உள்ளூர் மற்றும் உலகளாவிய அளவில் மாந்தரின் நாகரிக வளர்ச்சியின் தொகுப்பாக விளங்கும் காட்சிப் பொருட்களை நாம் கண் கூடாகப் பார்த்திருப்போம் எனத் துணிந்துரைப்பேன். ஆயின், மாந்தரின் நிறுவனங்கள் (Huitith Tristitutions) என்பவற்றை வெளிப்படுத்தக் கூடியனவும் உள்ளன என்னும் கருத்தைச் சிலரே ஏற்கக்கூடும். மாந்தரின் நிறுவனங்களை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது விநோதமானதொரு கருத்தே; சிலர் இதனை முரட்டுத்தனமான கருத்தென்றும் கூறலாம். எனினும், மானுடவியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் என்ற வகையில் உங்களுக்கு இந்தக் கருத்து புதுமையானதாக இருக்காது. இருக்கலாகாது எனக் கருதுகின்றேன். எப்படியும் இந்தக் கருத்து புதியதாக இருக்கலாகாது.
நீங்கள் யாவரும் பாம்ப்பியின் (Psmpil) சிதைவுகள் போன்ற சில வரலாற்றுச் சின்னங்களைப் பார்த்திருப்பீர்கள். இவற்றின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றையும் விளக்கியுரைப்பதற்கென்று பணியாற்றும் வழிகாட்டிகளின் வருணனைகளை வியந்து கேட்டிருப்பீர்கள். என் கருத்துப்படி மானுடவியல் மாணவர்களும் ஒரு வகையில் இந்த வழிகாட்டிகளைப் போன்றவர்களே என்பேன். அவர்களைப் போன்றே சமூக நிறுவனங்களை விளக்கியுரைப்பதற்குத் தம்மால் முடிந்த அளவு தம் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து அதே வேளையில் மிகுந்த ஆர்வத்தோடும் பொறுப்போடும் அவற்றின் தோற்றத்தையும் செயற்பாடுகளையும் இவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தொன்மைக்காலச் சமுதாயத்தையும் தற்காலச் சமுதாயத்தையும் ஒப்பிட்டு நோக்குவதில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களான இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள நம் மாணவ நண்பர்களில் பெரும்பாலோர் தம்மைக் கவர்ந்துள்ள தற்கால மற்றும் பண்டைய கால நிறுவனங்களைத் தெரிந்து திறம்பட எடுத்துரைக்க வல்லவர்களாவர். இந்த மாலைப் பொழுதில் நானும் என்னால் இயன்றவரை உங்களை மகிழ்விப்பதற்கு இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் - பிறப்பும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் என் கட்டுரையை படைக்க விரும்புகின்றேன்.
நான் எடுத்துக் கொண்டுள்ள தலைப்பின் சிக்கல்களை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். என்னைவிட அறிவாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கோர் பலர் சாதிகள் பற்றிய புதிர்களை விடுப்பதற்கு முயன்றுள்ளனர். எனினும் துரதிருஷ்டவசமாக இப்புதிர் விளக்கிக் கொள்ள முடியாதது என்று கூறுவதற்குரியதாக இல்லையாயினும் 'விளக்கப்படாததாகவே இருந்து வருகின்றது. சாதி போன்ற மிகப் பழமை வாய்ந்த அமைப்பின் குழப்பமான சிக்கல்களை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். எனினும், இது தெரிந்து கொள்ள முடியாத ஒன்று என்று ஒதுக்கி விடும் நம்பிக்கையற்ற மனநிலை உடையவன் அல்ல; அதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே நான் நம்புகிறேன்.
கோட்பாட்டு அளவிலும் நடைமுறையிலும் சாதிப் பிரச்சினை மிகப்பெரியதொன்றாகும். நடைமுறையில் சாதி என்பது மாபெரும் பின் விளைவுகளை முன் அறிகுறியாகக் காட்டும் ஒரு அமைப்பாகும். சாதி சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல், ஆயினும் மிகப் பரந்த அளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில் "இந்தியாவில் சாதிமுறை உள்ள வரை இந்துக்கள் கலப்பு மணம் செய்யமாட்டார்கள், அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள்; இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பிழைக்கச் சென்றாலும் இந்திய சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்." கோட்பாட்டு அளவிலோவெனில், சொந்த ஆர்வத்தினால் சாதியின் மூலாதாரங்களைத் தோண்டித் துருவி அறிய முற்பட்ட எத்தனையோ வல்லுநர்களுக்கு இந்தச் சிக்கல் ஒரு சவாலாக இருந்திருக்கிறது. எனவே இந்தச் சிக்கலை நான் முழுமையாக விளக்கிவிட முடியாது. சாதி முறையின் தோற்றம், அமைப்பியக்கம் மற்றும் அதன் வளர்ச்சி ஆகியவற்றை மட்டும் விளக்கியுரைப்பதற்கு நான் வரையறை செய்து கொள்வேன். அல்லாமற் போனால் காலம், இடம், என் அறிவுத் திறன் ஆகிய அனைத்துமே என்னைக் கைவிட்டுவிடக் கூடும் என அஞ்சுகின்றேன். என் ஆய்வுரையின் குறிப்பிட்ட பகுதிகளைத் தெளிவுபடுத்துவதற்குரிய தேவை ஏற்பட்டாலான்றி மேற்கூறிய வரம்பிலிருந்து நான் விலகிச் செல்ல மாட்டேன்.
ஆய்வுப் பொருளுக்கு வருவோம். நாம் நன்கு அறிந்த மானுடவியல் அறிஞர்களின் கூற்றுப்படி ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பன்னெடுங்காலத்திற்கு முன்னர் பல்வேறு திசைகளிலிருந்தும் பலவகைப்பட்ட பண்பாடுகளோடும் இந்தியாவுக்கும் நுழைந்த பழங்குடிகளாவர்.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு முன்பே இங்கு வாழ்ந்து வந்தோருடன் போரிட்டுத் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வந்த போராட்டங்களுக்குப் பின் நிலையாகத் தங்கிப் பிறருடன் அண்டை அயலாராகி அமைதியாக வாழத் தொடங்கினர். பின்னர் இவர்களுக்குள் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்பின் மூலமாகவும் கலந்து பழகியதாலும் தத்தம் தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டினை இழந்து அவர்களுக்குள் ஒரு பொது பண்பாடு உருவானது.
