Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

5. வித்தாரச் செய்யுட்கள்

(செய்யுள் அமைதியுடன் வித்தாரமாகப் பாடியவை இவை. நுட்பமாகப் பொருளைக் கண்டு உணர்தல் வேண்டும். வித்தாரம் - பரந்துபட்ட அறிவு)

 ககர வருக்கப் பாட்டு 

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை 

கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்

 காக்கைக்குக் கைக்கைக்கா கா.                                                    (70)

'ககர வருக்கமே முற்றவும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க" எனக் கேட்டவர் வியக்குமாறு சொல்லியது

காக்கைக்கு ஆகா கூகை - காக்கைக்கு கூகை இரவில் வெல்லுதற்கு ஆகாது, கூகைக்கு ஆகா காக்கை - கூகைக்குக் காக்கை பகலில் வெல்லுதற்கு ஆகாது, (அதனால்) கோக்கு கூ காக்கைக்கு - அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்று கைக்கும்; கொக்கு ஒக்க - கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும், கைக்கைக்கு - பகையை எதிர்த்து, காக்கைக்கு - காப்பாற்றுவதற்கு, கைக்கு ஐக்கு ஆகா (காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.

தகர வருக்கப் பாட்டு 

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி 

துத்தித் துதைதி துதைத்தா தாதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?                                                              (71)

‘முற்றவும் தகரவருக்க எழுத்துக்களே அமைந்து வருமாறு இயற்றுக' என்று கேட்ட ஒருவருக்குச் சொல்லியது இச்செய்யுள்,

வண்டே தத்தி தாது ஊதுதி - தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; தாது ஊதித் துத்தி - பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி துதைதி - துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; துதைந்து அத்தாது ஊதுதி - அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய். தித்தித்த தாது எது - நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? தித்தித்தது எத் தாதோ - இனித்திருந்தது எதன் மகரந்தமோ? தித்தித்த தாது - இதழாக அழகியதும் எப் பூவோ?

துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது - பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம்.

 தாதி தூதோ தீது 

இதுவும் தகர வருக்கச் செய்யுள்தான் தூது' என்ற சொல் பன்முறை வருமாறு பாடியுள்ளார். இங்ஙனம் பாடுமாறு ஒருவர் கேட்கக் கவிஞர் பாடியதாகக் கொள்க.

தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி.                                                                         (72)

(இப்பாடல் கவிஞர் கண்ணதாசனின் "வானம்பாடி " திரைப் படத்தில் இடம் பெற்ற போட்டிப் பாடலாகும்)

தாதி தூதோ தீது - அடிமைப் பெண்கள் சென்று உரைக்கும் - தூதோ பயன்படாதது. தத்தை தூது ஓதாது கிளியோ போய்த் தூது உரைக்க மாட்டாது; தூதி தூது ஒத்தித்த தூததே - தோழியின் தூதானது நாளைக்கடத்திக்கொண்டே போகும் தூதாயிருக்கும்; தேதுதித்த தொத்து தீது - தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் பயனற்றதாகும்; (அதனால்) தாதொத்த துத்தி தத்தாதே - பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என்மேற் படர்ந்து மிகாது; தித்தித்தது ஓதித் திதி - எனக்கு இனிமையான தான என் காதலனின் பெயரையே நான் ஓதிக்கொண்டிருப்பேனாக.

தலைவியின் இல்லத்தே தாய் தெய்வத்தை வழிபட்டுத் தன் மகளின் மனமாற்றத்தைத் தீர்க்குமாறு வேண்டுதற்கு ஏற்பாடு செய்ய, மகள், அதனை விலக்குமாறு இங்ஙனம் கூறினாளாகக் கொள்க.

 வல்லினப் பாட்டு 

''முற்றவும் வல்லின எழுத்துகள் அமையும்படியாக ஒரு செய்யுள் செய்க" என்று ஒருவர் கேட்கப் பாடியது இது.

துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடற்

றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் - பொடித்துத் 

தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்

கடிப்படைத்துக் காட்டித்துக் காடு.                                                  (73) 

கோடல் துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த - காந்தள் முகிழ்த்தனவாய் ஒளிகொண்டவாய் அரும்புகளை எடுத்தன; கடுக்கை பொற்போல் தொடை தொடுத்த - கொன்றைகள் பொன் போன்று ஒளிறும் மாலைகளைத் தொங்கவிட்டன; தொடை படைத்த தோபொடித்துத் துடித்த - வளைகளை அணிந்தவையான தோள்கள் சிலிர்த்துத் துடிதுடிப்பவை ஆயின; தோகை கூத்தாட மயிலினம் கூத்து ஆடத் தொடங்கின; காடு கடிபடைத்துக் காட்டிற்று - இப்படியாக காடே தனக்கொரு மணத்தினைப் படைத்துக் கொண்டதாகத் தன்னைக் காட்ட லாயிற்று.

கார் காலம் தொடங்கிற்று என்பதனால் ஏற்படும் நிகழ்ச்சிகள் இவை எல்லாம் தோகை கூத்தாட ' என்பதனுள் 'கூத்தாடின' என்பது கூத்தாட எனத் தொக்கி நின்றது.

 மெல்லினப் பாட்டு 

முற்றவும் மெல்லின எழுத்துக்களால் அமைந்தது இச்செய்யுள். அங்ஙனம் பாடுமாறு ஒருவர் கேட்கக் கவிஞர் பாடியது இது.

மானமே நண்ணா மனமென் மனமென்னும்

மானமான் மன்னா நனிநானும் - மீனமா 

மானா மினன்மின்னிமுன் முன்னே நண்ணினு

மானா மணிமேனி மான்,                                                                   (74)

மானமே நண்ணா மனம் என் - மானம் உடைய தமை யினையே விரும்பாத மனத்தின் இயல்புதான் என்னே? ஆனா மணி மேனி மான் - ஒப்பற்ற செம்மணி போன்ற திருமேனியினை உடையாளான மான் போன்ற ஒரு நங்கை, ஆனா மினல் மின்னி முன் முன்னே நண்ணினும் - தன் அணிகளால் நீங்காத முன்னொளி யினைப் பரப்பிக் கொண்டு முன்னாக முன்னாக வந்தாலும், என் மனமென்னும் மானமான் - என் மனம் என்று சொல்லப் படுகின்ற பெரிய யானையானது, மன்னா நாணும் ஈனமாம் - மிகவும் வெட்கப்படும்; அவட்குத் தாழ்ந்தும் இழிவுற்று நீங்கும்.

ஆணின் உள்ளத்து எத்துணைத் தற்பெருமை இருப்பினும், அது ஒரு பெண் முன்னே வரக் கண்டதுமே குன்றிப் போய் வெட்கித் தாழ்வுற்று விடும் தன்மை உடையதாகி விடுகிறது என்பது கருத்து. சொற்களைப் பகுத்து பொருள் காணும் வகையினை அறிந்து அனுபவிக்கவும்.

 இடையினப் பாட்டு 

‘யரல வழள' என்பவை இடையின எழுத்துக்கள் இவையே முற்றவும் வருமாறு செய்யப் பெற்றது இச்செய்யுள் அங்ஙனம் ஒருவர் பாடக்கேட்கக் கவிஞர் பாடியது.

ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்து, அந்தப் பிரிவுக்கு ஆற்றாது புலம்புவதாகப் பொருள் அமைதி கொண்டு விளங்குவது இது

விரவலராய் வாழ்வாரை வெல்வா யொழிவா 

யிரவுலவா வேலை யொலியே - வரவொழிவா 

யாயர்வா யேயரிவை யாருயிரை யீராவோ 

யாயர்வாய் வேயோ வழல்.                                                                         (75)

வேலையின் ஒலியே - கடலின் பேரொலியே விரவலராய் வாழ்வோரை வெல்வாய் ஒழிவாய் - தம் நாயகரோடு கலந்து இராதவராக வாழ்கின்ற பெண்களைப் பொருது வெற்றி கொள்வாய் நீ! அந்தச் செயலை இனிக் கைவிடுவாயாக. இரவு உலவாய் - இரவு நேரத்தே நீ அலைகளாய் எழுந்து உலவுதலையும் செய்யாதே வரவு ஒழிவாய் - நின் வரவினையும் கைவிடுவாயாக ஆயர்வாயே அரிவை ஆருயிரை ஈராவோ - ஆயர்களின் வாய் ஒன்றே எம்போற் பெண்களின் அரிய உயிரினைப் பிளந்து அழிக்கப் போதாதோ? ஆயர் வாய் வேய் அழல் - அந்த ஆயர்களின் வாயிற் புல்லாங்குழல் அழல் போல் எம்மை எரிக்கின்றதே!

