அந்தப்புர அறையின் நிலைக்கண்ணாடி முன்பாக அழகு பார்த்துக் கொண்டு சொர்ண பிம்பம் போல் காட்சியளித்த சொர்ணாதேவியைப் பின்புறமாக அணுகிய ஸங்கன், சற்று எட்டவே நின்று, அவள் இணையற்ற எழிலில் இதயத்தைப் பறிகொடுத்து நீண்ட நேரம் சிந்தனையில் நின்றான். அந்த மங்கையின் சிந்தையை அள்ளும் கவர்ச்சி வளைவுகள் திடீரென வீசப்பட்ட மாய வலைபோல ஸங்கன் புத்தியைக் கனவேகத்தில் கவர்ந்து கொண்டதால், மேவாரிலிருந்த தந்தையின் அபாய நிலையைப் பற்றிய எண்ணமும் ஓரளவு அந்த மாய வலைக்குள் மறையவே செய்தது. கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிந்ததெல்லாம், எதிரே நின்ற அந்த மோகன உருவந்தான்.
அவள் அணிந்திருந்த மாற்றுடை சாதாரண வெண் பட்டுப் புடவைதான். மஞ்சாளற்றில் நீராடிய சமயத்தில் நனைந்து விட்ட கூந்தலின் அடிப்புறங்களை உலர்த்தக் கூந்தலுக்கு நடுவில் மாத்திரம் சிறு பின்னல் போட்ட அடியில் அதை முடிந்திருந்ததால், கூந்தல் ஓரளவு விரிக்க கிடந்தது. விரிந்த பகுதியில் செருகப்பட்ட செண்பகப் புஷ்கங்கள் இரண்டு, கூந்தலின் கருமைக்கிடையே மஞ்சள் இதழ்களை விரித்துக்கொண்டு படுத்திருந்தன. அந்த மஞ்சள் புஷ்பங்களைக் கவனித்த ஸங்கனின் ஒற்றைக் கண் சிறிது சிந்தனையை மலரச் செய்தது. நாஹ்ராமக்ரோவின் மாதாவின் சிலையும், தபஸ்வினியின் உருவமும் சிந்தனையில் வலம் வந்தன. 'ஸங்கா! மஞ்சள்தான் உனக்கு மங்களத்தை விளைவிக்கும், மறவாதே அதை' என்று, அந்தச் சமயத்தில் கூட தபஸ்வினியின் இதழ்கள், சிந்தனையில் எழுந்த கருத்துகளை ஆமோதிப்பன போல், அந்தச் செண்பக மலர்கள் இரண்டும் அறை விளக்குகளில் சற்று அதிகமாகவே பிரதிபலித்தன.
கருத்த கூந்தலுக்கிடையே அந்த மஞ்சள் மலர்கள் விளையாடிய அழகிலும், வெண்பட்டின் மேல் விரிந்த கூந்தலின் கருமைக்குள்ளே புதைந்து கிடந்த கழுத்தின் பக்கப்பகுதியில் வெண்மையை அதிகமாக எடுத்துக் காட்டிய இன்பத்திலும் சற்று நேரம் நின்ற ஸங்கன், சற்று தைரியமாகவே சொர்ணாதேவியை நெருங்கி, அவள் தோள்மேல் தன் கையை வைத்தான்.
அந்த ஸ்பரிசத்தில் சொர்ணாதேவியின் உடல் குலுங்கு மென்றோ , அவள் திடீரென அச்சப்பட்டுத் திரும்புவாளென்றோ ஸங்கன் நினைத்திருந்தால் அவன் ஏமாந்தே போனான். சொர்ணாதேவி நின்ற நிலையிலிருந்து சிறிதும் அசையவுமில்லை, பின்புறம் வந்து தன் தோள்மேல் கை வைத்த ஸங்கனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. அவன் வாயிற்படியைத் தாண்டி அறைக்குள் காலெடுத்து வைத்தபோதே அவன் வருகையைக் கண்ணாடியில் பார்த்து விட்ட சொர்ணாதேவி, அவன் ஒவ்வோர் அசைவையும் கவனித்துக்கொண்டே இருந்தாளாதலால், அவள் தோள் மேல் கையை வைத்தபோது சற்று புன்முறுவல் செய்து கொண்டாளே தவிர, தலையைத் திருப்பவில்லை. அவன் உள்ளே நுழைந்தது, சில விநாடிகள் நின்றது, தன்னை அந்த ஒற்றைக் கண்ணால் ஆராய்ந்தது, அத்தனையும் பார்த்துப் பார்த்து வெட்கத்தையும் இன்பத்தை யும் ஒரேயடியாக அடைந்திருந்த சொர்ணாதேவி, தன் மனத்தை நன்றாகக் கட்டுப் படுத்திக்கொண்டு உணர்ச்சி களைப் பெரிதும் அடக்கி வைத்திருந்தாளாகையால் ஸங்கனை அவள் திரும்பியும் பார்க்கவில்லை.
