Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

குறுந்தொகை 281-290

குறுந்தொகை 281,

குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வெண்மணல் பொதுளிய பைங்கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடிக்,
குன்றுதலை மணந்த கானம் 5
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே?

Kurunthokai 281,

Kudavāyil Keerathanār, Pālai Thinai – What the heroine said to her friend

O friend wearing beautiful gold
jewels! Has our man gone to the
forests with mountains wearing
splendidly, on his curly locks,
clusters of white flowers of the
desert neem tree, braided with a
tender white frond from the top
of a palmyra tree, its trunk round,
its fronds green and saw-edged,
thriving on the white sand?

Notes: தலைவன் பிரிந்தவிடத்து நீ ஆற்றுதல் வேண்டும் என்றுரைக்கும் தோழியிடம் தலைவி கூறியது.

இரா. இராகவையங்கார் உரை – போந்தை சேரர்க்குரியது. வேம்பு பாண்டியர்க்குரியது. ஆர் சோழர்க்குரியது. ஒன்றேசூடிப்பகைதெரிதல்வேண்டியாகுமென்றுஇதுதன்னுறுதொழிலின்நட்பாதல்தெரியமூன்றுஞ்சூடிச்சேரல் கூறினாள். உளைத்தலை (4) – தமிழண்ணல் உரை – தலை உச்சி, உ. வே. சாமிநாதையர் உரை – மயிரையுடைய தலை. அகநானூறு (83) – சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி, உளைத்தலை – அகநானூறு உரைகள் – வேங்கடசாமி நாட்டார் உரை – உளை போன்ற மயிரினையுடைய தலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை தலையாட்டம் போன்று அசையும்படி தலை மயிரின் மேல். அத்த வேம்பின் அமலை வான் பூ (3) – உ. வே. சாமிநாதையர் உரை- வேம்பு பாலை நிலத்திற்குரியது. வேம்பின் பூவினைக் கூறினமையின் தலைவன் பிரிந்த பருவம் இளவேனில் என்று பெறப்படும்.

Meanings: வெண்மணல் பொதுளிய – thriving on the white sand, பைங்கால் – green bases, கருக்கின் – with saw-edged fronds, sharp edged leaves, கொம்மை – round, thick, போந்தைக் குடுமி – palmyra tree top, Borassus flabellifer, வெண்தோட்டு – with white fronds, அத்த வேம்பின் – of the neem trees of the wasteland, Neem tree, Azadirachta indica, அமலை வான் பூ – abundant white flowers, dense white flowers, சுரி ஆர் – with curls, உளைத்தலை பொலியச் சூடி – wearing them beautifully on the hair on this head (தலை – உ. வே. சாமிநாதையர் உரை, அசை நிலை, இடமுமாம்), wearing them splendidly on the hair on his head, குன்றுதலை மணந்த கானம் – the forests with mountains, சென்றனர் கொல் – did he go (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive, சேயிழை – O one wearing beautiful jewels (அன்மொழித்தொகை), O one wearing perfect jewels, நமர் – our man, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 282,

நாகம் போத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

செவ்வி கொள் வரகின் செஞ்சுவல் கலித்த
கௌவை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கை வளை
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு அவிழ்ந்த 5
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல் புகுவ போலச்
சோர்குவ அல்ல என்பர் கொல் நமரே?

Kurunthokai 282,

Nākam Pōthanār, Pālai Thinai – What the heroine’s friend said to her

When your lover looks at the cool
fields drenched by rains,
where the wind sways the plants
creating noise, and watches a young
deer grazing during the day,
on perfectly mature millet plants
growing luxuriantly on a red mound,
and chewing a deep black leaf of a
single stalk, just enough to satisfy
its hunger,
will he think that the bangles on your
arms, do not get loose and drop down
like the hollow, pretty, white koothalam
flowers that bloom all at once on the
mountain slopes with abundant rain
water.

Notes: தலைவன் வினைவயிற் பிரிந்த பொழுது தோழி கூறியது.

