Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

குறுந்தொகை 271-280

குறுந்தொகை 271,

அழிசி நச்சாத்தனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி
உற்றது மன்னும் ஒரு நாள், மற்றது
தவப் பன் நாள் தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே. 5

Kurunthokai 271,

Alisi Nachāthanār, Marutham Thinai – What the heroine said to her friend

I united with him for just one day,
trusting him,
the man from the country, where
overflowing rivers scatter heavy
droplets, like the waterfalls.
Now I am suffering for many days,
my beauty ruined and my arms thin.
This is the nature of this disease.
Notes: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனின் தூதாக வந்த தோழியிடம் தலைவி கூறுவது.

உ. வே. சாமிநாதையர் உரை – யாறு தன் துளிகளை அருவிப் போலச் சிதறிப் புறத்தே உள்ள பொருள்களுக்கு பயன்பட்டது போல, தலைவன் புறத்துள்ள பரத்தையர்க்குப் பயன்படுவான் என்பது குறிப்பு. மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4). தவ – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

Meanings: அருவி அன்ன – like waterfalls, பரு உறை சிதறி – scattering heavy drops, ஆறு நிறை – full rivers, பகரும் – they yield, நாடனை தேறி – trusting the man from such country, உற்றது – was with him, united with him, மன் – அசை நிலை, an expletive, உம் – அசை நிலை, an expletive, ஒரு நாள் – for only one day, மற்று – அசை நிலை, an expletive, அது – that, தவப் பன் நாள் – for very many days, தோள் மயங்கி – involved with the arms, வௌவும் பண்பின் – with the nature of seizing my beauty, நோய் – disease, ஆகின்று – it is, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 272,

ஒரு சிறைப் பெரியனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது

தீண்டலும் இயைவது கொல்லோ, மாண்ட
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந்தலைக் கானத்து இனம் தலைப் பிரிந்த
புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர்
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் 5
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங்கூந்தல் கொடிச்சி தோளே?

Kurunthokai 272,

Oru Sirai Periyanār, Kurinji Thinai – What the hero said to his friend

Will I ever embrace the shoulders
of the young woman with fragrant,
dark hair and kohl-lined, darting
eyes like fine, bloody arrows pulled
off the chest of an uproarious, fast stag
that was hunted, after her brothers with
very fine bows whistled, threw stones
and created a racket separating it
from its hapless doe who looked in pain,
away from the herd, in the wide forest?

Notes: இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறுவது. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).
Meanings: தீண்டலும் – to embrace (உம் – சிறப்பு), இயைவது கொல் – will I be able (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive, இரங்கல் குறிப்புமாம், மாண்ட வில் உடை வீளையர் – whistlers who carry fine bows, கல் இடுபு எடுத்த – threw stones and raised, நனந்தலைக் கானத்து – in the wide forest, இனம் தலைப் பிரிந்த புன்கண் மடமான் – a naive deer with sad eyes that is separated from its herd, நேர்பட – being in front, தன் ஐயர் – her brothers, சிலை – uproarious grunts, மாண் – esteemed, very fine, கடு விசைக் கலை – very fast stag, நிறத்து அழுத்தி – embedded in its chest, குருதியொடு பறித்த – pulled with blood, செங்கோல் வாளி – fine arrows, arrows with red shafts, மாறு கொண்டன்ன – like they differ, உண்கண் – kohl-rimmed eyes, நாறு இருங்கூந்தல் – fragrant dark hair, கொடிச்சி – the young woman from the mountain, தோள் – arms, shoulders, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 273,

சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங்காட்டு உளரும் அசை வளி போலத்
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனை ஆயின், கண்டது மொழிவல்,
பெருந்தேன் கண்படு வரையின் முது மால்பு 5
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இவ் உலகம்,
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.

Kurunthokai 273,

Siraikkudi Ānthaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her

You are worried! Let me tell you
what I see, O friend with a bright
forehead which bears the fragrance
of the gently moving breeze that
caresses at night the huge forest
where buds with pollen gleam!
This world is not stupid, like the
ignorant man who climbs on an
old bamboo ladder to reach large
honeycombs on a mountain top.
For us to live, he will not leave us
Know this clearly!
Notes: தலைவன் பிரித்துச் செல்வான் என்று வருந்திய தலைவியிடம் தோழி கூறுவது.
உ. வே. சாமிநாதையர் உரை – முதுமால்பு அறியாது ஏறிய மடவோன் சிறிது ஏறிப் பின் அவ்வேணியின் இயல்பு அறிந்து அஞ்சி மீண்டும் இறங்குவன். அதுப் போல சேய் நாடு சென்று வினை முற்றுகை கருதிய தலைவன் தலைவியைப் பிரிதலை எண்ணி அப்பிரிவு தலைவியின் உயிர் அழிவையும் அதனால் தனக்கு இன்னாமையும் தருதலை அறிந்து செலவு தவிர்த்தான். வரை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரை என்றது மலை உச்சியை. Kurunthokai 273, Kalithokai 39 and Puranānūru 105 have references to bamboo ladders used in the mountains. They were used to collect honey.

