Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம் 117 புறநானூற்று ஆராய்ச்சி

புறநானூற்றை அச்சிடுவதாக நிச்சயம் செய்தவுடனே, பதிப்பு முறையைப் பற்றி யோசிக்கலானேன். வர வரப் புதிய துறைகளிலும் புதிய முறைகளிலும் விஷயங்களைச் சேர்த்து நூல்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்தது. ஆங்கிலம் தெரியாத எனக்கு அப்பாஷையிலுள்ள சிறந்தப் பதிப்புக்களைப் பார்த்து மகிழவோ, அவற்றைப் போலச் செய்து பார்க்கவோ சக்தியில்லை. சங்க நூலைப் படிக்கவோ, படித்தபின் ஆராய்ச்சி செய்யவோ, அதன்பின் பதிப்பிக்கவோ இறைவன் திருவருள்தான் துணையாக இருந்தது. முன் பழக்கம் அவற்றில் இல்லாத நான் எந்த எந்த விதத்தில் ஆராய்ந்தால் அழகாக இருக்குமென்று தோற்றுமோ அவ்வவ்விதத்தில் முயன்று வரலானேன்.

புதிய முறை 

ஒரு நாள், காலேஜில் சரித்திர ஆசிரியராக இருந்த கே.ஆர்.துரைசாமி ஐயரென்பவர் தம் கையில் பெரிய இங்கிலீஷ் புஸ்தக மொன்றை வைத்திருந்தார்.

"என்ன புஸ்தகம்?" என்று கேட்டேன்.

"பைபிள்” என்றார்.

*பைபிள் சிறியதாக அல்லவா இருக்கும்? இது மிகப் பெரியதாக இருக்கிறதே!" என்றேன்.

"இது பைபிளில் ஒரு விசேஷப் பதிப்பு. பைபிளிலுள்ள விஷயங்களைத் தொகுத்து வகைப்படுத்தி ஒரே மாதிரியான சொல்லும் கருத்தும் உள்ள பகுதிகளை அங்கங்கே காட்டிப் பதிப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடுவிலே தனியே இந்த ஒப்புமைப் பகுதி இருக்கிறது. இதை, 'கன்கார்டன்ஸ்' (Concordance) என்று இங்கிலீஷில் சொல்வார்கள்" என்று சொல்லி அதைப் பிரித்துக்காட்டினார்.

அந்த ஒப்புமைப் பகுதிகளில் பலவகை எண்கள் காணப்பட்டன. அப்புஸ்தகத்தில், அதைத் தொகுத்தவர் படமும், அவருக்கு உதவியாக இருந்தவர் படமும் இருந்தன.

"இந்த ஒப்புமைப் பகுதியால் என்ன பிரயோஜனம்?" என்று கேட்டேன் .

"பைபிளில் ஒரே செய்தி பல இடங்களில் வருகிறது. ஒரே விதமான சொற்றொடர்களும் வருகின்றன. அவற்றைத் தொகுத்து வைத்து ஆராய்ந்தமையால் சில விஷயங்களின் உண்மையான பொருளும் சில சொற்களின் திருத்தமான உருவமும் புலப்பட்டனவாம். பைபிளில் ஏறியிருந்த பிழையான பாடங்கள் இந்தச் சோதனையினால் திருத்த மடைந்தனவாம்" என்று அவர் எனக்கு விளக்கினார்.

அப்போது எனக்குப் புறநானூற்று ஆராய்ச்சியில் புது முறை ஒன்று தோற்றியது. புறநானூற்றிலுள்ள விஷயங்களையும் சொற்களையும் முதலிலே அகராதியாகச் செய்துகொண்டு ஆராய்ச்சி செய்தால் உண்மை யுருவத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்குமென்று அறிந்தேன். அங்ஙனமே செய்து வைத்துக் கொண்டேன்.