தமிழண்ணல் உரை – ‘கார் எதிர் தண் புனம்’ என்றது தலைவி தன்னை எதிர்நோக்கி இருப்பதை நினைவூட்டும் என்னும் குறிப்புடையது. வெண் மலர்கள் உதிரும் போது, சங்கு வளையல்கள் கழல்வது கண்ணெதிரே தோன்றாமலா போய் விடும் என்பது தோழியின் கருத்து.

உ. வே. சாமிநாதையர் உரை – மான்மறி தன் இளமையினால் ஓரிலையைக் கவ்வுதலோடு அமைந்தது. மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings: செவ்வி கொள் வரகின் – of millet at a perfect stage, Common millet, Paspalum scrobiculatum, செஞ்சுவல் – red mound, கலித்த கௌவை நாற்றின் – of the flourishing noisy millet grass (due to the winds, கௌவை – ஒலி), கார் இருள் – pitch black, ஓர் இலை – one leaf, நவ்வி – deer, நாள் – day, மறி கவ்வி – a fawn chews, கடன் கழிக்கும் – performs its duty, satisfies its hunger, கார் எதிர் தண் புனம் – cool fields that have accepted rain, காணின் – if he sees, கை வளை – bangles on the arm, நீர் திகழ் சிலம்பின் – on the mountains with abundant waters, ஓராங்கு – all at the same time, அவிழ்ந்த – bloomed, வெண்கூதாளத்து – with koothālam flowers, Convolvulus, Ipomea, அம் தூம்பு – beautiful and hollow, புது மலர் – new flowers, ஆர் கழல் புகுவ போல – like dropping off the stems, சோர்குவ அல்ல – will not loosen and slip down, என்பர் கொல் – will he think (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), நமர் – our man, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 283,

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

‘உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்,
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு’ எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர், வாழி தோழி, என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் 5
ஆற்றிருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படு முடை பருந்து பார்த்திருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே.

Kurunthokai 283,

Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine said to her friend

May he live long, O friend!
After telling me, “Those who
waste away what they have are
not wealthy people.
Those who live off inheritance
are worse than beggars,”
he went with determination to earn
wealth, across the vast ancient land
with no water, where wayside bandits
with spears, expert murderers, kill
like Kootruvan, those who go on the
paths where kites wait for flesh.
Notes: தலைவன் பொருள்வயின் பிரிந்த பொழுது தலைவி சொன்னது.

Meanings: உள்ளது சிதைப்போர் – those who ruin wealth, those who waste away wealth, உளர் எனப்படாஅர் – they are not called wealthy people (எனப்படாஅர் – இசை நிறை அளபெடை), இல்லோர் வாழ்க்கை – those who don’t have (but live off the wealth of their ancestors), இரவினும் இளிவு – it is lower than begging, என – thus, சொல்லிய வன்மை – said with strength, தெளியக் காட்டி – showed clearly, சென்றனர் – he went, வாழி – may he live long, தோழி – my friend, என்றும் – always, கூற்றத்து அன்ன – like the god of death, like Kootruvan (கூற்றத்து – கூற்றம், அத்து சாரியை), கொலை வேல் மறவர் – wayside bandits with murderous spears, ஆற்றிருந்து அல்கி – staying on the path, வழங்குநர் – those who went on (on the path), செகுத்த – destroyed, killed, படு முடை – flesh of those killed (முடை – தசை, ஆகுபெயர்), பருந்து – kites, பார்த்திருக்கும் – they expect and wait, நெடு மூது இடைய – long ancient land, நீர் இல் ஆறு – waterless paths, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 284,

மிளைவேள் தித்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

பொருத யானைப் புகர் முகம் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங்காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ, தம் இலர் கொல்லோ, 5
வரையில் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் இலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே?

Kurunthokai 284,

Milaivēl Thithanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her

Will they blame us, for your
love for the man from the country,
……….where bright, red glory lilies
……….have blossomed and spread
……….in abundance on boulders
……….in the town’s common land,
……….appearing like spots on
……….the faces of battle elephants,
whether he is honest or not,
the people in the small village,
where pure white waterfalls flow
down the mountain side, near the
huts made of fierce leaves?
Do they not have any intelligence of
their own?
Notes: வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த வேளையில் தோழி உரைத்தது. கொன் இலைக் குரம்பையின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீணே இலை வேய்ந்த குடிலின்கண், உ. வே. சாமிநாதையர் உரை – அச்சத்தைத் தரும் இலையால் வேய்ந்த குடிலின்.

