Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

குறுந்தொகை 201-210

குறுந்தொகை 201,

பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி,
பால் கலப்பு அன்ன தேக் கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லியம்புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும், 5
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை, வரும் என்றாளே.

Kurunthokai 201,

Anonymous Poet, Kurinji Thinai – What the heroine said to her friend

May she feast on nectar,
the next-door lady who said he’ll come,
my lover from the mountain country,
where bats with soft, black wings and
sharp claws feed on sour gooseberries
and sweet mangoes that taste like milk,
and hang on the tall, beautiful,
thornless bamboos in nearby groves.

Notes: தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்ற தோழி, ‘வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்’ என்று கூற, ‘நான் ஆற்றியிருக்கும் வண்ணம் அயல் இல் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள். அவள் வாழ்க’ என்று தலைவி சொன்னது. குறுந்தொகை63 – அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை……..ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே.

உ. வே. சாமிநாதையர் உரை – தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபாட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்லாத மூங்கிலில் தூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பம் துய்த்த தலைவன் அவ்வின்பத்திற்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின் வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினான் என்பது.

Meanings: அமிழ்தம் உண்க – may she eat nectar, அயல் இல் – nearby house, ஆட்டி – woman, பால் கலப்பு அன்ன – like milk mixed, தேக் கொக்கு – sweet mango fruits, அருந்துபு – eat, நீல மென்சிறை – blue/black delicate wings, வள் உகிர் – strong clawed, பறவை – bats, நெல்லியம் புளி – sour gooseberries (அம் – சாரியை), மாந்தி – ate, அயலது – nearby, முள் இல் – without thorns, அம் பணை – beautiful thick, மூங்கில் – bamboo, தூங்கும் – they hang, கழை – bamboo, Bambusa arundinacea, நிவந்து ஓங்கிய – grew tall, சோலை – grove, மலை கெழு நாடனை – the man from country with mountains, வரும் என்றாள் – she told me that he will come, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 202,

அள்ளூர் நன்முல்லையார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முள் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்,
இன்னா செய்தல், நோம் என் நெஞ்சே. 5

Kurunthokai 202,

Allūr Nanmullaiyār, Marutham Thinai – What the heroine said to her friend

My heart aches! My heart aches!
Like the new flowers of the densely
growing, tiny-leaved nerunji plants
of the arid land, that appear sweet
to the eyes but yield thorns later,
my lover who used to be sweet has
become cruel now. My heart aches!

Notes: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.

Meanings: நோம் – hurts, aches, என்- my, நெஞ்சு – heart, ஏ – அசை நிலை, an expletive, நோம் – hurts, aches, என்- my, நெஞ்சு – heart, ஏ – அசை நிலை, an expletive, புன்புலத்து – in the dry land, in the mullai land, அமன்ற – closely grown, சிறியிலைநெருஞ்சி – nerunji with small leaves, Caltrop, Cow’s Thorn, Tribulus Terrestris Linn (சிறியிலை – சிறிய இலை, விகாரம்), கட்கு இன் புது மலர் – new flowers that appeared sweet to the eyes, முள் பயந்தாஅங்கு – like how they yielded horns (பயந்தாஅங்கு – இசை நிறை அளபெடை), இனிய செய்த நம் காதலர் – my lover who was sweet in the past, இன்னா செய்தல் – causing pain, நோம் – hurts, aches, என் – my, நெஞ்சு – heart, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 203,

நெடும்பல்லியத்தனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

மலை இடை இட்ட நாட்டரும் அல்லர்,
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்,
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇ ஒழுகும் என் ஐக்குப் 5
பரியலென் மன் யான், பண்டு ஒரு காலே.

