Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

17.இராவணன்கொல்லப்பட்டபிறகுஇராமன் சந்தேகப்பட்டது, ஆத்திரப்பட்டது!

யுத்த காண்டம்
(சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
"சீதை ஆடை ஆபரணங்களால் ராக்ஷச கன்யைகளால் அலங்கரித்து சூர்யனைப் போல் ஜ்வலிக்கும் பல்லக்கில் ஏற்றுவித்து அதற்கு வெளியில் நேர்த்தியாய் திரை போட்டுவித்து, ராக்ஷச வீரர்கள் ஆயுதபாணிகளாய் நான்கு புறங்களிலும் காத்து வர ராம, லெட்சுமணர்கள் இருக்குமிடத்திற்கு அழைத்துவரப்பட்டாள்."
(சர்க்கம் 14, பக்கம் 483)
அப்பொழுது சீதையுடன் வந்த விபீஷணன் ராவணனுடைய கிரகத்தில் இவ்வளவு காலம் (சீதை) இருந்ததைப் பற்றி லோகத்தார்கள் என்ன சொல்வார்களோ என்று நினைத்து அவன் முகம் வாடியது.
(மேற்படி சர்க்கம், பக்கம் 484)
“(சீதை) புருஷர்களுக்கெதிரில் வர வெட்கப்பட்டு வஸ்திரத்தால் முகத்தை மறைத்துக் கொண்டு மெள்ள மெள்ள இராமனுடைய பக்கத்தில் வந்து "ஆர்யபுத்ர" என்று சோகத்தால் நெஞ்சடைத்துப் பேசமுடியாமல் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் பெருக அழுதாள்"
குறிப்பு : இதன்மூலம் விபீணனுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இராமன் எங்கே சீதையை ஏற்க மறுப்பானோ, பத்து மாத காலம் இராவணனுடைய இல்லத்தில் இருந்ததற்காக இராமன் சந்தேகப்பட்டுவிடுவானோ என்று சந்தேகப்படுகிறான். அன்றியும் சீதை சீவிச் சிங்காரித்துக் கொண்டு, ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டு வருகிறாளாம். உண்மையிலேயே அவளைப் பார்த்தவுடனேயே உள்ளத்தின் அறிகுறி முகத்திலே பிரதிபலித்திருக்கும். கணவனைப் பிரிந்தவள்போல் இல்லை. அப்படி இல்லாத காரணத்தால் சீதையைப் பற்றிய உண்மைகளை அறிந்துவிட்டான் இராமன்.
யுத்த காண்டம்
(சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
இராவணனிடமிருந்து மீட்டுவரப்பட்ட சீதை, இராமனுக்குப் பக்கத்தில் வந்து நின்ற விதத்தை முன்பு கூறினேன். சீதையை ஏறிட்டுப் பார்த்தான் இராமன். அப்போது :
"உதிர்த்த பூரண சந்திரனைப்போல் கோபத்தால் அவருடைய (ராமனுடைய) முக மண்டலம் சிவந்திருந்தது. களங்க மற்ற சந்திரனைப்போல் அடுத்த க்ஷணத்தில் கோபத்தால் விகாரத்தை அடையும்."
