Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம் 116 கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும்

பல வருஷங்களுக்கு முன் ஒரு நாள் திருவாவடுதுறை மடத்தில் ஆதீனத் தலைவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தேரழுந்தூரிலிருந்து ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவர் வந்தார். அவ்வூரின் விசேஷங்களைப் பற்றி நான் அவரிடம் விசாரிக்கலானேன். அவர் மூலமாகக் கம்பர் பிறந்த ஊர் அத்தேரழுந்தூரே என்று தெரிய வந்தது.

அழுந்தூர் மடம் 

'திருவழுந்தூரென்பதே அதன் இயற்பெயர். அதற்குத் திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகம் ஒன்றுண்டு. அதில் 'அழுந்தை' என்று அதன் பெயர் சொல்லப் பெற்றுள்ளது. திருவாவடுதுறைக்கு வந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவ்வூர்ச் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் வேதபுரீசரென்று சொன்னார். "சிவாலயத்தில் தனியே மகா மடேசுவரர் என்ற மூர்த்தி இருக்கிறார். தீர்த்தத்தின் அதிஷ்டான தெய்வமென்று பெரியவர்கள் சொல்வார்கள்" என்றும் அவர் கூறினார். அப்போது,

"அழுந்தை மாமறையோர் 

வழிபாடுசெய் மாமட மன்னினையே

என்ற தேவாரப் பகுதி என் நினைவுக்கு வந்தது. திருஞான சம்பந்தராற் பாடப் பெற்ற மூர்த்தி அந்த மகாமடேசுவரராகத் தான் இருக்க வேண்டுமென்று தோற்றியது. 'மாமறையோர் வழிபாடு செய்' என்பதனால் அங்கே முற்காலத்தில் வேதகோஷம் நிரம்பி யிருந்ததென்றும், 'வேதபுரி' என்ற பெயர் அவ்வூருக்கு அமைந்தது பொருத்தமென்றும் கருதினேன்.

கம்பர் பிறந்த ஊர் தேவாரம் பெற்ற ஸ்தலமாக இருந்ததில் காரணமில்லாத திருப்தி ஒன்று எனக்கு ஏற்பட்டது. கம்பர் காலத்தில் பழமறையும் கன்னித் தமிழும் அவ்வூரில் சிறந்து விளங்கியிருக்கும்.

கம்பர் பிறந்த ஊர் 

கம்பரைப் பற்றிய செய்திகள் பல, தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன. அவரைப் பற்றிய தனிப் பாடல்களும் பல உண்டு. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் தாம் இயற்றிய வி நோ த ர ஸ மஞ்சரியில் தனிப் பாடல்களையும் கர்ண பரம்பரைச் செய்திகளையும் பிணைத்துப் படிப்பதற்கு இனிமையாக இருக்கும்படி கம்பர் வரலாற்றை எழுதிவிட்டார். ஆனால், சரித்திர உண்மை எவ்வளவு என்பது வேறு விஷயம்.

கம்ப ராமாயணச் சிறப்புப் பாயிரங்களி லிருந்தும், தனிப் பாடல்களிலிருந்தும், 'கம்பர் திருவழுந்தூரிற் பிறந்த உவச்சர்; அவரைப் போற்றிப் பாதுகாத்தவர் சடையப்ப வள்ளலென்ற வேளாளர்: அவ்வள்ளல் வெண்ணெய் நல்லூரென்னும் ஊரினர் என்பன போன்ற செய்திகள் தெரிய வந்தன. மாயூரத்துக்கருகில் திருவழுந்தூரென்ற பெயருடைய ஊர் ஒன்று இருக்கிறது. அது சிறந்த விஷ்ணு ஸ்தலம். கம்பர், அங்கே பிறந்திருப்பாரென்ற சந்தேகம் சிலருக்கு எழுந்தது. ஆனால், அவ்வூரின் இயல்பான பெயர் திரு இந்தளூர்.

உவச்சரென்பார் கோயிற் பூசை புரியும் வகுப்பினர்; ஒச்சரென்றும் சொல்வதுண்டு. மிதிலைப் பட்டியில் எனக்குக் கிடைத்த திருவிளையாடற் பயகர மாலையில் அந்நூலின் ஆசிரியர் வீரபத்திரக் கம்பரென்று இருந்தது. அதிலிருந்து கம்பரென்பது குடிபற்றிய பெயரென்றும் கம்பருடைய இயற்பெயர் மறைந்துவிடவே, அவர் குடிப்பெயரே நிலைத்ததென்றும் தோற்றியது. பழங்காலத்தில் கம்பத்தை வைத்துப் பூசித்த காரணத்தால் அவர்களுக்குக் கம்பரென்ற குடிப்பெயர் வந்திருக்கலாம்.

