Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

3. குறிப்புக்குப் பாடியவை

["இப்படிப்பாடுக அப்படிப்பாடுக" என்று ஒருவர் கேட்க அவர் கொடுக்கும் சமிக்ஞைப்படியே, பொருள் நயத்துடனும் சொல்நயத்துடனும் விரைவிலே பாடிய கவிகள் இவை சொல்லாற்றல் மிக்க புலமைச் செறிவாளர்க்கே எளிதாகக் கைவரும் தனிச்சிறப்புடையன இவை. காளமேகத்தின் இத்தகைய செய்யுட்களை இப்பகுதியில் காண்போம்.]

நீறாவாய் நெருப்பாவாய்        

"சிவபெருமானைக்குறித்த ஒரு செய்யுள்; அதனிடத்தே நீறாவாய், நெருப்பாவாய், கூறாவாய், கொளுத்துவாய், நட்ட மாவாய், நஞ்சமாவாய் என்று அவனைப் பற்றிச் சொல்ல வேண்டும் பாடுக பார்ப்போம்" என்றார் ஒரு புலவர்.

அப்படியே அரைவினாடியில் அவ்வாறு சொற்கள் பொருள் நயத்துடன் அமைந்துவரப் பாடி, முடிவிலே, அப் பெரு மான் அத்தகையவனே எனினும், அன்பரைக் கருணை பாலிக்கும் கருணையாளனும் ஆவான் என்று சொல்லும் வகையினாலே, அவன் தன்னைக் காக்குமாறும் வேண்டுகின்றார் கவிஞர்.

நீறாவாய் நெற்றி நெருப்பாவாய் அங்கமிரு 

கூறாவாய் மேனி கொளுத்துவாய் - மாறாத

 நட்டமா வாய்சோறு நஞ்சாவாய் நாயேனை 

இட்டமாய்க் காப்பா யினி.                                                                 (14)

நெற்றி நீறு ஆவாய் - நெற்றியினிடத்தே திருநீற்றினை உடையை ஆவாய், அங்கம் நெருப்பு ஆவாய் - திருமேனி நெருப்புமயமாக அமைந்திருப்பாய், மேனி இரு கூறாவாய் - நின் திருமேனி இருகூறாக அமைந்திருப்பாய், கொடுத்துவாய் - எரி நெருப்பாகவே விளங்குவாய், மாறாத நட்டம் ஆவாய் - இடையீ டில்லாத நடனத்தையும் உடையை ஆவாய், நஞ்சு சோறு ஆவாய் - நஞ்சினைத் சோறாகக் கொள்வோனும் ஆவாய், (அங்ஙனம் நீ வெம்மையுடனேயே விளங்குபவன் ஆயினும் ) இனி நாயேனை இட்டமாய்க் காப்பாய் - இனி, நாயினேனையும் விருப்பமுடன் காத்தருள்வாயாக.

 குடத்திலே கங்கை அடங்கும் 

குடம் ஒரு சிறு பாத்திரம், கங்கை நதியோ பிரவாகமாகப் பெருகி வருவது. அது, எப்படிச் சின்னஞ் சிறிய குடத்திலே அடங்க முடியும்? குடத்திலே கங்கை அடங்கும், என்ற ஈற்றடி வருமாறு ஒரு வெண்பாப் பாடும் ' என்று சொல்லுகிறார் ஒருவர். காளமேகம், புலவர் கொடுத்த சமிக்ஞையை எண்ணிப் பார்த்தார். சொற் சாதுரியத்தினாலே அவர் கேட்டபடியே பாடுகின்றனர்.

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை 

இடத்திலே வைத்த இறைவர் சடாம

 குடத்திலே கங்கை யடங்கும் .                                                      (15)

கங்கை - ஆகாய கங்கையானது, விண்ணுக்கு அடங்காமல் வானத்திடத்தே அடங்காமலும், வெற்புக்கு அடங்காமல் இமயமலையிடத்தே அடங்காமலும், மண்ணுக்கு அடங்காமல் - நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருக்கும் பூமியிடத்தே அடங்காமலும், வந்தாலும் - பெருகி வந்த போதிலும், பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாமகுடத்திலே - பெண்ணாகிய உமா தேவியைத் தம் இடப்பாகத்திலே வைத்துக் கொண்டவராக இருக்கும் தலைவரான சிவபெருமானின் சடாமகுடத்திலே, அடங்கும் - அடங்கி நிற்பதாகும்.

பகீரதனின் தவத்தினாலே பெருகிப் பாய்ந்துவந்த கங்கையின் வேகத்தைத் தம் செஞ்சடை முடியிலே தரித்து அடக்கி, உலகைக் காத்த பரமனின் திருவிளையாடலைக் குறிப்பதாகச் செய்யுள் அமைந்துள்ளது. கொடுத்த சமிக்ஞை வெண்பாவின் ஈற்றடியிலே வந்தது.

ஆறுதலை உண்டு

'சிவன், முருகன், பிள்ளையார், திருமால், சிவனடியார் இவர்களுக்குத் தனித்தனியே ஆறுதலை உண்டென்று சொற்சுவை விளங்க ஒரு வெண்பாவில் அமைத்துப்பாடுக' என்றார் ஒரு புலவர்.

சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை 

ஐங்காற்கு மாறுதலை யானதோ - சங்கைப் 

பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம் 

படித்தோர்க்கு மாறுதலை பார்.                                                       (16)

சங்கரற்கும் ஆறுதலை - சிவபெருமானுக்குத் தலையிலே கங்கையென்னும் ஆறு உரியதாகும், சண்முற்கும் ஆறுதலை முருகப்பெருமானுக்கும் ஆறு தலைகள் உளவாகும், ஐங்கரற்கு மாறுதலை - ஐங்கரனாகிய பிள்ளையாருக்கு உடலோடு மாறுகொண்ட யானைத் தலையாய விளங்கும், சங்கைப் பிடித் தோர்க்கும் ஆறுதலை - சங்கத்தை ஏந்தியவரான திருமாலுக்கும் பிரளய வெள்ளம் உறைவிடமாயிருக்கும், பித்தா - பித்தனாகிய பரமனே! நின் பாதம் படித்தோர்க்கும் ஆறுதலை பார் - நின் திருவடிகளைப் போற்றியவரான என்போலும் சிவனடியார்க்கும் ஆறுதல் உண்டாகியிருக்கின்றது. இதனைக் காண்பாயாக!

சிவபெருமானின் கருணை தனக்கு இருப்பதனால் தம்மை அவர்களால் வெற்றிக்கொள்ள இயலாது எனவும் குறிப்பாக எச்சரிக்கின்றனர்.

சிவனுக்கு அரைக்கண் 

முக்கண்ணன் சிவபெருமான், அவனுக்கு அரைக்கண்தான் உள்ளது என்று பாடுக' என்று சொன்னார் ஒருவர்.

 முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவர் 

அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே - மிக்க 

உமையாள் கண் ணொன்றரைமற் நூன் வேடன் கண்ணொன் 

றமையுமித னாலென் றறி.                                                                (17)

"பெருமான் உமையொருபாகன். அதனால் முக்கண்களிற் பாதியான ஒன்றரைக் கண் அம்மைக்கு உரியதாகும். காளத்தி நாதர்க்கு, ஒரு கண் கண்ணப்ப நாயனாரால் அப்பி வைக்கப் பெற்றது. இரண்டையும் கருதினால் எஞ்சிச் சொந்தமாக இருப்பது எல்லாம் அரைக்கண்தானே! இவ்வாறு பொருத்தமாகப் பாடி அனைவரையும் வியப்பிலே ஆழ்த்துகிறார் கவிஞர்.

அரனை முக்கண்ணன்' என்று முன்னோர் மொழிந்திடுவர் சிவபெருமானை மூன்று கண்களையுடைய பெருமான் என்று முன்னோர்கள் சொல்வார்கள், அக்கண்ணற்கு உள்ளது அரைக் கண்ணே - மாலையினை அணிவோனான அப்பெரியோனுக்கு உள்ளதெல்லாம் அரைக் கண்ணேயாகும். (எவ்வாறு என்றாலோ?) மிக்க உமையாள் கண் ஒன்றரை - மேலானவனான உமையம்மைக்கு உரிமையுடைய கண் ஒன்றரையாகும். மற்று - பின்னும், ஊன் வேடன் கண் ஒன்று - ஊனுண்போனாகிய வேடனாம் கண்ணப்பன் அப்பி வைத்த அவனுடைய கண் ஒன்றாகும்; இதனால் அமையும் என்று அறி - இத்தன்மையினாலே பெருமானுக்குச் சொந்தமானது, அரைக்கண் என்பதே பொருந்தும் என்று அறிவாயாக.