எனினும் பலவகை இன மக்களின் தனித்தனி பண்பாடு மறைந்து ஒன்றுபட்ட ஒரே பண்பாடு ஏற்பட்டு விடவில்லை என்பதும் தெளிவு. இதனால் இந்திய நாட்டு எல்லைக்குள் பயணம் செய்யும் பயணி ஒருவர் இந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள மக்கள் உடலமைப்பிலும் நிறத்திலும் வேறுபட்டிருப்பதைக் காணலாம்; அவ்வாறே தெற்கிலும் வடக்கிலும் உள்ள மக்களிடையேயும் வேறுபாடு இருக்கக் காணலாம். இனங்களின் கலப்பு என்பது எப்போதும் ஒரே இயல்புள்ளதாக இருக்க வேண்டும் என்று ஆகாது. மானுடவியல் படி மக்கள் யாவரும் பலபடித்தான (HeicroEETCOus) தன்மை கொண்டவர்களே.
அந்த மக்களிடையே நிலவும் பண்பாட்டு ஒருமையே ஓரியல்பு தன்மைக்கு அடிப்படையாகும். பண்பாட்டு ஒருமைப்பாட்டினால் இணைந்துள்ள இந்திய தீபகற்பத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு வேறு எந்த நாடும் இல்லை என்று துணிந்து கூறுவேன். இந்தியா நாடு புவியியல் ஒருமைப்பாட்டினை மட்டுமே கொண்டிருக்கவில்லை. அதினினும் ஆழமும் அடிப்படையாகவும் உள்ளதான - இந்திய நாடு முழுவதையும் தழுவிய ஐயத்திற்கு இடமற்ற பண்பாட்டு ஒருமைப்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த ஒத்த இயல்பின் காரணமாகவே சாதி என்பது விளக்கிவுரைக்க இயலாத சிக்கலாக உள்ளது. இந்து சமுதாயம் என்பது ஒன்றுக்கொன்று தனித்தனியே இயங்கும் பிரிவுகளின் ஒரே கூட்டமைப்பாக மட்டும் இருக்குமேயானால் இந்தச் சிக்கல் எளிதானதாக இருக்கும். ஆனால் சாதி ஏற்கனவே ஓரியல்பாய் உள்ள பிரிவுகளின் கூட்டமைப்பாக உள்ளதால் சாதியின் தோற்றத்தைப் பற்றி விளக்குவது கூட்டமைப்பாக அமைந்த முறையினை விளக்குவதாக ஆகின்றது.
நமது விசாரணையைத் தொடங்குவதற்கு முன் சாதியின் இயல்பு பற்றித் தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது. எனவே சாதி குறித்துச் சிறப்பாக ஆய்ந்துள்ள சிலருடைய விளக்கங்களைக் காண்போம்.
- செனார்ட் என்னும் பிரெஞ்சு நாட்டு வல்லுநர் கூற்றுப்படி: ஒரு குறுகிய ஆட்சி மன்றம், கோட்பாட்டளவில் எல்லா வகையிலும் வாழையடி வாழையாகக் கண்டிப்புடன் இயங்குவது: தலைவர் ஒருவரையும் ஒரு ஆலோசனைக் குழுவையும் தன்னகத்தே கொண்டு மரபு வழியில் தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்பு; ஏறத்தாழ நிறைந்த அதிகாரம் கொண்ட பேரவையாகக் கூட்டுவது, குறிப்பிட்ட சில திருவிழாக்களின் போது ஒன்று சேர்வது, மணவிழா, உணவு, தீட்டு சம்பந்தப்பட்ட சடங்குகள் தொடர்புடைய அதிகார வரம்புகளை வரையறை செய்யும் பொது அலுவல்களால் நிர்ணயிப்பது மூலம், தன் உறுப்பினர்களை ஆள்வது; தண்டனைகளை விதிப்பதன் மூலம் மாற்ற முடியாத வண்ணம் தன் உறுப்பினர்களைத் தம் கூட்டத்திலிருந்த நீக்கி வைக்கும் பெருந்தண்டனை விதிக்கும் அளவுவரை சென்று தன் அதிகாரத்தை உணர்த்துவது.
- நெஸ்பீல்டு என்பார் கூற்றுப்படி: சாதி என்பது சமுதாயத்தின் ஒரு பிரிவினர் ஒரு குழுமமாக அமைந்து பிற குழுவினருடன் எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாமலும் கலப்பு மணஉறவு ஏற்படுத்திக் கொள்ளாமல் தங்கள் சாதிக் குழுவினரைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல்; பிறருடன் கலந்து உணவு அருந்தவோ தண்ணீர் முதலியவற்றைக் குடிக்கவோ செய்யாமலிருப்பது ஆகும்.
- சர்.எச்.ரிஸ்: சாதி என்பதனை ஒரு பொதுப் பெயர் கொண்ட குடும்பங்களின் அல்லது பல குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தின் தொகுப்பு என விளக்கலாம். இந்தப் பொதுப் பெயர் குறிப்பிட்ட தொழில்கள் சார்ந்ததாகவோ அல்லது பெயர், புராணத் தொடர்புடைய முன்னோர் அல்லது தெய்வங்கள் வழி வந்ததாகச் சொல்லிக் கொள்வதாகவோ இந்த முன்னோர் அல்லது தெய்வங்கள் செய்து வந்த தொழிலைத் தாமும் தொடர்ந்து செய்து வருவதாகவோ அமைந்திருப்பது; சாதி பற்றிய கருத்தினைக் கூறத் தகுதியுள்ளவர்களால் ஓரியல்பான ஒரு குழுவின் உருவாக்கமே சாதி எனக் கருதப்படுவது.
- டாக்டர் கெட்கர் என்பார் சாதி என்பது இருவகை இயல்புகளைக் கொண்டுள்ள சமூகக் குழு என விளக்குவார். அவை:
- அந்தக் குழுவின் உறுப்பினராகும் உரிமை, உறுப்பினர்களுக்குப் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரியது. அவ்வாறு பிறந்தவர்கள் அனைவரும் உறுப்பினர்களே.
- இந்தக் குழுவினர் தம் குழுவினரைத் தவிர வெளியில் வேறு எந்த குழுவினரோடும் மணஉறவு கொள்ள முடியாத படி சமூகக் கட்டுதிட்டங்களால் தடுக்கப்பட்டிருப்பவர்கள்.