கதிர் வேய் மங்கலம் 

தஞ்சாவூரில் பிரபல வக்கீலாக இருந்தவரும் என்னிடம் பேரன்பு பூண்டவருமான கே.கல்யாண சுந்தரையர் தம்முடைய ஊராகிய கதிராமங்கலத்தில் ஒரு புது வீடு கட்டி 1892-ஆம் வருஷம் ஜூன் மாதம் கிருகப்பிரவேசம் செய்தார். அவசியம் அந்த விசேஷத்திற்கு வரவேண்டுமென்று அவர் எனக்கு எழுதினார். அந்த அழைப்புக் கடிதம் கிடைத்தவுடன், அவ்வூருக்கருகில் உள்ள கம்பர் பிறந்தவூரையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்ற ஆவலையும் உடன் கொண்டு சென்றேன்.

குத்தாலம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வடக்கே சில மைல் தூரம் சென்றால் கதிராமங்கலத்தை அடையலாம். நான் ஏறிய ரயில் வண்டியில் கதிராமங்கல வாசியான கோபால கிருஷ்ண ஜோஸ்ய ரென்பவரைக் கண்டேன். அவர் கம்பரைப் பற்றிய சில விஷயங்கள் சொன்னார்.

"கம்பர் பிறந்தது தேரழுந்தூர்தான். அதற்கு வடக்கே வெண்ணெய் நல்லூர் இருக்கிறது. சடையப்ப வள்ளல் இருந்த ஊர் அது. எங்கள் ஊராகிய கதிராமங்கலமும் கம்பர் சரித்திர சம்பந்த முடையதே" என்றார் அவர்.

"எப்படி?" என்று ஆவலோடு கேட்டேன்.

"கதிர் வேய் மங்கலமென்பது அந்த ஊருக்கு முதலில் ஏற்பட்ட பெயர். அதுவே மாறிக் கதிராமங்கலமென்று ஆயிற்று."

"கதிர் வேய் மங்கலமென்ற பெயர் வரக் காரணம் என்ன?"

*கம்பர் ஒரு தாசியினிடம் அன்பு வைத்துப் பழகி வந்தார். அவள் அந்த ஊரில் இருந்தாள். ஒரு நாள் தன்னுடைய வீட்டுக் கூரையை வேய வைக்கோல் இல்லையென்று அவள் கம்பரிடம் தெரிவித்தாள். அவர் சடையப்ப வள்ளலிடம் இதைத் தெரிவிக்கவே, அவ்வள்ளல் நெற்கதிர்களையே அறுத்து அவற்றால் வேயச் சொன்னாராம். அதனால்தான் கதிர் வேய் மங்கலமென்ற பெயர் அந்த ஊருக்கு உண்டாயிற்று."

இந்தக் கதை அப்போது எனக்குப் புதிதாக இருந்தது. கம்பருக்குத் தாசிகளின் தொடர்பு உண்டென்ற வரலாற்றை மட்டும் கேட்டிருந்தேன். இந்த வரலாறு சடையப்ப வள்ளலின் பெருந்தன்மையை விளக்குவதாக இருந்தது. 'நாம் கதிராமங்கலம் போவதற்குப் பிரயோசனம் ஆரம்பத்திலேயே கிடைத்து விட்டது' என்று மகிழ்ந்து அந்த ஜோஸ்யரைப் பாராட்டினேன்.

கதிராமங்கலத்துக்குப் போய் இந்தக் கதையைப் பலர் வாயிலாகக் கேட்டு உறுதி செய்து கொண்டேன். கிருகப்பிரவேசமான பிறகு தேரழுந்தூருக்குப் போனேன். அங்கே 'கம்பர் மேடு' என்ற ஓரிடத்தைக் காட்டினார்கள். கம்பர் வீடு அம்மேட்டில் இருந்ததென்று சொன்னார்கள். அவ்வூர்ப் பெருமாள் கோயிலில் கம்பர், அவர் மனைவி இருவருடைய பிம்பங்களையும் கண்டேன். வேதபுரீசர் ஆலயத்துக்குப் போய் மகாமடேசுவரர் சந்நிதியையும் பார்த்தேன்.

