இது தவிர, மனைவியை இழந்த கணவன் தன் விருப்பத்தால் சந்நியாசம் (துறவு வாழ்க்கை மேற்கொள்ளுதலையும் காணலாம். சில வேளைகளில் இது அவரவர் மனப்போக்கைப் பொறுத்ததாகவே அமைகிறது.
எனக்குத் தெரிந்த வரையில் இன்றளவும் இந்தப் பழக்க வழக்கங்களின் தோற்றத்திற்கு அறிவியல் வழியான விளக்கமெதுவும் வெளிவரவில்லை. இந்தப் பழக்க வழக்கங்கள் ஏன் மதிக்கப்பட்டன என்பதை எடுத்துரைக்கும் ஏராளமான தத்துவங்கள் உள்ளன. ஆனால் அந்தப் பழக்க வழக்கங்கள் ஏன், எப்போது, எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்பதையோ எவ்வாறு நிலைத்து நிற்கின்றன என்பதையோ விளக்குவதற்குத் தான் எதுவுமில்லை.
சதி வழக்கம் மதித்துப் போற்றப்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.
கணவன் மனைவி ஆகியோரின் உடலும் ஆன்மாவும் இரண்டறக் கலத்தல் மரணத்திற்கு அப்பாலும் நிலவும் பக்தி பிணைப்பு உமாதேவி கூறும் பின்வரும் கூற்றிலிருந்து ஒரு இலட்சிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு: தன் கணவனிடம் பக்திப் பெருக்கோடு இருப்பது தான் பெண்ணிற்குப் பெருமை; அதுவே அவளது அழியாத சொர்க்கம், மேலும் உமாதேவி உள்ளத்தை உருக்கும் உணர்வோடு கதறுகின்றாள்: ஓ மகேஸ்வரா என்னோடு நீங்கள் நிறைவு காணவில்லையெனில் சொர்க்கத்தையும் நான் விரும்பமாட்டேன்.
கட்டாய விதவைக் கோலம் ஏன் போற்றப்படுகின்றது என எனக்குத் தெரியவில்லை , இந்த வழக்கத்தைக் கடைபிடிப்போர் பலர் இருப்பினும், இதைப் போற்றிப் புகழும் எவரையும் நான் சந்தித்ததில்லை . டாக்டர் கெட்கர் கூற்றப்படி, சிறுமியர் மணத்தின் பெருமை பின்வருமாறு: மெய்யாகவே நேர்மையுள்ள ஆணும் பெண்ணும் திருமணத்தால் ஒன்றி பின், வேறொரு பெண்ணையோ ஆணையோ நேசிக்கக்கூடாது;
இத்தகைய தூய்மை திருமணத்திற்குப் பின் மட்டுமல்ல, திருமணத்திற்கு முன்பே கூட கட்டாயம் இருத்தல் வேண்டும். ஏனெனில் அதுவே சரியான கற்பின் இலட்சியம், தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணைத்தவிர வேறொரு ஆணைக் காதலிக்கும் கன்னிப் பெண் தூய்மையானவளாகக் கருதப்படமாட்டாள். தான் யாரை மணக்கப்போகிறோம் எனத் தெரியாத நிலையில் அவள் தன் திருமணத்திற்கு முன் எந்த ஆணிடத்திலும் நேச உணர்வு கொள்ளக்கூடாது. அவள் அவ்வாறு விரும்பினால் அது பாவமாகும். ஆகையால் ஆண் - பெண் உறவு பற்றிய உணர்ச்சி தன்னுள் எழுவதற்கு முன், தான் யாரைக் காதலிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது ஒரு பெண்ணுக்கு நல்லது. இதுவே பேதை மணத்திற்கான காரணம்.
மேலே குறிப்பிட்டவாறு வானளாவப் புகழப்பட்டதும். உண்மைக் கலப்பற்றதுமான விளக்கம் இந்த வழக்கங்கள் ஏன் கௌரவிக்கப்பட்டன என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றதே ஒழிய ஏன் பின்பற்றப்பட்டன என்பதைச் சொல்லவில்லை. இந்த வழக்கங்கள் அனுசரிக்கப்பட்டு வந்ததாலேயே அவை போற்றப்பட்டுள்ளன என்பதே என் விளக்கமாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தலை தூக்கிய தனி மனித சுதந்திரம் (Individualismi) பற்றிச் சிறிதளவேனும் அறிந்துள்ள எவரும் என்னுடைய இந்த விளக்கத்தைப் பாராட்டவே செய்வர். எல்லாக் காலங்களிலும் இயக்கமே (Movement) முக்கியமானதாய் உள்ளது. அந்த இயக்கத்தைச் சார்ந்தே தத்துவங்கள் வளர்ந்து இயக்கத்தை நியாயப்படுத்தவும் பக்கபலமாக இருக்கவும் உதவுகின்றன. அவ்வாறே இந்தப் பழக்க வழக்கங்கள் பெரிதாகப் போற்றி புகழப்படுவதற்குக் காரணம் அத்தகைய புகழ்ச்சி இல்லாமல் இப்பழக்க வழக்கங்கள் நிலைபெற முடியாத என்பதே ஆகும். இந்தப் பழக்க வழக்கங்கள் ஏன் தோன்றின என்ற கேள்விக்கு என் பதில் இதுதான்:
சாதிய அமைப்பை உருவாக்கவே அவை தேவைப்பட்டன. இந்தப் பழக்க வழக்கங்களைப் பாராட்டிப் பிரபலமாக்குவதற்குத் தத்துவங்கள் தோன்றின. இந்தப் பழக்க வழக்கங்கள் கள்ளங்கபடமற்றவர்களின் நியாய உணர்வுக்கு வெறுக்கத்தக்கதாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்து வந்திருக்க வெண்டும். எனவே கசப்பான மாத்திரையை இனிப்பு கலந்தும் கவர்ச்சியான முலாம்பூசியும் கொடுப்பது போல இந்தப் பழக்க வழக்கங்களைப் பரப்புவதற்குத் தத்துவங்கள் தேவைப்பட்டன.
இந்தப் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் சாதாரண வழிமுறைகளே (Means); ஆனால் அவை சீரிய இலட்சியங்கள் (Idicals) எனக் காட்டப்பட்டன. எனவே இவற்றால் பெறப்படும் விளைவுகளைக் காண இயலாதவர்களாகிவிடக் கூடாது. வழிமுறைகளைச் சீரிய இலட்சியங்களாக உயர்த்திக் காட்டுவது அவசியம் என்பதில் ஐயமில்லை தான். ஆனால் அவ்வாறு ஆக்குவது மிகச் சிறந்த செயல்திறனோடு இயங்கும் ஆற்றலை அந்த வழிமுறைகளுக்கு அளிக்கும் நோக்கம் இருக்க வேண்டும்.
குறிப்பிட்டதொரு இலட்சியத்திற்கான வழிமுறைகளையே இலட்சியம் எனக் கூறுவது அந்த வழிமுறைகளின் உண்மையான இயல்பை மூடி மறைத்து விடும் என்பதைத் தவிர வேறு இடையூறு ஏதும் இதில் இல்லை . ஆனால் இவ்வாறு கூறுவது வழிவகைகளின் உண்மையை இழக்கச் செய்துவிடக் கூடாது. வழிமுறைகளையே இலட்சியம் என்று கூறுவதைப் போலப் பூனைகள் எல்லாம் நாய்களே எனச் சட்டம் இயற்றிவிடலாம். ஆனால் அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தால் எவ்வாறு பூனைகள் நாய்களாக ஆக முடியாதோ அது போல வழிமுறைகளின் இயல்பை மாற்றவது இயலாததாகும்.