நம் கருத்தை விளக்க இந்த வரையறைகளை ஆய்தல் இன்றியமையாதது. தனித்தனியே நோக்கினால், இந்த ஆராய்ச்சியாளர்கள் மூவரின் விளக்கம் மிக அதிகப் படியானதாகவோ அல்லது மிகக் குறுகியதாகவோ உள்ளது என்பதைக் காணலாம். இவற்றில் எதுவும் முழுமையானதாவோ அல்லது சரியானதாகவோ இல்லாததோடு சாதி அமைப்பின் அமைப்பு இயக்கத்திலுள்ள மையக் கருத்தை வெளிப்படுத்த இவை தவறவிட்டிருக்கின்றன. சாதி என்பதனைத் துண்டிக்கப்பட்ட தனிமைப்பட்டிருக்கும் அலகாகக் கொண்டு விளக்க முற்பட்டிருப்பதில் இந்தத் தவறு நேர்ந்துள்ளது. எனினும் இவர்களின் கருத்துக்களை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ஒன்றின் குறையை மற்றொன்று நிறைவு செய்வதாக அமைந்திருக்கின்றன.
எனவே இவற்றை ஆய்வு செய்வதற்கு முன் இவற்றில் சாதிகள் அனைத்திற்கும் பொதுவாகப் பொருந்தக்கூடிய கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு சாதிகளுக்குரிய தனித்தன்மைகளை மதிப்பிட்டுரைப்பேன்.
முதலில் செனார்ட் கூற்றை எடுத்துக் கொள்வோம். சாதியத்தின் ஒரு பண்பாகத் தீட்டு பற்றிய கருத்தினைச் சொல்வதால் இவர் நம் கவனத்தை ஈர்க்கின்றார். இந்தக் கருத்தைப் பொறுத்த அளவில் இது எவ்விதத்திலும் சாதியத்தின் தனித் தன்மை அல்ல எனக் கூறிவிடலாம். இந்தப் பண்பு, வழக்கமானப் புரோகித சடங்கு முறையிலேயே தொடங்குகின்றது. தூய்மை பற்றிய பொதுவான நம்பிக்கையின் சிறப்புத் தன்மை இது. இதனால், சாதியின் செயற்பாட்டுத் தன்மையைத் 'தீட்டு பற்றிய கருத்திற்கும் சாதியத்திற்கும் இடையே உள்ள அவசியமான தொடர்பினை முழுமையாக மறுக்கலாம். புரோகித சாதியே உயர்நிலையிலிருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதாலேயே சாதி அமைப்பு முறையோடு 'தீட்டு' பற்றிய கருத்து பிணைக்கப்பட்டுள்ளது.
புரோகிதரும் தூய்மையும் தொன்று தொட்டு வரும் கூட்டாளிகள் என்பதை நாம் அறிவோம். ஆகையால் சாதி என்பது, மதத்தின் நறுமணத்தோடு மணக்கும் அளவுவரை 'தீட்டு பற்றிய கருத்து சாதியத்தின் ஒரு பண்பாகும் என முடிவுச் செய்யலாம்.
நேஸ்பீல்ட் தன்னுடைய பாணியில் ஒரு சாதியினர் இன்னொரு சாதியினருடன் ஒன்றாக உணவருந்தாமையைச் சாதியின் பண்புகளுள் ஒன்றாகக் கூறுகின்றார். இந்தக் கருத்து புதியதான போதிலும் காரணத்தை விளைவாகக் கொண்டதால் தவறியுள்ளார் என்று சொல்லலாம். சாதி என்பது தனக்குத்தானே அடைப்பு ஏற்படுத்திக் கொண்ட ஒரு அலகாக உள்ளது. ஆதலால் தான் இயல்பாகவே அதற்குட்பட்ட உறுப்பினர்களுக்கு வெளியாருடன் கலந்து உணவு உண்ணுதல் உள்ளிட்ட அனைத்து வகையான சமூக உறவுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கிறது.
இதனால் வெளியாருடன் கலந்து உணவு அருந்தாமை என்பது உண்மையான தடையினால் அல்லாமல் தனிமைப்படுத்திக் கொள்ளுதலாகிய சாதியின் இயல்பான விளைவாகின்றது. இவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏற்பட்ட பிறருடன் கலந்து உணவருந்தாமை என்பது மதக்கட்டளையால் தடைசெய்யப்பட்ட இயல்பாக அமைந்துவிட்டது. இது ஒரு பிற்காலத்தின் வளர்ச்சி என்றே கொள்ள வேண்டும். ரிஸ்லி சிறப்பாகக் குறிப்பிடத்தக்க புதுக் கருத்து எதனையும் சொல்லவில்லை.
தாம் விளக்க எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாக விவரிக்கப் பெரிதும் முயன்றுள்ள டாக்டர் கெட்கரின் வரையறையைக் காண்போம். அவர் இந்தியர் என்பது மட்டுமல்ல; சாதி பற்றிய நுட்பமான அறிவுத் திறத்துடனும் திறந்த மனத்துடனும் ஆய்ந்து எடுத்துரைத்துள்ளார். சாதி அமைப்பில் சாதிக்குள்ள உறவு தொடர்பினை வரையறுத்து உரைப்பதிலும், சாதிய அமைப்பில் ஒரு சாதி நிலைத்து நிற்பதற்கு இன்றியமையாத இயல்புகளைக் கூறுவதற்குத் தம் கவனத்தைச் செலுத்தி இருப்பதனாலும் பிற இயல்புகளை இரண்டாந்தரமென்றோ அல்லது மூலப் பண்புகளின் விளைவுகள் என்றோ கொள்வதனாலும் அவருடைய வரையறை நம் கவனத்தை ஈர்க்கின்றது. அவருடைய வரையறை எல்லா வகையிலும் தெளிவாகவும் நயமாகவும் இருந்த போதிலும் அவரது சிந்தனை போக்கில் ஒரு சிறிது குழப்பம் உள்ளது என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.
