காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும். களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை . தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது. களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும். அவை :
- காமப் புணர்ச்சி
- இடந்தலைப்பாடு
- பாங்கொடு தழாஅல்
- தோழியிற் கூட்டம்
என நான்கு வகை ஆகும்.
காமப் புணர்ச்சி
அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது ஆகும். காம வேட்கை மிகுதியால் தான் இக்காதல் உருவாகிறது. இதுவே காமப் புணர்ச்சி எனப்படுகிறது. இது நல்வினைப் பயனால் தன்னியல்பில் நிகழும் புணர்ச்சியாதலின் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும்படும். முன்னுறு புணர்ச்சி எனவும் இது வழங்கப்படும். காதல் எவ்வாறு உண்டாகும் என்பதைத் தொல்காப்பியர் களவியல் நூற்பாவில் (2) விளக்குகிறார். ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால் அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்தும், பிரித்தும் வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின் ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை , ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர். இதில் தலைவன் தலைவியுடன் ஒத்த பண்புடையனாகவோ தலைவியின் மிக்கோனாகவோ இருத்தல் வேண்டும்.
தலைவி தன்னுடன் ஒத்த நலன்களால் சிறந்து தோன்றிய வழி தலைவனுக்கு 'இவள் - தெய்வ மகளோ?' என்ற ஐயம் தோன்றும். ஆனால் அவள் அணிந்துள்ள மாலை, அணிகலன் ஆகியவற்றைக் கண்டு அவள் மானிட மகளே எனத் தெளிவான்.' பிறகு அவள் தன்மேல் விருப்பம் கொண்டிருக்கிறாளா என அறிய அவள் கண்களை நோக்குவான். காம வேட்கையினால் அந்நான்கு கண்களும் தாம் கொண்ட காதலை உரைக்கும். ஒருவரை ஒருவர் காணும் முதற்காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சி அளவிலேயே ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடி மகிழ்வர்.
இடந்தலைப்பாடு
இயற்கைப் புணர்ச்சி எனப்படுகின்ற இருவரும் கூடி மகிழ்கின்ற நிலையை நாள்தோறும் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படும். முதல்நாள் சந்தித்த அதே இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தலைவன் சென்று காதலியைச் சந்தித்து மகிழ்வான். இதுவே இடந்தலைப்பாடு ஆகும்.
பாங்கொடு தழாஅல்
இடந்தலைப்பாடு இடையூறு இன்றி நிகழ்தல் அரிது. ஆதலால் தலைவியோடு தனக்குள்ள உறவினைப் பாங்கனுக்குக் (தோழனுக்கு) கூறுவான். பிறகு அத்தோழன் அப்பெண் எவ்விடத்தைச் சேர்ந்தவள்? எத்தன்மை உடையவள்? என வினவி, அவள் இருப்பிடம் அறிவான். அவளிடம் சென்று அத்தலைவியைக் கண்டு வருவான். கண்டு வந்து அவள் நிலையைத் தலைவனுக்குக் கூறுவான்.
தோழியில் புணர்வு
தலைவியை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து கூட விழையும் தலைவனுக்குப் பாங்கற் கூட்டம் பயன்தராது. அதனால் தலைவியோடு பழகிவரும் உயிர்த்தோழியை நட்பாக்கிக் கொண்டு அவளை இரந்து, அவள் பின் நிற்பான். பிறகு அவள் வாயிலாகத் தலைவியைக் கூடுவதே தோழியிற் புணர்வாம். இது தோழியிற் கூட்டம் எனவும் உரைக்கப்படும்.
இருவகைக் குறிகள்
தலைவியைத் தோழி குறிப்பிட்ட ஓரிடத்தில் இருக்கச் செய்து, பின்னர்த் தலைவனிடம் சென்று தலைவி தலைவனுக்காகக் காத்திருக்கும் இடத்தைக் குறிப்பிடுவாள். தலைவன் அவ்விடம் சென்று தலைவியுடன் கூடி மகிழ்வான். இக்கூட்டம் பகலில் நிகழ்ந்தால் பகற்குறி என்றும் இரவில் நிகழ்ந்தால் இரவுக் குறி என்றும் அழைக்கப் பெறும்.