Kurunthokai 203,

Nedumpalliyathanār, Marutham Thinai – What the heroine said to her friend

He’s not from a country blocked
by mountains; he is not from a
town that is far that its trees
cannot be seen.
Even though he is nearby, he avoids
me like ascetics who seek god, who
avoid the world. I was fond of him
in the past, my lover who does not
have me in his mind.
Notes: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி ‘அவர்பால் முன்பு பரிவுடையேன். இப்பொழுது அது நீங்கியது’ என்று தலைவி மறுத்துக் கூறியது. மரந்தலை (2) – உ. வே. சாமிநாதையர் உரை – மரங்கள் (தலை = அசை), தமிழண்ணல் உரை, இரா. இராகவையங்கார் உரை – மரங்களின் தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மரங்கள். கடவுள் நண்ணிய பாலோர் போல (4) – தமிழண்ணல் உரை – கடவுள் மாட்டு அன்பு பூண்டு துறவுக் கோலத்தை அடைந்தவர்கள் உலகை விட்டு மேன் மேலும் நீங்கிப் போவதைப் போல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடவுளை உளத்தாலே அணுகிய துறவிப் பகுதியினர் போன்று, உ. வே. சாமிநாதையர் உரை – முனிவரைக் கண்டால் தன் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி ஒழுகும் தன்மையைப் போல, இரா. இராகவையங்கார் உரை – தேவ குலத்தோர் இழிகுலத்தோரை வழியிற் கண்டு ஒரீஇ ஒழுகுதல் போல. மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings: மலை இடை இட்ட நாட்டரும் அல்லர் – he is not from a country that is past mountains, மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் – he’s not from a town where trees do not appear (தலை – அசைநிலை), கண்ணின் காண – to be able to see with the eyes, நண்ணுவழி இருந்தும் – although he is nearby, கடவுள் நண்ணிய பாலோர் போல – like ascetics who seek god who avoid others, like those who live near the ascetics who seek god, ஒரீஇ ஒழுகும் என் ஐக்கு – for my lover who is away from me in his mind, பரியலென் – I had soft feelings, I was fond of him, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, யான் – me, பண்டு ஒரு கால் – once upon a time in the past, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 204,

மிளைப்பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை – தலைவனிடம் தோழன் சொன்னது

“காமம், காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூது ஆ தைவந்தாங்கு,
விருந்தே காமம், பெருந்தோளோயே. 5

Kurunthokai 204,

Milaiperunkanthanār, Kurinji Thinai – What the hero’s friend said to the hero

O friend with wide shoulders!
‘Love, love’, they talk about it,
but it is not a terrible thing
or a disease!
It is a feast if you think about it,
like that tasted by an old cow
when it licks flourishing, tender,
new grass on an old, hilly mound.
Notes: காம நோயால் வேறுபட்டு மெலிந்த தலைவனைத் தோழன் இடித்துரைத்தது. குறுந்தொகை 136 – மிளைப் பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை- தலைவன் தோழனிடம் சொன்னது, காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே. காமம் காமம் என்ப (1) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் காமம் என்று அதனை அறியார் இகழ்ந்து கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர்,

தமிழண்ணல் உரை – காமம் காமம் என்று ஏதோ இழிவும் வெறுப்பும் தோன்றக் கூறுவார்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமநோய் காமநோய் என அதன் இயல்பு அறியார் அதற்கு அஞ்சி மெலிவர், இரா. இராகவையங்கார் உரை – தாழ்த்துச் சொல்ல வேண்டியது ஒன்றைக் காமம் காமம் என எடுத்துச் சொல்வர். அணங்கு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வருத்தம்,

பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வம், தமிழண்ணல் – தெய்வம் வருத்துவது போல் தாக்கி மனத்துயரை உண்டாக்குவது. பெருந்தோளோயே (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருந்தோளோய் என்றது அவன் ஆண்மையை நினைவூட்டி, நின் ஆண்மைக்கு தக மனவடக்கம் உடையை அல்ல என்று இகழ்ந்தவாறு என்க.

உ. வே. சாமிநாதையர் உரை – அறிவுடையார்பால் காமம் தோன்றாது என்றும், அறிவின்றி மனத்தின் வழியே செல்வார்க்கு அது விருந்தாவது என்றும் புலப்படுத்தி இடித்துரைத்தான்.