சாதியின் இரு இயல்புகளாகக் கலப்பு மணத் தடையையும், தான் பிறந்த குழுவின் வழியிலான உறுப்பினராகும் தன்மையையும் அவர் முன் வைக்கின்றார். ஆயின் இவை இரண்டும் ஒரே பொருளின் இரு தன்மைகள் எனக் கூற விரும்புகின்றேன். அதாவது அவர் கூறுவது போல இவ்விரு தன்மைகளும் இருவேறு நாணயங்கள் போன்றவை அல்ல, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என்பேன். கலப்புமணத் தடையின் விளைவாக ஒரு குழுவிற்குள் பிறந்தார்க்கே உறுப்பினராகும் உரிமை என்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் இவ்விரு இயல்புகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன.
சாதியின் பல்வேறு இயல்புகளை ஆய்ந்து சரியாக மதிப்பிட்டு உரைப்பதனால், அகமணம் அல்லது தன் இனத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்ளும் வழக்கமே சாதியின் அடிப்படையான ஒரே இயல்பு எனக் கூறலாம். அதாவது, கலப்பு மணமின்மையோ அல்லது கலப்பு மணத் தடையோ சாதியின் சாராம்சமாகும். ஆனால் சாதி என்னும் பிரச்சினைக்கு இடமில்லாத வகையில் அகமணக் குழுவினர் இருப்பதைக் கொண்டு நுட்பமான மானுடவியல் அடிப்படையில் இக்கூற்றினை மறுக்கலாம். அகமணப் பழக்கம் உள்ளவையாக உள்ள இத்தகைய சமூகக் குழுக்கள் ஏறத்தாழ இடப்பெயர்வு பெற்ற இடங்களில் தம் உறைவிடங்களை அமைத்துக் கொண்டவையாகவும், ஒன்றுக்கொன்று சிறிதும் தொடர்பு இல்லாதவையாகவும் இருப்பதைக் காணலாம்.
இந்தப் போக்கிற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் உள்ள நீக்ரோக்களையும், வெள்ளையர்களையும் அமெரிக்க இந்தியர்கள் எனப்படும் பல்வேறு பழங்குடியினரையும் கூறலாம். இந்தியாவில் உள்ள நிலைமை வேறு விதமானதாகையால், இந்தச் சிக்கலைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு. இந்திய மக்கள் ஓரியல்பான முழுமையினராவர். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள பல்வேறு இனத்தவரான இந்திய மக்கள் அனேகமாக ஒன்று கலந்து ஓரியல்பு தன்மையுற்ற பண்பாட்டு ஒருமையை அடைந்துள்ளனர். அகமணச் சமூக அல்லது கணவழியிலான நெருங்கிய உறவினால் அமைந்த சமூக அல்லது பழங்குடியினரிடம் காணப்படாத இயல்பினைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஓரியல்பு தன்மையுள்ள பண்பாட்டு ஒருமையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்திய மக்களிடம் நிலவும் சாதிச் சிக்கல் புதுமையான தன்மையுள்ளதாக ஆகின்றது.
இந்தியாவில் சாதி என்பது மக்களைச் செயற்கையாகக் கூறுபடுத்திப் பிரித்து அகமணம் புரியும் வழக்கத்தால் ஒன்று மற்றொன்றோடு இணைவதிலிருந்து தடுத்து வரையறுக்கப்பட்ட பிரிவுகளாக ஆக்கியுள்ளது என்பதே இதன் பொருள் சுருங்கச் சொன்னால், சாதி முறைக்குத் தன் இனத் திருமண வழக்கம் அல்லது அகமண வழக்கமே தனித் தன்மை வாய்ந்த ஒரே இயல்பு என்னும் முடிவு தவிர்க்க முடியாததாகிறது. ஆகையால், அகமண வழக்கம் எவ்வாறு கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்பதை நிறுவுவதில் நாம் வெற்றி கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்பதை நிறுவுவதில் நாம் வெற்றி பெற்றால் சாதியின் பிறப்பையும் அமைப்பியக்கத்தையும் சரியாக நிரூபித்தவர்களாவோம்.
சாதியமைப்பு என்னும் மர்மப் பேழையைத் திறப்பதற்குரிய திறவுகோலாக நான் ஏன் அகமண வழக்கத்தைக் குறிப்பிடுகின்றேன் என்பதை நீங்கள் யூகிப்பது அவ்வளவு எளிதாக இருக்காததாகையால் நீங்கள் உளைச்சல் அடையாமல் இருப்பதற்காக என்னுடைய காரணங்களை முன் வைக்க விரைகின்றேன்.
இந்தியச் சமுதாயத்தைத் தவிர வேறு எந்த நாகரிக சமுதாயத்திலும் நாகரிகமற்றிருந்த பழங்காலத்திற்குரிய மிச்ச சொச்ச சின்னங்கள் நிலவி வருவதைக் காண முடியாது என்பதையும் இந்தத் தருணத்தில் வலியுறுத்துவது முற்றிலும் ஏற்றதென்றே கருதுகின்றேன். இங்குள்ள மதங்கள் நாகரிகத் தொடக்கக் காலத்தன்மையுடையன காலச் சுழற்சியாலும், நாகரிக வளர்ச்சியாலும், பாதிக்கப்படாதவையாய் அதன் பழங்குடிச் சமுதாயச் சட்ட திட்டங்கள் பழமை வீரியத்துடன் இன்றளவும் இயங்கி வருகின்றன. பழங்காலத்துப் பழக்க வழக்கங்களில் எச்சமாக மிஞ்சியுள்ளவற்றுள் ஒன்றான புறமண வழக்கம் தொடக்கக் காலச் சமுதாயங்களில் பரவலாக நிலவியது என்னும் உண்மை நீங்கள் யாவரும் நன்கறிந்ததாகும்.
புறமண வழக்கம் காலப் போக்கில் தன் தெம்பையும் திறனையும் இழந்தது. நெருங்கிய இரத்த உறவு கொண்டவர்களைத் தவிர பிறருடைய திருமணத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் சமுதாயத் தடைகள் எதுவும் இப்போது இல்லை. ஆயின், இந்திய மக்களைப் பொறுத்த மட்டில் புறமண விதி என்பது இன்றுங்கூட உறுதியான தடையாக உள்ளது. இந்தியாவில் கணங்கள் (Clan) ஏதும் இல்லாத போதும் கூட, கண அமைப்பின் சாராம்சங்களையே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். புறமணக் கொள்கையை மையமாகக் கொண்ட திருமண விதிமுறையிலிருந்து இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். இதன் விளைவாக, சபின்தாஸ்' அதாவது ஒரே இரத்த உறவு உள்ளவர்கள் திருமண உறவு கொள்ளக் கூடாது என்றில்லாததோடு 'சகோத்ராஸ்' எனப்படும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே நடக்கும் திருமணம் அவச் செயலாகக் கருதப்படுகின்றது.