பக்கத்தில் 'க்ஷேத்திரபாலபுரம்' என்ற ஊர் இருக்கிறது. க்ஷேத்திரபால ரென்பது வயிரவரது திருநாமம். கம்பர் முதல் முதலாகப் பாடிய,

"வாய்த்த வயிரபுர மாகாளி யம்மேகேள் "

என்ற பாட்டில் வரும் வயிரவபுரம் அந்த ஊராகத்தான் இருக்க வேண்டும். அவர் குறிப்பித்த காளி கோயில் இன்னும் இருக்கிறது. அதை அங்காளியம்மன் கோயிலென்று வழங்குகிறார்கள்.

வெண்ணெய் நல்லூர் 

அ ப்பால் வெண்ணெய் நல்லூருக்குப் போனேன். அதைச் சடையப்ப பிள்ளை கிராமமென்றும் வழங்குவார்கள்; அறுபதி வேலி யுள்ளது. அங்கே ஒரு குளம் உண்டு. அதன் கரையில் விஷ்ணுவின் விக்கிரகம் இருந்தது.

"மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று 

வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே

என்ற பாட்டில் கூறப் பெறும் வாவி அதுதானென்று சிலர் கூறினர்.

கதிராமங்கலத்திலுள்ள சிவாலயத்திற்குப் போனேன். அங்கே உள்ள ஒரு விநாயகரைத் தரிசிக்கையில் பீடத்தில் ஏதோ எழுதி யிருப்பதைக் கண்டு கவனித்தேன். 'வெண்ணெய் நல்லூர்ப் பிள்ளையார்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. மாயூரத்திலிருந்து தஞ்சைக்குச் செல்லும் சாலையில் அவ்விக்கிரகம் இருந்ததென்றும் பாதுகாப்பின் பொருட்டு அதனைக் கொணர்ந்து ஆலயத்தில் வைத்தார்க ளென்றும் கேள்வியுற்றேன்.

எல்லாவற்றையும் கண்டும் கேட்டும் இன்புற்றுக் கம்பரது நினைவிலே ஊறியவனாய்க் கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தேன். கம்ப ராமாயணத்தைப் படித்துப் படித்து இன்புற்ற எனக்குக் கம்பர் வரலாற்றைப் பற்றிய புதிய செய்திகள் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளில் 'காணியாளர் அகவல்' என்பது ஒன்று. அதனால் சோழ நாட்டு வேளாளர்களுடைய கோத்திரங்கள் 64 என்பது தெரிய வந்தது. அவற்றுள் சடையப்ப நயினார் கோத்திர மென்பது ஒன்று. சோழ நாட்டு வேளாளர்களுக்கு 'நயினாரென்ற பட்டம் உண்டு. சடையப்ப வள்ளலது பரம்பரை யினரது கோத்திரமென்றே அதைக் கருதுகிறேன்.

கம்பரைப் பற்றியும், அவர் ஊரைப் பற்றியும், வேறிடங்களைப் பற்றியும் நான் தெரிந்து கொண்ட இச்செய்திகளைத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தராகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்குச் சொன்னேன். அருங்கலை விநோதராகிய அவர் மிக்க சந்தோஷத்தை அடைந்தார்.

பிற்காலத்தில் என் புத்தகப் பதிப்புக்கு உதவியாக இருந்த பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் கம்பர் சம்பந்தமான இவ்விஷயங்களை என்னிடம் தெரிந்து கொண்டு இவற்றையும் வேறு சில விஷயங்களையும் சேர்த்துத் தாம் பதிப்பித்த தமிழ்ப் பாட புத்தக உரையில் வெளியிட்டிருக்கிறார்.

நவராத்திரி விழா 

அ வ்வருஷம் நவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமென்று இராமநாதபுரம் 'ஸ்ரீ பாஸ்கர ஸேதுபதி'யிடமிருந்து எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் காலேஜில் பத்து நாட்கள் ரஜா பெற்றுக் கொண்டு புறப்பட்டு மதுரையில் இறங்கி மாட்டு வண்டியில் இராமநாதபுரம் சென்றேன். வழியில் பல வண்டிகள் தாங்க முடியாத பண்டங்களை ஏற்றிக்கொண்டு சென்றன. பார மிகுதியால் பல அச்சு முறிந்தன. எல்லாம் இராமநாதபுரத்தை நோக்கிச் செல்வதை அறிந்து நவராத்திரி விழாவின் சிறப்பை ஒருவாறு ஊகித்துக் கொண்டேன்.