எனவே, இலட்சியம் எனக் கொள்ளப்பட்டாலும் சரி, வழிமுறை எனக் கொள்ளப்பட்டாலும் சரி, சதி, கட்டாயமாகக் கைம்பெண்ணாக்குதல், குழந்தை மணம் ஆகிய பழக்க வழக்கங்கள், ஒரு சாதியின் கூடுதல் ஆண், கூடுதல் பெண் என்னும் சிக்கலைத் தீர்ப்பதையும் அகமண வழக்கத்தை தொடர்ந்து காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது எனக் கருதுவது நியாயமானதே. இந்தப் பழக்க வழக்கங்கள் இல்லாமல் திடமான அகமண வழக்கத்தை நிலை நிறுத்த முடியாது: அகமண வழக்கம் இல்லாத சாதி என்பது போலித்தனமானதுமாகும்.
இந்தியாவில் சாதி உருவான முறையையும் அது காக்கப்பட்டு வந்துள்ள முறையையும் விளக்கியதைத் தொடர்ந்து சாதியின் தோற்றுவாய் எது? என்ற கேள்வி எழுவது இயல்பே. சாதியின் தோற்றம் பற்றிய இந்தக் கேள்வி எப்போதுமே எரிச்சலூட்டக் கூடியது; சாதி பற்றிய ஆய்வில் இந்தக் கேள்வி வருத்தப்படக்கூடிய அளவில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. சிலர் இதனைக் கண்டும் காணாததுமாக விடுத்துள்ளனர். சிலர் தந்திரமாகத் தவிர்த்திருக்கின்றனர். சிலர் சாதியின் தோற்றம் என்று ஏதாவது இருக்கிறதா என்று கலங்கி நிற்பவராய், தோற்றம்' என்ற சொல்லின் மீது உள்ள விருப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமற் போனால், அச்சொல்லின் பன்மை வடிவமான 'சாதியின் தோற்றங்கள் என்பதே மிகப் பொருத்தம் எனக் கூறியுள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் சாதியின் தோற்றம் பற்றி நான் பதறவுமில்லை , கலங்கவுமில்லை . காரணம், நான் ஏற்கனவே நிறுவியுள்ளவாறு சாதியின் தோற்றம் என்பது அகமண வழக்கத்தின் அமைப்பியக்கமே சாதிக்கு வித்திட்டது எனக் கருதுகின்றேன்.
ஒரு சமுதாயத்தில் தனி மனிதர்களின் அணுக்கூறுகளாக உள்ள கருதுகோள்கள் அரசியல் மேடைகளில் பெரிதாகப் பரப்பப்படுவது - கொச்சைப்படுத்தப்படுவது எனக் கூற இருந்தேன் - மிகப் பெரிய ஏமாற்று வித்தையாகும். தனி மனிதர்களே சமுதாயத்தை உருவாக்குகிறார்கள் எனக் கூறுதல் அற்பமானது. சமூகம் என்பது எப்போதும் வர்க்கத்தினரை (Class) உள்ளடக்கியது. வர்க்க முரண்பாடு பற்றிய கொள்கையை வலியுறுத்தல் மிகப்படுத்துதலாக இருக்கலாம்; ஆனால் ஒரு சமூகத்தில் பலதரப்பட்ட வர்க்கங்கள் இருந்து வருவது என்பது உண்மையே. இந்த வர்க்கங்களின் அடிப்படைகள் மாறுபடலாம். வர்க்கங்கள் பொருளாதார அல்லது அறிவு வகைப்பட்ட அல்லது சமூக அடிப்படையனவாக இருக்கலாம். ஆயின் சமூகத்தில் தனி மனிதன் எப்போதுமே ஏதாவதொரு வர்க்கத்தின் உறுப்பினனாகவே இருக்கின்றான். இது உலகமறிந்த உண்மை. தொன்மையான இந்து சமூகம் இந்த உண்மைக்கு விதிவிலக்கானதல்ல.
விதிவிலக்காக இருந்ததில்லை என்பதும் உண்மையே. நாம் இந்த உண்மையைக் கருத்தில் கொள்வது சாதியின் தோற்றம் பற்றிய நம் ஆய்வுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் எந்த வர்க்கம் முதலில் சாதியாக உருமாறியது என்று தீர்மானிப்பது போதும், ஏனெனில் சாதியும் வர்க்கமும் அண்டை வீட்டுக்காரர்கள் மாதிரி. மிகச் சிறிய இடைவெளியே இவ்விரண்டையும் தனித்தனியே பிரிக்கின்றது. சாதி என்பது தனித்து ஒதுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கமே ஆகும்.
சாதியின் தோற்றம் பற்றி நாம் ஆராயும் போது, இந்த வேலியைத் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட வர்க்கம் எது என்ற கேள்வி எழுகின்றது. சாதியின் தோற்றத்தை அறிந்து கொள்ள முற்படும் போது துருவிக் கேட்கப்படும் கேள்வியாக இது தோன்றலாம். பொருத்தமான இந்தக் கேள்வியினால் இந்தியா முழுமைக்கும் பரவி வளர்ந்துள்ள சாதியின் தன்மையையும், புதிரையும் தெளிவாக்கிக் கொள்ள உதவும். இக்கேள்விக்கு நேராகப் பதில் கூறும் ஆற்றல் எனக்கில்லை ; சுற்றி வளைத்தே இதற்குப் பதில் கூற முடியும். இந்து சமுதாயத்தில் தான் இவ்விதப் பழக்க வழக்கங்கள் உள்ளன என்பதை சற்று முன்பு கூறியுள்ளேன்.
உண்மைக்கு மாறுபடாமல் இக்கூற்றினைத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் இக்கூற்று இந்தப் பழக்க வழக்கங்கள் எங்கும் பரந்த அளவில் நின்று நிலவி இருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்து சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள பிராமணர்களே மேற்கூறிய இந்தப் பழக்க வழக்கங்களைக் கண்டிப்பாகவும் கட்டுக் கோப்பாகவும் கடைப்பிடிக்கின்றனர். பிராமணர்களைப் பார்த்து, பிராமணர் அல்லாத பிற சாதியினரும் இந்தப் பழக்க வழக்கங்களைப் பரவலாகப் பின்பற்றி போதிலும் அவர்கள் கண்டிப்பாகவும் முழுமையாகவும் இவற்றைப் பின்பற்றுவதில்லை. மிக முக்கியமான முடிவுக்கு வருவதற்கு இந்த உண்மை அடித்தளமாகப் பயன்படவல்லது.
பிராமணர் அல்லாதாரிடம் இப்பழக்கவழக்கங்கள் நிலவி வருவதற்குக் காரணம் பிராமணர்களிடமிருந்து அவர்கள் இதைப் பெற்றதன் விளைவே என்பதனை எளிதாக நிறுவ முடியும். இவ்வாறு நிறுவும் போது, சாதி என்னும் நிறுவனத்திற்கு உருவம் கொடுத்த தந்தை யார் என்பதைக் குறித்தவாதம் தேவையற்றதாகிறது. பிராமண வர்க்கம் ஏன் தன்னைத்தானே ஒரு சாதியாக வேலியமைத்துத் தனிமைப்படுத்திக் கொண்டது என்பது முற்றிலும் வேறானதொரு கேள்வி. அக்கேள்விக்குரிய தருணத்தைப் பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மேற்கூறிய பழக்க வழக்கங்களை மிகக் கடுமையாகக் கடைப்பிடித்து, சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் தம்மைத் தாமே அகந்தையோடு நிலை நிறுத்திக் கொண்டுள்ளதைக் கொண்டு அனைத்து பண்டை நாகரிகத்தைச் சார்ந்த புரோகித வர்க்கத்தினரே இந்த இயற்கைக்கு மாறான நிறுவனங்களை இயற்கைக்குப் புறம்பான வழிகளில் தோற்றுவித்துப் பாதுகாத்து வருபவர்கள் என்பதை நிறுவிவிடலாம்.