Meanings: அல்குறு பொழுதில் – at night time, தாது – pollen, முகை – buds, தயங்க – splendid, bright, shining, பெருங்காட்டு உளரும் – embracing the huge forest, அசை வளி போல – like the blowing winds, தண்ணிய கமழும் – with cool fragrance, ஒள் நுதலோய் – O one with bright brow, ஏ – அசை நிலை, an expletive, நொந்தனை ஆயின் – if you are worried, கண்டது மொழிவல் – let me tell you what I see (மொழிவல் – தன்மை ஒருமை வினைமுற்று), பெருந்தேன் – large honey combs, கண்படு வரையின் – on the mountain top, முது மால்பு – old bamboo ladder (கண்ணேணி), அறியாது ஏறிய மடவோன் போல – like a stupid man who climbed without knowing, ஏமாந்தன்று இவ் உலகம் – this world is not stupid, நாம் உளேம் ஆக – for us to live, பிரியலன் – he will not leave, தெளிமே – you should know this clearly (மே – முன்னிலை அசை, an expletive of the second person)

குறுந்தொகை 274,

உருத்திரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

புறவுப் புறத்து அன்ன புன் கால் உகாஅய்க்
காசினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றிக் கோடு இவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் 5
இன்னாக் கானமும் இனிய, பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் உள்கினம் செலினே.

Kurunthokai 274,

Uruthiranār, Pālai Thinai – What the hero said to his heart

The wasteland is a harsh place
where ukā trees with dried trunks,
the color of a pigeon’s back, shower
down dense, gem-like berries when
cruel bandits climb on their branches
with their arrows that are shot, along
with bows, to look for those who travel,
and to peel their barks and chew them
to quench their desire for water.
However, it will be a sweet place if we
go there thinking of her chest with fine
breasts, the young woman whose loins
are adorned with jewels made of gems
mixed with gold.
Notes: பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் கூறியது. புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது. குறியதன்இறுதிச்சினைகெடஉகரம்அறியவருதல்செய்யுளுள்உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32). நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

Meanings: புறவுப் புறத்து அன்ன – like the backsides of a pigeon/dove (புறத்து – புறம், அத்து சாரியை), புன் கால் உகாஅய் – ukāy trees with dried trunks, Toothbrush Tree, Salvadora persica (உகாஅய் – இசை நிறை அளபெடை), காசினை அன்ன நளி கனி உதிர – dropping many coin-like fruits, dropping dense gem-like fruits (ஐகாரம் அசை நிலை), விடு கணை வில்லொடு பற்றி – holding arrows that are shot along with bows, கோடு இவர்பு – they climb on branches, வருநர்ப் பார்க்கும் – looking for those who come, வன்கண் ஆடவர் – harsh men (the bandits), நீர் நசை வேட்கையின் – goaded by desire for water, நார் மென்று தணியும் – they chew the barks and satisfy their thirst, இன்னாக் கானமும் – even the harsh forest, இனிய – it will be sweet, பொன்னொடு மணி மிடை அல்குல் – jewels made with gems mixed with gold are on her loins/waist, மடந்தை – young woman, அணி முலை – pretty breasts, ஆகம் – chest, உள்கினம் செலின் – if we think and go, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 275,

ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறிக்
கண்டனம் வருகம், சென்மோ தோழி,
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணி கொல்லோ?
செய் வினை முடித்த செம்மல் உள்ளமொடு 5
வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி கொல், ஆண்டு இயம்பிய உளவே?