ஆயர்வாயோ!' என்பதற்குத் தாயரின் வாய்ச்சொற்களோ எனவும் பொருள் கொள்ளலாம், தாயரின் கண்டிப்பு என்பது கருத்தாகும்

ஒன்று முதல் பதினெட்டு 

‘ஒன்று முதல் பதினெட்டு வரை அடைசொல் இல்லாமல் அமைத்து ஒரு வெண்பா இயற்றுக' என்றார் ஒருவர்

ஒன்றிரண்டு மூன்று நான்கு ஐந்தாறு ஏழெட்டு

ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னி ரண்டு

பதின் மூன்று பதி னான்குபதி னைந்து பதி 

னாறுபதி னேழ்பதி னெட்டு.                                                              (76)

இதன் கண் முறையே ஒன்று முதல் பதினெட்டு வரையும் வந்தமை காண்க.

பன்னிரு ராசிகள் 

'இராசிகள் பன்னிரண்டின் பெயர்களும் வரவேண்டும் அவற்றின் முறையிற் பிறழ்ச்சி ஏற்படுதலும் கூடாது. அவற்றின் தொகையான பன்னிரண்டும் குறிக்கப் பெற்றிருக்கவேண்டும். எவ்வித அடைமொழியும் இல்லாமல் இப்படி ஒரு வெண்பாச் சொல்லும்' என்றார் ஒரு புலவர்

பகருங்கால் மேடம் இடபம்மிது னங்காக்க

டகஞ்சிங் கங்கன்னி துலாம் விர்ச்- சிகந்த

நுசுமகாங் கும்பம் மீனம்பன் னிரண்டும்

வசையறுமி ராசி வளம்.                                                                     (77)

என்று பாடினார் காளமேகம் பகருங்காலத்தே, மேடம், இடபம்,மிதுனம், கற்கடகம்,சிங்கம், கன்னி, துலாம்,விருச்சிகம், தனுசு,மகரம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டும் குற்றமற்ற இராசிகளின் வளமையாகும் என்று வெண்பாவும் அமைந்தது.

பகர்தல் - சொல்லுதல், வசை - குற்றம், வளம் - வளமை

தை மாசி பங்குனி 

ஒருவர், காளமேகம், சொன்ன சமிசைகளுக்கு ஏற்ற படி எல்லாம் நொடியளவுக்குள் சுவைபடப் பாடி வருதல் கண்டு, அவரைத் தாம் மடக்கிவிட நினைத்தவராகத், தை மாசி பங்குனி' என்னும் மாதப் பெயர்கள் வருமாறு ஒரு வெண்பாச் சொல்லும் என்றார்.

கவிஞரோ அப்படியே சொன்னதுடன், அவை மாதப் பெயர்களாயினும் பொருள் வேறாகச் சுட்டுகின்ற சுவையுடையன வாக அமையுமாறும் தம் வெண்பாவை அமைத்து பாடினார். புலவர் அயர்ந்து அமைந்தார். அந்தப்பாடல் -

பாணர்க்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்

தாணு விரித்ததுவும் சக்கரத்தோன் - ஊணதுவும் 

எம்மானை ஏத்துவதும் ஈசனிடத்துத் துஞ்சிரத்தும்

தைமாசி பங்குனிமா தம்.                                                                  (78)

பாணர்க்குச் சொல்லுவதும் - தையற்காரர்களுக்குச் செய்யெனச் சொல்லும் சொல்லும், பைம்புனலை மூடுவதும் பசிய நீரினை மூடிக்கொண்டிருக்கும் பொருளும் தாணு உரித்ததும் - சிவபெருமான் உரித்ததுவும், சக்கரத்தோன் ஊணதுவும் சக்கரப்படையினை உடையோனான திருமாலின் உணவாக விளங்கியதும், எம்மானை ஏத்துவதும் - எம் பெருமானாகிய சிவனைத் துதிப்பதுவும், ஈசன் இடத்தும் - அந்த ஈசனின் இடப்பாகத்தே ஆகியதும், தைமாசு இபம் கு உனிமாது அம் - தை என்னும் சொல்லும், மாசு ஆகிய பாசியும், இபம் என்னும் யானையும், நிலமும், மனத்தே நினைதலும், அழகிய மாதாம் உமையம்மையும் என் முறையே ஆவதாகும்.