இந்திய நாடு முழுமைக்கும் சாதி முறை எவ்வாறு பரவி வளர்ந்தது என்ற கேள்வி குறித்த என்னுடைய ஆய்வின் மூன்றாவது பகுதியை எடுத்துக் கொள்வோம். இந்தக் கேள்விக்கு என் விடை என்ன? சாதி இந்த நாட்டின் பிராமணரல்லாத மக்களிடையே எப்படி பரவியது. இந்தியாவில் சாதிகளின் தோற்றம் பற்றிய வினாவை விடச் சாதிகள் எவ்வாறு பரவின என்பது பெரும் தொல்லைக்குட்பட்டு நிற்பதாகும். நானறிந்த வரையில் சாதியின் தோற்றமும் பரவுதலும் பற்றிய கேள்விகள் தனித் தனியானவை அல்ல என்று எனக்குத் தோன்றுகின்றது.
ஏதோ ஒரு வகை தெய்வத் தன்மை பொருந்திய மதக் கோட்பாடாக, எதற்கும் எளிதில் வளைந்து கொடுக்கும் இந்திய மக்கள் மீது சட்டம் இயற்றம் ஒருவரால் சாதி திணிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், இந்திய மக்களுக்கு மட்டுமே உரித்தான வகையில் சமூக வளர்ச்சி விதியால் சாதி உருவாகி வளர்ந்து வந்திருக்க வேண்டுமெனவும் அறிஞர்களிடையே பொதுவான கருத்து நிலவுவதே மேற்கூறியவாறு நான் கருதுவதற்குக் காரணமாகும்.
முதலாவதாக சட்டம் இயற்றியவரைப் பற்றிக் காண்போம், நெருக்கடியான நிலைமைகளில் அவதாரம் எடுத்துப் பாவத்தில் மூழ்கி இருக்கின்ற மனித குலத்தைத் திருத்தி, நியாயத்தையும் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்டுவதற்காகச் சட்டம் இயற்றி அளித்தவர்களை உலக நாடுகள் ஒவ்வொன்றும் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் அத்தகைய சட்டம் இயற்றி அளித்தவரே மனு ஆவார். இந்த மனு உண்மையிலேயே இருந்திருப்பாரேயானால் நிச்சயமாக அவரை துணிச்சலான மனிதர் என்றே கொள்ள வேண்டும். அவர் சாதி பற்றிய சட்டத்தை அளித்தவர் என்ற கதையை ஒப்புக் கொள்வதானால் அவர் ஆணவமிக்கவராகவும் அவருடைய கோட்பாடுகளை ஒப்புக் கொண்ட மனிதர்கள், நாமறிந்திருக்கும் மனித சமுதாயத்திலிருந்து வேறுபட்டவர்களாகவும் தான் இருக்க வேண்டும்.
சாதிமுறைக்கென்று சட்டத்தை ஒருவர் வழங்கினார் என்பதே கற்பனைக்கும் எட்டாததாக உள்ளது. மனு தன்னுடைய சட்டத்தினால் சாகா வரம் பெற்று விட்டார் என்றால் அது மிகையாகாது. ஒரு வர்க்கத்தைக் கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றுவதற்காக இன்னொரு சமூக மக்களை விலங்குகளைவிடக் கேவலமான நிலைக்குத் தன் எழுத்தாணியாலேயே தாழ்த்திச் சாதித்த இந்த மனு, எல்லா மக்களையும் அடக்கி ஆளும் கொடுங்கோலனாக இருந்தாலொழிய இந்த அளவுக்குப் பாகுபாடுகளை அநீதியான வழியில் நடைமுறைப்படுத்த அனுமதித்திருக்க முடியாது. அவருடைய நிறுவனங்களை சமூக அமைப்பு முறையை ஒருமுறை பார்த்தாலே இது புலனாகிவிடும். நான் மனுவை மிகக் கடுமையாகச் சாடுவதாகத் தோன்றலாம். இந்த மனுவின் ஆவியை எதிர்த்துக் கொல்லும் அளவுக்கு எனக்கு போதுமான வலிமை இல்லை என்பதை அறிவேன். உடலற்ற ஆவியாக இருக்கும் மனு மேலும் நீண்ட காலத்திற்கு அப்படி இருக்கவும் வேண்டப்படுகிறார். அப்படியே வாழக்கூடும் என நான் அஞ்சுகிறேன்.
நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதெல்லாம் சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. மனுவுக்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே நெடுங்காலமாகச் சாதி நிலவி வருகிறது. ஆனால் அவர் சாதி முறை நல்லதெனக்கூறி அதற்குத் தத்துவமளித்து நிலைநிறுத்திய பணியைச் செய்திருக்கிறார். இன்றுள்ள நிலையில் காணப்படும் இந்து சமுதாயத்தை மனு உண்டாக்கவில்லை; உண்டாக்கவும் முடியாது. தன்காலப் பழக்கத்திலிருந்து சாதி வழக்கங்களை விதிகளாகத் தொகுத்தமைத்துச் சாதி தருமத்தைப் போதித்ததோடு மனுவின் பணி முடிந்தது.
மிகப் பெரிய அளவில் பரவி வளர்ந்துள்ள சாதிமுறையைத் தனிமனிதனின் சக்தியாலோ தந்திரத்தாலோ அல்லது ஒரு வர்க்கத்தாலோ சாதித்திருக்க முடியாது. அடுத்து, பிராமணர்களே சாதியைப் படைத்தனர் என்னும் கோட்பாடும் அர்த்தமற்றதே. மனுவைப் பற்றி நான் விளக்கியதற்கும் மேலாக சொல்வதற்கு ஏதுமில்லை . பிராமணர்கள் பல வகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம்; குற்றமிழைத்தவர்கள் தான் என நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதிமுறையைப் பிராமணர்கள், பிராமணரல்லாதார் மீது திணித்துள்ளார்கள் என்பது உண்மையல்ல; அதற்குரிய துணிவோ, ஆற்றலோ அவர்களுக்குக் கிடையாது. சாதிமுறை பரவுவதற்குப் பிராமணர்கள் தங்கள் நயமான தத்துவங்களின் மூலம் துணை புரிந்திருக்கலாம்.
ஆனால் தங்கள் வரையறைகளுக்கு அப்பால் தங்களுடைய திட்டத்தை உந்தித் தள்ளி நிச்சயமாக அவர்கள் புகுத்தியிருக்க முடியாது. தங்களுக்குத் தகுந்தாற்போலவும், தாங்கள் நினைப்பது போலவும், சமூகத்தை மாற்றியமைப்பது என்பது இயலாத காரியம். அச்செயல் எவ்வளவு புகழ்தற்குரியது? எவ்வளவு கடினமாவது? எவரும் சாதி மேன்மேலும் வளர்வது குறித்து மகிழலாம்; பரவசத்தால் போற்றிப் பாராட்டலாம். அதைத்தவிர ஒரு எல்லைக்கு மேல் அதனைப் பரப்ப முடியாது. நான் இவ்வளவு கடுமையாகத் தாக்குவது தேவையற்றதாக இருக்கலாம். எனினும் இவ்வாறு தாக்குவது ஏன் என விளக்கத்தான் போகிறேன். எப்படியோ இந்து சமுதாயம் சாதி அடிப்படையில் அமைந்தாகிவிட்டது; சாதி அமைப்பு சாஸ்திரங்களால் தெரிந்தே உருவாக்கப்பட்டுள்ளது என்ற வலுவான நம்பிக்கை வைதீக இந்துக்களிடையே நிலவுகிறது.
அதோடு இந்த அமைப்பு நல்லதற்காகத் தான் இருக்க முடியுமே தவிர கெடுதலுக்காக அல்ல; ஏனென்றால் இந்த அமைப்பு சாஸ்திரங்களால் உருவாக்கப்பட்டது: அந்த சாஸ்திரங்களால் உருவானது ஒருபோதும் தவறாக இருக்க முடியாது என்றும் நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கைக்கு எதிராகத் தான் நான் இவ்வளவு தூரம் பேசி வந்திருக்கின்றேன். மத சம்பிரதாயப் புனிதம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது என்றோ, மத சம்பிரதாயங்களுக்கு எதிராகப் பேசும் சீர்திருத்தவாதிகளுக்கு உதவுவதற்காகவோ அல்ல நான் பேசியது.