அவர் இத்தமிழ்நாட்டிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான வித்துவான்கள் வந்திருந்தார்கள். தமிழ்நாட்டுக் கனவான்களில் ஒருவர் பாக்கியில்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஊர் தாங்காத கூட்டம் கூடி யிருந்தது. பண்டங்களின் விலையெல்லாம் பன்மடங்கு ஏறிவிட்டது.

ஸேதுபதி மன்னர்களின் குல தெய்வமாகிய ராஜ ராஜேசுவரி யம்பிகைக்கு 1008 சங்கம் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பூஜை முதலியன மிக விரிவாக நிகழ்ந்தன. மேளக் கச்சேரி, சங்கீத வினிகைகள் முதலியவற்றிற்குக் கணக்கேயில்லை. ஸம்ஸ்கிருத வித்வான்களின் சபையும் தமிழ்ப் பண்டிதர்களின் சபையும் நடந்தன.

மகா வைத்தியநாதையர் அப்போது தேக அசௌக்கியத்தோடிருந்தமையால் வரவில்லை; தமையனார் மாத்திரம் வந்திருந்தார். இரட்டையரைப்போல அவ்விருவர்களையும் ஒருங்கு பார்த்தே பழகிய எனக்கு இராமசுவாமி ஐயரைத் தனியே பார்த்தபோது உயிரில்லா உடம்பைப் பார்ப்பதுபோல இருந்தது. "தங்கள் சகோதரர் வரவில்லையே; தேக அசௌக்கியம் கடுமையாக இருக்கிறதோ?" என்று கேட்டேன்.

"ஆம்; பிரணதார்த்தி ஹரர் திருவருள் என்ன செய்கிறதோ! நான் கூட வருவதாக இல்லை . வைத்திதான் 'போய்விட்டு வா' என்றான். பல காலமாகப் பழகிய இடம்; அதனால் வந்தேன்" என்றார்.

எனக்குத் தனியே ஜாகை திட்டம் செய்திருந்தார்கள். பல வித்துவான்களை ஒருங்கே சந்திக்கும் சந்தர்ப்பம் அந்த மாதிரி ஏற்படுவது மிகவும் அரிது. சிலப்பதிகாரம் முடிவு பெற்ற சந்தோஷத்தை வித்துவான்களும் அன்பர்களும் என்னிடம் தெரிவித்துப் பாராட்டினார்கள். "நீங்கள் கொடுத்திருக்கிற நூல் வரிசையைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறதே! அடுத்தபடி என்ன ஆரம்பிக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

*மணிமேகலை இருக்கிறது; புறநானூறு இருக்கிறது; பதிற்றுப் பத்து, ஐங்குநூறு, அகநானூறு, நற்றிணை இவைகளெல்லாம் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்” என்று சொன்னேன். இன்னதைத் தொடங்குவதென்ற நிச்சயம் அப்பொழுது எனக்கு ஏற்படவில்லை .

சிறுவயல் ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவருடனும், பாலவனத்தம் ஜமீன்தாரும் பொன்னுசாமித் தேவருடைய குமாரருமாகிய பாண்டித்துரைத் தேவருடனும் நெருங்கிப் பழகிச் ஸல்லாபம் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு அப்போது கிடைத்தது. முத்துராமலிங்கத் தேவர், பாஸ்கர ஸேதுபதிக்குப் பாட்டனார் முறையினர். மேலே நான் வெளியிடும் நூல்களுக்குப் பொருளுதவி செய்வதாக அவர் வாக்களித்தார்.

அங்கே இருந்த பத்து நாட்களும் பொழுது போனதே தெரியவில்லை . ஸேதுபதியினுடைய உபசாரமும் சாதுரிய வசனங்களும் கொடைப் பெருமையும் எனக்கு வியப்பை உண்டாக்கின. அந்த விழாவுக்கு இரண்டு லக்ஷ ரூபாய்களுக்கு மேல் செலவாயிற்றென்று தெரிந்தது.

வித்துவான்கள் ஸேதுபதியைப் பல படியாக வாழ்த்திப் பாடல்களைக் கூறினர். நானும் சில செய்யுட்களைச் சொன்னேன்.

"விண்ணிற் சிறந்திடு பாற்கரர் போல் விரும்புமிந்த 

மண்ணிற் சிறந்துயர் பாற்கர பூபதி வாழியவே

[பாற்கரர் = பாஸ்கரன் (சூரியன்), பால் போன்ற கிரணத்தையுடைய சந்திரன்.]