ஆராய்ச்சிக்குரிய கருவிகள் 

ஒ ரு நூலைத் திருத்தமாகப் பதிப்பிக்க வேண்டுமென்றால், பல வகையான கருவிகளை முதலில் அமைத்துக்கொள்ள வேண்டும். ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது மட்டும் போதாது. ஏட்டில் இருப்பது அவ்வளவும் திருத்தமாக இராது. பல காலமாகப் பிழையாகவே வழங்கி வந்த பாடங்களை அவற்றிற் பார்க்கலாம். அவற்றுள் இதுதான் சுத்த பாடம் என்று தெரிந்து கொள்வதற்குப் படும் சிரமந்தான் மிகவும் அதிகம். நூலில் உள்ள கருத்துக்களுக்கும் சொற்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொள்வது மட்டும் போதாது. புறநானூற்றில் பல புலவர்கள் பாடி யிருக்கிறார்கள். அப்புலவர்களுடைய பாடல்கள் வேறு நூல்களிலும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பார்த்தால் அப்புலவர் வாக்கின் போக்கையும், அவருக்கு விருப்பமான கருத்துக்களையும், நடையையும் உணர்ந்து கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியிலிருந்து சில திருத்தங்கள் கிடைக்கும். ஆகவே, சங்கப் புலவர்கள் பெயர்களை வரிசையாக எழுதிக்கொண்டு அவர்கள் இயற்றிய பாடல்கள் எந்த எந்த நூல்களிலுள்ளனவென்று தெரிந்து தொகுத்துப் படித்தேன்.

சங்க காலத்து நூல்களில் வழங்கிய மரபை அறிவதற்கு அவை அனைத்தையுமே ஆராய வேண்டும். சங்க நூல்களவ்வளவும் சேர்ந்து ஓர் உடம்பு போன்றவை. அவ்வுடம்பு முழுதும் ஒரு வகையான நாடி ஓடும். ஆகையால் அவற்றை முற்றப் பயின்றால்தான் அந்த மரபு தெளிவாக விளங்கும். இதை உத்தேசித்து என்னிடமுள்ள எல்லாச் சங்க நூல்களுக்கும் அகராதி எழுதி வைத்துக் கொண்டேன் .

புறநானூறு ஆராய்ச்சி செய்வதற்குச் சங்க நூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பன்மடங்கு இன்பம் உண்டானாலும், சிரமமும் பன்மடங்காயிற்று. பலபேருடைய உதவியை நாடவேண்டியது இன்றியமையாததாக இருந்தது.

உதவி புரிந்தோர் 

என்னுடன் இருந்து திருமானூர் கிருஷ்ணையரும், ம.வி.இராமானுஜா சாரியாரும் இந்த விரிந்த ஆராய்ச்சியில் உதவி செய்து வந்தார்கள். அக்காலத்தில் என்னிடம் தமிழ் நூல்களைப் பாடங்கேட்டு வந்த ஸ்ரீ * சொக்கலிங்கத் தம்பிரானும் இவ்வாராய்ச்சியில் துணை செய்தார். திருப்பெருந்துறை பொன்னுசாமிப் பிள்ளை என்பவரும் காலேஜ் மாணாக்கர்கள் சிலரும் தங்கள் தங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்து வந்தார்கள்.

மேற்கோள் விளக்கம் 

புறநானூற்றுச் செய்யுட்களையும், செய்யுட் பகுதிகளையும் இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டி யிருக்கிறார்கள். அந்தப் பகுதிகளையும் மேற்கோள் காட்டவேண்டிய காரணத்தையும் ஆராய்ந்தால் பாடம் திருந்துவதோடு பாட்டின் கருத்தும் விளங்கும். பிரயோகங்களைத் தொகுப்பதற்கு எல்லா உரைகளையும் முற்றும் படித்துப் புறநானூற்றுப் பகுதி வருகின்றதா என்று பார்க்க வேண்டும். அச்சிட்ட புஸ்தகங்களில் பிரயோக விளக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏட்டுச் சுவடிகளிலோ மேற்கோட் செய்யுளைக் கண்டுபிடிப்பதே கஷ்டம். நூல்களைப் பாடங் கேட்பவர்கள் தம் ஆசிரியர் கூறும் விஷயங்களை அங்கங்கே சுவடியில் இரண்டு வரிகளுக் கிடையே எழுதி வைப்பதுண்டு. ஏடுகளில் உள்ளவற்றை உள்ளவாறே பிரதி செய்து அதற்குரிய ஊதியம் பெற்று ஜீவனம் செய்பவர்கள் அந்தக் குறிப்புக்களையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதிவிடுவார்கள். ஆராய்ச்சி செய்யும்போது அவற்றைத் தனியே பிரித்தறிவது சில சமயங்களில் மிகவும் சங்கடமாக இருக்கும்.