தை மாசி பங்குனி மாதம் என்றதனை, தை, மாசு, இயம். கு, உனி, அம் மாது எனப்பதப்பிரிவு செய்து அதற்கேற்பப் பொருள் கொள்ளல் வேண்டும். உன்னி, உனி என்று ஆயது இடைக்குறை.

ஆறு சாதிகள் 

ஆறு சாதிகள் ஒரே செய்யுளுள் வருமாறு, ஒருவர் பாடுவதற்குக் கூறக் கவிஞர் பிரான் அப்போது பாடியது. சாதிப் பெயர்கள் வந்தன. ஆனால் பொருள் அமைதி வேறு சுவையுடையதாக அமைந்தது.

கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார் 

செம்மான் சதுரரைத் திருவாசை - அம்மாகேள் 

வாணியனும் பொன்னேரி வாம்வெள் ளாழனுமே 

சேணியனு மன்றே தெரிந்து.                                                                        (79)

அம்மா கேள் - அம்மையே கேட்பாயாக! வாணியனும் பொன் ஏரி வாழும் வெள் ஆழனும் - வாணியைக் கொண்டோ னான பிரமனும், திருமகளாகிய அழகி தன் மார்பிலே வீற்றிருக்கப் பெற்றோனாகிய பாற்கடலிலே பள்ளி கொள்கின்ற திருமாலும், சேணியனும் - இந்திரனும். அன்றே தெரிந்து - அந்நாளிலேயே உண்மையை அறிந்துகொண்டு, செம்மான் சதுரரை - சிவந்த மாலையினைக் கொண்ட சதுரரான பெருமானை திரு அரசை அழகிய நடராசப் பெருமானை, கம்மாளன் அங்கிக் கண் நக்கன் எனவே துதித்தார் - கபாலத்தை ஏந்தியவன் என்றும், நெருப்புக் கண்ணாலே சிரித்துப் புரமெரித்தவன் என்றும் வாழ்த்தினார்கள்; அதனால் உயர்ந்தார்கள் என்பது கருத்து.

நடுவெழுத்து அலங்காரம்

திருமால்வா கனநாவா யிராசி யொன்று 

சினைதெவிட்டார் மாதுலன்கோ கிலமிவ் வேழின் 

உருவாமே ழெழுத்தினடு வெனக்குச் செய்தான் 

உகந்துபதி னான்கினையும் தானே கொண்டான் 

ஒருபாகத் திருத்தினான் கையில் ஏற்றான் 

ஒருமதலை தனக்களித்தான் உண்டான் பூண்டான் 

பரிவாயொண் காத்தமைத்தான் உகந்தான் இந்தப் 

பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன் தானே.         (80)

'நடுவெழுத்து அலங்காரமாக ஒரு செய்யுள் செய்க,' என்று ஒருவர் சொல்ல, அப்படியே பாடியது இது.

திருமால் வாகனம் - கருடன்; அதற்கு நாகாரி எனவும் பெயர் (1) நாவாய் - கலம் (மரக்கலம்), இராசி ஒன்று - கன்னி, சினை - கவடு, தெவிட்டார் - ஆரார், மாதுலன் - மாமன், கோகிலம் - பல்லி. இவ்வேழின் உருவாம் ஏழுெழுத்தின் நடு எனக்குச் செய்தான். அதாவது காலன் வராமல் செய்தான்.

உகந்து பதினான்கினையும் தானே கொண்டான் - மேற் குறித்த மூவெழுத்துச்சொற்கள் ஏழனுள் நடு வெழுத்துக்கள் ஏழும் நீங்கிய பதினான்கினையும் சிவனே கொண்டான். அவை நாரி, கம், கனி, கடு,ஆர், மான், பனி என்பவை. அவை கொண்ட முறை:

நாரியை (உமையை) ஒரு பாகத்து இருத்தினான், கம் (கபாலம்) கையில் ஏற்றான்; (கனி) ஒரு மதலைக்கு அளித்தான் (பிள்ளையாருக்கு), கரு (நஞ்சு) உண்டான், ஆர் (ஆத்தி மாலை) பூண்டான், மான் பரிவாய் ஒண்கரத்து அமைத்தான்: பலி உகந்தான்; யார் இங்ஙனம் கொண்டவன்?

இந்தப் பைம்பொழில் தில்லையுள் ஆடும் பரமனே தான் அவன்!