பிரசாரம் செய்வதால் சாதிமுறை தோன்றிவிடாது: தோன்றிய சாதிமுறை பிரச்சாரத்தால் அழியவும் முடியாது. மத சம்பிரதாயப் புனிதத்தை விஞ்ஞான விளக்கத்திற்கு நிகராக வைக்கும் போக்கு எவ்வளவு தூரம் தவறானது என்பதைத் தெரிவிப்பதே என் நோக்கமாகும்.
இதனால் இந்தியாவில் சாதிகள் எவ்வாறு பரவின என்பதை அறிவதற்குப் பெரிய மனிதர் மனு) கோட்பாடு உதவிவில்லை எனலாம். தனிநபர் துதிபாடும் வழக்கத்திற்கு அவ்வளவாக ஆளாகாத மேனாட்டு அறிஞர்கள் பிறவகைகளில் இதற்கு விளக்கம் தர முயன்றிருக்கிறார்கள். அவர்கள் கருத்துப்படி இந்தியாவில் சாதிகள் உருவாவதற்குக் கருவாக அமைந்தவை பின்வருமாறு:
- தொழில், 2. பழங்குடியினர் அமைப்புகளின் எச்சங்கள், 3. புதிய நம்பிக்கைளின் தோற்றம், 4. கலப்பின விருத்தி, 5. குடிபெயர்வு
இந்தக் கரு மையங்கள் பிற சமூகங்களில் இல்லையா, இந்தியாவுக்கு மட்டுமுள்ள தனித்தன்மையா என்ற கேள்வி எழலாம். இந்தியாவுக்கு மட்டும் என அமைந்து விசித்திரமான தன்மையாக இல்லாமல் உலகமெங்கும் உள்ள பொதுத் தன்மை என்றால், ஏன் உலகின் மற்ற பகுதிகளில் இந்தச் சாதிமுறை உருவாகவில்லை வேதத்தின் பிறப்பிடமான இந்த நாட்டை விட அந்தப் பகுதிகளெல்லாம் புனிதம் நிறைந்தவை என்பதாலா? அல்லது விளக்கம் கூற வந்த அறிஞர்கள் தவறாகப் புரிந்து கொண்டதாலா ? பின்னதாகக் கூறியது தான் உண்மை என நான் அஞ்சுகின்றேன்.
இக்கருப்பொருட்களை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு ஆசிரியர்களும் தத்தம் கோட்பாடுகள் எவ்வளவு உயர்ந்தவை என நிலைநாட்டுவதற்கு முயன்ற போதிலும் அவை, கூர்ந்து நோக்கும் நமக்கு வெறும் கற்பனைக் காட்சிகளாகவே தெரிகின்றன. மாத்யூ ஆர்னால்டு கூறுவது போல இவற்றில் பெயர்தான் பெரியது. பெரிய விஷயம் அதில் ஒன்றுமில்லை . அவை இட்டு நிரப்பும் செயல்களேயன்றி வேறில்லை. சாதி பற்றி சர் டென்ஜில் இப்பெட்பன் (Sir Denzil Tbheisan] நெஸ்பீ ல்ட், (Nesficid] செனார்ட். (Serari) சர் எச் ரிஸ்லி (Sir H.Rislsy) ஆகியோர் தெரிவித்த பலவகைக் கோட்பாடுகளும் அத்தகையனவே. அவற்றை விமர்சனம் செய்வதென்றால் மரபுவழி தர்க்கவாதத்தின் ஒரு பிரிவாகிய கொள்கைக்கு ஏற்பக் குணம் பொருத்துதல் என்பதன் மாற்றுவடிவம் என்று கூற நேரும். அதனை விளக்குவோம். எடுத்துக்காட்டாக, நெஸ்பீல்டு கூறுவதைக் காண்போம்: செயற்பாடு (Furietient) அதாவது தொழிலை அடித்தளமாகக் கொண்டே இந்தியாவில் சாதி அமைப்பு கட்டப்பட்டுள்ளது. தொழில் தான் சாதிகளுக்கெல்லாம் மூலகாரணம். இந்தியாவில் சாதிகள் செயல்முறை (Functical) அல்லது தொழில் வகையிலானவை என்று கூறும் இந்தக் கூற்று நமக்குப் பெரிய விளக்கம் எதையும் சொல்லிவிடவில்லை .
அவர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. மிகவும் சாதாரணம், நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றே. தொழில் வகையில் அமைந்த குழு தொழில் அடிப்படையிலான சாதியாக மாறியது என்பதை நெஸ்பீல்டு விளக்கவில்லை. மானுடவியல் ஆய்வாளர்கள் பலர் இருப்பினும் நெஸ்பீல்டு அவர்களைக் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதியதால் அவர் கூறிய கருத்துக்களை ஊன்றி ஆராய நேர்ந்தது.
மனித இனம் பிரிந்து சிதைந்து போனதால் சாதிகள் இயற்கையாகவே தோன்றின என்னும் இயற்கையாக எழும் அரிய நிகழ்ச்சி கொள்கையே நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்பார் தமது பரிணாம வளர்ச்சி பற்றிய விதியில் விளக்கியுரைப்பது போல சாதி அமைப்பு: சிதைந்து போகும் விதிக்குத் தக்கதாக (Law of Disintegration) ஏற்பட்ட இயற்கை நியதி என்பதையோ, பழமைவாதிகள் எடுத்துரைப்பது போல உயிரோட்டமுள்ள ஒரு உருவில் - அமைப்பில் உள்ள உறுப்புகளின் வேறுபாடுகளைப் போல் இயற்கையானது என்பதையோ, ஒவ்வொரு வர்க்கமும் சிறந்த இனமூலத்தை விருத்தி செய்வதற்கு எடுத்துக் கொண்ட பண்டைய கால முயற்சி என்ற அடிப்படையில் சாதி அமைப்பு தவிர்க்க முடியததாக அமைந்தது என்பதையோ, ஆதரவற்ற எளிய மக்கள் மீது இந்த விதிகளைக் கணக்கிட்டு திட்டமிட்ட வகையில் திணிக்கப்பட்டது என்பதையோ விமர்சிக்காமல், என் சொந்தக் கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்.
முதலில் இந்து சமுதாயத்தை எடுத்துக் கொள்வோம். இந்தச் சமுதாயம் பிற சமுதாயங்களைப் போலவே பல வர்க்கங்களைக் கொண்டிருந்தது. அவ்வாறு அமைந்த பண்டைய வர்க்கங்களாவன: 1. பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம், 2. சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம், 3. வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம், 4. சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம்.
இந்தப் பகுப்புமுறைகளை நன்கு கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தம் தகுதிக்கேற்ப பிரிதொரு வர்க்கத்தினராக மாற முடியும். எனவே வர்க்கங்கள் தங்கள் நபர்களை மாற்றிக் கொள்ளலாம். இந்துக்களின் வரலாற்றில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் புரோகித வர்க்கத்தினர் பிறரிடமிருந்து தங்களைத் தனியாகப் பிரித்துக் கொண்டு பிறருடன் கலவாமல் இருக்கும் கொள்கைப்படி (Closed DNANT Policy) தனியொரு சாதியினராக ஆனார்கள். இவர்களைப் போலவே பிற வர்க்த்தினரும் சமுதாய உழைப்புப் பங்கீட்டு விதியின்படிப் பெரிதும் சிறிதுமாகச் சிதறிப் போயினர்.
