Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

20. இப்படிப்பட்டஇந்தஇராமாயணம்ஒருதிருட்டுக் கதை!

அது அசல் (ஒரிஜினல்) கதை அல்ல; அதன் மூலக்கருத்து கந்தபுராணத்திலிருந்து கையாடிய (திருடிய) தாகும்.
கந்தபுராணக் கதையும், இராமாயணக் கதையும் ஒரே அடிப்படைக் கருத்தைக் கொண்ட கற்பனைக் கதைகளாகும். ஒன்றைப் பார்த்தே, அதாவது ஒன்றை ஆதாரமாக வைத்தே மற்றொன்று புனையப்பட்டதாகும்.
இவைகளில் எதைப் பார்த்து எது புனையப்பட்டது என்பது ஒரு முக்கியப் பிரச்சினையாகும். அறிவு ஆராய்ச்சியையும், வளர்ச்சி (எவலூஷன்) தத்துவத்தையும் முன்னதாகவைத்து சிந்தித்துப் பார்த்தால் கந்தபுராணம் தான் முந்திய தாக இருக்கும் எனக் கருதவேண்டியிருக்கிறது.
கந்தபுராணம் சைவ பரமானது; இராமாயணம் வைணவ பரமானது. சைவம், வைணவம் என்கின்றதான இரண்டிலும் சிவன், விஷ்ணு என்கின்றதான இரண்டு கடவுள்களிலும் சிவனும், சைவமும் தான் முந்தியதாக இருக்கக்கூடும். சிவன் காட்டுக் கடவுள், அவனது உருவம் காடாளுந்தன்மை உடையது; சிவன் இருப்பிடம் சுடுகாடு (கோயில் சுடுகாடு) கைலையங்கிரி மலை. அவன் உடை காட்டு மிருகத்தின் தோல் (புலித்தோல் நல்லாடை) அவன் அணிபாம்பு (அரவாபரணம்), எலும்பு, கையில் மான்குட்டி, பாத்திரம் மண்டை ஓடு, கபாலம் ஏந்திய கை, பூச்சுப் பூசிக் கொள்வது சுடுகாட்டுச் சாம்பல் (சுடலைப் பொடி), தலைசடை (சடைமுடி) காதில் தொங்கும் வளை தோடு (குண்டலம்) ஆயுதம் மழு ஈட்டி, சிவன் மனைவி மலைமகள் வாகனம் எருது, சிவன் பிள்ளை ஆனைமுகன், ஆறுமுகன், மனைவியும் காட்டுப்பெண் (வள்ளி) ஆயுதம் வேல், சூலம் (திரிசூலம்) வாகனம் மயில், அவன் இருப்பதும் காடு (குன்று); ஆடை கோவணம், உணவு தேனும் தினை மாவும், பழைய சிவனுடைய குணங்களும், சூது வாது அற்றதும், புரட்டுப் பித்தலாட்டம் அற்ற வெள்ளை குணமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது, இவைகளைக் கொண்டு பார்த்தால் சிவன் மக்கள் காட்டு மிராண்டிகளாய், பக்குவமடையாதவர்களாய் இருந்த காலத்தில் காட்டாளர்களால் கற்பனைகள் செய்து கொள்ளப்பட்டது. (இந்தப் பூலோகக் கடவுள்) என்பது நன்றாய் விளங்கும்.
விஷ்ணு அப்படி அல்ல; சிவன் கற்பிக்கப்பட்டதற்கு | நேர்மாறாக நாட்டில் மக்களால் அதாவது மக்கள் சிறிது நாகரிகம் பெற்று அறிவு வளர்ச்சியுடன் நாட்டில் வீடு, வாசல், செல்வம், நல்லாடை, நல்லுணர்வு முதலியவைகளுடன் வாழ்கின்ற காலத்தில் நாட்டு மக்களால் கற்பித்துக் கொண்ட மேல் உலகக் கடவுள் என்றே சொல்லலாம்.
ஏனெனில், விஷ்ணுவின் உருவகம் எல்லாமுமே சிவனுக்கு மாறானது. விஷ்ணு அவதாரங்களும் அநேகமாய் தந்திரத்தையும் நாட்டு வகுப்பு நிலைமையையும், அனுசரித்தவைகளே, ஒழிய, காட்டு நிலையை அனுசரித்தவைகள் அல்ல. ஆதலால், சிவனைவிட சைவத்தை விட விஷ்ணுவும் வைணவமும் நீண்ட நாள்களுக்குப் பின்னால் கற்பிக்கப்பட்டவைகளாகத்தான் இருக்க முடியும். மற்றும் கந்த புராணக் கதை, இராமாயணத்தை விட அதிகமான காட்டு மிராண்டித் தன்மைகளைக் கொண்டதாகும்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.