கிணறு வாங்கிய குமார்
குமார் கிணறு ஒன்றைசுப்பிரமணியத்திடம் இருந்து விலைக்கு வாங்கினார்.
மறுநாள் கடைத்தெருவில் குமார் போய்க் கொண்டிருந்த போது, விற்றவன் அவரைச் சந்தித்தார்.
"அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களைப் பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல.
ஆகையினால் அந்தத் தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
உடனே குமார் சற்று யோசித்துவிட்டு, தயங்காமல் "நேத்து நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதாப் போச்சு! எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம்.
ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரைக் காலிபண்ணி வெறும் கிணற்றை மட்டும் …. எனக்குக் கொடுங்கள். இல்லையென்றால் எனக்குச் சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றான் ..
அவ்வளவுதான் சுப்பிரமணியம் முகத்தில் ஈ ஆடவில்லை
பேராசை கொண்டவனுக்கு இப்படிதான் ஆகும் ..
கோவக்காரஇளைஞன்
ஊரில் இருந்த ஞானியிடம் சென்று கோவத்தை கட்டுப்படுத்த வழி கேட்டான்.
ஞானி அவனிடம் சில ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்து எப்போதெல்லாம் கோவம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த ஆணிகளை எடுத்து உன் வீட்டு சுவற்றில் அடி என்றார்.
இளைஞன் தினம் 10,9,6,4,2,1 என ஆணிகளை அடித்து விட்டு ஞானியிடம் சென்று இன்று ஒரு ஆணிகளை கூட அடிக்கவில்லை என்றான்.
அவர் இனிமேல் கோவம் வராத நாட்களில் ஒவ்வொரு ஆணியாக பிடிங்கி விடு என்றார்.அவனும் அதையே செய்தான்.50 தினங்கள் கடந்து ஞானியை சந்தித்த இளைஞன் இன்று ஒரு ஆணியும் இல்லை பிடுங்குவதற்கு என்று பெருமையுடன் கூறினான்.
அதற்கு அந்த ஞானி கேட்டார்.
அடித்த ஆணிகளை எல்லாம். பிடிங்கிவிட்டாய். அதனால் சுவற்றில் ஏற்பட்ட காயங்களை என்ன செய்யப்போகிறாய் என்று. இளைஞன் வெட்கி தலை குனிந்தான்.
கோவப்படுவது எளிது அதனால் ஏற்படும் காயங்களை போக்குவது கடினம்.
மூட்டை காட்டிய இன்ப துன்பம்
ஒருவனுக்கு வாழ்வில் பல துன்பங்கள் அதனால், கடவுளிடம் ஏன் எனக்கு மட்டும் இத்தனை துன்பங்கள்? மற்ற அனைவரும் சந்தோசமாக இருக்க நான் மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டு அழுது கொண்டிருந்தான்.
அப்போது இறைவன் அவன் முன் தோன்றி, இன்று இரவு உன்னுடைய இன்ப, துன்பங்களை எல்லாம் ஒரு மூட்டையில் போட்டு ஊருக்கு வெளியே இருக்கும் காட்டுக்கு வா என்று கூறினார்.
அவனும் அவனுடைய இன்ப,துன்பங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்த காட்டுக்கு சென்றான். அங்கு சென்று பார்த்த போது அந்த ஊரில் இருந்த அனைவரும் அவனை போலவே நிறைய மூட்டைகளை கட்டிக் கொண்டு வந்திருந்தனர். அவனுக்கோ ஆச்சரியம்.
அனைவரின் மூட்டைகளையும் ஒவொன்றாக பார்த்தான். அவனுக்கு மிகுந்த குழப்பமும் வேறு, இவர்களும் எதற்கு வந்தார்கள்? ஏன் இத்தனை மூட்டைகள் வைத்திருக்கிறார்கள்? அதில் இருப்பவை இன்பங்களா? துன்பங்களா? என்று.
அப்போது இறைவன் அனைவரின் முன்பு தோன்றினார். அனைவரும் இறைவன் நமது மூட்டையை வாங்கி கொள்வார் என்று நினைத்தார்கள். ஆனால் இறைவன், "உங்களுக்கு யாருடன் விருப்பமோ அவர்களுடன் மூட்டையை மாற்றிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
யாருமே மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அனைவரும் அமைதியாக இருந்தனர். அப்போது இறைவன் அவனிடம் "ஏன் நீ உன் மூட்டையை மாற்றிக் கொள்ளவில்லை?" என்று கேட்டார்.
இவன் அவர்களிடம் இருக்கும் மூட்டைகள் என்னுடையதை விட பெரியதாக இருக்கிறது, அதில் எவ்வளவு இன்பங்கள், துன்பங்கள் என்றும் தெரியவில்லை. அதனால் நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறினான்.
அப்போது தான் அவன் உணர்ந்தான், அனைவரின் வாழ்க்கையும் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தவை. அவை இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று.
அதை உணர்த்தவே இறைவன் அனைவரையும் வரவழைத்துக்கிருக்கிறார் என்றும் புரிந்து கொண்டான். அவனை போல அங்கு வந்த அனைவரும் உணர்ந்தனர்.
