Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

4. சிலேடையாகப் பாடியவை

(மேற்போக்கான சொல் அமைப்பிலே ஒன்றாகவும், ஆனால் அமைதியினாலே இரண்டு மூன்றாகப் பொருள் விளங்கு வதாகவுமுள்ள சுவையான செய்யுட்கள் இந்தப் பகுதியில் தரப்படுகின்றன. செய்யுளில் வரும் சொற்களை நன்றாக ஆராய்ந்து பொருள் நயத்தை உணர்ந்து இன்புறுதல் வேண்டும். இவற்றையும் தண்டிகைப் புலவர் கொடுத்த சமிக்ஞைப்படியே காளமேகம் பாடினார் என்பது வரலாறு )

ஆமணக்கும் யானைக்கும்     

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண்டேந்திவரும்

கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் -- எத்திசைக்கும்

தேமணக்குஞ் சோலைத் திருமலை ராயன்வரையில் 

ஆமணக்கு மால்யானை யாம்.                                                       (48) 

 

எத்திசைக்கும் தேமணக்கும் சோலைத் திருமலைராயன் வரையில் - எல்லாத் திசைகளிலும் இனிய மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் திருமலைராயனுடைய மலைச்சாரலில், ஆமணக்கு மால் யானை யாம் - ஆமணக்கும் பெரிய மதயானை ஆகும். (அது எவ்வாறெனில்,)

ஆமணக்கு : முத்திருக்கும் கொம்பு அசைக்கும் - வித்துகள் விளங்கும், கிளைகளை அசைத்துக் கொண்டிருக்கும்; மூரித்தண்டு ஏந்தி வரும் - பெரிய தண்டுகள் மேலேந்தியபடி வளர்ந்திருக்கும், நேரே குலைசாய்க்கும் வரிசையாகக் காய்க் குலைகளைத் தொங்கவிட்டவாறு விளங்கும்.

மால் யானை: முத்திருக்கும் கொம்பசைக்கும் - முத்துக்கள் அமைந்திருக்கக்கூடிய தந்தங்களானதன் கொம்புகளை அசைத்துக் கொண்டு நிற்கும் மூரித்தண்டு ஏந்தி வரும் - அந்தக் கொம்புகளில் பருத்த கட்டைகளை ஏந்தியவாறு அது வந்து கொண்டிருக்கும்; கொத்து இருக்கும் - மத்தகத்திலே பாகர்கள் அங்குசத்தாற் கொத்திய வடுக்கள் இருக்கும்; நேரே குலைசாய்க்கும் - நேராக மலையிடத்துள்ள வாழைக்குலையினைச் சாய்த்து உண்ணு தலையும் அது செய்யும்.

வைக்கோலுக்கும் யானைக்கும் 

வாரிக் களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டைபுகும் 

போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

 செக்கோல மேனித் திருமலை ராயன்வரையில் 

வைக்கோலு மால்யானை யாம்.                                                    (49)

 

சீர் உற்ற செக்கோல மேனித் திருமலைராயன் வரையில் சிறப்புப் பொருந்திய செந்நிறமான திருமேனியினையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே; வைக்கோலும் மால் யானை யாம் - வைக்கோலும் மதயானைக்குச் சமமாம், எவ்வாறு எனில்.

வைக்கோல் : வாரிக் களத்து அடிக்கும் - அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டிலே அடிக்கப் படும்; வந்து பின்பு கோட்டை புகும் - அதன் பின்பு கோட்டைக் குள்ளே வந்து சேரும்; போரிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோற் போர்களாகச் சிறப்புற்று அழகாகவும் விளங்கும்.

மதயானை : வாரிக்களத்து அடிக்கும் - பகைவர்களைத் துதிக்கையினாலே வாரிப் போர்க்களத்தே தரையில் அடித்துக் கொல்லும்; பின்பு வந்து கோட்டை புகும் - அதன்பின்பு பகையரசின் கோட்டைகளைத் தகர்த்து உள்ளே செல்லும்; போரிற் சிறந்து பொலிவாகும் - இவ்வாறாகப் போர்த்துறையிலே சிறந்து மேன்மையுடையதாக விளங்கும்.

பாம்புக்கும் வாழைப்பழத்திற்கும் 

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் 

வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்

 தேம்பாயும் சோலைத் திருமலைராயன்வரையில்

 பாம்பாகும் வாழைப் பழம்.                                                              (50) 

 

விஞ்சு மலர்த்தேம் பாயும் சோலைத் திருமலைராயன் வரையில் - மிகுதியான மலர்கள் தேனைப் பொழிந்து கொண் டிருக்கும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச் சாரலிலே, பாம்பாகும் வாழைப் பழம் - வாழைப் பழம் பாம்புக்கு ஒப்புடையதாகும். எங்ஙனமெனில்,

பாம்பு: நஞ்சு இருக்கும் - நஞ்சினைக் கொண்டதாயிருக்கும்; நாதர் முடி மேலிருக்கும் - தலைவராகிய சிவபெருமானின் திருமுடி மீதிலும் ஆபரணமாக இருக்கும்; வெஞ்சினத்திற் பற்பட்டால் மீளாது - அதன் கொடிய சினத்திலே அதனுடைய நச்சுப்பல் எவர் மீதாவது பட்டதானால் அவர் உயிர் போய்விடுவதன்றி ஒரு போதும் மீளாது.