அவள் உறுதியைக் கண்டு பிரமித்துப் போன ஸங்கன், 'அப்பா! எத்தனை கடின இதயம்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அவள் தோளைப் பிடித்துத் தனக்காகத் திருப்பி, இடையில் தனது இரு கைகளையும் கொடுத்து அவளை ஒருமுறை உலுக்கினான். சொர்ணாதேவியின் கண்கள் ஒரு விநாடி அவன் கண்ணுடன் உறவாடின. பிறகு, பவள இதழ்கள் திறந்து, ''எதற்காக இப்படி உலுக்கு கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"சில மரங்களை உலுக்கினால்தான் பழம் கிடைக் கும்'' என்றான் ஸங்கன்.
'நானென்ன நெல்லிமரமா?''
“ஆம் “
''அப்படியானால் நெல்லிக்காய் புளிக்கிறேனோ உங்களுக்கு?''
''அதல்ல உவமை, சொர்ணா,''
"வேறெது?''
“நெல்லிக்காயில் தங்கமிருக்கிறதென்று ஆயுர்வேத சொல்லுகிறது."
''ஓகோ !''
"அதுவும் மஞ்சள் நிறம்."
"ஆம்.''
''மஞ்சள் நிறந்தான் எனக்கு அதிர்ஷ்ட ம் என் நாஹ்ராமக்ரோ தபஸ்வினி கூறியிருக்கிறாள். வந்ததும் மஞ்சள் நிற செண்பக மலர்கள் உன் கூந்தலில் விளையாடு வதைக் கண்டேன். பிறகு, பழுத்த நெல்லியின் பத்தரை மாற்றுப் பசும்பொன் நிறத்தை உன் மேனியின் திறந்த இடங்களில் கண்டேன்.''
''நீங்கள் கவிஞரா?'' என்று கேட்டாள் சொர்ணா தேவி, பொய்க்கோபத்தை முகத்தில் காட்டி,
''ஏன் கேட்கிறாய்?'' என்று வினவினான் ஸங்கன்.
"கவிகளைவிட நன்றாக வர்ணிக்கிறீர்களே!'' என்று சொல்லிச் சிரித்தாள் சொர்ணா.
''கவிகள் வர்ணிப்பது எதனால் தெரியுமா?"
"சொல்லுங்கள்.''
"பரதேவதையின் அருளால்.'' "தெரிகிறது, தெரிகிறது.''
"பரதேவதை அருகிலிருந்தால் கவியின் சக்தி தானே வருகிறது, என்னைப் போன்ற சாதாரண வீரனுக்கும்" சொல்லிய ஸங்கன், அவள் இடையின் பக்கங்களை தொட்டு நின்ற தன் கரங்களை நீட்டி, அவள் - வளைத்துத் தன்னை நோக்கி இழுத்தான். தங்கு தடையில்லாமல் அந்தச் சிறைக்குள் அவள் நுழைந்தாள். இருவரும் சில விநாடிகள் இந்த உலகத்தைவிட்டு எங்கோ பறந்து கொண்டிருந்தார்கள்.
