கந்தன் தோற்றம்
அசுரர்களால் தேவர்களுக்குக் கேடு செய்யப்படுகின்றன என்பதாகத் தேவர்கள், சிவனை வேண்டிக் கொண்டதற்கிணங்க கந்தன் தோற்றுவிக்கப்படுகிறான்.
இராமன் தோற்றம்
இரட்சதர்களால் தேவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தேவர்கள், விஷ்ணுவை வேண்டிக்கொண்டதற்கிணங்கவே விஷ்ணு இராமனாக அவதரிக்கிறான்.
கந்தன் பிறப்பு
கந்தன் பிறக்க சிவன், பார்வதியை 100 தேவ வருடம் (அதாவது சுமார் 300,000 ஆண்டு) கலவி (புணர்ச்சி) செய்தானாம்.
அப்போதும் கருத்தரிக்கவில்லையாம்! நீண்ட நாள் போகத்தைக் கண்டு பயந்த ரிஷிகள், கலவியைத் தடுத்தார்களாம், அதன் பேரில் சிவன் கலவியை நிறுத்திக் கொண்டானாம்.
அதன் பயனாய் சிவன் வீரியம் (இந்திரியம்) பூமியில் கொட்டிற்று. ஆறுபோல் கங்கையில் விழுந்தது என்பதாக ஒரு புராணம் கூறுகிறது.
அந்த இந்திரியத்தை ரிஷிகள், கையில் வாங்கிக் குடித்தார்கள் என்பதாக ஒரு புராணம் கூறுகிறது.
விஷ்ணு கையில் வாங்கிக் குடித்தார் என்பதாக ஒரு புராணம் கூறுகிறது.
இதனால் ரிஷிகள், விஷ்ணு உள்பட கர்ப்பமானார்கள் என்பதாக ஒரு புராணம் கூறுகிறது.
இன்னும் எத்தனையோ அதாவது, சிவன் இந்திரியம் ஆற்றில் ஆறு கிளையாய்ப் போனதால், கந்தனுக்கு ஆறு முகம் ஏற்பட்டதாம்! இப்படிக் காட்டுமிராண்டி ஆபாசக் கட்டுக்கதை சம்பவங்கள் இன்னும் எத்தனையோ கந்தன் பிறப்பில் கூறப்படுகின்றன.
ஆனால் இராமாயண இராமன் பிறப்பு அப்படி இல்லை. இராமன், தசரதன் கலவியில் அவன் மனைவிகள் சூல் ஆகித் தசரதனுக்குப் பிறந்தார்கள் என்று சொல்லத்தான் இடமில்லையே ஒழிய, மற்றபடி யாகம், பூதம், குதிரையுடன் கட்டித்தழுவிப் படுத்திருத்தல் என்று பல கற்பனை இருந்தாலும், புரோகிதனுக்கு சூல் ஆகிப் பிறந்ததாக அதாவது, பெரிதும் இயற்கை முறைப்படி சூல் ஆகிப்பிறந்திருக்கிறான் என்று காணப்படுகிறது. ஆனால் 60 ஆயிரம் ஆண்டு கிழவிக்குப் பிள்ளை பிறந்தது என்பது தான் இயற்கைக்கு விரோதமானது.
என்றாலும் கந்தன் பிறப்பு மிகக் காட்டுமிராண்டித்தனமான கற்பனை.
இதுபோலவே கந்த புராணத்தில் பாத்திரங்கள் அநேகமாய் முழுதும் காட்டுமிராண்டித்தனமான கற்பனை.
இராமாயணப் பாத்திரங்கள், கந்தபுராணப் பாத்திரங்களைவிட சிறிது இயல்பை அனுசரித்ததாக இருப்பதாலும், பிந்தி காலத்திற்கு ஏற்றதான கற்பனையானவைகளாக இருப்பதாலும் கந்தபுராணமே முந்தியது என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகவே கந்த புராண மூலக்கருத்து கற்பனையை எடுத்துக்கொண்டு அக்கால அறிவுத் தன்மைக்கு ஏற்றப்படி செப்பனிட்டதாகக் கருதிக்கொண்டு, வைணவ பரமாக வால்மீகி பெயரால் இராமாயணம் செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, கந்தபுராணம் முந்தியது, இராமாயணம் பிந்தியது என்றும், கந்த புராணக் கருத்தைக் கையாடியே இராமாயணம் எழுதப்பட்டது என்றும் சொல்லுகிறேன்.