 சிதம்பர தேவா 

'சிதம்பர தேவா என்று நான்குதரம் வருதல் வேண்டும். அங்ஙனம் அமையுமாறு ஒரு வெண்பாக் கூறுக' என்றார் ஒரு புலவர். கவிஞர் அரைநொடியிலே பாடி அவரைத் திகைக்கும்படி செய்கிறார்.

அரகர திருச்சிற் றம்பல வாணாவந் 

தாருப மகேச சிதம் - பாதே 

வசிதம் பரதே வசிதம் பரதே 

வசிதம் பரதே வனே.                                                                            (18)

அரகர திருச்சிற்றம்பல வாணா - அரகரா ! திருச்சிற்றம்பலம் உடைய பரமனே! அந்தரரூப - ஆகாயமாம் திருமேனியினை உடை யோனே! மகேச - மகேஸ்வரனே சிதம்பர தேவ - சிதாகாயத்து உள்ள பெருமானே! சிதம்பர தேவ! சிதம்பரதேவ! சிதம்பர தேவனே!

அரன் - சங்கரிப்பவன். சிற்றம்பலம் - சிற்சபை சிதம்பரத்தே உள்ளது; சிதம்பரம் சிற்றம்பலம் என்பதன் மரூஉ - மகேசன். பெருஞ்செல்வத்தை உடையவன்; அழிவற்ற பெருநிதியாகிய சிவச்செல்வம் அது.

கின்னரி வாசிக்கும் கிளி 

'கின்னரி வாசிக்கும் கிளி' என்று ஈற்றடி அமையுமாறு ஒரு பெண்பாச் சொல்லுக என்றார் ஒரு புலவர்.

சிவபெருமான் ஆலவாயிலே நடத்திய திருவிளையாடல் களும், அவனது கருணைப்பெருக்கும் தம் கண்முன் தோன்ற கவிஞர் அந்தச் சிறப்பை அமைத்து அப்படியே ஈற்றடி வருமாறு பாடுகின்றார்

ஆடல்புரிந் தானென்றும் அந்நாளி லேமூவர் 

பாடலுகந் தானென்றும் பான்மையினால் - கூடலிலே 

நன்னரி வாசிக்கும் நடைபயிற்றி னானென்றும்

கின்னரிவா சிக்கும் கிளி.                                                                   (19) 

ஆடல் புரிந்தான் என்றும் - பெருமான் முன் நாளிலே திருவிளையாடல்கள் பலவற்றைச் செய்தவன் என்றும், அந் நாளிலே மூவர் பாடல் உகந்தான் என்றும் - அந்தக் காலத்திலே மூவராம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் எனும் மூவரின் பாடல்களை உவந்து அருள் செய்த பெருமானே என்றும் நன்னாரி வாசிக்கு நடை. பயிற்றினான் என்றும் - நல்ல நரிகளாகிய குதிரைகளுக்கு நடை கற்பித்துத் தன் அன்பனைக் காத்தவனே என்றும், கருதி '; கூடலிலே - மதுரைமா நகரிலே பான்மையினால் கிளி கின்னரி வாசிக்கும் - பண்புடனே கிளியும் அப் பெருமானின் புகழைப் பாடிக் கின்னரி வாசித்துக் கொண்டிருக்கும்! 'கிளி' என்றது சிவையை.

கின்னரி - வீணை வகையுள் ஒன்று.

நா நீ நூ நே 

'நா நீ நூ நே' என்பவற்றை ஒரு வெண்பாவில் அமைத்துச் கவைபடப் பொருட்செறிவுடன் பாடுக' என்றார் ஒருவர்.

அரையின் முடியில் அணிமார்பின் நெஞ்சில் 

தெரிவை யிடத்தமர்ந்தான் சேர்வை - புரையறவே 

மானார் விழியீர் மலாணவொற் றீறாகும் 

ஆனாலா நா நீ நூ நே.                                                                                   (20)

என்று பாடினார் காளமேகம். இதன் பொருள் :

மான் ஆர் விழியீர் - மானினது மருட்சி நிறைந்த கண்களைப் போன்ற கண்களை உடையவர்களான பெண்களே! மலரண ஒற்று நா நீ நூ நே ஈறு ஆகும். ஆனால் - மலரண என்பவற்றின் ஒற்றுக் களான ம் ல் ர் ண் என்பவைகன் நா நீ நு நே என்பவற்றின் இறுதியாகித் தலைகீழாக நேம், நூல், நீர், நாண் என்றாற்போல ஆகியவருமானால் தெரிவை இடத்து அமர்ந்தான் - உமாதேவி யானவள் தன் இடப்பக்கமாக வீற்றிருக்க விரும்பியவனாகிய பெருமானின் அரையில் முடியில் அணிமார்பில் நெஞ்சில் புரை அறச் சேர்வை ஆம் - அரையிலும் முடியிலும் அழகிய திருமார் பிலும் நெஞ்சிலும் குற்றமறச் சேர்க்கப்படுவதற்கு உரியனவாகும்.

நேம் விஷமும் ஆம்; அப்பொழுது நெஞ்சு என்றதைக் 'கண்டம்' எனப் பொருள் கொள்வர். நே எனில், அன்பு; அது நேம் என மருவியும் வரும்; அப்பொழுது அவன் நெஞ்சிலே உயிர்களிடத்து அன்புடையவன் என்க.

அரையில் நாணும், முடியில் நீரும், மார்பில் நூலும் நெஞ்சில் அன்பும் உடையவன் மாதொரு பாகன் என்பது இச்செய்யுளின் பொருள்.

சோ காமா ஏ வா தா 

ஒருவர், 'சோகா மா ஏ வா தா' என்ற சொற்களால் தொடங்கும் ஒரு வெண்பாவினைப் பொருட் சிறப்புடன் கூறுக' என்றவுடன், கவிஞர் பாடின பாடல் இது. சிவ பெருமானைப் போற்றி அவர் தம் திருவிளையாடல்களைக் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

சோகாமா ஏவாதா சொல்லின்மனைக் கூட்டியுமை 

பாகார்ந்த தில்லைப் பரமேசர் - வாகாய்த்

தரித்தார் எரித்தார் தரித்தார் உதைத்தார் 

எரித்தார் கணைபடைத்தார் ஊர்க்கு.                                            (21)

உமை பாகு ஆர்ந்த தில்லைப்பரமேசர் - உமாதேவியைத் தம் இடப்பாகத்திற் கொண்டவரான தில்லையிற் கோயில் கொண்டிருக்கும் பரமேசுவரன் ஆனவர், சோகாமா ஏவாதா சொல்லின் மனைக் கூட்டி, - சோ காமா ஏ வா தா என்பவற்றின் இறுதியில் மன் என்பதனைக் கூட்டிச் சொன்னால், வாகாய்த் தரித்தார் - அழகாய்த் தரித்தார் (சோமன் - சந்திரன்); எரித்தார் எரியச் செய்தார் (காமன்), தறித்தார் - கொன்றார் (மாமன், தக்கன்); உதைத்தார் - உதைத்தனர் (ஏமன்); உரித்தார் - தோலினை உரித்தார். (வாமன் - யானை); ஊர்க்குக் கணை படைத்தார் - முப் புரங்களை அழித்தற் பொருட்டுக் கணையாக அமைத்துக் கொண்டார் (தாமன் - திருமால்) என்று அறிக.

 கொட்டைப் பாக்கு! 

'கொட்டைப் பாக்கு என்று தொடங்கி, களிப்பாக்கு என்று முடியும் படியாகப் பொருட் செறிவுடன் வெண்பா ஒன்று கூறுக' என்றார் ஒருவர்.

கொட்டைப்பாக் கும் மொருகண் கூடையைப்பாக் கும்மடியில் பிட்டைப்பாக் கும்பாகம் பெண்பார்க்கும் - முட்ட நெஞ்சே 

ஆரணனும் நாரணனும் ஆதிமறை யுந்தேடும்

காரணனைக் கண்டுகளிப் பாக்கு.                                                  (22)

இப்படி அகங்காரம் கொள்ளாமல், சிவபெருமானைத் தரிசிப்பதிலே மனம் செலுத்துவாயாக என்று சொல்லுபவரைப் போல உரைத்தார் கவிஞர். இதன் பொருள் :

நெஞ்சே; மனமே! கொட்டைப் பாக்கும் - மதுரையிலே வந்தபின் ஏவற்படி மண்சுமக்கச் சென்று மண்வெட்டியைப் பார்த்திருந்தோனும், ஒரு கண் கூடையைப் பார்க்கும் - ஒரு கண்ணினாலே கூடையைப் பார்த்தோனும், மடியில் பிட்டைப் பாக்கும் - தன் மடியிலுள்ள பிட்டினை நோக்குவோனும், பாகம் பெண் பார்க்கும் - தன் இடப்பாகத்துள்ள தேவியைப் பார்ப்போனும், ஆரணனும் நாரணனும் ஆதிமறையும் தேடும் பிரமனும் திருமாலும் ஆதிப்பழமறையும் தேடிக் கொண்டிருப் போனுமான, காரணனை - சர்வ காரணனாகிய பரமசிவனை, கண்டு - தரிசித்து, முட்டக் களிப்பு ஆக்கு - முற்றவும் மகிழ்தலைச் செய்வாயாக.