இரா. இராகவையங்கார் உரை – சேய்மைக்கண் யானைப் புகர் முகம் போலக் காணப்பட்டு அணுகிய நிலையில் துருகற்காந்தள் ஆயினாற் போல, நாடன் நெருங்காத நிலையில் அறவன் அல்லன் போல நினையப்பட்டு நெருங்கிய நிலையில் அறவனாகத் தெரியப்படுவான் என்று கருதினாளாம்.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – துறுகல் மிசைச் செங்காந்தள் மலர்ந்திருத்தல், பொருது புண்பட்ட யானை முகத்திற்கு உவமை. பொருதல் தொழில் இல்லாத துறுகல்லைப் புண்ணுடைய முகம் போலச் செங்காந்தள் தோன்றச் செய்தது போலப் பழியற்ற நம்மைப் பழியுடையராகக் கூறுவர் என்பது குறிப்பாகக் கொள்க. மலையிடத்தே வீழும் வெள்ளருவி பயன்மிக்க பொழிலிடத்தே வீழாது கொன்னே இலைக்குரம்பையின் வீழ்ந்தாங்கு இவர்களும் பயனில்லாது நம்பழி தூற்றாநின்றனர் என்பது குறிப்பு.

Meanings: பொருத யானை – battling elephants, புகர் முகம் கடுப்ப – like their spotted faces (கடுப்ப – உவம உருபு, a comparison word), மன்றத் துறுகல் – boulders in the town’s common grounds, மீமிசை – on top, above, ஒருபொருட் பன்மொழி, பல உடன் – with many, ஒண் செங்காந்தள் – bright red glory lilies, Gloriosa superba, அவிழும் – blooms, நாடன் – man from such country, அறவன் ஆயினும் – if he is honest, அல்லன் ஆயினும் – or not honest, நம் ஏசுவரோ – will they blame us, தம் இலர் கொல்லோ – do they not have intelligence of their own (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt, ஓ – அசைநிலை, an expletive), வரையில் – on the mountains, தாழ்ந்த வால் வெள்ளருவி – flowing down pure white waterfalls, கொன் இலைக் குரம்பையின் – near huts made with leaves that cause fear, near huts made with abundant leaves, இழிதரும் – flows (near it), இன்னாது இருந்த – causing suffering, இச் சிறுகுடியோர் – those in this small settlement

குறுந்தொகை 285,

பூதத் தேவனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வைகல் வைகல் வைகவும் வாரார்,
எல்லா எல்லை எல்லையும் தோன்றார்,
யாண்டு உளர் கொல்லோ தோழி? ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே, பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி இன் புறவு 5
இமைக்கண் ஏது ஆகின்றோ, ஞெமைத்தலை
ஊன் நசைஇ ஒரு பருந்து இருக்கும்,
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

Kurunthokai 285,

Pootha Thēvanār, Pālai Thinai – What the heroine said to her friend

He does not come when dawn turns
to day. He does not appear when the
day ends. I wonder where he is, my
friend!
This is the season that he said he
would be back.
A male pigeon calls out over and over
to his mate with a tawny colored back.
In an instant they find pleasure!
He crossed tall, bright mountains
that reach up to the skies where a lone
kite, desiring flesh, awaits on top of a
gnemai tree.

Notes: பருவங்கண்டு வருத்திய தலைவி கூறியது.

உ. வே. சாமிநாதையர் உரை – ஆண் புறா, பெண் புறாவின் அருகிருந்து அழைத்து இன்புறுதலைத் தலைவரும் கண்டிருதல் கூடும் என்பதும் அக்காலத்து தன்னை நினைத்து மீண்டிலரே என்பதும் தலைவியின் எண்ணம். புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது. குறியதன்இறுதிச்சினைகெடஉகரம்அறியவருதல்செய்யுளுள்உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32). பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