உலகில் சண்டை சச்சரவுகள் எதனால் ஏற்படுகிறது
ஒரு ஊரில் ஒரு பெண் வசித்து வந்தார்.அவளுக்கு உலகில் சண்டை சச்சரவுகள் எதனால் ஏற்படுகிறது என்ற சந்தேகத்துடன் இருந்தாள்.பலரிடம் தன் சந்தேகத்திற்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை.
ஒருநாள் துறவி ஒருவர் அவள் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார்.
அவள் துறவியிடம் தன் சந்தேகத்திற்கான பதிலை கேட்டாள்.
உடனே துறவி அவளிடம் "பிச்சை கேட்டால் அதைப்போடாமல் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறாயே உனக்கு வேறு வேலையில்லையா?" என்றார்.
உடனே அப்பெண் "ஏய் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுக்கும் உனக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பா?" என்று அவரோடு சண்டையிட ஆரம்பித்தாள்.
துறவி சிரித்து கொண்டே"பெண்ணே நான் கூறிய ஒருசில கடுஞ்சொல்லுக்கே இப்படி திட்டித்தீர்க்கிறாயே.. மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது வாய்ச்சொல் தான்.இதை உனக்கு புரியவைக்கவே எதிர்மறையான வார்த்தைகளை கூறினேன் என்றார்.
நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் என்றார் துறவி.
அப்பெண் துறவியிடம் மன்னிப்பு கேட்டு தானும் இனிமேல் நாவடக்கத்துடன் இருப்பேன் என்று கூறினாள்.
ஒற்றை பத்துரூபாய்நோட்டு எங்கே ?
ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார்.
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............
அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான்
----------
பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
*கருத்து :
நம்மில் பலர் இப்படித்தான் கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி அலைந்து உடலும் மனமும் சோர்ந்து அல்லலுறுகிறோம்.*
நல்லதை தந்தால் நல்லது வரும்
ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்… அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... வாடிக்கையாக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்.
முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!
பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை; ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!காரணம், ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க... அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!....
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!
அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! "கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி…அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி. அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க.. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன். "இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, ...
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது...."தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்... அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது! இது தான் உலகநியதி!
நாம் எதை தருகிறோமோ…
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,... தீமையை தந்தால் தீமை வரும்! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா....
நிச்சயம் வரும்! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதை..
தூணில் கட்டபட்ட பூனை
ஆதி காலத்தில் குரு ஒருவர், தம் நண்பர் வீட்டில் பூனை குட்டி இருப்பதை பார்த்து அவரிடம் ஒரு குட்டி பூனையை வாங்கி வளர்த்து வந்தார்.
அது குறும்புக்கார பூனையாக போனது எனவே, தினமும் போதனை செய்யும் போது பூனை இடையே வந்து தொந்தரவு செய்தது.
அவர் சீடர்களுக்கு கற்றுகுடுக்கும்போது பூனை தொந்தரவு செய்யாமல் இருக்க பூனையை ஒரு தூணில் கட்டி பக்கத்தில் பால் வைத்துவிடுவார். அதுவும் சமத்தாக தொந்தரவு செய்யாமல் இருக்கும்.
சிறிது காலம் சென்றவுடன் குரு இறந்து விட்டார். அவரது சீடர்களில் ஒருவர் புதிய குருவாக வந்து விட்டார். அவரும் அவரது குருவைப் போலவே அந்த பூனையை தூணில் கட்டிவிட்டு சீடர்களுக்கு பாடம் எடுத்து வந்தார்.
சிறிது காலம் கழித்து புதிதாக ஒருவர் சீடராக வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த சிறிது காலத்திற்கு பிறகு அந்த புதிய குரு இறந்து விட்டார். புதிதாக வந்த சீடர் எப்படியோ குரு ஆகி விட்டார். அவருக்கு இந்த பூனையை பற்றி எதுவும் தெரியாது. கற்க வேண்டிய எல்லாவற்றையும் முழுதாக கற்கவும் இல்லை. எப்படியோ அவருக்கு தெரிந்ததையும் தோன்றியதையும் வைத்து அவரது சீடர்களுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டு வந்தார்.
இப்போது அந்த பூனை இறந்து விட்டது.
நமது அரைகுறை குரு, பூனை என்பது ஒரு குருவாக இருப்பவருக்கு அவசியம் போலவே அதனால் தான் நமது முந்தைய குருக்களும் பூனை வைத்திருந்தார்கள் மேலும் இதை இந்த தூணில் கட்டவேண்டும் போல, இந்த பூனை இறந்துவிட்டது எனவே நாம் வேறு ஒரு பூனை வாங்கி வந்து இதே தூணில் கட்டி விடுவோம் என நினைத்தார்.
புதிதாக ஒரு பூனை வாங்கி வந்து தூணில் கட்டிவிட்டு போதனை எடுக்க தொடங்கி விட்டார்.
அவருக்கு பின்னால் வந்தவர்களும் பூனையை தூணில் கட்டுவதை தொடர்ந்து விட்டார்கள்...