இன்றைய எண்ணிலடங்கா பல்வகை சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் காலக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமுமே ஆகும். இராணுவத் தொழில் தன்னைத்தானே பல நுண்ணிய பகுதிகளாக்கிக் கொள்ள இடமளிக்காமையால், சத்திரிய வர்க்கத்தினர் போர் வீரர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் மாற்றம் பெற்றனர்.
சமூகத்தில் இவ்வாறு வகுப்புகளுக்குள்ளே கிளை வகுப்புகள் அல்லது உட்பிரிவுகள் தோன்றுவது இயற்கையே. இந்த உட்பிரிவுகளுள் இயற்கைக்கு மாறான இயல்பு ஒன்றும் உள்ளது. அதாவது, இந்த உட்பிரிவுகள் வர்க்க அமைப்பின் 'திறந்த வழித் தன்மை'யை இழந்து, சாதிமுறையாக மாறித் தம்மைத் தாமே அடைத்துக் கொண்ட பிரிவினராகத் தனித்தனி சாதிகள் என்றாயினர். கேள்வி என்ன? இந்த மக்கள் பிறரோடு கலவாமல் தனித்தியங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்களா அல்லது அவர்களாகவே தனித்து இருப்பதற்குக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டார்களா என்பதே. இதற்கு விடை இரு வேறு வழிகளில் கூறலாம். சிலர் தாங்களாகவே கதவுகளை அடைத்துக் கொண்டனர் - அதாவது சிலர் தாங்களாகவே பிரிந்து சென்று தனித்த சாதியினர் ஆயினர்; சிலர் தங்களைத் தடுக்கும் வகையில் அடுத்தவரின் கதவுகள் அடைபட்டிருந்ததைக் கண்டனர் - அதாவது சிலர் பிறரோடு கலக்க இயலாதவாறு பிறரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒன்று உளவியல் படியான விளக்கம். மற்றது சம்பிரதாயமாகக் கூறப்படும் விளக்கம். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சாதி தோற்றத்தின் இயல்புகளை முழுவதுமாக விளக்குவதற்கு இவை இரண்டுமே தேவை.
முதலாவதாக உளவியல் விளக்கத்தை எடுத்துக் கொள்வோம். நாம் விடையளிக்க வேண்டிய வினா என்ன உட்பிரிவுகள் அல்லது வர்க்கங்கள் அவை தொழில், மதம் சார்ந்தவையாயினும் சரி அல்லது மற்ற எவ்வகையாயினும் சரி ஏன் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டவையாக அல்லது அகமண வழக்கம் கொண்டவையாக ஆகி நின்றன என்பது கேள்வி. பிராமணர்கள் அவ்வாறு இருந்தனர் என்பதே என் விடை. ஆக மண வழக்கம் அல்லது கதவடைத்த அமைப்பு - தனித்து இயங்குவது - இந்து சமூகத்தின் ஒரு போக்காக (Fashion) இருந்தது.
அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பின்னர் ஏனைய பிராமணர் அல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கியதால் அவர்களும் அகமண வழக்கத்தினராயினர். இந்த வகை பிறரைப் பார்த்து அவர்களைப் போல வாழும் தொற்று நோய் பழக்கம் அனைத்து உட்பிரிவினரையும் வர்க்கத்தாரையும் பிடித்துக் கொண்டதால் கலந்து பழகி வந்தவர்கள் பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து தனித்தனி சாதிகளாயினர். பிறரைப் பார்த்தொழுகும் போலச் செய்தல்' என்னும் மனப்போக்கு மனித மனதில் ஆழமாக இடம் பெற்ற ஒன்றாகும்.
எனவே, பல்வேறு சாதிகள் எவ்வாறு உருப்பெற்றன என்பதற்கான நிறைவு தராத விளக்கமாக இந்தப் போலச் செய்தல் மனப்போக்கு மனிதரிடம் எவ்வளவு ஆழமாக இடம் பெற்றிருக்கிறது என்பதை எடுத்துரைக்க வந்த வால்டர் பேகாட் கூறுகிறார்: போலச் செய்தல் போக்கினைத் தன்னிச்சையான தென்றோ, உணர்வுபூர்வமாக மேற்கொண்டதென்றோ கொள்ளக் கூடாது.
அதற்குமாறாக, இந்தப் பழக்கம் மனதின் அடித்தளத்தில் ஆழமாகப் பதிந்து உறைவிடம் கொண்டுள்ளது; வெளிக்குத் தெரிவதில்லை. இந்த மனப்போக்கு நாம் ஒரு சிறிதும் அறியாமலேயே வெளிப்படுகிறது என்பது மட்டுமல்ல அந்த நோக்கம் நாம் முன் இருப்பதையே நம்மால் உணர முடியாததாகவும் உள்ளது. முன்னரே எண்ணிப் பார்க்கவும் இயலாததாய் இருப்பதோடு, அந்தத் தருணத்தில் உணரப்படவே இல்லாததாகவும் இருக்கும். போலச் செய்தல் இயல்பின் முக்கிய இருப்பிடம் நம் நம்பிக்கையே. ஒரு கருத்தை இணங்கி ஏற்கவும், பிறிதொரு கருத்தைப் பிணங்கி வெறுத்து ஒதுக்குவதற்குமான காரணங்கள் நம்மிடம் இயல்பாகவே பொதிந்திருக்கின்றன.
ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என நம்புகின்ற இயல்பு பற்றி எந்த ஐயத்திற்கும் இடமில்லை. போலச் செய்யும் மனப்போக்கை அறிவியல் வழியில் ஆய்வு செய்த கேப்ரியல் டார்ட் என்பார். இந்த மனப்போக்கின் மூன்று விதிகளைத் தருகின்றார். கீழ்நிலையிலுள்ள யாவரும் மேல் நிலையிலுள்ளவர்களைப் பின்பற்றுவது இயற்கை என்பது முதலாவது விளக்கம். அவருடைய சொற்களில் சொல்வதானால், "வாய்ப்பு கிட்டினால் எங்கும் எப்போதும் மேட்டுக் குடியினர் தம் தலைவர்களையும், அரசர்களையும் அரச பரம்பரையினரையும் போலச் செய்யத் தொடங்குவர். அவ்வாறே சாதாரண எளிய மக்களும் வாய்ப்பு கிடைக்கும் போது பிரபுக்களைப் பின்பற்றுவார்கள்.
டார்ட்டின் மற்றொரு விதியாவது, 'பார்த்தொழுகுதலின் அகலமும் ஆழமும் இடைவெளித் தூரத்திற்கு ஏற்றவாறு தலைகீழ் விகிதப் பொருத்தத்தில் அமைகிறது என்பதாகும். மேலும் அவர் கூறுவார்: "மிக நெருக்கமாக உள்ளவர்களிடம் உள்ள மிக உயர்ந்தவற்றைப் பார்த்து ஒழுகுதல் ஏற்படுகிறது. உண்மையில் பார்த்தால், எதை முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறோமோ அதன் செல்வாக்கு இடைவெளி தூரத்திற்கு ஏற்றவாறு தலைகீழ் விகிதத்தில் செயல்படுகிறது. இங்கு இடைவெளித்தூரம் என்பது சமூகவியல் நோக்கில் பொருள் கொள்ளத் தக்கது. இதன்படி, புதியவன் ஒருவன் இடைவெளித் தூரத்தைப் பொருத்தமட்டில் எவ்வளவு தொலைவில் இருப்பினும் அவனோடு அடிக்கடியாகவும் தினந்தோறுமாகவும் தொடர்பு கொள்ள நேர்ந்தால், நம்மைப் பார்த்து அப்படியே ஒழுகுவதற்கான, அவனது விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பும் இருக்குமானால் அவன் நமக்கு அண்மையில் உள்ளவனாகவே ஆகின்றான்.