எனவே, அகமண முறை என்பது இந்தியர்களுக்கு அந்நியமானது என்ற உண்மையை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பல்வேறு கோத்திரங்களும் புறமண வழக்கத்தைக் கொண்டவை தான். குறியீடுகளைக் குலமரபுச் சின்னங்களாகக் கொண்ட குழுக்களும் (Teleinic) இத்தன்மையனவே. இந்திய மக்களைப் பொறுத்தமட்டில் புறமணம் என்பது எவரும் மீளத் துணியாத ஒரு சமயக் கோட்பாடாகவே உள்ளது. இந்த இயல்பின் காரணமாக, சாதிகளுக்குள் அகமண வழக்கம் கடைபிடிக்கப்பட்ட போதிலும் சாதிகளின் தன்னின மக்களுக்குள்ளே புறமணம் என்பது மீறத் துணியாத ஒரு சமயக் கோட்பாடாகவே உள்ளது. மேலும் அகமண வழக்கத்தை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டங்கள் புறமண வழக்கத்தை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டங்களைவிட மிகக் கடுமையானவை. புறமணம் என்றாலே கலந்து ஒன்றாவது என ஆகின்றது. இதனால் புறமணத்தின் விளைவாகச் சாதி என்பது இருக்க இயலாது என்பதை அறிவீர்கள். ஆனால் நம்மிடையே சாதிகள் உள்ளனவே; இது எதனால்? ஆய்ந்து பார்த்தோமானால் இந்தியாவைப் பொறுத்த மட்டில் சாதிகளின் படைப்பு என்பது புறமணத்தைவிட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டதன் விளைவு என்பது புலப்படும். எனினும், வழக்கமாகப் புறமணம் செய்து வந்த கூட்டத்தார் மீது தன் இனத்திற்குள்ளேயே மணம் புரியும் அகமண வழக்கத்தைப் புகுத்தியது. சாதியைப் படைப்பதற்கு இணையான செயலாக அமைந்து விட்டது. இதுவே துயரார்ந்த பிரச்சினையாகும். புறமண வழக்கத்திற்கு எதிராக அக மண வழக்கத்தைக் கட்டிக் காப்பதற்காகப் பின்பற்றியுள்ள வழிமறைகளை ஆழ்ந்து நோக்குவதால் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயலும் என நாம் நம்பலாம்.
இவ்வாறு புறமணத்தைவிட அகமணத்திற்கு உயர்வான இடம் அளிக்கப்பட்டிருப்பதே சாதியின் தோற்றமாயிற்று. எனினும் இது அவ்வளவு எளிதான நிகழ்ச்சி அல்ல. தன்னைத்தானே ஒரு சாதியாக ஆக்கிக் கொள்ள விரும்பும் ஒரு கற்பனைக் குழுவை எடுத்துக் கொண்டு அகமணப் பழக்கத்தை மேற்கொள்வதற்கு அக்குழு கையாளக்கூடிய வழிமுறைகளை ஆய்வோம். ஒரு குழுவினர் தங்களுக்குள் அகமணப் பழக்கத்தை மேற்கொள்ள விரும்பினால் அந்நியக் குழுவினருடனான கலப்பு மணத்திற்குத் தடை விதிப்பதனால் மட்டும் பயன் ஏற்படாது. குறிப்பாக, அகமணப் பழக்கம் புகுத்துவதற்கு முன் புறமணமே மணஉறவுகளில் ஒரு விதியாகப் பின்பற்றப்பட்டிருக்குமாயின் மேற்கூறிய தடையினால் பயனேதும் இல்லை என்பது தெளிவு. மேலும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான தொடர்புடைய எல்லாக் குழுக்களிலும் ஒன்று பிரிதொன்றைப் போல இருக்கவும், இணைந்து கலப்புற்று ஒரே மாதிரியான சமூகமாக சேர்கின்ற போக்கும் உள்ளது. சாதிமுறை உருவாவதைக் கருதி இந்தப் போக்கினை வன்மையாகத் தடுக்க வேண்டுமானால், ஒரு குறுகிய வட்ட வரம்புக்கு வெளியே சென்று மக்கள் மணஉறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என வரையறுக்க வேண்டியதாகின்றது.
எனினும், வெளியாருடன் மணஉறவு கொள்வதைத் தடுப்பதற்கு விதிக்கும் இந்தத் தடை அல்லது எல்லைக் கட்டு, எளிதில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை உள்ளுக்குள்ளேயே உருவாக்கி விடுகின்றது. மேலெழுந்தவாரியாகச் சொன்னால், சாதாரணமாக ஒரு குழுவில் ஆண், பெண் இரு பாலரும் சம் எண்ணிக்கையில் இருப்பர்; பொதுவாகச் சம் வயதிலும் இருப்பர்; ஆனால் பல சமூகத்தினரிடையே இந்தச் சமநிலை சரியாக உணரப்படுவது இல்லை. அதே நேரத்தில் தன்னைத் தானே ஒரு சாதியாக உருவாக்கிக் கொள்ள விரும்புகின்ற குழுவிற்கு ஆண், பெண் ஆகியோருக்கிடையே சம நிலைகளைப் பேணுவது முடிவான நோக்கமாக ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு இருபாலரும் சம எண்ணிக்கையில் இல்லாமற் போனால் அகமண வழக்கம் அழிந்து போகும். அதாவது, அகமண வழக்கத்தைக் கட்டிக் காக்க வேண்டுமானால் இல்லற வாழ்க்கைக்கான அல்லது மணவுறவுகளுக்கான உரிமைகள் குழுவுக்குள் இருந்தே அளிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் வட்டத்தை விட்டு வெளியேறித் தங்களால் முடிந்த வழிகளிலெல்லாம் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள முனைவார்கள். ஆகவே, திருமண உரிமைகள் குழுவுக்குள்ளிருந்தே அளிக்கப்பட வேண்டுமென்றால், தம்மைத் தாமே ஒரு சாதியாக ஆக்கிக் கொள்ள விரும்பும் குழுவினர் திருமணத்திற்கேற்ற ஆண்கள், பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை சம அளவினதாக இருக்குமாறு பேணுவது அவசியமாகின்றது. இதுபோன்ற ஒத்த எண்ணிக்கைச் சம நிலையைப் பேணுவதன் மூலமே, அகமண வழக்கத்தைக் கட்டிக் காக்க முடியும். ஆண், பெண், எண்ணிக்கையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வு அகமண வழக்கத்தை நிச்சமாகத் தகர்த்துவிடும்.