பார்க்கும்' என்று சொல் பாக்கும்' என மருவியது.

 கரியும் உமியும் 

'கரி என்று தொடங்கி உமி என்று முடியும்படி ஒரு வெண்பாச் சொல்லுக' என்றனர் ஒருவர், அதனை ஏற்றும் பாடிய வெண்பா இது.

கரியதனை யேயுரித்த கையா வளையேந்

தரியயற்கும் எட்டாத வையா - பரிவாக 

அண்ட ரெல்லாம்கூடி யமுதம் கடைந்தபொழு 

துண்டநஞ்சை இங்கே உமி.                                                              (23)

கரியதனையே உரித்த கையா - யானையையே உரித்த கையினை உடையவனே! வளையேந்து அரி அயற்கும் எட்டாத ஐயா - சங்குதனை ஏந்துவானானா திருமாலுக்கும் அயனுக்கும் எல்லைகாண முடியாதிருந்த ஐயனே! அண்டர் எல்லாம் பரிவாகக் கூடி அமுதம் கடைந்த பொழுது - தேவர்கள் எல்லாரும் விருப்பமுடனே ஒன்றுகூடி அமுதம் கடைந்த அந்த நாளிலே, உண்ட நஞ்சை இங்கே உமி - நீ அவர்களைக் காக்கும் பொருட்டாக உண்ட அந்தக் கொடிய நஞ்சினை இவ்விடத்தே உமிழ்ந்து விடுவாயாக.

'ஐயா என்றது அனைவருக்கும் தந்தையாவான் அவனே என்ற உரிமை பற்றியும், அவன் அழகனும் தெய்வத்தன்மை உயைடவனும் ஆதல் பற்றியும் ஆகும்.

'அந்த நஞ்சை இவ்விடத்தே உமிழ்க' என்றதனால், தேவர் களை அழியாது காக்கவே நீ நஞ்சினை உண்டனை; இவர்கள் அகங்காரங் கொண்டோர் ஆயினர்; அதனால் இவர்கள் அழியுமாறு இவ்விடத்தே அதனை உமிழ்க என்று உரைத்ததும் ஆம்.

சீத்துப் பூத்து

சீத்துப் பூத்து' என்று வரும்படி ஒரு வெண்பாவைச் சொல்லுக' என்று கேட்டார் ஒருவர். அப்படியே உரைக்கும் கவிஞர், சிவபெருமானின் திருமுடிமேல் விளங்கும் பிறையை நோக்கி, அவன் ஆபரணமான பாம்பு எப்பொழுதும் சீத்துப் பூத்தென்று சீறிக்கொண்டிருக்கும் என்று கற்பித்துப் பாடினார். அதேபோன்று வானத்துப் பிறைபோல விளங்கும் எம்மை நோக்கி நச்சரவமான நீரும் சீத்துப் பூத்தென்கின்றீர்' என்று பழிப்பது போன்றமைந்த உட்பொருளையும் அறிக.

அப்பூருஞ் செஞ்சடைமேல் அம்புலியைப் பார்த்துப்பார்த் 

தெப்போதும் சீத்துப்பூத் தென்னவே - முப்போதும் 

வாலங்காட் டாநிற்கும் வாயங்கா வாநிற்கும் 

ஆலங்காட் டான்பூண் அரா.                                                                         (24)

ஆலங்காட்டான் பூண் அரா - திருவாலங்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் பூண்டிருக்கும் பாம்பானது. அப்பு ஊறும் செஞ்சடைமேல் அம்புலியைப் பார்த்துப் பார்த்து - கங்கை தங்கியிருக்கும் செஞ்சடையின் மேலாக விளங்கும் இளம் பிறையைப் பார்த்து; எப்போதும் சித்துப் பூத்தென்னவே முப்போதும் அங்கு வால் ஆட்டா நிற்கும் - எப்பொழுதும் சீத்துப் பூத்தென்று முக்காலும் அவ்விடத்தே வாலாட்டிக் கொண் டிருக்கும், வாய் அங்காவா நிற்கும் - வாயினைப் பிளந்தவாறும் இருக்கும்.

அராவின் அறியாமைக்குக் கேட்டவரின் அறியாமை உவமையாக ஆயிற்று

முக்கால் முதல் கீழரை வரை 

முக்கால் முதல் கீழரை வரை வரிசை முறை அலங்காரமாக ஒரு வெண்பாப் பாடுக' என்றனர் ஒருவர். கச்சி ஏகாம்பர நாதரைப் போற்றுமுகத்தால் அங்ஙனமே பாடுகின்றார் கவிஞர்.

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் 

அக்கா லரைக்கால் கண்டஞ்சகாமுன் - விக்கி 

இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி 

ஓருமாவின் கீழரையின் றோது.                                                    (25)

முக்காலுக்கு ஏகா முன் - முதுமைப் பருவம் வந்தடைய அதனால் தடியும் கைக்கொள்ள நேரிடலாகிய மூன்று கால்களாகித் தோன்றும் நிலைமைக்குச் செல்வதற்கு முன்பாகவே, முன் நரையில் வீழா முன் - அதற்கு முற்படவே நரைவிழுதலான தளர்ச்சிப் பருவத்தில் வீழ்வதற்கு முற்பட்டதாகவே, அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - அக்காலத்து உயிர் கவர்வதற்கு என வருகின்றவரான எமதூதர்களைக் கண்டு அஞ்சிக் கால்கள் நடுநடுங்குவதற்கு முன்பாகவே, விக்கி இருமாமுன் - விக்கல் எடுத்து இருமத் தொடங்குவதற்கு முன்பாகவே, மா காணிக்கு ஏகாமுன் பெருநிலம் என்று சொல்லப்படும் சுடுகாட்டிற்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாவே, கச்சி ஒரு மாவின் கீழரை இன்று ஓது - காஞ்சிபுரத்திலே ஒப்பற்ற மாமரத்தின் கீழாக வீற்றிருக்கும் ஏகாம்பர நாதரை இன்றே போற்றி வழிபடத் தொடங்குவாயாக

முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என வந்தமை கண்டு இன்புறுக; சிலேடைப் பொருள் நயத்தையும் அறிக.

ஒரு வெண்பாவில் ஐந்து 'டு

"ஒரு வெண்பாவிலே ஐந்து 'டு' வருமாறு பாடுக” என்றார் ஒருவர் பொருள் அமைதி சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஓகாமா வீதோடு நெரொக்க டுடுடுடுடு

 நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய் 

எடுப்பர் நடமிடுவர் ஏறுவான் பர்க்குக் 

கொடுப்ப ரணிவர் குழை.                                                                   (26)

என்ற உடனே பாடினார் காளமேகம் இதன் பொருள் : நாகு ஆர் குடந்தை நகர்க்கு இறைவர் - இளமரச் சோலைகள் நிறைந்த திருக்குடந்தை நகர்க்கு இறைவரான சிவபெருமான், ஓகாமா வீதோடு டுடுடுடுடு நேர் ஒக்க. ஓ, கா, மா, வீ, தோ என்னும் ஐந்து எழுத்துக்களையும் டுடுடுடுடு என்னும் ஐந்து எழுத்துக்களுடனும் முறையே பொருந்துதலால் (வரும் சொற்கள் ஓடு , காடு, மாடு, வீடு, தோடு); வாகாய் எடுப்பர்; நடமிடுவர்; ஏறுவர் அன்பர்க்குக் கொடுப்பர் அணிவர் குழை - அழகாகத் திருவோட்டினை ஏந்து பவர், காட்டிடத்தே நடம் புரியவர், மாடாகிய வெள்ளேற்றின் மீது ஏறுபவர், அன்பர்க்கு வீடாகிய முக்தியைக் கொடுப்பவர் குழையாகிய காதணியைக் காதிலே தரிப்பவர் ஆவர்.