இவ்வாறு அமைத்து நயமுடன்பாடினார் கவிஞர்

நிரனிறைப் பொருள்கோள் (சிவன்) 

ஒரு வரிசை முறையாகச் சிலவற்றை ஒரு பாடலின் முற்பகுதியில் அமைத்து அவற்றைப் பின்னர் அதே வரிசை முறைப்படி பொருள்பட முடித்தல் வேண்டும். இந்த முறையில் முதலடியில் வருவன, பிறகு மூன்று அடிகளிலும் வருவன

கூற்றுவனை வின்மதனை யாக்கர் கோவைக் 

கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை 

ஏற்றுலகின் புறவுருவு மாளத் தோள்க 

விறவெறிப்ப விமையப்பெண் வெருவ வேவக் 

காற்றொழிலா னயனத்தால் விரலால் கற்றைக் 

கதிர்முடியாற் காதலத்தாற் கணையாற் பின்னும் 

ஊற்றறிய வுதைத் தெரித்து நெரித்துச் சூடி 

உரித்தெரித் தானவனென்னை யுடைய கோவே.       (81)

கூற்றுவனை ஏற்று உலகு இன்புறக் காற்றொழிலான் ஊற்றழிய உதைத்து - எமனை எதிரேற்று உலகெலாம் இன்புறும் படியாகத் தன் திருவடியின் செயலான உதைத்தலினாலே (மார்க்கண்டன் பொருட்டு) இடையூறு நீங்குமாறு செய்தவன் விண் மதனை உருவம் மாள நயனத்தால் எரித்து கரும்பு வில்லினனான மன்மதனை அவன் உருவம் அழியுமாறு நெற்றிக் கண்ணினாலே சுட்டெரித்தவன், அரக்கர் கோவைத் தோள்கள் இற விரலால் நெரித்து - அரக்கர் கோமானைத் தோள்கள் ஒடியுமாறு தன் விரல்களினாலே அழுத்தியவன்; கூன் நிலவை கற்றைக் கதிர் முடியில் சூடி - பிறைச் சந்திரனைத் தன் கற்றையான ஒளிர் சடையின் முடியிலே அது ஒளியுடன் திகழுமாறு சூடியவன்; குஞ்சரத்தை இமையப் பெண் வெருவக் கரத்தால் உரித்து - இமவான் மகள் அஞ்சுமாறு யானையைத் திருக் கையினாலே தோலுரித்தவன் இஞ்சி மூன்றை எரித்தான் - திரிபுரக் கோட்டைகள் மூன்றையும் சாம்பராக்கியவன், அவன் என்னை உடைய கோவே - அவனே என்னை அடிமையாக உடைய சிவபெருமான் ஆவன்.

நிரனிறைப் பொருள்கோள் (திருமால்) 

பொன்னனைவா ளரக்கனைநூற் றுவரைக் காவைப் 

பொருசிலையைக் கனைகடலைப் பொன்னனீன்ற 

நன்மகற்காய்ச் சுரர்க்காயை வருக்காய்க் காதல் 

நட்பினுக்காய்ச் சானகிக்காய் நடவைக்காக 

மன்னுகிரால் வடிக்கணையால் வளையாற் புள்ளால் 

வயங்குதோள் வலியால்வா னரங்களாகும் 

முன்னுடற் றிச்சிரங்கொண் டமரில் வீழ்த்தி 

முதலொடுங்கொண் டிறுத்தடைத்த மோக ரானே.    (82)

மோகூர் - பாண்டி நாட்டுள் ஓர் ஊர்.

பொன்னனைப் பொன்னன் ஈன்ற நன்மகற்காய் முன்னுடல் கீறி - இரணினை அவனீன்ற நல்ல மகனின் பொருட்டாக முன்னாளிலே உடலைக் கீறிக் கொன்றவன்; வாளரக்கனைச் சுரர்க்காய் வடிக்கணையால் சிரங்கொண்டு வாளாற்றல் மிக்க அரக்கனாம் இராவணனைக் தேவர்களின் பொருட்டாகக் கூரிய அம்பினாலே தலையைக் கொய்தவன்; நூற்றுவரை ஐவருக்கா வளையால் அமரில் வீழ்த்தி . இவரின் பொருட்டாக நூற்றுவரான கௌரவரைத் தன் சங்க நாதத்தாலே போரிலே கொன்றழித்தவன்; காவைக் காதல் நட்பினுக்காய் புள்ளால் முதலொடுங் கொண்டு - தன் நாயகியாம் நப்பின்னைப் பிராட்டியின் அன்பு உறவினுக்காகக் கருடன் மூலமாகப் பாரிசாத மலர்ச்சோலையினையே வேரோடுங் கொணரச் செய்தவன், பொருசிலையைச் சானகிக்காய் வயங்கு தோள் வலியால் இறுத்து போரவில்லைச் சானகியை மணத்தற் பொருட்டாக விளங்கும் தன் தோள் ஆற்றலினாலே வளைத்து ஓடித்தவன் கனைகடல் நடவைக்காக வானரங்களால் அடைத்த - முழங்கும் கடலைக் கடந்து செல்வதற்காகக் குரங்குகளினாலே அடைக்கச் செய்தவன்; மோகூரானே - அவனே மோகூரிலே வீற்றிருக்கும் திருமால் ஆவான்.