வாழைப்பழம்: நஞ்சிருக்கும் - நன்கு கனிந்ததால் நைந்து இருக்கும்; நாதர் முடி மேல் இருக்கும் - இறைவன் திருமுடி மேலாக அபிடேகம் பொருளான பஞ்சாமிர்தமாகவும் விளங்கும், வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - துணையுணவாகக் கொள்ளுங் காலத்தே பற்களிடையே சென்றானால், வயிற்றுனுட் செல்வதல்லாமல் மீள்வதில்லை; வெஞ்சினம் - தொடுகறி, துணை உணவு.

 பாம்புக்கும் எள்ளுக்கும் 

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்

மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை 

பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் 

உற்றிடுபாம் பெள்ளனவே யோது.                                                             (51) 

பாம்பு: ஆடிக்குடத்து அடையும் - படமெடுத்து ஆடியபின் குடத்திவே சென்று அடைந்திருக்கும்; ஆடும் போதே இரையும் - ஆடுகின்ற போதிலேயே சீத்துப் பூத்தென்று இரைச்சலிடும்; மூடித் திறக்கின் முகம் காட்டும் - குடத்தை மூடித் திறந்தால் தன் தலையை வெளியே உயர்த்திக் காட்டும், ஓடி மண்டை பற்றில் பரபரெனும் - விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டாற் பரபரென்று சுற்றிக் கொள்ளும், பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் - உலகிற் பிளவு பட்ட நாக்கும் அதற்கு உண்டாயிருக்கும்.

எள் : ஆடிக் குடத்து அடையும் - செக்கிலே ஆடி எண்ணெ யாகிக் குடத்திலே அடைந்திருக்கும்; ஆடும்போதே இரையும் - செக்கிலே ஆடும் பொழுதிலேயே இரைச்சல் செய்யும்; மூடித் திறக்கின் முகங்காட்டும் - குடத்து எண்ணெயை மூடிவைத்திருந்து பின் திறந்து பார்த்தால் பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும்; ஓடி மண்டை பற்றில் பரபரெனும் - விரைய மண்டை யிலே தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக் கும், பாரிற் பிண்ணாக்கும் உண்டாம் - உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும். (இதனால்) உற்றிடு பாம்பு எள்எனவே ஓது - அடைந்திடும் பாம்பும் எள்ளும் சமமாகும் என்று சொல்லுக.

பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் 

பெரியவிட மேசேரும் பித்தர் முடி யேறும் 

அரியுண்ணு முப்புமே லாடும் - எரிகுணமாம் 

தேம்பொழியும் சோலைத் திருமலை ராயன்வரையில் 

பாம்பு எலுமிச்சம் பழம்.                                                                     (52) 

 

தேம் பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில் - தேன் பொழிந்து கொண்டிருக்கின்ற சோலைகளையுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிலே, பாம்பும் எலுமிச்சம் பழம் - பாம்பும் எலுமிச்சம் பழத்தினைப் போல்வதாகும். அஃது எங்ஙனமெனில்,

பாம்பு: பெரிய விடமே சேரும் - மிகுதியான விஷத்தை உடையதாயிருக்கும், பித்தர் முடிமேல் இருக்கும் - பித்தனான சிவபெருமானின் திருமுடி மேலும் விளங்கும்; அரி உண்ணும் - காற்றைப் புசிக்கும்; உப்பும் - அதனால் தன் உடலை உப்பிக் கொள்ளும் ; மேல் ஆடும் - மேலாகத் தலை தூக்கி ஆடும்; எரிகுணம் ஆம் - சினமுடைய குணத்தினதும் ஆகும்.

எலுமிச்சம் பழம்: பெரியவிடமே சேரும் - பெரியவர் களிடத்தே கொடுக்கப்பட்டுச் சேர்ந்தும் இருக்கும்; பித்தர் முடிமேல் இருக்கும் - பித்தானோரின் தலைமீது தேய்க்கப் பட்டு அதனைப் போக்கும் மருந்தாகவும் விளங்கும் அரியுண்ணும் உப்பு மேலாடும் - (ஊறுகாயாகச் செய்யும் பொழுது) அரியப்பட்டு உப்பு தூவி வைக்கப் பெறும் எரிகுணம் ஆம் - அதன் சாறுபட்டால்

எரிச்சலைத் தருகிற குணத்தினை உடையதும் ஆகும்.

முகுந்தனுக்கும் முறத்துக்கும் 

வல்லரியா யுற்றிடலால் மாதர்கையிற் பற்றிடலால் 

சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதால் - வல்லோர் 

அகந்தனிலே வாழ்தலால் அகன்றுல களந்த 

முகுந்தனுமே யாகும் முறம்,                                                                        (53)

அன்று உலகு அளந்த முகுந்தனும் முறம் ஆகும் அந்நாளிலே வாமனாகிய உலகளந்த திருமாலும் முறத்திற்கு ஒப்பாவான் எங்ஙனமெனில்,

முகுந்தன்: வல் அரியாய் உற்றிடலான் - வல்லமை கொண்ட நரசிங்கமாகத் தோன்றியதனாலும் ; மாதர்கையிற் பற்றிடலால் - ஆய்ப்பாடியிலே பெண்களின் கையினாலே பிணிக்கப்பட்ட தாலும், சொல் அரிய மாபுடைக்கத் தோன்றுதலால் - சொல்லு வதற்கு அரிதான குவலயாபீடம் என்றும் யானையைக் கொல்லு வதற்கு அவதரித்தமையினாலும், வல்லோர் அகந்தனிலே வாழ்தலால் - வல்லமையுடையோரின் உள்ளங்களிலே வீற்றிருந் தாலும் (காத்தற் கடவுள் ஆயினமையின்)

முறம்: வல்லரியாய் உற்றிடலான் - கொழித்தற்கு ஏற்றதொரு கருவியாய் அமைதலானும், மாதர்கையிற் பற்றிடலால் - பெண்கள் கையிற் பற்றிப் பயன்படுத்தலாலும், சொல்லரிய மால்புடைக்கத் தோன்றுதலால் - சொல்லுதற்கு அரிதான மாவினைப் புடைப் பதற்குப் பயன்படுத்தலாலும், வல்லோர் அகந்தனிலே வாழ்வதால் - பலருடைய வீடுகளிலும் இருத்தலாலும் என்க. (பல்லோர் வல்லோர் என முதல் சிறந்து வந்தது).