என்ற இரண்டடிகளே இப்போது நினைவுக்கு வருகின்றன .

ஸம்மானம் 

நான் ஸேதுபதி வேந்தரிடம் விடைபெற்றுக் கொண்டபோது அவர் எனக்கு இரண்டு உயர்ந்த சாதராக்களைப் போர்த்தி, "தஞ்சாவூர் ஜில்லாவிற்கு வருவேன். அப்போது அவகாசமாக உங்களோடு பேசி உங்கள் தமிழ்ப் பணிக்கு வேண்டிய உதவியைச் செய்வேன்" என்று சொன்னார். புறப்படும்போது தானாதிகாரி என் வழிச்செலவுக்கும், படிச்செலவுக்குமாக ரூபா நூறு அளித்தார். நான் கும்பகோணம் வந்து என் தாய் தந்தையருக்கும் அன்பர்களுக்கும் சாதராக்களைக் காண்பித்தேன். யாவரும் மகிழ்ந்தனர். திருவாவடுதுறைக்குப் போய் அம்பலவாண தேசிகரிடம் காட்டியபோது, "மிகவும் உயர்ந்த ஸம்மானம்; தங்கள் தகுதியை அறிந்து செய்த சிறப்பு இது" என்று பாராட்டினார்.

"இந்த ஆதீன சம்பந்தம் இல்லாவிட்டால் எனக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது?" என்று சொல்லிவிட்டு, "இவை இரண்டும் என்ன விலை பெறும்?" என்று கேட்டேன்.

"முந்நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும்" என்றார் அம்பலவாண தேசிகர்.

"இந்தத் துப்பட்டாவினால் எனக்கு என்ன பிரயோஜனம்? இவற்றை இங்கேயே கொடுத்து விடலாமென்று நினைக்கிறேன்."

"என்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள்! ஒரு பெரிய சமஸ்தானத்தில் பெற்ற மரியாதை; பத்திரமாக நீங்களே பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்."

"சிலப்பதிகாரம் அச்சிட்டதனால் ஏற்பட்ட சிரமம் இருக்கிறது. அதைத் தீர்க்க வழியில்லை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? தமிழ்த்தாயின் திருப்பணியினால் வந்த கௌவரம் இவை. ஆகையால், இவற்றை மீட்டும் அதற்கே உபயோகப் படுத்துவதுதான் நியாயம்" என்றேன்.

அம்பலவாண தேசிகருக்கு, நான் அவற்றைக் கொடுத்துவிடுவதில் மனமில்லா விட்டாலும் என் குறிப்பை யறிந்து மடத்திலேயே அவற்றை எடுத்துக் கொண்டு அவற்றின் விலையாக ரூ.300 எனக்கு அளிக்கச் செய்தார். நான் அத்தொகையைப் பெற்றுச் சிலப்பதிகாரப் பதிப்பினால் அப்போது இருந்த கடன் தொல்லையினின்றும் நீங்கினேன்.

கடன் தீர்ந்த சந்தோஷத்தில் தமிழ் நூற்பதிப்பைப் பற்றி யோசிக்கலானேன். பல நூல்கள் என் கையில் இருந்தாலும் மணிமேகலையையும் புறநானூற்றையும் அதிகமாக ஆராய்ந்து வந்தேன். அவ்விரண்டினுள்ளும் புறநானூற்றில் பாதிக்கு மேல் பழைய உரை இருந்தது. மணிமேகலைக்கு உரையில்லை. அன்றியும் அது பௌத்த சமய சம்பந்தமுள்ளது. அச்சமய நூற் கருத்துக்களை நான் முற்றும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அந்த நிலையில் புறநானூற்றையே முதலில் அச்சிடலாமென்ற முடிவுக்கு வந்தேன்.

இடையில், திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரான், பிள்ளையவர்கள் இயற்றிய அந்த ஸ்தல புராணத்தை வெளியிடவேண்டுமென்று விரும்பினமையால் 1892-ஆம் வருஷ இறுதியில் அதனை வெளியிட்டேன். குறிப்புரை முதலியவற்றை எழுத வேண்டுமென்ற விருப்பம் இருந்தும், விரைவில் வெளிப்படுத்த வேண்டுமென்று தம்பிரான் வற்புறுத்தியமையால் மூலத்தை மாத்திரம் வெளியிட்டேன்.

மேலே புறநானூற்றை ஆழ்ந்து ஆராயத் தொடங்கினேன்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.