Kurunthokai 275,

Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine’s friend said to her

My friend! Let’s climb on the
boulders covered with jasmine
vines to see whether he’s returning.
I hear the sounds of bells!
Are they tied on the cows returning
to the town in the evening after
grazing with their herds with bulls?
Or, are the sounds from his
chariot bells as he rides on wet sand
on the path, protected by his young
warriors with strong bows, his heart
satisfied upon completion of his task?
Notes: பருவ வரவின்கண் நல்ல நிமித்தம் தோன்றத் தோழி கூறியது. செம்மல் உள்ளமொடு (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நிறைவுடைய உள்ளத்தோடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமை பொருந்திய நெஞ்சத்தோட. ஈர் மணல் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈர் மணல் என்றது, கார்ப்பருவத் தொடக்கம் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று. நற்றிணை 182 – நன் மார்பு அடைய முயங்கி மென்மெல கண்டனம் வருகம் சென்மோ தோழி, நற்றிணை 335 – குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி கண்டனம் வருகம் சென்மோ தோழி.

Meanings: முல்லை ஊர்ந்த – jasmine vines have spread, jasmine covered, Jasminum sambac, கல் உயர் ஏறி – climbing on the rocks, கண்டனம் வருகம் – let us find out and come (கண்டனம் – முற்றெச்சம், finite verb), சென்மோ – let us go (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), தோழி – my friend, எல் – evening, ஊர் சேர்தரும் – reaching the town, ஏறுடை இனத்து – of the cattle herds with bulls, புல் ஆர் நல் ஆன் – good cows that eat grass, பூண் மணி கொல் – are they from the bells that are tied (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive, செய் வினை முடித்த – finished his tasks he set out to do, செம்மல் உள்ளமொடு – with a satisfied heart, with a great heart, வல் வில் இளையர் – young warriors with strong bows, பக்கம் போற்ற – nearby to protect, ஈர் மணல் – wet sand, காட்டாறு – forest stream, வரூஉம் – coming (இன்னிசை அளபெடை), தேர் மணி – chariot bells, ஆண்டு – there, இயம்பிய – sounding, உள – are there, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 276,

கோழிக் கொற்றனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது

பணைத்தோள் குறுமகள் பாவை தைஇயும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்து மற்றிவள்
உருத்தெழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில், காப்போர் அறிதலும் அறியார்,
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து 5
யான் தன் கடவின் யாங்கு ஆவது கொல்?
பெரிதும் பேதை மன்ற,
அளிதோ தானே, இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 276,

Kōli Kotranār, Kurinji Thinai – What the hero said

Those who protect her do not
know that I made a doll for the
young woman with arms like
bamboo, scouring the wetlands
for reeds, and painted bright
thoyyil designs on her beautiful,
budding breasts.
What will happen if I ask her
about it in a just king’s court?
This uproarious town is ignorant
and pitiful, for sure!
Notes: தோழியின்பால் தலைவியைக் காணும்பொருட்டு குறை இரந்த தலைவன், அவள் அதை மறுக்காது ஏற்றுக்கொள்ளும் வகை சூழ்ந்து சொல்லியது. கலித்தொகை76 – செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய் என்று அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ. அழுங்கல் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆரவாரம், உ. வே. சாமிநாதையர் உரை – வருத்தம். ஊர் (8) – உ. வே. சாமிநாதையர் உரை, தமிழண்ணல் உரை – ஊர் தோழியைக் குறிக்கும்.

உ. வே. சாமிநாதையர் உரை – இனி மடல் ஏறிச் சான்றோர் அறிய வழுக்குரைத்துத் தலைவியை மணம் புரிவேன் என்று தோழி அறியும்படி முன்னிலைப் புறமொழியாகக் கூறியது. Thoyyil is the custom of painting on the arms and breasts of women. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings: பணைத்தோள் – bamboo-like arms, thick arms, குறுமகள் – young girl, பாவை – doll, தைஇயும் – created (தைஇ – சொல்லிசை அளபெடை), பஞ்சாய் – with reed, with panchāy grass, பைஞ்சாய், கோரைப்புல், Cyperus rotundus tuberosus, பள்ளம் சூழ்ந்து – growing around the pits, மற்று – அசை நிலை, an expletive, இவள் – her, உருத்து எழு – beautifully shaped, வன முலை – splendid breasts, ஒளிபெற – brighten, எழுதிய – drawn, தொய்யில் – thoyyil designs, காப்போர் – those who protect her, அறிதலும் அறியார் – don’t know, முறையுடை அரசன் – a just king, செங்கோல் அவையத்து – in his court with a just scepter, யான் தன் கடவின் – if I question her, if I urge her to tell, யாங்கு ஆவது – what will happen, கொல் – அசை நிலை, an expletive, பெரிதும் பேதை – very ignorant, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, அளிது – it is pitiable, ஓ – அசை நிலை, an expletive, தான் – அசை நிலை, an expletive, ஏ – அசை நிலை, an expletive, இ அழுங்கல் – this uproarious, ஊர் – town, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 277,

ஓரில் பிச்சையார், பாலைத் திணை – தோழி சொன்னது

ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடைச்
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓரில் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ! நீயே 5
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை
எக்கால் வருவது என்றி,
அக்கால் வருவர் எம் காதலோரே.