சந்திரனுக்கும் மலைக்கும் 

நிலவாய் விளங்குதலா னீன்வான் படிந்து

சிலபோ துலாவுதலாற் சென்று - தலைமேல்

உதித்து வரலா லுயர்மா மலையை 

மதிக்கு நிகராக வழுத்து.                                                                   (54)

மதி: நிலவாய் விளங்குதலான் - நிலவொளி தருவதாக விளங்குவதானாலும் நீள்வான்படிந்து சிலபோது உலாவுதலால் - நெடிய வானிடத்தே பொருந்திச் சில காலத்துச் சஞ்சரிப்பத னாலும், சென்று தலைமேல் உதித்து வரலால் - மறைந்து சென்று மீளவும் உதித்துத் தலைக்கு மேலாக வானிடத்தே வருகின்றத னாலும்,

மலை: நிலவாய் விளங்குதலான் - பூமியினிடத்ததாக விளங்குதலினாலும், நீள்வான் படிந்து சிலபோது உலாவுதலால் - நெடிய வானத்தே அளாவிச் சில மலைப் பூக்கள் விளங்கப் பெற்றிருப்பதாலும், சென்று தலைமேல் உதித்து வரலால் - பூமியில் தொடராகப் பரவித் தலைக்கு மேலாக உயரத்தே எப்பொழுதும் தோன்றி விளங்குவதனாலும்;

உயர் மா மலையை மதிக்கு நிகராக வழுத்து - உயரமான பெரிய மலையினைச் சந்திரனுக்கு ஒப்புடையதாகச் சொல்லுக.

நாய்க்கும் தேங்காய்க்கும் 

ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாகு - சேடியே 

தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில் 

தேங்காயு நாயுநேர் செப்பு.                                                                (55)

சேடியே - தோழியே! தீங்கு ஆயது இல்லாத் திரு மலைராயன் வரையில் - தீமை எனப்படுவது இல்லாதே இருக்கின்ற திருமலைராயனின் எல்லைக்குட்பட்ட நாட்டிலே, தேங்காயும் நாயும் இணை செப்பு - தேங்காயும் நாயும் ஒப்பிட்டு உரைத்துக் கொள்க, எங்ஙனமெனில்;

தேங்காய்: ஓடும் இருக்கும் - தனக்கு ஓர் ஓட்டையும் உடையதாயிருக்கும்; அதன் உள்வாய் வெளுத்திருக்கும். - அந்த ஓட்டின் உட்புறம் வெண்மையான தேங்காயைக் கொண்டிருக்கும்; நாடும் குலை தனக்கு நாணாது - அனைவராலும் விரும்பப்படும் குலையாகத் தொங்குவதற்கும் அது கோணுவதில்லை;

நா - ஓடும் இருக்கும் - (சிலபோது) ஓடித்திரியும் (சில போது) இருந்தவிடத்திலேயே இருக்கவும் செய்யும், அதன் உள்வாய் வெளுத்திருக்கும் - அதனுடைய வாயின் உட்புறம் வெண்மையா யிருக்கும்; நாடும் குலை தனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தலிலே ஈடுபடுவதில் அது வெட்கப்படுவதே இல்லை (ஓயாது குரைத்துக் கொண்டேயிருக்கும்)

 மீனுக்கும் பேனுக்கும் 

மன்னீரி லேபிறக்கு மற்றலையி லேமேயும்

பின்னிச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்

தேனுந்து சோலைத் திருமலையரா யன்வரையில்

மீனும்பே னுஞ்சரியா மே.                                                                 (56)

தேன் உந்து சோலைத் திருமலைராயன் வரையில் - தேன் பாய்கின்ற சோலைகளைக் கொண்ட திருமலைராயனின் மலையிடத்தே

மீனானது: மன் நீரிலே பிறக்கும் - நிலைபெற்ற நீரிலே தோன்றும், மற்று அலையிலே மேயும் - அந்த நீர் அலைகளிடத்தே மேய்ந்து கொண்டிருக்கும், பின் நீச்சின் குத்தும் - நீந்தும் பொழுது பின்தொடர்ந்து குத்துகின்ற இயல்பும் உடையதாயிருக்கும்;

பேனானது: மன் ஈரிலே பிறக்கும் - மலையில் நிலைத்த பேன் முட்டையிடத்திலிருந்து தோன்றும், மன் தலையிலே மேயும் - அடர்த்தியான தலைமயிரிலே திரிந்து செல்லும், பின் ஈச்சின் குத்தும் - பின் பெண்களால் எடுத்து ஈச' என்னும் ஒலியுடனே குத்தவும் படும்.