Meanings: “காமம், காமம்” என்ப – they say “love love” in a disrespectful manner, they say “love love” in a respectful manner, காமம் அணங்கும் பிணியும் அன்றே – that love is not a fearful or sick thing, love is not like an attacking deity or a sick matter, நினைப்பின் – when thinking, முதைச் சுவல் – ancient hilly mound/plateau, கலித்த – flourishing, முற்றா இளம் புல் – not mature/tender delicate grass, மூது ஆ – old cow, தைவந்தாங்கு – like how it licked with its tongue, விருந்தே காமம் – love is like a feast, பெருந்தோளோய் – one with broad shoulders, one with wide arms, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 205,

உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

மின்னுச் செய் கருவிய பெயன் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்குப்
பொலம் படைப் பொலிந்த வெண்தேர் ஏறிக்
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே இடு மணல் சேர்ப்பன், 5
யாங்கு அறிந்தன்று கொல் தோழி, என்
தேங்கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

Kurunthokai 205,
Ulōchanār, Neythal Thinai – What the heroine said to her friend

The lord of the shores,
where waves pile up sand, has gone,
mounted on his gold-decorated,
silver chariot whose wheels are
wet with spray from the churning
ocean waves, looking like a goose
flapping its wings and flying in the
sky with clouds that cause heavy rain
and lightning.
How did the pallor that has spread on
my honey-fragrant, beautiful forehead
know about it, my friend?

Notes: வரைவிற்கு பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்ததால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது. கருவிய (1) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய. கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58). படை (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தட்டு, பக்கத்தில் அமைத்த பலகைகளுமாம்.

Meanings: மின்னுச் செய் – causing lightning, கருவிய – with lightning and thunder, பெயன் மழை – clouds that come down as rain, தூங்க – hanging, floating, விசும்பு – sky, ஆடு – flying, அன்னம் – goose, பறை நிவந்தாங்கு – like it’s raising its wings and flying, பொலம் படை – golden ornaments, golden decorations, gold seat, பொலிந்த – splendid, beautiful, bright, வெண்தேர் – white chariot, silver chariot, ஏறி – climbing, riding, கலங்கு கடல் – churning ocean water, துவலை – water spray, ஆழி – wheels, நனைப்ப – getting them wet, இனிச் சென்றனன் – he went away, ஏ – அசை நிலை, an expletive, இடு மணல் – the sand brought to the shores, shifting sands, சேர்ப்பன் – the lord of the seashore, யாங்கு அறிந்தன்று கொல் – how did it know (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தோழி – O friend, என் – my, தேங்கமழ் – honey-fragrant, with sweet fragrance, திரு நுதல் – beautiful forehead, ஊர்தரும் பசப்பு – the spreading paleness, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 206,

ஐயூர் முடவனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது

அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன,
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்,
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே.

Kurunthokai 206, Aiyūr Mudavanār, Kurinji Thinai – What the hero said to his friend

Her beautiful sweet words
are like nectar. Even though
she is a sweet young woman,
she causes me intolerable pain.
Since it is difficult to live with
love, O friend, protect yourself
and do not go near love.
Notes: ‘காம நோயால் நீ வருந்துவது அழகன்று’ என்று இடித்துரைத்த நண்பனிடம் தலைவன் கூறியது. பாங்கனைப் பன்மையால் கூறினான்.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறிவுடையீர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

Meanings: அமிழ்தத்து அன்ன – like nectar, like amirtham (அமிழ்தத்து – அமிழ்தம், அத்து சாரியை), அம் தீம் கிளவி அன்ன – beautiful sweet words like, இனியோள் குணனும் – the nature of the sweet young woman (குணன் குணம் என்றதன் போலி), இன்ன – like this, இன்னா அரும் படர் செய்யும் ஆயின் – if it will cause intolerable great pain, உடன் உறைவு – living with it, அரிது – it is difficult, ஏ – தேற்றம், certainty, காமம் குறுகல் ஓம்புமின் – protect yourself from going near love (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), அறிவுடையீரே – O intelligent friend

குறுந்தொகை 207,

உறையனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி,
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்,
கல் வரை அயலது தொல் வழங்கு சிறுநெறி 5
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.

Kurunthokai 207,
Uraiyanār, Pālai Thinai – What the heroine said to her friend

He left suddenly,
thinking that if he told me,
it would be difficult to leave.
I heard from many friends
that he left briskly, leaving
impressions with his fine feet,
on the ancient, small path
on the rocky mountain,
where a kite, away from its flock,
sits alone on an ōmai tree
branch and cries loudly,
the only companion to those who
travel across the dry wasteland.

Notes: தலைவன் பிரிந்து செல்வான் என்பதை குறிப்பால் அறிந்த தோழி அதை தலைவிக்கு அறிவுறுத்த, அவளைத் தலைவி புலந்து கூறியது.