Kurunthokai 277,

Ōril Pichaiyār, Pālai Thinai- What the heroine’s friend said to a wise man

O you who go to a single house
on our blemishless street and
beg, standing in a large courtyard
with no dogs!
May you receive perfect rice balls
with pure white ghee to eat until
you are full!
May you receive warm water
desirable in this early dew season,
to store in your water pot!
Telll me when the north wind will
come, making my friend whose waist
is like a flash of lightning to tremble?
That is when her lover will come!
Notes: தோழி அறிவரிடம் கேட்டது. அறிவர் – உ. வே. சாமிநாதையர் உரை – துறவு உள்ளமும் முக்காலத்தையும் அறியும் ஆற்றலுடைய பெரியோர் ஆவர், தமிழண்ணல் உரை – இவர்கள் பிச்சை ஏற்று வாழும் துறவிகள். பிற்காலச் சித்தர்கள் இவர்தம் கால் வழியினர் போலத் தெரிகிறது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பண்டைக் காலத்தே தமிழ்நாட்டின்கண் உலகத்தை நீத்து இறைவன் ஆகிய பொருள் ஒன்றனையே பற்றி நின்று வீடுபெறும் சான்றோர் என்பதுணர்க. மறுவில்செய்திமூவகைக்காலமும்நெறியின்ஆற்றியஅறிவன் (தொல்காப்பியம், புறத்திணையியல் 20)
Meanings: ஆசு இல் தெருவில் – in the street without blemish, நாய் இல் – without dogs, வியன் கடை – large entry area, large gate, செந் நெல் அமலை – red or perfect rice balls, வெண்மை வெள் இழுது – white ghee, ஓர் இல் பிச்சை – food given in one house, ஆர மாந்தி – eating to the full, அற்சிர வெய்ய – desirable for the early dew season, வெப்பத் தண்ணீர் – warm water, சேமச் செப்பில் – in the water-saving pot, பெறீஇயர் – may you get (இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, verb ending with a command, used to praise, சொல்லிசை அளபெடை), ஓ – அசை நிலை, an expletive, நீயே – you, மின் இடை – lightning-like waist, நடுங்கும் – trembling, கடைப் பெயல் வாடை – cold season when last rains fall, எக்கால் வருவது என்றி – when you say it will come (என்றி – முன்னிலை ஒருமை), அக்கால் வருவர் – he will come at that time, எம் – her, காதலோர் – lover, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 278,

பேரி சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும் உள்ளார்,
கொடியர் வாழி தோழி, கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து 5
ஏற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

Kurunthokai 278,

Pēri Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend

May you live long, my friend!
He does not think about my new
little doll with delicate, small feet
that look like the lovely, tender
leaves of sprouted mango trees
that shake in strong winds, nor
does he think about me.
He is cruel, the man who crossed
the mountains,
where a male monkey shakes off
ripe sweet fruits from a tree, and
a female monkey stands below with
her young and catches them again
and again and eats.
Notes: தலைவன் பிரிந்த வேளையில், நீ ஆற்றுதல் வேண்டும் என்று கூறும் தோழியிடம் தலைவி கூறியது.
தமிழண்ணல் உரை – இதிலுள்ள குரங்கின் வாழ்க்கை ‘இறைச்சி’ எனப்படும். ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறையாகும் வருந்திய பொழுதே (தொல்காப்பியம், பொருளியல் 35) என்பதற்கு தகுந்த காட்டாகும் பாட்டு இது. பார்ப்பு – மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பாலான (தொல்காப்பியம், மரபியல் 14). கோடுவாழ் குரங்கு குட்டியுங் கூறுப (தொல்காப்பியம், மரபியல் 13).