Meanings: வைகல் வைகல் வைகவும் வாரார் – he does not come on the days when dawn turns to day time, எல்லா எல்லை எல்லையும் தோன்றார் – he does not appear on all the days when days reach their end (nights), யாண்டு உளர் கொல் – where is he (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தோழி – O friend, ஓ – அசை நிலை, an expletive, ஈண்டு இவர் சொல்லிய பருவம் – this is the season when he said that he will be back, ஓ – அசை நிலை, an expletive, இதுவே – it is this, பல் ஊழ் – many times, புன் புறப் பெடையொடு – with its female with a dull back, with its female with a small back, பயிரி – calls, இன் புறவு – sweet pigeon/dove, இமைக்கண் ஏது ஆகின்று – in an instant there is pleasure, in an instant what has happened, ஓ – அசை நிலை, an expletive, ஞெமைத்தலை – on top of the gnemai tree, a wasteland tree, ஊன் நசைஇ – desiring flesh (நசைஇ – சொல்லிசை அளபெடை), ஒரு பருந்து இருக்கும் – a kite is there, வான் உயர் – sky high, பிறங்கல் – bright, மலை இறந்தோர் – the man who crossed the mountains, ஓ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 286,

எயிற்றியனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது

உள்ளிக் காண்பென் போல்வல், முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் அஞ்செவ்வாய்க், கமழ் அகில்
ஆர நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக் கண் கொடிச்சி,
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. 5

Kurunthokai 286,

Eyitriyanār, Kurinji Thinai – What the hero said

When I think of my young woman
from the mountains, I can see her
nectar-filled mouth, sharp teeth, flowing
hair as fine as sand with the fragrances
of akil and sandal woods, proud looks,
large, alluring, moist eyes and delicate
smile.

Notes: தலைவன் தோழியிடம் அல்லது தன் தோழனிடம் கூறியது. அறல் போல் கூந்தல்: அகநானூறு 142 – அறல் அன்ன இரும் பல் கூந்தல், அகநானூறு 162 – அறல் என அவிரும் கூந்தல், அகநானூறு 213 – அறலென நெறிந்த கூந்தல், அகநானூறு 265 – அறலின் நெறித்த கூந்தல், அகநானூறு 299 – அறல் மருள் கூந்தலின், குறுந்தொகை 116 – தேம் பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண் மணல் அறல் வார்ந்தன்ன, குறுந்தொகை 286 – அறல் போல் கூந்தல், கலித்தொகை 71 – கதுப்பு அறல், கலித்தொகை 98 – நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, பொருநராற்றுப்படை 25 – அறல் போல் கூந்தல்.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமிழ்தம் ஊறும் செவ்வாய் என்றதும் ஆர நாறும் அறல் போல் கூந்தல் என்றதும் அவையிற்றைத் தான் நுகர்ந்தமைக் குறிப்பால் உணர்த்திற்று. இது முன்னுறு புணர்ச்சி முறையுற மொழிந்தமையாதல் காண்க. பண்டு நுகர்ந்து கண்ட யான் இன்று நினைவு மாத்திரையானே காண்பவன் ஆகின்றேன் என்பான், ‘உள்ளிக் காண்பென் போல்வன்’ என்றான். பேர் அமர் மழைக் கண் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய விருப்பத்தைச் செய்யும் குளிர்ந்த கண்கள்.

Meanings: உள்ளிக் காண்பென் போல்வல் – when I think about her I seem to see, முள் எயிற்று – with sharp teeth, அமிழ்தம் ஊறும் – nectar secreting, அம் செவ்வாய் – beautiful red mouth, கமழ் அகில் – aromatic akilwood, Eaglewood, ஆர – sandalwood, sandal, Santalum album, நாறும் – with the fragrance, அறல் போல் கூந்தல் – fine back sand like hair, பேர் அமர் மழைக் கண் – large calm/loving wet eyes, கொடிச்சி – mountain girl, மூரல் முறுவலொடு – with a delicate smile, மதைஇய நோக்கு – proud looks, elegant looks (மதைஇய – சொல்லிசை அளபெடை, நோக்கே – ஏ அசை நிலை, an expletive)

குறுந்தொகை 287,

கச்சிப்பேட்டு நன்னாகையார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

அம்ம வாழி தோழி, காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ,
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல, நீர் கொண்டு 5
விசும்பி இவர்கல்லாது தாங்குபு புணரிச்
செழும் பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே?