உரைகளைப் படித்து வரும்போது அங்கங்கே வரும் மேற்கோள் களில் எனக்குத் தெரிந்தவற்றிற்கு ஆகரம் அங்கங்கே குறித்து வைப்பது எனது வழக்கம். அச்சிடப்பட்ட தொல்காப்பிய உரைகளிலும், திருக்குறள் உரையிலும், வேறு உரைகளிலும், கண்ட மேற்கோள்கள் பலவற்றின் இடங்களை என் கைப்புஸ்தகங்களில் குறித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சியில் அந்தப் பதிப்புக்களிலுள்ள பிழையான பாடங்கள் எனக்குப் புலப்பட்டன. என் பதிப்புக்களில் அவற்றின் திருந்திய வடிவத்தை மட்டும் அமைப்பதையன்றி, "இது பிழை" என்று சுட்டிக்காட்டும் வழக்கத்தை நான் கொள்ளவில்லை.

இப்படி மேற்கோளாராய்ச்சிலே சென்ற காலம் மிக அதிகம். பிரயோகங்களைத் தொகுத்து வகைப்படுத்துவதிலே உண்டான சிரமம் எவ்வளவோ மிகுதியாக இருந்தாலும் ஒரு முறை பட்ட கஷ்டம் பல நூற்பதிப்புக்கு உபயோகமாக இருந்தது. அக்காலத்தில் நான் செய்து வைத்துக்கொண்ட பலவகை அகராதிகளே இன்றும் எனக்கு மூல நிதியாக உதவுகின்றன. அவற்றைக் காணும்போது 'எவ்வளவு காலம், எவ்வளவு அன்பர்களுடைய உழைப்பு இவற்றில் சென்றிருக்கின்றன?" என்று எண்ணி வியப்பேன். அவற்றின் அருமை பெருமையை, அச்சிட்ட புஸ்தகங்களைப் படிப்பவர்கள் சிறிதும் அறியார். மிக உயர்ந்த அலங்காரமான மாளிகையைக் கண்டு அதன் அழகில் ஈடுபடுபவர்கள் அம்மாளிகை எந்த அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்ட தென்பதைக் கவனிப்பதில்லை . மிகவும் ஜாக்கிரதையாகப் போட்ட அந்த அஸ்திவாரம் பூமிக்குள் மறைந்து கிடக்கின்றது.

தொல்காப்பியப் பொருளாதிகார உரையில் பல இடங்களில் புறநானூற்றுச் செய்யுட்கள் மேற்கோளாக வந்துள்ளன. என் கையிலிருந்த புறத்திரட்டில் பல செய்யுட்கள் இருந்தன. இவற்றைக் கொண்டு என்னிடமிருந்த புறநானூற்றுப் பிரதிகளில் கிடைக்காத பல குறையான பகுதிகளை நிரப்பிக் கொண்டேன்.

புறநானூறு 400 செய்யுட்களடங்கியது. நான் செய்த சோதனையின் முடிவில் 267, 268-ஆம் பாடல்கள் எங்கும் கிடைக்கவில்லை. பல பாடல்களுக்கு முதல் இல்லை; பலவற்றிற்கு இறுதிப் பகுதி இல்லை ; பலவற்றில் இடையிடையே சில பகுதிகள் காணப்படவில்லை .