மிக நெருக்கத்தில் உள்ளவர்களை, அதாவது மிக அருகில் உள்ளவர்களைப் பார்த்து ஒழுகுதல் என்றும் இவ்விதி, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களால் நிறுவப்பட்டவைகளைப் பார்த்து கீழ் நிலையில் இருப்பவர்கள் படிப்படியாகவும் ஒரு முன் மாதிரியைப் போலவே பரவிக் கொண்டுப் போவதாகவும் இருக்கும் இயல்பை விளக்குகிறது.
பிறரைப் பார்த்து ஒழுகுதலால் சில சாதிகள் தோன்றின என்னும் என்னுடைய கருதுகோலுக்குச் சான்று எதுவும் தேவையில்லை. ஆயினும் அக்கருதுகோளைச் சான்றுடன் நிறுவுவதற்கு சிறந்த வழியாக எனக்குத் தோன்றுவது, இந்த சமுதாயத்தில் பார்த்து ஒழுகுதல் மூலம் சாதிகள் உருவானதற்கான அடிப்படை நிலைமைகள் உள்ளனவா இல்லையா என்று கண்டறிவதே ஆகும். இந்தத் தரமிக்க வல்லுனர்களின் கூற்றுக்கு ஏற்பப் 'பார்த்து ஒழுகுதலுக்கான இரு நிபந்தனைகளாவன:
பார்த்து ஒழுகப்படுவதற்குரியவர்கள் அந்தக் குழுவில் கௌரவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
உறுப்பினர்களுக்கிடையே நாள்தோறும் அதிகப்படியான எண்ணிக்கையில் உறவுகள் இருக்க வேண்டும். இந்த இரு நிலைகளும் இந்தியாவில் இருந்தனவா என்பதில் ஒரு சிறிதும் ஐயத்திற்கு இடமில்லை .
பிராமணன் பாதிக்கடவுளாகவும், அனேகமாகக் கண்கண்ட கடவுளாகவும் உள்ளான். அவன் ஒரு மாதிரியை (Modle) முன்வைத்து அதற்கேற்ப மற்றவர்களைப் பின்பற்றும் படிச் செய்கிறான் அவனுடைய அந்தஸ்து கேள்விக்கிடமற்றது. நன்மை தீமைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் அவனே மூலகாரணமாகக் கருதப்படுகின்றான். வேதங்களால் தெய்வமாகத் துதிக்கப்படும் புரோகிதர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களால் போற்றப்பட்டும் வரும் பிராமணன் தன்முன் மன்றாடி நிற்கும் மனித குலத்தின் மீது தன்னுடைய செல்வாக்கினைச் செலுத்தாமல் இருக்க முடியுமா? சொல்லப்பட்டுவரும் கதையெல்லாம் உண்மையென்றால் அவன் ஏன் படைப்பின் இறுதிக்கட்டமாக நம்பப்படுகின்றான் இப்படிப்பட்டவன் எல்லாவகையிலும் பின்பற்றப்படத் தகுதியானவனே. அவன் அகமண வழக்கத்தை மேற்கொண்டு தனித்து இயங்குகின்றான் எனில் மற்றவர்கள் அவனை எடுத்துக்காட்டாகக் கொண்டு பின்பற்றத்தானே செய்வார்கள். நலிந்த மாந்தரினம்; தீவிரமான வேதாந்தியிடமோ, வீட்டு வேலைக்காரியிடமோ அது இடம் பெற்றிருந்தாலும் கூட அதற்கு இணங்கியே இருப்பார்; வேறு விதமாக இருக்க முடியாது. பார்த்து ஒழுகுதல் எளிது புதிதாகக் கண்டுபிடிப்பது கடினமானது.
இவ்வாறு. பார்த்துப் போலச் செய்தல், சாதிகளின் தோற்றத்திற்கு எவ்வளவு தூரம் துணைபுரிந்துள்ளது என்பதை மற்றொரு வகையிலும் விளக்கலாம். இந்தப் பழக்கவழக்கங்கள் பற்றிப் பிராமணரல்லாதாரின் மனப்போக்கு எவ்வாறு இருந்தது என்பதை அறிவது இதற்கு அவசியம். இந்தப் பழக்க வழக்கங்கள், சாதி தலையெடுத்து வந்த காலத்திலேலே சாதி வடிவமைப்பை ஏற்க உதவின. வரலாற்றின் வளர்ச்சி போக்கில் இந்து மனங்களில் ஆழப்பதிந்து இன்றளவும் எவ்விதப் பற்றுக்கோடும் இன்றி ஊசலாடிக் கொண்டிருக்கின்றன; இது குளத்து நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும் பாரியைப் போன்றது. ஒரு வகையில் பார்த்தால், இந்து சமூகத்தில் சாதி அந்தஸ்து, சதி, கட்டாய விதவைக் கோலம். பேதை மணம் ஆகிய வழக்கங்களைக் கடைப்பிடிக்கும் அளவிலிருந்து நேர்விதத்தில் வேறுபடுகின்றது.
இந்தப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் உள்ள இடைவெளிக்குத் தக்கவாறு வேறுபடுகிறது. பிராமணர்களுக்கு மிக அருகில் நெருங்கியுள்ள சாதியினர் மேற்கூறிய மூன்று பழக்கவழக்கங்களை வலியுறுத்துகின்றனர். ஓரளவு நெருங்கியுள்ள சாதியினர் கட்டாய விதவைக் கோலத்தையும் பேதை மணத்தையும் பின்பற்றினர். தொலைவில் உள்ளவர்கள் பேதை மண வழக்கத்தை மட்டுமே மேற்கொண்டனர். பிராமணர்களிடமிருந்து வெகுதூரம் விலகி நின்றவர்கள் சாதி பற்றிய நம்பிக்கையை மட்டுமே கொண்டனர்.
பார்த்துப் போலச் செய்தல் முறைகளில் இவ்வாறு மாறுபாடுகள் இருப்பதற்குக் காரணம் ஒன்று டார்ட் கூறுவது போல இடைவெளி தூரம், மற்றொன்று இந்தப் பழக்க வழக்கங்களின் காட்டுமிராண்டித் தனமான இயல்பு. இந்த விநோத நிகழ்ச்சி. டார்டின் விதிக்கு முழுமையான விளக்கமாக உள்ளது. மேலும் இந்தியாவில் சாதி முறை தோன்றி வளர்ந்ததற்குக் காரணம் மேல் நிலையிலிருந்த வகுப்பாரைப் பார்த்து கீழ்நிலையிலிருந்தோர் 'போலச் செய்ததன் விளைவு' என்பதையும் விளக்குகின்றது.
இத்தருணத்தில் நான் முன்பு கூறிய முடிவு ஒன்றினைப் பார்ப்போம். முன்பு நான் கூறிய போது அந்த முடிவு திடீரெனவோ, ஆதாரமெதுவும் இல்லாமலோ மேற்கொள்ளப்பட்டதாகத் தோன்றியிருக்கலாம். பிராமண வர்க்கமே மேற்சொன்ன மூன்று பழக்க வழக்கங்களின் துணையோடு சாதிமுறையைத் தோற்றுவித்தது என்று நான் கூறினேன். இந்த முடிவுக்குக் காரணம் மற்ற வகுப்பினரிடையே இந்தப் பழக்க வழக்கங்கள் பிறரைப் பின்பற்றம் வகையில் ஏற்பட்டவை என்பதுமாகும். பிராமணரல்லாதாரிடையே வகையில் ஏற்பட்டவை என்பதுமாகும். பிராமணரல்லாதாரிடையே இந்தப் பழக்க வழக்கங்கள் அவர்களை அறியாமலேயே பரவுவதில் பார்த்துப் போலச் செய்தல் பங்கு பற்றி கூறினேன். அவ்வாறு பார்த்துச் செய்வதற்கு ஒரு மூலமாக அமைந்த முன்மாதிரியான ஒரு சாதி, வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.