Meanings: உறு வளி உளரிய – strong wind shakes them, strong winds passes through them, அம் – beautiful, தளிர் – sprouts, மாஅத்து – of mango trees (அத்து சாரியை), முறி கண்டன்ன – like seeing the tender leaves, மெல்லென் சீறடி – delicate small feet, சிறு பசும் பாவையும் – and the small fresh doll, and the small new doll, எம்மும் உள்ளார் – he does not think about me as well (எம் – தன்மைப் பன்மை, first person plural), கொடியர் – he is a cruel man, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – O friend, கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்ப – as a male monkey shakes off ripe fruits, கீழிருந்து ஏற்பன ஏற்பன – receives it again and again from down, உண்ணும் – eats, பார்ப்புடை மந்திய – with a female monkey with young ones, மலை – mountains, இறந்தோர் – the man who went past, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 279,

மதுரை மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தலைவி சொன்னது

திரி மருப்பு எருமை இருள் நிறம் மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி
புலம்புகொள் யாமத்து இயங்குதொறும் இசைக்கும்
இது பொழுதாகவும் வாரார் கொல்லோ,
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் 5
துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகித்
திருந்து இறைப் பணைத்தோள் உள்ளாதோரே.

Kurunthokai 279,

Mathurai Maruthan Ilanākanār, Mullai Thinai – What the heroine said

The clear bells with gaping mouths,
tied on the thick neck of a buffalo
with twisted horns, its body as dark
as night, ring clearly whenever it
moves during the lonely nights,
when he should have returned.
He did not give any thought to my
bamboo-like arms and elegant wrists,
my lover who crossed many tall
mountains, where boulders that are
not washed by rains,
appear bright like elephants with dust.
Notes: தலைவன் பிரிந்த காலத்தில் நீ ஆற்றுதல் வேண்டும் என்றுரைக்கும் தோழியிடம் தலைவி கூறியது. இருள் நிறம் மை ஆன் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இருள் போன்ற நிறத்தினையும் உடைய கார் எருமையாகிய ஆன், ஆன் எருமை பசு இரண்டிற்கும் பொதுவாய்ப் பெண்பாலை உணர்த்துவது ஆதலின் ‘எருமைக் கார் ஆன்’ என்றாள். எருமையாகிய கரிய ஆன் என்க. அகநானூறு 41 – வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப. பாறையும் யானையும்: அகநானூறு 57 – இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 – பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 – பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 – மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 – துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 – கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 – மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 – பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 – புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம்.

Meanings: திரி மருப்பு எருமை – a buffalo with twisted horns, இருள் நிறம் மை ஆன் – a buffalo with the color of darkness, வருமிடறு – growing neck, யாத்த – tied, பகுவாய்த் தெண் மணி – wide-mouthed clear bells, clear bells with split ends, புலம்புகொள் யாமத்து இயங்குதொறும் இசைக்கும் – sounds in the lonely nights whenever it moves, sounds in the sad nights whenever it moves, இது பொழுதாகவும் – at this time, வாரார் – he has not come, கொல் – அசை நிலை, an expletive, ஓ – அசை நிலை, an expletive, மழை கழூஉ மறந்த – forgotten to be washed by rains (கழூஉ – இன்னிசை அளபெடை), மா இரும் துறுகல் – huge black boulders, துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் – they appear bright/splendid like elephants with dust on their bodies (யானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இரும் பல் குன்றம் போகி – crossed few huge mountains, திருந்து இறை – perfectly curved forearms, பணைத்தோள் உள்ளாதோர் – man who does not think about my bamboo-like arms, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 280,

நக்கீரர், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது

கேளிர் வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெரும் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம்,
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. 5

Kurunthokai 280,

Nakeerar, Kurinji Thinai – What the hero said to his friend

May you live long O friend!
If I could unite with love,
with the woman with beautiful,
soft hair, small delicate body
and thick arms, who has seized
my heart, for just a day, I will not
desire to live even for half a day
more.

Notes: இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது. கேளிர் வாழியோ கேளிர் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேளிர் அண்மை விளி. தக்கது மொழிந்திலை என்னும் செறலானே இருமுறை விளித்தான், கேளிர் – கேண்மை உடையீர்.

Meanings: கேளிர் – O friend, வாழி – my you live long, ஓ – அசை நிலை, an expletive, கேளிர் – O friend, நாளும் – always, என் நெஞ்சு பிணிக் கொண்ட – one has seized my heart, அம் சில் ஓதி – beautiful delicate hair, பெரும் தோள் குறுமகள் – young girl with thick arms, சிறு மெல் ஆகம் – tiny delicate chest, ஒரு நாள் புணரப் புணரின் – if I can unite with her for just a day with complete love, அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யான் – I do not need even half a day of life (உம்மை – இழிவு சிறப்பு), ஏ – அசை நிலை, an expletive

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.