பெருமையால் - இப்படியான பெருமைகளால், மீனும் பேனும் தம்முள் ஒப்படையன என்று சொன்னேன் கேள் - யான் சொன்னேன், இதனைக் கேட்பாயாக.

 பனைமரத்திற்கும் வேசைக்கும் 

கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால் 

எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய் 

ஆசைவாய்க் கள்ளை யருந்துதலா லப்பனையும் 

வேசைசெயன லாமே விரைந்து.                                                   (57)

பனைமரத்தில் :- கட்டித் தழுவுதலால் - ஏறும்பொழுது கட்டித் தழுவிக்கொண்டே ஏறுதலாலும், கால்சேர ஏறுதலால் - இரு கால்களையும் சேரவைத்து ஏறுதலாலும், எட்டிப்பன்னாடை இழுத்தலால் - உச்சியருகிலே சென்றதும் பன்னாடையை எட்டி இழுத்துக் கட்டுவதனாலும், முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் - நெருங்கிச்சென்று ஆசையூட்டக்கூடிய கள்ளினை அருந்துதலாலும்;

வேசை : கட்டித் தழுவுதலால் - தன்னிடத்து வருவாராற் கட்டி அணைக்கப்படுவதானாலும், கால் சேர ஏறுதலால் - கால் பொருந்த அவர்களால் அனுபவிக்கப் படுதலாலும், எட்டிப் பன்னாடை இழுத்தலால் - அவர்களாலே நெருங்கிச் சிறந்த அவள் ஆடை இழுக்கப்படுதலாலும், முட்டப்போய் ஆசை வாய்க் கள்ளை அருந்துதலால் - நெருங்கிச் சென்று அவளுடைய வாயிடத்து ஊறலாகிய மது ஆசையுடன் அருந்தப்படுகின்றத னாலும்,

அப் பனையும் வேசை எனலாமே விரைந்து - நாமும் விரைந்து அந்தப் பனையையும் வேசை போன்றது என்று சொல்லலாம். அப்பனையும் வேசை எனலாம்' என்ற சொற்கள் தரும் குறும்பான பொருள் நயத்தையும் உய்த்து அறிக.

 தென்னை மரத்திற்கும் வேசைக்கும் 

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேற்சுற்றும் 

கோர விளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல் 

ஏறி யிறங்கவே இன்பமாந் தென்னைமரம் 

கூறுங் கணிகையென்றே கொள்.                                                  (58)

தென்னை மரம் - தென்னை மரமானது, கூறும் கணிகை என்றே கொள் - சொல்லப்படும் கணிகைக்குச் சமமானதாகும் என்று சொல்லப்படும் கணிகைக்குச் சமமான தாகும் என்று சொல்வாயாக, எங்ஙனமெனில்,

தென்னை மரமானது: பாரத் தலைவிரிக்கும் - நாற்புறமும் பரவியிருக்கும்படியாகத் தன் உச்சியின் ஓலைகளை விரித்துக் கொண்டு நிற்கும், பன்னாடை மேற்சுற்றும் - அதன் மேலாக செருவல்கள் சூழ்ந்து கொண்டிருக்க விளங்கும்; சோர இளநீர் சுமந்திருக்கும் - ஓலைகளுக்கு இடையே மறைவாக இளநீர்க் காய்களைச் சுமந்து கொண்டிருக்கும்; நேரே மேல் ஏறி இறங்கவே இன்பமாம் - முறையாக மேலே ஏறி அவ் இளநீரை அருந்தி இறங்கி வந்தால் அது மிகவும் இன்பம் உடையதாயிருக்கும்;

கணிகையானவள் : பாரத் தலைவிரிக்கும் - நாற்புறமும் சோர்ந்து பரவுமாறு கூந்தலைத் தொங்கவிட்டிருப்பாள்; பன்னாடை மேற்சுற்றும் - சிறப்பான ஆடைகளைத் தன் மேற்சுற்றிப் புனைந்திருப்பாள்; சோர இளநீர் சுமந்திருக்கும் - இடை தளரும்படியாக இளநீரைப் போலப் பூரிப்புடன் விளங்கும் கொங்கைகளைச் சுமந்தவளாக இருப்பாள்; நேரே மேல் ஏறி இறங்கவே இன்பமாம் - நேரிதாக அவளை அணைத்துக் கூடுவதனால் இன்பமும் உண்டாகும்.

வெற்றிலைக்கும் வேசைக்கும் 

கொள்ளுகையா னீரிற் குறிக்கையான் மேலேறிக் 

கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் - தெள்ளுபுகழ்ச்

செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில் 

வெற்றிலையும் வேசையா மே.                                                      (59)

செற்றவரை வென்ற - தன்னோடு பகைத்து வந்தவரை வெற்றி கொண்ட, தெள்ளுபுகழ்த் திருமலைராயன் வரையில் - தெளிவான புகழினையுடைய திருமலைராயனின் மலைச் சாரலிலே,

வெற்றிலையானது: நீர் கொள்ளுகையால் - நீர் மிகுதி யாகப் பாய்ச்சப்பெற்று வளர்வதனாலும், நீரிற் குளிக்கையால் - நீரிலே கழுவப்படுதலாலும், மேல் ஏறிக்கிள்ளுகையால் - மேலாக எடுத்துக் கிள்ளிவிட்டே உண்ணப்படுதலினாலும், கட்டிக் கிடக்கையால் - விற்பனைப் பொருட்டாகக் கட்டி இணைத்து வைக்கப் பெறுவதனாலும்;

வேசையானவள் : கொள்ளுகையால் - தன்பால் பணம் தந்து வருபவர் எவரேனும் அவரை ஏற்றுக் கொள்ளுகையினாலும், நீரிற் குளிக்கையால் - நீரிலே முழுகிக் குளிக்கின்ற தன்மையாலும், மேல் ஏறிக்கிள்ளுதலால் - அணைத்து நகக் குறிகள் பதிக்கப் பெறுதலாலும், கட்டிக் கிடக்கையால் - கட்டித் தழுவி இன்புறக் கிடத்தலினாலும்,

வெற்றிலையும் வேசையாமே - வெற்றிலையும் வேசை போலாவது எனலாம்.