'நாகார்' என்பதற்குச் 'சங்கினம் நிறைந்த ' எனவும் சொல்லலாம். நாகேசுவரரைக் குறிப்பதாயின் நாகங்கள் ஆர்ப் பரிக்கும் எனலும் பொருந்தும். அது, இறைவன் நாகாபரணனாக விளங்குதலால் என்றும் அறிக

முச்சங்கத் தலைவர்கள் 

முச்சங்கத்துப் புலவர்கள், அவர்கள், இயற்றிய நூல்கள் ஆகியவற்றை எல்லாம் ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுகள் என்றனர் ஒருவர். அதற்கேற்பக் கவிஞர் சொல்லியது இச்செய்யுள்

நூலாநா லாயிரநா நூற்று நாற் பத்தொன்பான்

பாலாநா னூற்று நாற் பத்தொன்பான் - மேலாநாற் 

பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்கும் 

கர்த்தன் மதுரையிற் சொக்கன்.                                                      (27)

'நூலாம் நாலாயிர நானூற்று நாற்பத்தொன்பான் - நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது நூல்களையும், பாலாம் நானூற்று நாற்பத்தொன்பான் - அவற்றை இயற்றி 449 புலவர்களையும், மேலான் நாற்பத்தொன்பான் அவர்களின் தலைவராகத் திகழ்ந்த நாற்பத்து ஒன்பதின்மரையும் உடைய, சங்கம் - மூன்று சங்கங்களுக்கும் அறுபத்து நாலு ஆடலுக்கு - 64 திருவிளை யாடல்களுக்கும், கர்த்தன் மதுரையிற் சொக்கன் - உண்மையில் என்றும் தலைவனாக விளங்கியவன் மதுரையிலே கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமானே ஆவான்

சங்கங்கள் மூன்றாகவும், அதன்கண் இருந்து தமிழாய்ந்தார் ஆயிரக்கணக்கினராகவும், திருவிளையாடல்கள் அறுபத்து நான்காகவும் விளங்கின வேனும், அவை அனைத்துக்கும் முதல்வனாகியவன் சொக்கநாதப் பெருமானே என்பது கருத்து.

 திருமாலின் அவதாரம்

திருமால் பத்து அவதாரங்களை எடுத்து உலகத்தின் நன்மைக்காகப் பாடுபட்டனர் என்பர் அவை மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிங்கம், பரசுராமன், ராமன், பலராமன் கண்ணன் என்ற ஒன்பதும், இனிவரப்போகும் கல்கியும் ஆம். இவை அனைத்தையும் ஒரே வெண்பாவில் அமைத்துப் பாடுவீராக என்றார் அதிமதுரகவி.

"ஆன்றோர் பாராட்டுகின்ற மெய்யான புகழினை உடைய திருவேங்கடமுடைய பெருமானே! ஒரு வெண்பாவின் பாதி யிலேயே, என் கருத்திற்கு இசை, உன் அவதாரத்தை எடுத்துக் கூறுவதற்கு வந்து அருள் செய்வாயாக

"மச்சாவதாரனே! கூர்மாவதாரனே! கோலம் என்னும் பன்றி அவதாரனே! நரசிங்க மூர்த்தியே! வாமனனே! பரசுராமனே! தசரதராமனே! பலராமனே! கோபாலனே! இனிக் கல்கி அவதாரமாகவும் ஆகின்ற பெருமானே!"

இந்தப் பொருள் அமைய, வெண்பாவிற் பாதியிலேயே பத்து அவதாரங்களும் வருமாறு பாடினார் காளமேகம்.

மெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென் 

இச்சையிலுன் சென்மம் எடுக்கவா - மச்சாகூர்

மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்.                                                               (28)

புகழ் - பெருமானின் கீர்த்திகள் மெச்சுதல் - ஆன்றோர்களின் போற்றுதல்களைக் குறித்தது. வேங்கடவன் - வேங்கடமாம் திருப்பதியிலே கோயில் கொண்டிருப்பவன். கூர்மம் - ஆமை. கோலம் - பன்றி, சிங்கம் - நரசிங்கம், வாமநம - குறள் வடிவம். மா - குதிரை, ஆவாய் என்றது இனி வரப்போவதைக் குறித்தது.

ஈயேற மலை குலுங்கும் 

ஒரு புலவர் கொஞ்சம் குறும்புக்காரர், அவருடைய சிந்தனை அந்தப் பாதையிலேயே சென்றது ஈயேற மலை குலுங்கும்” என்ற கருத்துடன், ஆனால் பொருள் நயமுள்ளதாக ஒரு வெண்பாவைச் சொல்ல முடியுமோ? என்று கேட்டார்.

காளமேகம் அதனைக் கேட்டுத் தமக்குள் சிரித்துக் கொண்டார். கண்ணபிரானின் பால வீலைகளை நினைத்தார் வெண்ணைய் திருடியுண்ட மாயன், இடைச்சியின் கைமத்தினால் அடியுண்ட அந்தச் சம்பவம் அவர் கண்முன் நிழலாடியது.

வாரணங்கள் எட்டும் மகமேரு வுங்கடலும் 

தாரணியும் எல்லாம் சலித்தனவால் - நாரணனைப்

பண்பாய் இடைச்சி பருமத்தி னாலடித்த 

புண்வாயில் ஈமொய்த்த போது.                                                     (29)

நாரணனை - ஆயர் பாடியிலே கண்ணணாக அவதரித் திருந்த நாராயணனை, பண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த புண்வாயில் ஈமொய்த்த போது - பண்போலும் இனிதான பேச்சின ளான இடைச்சியானவள் பெரிய மத்தினால் அடித்ததனாலே ஏற்பட்ட புண்ணிடத்தே ஈ மொய்க்கத் தொடங்கிய பொழுதிலே, வாரணங்கள் எட்டும் அஷ்டதிக்கு யானைகளும், மகமேருவும் மகாமேரு மலையும், கடலும் - ஏழ்கடலும், தாரணியும் - ஏழு உலகங்களும் (ஆகிய அனைத்துமே), சலித்தன - அசைவு கொண்டன.

"மகாமேரு அசைவு கொண்டது" என்பதால் ஈயேற மலைகுலுங்கப்பாடிய நயம் காண்க. எல்லாம் பெருமானின் திரு உதரத்தே வைத்து காக்கப்படுவன என்பார்கள் பெரியோர்கள். அதனால் அவன் உடல் குலுங்க அனைத்தும் தாமும் அசைந்தன என்றனர். ஆல் - அசை.

பொன்னாவரை இலை காய் பூ 

'பொன்னாவரை இலை காய் பூ' என்னும் சொற்கள் வருமாறு வெண்பா ஒன்று சொல்லுக' என்று கேட்டார் ஒருவர்.

'பொன் ஆ வரை இலை காய் பூ ' என்று அவற்றைக் கொண்டு திருமாலினோடு அவற்றைப் பொருத்திப் பாடினார் காளமேகம்.

உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால் 

எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும் 

அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும் 

பொன்னா வரையிலை காய்பூ.                                                       (30)

திருமாலானவர், உடுத்ததுவும் - தாம் ஆடையாக உடுத்திக் கொண்டதும், உம்பர்கோன் தன்னால் எடுத்ததுவும் - தேவர் கோமனாகிய இந்திரனின் மழை பெய்வித்த செயலினாலே எடுத்துத் தாங்கிக் கொண்டதும், பள்ளிக்கு இயையப் படுத்ததுவும் - மகா பிரளயகாலத்திலேதான் கண் வளருவதற்கு ஏற்றதாகக் கொண்டு படுத்திருந்தும், அந்நாள் எறிந்ததுவும் - அந்த நாளிலே கன்றைக் குணிலாகக் கொண்டு எறிந்ததுவும், அன்பின் இரந்துதவும் தான் விரும்பிச் சென்று மாவலியினிடத்தே யாசித்ததுவும் பொன் ஆவரை இலை காய் பூ - பொன்னும். பசுக்களும் கோவர்த்தன மலையும், ஆலிலையும், விளங்காயும், நிலமும் ஆம்.

பூ - நிலவுலகம், குணில் - குறுந்தடி, இலை - ஆலிலை.

கடல் நடுவிலே செந்தூள்

"கடல் நடுவிலே செந்தூள்” எழுந்ததாகக் கற்பித்துப் பாடுவதற்கு இயலுமோ?" என்றார் புலவர்.