Meanings: செப்பினம் – if I tell her, தன்மைப் பன்மை, first person plural, செலின் – that I am leaving, ஏ – அசை நிலை, an expletive, செலவு அரிது ஆகும் என்று – that it will be difficult, அத்த ஓமை அம் கவட்டு – on the wasteland ōmai tree’s beautiful branch, Sandpaper tree, Dillenia indica, இருந்த – was there, இனம் தீர் – away from its flock, பருந்தின் புலம்பு கொள் – a kite’s lonely, தெள் விளி – clear calls, clear screechings, சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் – will be a good companion for the people who go through the wasteland, கல் வரை – rocky mountains, அயலது – nearby, தொல் வழங்கு – ancient path where people walk, சிறுநெறி – small path, narrow path, நல் அடி – fine feet, பொறிப்ப – causing marks, making footprints, தாஅய்ச் சென்றென – that he went jumping (தாஅய் – இசைநிறை அளபெடை), கேட்ட – they heard, நம் – our, ஆர்வலர் – friends, caring people, பலர் – a few, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 208,

கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

ஒன்றேன் அல்லேன், ஒன்றுவென் குன்றத்துப்
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார்
நின்று கொய மலரும் நாடனொடு,
ஒன்றேன் தோழி, ஒன்றனானே. 5

Kurunthokai 208,

Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend

I am not of a different mind.
I am of the same mind as the man
from the mountains,
where vēngai flowers blossom on
low branches of trees whose trunks
are trampled and crushed by warring
bull elephants, enabling daughters
of mountain dwellers to stand and
and pluck them to decorate their hair.
However, there is one reason for my
disagreement.
Notes: வரைவிடை வைத்துத் தலைவன் பொருள்வயின் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்ற தோழியிடம் தலைவி கூறியது. பொரு களிறு (2) – உ. வே. சாமிநாதையர் உரை – ஒன்றோடொன்று பொருதும் களிறுகள், தமிழண்ணல் உரை – புலியொடு போரிடும் களிறு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முள் போர் செய்த களிற்று யானைகள்.

உ. வே. சாமிநாதையர் உரை – பெருங்களிறு என்றமையால், தலைமகள் தமர் தலைவன் வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனர் என்பது தோன்றுகின்றது. பொருகளிறு மிதித்த வேங்கை என்றதால் வரைவு உடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்று கொய்ய மலரும் என்றதால் முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள் பட்டது. இதனால் பண்டு நமக்கு அறியனான தலைமகன் எளியனாகி அருள் செய்கின்றான் பொருள்படக் கிடந்தவாறு காண்க. மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறை உயிரோடு மலர்ந்தாற்போல் யானும் உளனேன் ஆயினேன் என்றாள் தலைமகள். உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் நின்று கொய மலருமாறு போல, கூடுங் கருத்தின்றிக் கூடிய தலைமகனால் நிலைப்பட்ட யான் எளிதில் எல்லாரும் தூற்றுமாறு உள்ளேனாயினேன் என்பதாம்.

Meanings: ஒன்றேன் அல்லேன் – I am not one who differs from him, ஒன்றுவென் – I am of the same mind, குன்றத்துப் பொரு களிறு மிதித்த – mountain’s battling elephants trampled, நெரி – crushed, தாள் வேங்கை – trees with trunks, Indian kino trees, Pterocarpus marsupium, குறவர் மகளிர் – the daughters of mountain dwellers, கூந்தல் பெய்ம்மார் – to wear on their hair, நின்று கொய – for them to stand there to pluck, மலரும் – they blossom, நாடனொடு ஒன்றேன் – I am not of the same mind with the man from such country, தோழி – my friend, ஒன்றனான் – due to one reason (due to the delay in marrying me or due to strangers asking for my hand in marriage), ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 209,

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது, தலைவி கேட்கும்படியாக

அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே
குறுநடை பல உள்ளலமே, நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் 5
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங்கூந்தல் மடந்தை நட்பே.

Kurunthokai 209,

Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine’s friend, as the heroine listened nearby

You who walks with dainty steps!
As I was coming past mountains that
are harsh to cross, where beautiful
fresh gooseberries, a boon to those
who travel, drop down and disperse,
in a place where strong tiger cubs seize,
I did not think about many things.
On the path, I thought about my
friendship with the young woman with
dark, thick hair, fragrant like the newly
unfurling buds of vetchi bushes with
curved branches that flourish in the
forest.