 கண்ணாடிக்கும் அரசனுக்கும் 

யாவருக்கும் ரஞ்சனை செய்தியாவருக்கு மவ்வவராய்

பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் - மேவும்

எதிரியைத்தன் னுள்ளாக்கி யேற்ற ரசத்தால் 

சதிருறலா லாடியா சாம்.                                                                   (60)

கண்ணாடியானது : யாவருக்கும் ரஞ்சனை செய்து அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியும், யாவருக்கும் அவ்வவராய்ப் பாவனையாய் - யாவருக்கும் அவ்வவராகக் காட்டும் தன்மையுடையதாகியும், தீ தகலப் பார்த்ததலால் - தீமை விலக மங்கலப் பொருளாகக் கருதிப் பார்க்கப்படுதலாலும், மேவும்

எதிரியை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி, ஏற்ற ரசத்ததால் சதிருறலால் - தன் பின் புறத்து ஏற்றிருக்கும் ரசத்தினாலே சிறப்பு அடைதலினாலும்,

அரசனானவன்: யாவருக்கும் ரஞ்சனை செய்து - எல்லா மக்களுக்கும் இன்பத்தை விளைவித்தும், யாவருக்கும் அவ்வவர் பாவனையாய் - அனைவருக்கும் அவ்வவரது இயல்பிற்குத் தகுந்தபடியாக விளங்கியும், தீதகலப்பார்த்தலால் - நாட்டிலே தீமைகள் அகன்று போகுமாறு கவனித்தும், மேவும் எதிரியைத் தன்னுளாக்கி - தன்னை அணுகும் எதிரியை வென்று தனக்கு உட்பட்டவனாக்கியும், ஏற்ற ரசத்தால் சதிர் உறலால் - மேற் கொண்ட நவரசப் பொருள்களாலும் சிறப்படையலாலும்,

ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒப்பாகக் கூறுதற்கு உரியவராம்.

கூத்தியர்க்கும் குரங்குக்கும் 

ஓட்டங் கடியதா லுள்ளவரை மேவுதலால் 

சேட்டை யெவரிடத்துஞ் செய்தலால் - நாட்டமுடன் 

காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலாற் றெட்டுதலால் 

கூத்தியர்க்கு நேராம் குரங்கு .                                                        (61) 

கூத்தியர்க்கு: கூத்தியராகி பெண்களுக்கு, ஓட்டம் கடியதால் - உதட்டிற் கடிபடுவதனாலும், உள்ளவரை மேவுதலால் - பொருள் உள்ளவரைத் தழுவுதலினாலும், சேட்டை எவரிடத்தும் செய்த லால் - எல்லோரிடத்தும் குறும்பு செய்து விளையாடலாலும், நாட்டமுடன் காத்திரத்தில் குட்டி உறக்கட்டுதலால் - விருப்ப முடனே தழுவுவோர் உடலிலே தன்னுடல் பொருந்துமாறு கட்டிக் கொள்ளலாலும், தெட்டுதலால் - அப்போதே அவரைக் கவிழ்க்க வஞ்சனைகளைச் செய்வதனாலும் (பொருளைத் தட்டிப் பறிப்பதும் ஆம்);

குரங்கு: குரங்கானது, ஓட்டம் கடியதால் - விரைய ஓடிக் கொண்டே இருக்கும் இயல்புடையது ஆதலாலும், உள்ளவரை மேவுதலால் - தானிருக்கும் மலை மீது ஏறிச் சென்றிருப்பதனாலும், நாட்டமுடன் குட்டி காத்திரத்தில் உறக் கட்டுதலால் - விருப்ப முடன் குட்டியை உடலிற் பொருந்தக் கட்டிச் செல்லுதலாலும், தெட்டுதலால் - பொருள்களைத் தட்டிப் பறித்துச் செல்லுத லாலும், நேராம் - ஒப்பானதாகும்.

குதிரைக்கும் காவிரிக்கும் 

ஒடுஞ் சுழிசுத்த முண்டாகும் துன்னலரைச்

வாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத்

தேடு புகழான் திருமலைராயன்வரையில் 

ஆடுபரி காவிரியா மே.                                                                       (62)

நாடு அறியத் தேடு புகழான் - நாடெங்கும் அறியும்படியாகத் தேடின புகழை உடையவனாகிய, திருமலைராயன் வரையில் - திருமலைராயனின் வரையிடத்திலே,

ஆடு பரி : ஆட்டக் குதிரையானது, ஓடும் - ஓடிச் செல்லும், சுழி சுத்தம் உண்டாகும் - சுத்தமான சுழிகளை உடையதாயிருக்கும், துன்னலரைச் சாடும் - பகைவரை மோதி அழிக்கும், பரிவாய்த் தலைசாய்க்கும் - தன் தலைவனிடத்து அன்புடன் தலைசாய்த்து நிற்கும்;