உரை 

என்னிடமுள்ள புறநானூற்றுப் பிரதிகளில் சிலவற்றில் பழைய உரை ஒன்று இருந்தது. அவ்வுரையாசிரியர் இன்னாரென்று புலப்படவில்லை . அவ்வுரையும் முதல் 260 பாடல்களுக்கே இருந்தன. 242-ஆம் பாடலுக்குமேல் உள்ள உரையோ இடையிடையே சிதைந்து மாறியிருக்கிறது. அவ்வுரையாசிரியர் பதப் பொருளை இனிது விளக்கி உரிய இடங்களில் சொற்களை முடித்துக்காட்டி இலக்கணக் குறிப்பையும், திணை துறைகளையும், ஆங்காங்குள்ள பழமொழிகளையும், அணியையும், சொல் நயம், பொருள் நயங்களையும் புலப்படுத்துகிறார். இடையிடையே சில வாக்கியங்கள் அவ்வவ்விடத்திற்குப் பொருத்தமில்லாதனவாகத் தோற்றின. அவர் சில இடங்களில் சில விஷயங்களை மறுத்திருக்கிறார். அதனால் புறநானூற்றுக்குப் பழைய உரை ஒன்று இருந்திருக்கலாமென்ற எண்ணம் உண்டாகிறது.

திணையும் துறையும் 

ஒ வ்வொரு பாட்டின் முடிவிலும் திணையும் துறையும், பாடினோர் பெயரும், பாடப்பட்டோர் பெயரும் உள்ளன. நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் ஓரிடத்தில், 'தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றறிக' என்று எழுதியிருக்கிறார். அவர் கருத்து அவ்வாறு இருந்தாலும் பிரதிகளில் உள்ள திணை துறைகளையே கொள்ளுதல் நெடுங்காலமாக வந்த வழக்கமாகிவிட்டது. அவை பெரும்பாலும் பன்னிரு படலமென்ற பழைய புறப்பொருள் இலக்கணத்தின்படி அமைந்திருத்தல் கூடுமென்று தோற்றியது. அப்பழைய நூல் அகப்படவில்லை . ஆனாலும், அதன் வழி நூலாகிய 'புறப்பொருள் வெண்பா மாலை' மூலமும் உரையுமுள்ள ஏட்டுச் சுவடி அப்போது என்னிடமிருந்தது. அதனை ஆராய்ந்து திணை துறைகளின் இலக்கணங்களுக்குட் பெரும்பாலானவற்றைத் தெரிந்து கொண்டேன். ஆயினும் சில துறைகளுக்கு விளக்கம் அந்நூலினாலும் தெரிந்து கொள்ள இயலவில்லை.

சரித்திரச் செய்திகள் 

பா டினோர் பாடப்பட்டோர் பெயரைக் குறிப்பிடும் வாக்கியங்களில் சரித்திரச் செய்திகள் இருந்தன. சங்க காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்கு அவை மிகவும் பயன்படுவன. அவ்விருவருடைய பெயர்களிலும் பலவகையான பாட பேதங்கள் இருந்தன. அவற்றைத் தனியே தொகுத்து வைத்துக்கொண்டு பிற நூல்களில் அப்பெயர்கள் வந்துள்ள இடங்களை ஆராயலானேன். இந்தச் சரித்திர ஆராய்ச்சி பெரிய சமுத்திரமாக இருந்தது. சமுத்திரத்திற்காவது ஒரு பக்கம் கரையுண்டு: இதற்கு எந்தப் பக்கத்திலும் கரையே இல்லை .

சரித்திர ஆராய்ச்சியில் வல்லவர்களைக் கொண்டு அவ்விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமென்றெண்ணி இராசாங்கத்துச் சிலாசாசனப் பரிசோதகராக இருந்த ராவ்பகதூர் வி.வெங்கையருக்குச் சில அரசர் பெயர்கள், சில ஊர்ப் பெயர்கள் முதலியவற்றை எழுதி அவை சம்பந்தமாகத் தெரிந்த செய்திகளைத் தெரிவிக்கும்படி வேண்டினேன். அதியமான், கரிகால்வளவன் முதலியவர்களைப் பற்றியும் வெண்ணி, மிழலை முதலிய ஊர்களைப் பற்றியும் அவர் சில குறிப்புக்களை எழுதியனுப்பினார்.

தபால் இலாகாவில் ஸூபரின் டெண்டண்டாக இருந்த ஸ்ரீ வி.கனகசபைப் பிள்ளை என்பவர் தமிழ் நூல்களிலும் தமிழ்நாட்டுச் சரித்திரத்திலும் ஈடுபட்டவர். தமிழர் சரித்திரம் எழுத வேண்டுமென்ற கருத்தோடு அவர் ஆராய்ந்து பல செய்திகளைத் தொகுத்து வந்தார். அந்த முயற்சியின் விளைவாகப் பிறகு அவர் ஆங்கிலத்தில் '1800 வருஷங்களுக்கு முந்திய தமிழர்' என்ற அரிய புஸ்தகத்தை எழுதி வெளியிட்டார்.

