குமரகுருபர தேசிகர், 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் கவிஞர் மற்றும் சைவ துறவி. இறைவன் முருகன் அருளால் ஊமை நிலை நீங்கிப் பேசினார். அதன் பின்னர் பல சைவ துதி நூல்களை இயற்றியுள்ளார். இவர் இறைத்தொண்டு மிகுதியால் தருமபுரம் பண்டார சந்நிதியை அடைந்து ஞான உபதேசம் கேட்டார். பண்டார சந்நிதி வெரைச் சிதம்பரம் சென்று வரக் கட்டளையிட்டார். அவரே பின்னாளில் குமரகுருபரரை வடக்கே சென்று இறைப்பணிச் செய்ய உத்தரவிட்டார் என வரலாறு குறிப்புக்கள் உள்ளன. இருப்பினும் அதில் எதற்காக அவரை வடநாடு செல்ல உத்தரவிட்டார் என்பது குறித்து எந்த விவரமும் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன் அதற்கான காரணத்தை கவிதை வடிவில் ஒரு புனைவு கவிதையாக இயற்றியுள்ளார்.
பூங்கோதையின் மீது காதல் நினைவாகவே உள்ள தன்னுடைய மகன் பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் அவனது தந்தை மான நாய்கன். பூங்கோதையும் அவனுடைய பிரிவு தாளமுடியாமல் அவனைக் காணப்போகிறாள். வடநாட்டில் ஆரியர்கள் யாகத்திற்குப் பொருளுதவி கேட்க, அந்த யாகத்தை இழிவாகப் பேசுகிறார்கள் பொன்முடியும் மற்ற தமிழர்களும், ஆத்திரம் அடைந்த ஆரியர்கள் இவர்களைக் கொலை செய்து பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய பொன்முடி தன்னைத் தேடி வரும் பூங்கோதையை எதிர்பாராத விதமாகச் சந்திக்கிறான். இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திப்பதால் ஆர்வ மிகுதியால் ஒருவரை ஒருவர் தழுவ தாவும் வேலையில், பொன்முடியை கொலை செய்ய துறத்தி வந்த ஆரிய வீரன் மறைந்திருந்து வீசிய கத்தியால் பொன்முடியின் தலை உடலை விட்டு தனியாக செல்கிறது. அவன் சிரத்தில் முத்தமிட்டு பூங்கோதையும் அவனுடன் மரணம் அடைகிறாள். இந்தச் செய்தி அறிந்து வந்த அவனுடைய தந்தை மான நாய்கன் அழுதுக்கொண்டே செல்வதாகக் கதை நிறைவுப்பெறுகிறது.
இக்கதையைக் கவிதையாக செந்தமிழில் இயற்றிய பாரதிதாசன் அவர்கள் இந்நூலில் மொத்தம் ஐந்து முத்தங்களைக் குறிக்கிறார். அந்த ஐந்து முத்தங்கள் குறித்து வரும் வரிகள் நம்மை அந்தக் காட்சியை நேரில் காணும் உணர்வைத் தருகிறது.