காளமேகத்தின் நினைவில் சிவபெருமான் மன்மதனை எரித்த திருவிளையாடல் எழுந்தது. மன்மதன் திருமாலின் மகன். அதனால் அவனுடைய தாய் திருமகள் ஆகின்றாள். அவளுக்குப் புத்திர சோகம் இருக்கும் அல்லவா! அவள் மார்பில் அறைந்து கொண்டு கதறினாளாம். அப்போது அவள் மார்பிலே பூசியிருந்த சிந்துரக்கலவையின் செந்தூள் மேலே எழுந்து பரந்ததாம். அவளோ பாற்கடல் நடுவே அனந்த சயனத்திலே தன் நாயகனுடன் இருப்பவள் அதனால், கடல் நடுவே செந்தூள் எழுந்ததாகின்றது. இப்படிக் கற்பித்து நயமுடன் பாடுகிறார் காளமேகம்.

சுத்தபாற் கடலின் நடுவினில் தூளி 

தோன்றிய அதிசயம் அதுகேள்

மத்தகக் கரியை யுரித்ததன் மீது 

மதன்பொரு தழிந்திடும் மாற்றம் 

வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் 

விழுந்து நொந் தயாந்தழு தோங்கிக் 

கைத்தல் மலரால் மார்புறப் புடைத்தாள் 

எழுந்தது கலவையின் செந்தூள்.                                      (31)

சுத்த பாற்கடலின் நடுவினில் - பரிசுத்தமான பாற்கடலின் நடுவிடத்தே, தூளி தோன்றிய அதிசயம் அது கேள் - துகள் தோன்றியதான அந்த அதிசய நிகழ்ச்சியைக் கேட்பாயாக.

மத்தகக் கரியை யுரித்தவன் மீது மதன் பொருது அழிந்திடும் மாற்றம் - மத்தகத்தையுடைய யானையை உரித்துப் போர்த்த சிவபெருமான் மீதாக மதனன் போரிட்டு சென்று அழிந்ததான செய்தியை, வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் - அறிவினை யுடைய தாமரை மலராளான திருமகள் தன் காது பொருந்தக் கேட்டாள்; கேட்டதும், விழுந்து நொந்து அயர்ந்து ஓங்கிக் கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள் - மயங்கி விழுந்தாள் மனம் நொந்து தளர்வுற்றாள்; அழுதாள், ஓங்கித் தன் கைத்தல மாகிய மலரினாலே தன் மார்புறப் புடைத்துக் கொள்ளலையும் செய்தாள் அப்போது எழுந்தது கலவையின் செந்தூள் - அவள் மார்பிற் பூசியிருந்த சிந்துரக் கலவைச் சாந்தின் செந்தூளானது அப்போது சிதறி மேலே எழுவதாயிற்று

‘வித்தகக் கமலை' என்றது அவள் பேரறிவு உடையவளா யிருந்தும், புத்திர சோகத்தின் காரணமாகப் பாசப் பற்றினாலே அறியாமை வயப்பட்டு, அப்படி மார்பிலே அறைந்து கொண்டு புலம்பினாள் என்பதற்காம். மும்மதங்கொண்ட யானையைக் கொன்று உரித்த சிவனை ஒரு மதன் சென்று பொருதினான் என்று கூறும் நயத்தை உணர்க; அதனால் அழிவை எதிர்நோக்கியே அவன் சென்றான் என்பதும் புலப்பட வைத்தனர்.

 மத்தால் அடித்தது

'யசோதைப் பிராட்டி கண்ணனை மத்தினாலே அடித்தாள் அல்லவா! அதற்கு இரங்குவது போன்று பொருள் அமைய ஒரு வெண்பாப் பாடுக என்று சொன்னார் ஒருவர்.

கண்ணனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அப்படிப்பட்ட கண்ணன் அழுமாறு யசோதைப் பிராட்டி அடித்தனளே, அது எவ்வளவு அறியாமை உடைய செயல் என்னும் பொருளமைய, உடனே வெண்பாவைச் சொன்னார் காளமேகம் கேட்டவர் வாயடைத்துப் போய் விட்டனர்.

வண்ணங் கரியனென்றும் வாய்வேத நாறியென்றும்

கண்ணன் இவனென்றும் கருதாமல் - மண்ணை 

அடிப்பது மத்தாலே அளந்தானை யாய்ச்சி 

அடிப்பது மத்தாலே யழ.                                                                     (32)

மண்ணை அடி பதுமத்தாலே அளந்தானை - வாமனனாகி வந்து உலகனைத்தையும் தன் திருவடித் தாமரையினாலே அளந்தவனாகிய பெருமானை, வண்ணன் கரியனென்றும் - நிறத்தினாற் கரியவனாகிய திருமாலே என்றும், வாய் வேத நாறி என்றும் - திரு வாயிடத்தே வேதமணம் கமழும் சிறப்புடையவனே என்றும், கண்ணன் இவன் என்றும் - பெருமையுடைய திருமால் இவனே என்றும், கருதாமல் - கருதிப் பார்த்து அவனைப் போற்றி தான் உய்வதற்கான வழிவகையினை நாடாமல் , ஆய்ச்சி - இடைச்சியான யசோதைப் பிராட்டியானவள், அடிப்பது மத்தாலே அழ - அவன் அழுமாறு மத்தினாலேயோ அடிப்பது? இஃது இரங்குதற்கு உரிய செயல் அல்லவோ என்பது கருத்து.

மூன்றாவது அடியின் அடிப்பதுமத்தாலே' என்பதனை அடிப் பதுமத்தாலே' எனப் பகுத்துத் திருவடித் தாமரையினாலே எனப் பொருள் உரைத்துக் கொள்ளுதல் வேண்டும் வண்ணம் - நிறம் நாறி - மணப்பவன் கண்ணன் - அனைவருக்கும் கண்ணாக அமைந்த பிரான்.

 

என்னை இடுக்கடி!

‘என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டி, ஏகடி அம்பலத்தே' என்றமைத்து ஒரு செய்யுள் சொல்லுக என்றனர் ஒருவர். அவருக்குச் சொன்னது இது.

தடக்கடலிற் பள்ளி கொள்வோம் இதனைநற் சங்கரனார்

அடற்புலிக் குட்டிக்கு அளித்தனராம் - அதுகேட்டு நெஞ்சில்

நடுக்கம் வந்துற்றது கைகாலெழா நளினத்தி என்னை 

இடுக்கடி பாயைச் சுருட்டடி ஏகடி அம்பலத்தே.                                  (33)

நளிளத்தி - தாமரைமலரினள் ஆகிய என் நாயகியே! தடக் கடலில் பள்ளி கொள்வோம் - பரந்த பாற்கடலாகிய இதனிடத்தே பள்ளிக்கொண்டிருப்போம் நாம்; இதனைச் சங்கரனார் அடற் புலிக்குட்டிக்கு அளித்தனராம் - இந்தப் பாற்கடலைச் சங்கரனார் வலியுள்ள புலிக்குட்டியான உபமத்யு முனிவருக்கு அளித்து விட்டனராம். அதுகேட்டு நெஞ்சில் நடுக்கம் வந்துற்றது, கை கால் எழா - அதனைக் கேட்டதும் என் நெஞ்சிலே நடுக்கம் வந்தடைந்தது, கைகால்களும் எழாவாயின (ஆதலால் ) என்னை இடுக்கடி பாயைச் சுருட்டி - என்னை நின் கக்கத்தில் இடுக்கிக் கொள்ளடி. நம் பைந்நாகப் பாம்பையும் சுருட்டிக் கொள்ளடி ; ஏகடி அம்பலத்தே - அம்பலத்திற் செல்லடி (சென்று நின் அண்ணனிடத்தே நம் நிலையை எடுத்துக்கூறி அதனை நீக்கும் வகையினை வேண்டுக எனவும், நின் தாய் வீட்டிற்கே இனிப் போகலாம் எனவும் சொன்னதாகக் கொள்க)

மார்பிலே கொம்பு 

பன்றிக்கு மார்பிலே கொம்பு' என்று ஒரு செய்யுள் கூறுக' என்றார் ஒருவர்.

ஸ்ரீ முஷ்ணம் என்ற திருநகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் பூவராக சுவாமி என்று பெயர். அவர் மார்பிடத்தே பூங்கொம்பு போல்வளாகிய திருமகளைக் கொண்டிருப்பவர் இந்தக் கற்பிதத்தை வெண்பாவாகச் சொல்லி அவரைத் தலைகுனியச் செய்தார் கவிஞர்.