அது பிறர் பின்பற்றி நடப்பதற்கு முன் மாதிரியாக உயர்ந்ததாகவும் இருந்திருக்க வேண்டும். மதத்தை உயிர்மூச்சாகக் கொண்ட சமுதாயத்தில் கடவுள் ஊழியனைத் தவிர வேறு யார் மற்றவர்களுக்கு இத்தகைய முன் மாதிரியாக அமைய முடியும்?
இந்த முடிவு பிறர்க்கு எதிராகத் தம்முடைய கதவுகளை அடைத்துக் கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு வலிமையற்றிருந்தவர்களின் கதையை முடித்து வைக்கின்றது. இனி, பிறர் உள்ளே நுழைய முடியாதபடி கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததன் காரணமாக மற்றவர்கள் எவ்வாறு அடைபட்டனர் என்பதைக் காண்போம். இதைத்தான் நான் சாதிய உருவாக்கத்தில் இயந்திர கதியில் (Mecharistic) நடந்த முறை என்பேன். இந்த விதமாக இயந்திர கதியில் சாதி வளர்ச்சி அமைந்தது தவிர்க்க முடியாததாகிவிட்டது. என் முன்னோடிகள் இதனை இயந்திரகதி என்றோ அல்லது உளவியல் தன்மையானது என்றோ விளக்கம் தரவில்லை.
காரணம் சாதி என்பதை அவர்கள் தனி ஒரு அலகு எனக் கருதியது தான். சாதி என்பது 'சாதி முறை என்ற ஒன்றின் ஒரு அங்கம் என்று அவர்கள் நினைக்கவில்லை. இப்படி உண்மையைப் பார்க்க முடியாமல் போனதன் விளைவாக அல்லது உண்மையைப் பார்க்க மறந்ததன் விளைவாகச் சாதியைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ள முடியாமற் போயிற்று. சாதி என்பது எண்ணிக்கையில் ஒன்றே ஒன்றாக இருத்தல் என்பது எப்போதும் இருந்திருக்க முடியாது. சாதிகள் எண்ணிக்கையில் பன்மையிலேயே நிலவி வருகின்றன. இந்தக் குறிப்பை எப்போதும் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு சாதி' என்ற ஒன்று இல்லை; எப்போதும் சாதிகள் இருக்கின்றன. இக்கூற்றைப் பின்வருமாறு விளக்கியுரைப்பேன். பிராமணர்கள் தங்களைத் தனியாக ஒரு சாதி என்று ஆக்கிக் கொண்டதன் விளைவாகப் பிராமணரல்லாதார் என்றொரு சாதி உருவாக நேர்ந்தது.
என்னுடைய சொந்தப் போக்கில் சொல்வதானால் பிராமணர்கள் தங்களை உள்ளுக்குள் இருந்து அடைத்துக் கொண்டதால் மற்றவர்களை கதவுக்கு வெளியே நிற்குமாறு செய்து விட்டனர். அதாவது பிராமணர்கள் தங்களை ஒதுக்கிக் கொண்டதன் விளைவாக மற்றவர்களை ஒதுக்கி விட்டனர். இந்தியாவை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்துக்கள், முகம்மதியர், யூதர், கிறித்துவர், பார்ஸி என்று பல்வேறு மத நம்பிக்கைகளால் பெயரிடப்பட்டுள்ள பலவகை மக்களைக் கொண்டுள்ளது. இவர்களுள் இந்துக்களைத் தனியே எடுத்துவிட்டால் மற்றவர்கள் சாதிகள் அற்ற சமூகத்தினராவர். ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் வௌ வேறு சாதிக்காரர்கள் என்றே ஆகிறார்கள். இவர்களுள் முதல் நான்கு சமயக்காரர்கள் கூட்டாக விலகிக் கொண்டால் - தங்களைத் தாங்களே அடைத்துக் கொண்டவர்களாக்கிக் கொண்டால், பார்கள் தனித்துவிடப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல், மறைமுகமாகத் தங்களைப் பிரித்துக் கொண்டவர்களாகவும் ஆகின்றனர். குறியீடாகச் சொல்வதென்றால் 'அ' என்ற கூட்டம் தனித்திருக்க வேண்டும் என்று விரும்பினால், அதன் விளைவாக ஆ' என்ற கூட்டமும் நிர்பந்தமாகத் தனித்தியங்க நேர்கிறது.
இதே வாதத்தை இந்து சமூகத்திற்குப் பொருந்திப் பார்ப்போமானால் சாதியில் உள்ள பிளவுபடும் தன்மை தெளிவாக விளங்கும். தன்னைத்தானே பலவாக இரட்டித்துக் கொள்ளும் தன்மையின் விளைவு இது. சாதியிலுள்ள நீதிநெறி, மத மற்றும் சமூகக் கோட்பாடு ஆகியவற்றை வலுவாய் எதிர்கின்ற எந்தப் புதுமையையும் சாதி சிறிதளவும் சகித்துக் கொள்ளாது. அவ்வாறே சாதியை எதிர்த்து நிற்கும் சாதியின் உறுப்பினர்கள் சாதியிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக்குள்ளாவார்கள். அவ்வாறு வெளியேற்றப்படுபவர்களை மற்ற சாதிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தங்கள் சாதிக்குள் இணைத்துக் கொள்ளவும் மாட்டார்கள்; அவர்கள் தங்கள் விதிப்பயனை நொந்து கொண்டு திரிய வேண்டியது தான். சாதி சட்டங்கள் ஈவிரக்கமற்றவை. குற்றங்களின் தன்மைகள் பற்றிய நுண்ணிய வேறுபாட்டினை ஆய்ந்து அறிந்து கொள்ள அவை காத்திருப்பதில்லை.
புதுமைகள் அல்லது மாற்றங்கள் எவ்வகையினதாக இருந்த போதிலும் ஒரே வகையான தண்டனைக்கே உள்ளாக நேரும். புதுவகையிலான சிந்தனையும் கூட ஒரு புதிய சாதியைப் பொறுத்துக் கொள்ளாது. குரு என்று மரியாதையோடு அழைக்கப்படும் கெடுமதியாளனும். முறைபிறழ்ந்த காதலில் ஈடுபடும் பாவிகளும் எதிர்கொள்ளும் விதி (Fate) ஒன்றே. முன்னவன் மதவழிப்பட்ட குழு இயல்பு கொண்ட ஒரு சாதியை உருவாக்குகின்றான். பின்னவர்களோ ஒரு கலப்பு சாதி உருவாகக் காரணமாகின்றனர். சாதி சட்டங்களை மீறுவதற்குத் துணிவு கொண்ட பாவி ஒருவனுக்குச் சாதி கருணை காட்டுவதில்லை. அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை சாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுதலே. இதன் விளைவு புதிய சாதியின் தோற்றம்.
சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டோரைத் தங்ளைத் தாங்களே ஒரு புதிய சாதியாக உருவாக்கி கொள்ளத் தூண்டியது எது? அது இந்து மனப்போக்கு அல்ல; அதினினும் அப்பாற்பட்ட ஒன்று. முற்றிலும் இதற்கு மாறாக, விலக்கி வைக்கப்பட்டவர்கள் வேறு சாதி (உயர் சாதி விரும்பப்படுவது) கூட்டத்திற்குள் சேர்த்துக் கொள்வதற்கு வாய்க்குமானால் அடக்கமான உறுப்பினர்களாகி நிற்பர். எனினும் சாதிகள் அடைக்கப்பட்ட பிரிவுகள், அவை தெளிவாக அறிந்து மேற்கொள்ளும் கள்ளத்தனமான செயல்திட்டம் என்னவெனில் விலக்கி வைக்கப்பட்டவர்களைத் தாங்களே ஒரு சாதியாக உருவாக்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதே ஆகும். வன்மனம் கொண்ட இந்தச் சூழ்நிலைக்கு கற்பிக்கப்படும் தருக்க நியாயம் ஈவிரக்க மற்றது. இந்தச் சூழ்நிலையின் கட்டாயத்திற்குப் பணிந்ததால் தங்களைத் தாங்களே அடைத்துக் கொண்ட நிலையில் இருப்பதைப் பரிதாபத்திற்குரிய குழுவினர் கண்டனர். பிறர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதால் இவர்கள் தனித்து விடப்பட்டனர்.
