விதியையடித்துத் தள்ளுகிறான்!
(சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
வீர்யமில்லாதவர்களும், சித்தப்பிரமையுள்ளவர்களும் தான் விதியை மதிப்பார்கள், விதி கையாலாகாதவனுக்குத்தான், விதி என்பது பிழைப்புக்கு ஒரு வழி, ஆண்மையிடம் விதி நிற்காது.
தெய்வகதி என்பதைப் பலத்தால் வெல்லலாம். வீர்ய மில்லாதவன் (பேடி) தான் தெய்வத்தைப் பின்பற்றுவான்.
பலமுள்ளவனிடம் விதியின் ஆட்டம் செல்லாது
காட்டிற்குப் போகப் புறப்படும் இராமனிடம், இலட்சுமணன் தைரியம் கூறி, 'நாட்டை விடாதே' என்று கூறும் போது, தெய்வத்தின் யோக்கியதையையும், விதியின் பித்தலாட்டத்தையும் வெளிப்படை யாகக் கூறுகின்றான்.
(அயோத்தியா காண்டம், சர்க்கம் 23: பக்கம் 105, 106)
'வீர்யமில்லாதவர்களும், சித்தப்பிரமை உள்ளவர்களும், க்ஷத்திரியர்களில் கீழ்ப்பட்டவர்களும் மாத்திரம் வாஸ்தவமாக சக்தியற்ற விதியை அனுசரித்து அதற்குக் கட்டுப்படுவார்கள்.....
விதியை ஒருவராலும் வெல்ல முடியாதென்று அந்தக் கையாலாகாத பதார்த்தத்தை மெச்சுவது நியாயமல்ல.
மனோபலமில்லாதவர்களுக்கு விதி என்பது பிழைப்புக்கு வழி என்று பிருஹஸ்பதி சொல்லி இருக்கிறார். ஆகையால், கையாலாகாதவர்களே விதியை அனுசரிக்க வேண்டும்.
புருஷ பிரயத்தனத்தை (ஆண்மையை) விதி வெல்லாது. அதைக் கொண்டாடலாமா?
ஆகையால், தங்களுக்கு (ராமனுக்கு சித்தப்பிரமை தவிர வேறில்லை .'
குறிப்பு : இப்படி இலட்சுமணன் விதியைப் பற்றிய தண்டவாளங்களை எல்லாம் புட்டுப்புட்டு உடைத்துத் தள்ளுகிறான். இது மட்டும் அல்ல, தெய்வம், தெய்வ கதி என்பதன் யோக்கியதையையும் தெள்ளத்தெளிய அதே சர்க்கத்தில், 107 ஆவது பக்கத்தில் குறிப்பிடுகிறான்!
பயந்தவர்களும், வீர்யமில்லாதவர் (பேடி)களுமே தெய்வத்தைப் பின்பற்றுவார்கள். வீரர்களும் மன உறுதி உள்ளவர்களும் அதை லட்சியம் செய்யமாட்டார்கள். தன் பலத்தால் விதியை வெல்லக்கூடியவனிடத்தில் அதன் ஆட்டம் கொஞ்சமேனும் பலிக்காது. அவனுக்கு ஆக வேண்டிய காரியத்தை அது கொடுக்காது. விதியைக் காட்டிலும் புருஷ பிரயத்தனம் (ஆண்மை ) பலமுள்ளது என்பதை இன்று பிரத்தியட்சமாக ஒரு உதாரணத்தால் பாருங்கள்?
குறிப்பு : இப்படி லட்சுமணன் தெய்வத்தின் மீது இராமன் கொண்டுள்ள முட்டாள்தனமாக நம்பிக்கையைப் பற்றி விளக்கிக்கொண்டு போகிறதும் அன்றி, மேலே தொடர்ந்து கூறிக்கொண்டு போகும் பொழுது, 'விதியும் தெய்வபக்தியும்' என்ன பாடுபடுகிறது என்று சவால் விட்டுக்கொண்டு போகிறான். ' விதியின் பலமும், புருஷப் பிரயத்தனத்தின் பலமும் இன்று நன்றாக விளங்கும். அவைகளுக்குள்ள பேதத்தையும், தாரதம்மியத்தையும் எல்லோரும் தெளிவாய் அறிவார்கள். விதியே தங்களுடைய (ராமனுடைய) அபிஷேகத்தைத் தடுத்தது என்று தாங்களும் இன்னும் பல ஜனங்களும் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தெய்வம் என் பலத்தால் ஜயிக்கப்பட்டு என்ன பாடுபடுகின்றதென்பதை எல்லோரும் பார்ப்பீர்கள். மதம் பிடித்துச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு மரவெட்டியால் குத்துவதையும் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி ஓடும் யானையைப் போல் தடை இல்லாமல் செல்லும் தெய்வத்தை என்புத்தி என்ற பாசத்தால் அடக்கித் திருப்பிக் கொண்டு வருகிறேன்.
குறிப்பு : இவ்விதம் இலட்சுமணன், தெய்வத்தின் மீது கொண்டுள்ள மூடநம்பிக்கையை விளக்கித் தெய்வத்தைப் புத்தியால் அடக்குவேன். அதாவது, புத்தியைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பவனுக்குத் தெய்வம் என்று ஒன்று இருக்காது; தெய்வம் என்பது பித்தலாட்டம் என்பதன் கருத்தின் மீது கூறுகிறான்.
இதைக் கருப்புச் சட்டைக்காரர்களாகிய நாங்கள் சொன்னால் தான் எங்களை நாஸ்திகர்கள், சாமி இல்லை என்று சொல்பவர்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால், பார்ப்பனர்களின் இராமாயணத்திலேயே இலக்கு மணனே, கூறுகிறான். இதற்கு ஆஸ்திக சிகாமணிகள் என்பவர் களும், கடவுள் பிரசாரக்காரர்களும் மற்றும் இராமாயண பக்தர்களும் என்ன கூறுவார்கள்? திருடனுக்குத் தேள் கொட்டினால், அவன் என்ன செய்வான்? அதே சங்கதிதான் இதுவும்.
Tamil eBooks Online Reading
தமிழ் மின் புத்தகங்கள் படிக்க
Tamil eBooks Read Online
மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.