நினைவு மறந்து, நிலை மறந்து, சொர்க்கலோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த அந்த இருவரில் முதன் முதலாக லேசாகச் சுரணை வரப்பெற்ற ஸங்கன், அவள் அழகிய சரீரத்திலிருந்து தனது கைகளை எடுத்து, அவளையும் விடுவித்தான். அந்த இன்ப மாயையிலிருந்து விடுபட்டதும், தனக்கு மேவார் தலைநகரத்தில் காத்திருக்கும் துன்பநிலை எண்ணத்துக்கு வரவே, சற்று துக்கங் கலந்த பெருமூச்சு விட்ட ஸங்கன் சொர்ணாதேவியை நோக்கி, "சொர்ணா! கடமை என்னை அழைக்கிறது. ஆகையால், உன்னிடம் விடைபெற வந்தேன்! வந்த இடத்தில் உன்னைக் கண்டதும் கடமையை மட்டுமல்ல, உலகத்தையே மறந்தேன்'' என்று ஏதோ மேலும் சொல்லப் போய், சிறிது நிதானித்தான்.
சொர்ணா உடனே பதில் சொல்லவில்லை. அந்த ஆடவன் வலிய அணைப்பிலிருந்து விலகிய பின்பும் கௌவிக்கொண்டிருந்த வெட்கத்திலிருந்து விடுபடாத வளாய் நிலத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். பிறகு சமாளித்துக்கொண்டு, ''கடமையா?'' என்று ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக விசாரித்தாள்.
"ஆம், சொர்ணா! கடமைதான்'' என்றான் ஸங்கன்.
நிலத்திலிருந்து கண்களை உயர்த்தாமலே கேட்டாள் சொர்ணா, ''அதற்காகப் பிரிய வேண்டுமா?'' என்று,
''ஆம்; பிரியத்தான் வேண்டும்.''
"இங்கு உங்களுக்குக் கடமை ஏதுமில்லையா?'' என்று கேட்டாள் சொர்ணாதேவி, சிறிது சங்கடம் தொனித்த குரலில்.
ஸங்கன் அவள் கேள்வியின் பொருளைப் புரிந்து கொண்டான். ஆகவே கூறினான்: ''இருக்கிறது, சொர்ணா, ஆனால் ஒரு மனிதனைப் பல கடமைகள் அழைக்கும் போது, எது முதல் கடமை, எது இரண்டாவது கடமை, எது மூன்றாவது கடமை என்பதை நிர்ணயிக்க வேண்டும். நிர்ணயித்து அதற்கேற்ப முறைப்படி நடந்து கொள்ள வேண்டும்."
சொர்ணா தன் அழகிய விழிகளை அவனை நோக்கி உயர்த்தினாள். "அப்படி மூன்று கடமைகள் இப்பொழுது முளைத்திருக்கின்றனவா?'' என்று கேட்டாள் கவலையுடன்.
''பிறக்கும்போதே மனிதன் கடமைகளுடன் பிறக்கிறான். ஆனால், அவை வாழ்க்கையின் பலதரப்பட்ட சமயங்களில் மோதுகின்றன.''
''அந்தச் சமயத்தில் இது ஒன்று உங்களுக்கு?''
''ஆம்; பிறந்த நாட்டுப் பணி முதல் கடமை. இரண்டாவது கடமை ஈன்றெடுத்த தந்தை தாய்க்கு. மூன்றாவது கடமை...'' சற்று நிறுத்தினான்.
அவன் சொல்ல முயன்றது அவளுக்குத் தெரிந்தே இருந்தாலும், ''தயங்க வேண்டாம், சொல்லுங்கள்'' என்றாள்.
''கைப்பிடித்த மனைவிக்கு" என்ற ஸங்கன் மேலும் சொன்னான்: ''சொர்ணா! நாடு என்னை அழைக்கிறது. தந்தை என்னை அழைக்கிறார். இரண்டு கடமைகளை நிறைவேற்ற நான் மேவார் செல்லவேண்டும். அந்தக் கடமைகளை முடித்தபின்பு உன்னைப் பற்றிய கடமையைக் கவனிக்கிறேன்.''
சொர்ணாதேவியின் கூர்விழிகள் வெகு கம்பீரமாக கனின் ஒற்றை விழியைச் சந்தித்தன. ''என்னை என்றாம் பட்சமாகத்தான் வைத்திருக்கிறீர்கள்!'' என்றாள், சற்றுக் கோபத்தைக் குரலில் காட்டி.