மாடு - பறை 

'கடைமொழி மாற்று' என்பது செய்யுள் அணிகளுள் ஒன்று. செய்யுளின் ஈற்றுச் சொல்லை முதலிற் கொண்டு பொருள் கொள்ளல் வேண்டும். அப்படிக் கொள்ளாமல் நேரடியாகக் கொண்டால் பொருள் வேடிக்கையாகவும் பொருத்தமின்றியும் போய்விடும். அடுத்து வரும் நான்கும் அத்தகைய செய்யுட்கள்.

மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான் குயவன் 

கூடிமிக மண்பிசைவான் கொல்லனே - தேடி

இரும்படிப்பான் செக்கான் எண்ணெய் விற்பான் வண்ணான் 

பரும்புடவை தப்பும் பறை.                                                                (83)

பறை மாடு தின்பான், பார்ப்பான் மறை ஓதுவான்; குயவன் கூடிமிக மண்பிசைவான்; கொல்லனே தேடி இரும்பு அடிப்பான்; செக்கான் எண்ணெய்விற்பான்; வண்ணான் பரும்புடவை தப்பும்; இவ்வாறு கூட்டிப் பொருள் காண்க

கூடி மிக மண் பிசைதல் - மண் ஒன்று சேர்ந்து தன் தரத்தில் மிகுமாறு பிசைதல், தேடி இரும்பு அடித்தல் - தக்கபதம் வருவதை ஆராய்ந்து மென்மேலும் இரும்பைக் காய்ச்சி அடித்தல் செக்கான் - எண்ணெய் வாணியன், செக்கிலே தொழில் செய்வோன் பரும் புடவை - பெரிதான புடைவை.

ஆயனுக்கு மண் 

கடைமொழிமாற்றுச் செய்யுள் இதுவும். ஆயன்' என்றதனை முதலடியின் இறுதியிலே வைத்துப் பொருள் செய்தல் வேண்டும்.

ஆயனுக்குக் கண்மூன்றாம் ஆதிசிவ னுக்கிருகண் 

மாயனுக்குச் செங்கையிலே மான்மழுவாம் - நேயமுடன்

சங்கரர்க்குச் சங்காழி தான்மாலுக் காலமாம் 

மங்கையிடத் தாற்காகு மண்.                                                          (84)

'கண் மூன்றாம் ஆதி சிவனுக்கு, இரு கண் ஆயனுக்கு செங்கையிலே மான் மழுவாம் நேயமுடன் சங்கரற்கு, சங்கு ஆழி தான் மாலுக்கு; ஆலமாம் மங்கை இடத்தாற்கு, ஆயனுக்கு ஆகும் மண்" என்று கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும்.

ஆதி சிவன் - அனைத்துக்கும் ஆதியான சிவபிரான், ஆயன் - கோபாலனான திருமால், நேயமுடன் - விருப்பமுடன் கொண்டது, ஆழி - சக்கரம், ஆலம் - நஞ்சு, மங்கை இடத்தாற்கு - மங்கையைத் தன் இடப்பாகத்தே உடையவனுக்கு, சிவனுக்கு .

இதன்கண் திருமால் சிவன் ஆகியோரின் கண்கள் ஆயுதம், அவர் உண்பவை ஆகியன முறையே வந்தன.

கொன்றை - சிவன் 

இந்தச் செய்யுளில் ஒரு சிறு மாற்றம், கடைசி அடியான 'சிக்கலிலே வாழும் சிவன்' என்ற தொடரை முதலில் வைத்துப் பொருள் உரைத்தல் வேண்டும்.