Kurunthokai 287,

Kachipēttu Nannākaiyār, Mullai Thinai – What the heroine’s friend said to her

May you live long, O friend!
Listen!
Will your lover come back now
on seeing the rainclouds carry water
and rise up together with uproar
over the lush mountains and not the
sky,
like women in their first pregnancy
who carry their babies for twelve
months, who are unable to walk,
tired, and pining for green tamarind?
Yes! He will come back on time!
Notes: கூறிய பருவத்தில் தலைவன் வருவான் என்றது. துறக்குவர் கொல்லோ (2) – உ. வே. சாமிநாதையர் உரை – எதிர்மறைப் பொருளது. ஐங்குறுநூறு 51 – புளிங்காய் வேட்கைத்தன்று நின் மலர்ந்த மார்பு, இவள் வயாஅ நோய்க்கே. அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

பொ. வே. சோமசுந்தரனார் உரை – மேகங்கள் விசும்பில் இவர மாட்டாது குன்றம் நோக்கிச் சென்றன என்க. தலைவன் நெடிது நாள் நின்னைப் பிரிந்து உறைதலானே தன் உளத்தே முதிர்ந்த காமத்தின் பொறையாலே ஆண்டு உறைதல் ஆற்றாது நின்னை நோக்கி விரைந்து வருவன் என்னும் குறிப்பும் கொள்க. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings: அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – O friend, காதலர் – your lover, இன்னே – now, கண்டு – on seeing it, துறக்குவர் கொல்லோ – will he abandon, will he stay away, he will come back (கொல் – அசைநிலை, an expletive, ஓ – வினா, a question), முந்நால் திங்கள் – three times four months, a year, நிறை – full, பொறுத்து – bearing, அசைஇ – tired (சொல்லிசை அளபெடை), ஒதுங்கல் செல்லா – unable to walk, பசும் புளி வேட்கை – desire for green tamarind, Tamarindus indica, கடுஞ்சூல் மகளிர் போல – like women in their first pregnancy, நீர் கொண்டு – carrying water, விசும்பி இவர்கல்லாது – not going toward the sky, தாங்குபு – they carry, புணரி – they get together, செழும் பல் குன்றம் நோக்கி – toward the lush mountains, toward the rich mountains, பெருங்கலி வானம் – uproarious clouds, ஏர்தரும் – rising up, பொழுது – at that time, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 288,

கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து
குரங்கு ஒருங்கி இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன் ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ,
இனிதெனப்படூஉம் புத்தேள் நாடே? 5

Kurunthokai 288,

Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend

The man from the tall mountain
country, where pepper vine grows,
and troops of monkeys eat their
tender leaves, is a sweet person.
Is it sweeter, the affliction that
loved ones bring, than the so-called
celestial world? Yes, it is sweeter!
Notes: தலைவனின் வரவை உணர்ந்து, ‘அவன் அன்பிலன்’ என்று கூறிய தோழியிடம் ‘அவன் செய்வன இனியவை’ என்று உரைத்தது. இனிதோ (4) – உ. வே. சாமிநாதையர் உரை – ஓகாரம் எதிர்மறைப் பொருளது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – தளிர் அருந்தும் குரங்கு மிளகுத் தளிரையும் தின்னுதலும் அத்தளிர் உறைப்புச் சுவை உடையதாயினும் ஏனைத் தளிரினும் உடலாக்கம் தருவதும் போல, யாமும் தலைவன் செயல்களில் சில துன்பம் தருவதாயினும் அதுவே ஆக்கம் தருவதாம் என்று அமைதல் வேண்டும் என்பாள், ‘என்றாள்.

Meanings: கறி வளர் – black pepper growing, மிளகு, Piper nigrum, அடுக்கத்து – in the mountain ranges, in the mountain slopes, ஆங்கண் – there, முறி – tender leaves, அருந்து – eat, குரங்கு ஒருங்கி இருக்கும் – monkeys are together, பெருங்கல் நாடன் – the man from the country with tall mountains, இனியன் – he is a sweet man, ஆகலின் – hence, இனத்தின் இயன்ற – loved ones create, இன்னாமையினும் – even more than the pain, இனிதோ – is it sweeter, yes it is sweet, இனிதெனப்படூஉம் – the one that’s called sweet (இனிதெனப்படூஉம் – இன்னிசை அளபெடை), புத்தேள் நாடு – celestial world, heaven, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 289,

பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மை இன் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே, 5
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும் இவ்வழுங்கல் ஊரே.