காவிரி : காவிரியாறானது, ஓடும் - ஓட்டத்தை உடையதா யிருக்கும், சுழிச்சுத்தம் உண்டாகும் - அப்படிச் செல்லும் போது நீர்ச்சுழிகளை உடையதாயிருக்கும், தன்னிடத்தே குளிப்பவர்க்குச் சுத்தத்தையும் தரும், துன்னலரைச் சாடும் - நெருங்கிய மலர்களை அலைத்து எறியும், பரிவாய்த்த அலைசாய்க்கும் - குதிரை வாயின் நுரை போன்ற அலைகளை மடக்கி வீசும்;

அதனால் இரண்டும் தம்முள் நிகரானவையாகும். பரிவாய்த் தலை சாய்க்கும் எனக்கொண்டு கரையைப் பரித்து அந்த இடத்தின் மேல் மண்ணையும் தன்னுட் சாய்க்கும் எனவும் உரைக்கலாம்.

கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும் 

கட்டி யடிக்கையாற் கானமாறிப் பாய்கையால் 

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய் 

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் 

ஏறப் பரியாகு மே.                                                                                 (63)

வண் கீரைப் பாத்தியுடன் - வளமான கீரைப்பாத்தியுடனே, ஏற அப்பரி ஆகும் - ஏறுதற்குரிய அந்தக் குதிரையானது சமமாகும். எங்ஙனமெனில்,

கீரைப்பாத்திக்கு: கட்டி அடிக்கையால் - உழவு கட்டிகளை அடித்துத் தூளாக்குதனாலும், கால்மாறிப் பாய்கையால் - வாய்காலில் மாறிமாறி நீர் பாய்கையினாலும், வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - மண்ணை வெட்டி மறித்துப் பாத்திகளாக்கி வைத்திருக்கின்ற சிறப்பினாலும், முட்டப்போய் மாறித் திரும்புகையால் - நீர் கடைமடையின் இறுதிவரை சென்று மீளவும் மாறிவிடத் திரும்புகையினாலும்,

குதிரைக்கு : கட்டி அடிக்கையால் - வண்டிகளில் கட்டி அடித்து ஓட்டப்பெறுதலினாலும், கால் மாறிப் பாய்கையால் கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லுதலினாலும் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - எதிரிகளைத் தாக்கிக் கொல்லுகின்ற சிறப்பி னாலும், முட்டப்போய் மாறத் திரும்புதலால் - போகவேண்டிய இடம் முழுவதுஞ் சென்று, பின் மீளவும் திரும்பி வருதலினாலும் ஆம்.

கதவுக்கும் ஆட்டுக்கும் 

செய்யுட் கிடைமறிக்கும் சேர்பலகை யிட்டு முட்டும்

 ஐயமற மேற்றா ளடர்க்குமே - துய்யநிலை 

தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில் 

ஆடும் கதவுநிக ராம்.                                                                           (64)

புகழ்சேர் - புகழ் சேர்ந்துள்ள, திருமலைராயன் வரையில் திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே, ஆடும் கதவு நிகராம் -

ஆடும் கதவும் ஒன்றற்கொன்று சமமானதாம்; எங்ஙனமெளில்,

ஆடு: செய்யுள் கிடை மறிக்கும் - வயலில் கிடையா மறிக்கப் படுதலினாலும், சேர் பலகையிட்டு முட்டும் - பொருந்திய பலகைகளைக் கொம்பினாற் குத்தி முட்டுதலினாலும், ஐயம் அற மேல்தாள் அடர்க்கும் - சந்தேகம் இன்றி மிகுதியான ஊக்கத் துடன் போரிடுவதனாலும் ; துய்யநிலை தேடும்; தூய்மையான தங்குமிடத்தைத் தேடி அடைவதனாலும்,

கதவு: செய் உட்கிடை மறிக்கும் - வீட்டின் உள்ளிடத்தைத் தடுத்து மூடியிருத்தலாலும், சேர் பலகை இட்டு முட்டும் பொருத்தமான பலகைகளைக் கொண்டு மூட்டிச் செய்யப் படுதலினாலும், ஐயம் அற மேல் தாள் அடர்க்கும் - திண்ணமாக மூடப்படுவதற்கு மூடப்படுதலன்றித் தன்னிடத்தே தாளிடப்பட்டு இருத்தலினாலும், துய்யநிலைதேடும் - அழகான நிலையினைக் கூடியிருப்பதனாலும் ஆம்.

குதிரைக்கும் ஆட்டுக்கும் 

கொம்பிலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால் 

அம்புவியி னன்னடைய தாதலால் - உம்பர்களும் 

தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில் 

ஆடுங் குதிரையுநே ராம்.                                                                   (65)

உம்பர்களும் தேடும் நற்சோலைத் திருமலைராயன் வரையில் - தேவர்களும் தேடிவந்து மகிழும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே, ஆடும் குதிரையும் நேர் ஆம் - ஆடும் குதிரையும் தம்முள் ஒன்றற் கொன்று சமானமாகும். எங்ஙனமெனில்,

ஆடானது: கொம்பிலேயே தீனி தின்னும் - நனிக்கொம்பி லுள்ள இலைகளையே தனக்குத் தீனியாகத் தின்பது கொண்டு அதன்மேல் வெட்டுதலால் - அப்படித் தின்று கொண்ட பின்பு அதன்மேல் அத் தீனியினை அசைபோடும் இயல்பும் உடையது அம்புவியில் அன்னடையது - அழகான இவ்வுலகிலே ஒன்றைப் பின்பற்றி மற்றொன்றும் நடந்து போகின்றதான அத்தகையவொரு நடையினையும் உடையது;

குதிரையானது:  கொம்பிலையே - கொம்பு இல்லாதது தீனி தின்னும் - தனக்கு வைக்கும் தீனியைத் தின்பது கொண்டதன் மேல் வெட்டுதலால் - வீரர்கள் அதன்மேல் ஏறிக்கொண்டு சென்று மாற்றாரை வெட்டி அழிக்க உதவியாயிருப்பது அம்புவியில் நல் நடையது - அழகிய உலகிலே நல்ல கதியை உடையது;

ஆதலால், இவை இரண்டும் சமம் என்க. சுதி - வேகம்.

துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும் 

ஆணி வரையுறலா லான குறிப் பேதரலால்

தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால் - நீணிலத்தில் 

செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில் 

துப்பாக்கி யோலைச் சுருள்.                                                                         (66)

நீள் நிலத்தில் :- நெடிதான இந்த உலகத்திலே, செப்பார்க்கு உதவா - தன்னைப் போற்றிச் சொல்லாத புலவர்க்குப் பயன்படுத்தல் இல்லாத, திருமலைராயன்வரையில் - திருமலைராயன் என்பவ னின் மலைச்சாரலில், துப்பாக்கி ஓலைச் சுருள் - துப்பாக்கியும் ஓலைச்சுருளும் ஒன்றற்கொன்று சமானமாகும். எங்ஙளமெனில்,

துப்பாக்கியானது: ஆணி வரையுறலால் - இருப்புச் சலாகையைத் தன்பாற் கொண்டிருத்தலாலும், ஆன குறிப்பே தரலால் - மேற்கொண்ட குறியினையே தாக்கி வெற்றி தருத லாலும், தோண கருமருந்தைத் தோய்ந்திடலால் - மிகுதியான கருமருந்தினைப் பொருந்தியதாக இருப்பதனாலும்;

ஓலைச் சுருளானது : ஆணிவரை உறலால் - எழுத்தாணி கொண்டு எழுதப்படுதலை உடையதாதலாலும், ஆன குறிப்பே தரலால் - தன்னிடத்தே எழுதப்பட்டதாகிய குறிப்பைப் பெறுவோனுக்குத் தருகின்றதனாலும், தோண கருமருந்து தோய்ந்திடலால் - தன்னிடத்தே எழுதப்பட்டவை நன்கு புலனாகு மாறு கைக்காப்புச் செய்யப் பெறுதலை உடையதாதலாலும் ஆம்.

 வானவில் விஷ்ணு வெற்றிலை 

நீரி லுளதா னிறம் பச்சை யாற்றிருவால் 

பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப் 

பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான 

வில்விண்டு நேர்வெற் றிலை.                                                        (67)

பெரு வானவில் விண்டு வெற்றிலை நேர் பாரீர் - பெரிதான வானவில்லும் விட்டுணுவும் வெற்றிலையும் தம்முள் சமமா யிருப்பதனைக் காணுங்கள், எங்ஙனமெனில்,

வானவில்லானது: நீரில் உளதால் - நீரினிடத்தேயிருந்து உளதானபடியினாலும், நிறம் பச்சயால் - நிறத்திலே பசுமை உடைத்தாயிருப்பதனாலும், திருவால் - அழகாயிருப்பதனாலும், பாரில் பகைதீர்க்கும் பான்மையினால் உலகில் வறட்சியினாலே எழும் பகைமையினை வளம் பெருக்க மழை வருகிறதென அறிவித்துத் தீர்த்துவைக்கின்ற தன்மையினாலும், சாரும் மனுப் பல் வினையை மாற்றுதலால் - உலகிற் பொருந்திய மக்களின் பல்வகைத் துயரங்களையும் போக்குவதனாலும்,

விஷ்ணுவானவர் - நீரில் உளதால் - பிரளய காலத்தே - நீரின் மேற் பள்ளி கொண்டிருந்தலினாலும், நிறம் பச்சையால் - பச்சைத் திருமேனியினை உடைமையினாலும், திருவால் - திருமகளை மார்பிடத்தே கொண்டிருத்தலாலும், பாரில் பகை தீர்க்கும் பான்மையினால் - உலகிடத்தே அறநெறிப் பகைஞரை அழித்துக் காக்கும் தன்மையினாலும், சாரு மனுபல்வினையை மாற்றுதலால் - தன்னைச் சரணடையும் மனிதர்களின் பல்வேறு வினைகளையும் மாற்றி அவர்க்கு நற்கதி அருளுதலினாலும்,

வெற்றிலையானது: நீரில் உளதால் - நீர்க்கால்களிலேயே உண்டாவதனாலும், நிறம் பச்சையால் - பச்சை நிறத்தினை உடையதாயிருந்தலாலும், திருவால் - மங்கலப் பொருளாக இருந்ததலாலும், பாரிற் பகை தீர்க்கும் பான்மையால் உலகிற் பகை தீர்க்கும் இடத்து நட்புக்கு அடையாளப் பொருளாக அமைகின்ற தன்மையினாலும், சாரும் மணு பல்வினையை மாற்றுதலால் தன்னைப் பொருந்திய மக்களுடைய பல வியாதிகளைப் போக்குவதனாலும் என்க.

