Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

குட்டி கதைகள் 1-10

தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்

 

ஒரு ஊருலஒரு முனிவர் இருந்தாரு.ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் ”தெரியலயேப்பா’ன்னு”ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.

 

அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லணும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

 

கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது. அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.

 

மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.

 

இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.,

 

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.

 

அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?

 

ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன், ” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.,

 

இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.

 

கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான்.

 

இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிது.

 

நீதி:

 

நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,

 

அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம்.

 

தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

 

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

 

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

 

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

 

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.

"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

 

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

 

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

 

 

நன்றி மறந்த சிங்கம்

 

 

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

 

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

 

"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.

 

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

 

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

 

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

 

"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

 

"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

 

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

 

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்

பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.

 

"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

 

"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.

 

அம்மோது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

 

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த

 

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

 

"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

 

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து

விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.

 

"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.

 

 

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

 

"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

 

"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

 

"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.

 

"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

 

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

 

"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

 

"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.

 

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

 

நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.

 

 

மூளை இல்லாத கழுதை

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.

 

சிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது? சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே?”, என்று யோசித்தது.

 

யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.

 

உடனே சிங்கம் நரியை வரவழைத்தது.

 

“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.

 

நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.

 

“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா? அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.

 

 

நரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.

 

சிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.

 

சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க போயிட்ட?” என்றது.

 

 

“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்?என்ன விஷயம்?” என்று கழுதை கேட்டது.

 

“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.

 

“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும்? ஆளை விடு” என்றது கழுதை.

 

“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.

 

அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.

 

நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.

 

கழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.

 

 

சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?” என்று சிங்கத்திடம் நரி கூறியது.

 

சிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.

 

 

நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.

 

 

குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது?உள்ளே ஒன்றுமே இல்லையே?” என்று சிங்கம் கேட்டது.

 

 

“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.

 

சிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்?பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.

 

“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.

 

நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.

 

 

இந்தியா ஏன் குப்பைக் காடாக இருக்கிறது

 

ஒரு அரசன் தன் நாட்டில் மிகப் பெரிய கோயில் ஒன்றைக் கட்டினான். அதன் கோபுரத்தை போன்னால் வேய்ந்தான்.

 

அத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்குக் குடமுழுக்கு (கும்பாபிடேகம்) செய்ய நாள் குறிக்கப்பட்டது.

 

அரசனுக்கு ஒரு அவா (ஆசை) எழுந்தது, ‘இத்தனை பெரிய பொன்னால் வேய்ந்த கோயிலுக்கு வெறும் நீரை ஊற்றியா குடமுழுக்கு செய்வது?’

 

எனவே முழுக்க முழுக்க பாலை ஊற்றிக் குடமுழுக்கு செய்யலாம் என்று எண்ணினான்.

 

உடனே நாடு முழுவதும் தண்டோரா போடச் செய்தான்:

 

“அரசர் கட்டியுள்ள பெருங்கோயிலுக்குக் குடமுழுக்கு செய்வதற்கு நிறைய பால் தேவை, நாட்டு மக்கள் அனைவரும் குடும்பத்திற்கு ஒரு செம்பு பால் கொண்டு வந்து தர வேண்டும்… டும் டும் டும்…”

 

மக்கள் பாலைக் கொண்டு வந்து கொட்டுவதற்காக அரண்மனை வாயில்முன் இரண்டு பெரிய ஆளுயர குண்டாக்கள் வைக்கப்பட்டன.

 

அவற்றைக் காவல் காக்க வீரர்களும், பால் கொடுப்போரைக் கணக்கெடுக்க அரசு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.

 

குண்டாக்கள் உயரமாக இருந்ததால் மக்கள் அவற்றுள் பாலை ஊற்ற வாகாய் இரண்டு ஏணிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

 

மக்களும் அரசனது ஆணையை ஏற்று குடும்பத்திற்கு ஒருவராக வந்து ஒரு சொம்பு பாலைக் குண்டாவினுள் ஊற்றிச் சென்றனர்.

 

அரசு அலுவலர்கள் அவ்வாறு ஊற்றுவோரைக் குறித்துக் கொண்டனர் (’ஆதார் எண்ணை வைத்து’ என்று ஒரு நகைச்சுவைக்காகச் சொல்வேன்!)

 

சோமு என்ற ஒருவன் சிந்தித்தான், ‘அனைவரும் பாலைக் கொட்டுகின்றனர், நான் சொம்பில் நீரைக் கொண்டு போய்க் கொட்டினால் என்ன? குண்டா நிறைய பாலில் ஒரு சொம்பு நீர் கலந்தால் தெரிந்துவிடுமா என்ன? குண்டாவோ உயரமாக இருக்கிறது, காவல் புரியும் வீரர்கள் தரையில்தான் நிற்கின்றனர், நான் ஊற்றுகிறேன் என்று ஒலியை வைத்துத் தெரிந்துகொள்வார்களே அன்றி, பாலை ஊற்றுகின்றேனா நீரை ஊற்றுகின்றேனா என்று எப்படித் தெரியும்…’

 

இவ்வாறு எண்ணி அவன் ஒரு சொம்பில் நீரைக் கொண்டு சென்று ஊற்றிவிட்டு வந்தான்.