கந்தனுக்கு - ஆறுமுகம்; இராவணனுக்கு 10 முகம்; மற்றும் தேவர்களுக்கு எதிரிகளான அசுர அரசன் சூரபத்மன் பெரிய வரப்பிரசாதம் பெற்றவன். வர்ணாசிரம விரோதி, பிராமணர்களைத் துன்புறுத்தியவன். இராட்சத அரசன் இராவணன், பெரிய வரப்பிரசாதம் பெற்றவன்; தேவர்களுக்குக் கேடு செய்தவன், வர்ணாசிரம விரோதி; பிராமணர்களைத் துன்புறுத்தியவன்.
இருவர் மனைவிகளும் பதிவிரதைகள்; உடன்கட்டை ஏறினவர்கள்.
கந்தனுக்குப் பெண்டாட்டி வள்ளி, இராமனுக்குப் பெண்டாட்டி சீதை, வள்ளி யாருக்குப் பிறந்தவள் என்று தெரியாது. யாராலோ பெற்று காட்டில் போடப்பட்டுக் கிடந்து வேடரால் வளர்க்கப்பட்டவள். சீதை யாருக்குப் பிறந்தவள் என்று தெரியாது. யாராலோ பெறப்பட்டு நாட்டின் வெளிப்புறத்தில் நிலத்தில் போடப்பட்டு, புழுதி அடைந்து கிடந்து, எடுக்கப்பட்டு, அரசனால் வளர்க்கப்பட்டவள். சூரன் இராஜ்யம் வீரமகேந்திரம். இராவணன் இராஜ்யம் இலங்கை, சூரன், இந்திரன் பெண்டாட்டியை சிறை எடுக்கச் சென்று, அவள் காணாததால் அவள் மகளையும், தேவர்களையும் சிறை வைத்தான். இராவணன் இராமன் பெண்டாட்டியையே சிறை வைத்தான்.
சூரன் காலத்தில் (கந்தபுராணக் காலத்தில்) மனைவி முறையும், ஒருவன் மனைவியை ஒருவன் கெடுக்கும் முறையும் அவ்வளவு கவனிக்கத் தக்கதாயில்லாததால் அதைப்பற்றிய பிரஸ்தாபம் கந்தபுராணத்தில் காண்பது அரிது.
இராவணன் காலத்தில் - இராமாயண காலத்தில் மனைவி முறையும், கைப்பற்றுதல், கெடுத்தல் முறை முக்கிய கவனம் பெற்றிருந்ததால் கைப்பற்றிக் கெடுத்துவிட்டான் என்கிற அளவுக்கு முக்கிய கருத்தாய் காட்டப்படுகிறது.
சூரனுக்கு ஒரு தங்கை (அஜமுகி ஆட்டு முகத்தவள்) அவள் சூரனால் அங்கவீனமாக்கப்பட்டவள். (கையறுக்கப்பட்டவள்)
இராவணனுக்கும் ஒரு தங்கை. சூர்ப்பனகை (சூம்பிய முகம்) லட்சுமணனால் அங்கவீனமாக்கப்பட்டவள் (மூக்கு, முலை, காது அறுக்கப்பட்டவள்)
அஜமுகி இந்திரன் மனைவியை தன் அண்ணன் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, அண்ணனுக்கு ஆசை ஊட்டுகிறாள்.
சூர்ப்பனகை இராமன் மனைவியைத் தன் அண்ணன் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, அண்ணனுக்கு ஆசை ஊட்டுகிறாள்.
கந்தன் தூதனாகிய வீரவாகு வீரமகேந்திரத்தை எரியூட்டி அழித்தான்.
இராமன் தூதனாகிய அனுமன் இலங்கையை எரியூட்டி அழித்தான்.
வீரவாகு சூரன் முன் கொண்டுவரப்பட்டான். அனுமன் இராவணன் முன் கொண்டுவரப்பட்டான்.
சூரனுக்கும் மந்திரி சபை; அதில் சூரன் மந்திரிகளோடு யோசிக்கின்றான்.
இராவணனுக்கும் மந்திரிசபை; அவனும் மந்திரிகளோடு யோசிக்கிறான்.
Tamil eBooks Online Reading
தமிழ் மின் புத்தகங்கள் படிக்க
Tamil eBooks Read Online
மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.