சிக்கல் - இது திருச்சிக்கல் என்று வழங்கப் பெறும் பாடல் பெற்ற தலம். நாகைப்பட்டினத்திலே இருந்து மூன்றுமைல் தொலைவில் உள்ளது. சிக்கல்' என்னும் ரயிலடி ஊருக்கு அரை மைலில் இருக்கிறது. சுவாமி பெயர்: நவ நீதேசுவரர். தேவி பெயர்: வேனெடுங்கண்ணி அம்மையார்

சிங்காரவேலன் சூரனைச் சங்காரம் செய்த இடம் இது என்பார்கள். சிக்கல் வடிவேலனுக்குக் கந்தசஷ்டிப் பெரு விழா இன்றும் சிறப்பாக நடைபெறவதாகும்.

இப்பாடல் நவநீதேசுவரரைக் குறித்தது; மாயனையும் குறிப்பது.

கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து

நின்றுகுழ லூதினான் நீள்சடையோன் - பொன்றிகழும் 

அக்கணிந்தான் மாயன் அரவணையிற் கண்வளர்ந்தான் 

சிக்கலிலே வாழும் சிவன்.                                                               (85)

சிக்கலிலே வாழும் சிவன் கொன்றை மலர் தரித்தான் - திருச்சிக்கலிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் கொன்றை மலர் மாலையினைத் தரித்தவன்; கோபாலன் கோல் எடுத்து நின்று குழல் ஊதினான் - கோபாலனான மாயவனோ மாடு மேய்க்கக் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு நின்று புல்லாங்குழலை வாசித்தான், பொன் திகழும் நீள் சடையோன் அக்கு அணிந்தான் - அழகுடன் விளங்கும் நீண்ட சடாபாரத்தை உடைய சிவபிரான் எலும்பினை ஆபரணமாக அணிந்தான்; மாயன் அரவணையிற் கண் வளர்ந்தான் - திருமால் பாம்பாகிய படுக்கையிலே படுத்து உறங்கினான்.

கடம்பற்குக் கை 

கடம்பர்க்கெண் டோளயற்குக் கண்பதினைந் தாமால்

கடம்பற்கே நால்வாய்கை யைந்தே - கடம்பற்கோ 

டானைமுகற் காயிரங்கண் ணாகண்ட லற்கிலம்பா 

டானைமுகற் காறிரண்டு கை.                                                         (86)

இதுவும் மேற்கண்டபடி கடைமொழி மாற்றுவகையைச் சார்ந்ததுதான். ஆனால் கடைசி அடியிலே வரும் இறுதி இரு சீர்களை மட்டும் முதலில் வைத்துப்பொருள் செய்ய வேண்டும்.

ஆறிரண்டு கை கடம்பற்கு - கடப்பமாலை உடையனான முருகப்பெருமானுக்குப் பன்னிரண்டு கைகள். எண்தோள் அயற்கு - பிரமாவுக்கு எட்டுத் தோள்கள். கண் பதினைந்தாம் ஆல் கடம்பர்க்கு - கடம்ப வனத்து வீற்றிருக்கும் சிவபெருமானுக்குப் (ஐந்து முகங்கள் ஆனதால்) பதினைந்து கண்களாம். நால் வாய்கை ஐந்தே கடம்பற்கோ ஆனை முகற்கு - தொங்கும் வாயும் ஐந்து கைகளும் மதமும் பல்லாகிய கோடும் ஆனைமுகக் கடவுளுக்கு உள்ளனவாம். ஆயிரம் கண் அகண்டவர்க்கு - இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்; இலம்பாடு ஆன் ஐம் மகற்கு - ஐந்து முகமுடைய சிவனுக்கு வறுமையும் ஆனேறும் உரிமை உடையனவாம்.

'கடம்பற்கு என்னுஞ் சொல், மும்முறை வந்தும் பொருளால் வேறாயின்மை காண்க.

சிதம்பர சின்னங்கள் 

சிதம்பரம், நடராசர் கோயிலிலே இருக்கின்ற சின்னங்கள் பலவற்றையும் தொகுத்து வெண்பாவாகப் பாடியது இது.