ஸங்கன் அவள் கைகளிரண்டையும் ஆசையுடன் பற்றிக் கொண்டான். அவள் முகத்தைப் பயமோதயக்கமோ இன்றி ஏறிட்டு நோக்கினான். தந்தை மரணப் படுக்கை யிலிருக்கும் செய்தி ஒருபுறம், சகோதரர்கள் மாண்ட செய்தி ஒரு புறம், எதிரே நின்ற காதலியின் பிணக்கு ஒரு புறம்-இப்படி முப்புறமும் வாட்டப்பட்ட சமயத்திலும் நிதானத்தையோ நியாயத்தையோ இழக்காமல் பேசினான் ஸங்கன். 'ஆம் சொர்ணா! நீ மூன்றாம் பட்சந்தான். நாட்டைவிட, நாட்டு மக்களை விட, நான் எதையும் முதன்மையாக மதிக்கவில்லை. என் தந்தை, தாய் இருவரையுங்கூட அதிகமாக மதிக்கவில்லை . அவர்கள் நாட்டுக்கு அடுத்தபடிதான். ஆகவே, உன்னை மூன்றாம் பட்சமாகத்தான் மதிக்க முடியும். இந்த விஷயத்தில் நான் பொய் சொல்ல இஷ்டப்படவில்லை. காதல் விஷயத்தில் பொய் சொல்ல சாஸ்திரம் அனுமதிக்கிறது. அந்த அனுமதியைக்கூட நான் பயன் படுத்திக் கொள்ள இஷ்டப் படவில்லை . ஆனால், ஒன்று கூறுவேன்...''
“என்ன அது?'' ''நாலாம் பட்சமாக நான் கருதுவது ஒன்றிருக்கிறது.'' ''எது?''
''என் உயிர்'' என்று ஸங்கன் மிக மெதுவாகவும் அலட்சியமாகவும் அறிவித்தான்.
அவன் சொல்லியதன் பொருளைப் புரிந்துகொண்ட சொர்ணாதேவியின் உடல் பூரித்தது. உள்ளம் உவகை கொண்டது. உயிருக்கும் மேலாகத் தன்னை நேசிப்பதையே மேவார் அரசகுமாரன் குறிப்பிடுகிறானென்பதை அறிந்து கொண்ட சொர்ணாதேவி, சங்கடத்தால் நின்ற இடத்திலேயே சிறிது அசைந்தாள். அதுவரைக்கும் பற்றி நின்ற அவள் கைகளைவிட்டுச் சற்று விலகிய ஸங்கன், துயரம் தோய்ந்த குரலில் தனக்குக் கிடைத்த செய்தியை விவரிக்கத் தொடங்கி, ''சொர்ணா! மேவாரிலிருந்து சிலாதித்தன் வந்திருக்கிறான். துயரம் தரும் செய்தியையும் கொண்டு வந்திருக்கிறான்'' என்று கூறினான்.
சிலாதித்தன் பெயரைக் கேட்டதுமே ஒருமுறை நடுங்கினாள் சொர்ணாதேவி. பிருத்விராஜன் படத்தை வரைந்து அனுப்பித் தன்னைப் பெண் கேட்டது அவன் தானென்பதை அறிந்திருந்ததால் மட்டுமல்ல, ஏதோ விவரிக்க இயலாத பல காரணங்களால் சிலாதித்தன் பெயரை வெறுத்தே வந்தாள். ஆகவே, அவன் வந்திருப் பதைக் கேட்டதும், "என்ன! சிலாதித்தனா வந்திருக்கிறான்? மேவார் தளபதி வந்திருப்பதாகவல்லவா சொன்னார்கள்?'' என்று கூறினாள், குரலும் லேசாக நடுங்க.
"அவன்தான் இப்பொழுது மேவார் நாட்டின் தளபதி.''
"தங்கள் தந்தை இவரையாதளபதியாக நியமித்தார்?''
''தந்தை நியமிக்கவில்லையாம். என் சகோதரன் பிருத்வி இளவரசனாயிருந்தபோது நியமித்தானாம்.''
''ஓகோ !''