தெருமுட்டப் பாளை சிதற வளர்பூகத் 

தருமுட்டச் செவ்வாளை தாவும் - திருமுட்டத் 

தூரிலே கண்டேன் ஒரு புதுமை 

பன்றிக்கு மாரிலே கொம்பான வாறு.                                          (34)

தெருமுட்டப்பாளை சிதற - தெருக்கள் நிறையும்படி பாளைகள் சிதறிவிழுமாறு, வனர் பூகத்தரு முட்டச் செவ்வாளை தாவும் - வளர்ந்துள்ள கமுகமரங்கள் மீதெல்லாம் செவ்வாளை மீன்கள் பாய்ந்து விழுகின்ற நீர்வளத்தினைக் கொண்ட திருமுட்டத்து ஊரிலே ஒரு புதுமை கண்டேன் - ஸ்ரீ முஷ்ணம் என்னும் ஊரிலே ஓர் அதிசயத்தினை நான் பார்த்தேன்; (அது) பன்றிக்கு மார்பிலே கொம்பு ஆன ஆறு - அது, பன்றிக்கு மார்பிலே கொம்பு உண்டாகி இருக்கின்ற நன்மையே யாம்.

பன்றி - பூவராக மூர்த்தி. அவர் மார்பில் கொம்பு உண்டாகி யிருந்த தன்மை - அவர் மார்பிடத்தே திருமகள் வீற்றிருக்கும் தன்மை; திருமகளைப் பூங்கொம்பு என்றனர்.

பொன்னாவரை இலை காய் பூர் 

'இந்தப்படி முன் ஒருவர் கேட்க, அதற்கு உடுத்தவும் எனத் தொடங்குமோர் வெண்பாவைக் கவிராயரும் சொன்னார் மீண்டும் அதே தொடரைக் கொடுத்து வேறு ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுக' என்றார் சாமிநாதர் என்னும் ஒருவர் அப்படியே கவிஞர் பாடியது இது.

தோய்ந்தான் மேய்த் தான் குடையாய்த் 

தூக்கினான் மேன்மேலாச் 

சாய்ந்தா னெறிந்தான் பின் 

சாப்பிட்டான் - ஆய்ந்து சொலும் 

மன்னா வரத்தில் வரு 

மால்சாமி நாதாகேள் 

பொன்னா வரையிலைகாய் பூ.                                                       (35)

ஆய்ந்து சொலும் மன்னா - எதனையும் ஆராய்ந்த பின்னரே அதனைப் பற்றிப் பேசும் இயல்புடைய மன்னவனே! அதனைப் பற்றிப் பேசும் இயல்புடைய மன்னவனே! வரத்தில் வருசாமிநாதா கேள் - வருகிற போக்கிலே வந்து இந்தச் சபையில் அமர்ந்துவிட்ட சாமிநாதனே! கேட்பீராக:

மால் - திருமாலானவன், பொன் தோய்ந்தான் திருமகளோடு கலந்து இன்புற்றான், ஆமேய்ந்தான் - பசு மந்தைகளை மேய்த்தான்; தான் வரை குடையாத் தூக்கினான் - தான் கோவர்த்தனம் என்னும் மலையினையே குடையாகத் தூக்கிப் பிடித்தான், இலை மேன் மேல் ஆச் சாய்ந்தான் - ஆலிலையின் மேலாகத் தன் உடல் கொண்டு படுத்தான்; காய் எறிந்தான் - விளங்காயை எறிந்தான்; பின் பூ சாப்பிட்டான் - பின்னர் நிலவுலகையும் விழுங்கினான்' என்று அறிவீராக.

மும்மூர்த்திகள் 

'மும்மூர்த்திகளாகிய சிவன், விட்டுணு, பிரமன் ஆகியவர்களின் பெயர்கள் அமைந்திருக்க வேண்டும். அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்தும் ஆயுதம், பூணும் அணிகள் ஏறும் ஊர்திகள் வசிக்கும் இடங்கள் இவை எல்லாம் வரவேண்டும். ஒரு வெண்பாவை இத்தகைய முறையிலே உம்மாற் பாட முடியுமோ?' என்றனர் புலவர் ஒருவர்.

சிறுவ னளைபயறு செந்நெற் கடுகுபூ

மறிதிகிரி தண்டு மணி நூல் - பொறியவரம் 

வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக் 

கற்றாழம் பூவே கறி.                                                                            (36)

என்று காளமேகம் அதற்கு இசையப் பாடினார். புலவர் அயர்ந்து போனார்.

வேதன் அரன் மாலுக்கு - பிரமன் சிவன் திருமால் ஆகிய மும்மூர்த்திகளுக்கு கறி பயறு சிறுவன் அளை - பயறும் பிள்ளையும் வெண்ணெயுமே கறிகளாம்; செந்நெல் கடுகு - செந்நெல் விஷம் பூமி மூன்றுமே உணவுகளாம், தண்டு மறி திகிரி - தண்டம் மான்மறி சக்கரம் இவையே ஆயுதங்களாம்; நூல் பொறி யரவம் மணி - முப்புரி நூல் புள்ளிகளையுடைய பாம்பு சௌத்துவமணி இவையே அணிகளாம்; வெற்றேறுபுள் அன்னம் - அன்னம், வெள்ளை ஆன் ஏறு, கருடப்புள் ஆகியவையே வாகனங்களாம் , கல் தாழம் பூ - தாமரை மலரும், கைலைமலையும் பாற்கடலும் ஆகிய மூன்றுமே வாழும் இடங்களாம்.

இவ்வாறு சொற்களைக் கூட்டிப் பொருள் உரைக்கவும்.

எழுத்தாணி சூரிக்கத்தி 

'எழுத்தாணி என்று எடுத்துச் சூரிக்கத்தி என்று முடித்து ஒரு செய்யுளைச் சொல்லுக' என்றார் ஒருவர். மிகவும் நயமுடனே பாடி அவரை மெய்மறக்கச் செய்தார் கவிஞர் .

எழுத்தா ணிதுபெண் ணிதனைமுனி காதில் 

வழுத்தா ரணக்குகளை வாதுக் - கழைத்ததுவும்

 மாரன் கை வின்மான் முன் காத்ததுவும் நன்றாகும் 

தீரமுள்ள சூரிக்கத் தி.                                                                          (37)

எழுத்து ஆண் இது பெண் இது - எழுத்துக்குள்ளே ஆண் எழுத்து இதுவென்றும் பெண் எழுத்து இதுவென்றும், அனை முனி காதில் வழுத்து ஆரணக் குகனை - தமிழுக்கு அன்னை போன்றோனான அகத்திய முனிவனின் காதிலே உபதேசத்தருளிய வேதநாயகனான முருகப் பெருமானை, வாதுக்கு அழைத்ததுவும் போரிடற்கு அழைத்ததுவும், மாரன் கைவில் - மன்மதனின் கரத்திலே வில்லாக விளங்குவதும், மால் முன் காத்ததுவும் - திருமால் முன்னாளிலே தோன்றிக் காத்தருளியதும், நன்றாகும் தீரமுள்ள சூர் இக்கு அத்தி - ஆற்றலுள்ள சூரபதுமன், கரும்பு, கஜேந்திர ஆழ்வான் ஆகிய யானை என் நன்முறையிலே பொருந்துவனவாம்.

சூரிக்கத்தி - சூர் இக்கு அத்தி எனப் பிரிக்கப்பட்டுச் சூரன், கரும்பு, யானை எனப் பொருள் பயத்தலாயிற்று.

பச்சைவடம் பாகு சேலை சோமன் 

‘பச்சைவடம் பாகு, சேலை, சோமன் என்னும் சொற்கள் அமைய ஒரு வெண்பாவைச் சொல்லுக' என்றனர் மற்றொரு புலவர்.

மாயன் துயின்றதுவும் மாமலராள் சொல்லதுவும் 

ஏய குருந்திற் கொண் டேறியதும் - தூயை 

இடப்பாகன் சென்னியின் மேல் ஏறியதும் பச்சை

வடப்பாகு சேலைசோ மன்.                                                              (38) 

என்று காளமேகம் பாடினார். அதன் பொருள் :

மாயன் துயின்றதுவும் - மாயையால் பற்றப்படாதவனாகிய திருமால் மகா பிரளய காலத்திலே கண் வளர்ந்ததுவும், மாமல் ராள் சொல்லதுவும் - சிறந்த தாமரை மலரிலே இருப்பவளான திருமகளின் சொல்லாகிய அதுவும் கொண்டு, ஏய குருந்தில் ஏறியதும் - கண்ணன் கோபியரிடத்தில் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தின் மேல் ஏறிக்கொண்ட அதுவும், தூயை இடப்பாகன் சென்னியின் மேல் ஏறியதும் - பரிசுத்த சக்தியாகிய உமையை இடப்பாகத்தே கொண்டிருப்பவனான சிவபெருமானின் திருமுடியின் மேலாக ஏறிக் கொண்டிருப்பதுவும், பச்சை வடம் பாகு சேலை சோமன் - முறையே பச்சை நிறமுள்ள ஆலிலையும், வெல்லப்பாகும். சேலையும், சந்திரனும் ஆகும்.