கருத்து:
எதை செய்தாலும் புரிந்து செய்ய வேண்டும்.
இந்த கதை வேடிக்கையாக இருந்தாலும், இதிலும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது.
சரியாக புரிதல் இல்லாமல் நம் சமூகத்தில் இப்படிதான் ஏராளமான மூடநம்பிக்கைகள் முளைத்து கிடக்கிறது.
எலிகளிடமிருந்து கோவணத்தை பாதுகாப்பது எப்படி ?
ஒரு குரு தன் சிறந்த சீடர் ஒருவரை ஒரு ஆற்றங்கரையில் ஒரு குடிசையில் விட்டுச் சென்றார். அந்த சீடருக்கு ஒரு கோவணம் மட்டுமே உடமையாக இருந்தது. அருகிலுள்ள ஊரில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவர் தினமும் காலையில் குளிக்கும்போது அந்த கோவணத்தைத் துவைத்து காயப்போட்டு உடுத்தி கொள்வார். ஒருநாள் காயப்போட்டிருந்த அவருடய கோவணத்தை எலி கடித்துவிட்டது கண்டு ரொம்ப விசனப்பட்டார். சாப்பாட்டுடன் ஒரு கோவணமும் பிச்சை எடுக்க வேண்டியதாயிற்று.. எலி தொல்லையைப் போக்க ஒரு பூனை வளர்க்க ஆரம்பித்தார். அதனால் தன் உணவோடு பூனைக்குப் பாலும் பிச்சை கேட்க வேண்டியிருந்தது. என்ன செய்யலாமென்று யோசித்து ஒரு பசுவை வளர்க்க ஆரம்பித்தார். இப்போது பசுவுக்கு புல்லும் பிச்சை எடுக்க வேண்டியிருந்தது. அதனால் குடிசையைச் சுற்றியுள்ள நிலத்தைக் கொத்தி புல் வளர்க்க ஆரம்பித்தார். இதனால் அவருக்கு தியானம் செய்யக்கூட நேரம் இல்லாமல் போய் விட்டது. அதனால் சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டார். அவர்களை மேற்பார்வை செய்ய நேரம் இல்லாததால் தனக்கு உதவி செய்ய ஒரு மனைவி வேண்டுமென்று திருமணம் செய்து கொண்டார். கொஞ்ச காலத்திலேயே அவர் ஊரில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராகிவிட்டிருந்தார்.
ஒருநாள் குரு அந்த ஊர் பக்கம் வர நேர்ந்தது. தான் விட்டுச் சென்ற சீடரின் குடிசை இருந்த இடத்தில் ஒரு அரண்மனை போன்ற வீட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இந்த இடத்தில் என் சீடரின் குடிசை அல்லவா இருந்தது என்று தன் உதவியாளர்களிடம் கேட்டார். அதற்குள் அவருடைய சீடர் வெளியே வந்து ஆமாம் என்றார். குரு கொஞ்சம் கடுப்பாகி இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றார்.
சீடரோ ”சொன்னால் நம்பமாட்டீர்கள் குருவே. எலிகளிடமிருந்து என் கோவணத்தை பாதுகாக்க வேறு வழியே தெரியவில்லை ” என்றார்.
புல்லின் நிறம் நீலம்
ஒரு காட்டில், ஒரு கழுதைக்கும் புலிக்கும் வாக்குவாதம்.
கழுதை சொன்னது: புல்லின் நிறம் நீலம் என்று. புலி சொன்னது பச்சை என்று. வாக்குவாதம் முற்றி யாரும் யாரையும் சமாதானப்படுத்த முடியவில்லை.
அப்போது இரண்டு விலங்குகளும் சிங்கராஜாவிடம் சென்றன. சென்ற உடனே, யாரும் பேசும் முன், கழுதை “நான் புல்லின் நிறம், நீலம் என்று சொல்கிறேன்.. இந்த முட்டாள் புலி, பச்சை என்கிறது.” என்று கத்த ஆரம்பித்து விட்டது.
உடனே சிங்கராஜா, புலியை சிறைக்கு அனுப்பி தண்டனை கொடுத்தது. கழுதை, மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றது.
பின்னர், புலி சிங்கராஜாவை சந்தித்த போது, நடந்த உரையாடல்:
புலி: சிங்கராஜா, புல்லின் நிறம் பச்சை தானே?
சிங்கராஜா: ஆம்
புலி: பின்னர், சரியாக சொன்ன எனக்கு ஏன் தண்டனை கொடுத்தீர்கள்?
சிங்கராஜா: உனக்கு சரியாக சொன்னதற்காக தண்டனை கொடுக்கவில்லை. நீ ஒரு முறை சொல்லி இருக்கலாம், அல்லது இரண்டு முறை சொல்லி இருக்கலாம். அதை விட்டு விட்டு, இந்த அற்பமான விசயத்திற்காக, ஒரு முட்டாள் கழுதையுடன் தர்க்கம் செய்து, இங்கு வரை வந்து, என் நேரத்தையும், உன் நேரத்தையும் வீணடித்து இருக்கிறாயே.. அந்த முட்டாள்தனத்திற்கு தான்!!