ஆக, சாதிச் சிக்கல் என்பது. தம் குழுவிற்குள் இருக்கும் மண வயதுடைய ஆண், பெண் இருபாலருக்கிடையிலான சமமின்மையை ஒழுங்குபடுத்துவதைச் சுற்றியே சுழல்கின்றது எனலாம். ஆண், பெண் எண்ணிக்கை அளவு எப்போதும் சமமாக இருக்க வேண்டுமானால் இயற்கையில் ஆண், பெண்ணாக இருக்கும் கணவனும் மனைவியும் மரணத்தின் போது ஒரே காலத்தில் இறக்க வேண்டும். ஆனால் இது எப்போதாவது நடக்கக் கூடியதொரு நிகழ்ச்சியாகத்தான் இருக்க முடியுமேயொழிய எப்போதும் நடக்க முடியாத ஒன்றாகும். மனைவிக்கு முன் கணவன் இறக்கலாம். அதனால் ஆண்களை விட ஒரு பெண் எண்ணிக்கையில் அதிகமாகிறாள்.
இந்தக் கூடுதலாக உள்ள பெண்ணுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லையெனில் அவள் தன் இன ஒழுக்கத்தை மீறிக் கலப்பு மணம் செய்து கொண்டு அவளது குழுவின் அகமணப் பழக்கத்தைச் சீர்குலைப்பாள். அவ்வாறே, மனைவியை இழந்த கணவன் கூடுதல் ஆண் ஆகின்றான். அவன் தன் மனைவியை இழந்ததற்காகச் சமுதாயம் அனுதாபப்படலாம். ஆயினும் அவனால் ஏற்படும் ஒரு ஆண் எண்ணிக்கைக் கூடுதலைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவன் தன் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்டு அகமண வழக்கத்தைத் தகர்ப்பான்.
எனவே, ஆண், பெண் எண்ணிக்கையில் கவனம் செலுத்தி அவர்களுக்கு அந்தந்த குழுக்களுக்குள்ளிருந்தே வாழ்க்கைத் துணைவர்களைத் தேடி அளிக்காவிட்டால் அவர்கள் தடுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டித் திருமணம் செய்து கொண்டு சாதிக்கு அந்நியமான பிள்ளைகளைப் பெற்றளிக்கக் கூடியவர்களாகி விடுவார்கள்.
நாம் ஆய்வதற்கு எடுத்துக் கொண்டுள்ள கற்பனைக் குழு அதிகப்படியாக உள்ள ஆணையும் பெண்ணையும் என்ன செய்யும் என்று பார்ப்போம். முதலில் தேவைக்கு மிகுதியாக உள்ள பெண்களின் நிலையைப் பார்ப்போம். சாதியின் அகமண வழக்கத்தைக் காப்பாற்றுவதற்காக அவளுக்கு இருவேறு வழிகளில் முடிவு கட்டலாம்.
முதலாவதாக, இறந்து போன அவளுடைய கணவனை எரிக்கும் ஈமச் சிதையிலேயே அவளையும் சேர்த்து எரித்து இல்லாமல் செய்து விடுவது. இது ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு சிக்கலைச் சமப்படுத்துவதற்கு நடைமுறையில் ஒத்துவராத வழி. சில சமயங்களில் இது எடுபடலாம். பிற தருணங்களில் எடுபடாமல் போகலாம். தேவைக்கு மேல் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் இவ்வாறு ஒழித்துக் கட்டிவிட முடியாது. இது எளிய தீர்வு தான் என்றாலும் செயல்படுத்துவதற்குக் கடினமான ஒன்று. தேவைக்கு மேல் அதிகப்படியாக உள்ள பெண் (கைம்பெண்) அகற்றப்படாமல் போனால் அந்தக் குழுவிலேயே இருப்பாள்.
அதனால் இருவகைகளில் அபாயங்கள் உள்ளன. ஒன்று தன் சாதிக்கு வெளியே மணம் புரிந்து அகமண வழக்கத்தைச் சீர்குலைக்கலாம். அல்லது தன் சாதிக்கு உள்ளேயே மணந்து கொண்டு, அதன் விளைவாக, மணமுடிக்கப்பட வேண்டிய கன்னிப் பெண்ணின் மணவாய்ப்பினை இழக்கச் செய்யலாம். ஆகையால் அவள் எப்படியும் பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்து விடுகின்றாள். இறந்து போன அவளுடைய கணவனோடு அவளையும் எரிக்காமல் போனால், அவளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்.
இரண்டாவது வழி, எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அவளை விதவையாக்கி வற்புறுத்தி வைப்பது. பிற விளைவுகளைக் கருதிப் பார்க்கும் போது, விதவையாக வைத்துக் கொண்டிருப்பதை விட அவளை எரித்து விடுவதே நல்ல தீர்வாக அமையும். எரித்து விடுவதால் மூவகைக் கொடுமைகளிலிருந்து அவளை விடுவிக்கலாம். அவள் இறந்தொழிந்து போவதால் தன் சாதிக்கு உள்ளேயோ வெளியேயோ மறுமணம் புரிந்து கொள்ளக் கூடிய பிரச்சினை தீர்ந்து போகிறது.
ஆனால் அவளைக் கட்டாயப்படுத்தி விதவையாக வைத்திருப்பது எரித்து விடுவதைவிட மேலானது; காரணம் எரித்தொழிப்பதைவிட அதுவே நடைமுறைக்கு ஏற்றது ; மனிதத் தன்மையுடையது, எரித்துவிடுவதை ஒத்த விதவைக் கோலம் மறுமணத்தினால் ஏற்படும் கொடுமைகளிலிருந்து அவளைக் காக்கிறது. ஆனால் கட்டாயத்தால் விதவைக் கோலத்திலுள்ள பெண் எதிர்காலத்தில் ஒருவனுக்கு மனைவியாகின்ற இயற்கையான உரிமை இழந்துவிடுவதால், ஒழுக்கக் கேடான செயல்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுகின்றது. எனினும் இது கடக்க முடியாத ஒரு இக்கட்டு அல்ல. விதவைக் கோலம் கவர்ச்சியின் இருப்பிடமாக இருக்க முடியாத அளவுக்கு அவளைத் தாழ்த்தி விடுகின்றது.
