Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

துட்மோஸ் III – எகிப்தின் அலெக்சாண்டர்

அரண்மனை பொறாமைக்குச் சொந்தக்காரன் துட்மோஸ் . ஹெத்செப்த்தின் சகோதர கணவனான துட்மோஸ் ||-க்கு மற்றொரு மனைவியின் மூலம் பிறந்தவன். இவனுக்கு ஹெத்செப்த் சித்தி முறை. துட்மோஸ் II இறந்த போது இவன் கைக் குழந்தையாக இருந்த காரணத்தைக் காட்டித்தான் ஹெத்செப்த் பாரோ பதவியைத் தனதாக்கிக்கொண்டாள். கைக் குழந்தை காலம் முழுவதும் கைக் குழந்தையாகவே இருந்துவிடுமா என்ன. துட்மோஸ் III வளர்ந்து பெரியவனாகிவிட்டிருந்தான். எகிப்தின் வழக்கப்படி பெரியவனாகிவிட்ட ஆண் வாரிசுக்கு உடனடியாகப் பாரோ பதவியைக் கொடுத்துவிடவேண்டும். ஆனால் ஹெத்செப் தன்னைப் பெண் பாரோ என்று அறிவித்துவிட்டதால் எகிப்தின் வழக்கத்தைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டாள். அவள் குப்பையில் போட்டுவிட்டாலும் அரண்மனைப் பெரிசுகளும் ஊர் பெரிசுகளும் சும்மாயிருந்துவிடுமா.

தெய்வக் குத்தமாகிப்போய்விடும் என்று ஹெத்செப்த்தை நச்சரித்து, துட்மோஸ் III துணைப் பாரோவாக அறிவிக்க வைத்தார்கள். இதன்படி அவன் கி.மு. 1479-ல் துணைப் பாரோவாகப் பதவியேற்றுக்கொண்டான். பதிவியேற்று அடுத்த 17 ஆண்டுகள் அவன் ஹெத்செப்த்திற்குக் கீழ் அடங்கியே இருக்க வேண்டியிருந்தது. பெயரளவிற்குக் கூட அவனைத் துணைப் பாரோவாகச் செயல்பட விடவில்லை ஹெத்செப்த். இதுவே அவனுக்குள் தன் சித்தி மீதான பொறாமைத் தீயை மூட்டிவிட்டுவிட்டது. இத்தனைக்கும் ஹெத்செப்த்தின் தந்தையான துட்மோஸ் -னுடைய அனைத்து இயல்புகளையும் கொண்டிருந்தவன் துட்மோஸ் III பேரரசை உருவாக்கும் துணிச்சலும் திறனும் கொண்டவனால் அரண்மனையில் தேமே என்று உட்கார்ந்து கொண்டு வெற்றிலை பாக்கு மென்றுகொண்டிருக்க முடியுமா என்ன. எப்பொழுது சித்தி போவாள் திண்ணை காலியாகும் என்று பார்த்துக்கொண்டிருந்தான், இந்தக் காத்திருப்பு காலமும் அவனுக்குள் மேலும் வெறுப்பைத் தூண்டிக்கொண்டிருந்தது.

ஹெத்செப்த், துட்மோஸ் III-க்குச் சித்தியாகும் அதே வேலையில் அவனுக்கு மாமியாரும் கூட. ஆம் ஹெத்செப்த் அவளுடைய மகளைத் துட்மோஸ் III-க்குத் திருமணம் செய்துவைத்திருந்தாள். அரியணையைக் கொடுக்க வேண்டியவள் மகளைக் கொடுத்து மேலும் வெறுப்பைக் கிளப்பினாள். இந்நிலையில் கி.மு. 1458-க்குப் பிறகு ஹெத்செப்த் குறித்து எத்தகைய வரலாற்றுத் தகவல்களும் நமக்குக் கிடைப்பதில்லை . துட்மோஸ் III, கி.மு. 1457-க்குப் பிறகு தன்னை எகிப்தின் பாரோவாக அறிவித்துக் கல்வெட்டு வெளியிடத் தொடங்குகிறான். அப்படியென்றால் ஹெத்செப்த்திற்கு என்ன நேர்ந்தது? இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடிவரை இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவளுக்கு என்ன நேர்ந்திருக்கலாம் என்று ஊகிக்கக் கூட முடியாத நிலை. அரண்மனை சூழ்ச்சி அவளைக் கொன்றுவிட்டதா, அவளே துட்மோஸ் III-க்கு வழிவிட்டு ஒதுங்கிச் சென்றுவிட்டாளா, இயற்கையாக மரணித்துவிட்டாளா எதற்கும் பதில் இல்லை. கடும் மௌனத்தை இழுத்துப் போர்த்திக்கொண்டு ஹெத்செப்த் வரலாற்றின் இருளில் எங்கோ சென்று மறைந்து விட்டாள். அவளுடைய மம்மியைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை .

ஹெத்செப்த்திற்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு துட்மோஸ் -வும் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். காரணம் துட்மோஸ் /// தன்னைப் பாரோவாக அறிவித்துக்கொண்ட பிறகு ஹெத்செப்த் கட்டிய அனைத்துக் கட்டிடங்களையும், அவளுடைய சிலைகளையும், ஓவியங்களையும் சிதைக்கக் கட்டளையிட்டான். துட்மோஸ் III-யின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்குத் தப்பிப் பிழைத்த ஹெத்செப்த்தின் கட்டிடங்களையும், சிலைகளையும், ஓவியங்களையுமே இன்றைக்கு நாம் பார்க்கிறோம். ஹெத்செப்த் மீதிருந்த அவனுடைய பொறாமை, வெறுப்பு அனைத்தையும் இந்த வழியாகத் தீர்த்துக்கொண்டான் துட்மோஸ் III. இனி வரும் வரலாற்றில் ஹெத்செப்த் என்கிற பெயர் கூட மீந்திருக்கக் கூடாது என்கிற தீவிரத்திலிருந்தது அவனுடைய அழித்தொழிப்புக் காரியங்கள். அவளுடைய கல்லறை கட்டிடங்களைக் கூட அவன் விட்டுவைக்கவில்லை. இதனால்தான் அவளுடைய மம்மிக் கூட இன்றைக்கு நமக்குக் கிடைக்கவில்லை என்று கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். துட்மோஸ் III-ன் ஆவிக்குப் பயந்தோ என்னவோ பின்னால் வந்த பாரோக்கள் பலர் அவளுடைய பெயரை குறிப்பிடுவதைக் கூடக் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள். ஹெத்செப்த்தின் அடையாளத்தை இல்லாமல் ஆக்குவதில் மிக மோசமாக நடந்து கொண்ட துட்மோஸ் III உண்மையில் எகிப்தின் மாவீரர்களில் முதன்மையானவன். எகிப்தின் நூற்றுக்கணக்கான பாரோக்களில் மாவீரன் என்கிற பட்டத்திற்குப் பொருத்தமானவன் துட்மோஸ் III மட்டுமே. அலெக்சாண்டருக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகம் பார்த்த மாவீரன் இவன்தான். இவனுடைய தாத்தா 16 அடிப் பாய்ந்திருந்தார் என்றால் இவன் 16 அடிகள் பாய்ந்திருந்தான். எட்டுத் திக்கிலும் இருந்த மன்னர்கள் அனைவரும் துட்மோஸ் III என்று உச்சரிக்கக் கேட்டாலே 'சனியன் நம் மீது படை கிடை எடுத்துத் தொலைத்து விடப் போகிறது' என்று பீதி அடையும் நிலை இருந்தது. எகிப்தை வல்லரசிலும் வல்லரசாக மாற்றியவன் இவன்.

எகிப்தின் 31 அரசப் பரம்பரை பாரோக்கள் ஒவ்வொருத்தரைக் (கிட்டத்தட்ட 2000 பாரோக்களுக்கும் மேல் குறித்தும் தனித் தனியாகப் பார்ப்பதாக இருந்தால் அதற்கு இந்தப் புத்தகம் போதாது. உங்களுக்கும் ஒரு வித சலிப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் எகிப்திய நாகரீகத்தில் அரசு, கட்டிடக் கலை, இலக்கியம், வணிகம், இராணுவம் போன்ற துறைகளில் புதுமையும் சாதனைகளும் நிகழ்த்திய பாரோக்களை மட்டும் தேர்ந்தெடுத்து இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இவர்களைக் குறித்து அறிந்து கொண்டாலே எகிப்திய நாகரீகம் குறித்து ஒரு முழுமையான அறிமுகம் உங்களுக்குக் கிடைத்துவிடும். எகிப்திய நாகரீகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளை முன்னகர்த்திச் செல்வது நாம் இந்தப் புத்தகத்தில் பார்த்த பாரோக்களின் செயல்களும் சாதனைகளுமே. இப்படியிருந்தும் மேலும் ஒரு பாரோவைக் குறித்து நான் இங்கே சொல்லாமல் விட்டுவிட்டால் அது உங்களுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தரலாம். உங்களை ஏன் ஏமாற்றுவானேன். நீங்கள் நன்றாக அறிந்துவைத்திருக்கும் அந்தப் பாரோவைக் குறித்தும் பார்த்துவிடலாமே, உண்மை என்னவென்றால் அவர் எகிப்தியப் பாரோவாக இருந்தவர் என்றாலும் எகிப்திய இனத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அந்நிய மண்ணைச் சேர்ந்தவர். அவரை உங்களின் சிறு வயது முதலே நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். அவர் கிளியோப்பாட்ரா. எகிப்தின் கறுப்பழகி. எகிப்தின் பாரோ என்றெல்லாம் வரலாறு உங்களுக்கு இவளைக் குறித்து அறிமுகப்படுத்தியிருக்கலாம். இதில் ஒரு பகுதி உண்மை ஆனால் மறு பகுதி பொய்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.