தூயை சக்தி; உமையம்மை வடம் - ஆலிலை, பாகு வெல்லப்பாகு.

 ராமா ராமா கோவிந்தா 

'ஒரு விகடன் அழகான ஒரு பெண்ணைப் பார்த்தான்; வியப்புடன் நிற்கின்றான். "ராமா ராமா! கோவிந்தா! வேங்கடவா! நாராயணா!" என்று இடையிடையே கூறிய வண்ணம் அவள் அழகை வியந்தும் கூறுகின்றான். அவன் கூற்றாக, மேற்கண்ட குறிப்புப் பொருந்த ஒரு வெண்பாச் சொல்லுக என்றார் ஒரு புலவர்.

இந்தோ திலகநுதல் ராமரா மாவனசக் 

கொந்தோ களபமுலை கோவிந்தா - சந்தமுறும் 

வேலோ இணைவிழிகள் வேங்கடவா நல்லவயி 

றாலோகா ணாரா யணா.                                                                   (39)

ராமராமா! - (இந்தப் பெண்ணுக்கு திலக நுதல் இந்தோ - திலகம் விளங்கும் நெற்றிதான் பிறைச்சந்திரனோ? கோவிந்தா! இந்தப் பெண்ணுக்கு களப் முலை வனசக் கொந்தோ - கலவைச் சாந்தம் அணிந்த தனங்கள் தாம் தாமரை முகைகளோ? வேங்கடவா! (இந்தப் பெண்ணுக்கு இணை விழிகள் சந்தம் உறும் வேலோ - இரு விழிகளும் அழகு மிகுந்த வேல்கள் தாமோ? நாராயணா! (இந்தப் பெண்ணுக்கு நல்ல வயிறு ஆலோ - நல்ல வயிறு ஆலிவலதானோ?

காண், அசை, இந்து - நிலவு; நெற்றிக்கு உவமை கூறப் பெற்றதனாலே பிறை நிலவு' என்று பொருள் உரைக்கப் பெற்றது.

 செருப்பு - விளக்குமாறு 

ஒரு புலவருக்குக் கவிஞரை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம். "செருப்பு என்று தொடங்கி, விளக்குமாறு என்று முடித்து ஒரு வெண்பாவைப் பாடமுடியுமா?" என்றார்.

அவருடைய கருத்தின் தன்மையைப் புரிந்து கொண்டார் கவிஞர். அந்தச் சொற்களையே அமைத்துப் பாடினும் அதனாற் பொருட்சுவை மிக்கதாகத் தம் செய்யுளை அமைத்து அவரைத் திகைப்படையச் செய்கிறார்.

முருகப் பெருமானின் மீது காதல் கொண்ட ஒரு நங்கையானவள், பொய்கையிடத்துத் தாமரையிலே வந்து படிந்திருக்கும் வண்டிடத்தே, முருகனிடம் செல்லுவதற்கான வழியினை வினவி அறிவது போல அமைந்துள்ளது வெண்பா

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன் 

பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மறுப்புக்குத் 

தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும் 

வண்டே விளக்கு மாறே.                                                                    (40)

 

செருப்புக்குச் சென்று வீரர்களை உழைக்கும் வேலன் - போர்க்களத்திடையே புகுந்து சென்று எதிர்த்த பகைவீரர்களைச் சிதறடிக்கின்றவனாகிய வேலனை, பொருப்புக்கு நாயகனை - குறிஞ்சி நிலத்துக்கு உரிய தலைவனை, புல்லயான் தழுவும் பொருட்டாக, தண் தேன் பொழிந்த திருத்தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே - குளிர்ந்த தேனைப் பொழிந்த அழகிய தாமரை மலரின் மேலே தங்கியிருக்கின்ற வண்டோ விளக்கும் ஆறே - உரியதோர் வழியினை எனக்கு விளக்கிக் கூறுவாயாக!

ஆறு - என்பதற்கு அவனை அடையும் வழி எனவும் அவனிடத்தே செல்லும் வழி எனவும் பொருள் உரைக்கலாம்.

செங்கழுநீர்க் கிழங்கு 

செங்கழுநீர் என்பது நீர்ப்பூ வகைகளுள் ஒன்று. கச்சிக் காவலன் என்றொருவன் அந்தச் சபையிலே வந்திருந்தான். "செங்கழுநீர்க்கிழங்கு என்று அமைத்துப்பாடுக" என்றான் அவன். அப்போது காளமேகம் பாடிய செய்யுள் இது.

வாதமணர் ஏறியதும் மாயன் துயின்றதுவும் 

ஆதிதடுத் தாட்கொண்ட அவ்வுருவும் - சீதானார்

தாள் கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா 

கேள்செங் கழுநீர்க் கிழங்கு.                                                                        (41)

 

தண் கச்சிக் காவலா கேள் - குளிர்ச்சி பொருந்திய கச்சி நகரத்துக் காவலனே! நீ குறித்தபடியே சொல்வேன் கேட்பாயாக:

வாது அமணர் ஏறியதும் - திருஞான சம்பந்தப் பெருமா னோடு வாதிட்டுத் தோற்ற அமணர்கள் ஏறியிருந்ததுவும், மாயன் துயின்றதுவும் - மாயனான திருமால் பள்ளிகொண்டிருப்பதும், ஆதி தடுத்து ஆட்கொண்ட அவ்வுருவும் - முதல்வனான சிவபெருமான் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட அந்தத் திருவுருவும், சீதரனார் தாள் கொண்டு அளந்ததுவும் - திருமாலானவர் தன் திருவடியினைக் கொண்டு அந்நாளிலே அளந்து கொண்டதுவும், செங்கழுநீர் கிழங்கு - செங்கழுவும், நீரும், கிழவுருவும், பூமியும் ஆகும்.

செங்கழு' என்றது பழுக்கக் காய்ச்சிய கழுமரம் என்பதனால், அல்லது, செங்குருதி வழியச் சிவப்படைந்து தோன்றிய கழுமரமும் ஆம், நீர்' என்றது பரந்தாமன் துயில் கொண்ட பாற்கடலினை சீதரன் எனத் திருமாலைக் குறித்தது, அவன் திருமகளைத் தன் மார்பிலே தரித்திருப்பவன் ஆதலினால்.

கடுங்காற்றும் கடுநட்பும் 

பிறவாநெறி காட்டியார் என்றொரு தமிழ் அறிஞர். அவரும் காளமேகத்தின் கவித்திறத்தைக் காண எண்ணினார். கடுங்காற்று மழை காட்டும், கடு நட்புப் பகை காட்டும்" என்ற உலக வசனத்தை இறுதியிலே அமைத்து ஒரு வெண்பா சொல்வீராக என்றார்.

நீரோ பிறவா நெறிகாட்டி யாரெமக்கு 

நீரோ சமிசை நிலையிட்டர் - நீரோயிவ் 

விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்

டுங்கடுநட் புப்பகை காட்டும்.                                                           (42)

 

பிறவா நெறி காட்டியார் நீரோ - பிறவாத தன்மைக்கு உரிய வழியினைக் காட்டிய ஞானவான் என்பவர் நீர் தாமோ? எமக்கு நீரோ சமிசை நிலையிட்டீர் - எனக்கு இப்படிப்பட்ட சமிசையை ஏற்படுத்தியவரும் நீர்தாமோ? இவ் விங்களம் ஏன் செய்தீர்? விடும் - இத்தகைய வேறுபாட்டை எதற்காகச் செய்தீர்? இனியேனும் விட்டுவிடுவீராக, கடுங்காற்று மழை காட்டும் - வேகமாக வீசும் காற்று மழையினைக் கொணரும், கடுநட்புப்பகை காட்டும் - விரைந்த நட்பு (ஆராயாது விரைந்து கொள்ளும் நட்பு) பகையினைக் கொண்டு வந்துவிடும்.

பிறவா நெறி காட்டியார் என்ற பெயரினைக் கொண்டு அவர் அதற்கேற்ப அகந்தை அற்றவராக விளங்க வேண்டிய தாயிருக்க, சமிசை கொடுத்து அகந்தை கொண்டாராதலினால், இப்படிப் பாடி அவரைத் தலைகவிழச் செய்தனர் கவிஞர்.