இவ்வாறு தனித்துவிடப்பட்டவர்கள் அல்லது சாதிச் சட்டங்களுக்கு எதிர்ப்பாக இருந்த காரணத்தால் உருவாக்கப்பட்ட புதிய குழுக்கள் தானே இயக்குகின்ற ஒரு இயந்திர விதியால் புதிய சாதிகளாக மாற்றப்பட்டுப் பன்மடங்காகப் பெருகின. இந்தியாவில் சாதி உருவாக்கத்தின் இரண்டாவது கதை சொல்லப்பட்டது.
இப்போது என்னுடைய கருதுகோளின் முக்கிய கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம். சாதியைப் பற்றி ஆராய வந்தவர்கள் புரிந்த பல்வேறு தவறுகளால் அவர்களின் ஆய்வுப் போக்கில் வழி தவறியுள்ளனர் என்பேன். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது எனத் தேவைக்கு மேலாக வலியுறுத்தியுள்ளனர். அவர்களே நிற வேற்றுமைகளுக்கு ஆளானவர்கள்; இதன் விளைவாகச் சாதிச் சிக்கலுக்குத் தலையாய காரணம் நிறமே என எளிதாகக் கற்பனை செய்து கொண்டனர். ஆனால் உண்மை இதுவல்ல. அதற்கு மாறாக "எல்லா இளவரசர்களும் ஆரிய இனத்தவர் எனப்படுவராயினும் சரி, திராவிட இனத்தவர் எனப்படுவராயினும் சரி அவர்கள் ஆரியர்களே.
ஒரு குடும்பத்தினர் அல்லது ஒரு பிரிவினர் இன வழியில் ஆரியரா அல்லது திராவிடரா என்றொரு பிரச்சினையால் இந்திய மக்கள் கவலைப்பட்டதில்லை. தோலின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வெகு காலத்திற்கு முன்னரே கைவிடப்பட்டது எனக் கூறும் டாக்டர் கேட்கர் அவர்களின் வாதமே சாரியானது. மேலும் மேனாட்டார் சாதிக்கு விளக்கம் சொல்வதற்குப் பதில் அதை விவரிக்க முனைந்தனர். சாதியின் தோற்றத்திற்கு மூலகாரணத்தைக் கண்டுவிட்டவர்களைப் போல போட்டி போட்டுக் கொண்டு விவரித்துள்ளனர். தொழில், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சாதிகள் உள்ளன என்பது உண்மை தான். ஆனால் அதுவே சாதியின் தோற்றத்திற்குக் காரணம் என்று சாதிப்பது சரியான விளக்கமாகிவிடாது. தோலின் அடிப்படையில் அமைந்த குழுக்கள், சாதிகளானது ஏன் என்பதை இன்னும் கண்டறியவில்லை ; இந்தக் கேள்வியை இதுவரை எவரும் எழுப்பவுமில்லை .
திடீரென்று ஒரே மூச்சில் சாதி தோன்றி விட்டது போல இவர்கள் சாதிப் பிரச்சினையை வெகு எளிதானதாக நினைத்து விட்டார்கள், சாதிப் பிரச்சினை இனியும் தொடர்ந்து தாங்குவது இயலாதது; காரணம் இதனால் ஏற்படும் துன்பங்கள் ஏராளம். சாதி என்பது நம்பிக்கைச் சார்ந்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அந்த நம்பிக்கை ஒரு நிறுவனத்தின் அடித்தளமாக அமைவதற்கு முன், அந்த நிறுவனத்தையே வலுப்படுத்திப் பாதுகாப்புள்ளதாக ஆக்க வேண்டியதாக உள்ளது. சாதிப் பிரச்சினை பற்றிய என் ஆய்வு, நான்கு முக்கிய கருத்துக்களைக் கொண்டது: அவை:
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது.
பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே சாதிகள்
தொடக்கத்தில் ஒரு சாதியே இருந்தது
பிறரைப் பார்த்துப் 'போலச் செய்தல்' மூலமும், சாதி விலக்கு செய்யப்பட்டதன் மூலமும் வர்க்கங்கள் அல்லது வகுப்புகள் சாதிகளாயின.
இயற்கைக்கு மாறான இந்தச் சாதி என்னும் நிறவனத்தை ஒழித்துக் கட்டுவதற்கான இடையறாத முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமையினாலே. இன்றைய இந்தியாவில் இந்தப் பிரச்சினை தனித்தன்மையானதொரு ஈடுபாட்டைத் தன்பால் ஈர்த்துள்ளது. எப்படியும், சீர்திருத்தம் போன்ற முயற்சிகள், சாதியின் தோற்றம் குறித்து எண்ணிறந்த கருத்து வேறுபாடுகளை எழுப்பியுள்ளன. இந்தக் கருத்து வேறுபாடுகள், சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன், மனமறிந்து கட்டளை இட்டு தோன்றியதா, அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஆட்பட்ட மனித சமுதாய வாழ்க்கையில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியா என்பதைப் பற்றியதே.
பிந்தைய கருத்தைப் பின்பற்றி நிற்பவர்களின் சிந்தனைக்கு விருந்தாக இந்த ஆய்வுரையின் அணுகுமுறை அமையுமெனக் கருதுகின்றேன். சாதி என்பது நடைமுறையில் மட்டுமல்லாது, எல்லா வகையிலும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு பிரச்சினை, சாதி பற்றிய கோட்பாடு அடிப்படைகள் குறித்து எனக்குள் எழுந்த ஆர்வமே சாதி குறித்த சில முடிவுகளையும் இந்த முடிவுகளுக்குத் துணை நிற்கின்ற ஆதாரங்களையும் உங்கள் முன் வைக்கத் தூண்டியது. ஆனால் அவை முற்றிலும் சரியானவை, முடிவானவை என்றோ அல்லது பிரச்சினைக்கு விளக்கமளிப்பதற்கு அதிகம் சொல்லிவிட்டதாகவோ கருதவில்லை.
வண்டி தவறான வழியில் விடப்பட்டுள்ளது; அதனைச் சரியான வழித்தடத்தில் செலுத்த வேண்டும் என்பதே முதலாவதாகச் செய்ய வேண்டியது. அந்த நோக்கத்திற்குப் பயன்படும் வகையில் ஆய்வுக்குச் சரியான தடமாக நான் கருதுவதைச் சுட்டிக்காட்டுவதே இந்த ஆய்வுரை. எனினும் ஒருதலை சார்பாக ஆய்வினை நடத்திச் செல்லுவதைத் தவிர்க்க வேண்டும். அறிவியல் வழியைப் பின்பற்றிச் செல்ல வேண்டிய இவ்விடத்தில் உணர்ச்சி வயப்படுதலைத் தவிர்த்து, நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தத்துவங்கள் தவறு என்று தெரிந்தால் நான் அவற்றை அழித்துவிடவும் இருந்த போதிலும் தயங்க மாட்டேன்.
பன்நோக்கு விரிவாக இருந்த போதிலும் ஒரு கருத்தைப் பற்றி அறிவுப் போரில் எழுகின்ற முரண்பாடு எப்போதும் நிலைத்திருக்கக் கூடியதாகலாம். முடிவாக, சாதி பற்றிய கோட்பாட்டினை உங்கள் முன் வைக்கப் பேராவல் கொண்டேன்; அவை ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்று எடுத்துக்காட்டினால் அவற்றைக் கைவிடத் தயங்க மாட்டேன்.