Kurunthokai 289,

Perunkannanār, Mullai Thinai – What the heroine said to her friend

Like the waxing moon,
it increases more and more,
this disease I am afflicted with,
as I am ruined, like a crushed
sprout. It has caused the bangles
on my forearms to slip down.
Since he is not near me, I am
distressed.
Not only that, the rain, mistaking
the season, is confused, and has
started to fall.
Even before it did that, the folks in
in our town worried about me, more
than I worry about him.
Notes: தலைவன் குறித்த பருவத்தில் வரவில்லை என்று வருந்திய தோழியிடம் கூறியது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனது வருத்தங் கண்டு கவல்கின்ற தோழியையே ஈண்டு அழுங்கள் ஊர் என்றாள். ஊர் என்பது ஊரில் உள்ளார்க்கு ஆகுபெயராய் நின்று குறிப்பாலே தோழியை உணர்த்தியது. அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings: வளர்பிறை போல – like the waxing moon, வழிவழிப் பெருகி – increasingly more and more, இறை வளை நெகிழ்த்த – it has made the bangles on my forearms to slip, எவ்வ நோயொடு – with this painful disease, குழை பிசைந்தனையேம் ஆகி – I have become like a sprout that is crushed (பிசைந்தனையேம் – தன்மைப் பன்மை, first person plural), சாஅய் – became thin (இசை நிறை அளபெடை), உழையர் அன்மை இன் – since he is not near me, உழப்பது அன்றியும் – not only am I sad, மழையும் – also this clouds/rain, தோழி – my friend, மான்று – in a confusing manner, பட்டன்று – it rained, ஏ – அசை நிலை, an expletive, பட்ட மாரி – rain which fell, படாஅக் கண்ணும் – even before it fell (படாஅ – இசை நிறை அளபெடை), அவர் திறத்து இரங்கும் – worrying because of him, நம்மினும் – more than I do, நம் திறத்து இரங்கும் – worrying more for me, இ அழுங்கல் – uproarious, ஊர் – town, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 290,

கல்பொரு சிறுநுரையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

காமம் தாங்குமதி என்போர், தாம் அஃது
அறியலர் கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம் எம் காதலர்க் காணேம் ஆயின்,
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு நீர்க்
கல் பொரு சிறு நுரை போல, 5
மெல்ல மெல்ல இல்லாகுதுமே.

Kurunthokai 290,

Kalporu Sirunuraiyār, Neythal Thinai – What the heroine said to her friend

Those who tell me to bear
the pain of love, do they not
know it, or are they that
strong?
If I cannot see my lover, deep
pain spreads in my heart.
Like a wisp of foam that crashes
against rocks in a heavy flood,
I become nothing, little by little.
Notes: தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்று கூறிய தோழியிடம் கூறியது.

உ. வே. சாமிநாதையர் உரை – இது படர்கையிற் கூறினும் தோழியைக் கருதியதே ஆதலின் முன்னிலைப் புறமொழி. மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).
Meanings: காமம் தாங்குமதி என்போர் – those who tell me to bear the pain of love (மதி – முன்னிலையசை, an expletive of the second person), தாம் – அசை நிலை, an expletive, அஃது அறியலர் கொல் – do they not know it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive, அனை மதுகையர் கொல் – are they that strong (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), யாம் எம் காதலர்க் காணேம் ஆயின் – if I do not see my lover, செறி துனி பெருகிய நெஞ்சமொடு – with a heart filled with great sorrow, பெரு நீர் – heavy flood, கல் பொரு – crashing against the rocks, hitting on the rocks, சிறு நுரை போல – like a little piece of foam, மெல்ல மெல்ல – little by little, இல் ஆகுதும் – I become nothing (ஆகுதும் – தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசை நிலை, an expletive

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.