ஞான சபைக னகசபைசிற் றம்பலம்பே 

ரானந்தக் கூடந் திருமூலட் - டானம்பே 

ரம்பலம்பஞ் சாவரண நாற்கோபுரம் பொற்செய்

கம்பமண்ட பஞ்சிவகங் கை.                                                                        (87)

சிற்சபை ஞானசபை என்பது; கனகசபையாவது பொன்னம் பலம் பெருமான் நடராச மூர்தியாக வீற்றிருக்கும் இடம் அது; சிற்றம்பலம் என்பது சிற்சபையான ஞான சபைக்கு முன்னர் இருப்பது, பேரின்ப சபை பேரானந்தக் கூடம் எனப் பெறுவது இது பெருமான் ஊர்த்துவதாண்டவ மூர்த்தியாக விளங்கும் இடம். திரு மூலட்டானம் என்பது பெருமான் சிவலிங்க சொரூபமாக விளங்கும் இடம். பேரம்பலம் என்பது தேவசபை; தேவர்கள் வந்து பெருமானைத் தரிசித்துப் போற்றும் இடம் ஐந்து பிரகாரங்கள் பஞ்சாவரணம் என்று குறிக்கப் பெற்றன. நான்கு திசைக் கண்ணும் விளங்கும், கோபுரங்கள் நாற்கோபுரங்கள் என்று குறிக்கப் பெற்றன. கம்ப மண்டபம், ஆயிரக்கால் மண்டபம். சிவகங்கை - திருக்குளத் தீர்த்தம்.

திருவாரூர்ச் சின்னங்கள் 

திருவாரூர்ப் பெரிய கோயிலின் முக்கியமான சின்னங்களை குறிக்கும் செய்யுள் இது,

சங்குதீர்த் தந்திருச் சாளரவா யில்வீர 

சிங்காச னந்திருவந் திக்காப்புப் - பங்குனிமா 

தத்திருநா மர்த்தந் திருவினா தன்கோயில்

உத்திரபா கந்திருவா ரூர்.                                                                   (88)

சங்கு தீர்த்தம், திருச்சாளர வாயில், வீர சிங்காசனம் திருவந்திக்காப்பு, பங்குனி மாதத் திருநாள், திருவின் தீர்த்தம், உத்தரபாகம், நாதன் கோயில், இவை திருவாரூர்ச் சிறப்புகள்.

திருச்சாளர வாயில் - தியாகர் திருமுன்பே இருக்கும் பலகணிவாயில். வீர சிங்காசனம் - தியாகர் வீற்றிருப்பது. திருவந்திக் காப்பு - மாலை வேளையிற் சார்த்தும் திருக் காப்பு பங்குனி மாதத் திருநாள் - திருவுத்திரத் திருநாள். திருவின் தீர்த்தம் - கமலாலயம் என்னும் திருக்குளத்துத் தீர்த்தம்.

கும்பகோணத்துச் சின்னங்கள் 

திருக்குடைந்தையிலே கும்பேசர் கோயில் கொண்டிருக்கும் ஆலயம் புகழ் பெற்றது. அதனையும் பிறவற்றையும் குறிப்பது இது.

திருக்குடந் தையா திகும்பேசர் செந்தா

மரைக்குளம் கங்கை மகங்கா - விரிக்கரையின் 

ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார்

சாரங்க பாணி தலம்.                                                                           (89)

திருக்குடந்தை ஆதி கும்பேசர் - திருக்குடந்தைப் பதியி னிடத்தேயுள்ள ஆதியான கும்பேசப்பெருமானின் திருக்கோயில்; செந்தாமரைக் குளம் - செந்தாமரை மலர்கள் பூத்திருக்கும் திருக்குளம் ; கங்கை மகம் - சங்கைகள் வந்து கூடுகின்ற சிறப்பு உடையதான மகாமகக்குளம்; காவிரிக் கரையின் ஓரம் கீழ்க்கோட்டம் - காவிரிக் கரையின் அருகேயிருக்கும் கடந்தைக் கீழ்க்கோட்டம், என்னும் திருக்கோயில், காரோணம் - திருக் குடந்தைக் கீழ்க்காரோணம் என்னும் தலம், மங்கை நாயகியார் மங்கை நாயகியார் கோவில், சாரங்கபாணி என்னும் பெருமாள் திருக்கோயில் என்பன, குடந்தை நகரத்தின் சிறந்த சின்னங்கள் ஆகும்.

இச் செய்யுட்கள் பயில்பவர்களுக்கு யாப்பிலக்கணப் புலமையை நல்குவன எந்தக் கருத்தையும் நொடியில் அமைத்துச் செய்யும் செய்யும் வல்லமையைத் தருவன.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.