(சர்க்கம் 116, பக்கம் 486)
(இவ்வளவு ஆத்திரம் மட்டும் அல்ல இராமனுக்கு. இன்னமும் மேலே போகப்போக ஆத்திரம் மிகுந்து பேசுகிறான்)
"பெண்ணே! என் சத்துருக்களை ஜெயித்தேன்; அவர்களுடைய ராஜதானியை எரித்தேன்; பழி தீர்த்தேன், ஓர் க்ஷத்திரிய வீரன் தனக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்க, எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்தேன். ஆனால், உன்னை மறுபடியும் அடைய இவ்வளவு சிரமப்பட்டேன் என்று நீ எண்ணலாம். அது முற்றிலும் பிசகு; என் பிரயத்தனங்கள் ஸ்பலமாயின. இராவணன் எனக்குச் செய்த அவமரியாதைக்காக அவனைத் தண்டித்தேன்; அவனுடைய வம்சமும், அவன் எனக்குச் செய்த அவமரியாதையும் இன்று ஒழிந்தன; என் வீர்யத்தை சகலலோகங்களுக்கும் தெரிவித்தேன்; நான் செய்த பிரதிக்ஞையை நிறைவேற்றினேன்; கவலையுற்றேன்; நானில்லாத வேளையில் சபலசித்தமுள்ள இராவணன் உன்னை அபகரித்தான்
(சர்க்கம் 117, பக்கம் 486, 487)
குறிப்பு : ராமனுக்கு சீதையைக் கண்டவுடனேயே சீதையின் வண்டவாளமெல்லாம் தெரிந்துவிட்டது. இவள் இராவணனுக்கும் உடன்பட்டுத்தான் இருக்க வேண்டும். இவள் வருகிற நடையும், ஒய்யாரமும், முகப்பொலிவும் இதுவரை கணவனைப் பிரிந்தவள் போல் இல்லையே என்று மனத்தில் நினைத்து, சீதை இராவணனுக்கு உடன் பட்டிருப்பாள் என்பதை உணர்ந்துதான் ஒரே வார்த்தையில் சீதையைப் புறக்கணித்துப் பேசுகிறான். "உன்னை அடைய வேண்டும்
என்பதற்காக நான் இராவணனுடன் யுத்தம் செய்து மீட்டு வரவில்லை ; க்ஷத்திரியனுக்குள்ள வீரத்தைக் காண்பித்தேன்; இராவணனைப் பழிக்குப்பழி வாங்குவதற்கென்று அவனைக் கொல்லும் பொருட்டே அவனுடன் யுத்தம் செய்தேன்; உன்னை மீட்பதற்கல்ல; என்று கூறுகிறான். சீதை இதைக் கேட்டவுடன் என்ன செய்கிறாள்?
''ரகுவீரன் சொல்லைக் கேட்டு காட்டில் புலிகளால் சூழப்பட்ட மான்குட்டியைப்போல் பயத்தால் மிரண்ட கண்களுடன், சீதை கலகலவென்று கண்ணீருதிர்த்தாள்
(மேற்படி சர்க்கம், பக்கம் 487)
குறிப்பு : ''அய்யோ ! ராமனுக்கு நம்முடைய யோக்கியத்தனங்களும், ஜாலங்களும் வெளிப்பட்டு, இராமன் உண்மை உணர்ந்து கொண்டானே" என்று திகலடைந்து, பயத்தால் கண்ணீர் விட்டாளாம். இன்னமும் மேலே நடக்கும் சம்பாஷணைகளைக் கீழே பார்ப்போம்.
முந்தைய ஆராய்ச்சியில் சீதை இராமனின் அருகில் சென்றவுடன், இராமன் சீதையைக் கடிந்து பேசுகிறான்.“இராமன் உண்மையை அறிந்துவிட்டானே" என்று சீதை அறிந்து கண்ணீர் விடுகிறாள் என்பதைக் கண்டோம். மேலும் கவனிப்போம்.
இராமனும் இதைப்பார்த்து, இவள் நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்; பாசாங்குக்காரி, ஏய்க்கும் ஜாலக்காரி என்பதைத் தெரிந்துகொண்டு இன்னமும் ஆத்திரமாகக் கடிந்து பேசுகிறான். அதைக் கண்டு ராமனுக்கும் கோபம் அதிகரித்தது. புருவங்களை நெளித்து சீதை தனக்கெதிரில் நிற்க இஷ்டப்படாமல் அவளைக் குறுக்காய்ப் பார்த்து சகல வானரர்களும், ராட்சதர்களும் கேட்டுக் கொண்டிருக்கையில் கடூரமான வார்த்தைகளால் அவளை நிந்தித்தான்''
(சர்க்கம் 117 பக்கம் 487)
குறிப்பு : என்ன கூறி நிந்தித்துப் பேசினான்? அடிக்கடி அவளைப் பார்த்து, "உனக்காக யுத்தம் செய்தேன் என்று நினைக்காதே; என் வீரத்தைக் காண்பிக்கவே' என்கிறான். அது மட்டுமா?