தன்னை ஒரு சாதியாக ஆக்கிக் கொள்ள விரும்பும் குழுவிலுள்ள கூடுதலாக உள்ள பெண்ணைவிடக் கூடுதலாக உள்ள ஆணின் (மனைவியை இழந்தவன்) பிரச்சினை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது; கடினமானதும் கூட, நீண்ட நெடுங்காலமாகவே, பெண்ணைவிட ஆணின் கையே மேலோங்கி இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஆணே ஆதிக்கமுள்ளவனாக பெண்ணை விட பெரிதும் மரியாதைக்குரியவனாக இருக்கின்றான்.
வழிவழியாகப் பெண்ணைவிட ஆணுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ள இந்த உயர்வினால் ஆணின் விருப்பங்களே ஆலோசனைக்கு உரியதாக இருந்துள்ளன. பெண்ணோ , சமய, சமுதாய, பொருளாதாரத் தொடர்பான அனைத்து வகையான அநீதியான தடை ஆணைகளுக்கு இரையாக்கப்பட்டு வந்திருக்கின்றாள். ஆனால் தடை ஆணைகளை ஆக்கித் தருபவன் என்ற வகையில் ஆண், இந்த ஆணைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான். இந்த நிலையில், ஒரு சாதியில் கூடுதலாக உள்ள ஒரு பெண்ணை நடத்தும் அதே முறையில் கூடுதலாக உள்ள ஆணை நீங்கள் நடத்த முடியாது.
இறந்து போன மனைவியுடன் கணவனையும் சேர்த்து எரிக்கும் திட்டம் இரு வழிகளில் ஆபத்தானது. ஒன்று அவன் ஆண் என்ற காரணத்தாலேயே அவ்வாறு செய்ய முடியாது. இரண்டாவதாக, அவ்வாறு செய்தால் சாதி, வலுவான ஒரு உயிரை இழக்க நேரும். இவற்றை விட்டால், அவனுக்கு முடிவு கட்டும் இரண்டு இணக்கமான வழிகள் உள்ளன. நான் இணக்கமான வழிகள் என்ற குறிப்பிடுவதற்குக் காரணம், குழுவிற்கு அந்த ஆண் ஒரு பெரும் சொத்தாக இருப்பது தான்.
குழுவிற்கு ஆண் முக்கியமானவன், அதனினும் அகமண வழக்கம் முக்கியமானது. எனவே, நம் சிக்கலுக்குக் காணும் தீர்வு அவனையும் அக மண வழக்கத்தையும் பேணுவதாக இருக்க வேண்டும். இந்நிலையில் மனைவியை இழந்த ஆண், ஒரு கைம்பெண்ணைப் போலவே தன் வாழ்நாளில் எஞ்சிய காலத்தை வாழ்க்கைத் துணையின்றி இருக்கும்படிக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் அல்லது அவ்வாறு கழிக்கும்படித் தூண்டப்பட வேண்டும் என்றே நான் கூறுவேன்.
இந்தத் தீர்வு முற்றிலும் கடினமானதல்ல. ஏனெனில், எவ்வித கட்டாயமும் இல்லாமலேயே தாங்களாகவே முன் வந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமோ, அல்லது இன்னும் ஒருபடி மேலே சென்று அவர்களே முன்வந்து உலகையும், உலகியல் இன்பங்களையும் துறப்பதன் மூலமோ சிலருக்கு முடிவு கட்டலாம். ஆனால் இயற்கையாக அமைந்த மனித இயல்புகளைக் கருதிப் பார்க்கும்போது இத்தீர்வு நடைமுறையில் கடினமானது. இன்னொரு பக்கம் பார்க்கும்போது, கூடுதலாக இருக்கும் இந்த ஆண், குழுவின் நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் கலந்து செயலாற்றுபவனாக இருந்தால் அவன் குழுவின் ஒழுக்கத்திற்கு ஆபத்தானவனாகிறான். வேறு வகையில் நோக்குவோமானால் பிரம்மச்சரியம் அல்லது ஆண் மறுமணம் செய்து கொள்ளாமல் இருத்தல் வெற்றி பெறும் அளவு வரை எளிமையானதாக இருந்த போதிலும், சாதியின் பொருளாதார நலன்களுக்குப் பயனள்ளதாக இருக்காது. அவன் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை உண்மையாக அனுசரித்து உலக இன்பங்களைத் துறந்தவனாக இருக்கின்ற நிலையில் சாதியின் அகமண ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதற்கும் சாதி ஒழுக்க நெறிகளைக் காப்பதற்கும் ஐயத்திற்கு இடமின்றி ஒரு இடராக இருக்க மாட்டான்.
ஆனால் அவன் உலகியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவனாக இருப்பானானால் அவனால் ஆபத்து இருக்கும். சாதியின் பொருளாதார நலன்களைப் பொறுத்த அளவில் முற்றும் துறந்த மறுமணமாகாதவன் எரிக்கப்பட்டதற்குச் சமமானவனே. ஒரு சாதி வலிமை மிக்க சமூக வாழ்க்கையை நல்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையை ஒரு போதும் குறையாமல் காத்தாக வேண்டும். ஆனால் ஒருபுறம் மக்கள் எண்ணிக்கை குறையாமல் எப்படியும் காத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடனும் மறுபுறம் மறுமணம் செய்து கொள்ளாதவனின் பிரம்மச்சரியத்தைப் புகழைப் பாராட்டிக் கொண்டும் இருப்பதானது, நோயைக் குணப்படுத்த நோயாளியின் இரத்தத்தையே உறிஞ்சுவதை ஒத்ததாகும்.