''ஆமாம் சொர்ணா. இவனைத் தளபதியாக நியமித்த பிருத்வியும் இறந்துவிட்டான். என் தம்பி ஜெய்மல்லும் இறந்துவிட்டான்.''
"யார்? உங்கள் கண்ணில் அம்பெய்தவரா?''
"ஆம், சொர்ணா! அம்பெய்தால் என்ன? என் தம்பி தானே அவன்?''
"தம்பியா...'' சொர்ணாவின் கேள்வியில் ஏளன மிருந்தது.
அந்த ஏளனத்தைக் கவனித்த ஸங்கன், “சொர்ணா! இத்தகைய விருப்பு வெறுப்புகளை நீ விட்டுவிட வேண்டும். என் விரல் என் கண்ணைக் குத்திவிட்டால் அதை நான் வெட்டிவிடுவேனா?'' என்றான்.
'தங்கள் கண்ணை அழித்தவரை நான் பாராட்ட வேண்டுமா?''
"பாராட்டவும் வேண்டாம். பழிக்கவும் வேண்டாம். நாளை நீ மேவார் ராணியாக என் பக்கத்தில் அமரப் போகிறவள். யாரையும் எதையும் மன்னிக்கும் மனப் பக்குவம் வேண்டும் உனக்கு.''
இதைக் கேட்டதும் உண்மையை ஓரளவு ஊகித்துக் கொண்ட சொர்ணாதேவி, ''அப்படியானால் உங்கள் தந்தை?'' என்று கேட்டு மென்று விழுங்கினாள்.
"மரணப் படுக்கையிலிருக்கிறார். ஆகவே, என்னை அழைத்துவரச் சிலாதித்தனை அனுப்பியிருக்கிறார்'' என்று விளக்கிய ஸங்கனை நோக்கிய சொர்ணாதேவி, ''சரி, கிளம்புவோம்'' என்றாள்.
'கிளம்புவோமா?'' ஸங்கன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
''ஆம், நீங்கள் சென்றபின் எனக்கு இங்கென்ன வேலை?'' என்று சொர்ணாதேவி பதிலுக்கு வினவினாள்.
"இப்பொழுது வருவதற்கில்லை.'' "ஏன்?" ''நமக்குத் திருமணமாகவில்லை .''
''கந்தர்வமணம் க்ஷத்திரியர்களுக்கு அனுமதிக்கப் படுகிறது.''
"உண்மைதான், சொர்ணா! ஆனால், அதற்கு வேண்டிய மனப்பக்குவம் தற்சமயம் எனக்கில்லை. தந்தையின் தேகநிலை மனத்தில் கவலையை நிரப்பி யிருக்கிறது. சில நாட்கள் நீ இங்கிரு, சொர்ணா. திருமணத்தை முடித்துக்கொள். பிறகு என் மகிஷியாக மேவார் தலைநகரத்தில் நுழையலாம்'' என்றான் ஸங்கன்.
ஏதும் புரியாமல் விழித்தாள் சொர்ணாதேவி. ''நீங்களில்லாமல் எனக்குத் திருமணமேது?'' என்று கேட்டாள்.
''என் பிரதிநிதியை விட்டுப்போகிறேன்'' என்றான் ஸங்கன்.
''என்னை மணம் புரிய உங்கள் பிரதிநிதியை விட்டுப் போகிறீர்களா?'' வியப்பும் கோபமும் கலந்த குரலில் சீறினாள் சொர்ணாதேவி.
''ஆம், சொர்ணாதேவி! ராஜபுத்ரர்கள் கடமையை நாடிச் செல்லும்போது ராஜபுத்ரர்கள் மணக்கும் முறைப்படி நீயும் மணந்து கொள். இந்த என் வாளுக்கு மாலையிடு'' என்று, தன் வாளை உறையிலிருந்து சர் என்று இழுத்துச் சொர்ணாதேவியிடம் கொடுத்த ஸங்கன், ''இதற்கு மாலையிட்டு இத்துடன் மேவாருக்கு வந்து சேர், சொர்ணாதேவி'' என்று கூறிவிட்டு விடுவிடு என்று அந்த அறையிலிருந்து வெளியேறினான்.