“இராவணன் வீட்டில் நீ இருந்ததால் உன்மேல் எனக்குச் சந்தேகம்" என்று வெளிப்படையாகக் கூறுகிறான்.
"ஒருவன் தனக்குச் செய்த அவமானத்தைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் குறை வரச் செய்து முடித்தேன்... உன்னை அபகரித்த சத்ருவிடத்திலிருந்து உன்னை மீட்டேன். என் மித்ரர்களின் வீர்யத்தால் யுத்தமென்ற சமுத்திரத்தைக் கடந்தேன். ஆனால், இவ்வளவும் உனக்காகச் செய்தேன் என்று எண்ணாதே. நான் களங்கமற்ற இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன்; நிகரற்ற கீர்த்தி பெற்றவன்; என் க்ஷத்திரிய தர்மத்தை நிறைவேற்ற வேண்டியது எனக்குச் செய்த அவமானத்தைப் போக்க வேண்டியது, கடமை, துஷ்டனான இராவணனுடைய வீட்டில் வசித்ததால் உன் நடத்தையைப் பற்றிச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.''
(சர்க்கம் 117 பக்கம் 487)
குறிப்பு : இப்படிக் கடிந்து பேசி, இத்துடன் விட்டுவிட வில்லை . இன்னமும் கோபமாகப் பேசி, அவளுடைய முகத்தில் விழிப்பதற்கே கூட மனம் பொறுக்காமல் ஆத்திரமடைகிறான். என்ன ஆனாலும், கட்டிய புருடன் அல்லவா? தன் மனைவி பிறருடன் சென்றாள்; அதிலும் தன்னையும் தன் தம்பி லட்சுமணனையும் தந்திரமாகத் துரத்திவிட்டு இருவரும் இல்லாத சமயம் பார்த்து, ஏமாற்றிவிட்டு இராவணனுடன் சென்றாள். அப்படிப்பட்டவள் என்ன பத்தினி வேடம் போட்டு நடந்தாலும் இராமன் உண்மையை அறிந்து கொண்டான். பின்பு, அவன் சீதையைக் கடிந்து பேசுவதைக் கவனிப்போம்.
'கண் வலியால் வருந்துகிறவனுக்குத் தீபத்தின் வெளிச்சம் எப்படி விரோதமோ, சகிக்க முடியாதோ, உபத்திரவிக்குமோ அப்படி எனக்கு எதிரில் நீ நிற்பது எனக்குச் சகிக்க முடியவில்லை ;மிகுந்த உபத்ரவத்தை உண்டு பண்ணுகிறது; என்முன் நில்லாதே; உன்னால் எனக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை.'
(மேற்படி சர்க்கம், பக்கம் 488)
குறிப்பு : முன்பு சீதையை இராவணன் தூக்கிப் போன பிறகு, இராமன் சீதையை நினைத்து நினைத்து உருகினான். 'சீதை எனக்கு, இப்படியும் அப்படியும் இன்பங்கொடுத்தாளே! என்னைக் கண்டால் இப்போதும் கட்டி அணைத்துக் சுகம் கொடுப்பாளே என்றெல்லாம் கூறியவன், இப்போது சீதையைக் கண்டவுடன் 'நீ என் முன் நில்லாதே; உன்னால் எனக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை' என்கிறான். மேலும் ஒரு இடத்தில் இராமன், நான் காட்டிற்குச் சீதையுடன் வந்தது எப்போதும் இவளுடன் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்கே என்கிறான்! 'அயோத்தியில் இருந்தால் அங்குப் பலபேர்களின் கூட்டத்தினால் என் இஷ்டப்படியெல்லாம் அவளுடன் சல்லாபம் செய்ய முடியாது என்பதற்கே இங்குக் காட்டிற்குத் தனித்த இடத்திற்கு வந்தேன் என்கிறான். அப்படிப்பட்டவன் இப்போது சீதையை ஓட ஓடத் துரத்துகிறான். உன்னால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை . அதாவது நீ எனக்கு மனைவி இல்லை; உன்னிடம் இன்பம் அனுபவிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறிவிடுகிறான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.