ஆகவே, குழுவில் கூடுதலாக உள்ள ஆணைக் கட்டாயப்படுத்தித் திருமணமாகாதவனாக வைத்திருப்பது கொள்கை அளவிலும் நடைமுறையிலும் தோல்வியடையக் கூடியது. அதற்குப் பதிலாகச் சாதியின் நலனைக் கருதி சமஸ்கிருதத்தில் சொல்வதானால் 'கிரஹஸ்தன்' குடும்பத்தைப் பேணுபவன்) என்று சொல்லக் கூடிய நிலையில் அவனை வைத்திருக்க வேண்டியதாகின்றது. ஆனால் சாதிக்கு உள்ளிருந்தே அவனுக்கு மனைவி ஒருத்தியைத் தேடித்தர வேண்டும் என்பது தான் பிரச்சினை.
ஒரு சாதியில் நிலவும் ஆண் பெண் விகிதாச்சாரம் ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் என்று இருப்பதாலும் எந்த ஆணும் பெண்ணும் இரு முறை திருமண வாய்ப்புகளைப் பெற முடியாது என்பதாலும் எடுத்த எடுப்பிலேயே இது இயலாது என்று கூறிவிடலாம். ஏனெனில் தங்களுக்குள் வரையறைகளால் கட்டுப்படுத்திக் கொண்டுள்ள ஒரு சாதியில் மணமுடிக்கத்தக்க நிலையில் உள்ள ஆண்களுக்காகச் சுற்றிவரும் மணப் பருவமுள்ள பெண்கள் எப்போதும் சம அளவிலேயே இருப்பார்கள். இக்காரணங்களால், மனைவியை இழந்து கூடுதலாக உள்ள ஆணைக் குழுவுடன் இணைத்து வைத்திருப்பதற்கான ஒரே வழி, திருமணப் பருவமெய்தாத ஒரு பெண்னை அவனுக்கு மணமுடித்து வைப்பதே, கூடுதலாக உள்ள ஆணின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குள்ள வழிகளில் இதுவே சிறந்தது எனலாம். இதனால் அவன் சாதிக்குள்ளேயே நிலைநிறுத்தப்படுகின்றான்; அவன் வெளியேறுவது தடுக்கப்படுவதால் குழுவின் எண்ணிக்கை குறையாமல் காப்பாற்றப்படுகின்றது; அகமண வழக்கத்தின் ஒழுக்கமும் காக்கப்படுகின்றது.
ஆண், பெண் ஆகிய இருபாலரின் எண்ணிக்கை ஏற்றத் தாழ்வு பின்வரும் நான்கு வழிகளில் இணக்கமாகப் பேணப்படுவதைக் காணலாம்.
இறந்து போன கணவனுடன் மனைவியை எரித்துவிடுதல்,
வற்புறுத்திப் பெண்ணை விதவையாக வைத்திருத்தல் - எரிப்பதைவிட மென்மையான முறை
மனைவியை இழந்தவன் மீது திருமணமாகாத - பிரம்மச்சரிய ஒழுக்கமுறையைத் திணித்தல் திருமணப் பருவமெய்தாத பெண்ணொருத்தியை அவனுக்கு மணமுடித்து வைத்தல்
மேற்கூறியவாறு விதவையை எரித்தலும் மனைவியை இழந்த ஆண் மீது பிரம்மச்சரிய ஒழுக்கத்தைத் திணித்தலும் அகமண வழக்கத்தைக் காக்கும் முயற்சிக்கு இந்த நான்கும் வழிகளாக இயங்குகின்றன. ஆனால் இந்த வகைகள் தளர்த்தப்படும் போதும் அல்லது செயற்படும் போதும் ஒரு முடிவை உண்டாக்கும். அந்த முடிவு என்ன? அவை அகமண வழக்கத்தை உருவாக்கி நிலை நிறுத்துகின்றன.
சாதியைக் குறித்த பல்வேறு வரையறைகளை ஆய்ந்த ஆய்வின்படி, சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே என்றாகிறது. இவ்வழி வகைகள் இருப்பது சாதியோடு ஒத்தது; சாதி இந்த வழிவகைகளை உள்ளடக்கிக் கொண்டு இயங்குகின்றது.
சாதிகளின் அமைப்பில் ஒரு சாதியின் பொதுவான அமைப்பியக்கம் இதுவே என நான் கருதுகின்றேன். தற்போது நாம் உயர்வான பொது நுணுக்கங்களை விடுத்து இந்து சமூகத்திலுள்ள சாதிகளின் அமைப்பியக்கத்தை ஆராய்வோமாக. பழமையை ஆய்ந்து தெளிவாக்க முயல்பவர்களின் பாதை கரடுமுரடானது; படுகுழிகள் நிறைந்தது. இந்தியாவில் சாதி மிகத் தொன்மையான நிறுவனம்; அதை அறிவதற்கு நம்பத்தக்க சான்றுகளோ எழுதப்பட்ட பதிவேடுகளோ இல்லாத நிலையில், அதுவும் உலகே மாயம் என்ற கருத்தும், வரலாற்றை எழுதி வைப்பது மடமை என்ற எண்ணமும் உள்ள இந்துக்கள் தொடர்புடைய வகையில் ஆய்வு மேலும் கடினமானது.
வரலாறு நெடுங்காலமாக எழுதப்படாமல் இருந்த போதிலும் சாதி அமைப்பு மிகத் தொன்மையானது என அறிய முடிகின்றது. பழம்பொருட்களின் கற்படிமங்கள் (Fassils) தம் வரலாற்றைப் புலப்படுத்துவது போல, பழக்க வழக்கங்களும் நெறிமுறைகளும் எழுதப்படாதவையாயினும் சமூக அமைப்புகளில் இவை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை மனதில் கொண்டு கூடுதலான ஆண், கூடுதலான பெண் ஆகியோரால் எழுந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்துக்கள் மேற்கொண்ட வழியை நாம் ஆய்ந்தால் நம் முயற்சிக்குத் தக்க பயன் கிடைக்கும்.
மேலோட்டமாக நோக்குவோருக்கும் இந்து சமூக அமைப்பின் இயக்கம் குழப்பமாகத் தோன்றினும் அந்தச் சமூகம் மனைவிக்கென அமைந்த மூன்று தனித்தன்மைகள் கொண்ட வழக்காறுகளை வெளிப்படுத்துகின்றனது:
சதி அல்லது இறந்துபட்ட கணவனின் உடலோடு அவன் மனைவியையும் சேர்த்து எரித்தல்
விதவை மறுமணம் புரிந்து கொள்ள முடியாதவாறு தடுத்துக் கட்டாயப்படுத்தி விதவைக் கோலம் பூண வைப்பது.