 

குடமுழுக்கிற்காகக் குறித்த நாளன்று வேள்வி முதலிய சடங்குகளையெல்லாம் முடித்துக்கொண்டு கோபுரங்களில் பொழிய குண்டாக்களில் இருக்கும் பாலைக் கொண்டு வரும்படி அரசன் ஆணையிட்டான்.

 

வீரர்கள் கொண்டு வந்த குண்டாவிற்குள் ஒரு குடத்தைவிட்டு மொண்ட போது அதில் கலப்படமில்லாத தூய…

 

நீர் இருந்தது!

 

ஆம், இரண்டு குண்டாக்களிலும் முழுக்க முழுக்க நீர்தான் இருந்தது!

 

நாட்டு மக்கள் அனைவரும் சோமுவைப் போலவே எண்ணிவிட்டிருந்தனர்.

 

’அனைவரும் பாலை ஊற்றப் போகின்றனர், நான் ஒருவன்/ஒருத்தி நீரை ஊற்றினால் என்ன ஆகிவிடப் போகிறது’ என்று அனைவரும் நீரையே ஊற்றியிருந்தனர்!

 

கதை சொல்லும் நீதி என்ன?

 

 

இந்தியா ஏன் குப்பைக் காடாக இருக்கிறது?

 

‘நான் ஒருவன் இந்தச் சிறிய குப்பை காகிதத்தைக் கீழே போடுவதால் இந்தியா குப்பை ஆகிவிடப் போகிறதா?’ என்று எண்ணி 130 கோடி பேரும் சாலையில் குப்பையைக் கொட்டினால் இந்தியா குப்பையாகத்தான் இருக்கும்!

 

 

தத்துவக்காரத் தவளையும் ஆயிரங்கால் அட்டையும்..!

 

ஒரு ஊரில் ஒரு தத்துவம் பேசிக் கேள்வி கேட்கும் தவளை இருந்தது. அதற்கு எல்லாவற்றையும் கேள்வி கேட்பதே வேலை. அந்தத் தவளை இன்று யார் நம்மிடம் மாட்டுவார்கள் என்று ஒரு தோட்டத்தினூடே தாவிக் குதித்தபடி சென்று கொண்டிருந்தது.

 

ஒரு ஆயிரங்காலட்டை எந்தப் பரபரப்புமின்றி சிவனே என்று ஊர்ந்து வந்துகொண்டிருந்தது.

 

தவளையின் தத்துவத் தர்க்க மூளைக்குத் தீனி கிடைத்து விட்டது.

 

"ஆஹா .. ஆயிரங்காலட்டையாரே நலமா..?"

 

'என்னிடமென்ன இவனுக்கு அக்கறை.?' உள்ளே நினைத்தபடி,

 

"நலந்தான்..!" என்றது அட்டை.

 

"நாலுகால்களை வைத்துக்கொண்டே நான் சிலவேளையில் தடுமாறுகிறேன். அதெப்படி நீ இத்தனை கால்களை வைத்துக் கொண்டு சீராக நடக்கிறாய்..?"

 

தவளையின் கேள்வி உள்ளே புகுந்த மறுகணமே அட்டை திகைத்தது.

 

"இதென்ன கேள்வி..? இப்படி நான் யோசித்ததே கிடையாது. என்பாட்டில் நடப்பேன். அவ்வளவுதான்..!"

 

"என்னது உன்பாட்டில் நடப்பாயா..? எப்படி..? எந்தக் காலை முதலில் நகர்த்துவாய்..? எதை இரண்டாவதாக வைப்பாய்..? முப்பத்துமூன்றாவது காலை எப்போது நகர்த்துவாய்..? பதில் சொல்..!"

 

ஒரேதாவலில் ஒரு பாறையில் போய் அமர்ந்தபடி கேள்வியைக் கேட்டுவிட்டுக் குதர்க்கமாகச் சிரித்தது தவளை.

 

அட்டை திகைத்தது. 'எந்தக்காலை முதலில் வைப்பேன்..? எது அடுத்தது..? எப்படிச் சீராக நடந்தேன்..?' யோசிக்க யோசிக்கப் பைத்தியமே பிடிக்காத குறை அட்டைக்கு.

 

ஊர முயற்சித்தது. கால்கள் சிக்கிக் கொண்டன. ஒரு அடியும் நகர முடியாமல் சுருண்டு கிடந்தது அட்டை.

 

'ஆஹா..! இன்று நம் வேலை முடிந்தது. அடுத்தது யார் மாட்டுவார்களென்று பார்க்கலாம்..!' வக்கிரமான மகிழ்ச்சியோடு தாவி மறைந்தது தத்துவத் தவளை.

