுத்து எகிப்திய மக்களைத் தனக்கு ஆதரவாக மாற்றியது மிகப் பெரிய அரசியல் காய் நகர்த்தல். இவனுடைய இந்தக் காய் நகர்த்தலுக்கு எதிராக எத்தகைய அரசியல் நகர்வையும் செய்ய முடியாமல் அரண்மனை சூழ்ச்சியாளர்கள் திணறிப்போய்விட்டார்கள்.

ஸ்னெசுரெட் இப்படி ஒரு அரசியல் நடவடிக்கையை எடுத்ததற்கும் படுகொலை செய்யப்பட்ட அமினமெத்தே முன்னுதாரணமாக இருந்திருக்கிறான். அமினமெத் எகிப்தின் 12-வது அரச பரம்பரையைச் சூழ்ச்சியின் மூலம் தோற்றுவித்த சர்வாதிகாரியாக இருந்திருந்தாலும் தன்னுடைய சர்வாதிகார அரசவையில் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எகிப்தின் இலக்கிய வளத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எந்த ஒரு பாரோவும் இப்படி அரசவையில் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கூடவே வைத்து இலக்கியத்தை வளர்த்தெடுத்ததில்லை. எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்களுடைய கல்லறைகளில் வேலை செய்யும் தொழிலாள கூலிகளில் ஒரு கூட்டம் என்கிற அளவிலேயே வைத்திருந்தார்கள். இந்த அபத்தப்போக்கை முதன் முதலில் உடைத்தவன் அமினமெத் தனக்கு மகிழ்ச்சித் தரக் கூடிய பல கதைகளையும் கவிதைகளையும் இயற்றும்படி எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உற்சாகப்படுத்தினான்.

இலக்கியப் படைப்புகளின் வீரியத்தை, மக்களிடையே அவை செலுத்தும் தாக்கத்தை முழுதாக உணர்ந்துகொண்ட அமினமெத் அத்தகைய படைப்புகளைத் தன்னைப் பற்றிப் பிரச்சாரம் செய்யும் சக்தி மிக்கச் சாதனமாகவும் மாற்றிக்கொண்டுவிட்டான். இதற்கு ஒரு உதாரணம் அவனுடைய அரசவை எழுத்தாளர்கள் எழுதிய தி பிராபசிஸ் ஆப் நெஃபர்டி என்கிற படைப்பு. இதில் அவன் தன்னை எகிப்தை மீட்க வந்த மீட்பராகவும், வானியலின் வெற்றியாளனாகவும் காட்டிக்கொண்டான். கீழே இருக்கும் வாக்கியங்கள் தி பிராபசிஸ் ஆப் நெஃப்ர்டி படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

தெற்கிலிருந்து ஒரு அரசன் வருவான் 

ஆம்னே , நியாயாதிபதி, அவனுடைப் பெயர்.... 

பிறகு ஒழுங்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பும்

குழப்பங்கள் விரட்டி அடிக்கப்படும். 

தந்தையின்வழியைஅப்படியேபிடித்துக்கொண்டஸ்னெசுரெட்தந்தையின்படுகொலையை மையமாக வைத்து எழுதியது தி டேல் ஆப் சினுஹெ. இந்தக் கதை இவனுக்குப் பிறகு வந்த பல பாரோக்களின் காலங்களிலும் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. அன்றைய எகிப்தியர்கள் மத்தியில் பல தலைமுறைகளுக்குத் திரும்பத் திரும்ப மக்களால் விரும்பிப் படிக்கப்பட்ட கதை தி டேல் ஆப்சினுஹெ. எகிப்திய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவர்கள் அமினமெத்தும் ஸ்னெசுரெட்டும்.

இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. பிரமிடுகள் முளைவிட்டிருக்கும் பாலைவனம்தான் நமக்கு இப்பொழுது பழகிவிட்டதே. அதனால் இரவு கொண்டுவரும் குளிரைச் சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கு இந்நேரம் நான் சொல்லாமலேயே அத்துப்பட்டியாகியிருக்குமே. ஆம் சுள்ளிப் பொறுக்கி வாருங்கள் தீ மூட்டுவோம். அந்தத் தீயின் கதகதப்பில் எகிப்திய நாகரீகம் அன்னியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற உதவிய பாரோ குறித்துச் சொல்கிறேன். அந்தப் பாரோவின் பெயர் ஆமோஸ்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.