பூசுணிக்காயும் பரமசிவனும் 

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத் 

கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - வடிவுடைய 

மாகணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்

 பூசணிக்கா யீசனெனப் போற்று.                                                    (68)

பூசுணிக்காய் ஈசனெனப் போற்று: பூசணிக்காயையும் ஈசன் என்று கருதிப் போற்றுக எதனாலெனின்,

பூசுணிக்காயானது: அடி நந்தி சோர்தலால் - அடிப் பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதனாலும், ஆகம் வெளுத்துக் கொடியும் ஒரு பக்கத்தே கொண்டு வடிவுடைய மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால் - உடல் வெளுத்து, ஒரு பக்கத்தே கொடியினையும் கொண்டதாகி, அழகான வெண்சுண்ணத்தை மேற்புறத்தே கொண்டு , வளைவான தழும்புகளையும் பெற்றிருப்பதனாலும்,

பரமசிவன் : அடி நந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப் பெருமான் சேர்ந்திருத்தலாலும், ஆகம் வெளுத்து - திருநீறணிந்து உடல் வெள்ளை நிறமாகத் தோன்றுதலாலும், கொடியும் ஒரு பக்கத்திற்கொண்டு - தன் ஒரு பாகத்திலே பூங்கொடியான உமையினைக் கொண்டிருப்பதனாலும், மாசுணத்தைப் பூண்டு - சிறந்த பாம்பாபரணத்தைக் கொண்டிருப்பதனாலும், வளைத் தழும்பு பெற்றதனால் - தன் திருமேனியிடத்தே தழுவுங்காலத்தே அம்மையின் வளையல்கள் அழுத்திய தழும்புகளை உடையவரா யிருப்பதனாலும் என்க.

விநாயகர் முருகர் பரமசிவன் 

சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் னாலுகையால் 

இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக் 

கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும்

எண்ணானு நேரா வரே.                                                                      (69)

விநாயகர்க்கு : சென்னி முகம் மாறுளதால் - தலையும் முகமும் உடலமைப்பற்கு மாறுபட்டிருத்தலாலும், சேர்கரம் முன் நாலுகையால் - பொருந்திய துதிக்கையானது முன்புறமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றதனாலும், இந்நிலத்திற் கோடு ஒன்று உருக்கையால் - இவ்வுலகத்தில் ஒற்றைக் கொம்பு அமைந்தவரா யிருத்தவராயிருந்தலினாலும், மன்னு குளக்கண் உறுதலால் - நிலைபெற்ற நிவேதனமாக வெல்லம் அமைத்து இருப்பதனாலும்,

முருகர்க்கு: சென்னி முகம் ஆறு உளதால் - முடியும் முகமும் ஆறு உளதாதலினாலும், சேர்கரம் முந்நாலு கையால் - பொருந்திய கரங்களும் பன்னிரண்டாக இருத்தலினாலும், இந் நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - இவ்வுலகில் குன்றமே பொருந்தியிருக்கும் இருப்பிடமாக இருந்தலாலும், மன்னு குளக்கண் உறுதலால் - நிலைபெற்ற சரவணப் பொய்கையிலே அவதரித்ததனாலும்,

பரமசிவனுக்கு : சென்னிமுகம் ஆறு உளதால் - சிரசினிடத்தே கங்கையாறு உளதாயிருத்தலினாலும், முன்சேர் கரம் நாலுகையால் - முன் புறத்தே தேர்ந்த ஒளியுள்ள கைகள் நான்கினை உடைத்தாயிருத்தலினாலும், இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - இவ்வுலகில் ஒரு மலை முடியான கைலாச பர்வதம் எனும் ஒன்று இருப்பிடமாயிருத்தலினாலும், மன்னுகுளக் கண் உறுதலால் - நிலை பெற்ற நெற்றிக்கண்ணினை உடைத்தா யிருத்தலினாலும், இம் மூவரும் சமம் என்க.

இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தல் பயன் தரும், சொல்வளமும், சொற்களைப் பல பொருள்பட அமைத்துப்பாடும் புலமையும் பெருகும். தமிழன்பர்களுக்கு நல்ல இலக்கிய வாதங்களில் இவ்வாறு பொருள் கொள்ளும் நுட்பமான அறிவு நலமும் உண்டாகும்.

இலக்கியப் பயிற்சியானது நுட்பமான அறிவு நலத்தைப் பெறுவதற்கும். ஒழுகலாறுகளை நெறிப்படுத்துவதற்கும் பயன்பட வேண்டும். சிந்தனையைத் தூண்டிச் செயற் படுத்தும் இச்செய்யுட்கள், அந்த இருவகைப் பயன்களையும் தருவதாகும்.

காளமேகம் இந்த வகையில் பெரும் புலமை பெற்றவர். மேற்போக்காகக் கேலி செய்வது போலத் தோன்றுமாறும், அதே சமயம் நுட்பமான பொருள்வளம் அமையுமாறும் செய்யுள் செய்வதில் நிகரற்றவர்.

ஒருவகையான சொல்லமைப்புக்கள், அவற்றைப் பிரிக்கும் திறனால் இரண்டு மூன்று வகையான பொருள் அமைதிகளைத் தருகின்றன. சொல்லாட்சியும் இலக்கண அறிவும் இதற்கு நிரம்ப வேண்டும் கருத்துக்களிலும் தெளிவு இருக்க வேண்டும்.

அந்த வகையில், இலக்கிய மாணவர்களுக்கு இப்பகுதிப் பாடல்கள் நிறைந்த பயிற்சியைத் தரும். படித்துப் படித்துச் சிந்தித்துச் சிந்தித்து இன்புற வேண்டிய சுவையான செய்யுட்கள் இவை.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.