Notes: பொருள் முற்றி மீளும் தலைவன் தோழிக்கு உரைப்பானாய்த் தலைவிக்கு தன் அன்பின் நிலைமையை உணர்த்தியது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லிக்கனி நீர் வேட்கை தணிக்கும் இயல்புடையது. ஆதலின், பாலை நிலத்தே ஆறு செல்வோர் தம் நீர் வேட்கை தணிக்கும் நெல்லியினது காய் என்பான் ‘அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’ என்றான். குறுநடை (4) – உ. வே. சாமிநாதையர் உரை – குறுக அடியிட்டு நடக்கும் தோழி,

பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறிய நடையினுடைய தோழி கேள், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – குறுநடையை உடைய தலைவி, இரா. இராகவையங்கார் உரை – குறுநடை கொண்டு வழி நெடிதாதல் கண்டவன் மீளும்போது நட்பே நினைந்து பெருநடைக் கொண்டு வழி குறிதாதல் தேர்ந்து கூறியவாறாம்.

Meanings: அறம் – charity, தலைப்பட்ட – tops, best (in charity), நெல்லியம் பசுங்காய் –beautiful fresh gooseberries, Phyllanthus emblica, மறப் புலி – strong tiger, குருளை – cubs, கோள் இடம் – seizing place, கறங்கும் – drop and disperse, இறப்பு – to pass, அருங்குன்றம் – harsh mountains, difficult to cross mountains, இறந்த – crossed, யாம் – me, தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசை நிலை, an expletive, குறுநடை – walking with small steps, பல உள்ளலம் – I did not think about much, தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசை நிலை, an expletive, தன்மைப் பன்மை, நெறி முதல் – on the path, கடற்றில் – in the forest, கலித்த – flourishing, முடச் சினை வெட்சி – curved branches of vetchi bushes, Scarlet Ixora, Ixora Coccinea, தளை அவிழ் – loosening ties, பல் போது – a few buds, கமழும் – with fragrance, மை இருங்கூந்தல் – dark black hair, மடந்தை – young woman, நட்பே – friendship, love (பிரிநிலை ஏகாரம், exclusion)
குறுந்தொகை 210,

காக்கை பாடினியார் நச்செள்ளையார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு, 5
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

Kurunthokai 210,

Kākkai Pādiniyār Nachellaiyār, Mullai Thinai – What the heroine’s friend said to the hero

Even if we had offered seven
pots full of cooked hot, white rice,
got from all the paddy grown in
Thondi city, mixed with ghee
from the milk of many cows of
the cattle herders in the forest
of Nalli with sturdy chariots,
it would have just been a small
reward for the crow that called
out the good omen that brought
you and ended the distress that made
my friend’s thick arms become thin.

Notes: தலைவியைப் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவன், ‘நான் பிரிந்த காலத்தில் தலைவியை நன்கு ஆற்றுவித்திருந்தாய்’ என்று தோழியைப் புகழ, ‘என் செயல் ஒன்றுமின்று. காக்கை கரைந்த நல்ல நிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்’ என்று அவள் கூறியது. நள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஐங்குறுநூறு 391 – மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை! அன்புடை மரபின், நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ வெஞ்சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே. பலி (6) – உ. வே. சாமிநாதையர் உரை – காக்கைக்கு இடும் உணவைப் பலி என்றல் மரபு. வரலாறு: தொண்டி.

Meanings: திண் தேர் நள்ளி – Nalli with his sturdy chariot, கானத்து அண்டர் – forest cattle herders, பல் ஆ – many cows, பயந்த – gave, yielded, நெய்யின் – with the ghee, தொண்டி – Thondi city, முழுதுடன் – fully, விளைந்த – grown, mature, வெண்ணெல் – white rice, வெஞ்சோறு – hot rice, cooked rice, ஏழு கலத்து ஏந்தினும் – even if given in seven bowls with lifted hands, சிறிது – it is little, என் தோழி – my friend, பெருந்தோள் – thick arms, நெகிழ்த்த – caused them to become thin, செல்லற்கு – for it to go away, விருந்து வர – for guests to come, கரைந்த காக்கையது – for the cawing crow, Corvus splendens, பலி – food offerings, ஏ – அசை நிலை, an expletive

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.