 குரங்கும் இடமும் 

'குரங்கு என்று தொடங்கி இடம் என்று முடியுமாறு ஒரு செய்யுள் செய்க' என்றார் ஒருவர். அவருக்கு அதே குறும்புடன் பாடல் சொல்லுகிறார் காளமேகம்.

குரங்கனலில் வீழ்ந்து வெறிகொண்டு தோள்கொட்ட 

கரஞ்செறியப் பாம்பலவன் கவ்வ - விரைந்துபோய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.                                                       (43)

 

ஒரு குரங்கானது நெருப்பிலே வீழ்ந்துவிட்டது. அதனால் வெறிகொண்டதாயிற்று. அப்போது ஒரு தேள் அதனைக் கொட்டிற்று. பாம்பு ஒன்று அதன் கையிலே சுற்றிக்கொண்டது. நண்டு வேறு அதனைக் கவ்வியது. அதன் நிலையைக்கண்டு பேயொன்றும் விரைந்து சென்று அதனைப் பற்றிக் கொண்டது. அதன்பின், கள்ளினையும் அது குடித்தது. இத்தனையும் போதா வென்று, அந்தக் குரங்கு பச்சைமிளகையும் கடிக்குமானால், அதன் சேட்டைகளுக்கு இடமாவன எத்தனை? அதனை நீயே நினைந்து காண்பாயாக!

'நீயே பார்' என்றது, அந்தப் புலவரைக் குறும்பாகச் சொன்னதாம். 'நீயே! செய்து பார்' எனச் சொன்னதும் ஆம். இதன் உட்கருத்து நும் குரங்குச் சேட்டைகட்கு யாம் அஞ்சோம்' என்பதாம்.

புங்கங் கொம் பங்கிங் கொன்பது 

'புங்கங் கொம்பு அங்கு இங்கு ஒன்பது என வருமாறு வெண்பாவில் அமைத்துப் பாடுவீரர்க' என்றார் ஒருவர். அப்படியே சாதுரியமாகப் பாடியது இது.

எங்கண் மடத்துக் கெரிதுரும்பு வெட்டுதற்குப்

 புங்கங்கொம் பங்கிங் கொன் பது புளி - யங்கொம்பங்

 கிங்கொன்ப துவெட்டி நறுக்கிய வெள்வெலங்

 கொம்பங் கிங்கொன் பது.                                                                (44) 

எங்கள் மடத்துக்கு எரி துரும்பு - எங்கள் மடத்திற்காகத் தறித்துக்கொண்ட எரிக்கும் கட்டைகள் (விறகு), அங்கு இங்கு - அங்கும் இங்குமாகக் கொணரப்பட்டவை, புங்கங்கொம்பு ஒன்பது - புங்கமரத்துக்கிளைகள் ஒன்பதும் அங்கு இங்கு புளியங்கொம்பு ஒன்பது - அங்குமிங்குமாகத் தறிக்கப்பட்ட புளியங்கிளைகள் ஒன்பதும், அங்கு இங்கு வெட்டி நறுக்கிய வெள்வேலம் கொம்பு ஒன்பது - அங்குமிங்குமாக வெட்டி நறுக்கி கொணர்ந்த வெள்வேல மரத்தின் கொம்புகள் ஒன்பதும் ஆகும்.

அப்பா யார்க்கும் இனிது! 

'அப்பா என்று தொடங்கி, யார்க்கும் இனிது என்று முடித்து ஒரு வெண்பாச் சொல்லுக' என்றார் ஒருவர். கவிஞரும் அவ்வாறே சொன்னது இது

அப்பா குமரகோட் டக்கீரை செவ்விலிமேட்

டுப்பாகற் காய்பருத் திக்குளநீர் - செப்புவா 

சாற்காற்றுங் கம்பத் தடியிற் றவங்கருமா

றிப்பாய்ச்சல் யார்க்கும் இனிது.                                                     (45) 

 

அப்பா - அப்பனே! குமர கோட்டக் கீரை - குமர கோட்டத்தின் அருகாமையிற் பயிரிடப் பெறுகின்ற கீரையும், செவ்விலி மேட்டுப் பாகற்காய் - செவ்விலி மேடு எனுமிடத்தில் பயிரிடப் பெறும் பாகற்காயும், பருத்திக் குளநீர் - திருப்பருத்திக் குன்றத்தேயுள்ள தண்ணீரும், செப்புவாசற்காற்றும் - காஞ்சீபுரங் கோவிலின் தெற்குக் கோபுர வாசலிலே வருகின்ற காற்றும், கம்பத் தடியில் தவம் - திருவேகம்பர் வீற்றிருக்கும் மாமரத்தடியிலே தவம் செய்தலும், கருமாறிப் பாய்ச்சல் - கருமாறி என்பதன் நீரைப் பாய்ச்சலும், யார்க்கும் இனிது - எல்லோருக்கும் இனிதாயிருப்பவை ஆம்.

கரியும் உமியும் 

'கரி என்று எடுத்து உமி' என்று முடிக்கவும், என்று முன்னரே ஒருவர் வினவக் கவிஞரும், 'கரியதனை' எனத் தொடங்கும் வெண்பாவைச் சொன்னார். இப்போது அந்த அலையிலிருந்த பெண்பாற் புலவர் ஒருவர் அதனையே மீண்டும் சமிக்ஞையாகக் கொடுக்கவே, கவிஞர், அவரை ஏளனஞ் செய்பவராக இப்படிப் பாடுகின்றார்.

கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள் 

பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள் - உருக்கமுள்ள 

அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள் 

உப்புக்காண் சீச்சீ யுமி.                                                                        (46) 

அத்தை மகள் - என் அத்தை பெற்ற மகளானவள்; கரிக்காய் பொரித்தாள் - அத்திக் காயைப் பொரித்து வைத்தாள்; கன்னிக் காயைத் தீய்த்தாள் - வாழைக்காயை வதக்கி வைத்தாள், பரிக் காயைப் பச்சடியாப் பண்ணாள் - மாங்காயைப் பச்சடியாகச் செய்து வைத்தாள், உருக்கமுள்ள அப்பைக்காயை நெய் துவட்டல் ஆக்கினாள் - அனைவருக்கும் விருப்பமுள்ள கத்தரிக்காயை நெய் துவட்டலாகச் செய்து வைத்தாள்; (ஆனால் எல்லாவற்றிலும்) உப்புக்காண் சீசீயுமி - உப்பு அதிகம்; அதனால் அவை எல்லாம் சீசீ என்று துப்பி விடுவதற்குத் தக்கனவே (அன்றித்தின்பதற்கு ஆகா)

அத்தை மகள் ஆசையுடன்

செய்தவை என்று உண்டால் எல்லாவற்றிலும் உப்பு அதிகம்! சீச்சீ' என்று சொல்லித் துப்பத்தான் வேண்டும். இப்படிப் பொருள் அமைகின்றது. இதனைக் கேட்டதும். அந்த அம்மையார் வெட்கித் தலை குனிந்தார்.

 மன் - மலுக்கு 

'மன்னென்று எடுத்து மலுக்கென்று முடியும்படியான வெண்பாவொன்று அமைக்க' என்றார் ஒருவர் ; அவர் சமிக்ஞையை ஏற்றுக் கவிஞர் பாடியது இது.

மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப்

பன்னுந் தலைச்சவரம் பண்ணுவதேன் - மின்னின்

இளைத்தவிடை மாத ரிவன் குடுமி பற்றி 

வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு.                                                            (47) 

 

இந்தக் கேள்வியைக் கேட்டவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர், சம்பந்தாண்டான் என்ற பெயரினர். தலையை மழுங்கச் சவரம் செய்து கொண்டிருந்தவர். அதனை ஏளனம் செய்து பாடுகிறார் கவிஞர்.

மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப் பன்னும் தலைச்சவரம் பண்ணுவதேன் - நிலைபெற்ற திருவண்ணா மலையினரான இந்தச் சம்பந்தாண்டான் என்பவருக்குச் சிறப்பாகத் தலைச்சவரம் பண்ணுவது எதற்காகத் தெரியுமா? மின்னின் இளைத்த இடை மாதர் - மின்னலினும் ஒடுங்கிய இடையுடைய வரான பெண்கள், இவன் குடுமிபற்றி வளைத்து இழுத்துக் குட்டாமலுக்கு - இவனுடைய குடுமியைப் பற்றி இவன் தலையை வளைத்து இழுத்துக் குட்டாமல் இருப்பதற்காகவே என்று அறிவீராக.

கேள்வி கேட்ட சம்பந்தாண்டான் அதன்பின் தலை நிமிரவே இல்லை. பெண்களிடம் அடிவாங்கும் பித்தன் என்று கவிஞர் பாடியது அவர் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.