 

நீதி: சாதாரணமாக இயல்பாகச் சரியாக நாம் செய்யும் செயல்களைக் கேள்வி கேட்டுக் குழப்பவென்றே சில தத்துவக்காரத் தவளைகள் அலையும். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

 

 

*நீரும் மீனும்*

 

*கடலில் வாழும் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை*

 

''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய். அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது.

 

உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது.

 

குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை !

 

''அம்மா! நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் அது சொல்ல, மறுபடியும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.

 

அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை!

 

உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது.

 

அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட, அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது!

 

பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது ! எல்லோரும் ஒரே பதிலையே சொல்ல, திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது!

 

உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது.

 

கரை நோக்கிச் சென்ற திமிங்கலம், குட்டி மீனை கரையில் தள்ளியது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது!

 

அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது.

 

அப்போது தான் குட்டி மீனுக்கு தண்ணீர், தண்ணீராகத் தெரிந்தது.

 

நீதி :

 

நம்முடனே இருப்பதால் அப்பா, அம்மா, சகோதர உறவு, நட்பு இப்படி நாம் உறவுகளை உணர்வது இல்லை. அவர்கள் பிரிந்த பின் புரிந்து கொள்வதில் பலன் இல்லை.

 

 

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே

 

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன் மகனை அழைத்து சொன்னார், "மகனே, இது உனது பூட்டனின் (தாத்தாவின் அப்பா) கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று, கைக்கடிகார கடையில், நான் இதனை விற்க போகிறேன், இதற்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்டுப்பார்" என்றார்.

 

 

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 300 ரூபாய் மட்டுமே தரமுடியும் என்கின்றனர், என்றான்.

 

தந்தை, பழங்கால பொருட்கள் (Antique) விற்கும் கடைக்கு போய் கேட்டுப்பார், என்றார்.

 

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், இதற்கு 5,000 ரூபாய் தரமுடியும் என்கின்றனர், என்றான்.

 

தந்தை, இதனை அருங்காட்சியகம் (Museum) கொண்டுசென்று விலையை கேட்டுப்பார், என்றார்.

 

அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், நான் அங்கு சென்று கேட்ட போது, அவர்கள் அதனை பரிசோதனைக்கு உட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி 5,00,000 ரூபாய் என்கின்றனர், என்றான்.

 

தந்தை மகனை பார்த்து, "மகனே! சரியான இடம் தான், உன் அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

 

உன்னுடைய மரியாதையை திறனை அறிந்தவனே உன்னை கண்ணியமாக நடத்துவான். உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே. இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்." என்றார்.

 

 

திட்டமிடாத வேலை பயனற்ற வேலை

 

ஒருவன் நெடுஞ்சாலையில் 3 அடி இடைவெளி விட்டுக் குழியைத் தோண்டிக்கிட்டேப் போனானாம். இன்னொருவன் தோண்டியக் குழியை மண் போட்டு மூடிக்கிட்டேப் போனானாம்.

 

ஒரு பெரியவர் பார்த்து, 'என்னப்பா அங்கே என்ன வேலை நடக்குது?'ன்னுக் கேட்டாராம். அதற்கு அவன், 'அரசாங்க வேலை நடக்குது சார்' ன்னு சொன்னானாம்.

 

'ஒருத்தன் குழியைத் தோண்டறான், இன்னொருத்தன் அதை மூடறான். அர்த்தமில்லாம இருக்கே'ன்னுக் கேட்டாராம்.

 

அதுக்கு அவன், "நான் விபரம் சொல்றேங்க. 3 அடி தூரத்துக்குக் குழி தோண்டுவது ஒருத்தன் வேலை. அதிலே செடியை நடவேண்டியது இன்னொருத்தன் வேலை. அப்புறம் மண்ணைப் போட்டு மூடுவது 3வது ஆள் வேலை. அந்த 2 வது ஆள் இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டான். அதுக்கு நான் என்னப் பண்ண முடியும்னு?"க் கேட்டானாம்.

 

அதுக்குப் பெரியவர், 'இதை உன் அதிகாரிகிட்டேச் சொல்லேன்' என்றாராம்.

 

எங்க அதிகாரிக்கிட்டேச் சொன்னால், உன் டியூட்டியை நீ ஒழுங்காப் பாரு. அடுத்தவனைப் பத்தி நீ ஏன் கவலைப்படறேன்னு சொல்லிட்டார்ன்னு சொன்னானாம்.

 

திட்டமிடாத, ஒழுங்குப்படுத்தப்படாத, பயனற்ற வேலைகளினால்தான் குழப்பம் வருகிறது, வளர்ச்சியும் தடைப் படுகிறது..

 

 

 

உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

 

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது.

 

ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

 

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

 

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.

 

ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள் " என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

 

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.

 

கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

 

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

 

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

 

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

 

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.