அவர் எனக்கு நண்பர். தம்மிடமுள்ள சில ஏட்டுப் பிரதிகளை உதவியிருக்கிறார். என்னுடைய தமிழ்நூற் பதிப்பைப் பற்றி அடிக்கடி விசாரித்து ஊக்கமூட்டுபவர்களில் அவரும் ஒருவர்.

'துஞ்சிய' என்னும் சொல் 

அ வருக்கும் சில விஷயங்களை விளக்க வேண்டுமென்று எழுதினேன். முக்கியமாகப் புறநானூற்றிலுள்ள அரசர் பெயர்களில் வரும் 'துஞ்சிய' என்னும் வழக்குக்குப் பொருள் கேட்டேன். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவன் எனவரும் பெயர்களில் துஞ்சிய என்பதற்கு இறந்த வென்று பொருள் கொள்ளலாமென்று தோற்றினாலும், 'ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் பாடலுக்குக் கீழே அவன் இறந்த செய்தியைக் குறிப்பார்களா?" என்ற சந்தேகம் எழுந்தது. ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

புறநானூற்றில் 34-ஆம் பாட்டு, கிள்ளி வளவனென்ற சோழ அரசனை ஆலத்தூர் கிழாரென்ற புலவர் பாடியது. அதில் அவர்,

"கொண்டன் மாமழை பொழிந்த 

நுண்பஃறுளியினும் வாழிய பலவே

என்று வாழ்த்துகிறார். பாட்டின் இறுதியில் 'சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது' என்ற குறிப்பு உள்ளது. பாட்டு அரசனை வாழ்த்துகிறது; குறிப்பிலோ அவன் துஞ்சிய செய்தி விசேஷணமாக அமைந்திருக்கிறது. பிற்காலத்தில் செய்யுட்களைத் தொகுத்தவர்கள் எழுதிய குறிப்புகள் அவை. அரசர்களை இன்ன இடத்துத்

துஞ்சினாரென்று குறித்தல் ஒரு சம்பிரதாயம். அதனை அக்காலத்தில் அறிந்துகொள்ளாமல் இருந்த எனக்கு, 'துஞ்சிய என்பதற்கு 'இறந்த' என்ற பொருள் கொள்ளுவது உசிதமாகப் படவில்லை. இந்த விஷயத்தை கனகசபைப் பிள்ளை தெரிவித்தார்.

'துஞ்சிய'வென்பதற்கு 'இறந்த'வென்றே பொருள் கொள்ள வேண்டுமென்று அவர் எழுதினார். அதற்கு ஆதாரமாகச் சிலப்பதிகாரம், தேவாரம் என்பவற்றை எடுத்துக்காட்டினார். 'இப்படியே அரசர்கள் இறந்த காலத்தை அவர்கள் பெயர்க்கு விசேடணமாக்கிக் கூறுதல், கோழிக் கோட்டு ஸாமூதிரி அரசரின் பரம்பரை வழக்கம்; திருவனந்தபுரத்தரசரின் வழக்கமும் இதுவே' என்று பிறவிடங்களிலுள்ள வழக்கத்தையும் தெரிவித்தார். இறுதியில், 'இந்த அருமையான புறநானூறு வெளிவந்தால் தமிழ்நாட்டார் பல ஆச்சரியமான செய்திகளை உணர்ந்து கொள்வார்கள் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியைப் பலர் மேற்கொள்வார்கள். விரைவில் பதிப்பித்து நிறைவேற்ற வேண்டும்' என்றும் எழுதினார்.

இப்படிப் பல பல முறையிலே சேகரித்த பலவகைக் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆராய்ந்து புறநானூற்றை ஒருவகையாகச் செப்பஞ்செய்து அச்சுக்குக் கொடுப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

- பிற்காலத்தில் (1919 - 1930) திருப்பனந்தாட் காசி மடத்தில் தலைமை வகித்து விளங்கினார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.