Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம்-12 :ஆணைகள் இரண்டு

வாளை உறையிலிருந்து எடுக்கப்போய் திடீரெனக் கையை இழுத்துக்கொண்டதைத் தந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுகொண்டதன்றி, வாள் உறையில் இல்லாத காரணத்தையும் நொடிப்பொழுதில் புரிந்து கொண்டு, ''யார் அவள் ஸங்கா? வாளுக்கு மாலை சூடப் போகும் அந்தப் பெண் யார்?' என்று கேட்டதைக் கண்ட ஸங்கன், மரணப்படுக்கையிலிருந்த அந்த நேரத்திலும் ராணா ரேமல்லரின் மதி எத்தனை தெளிவுடனிருக்கிறதென்பதை எண்ணிப் பார்த்துப் பெரும் வியப்பை மட்டுமின்றி, ஓரளவு சங்கடமும் எய்திச் சில விநாடிகள் தன் கண்ணை மன்னரின் கூரிய விழிகளின் தொடர்பிலிருந்து அகற்றிப் படுக்கையில் தாழ்த்தினான். அவன் சங்கடத்தை உணர்ந்து கொண்ட மன்னர் இதழ்களில் புன்னகை அரும்பியதல்லாமல் சிரமப்பட்டு வெளிவந்த அவருடைய சொற்களிலும் ஆனந்தம் நிரம்பிக் கிடந்தது. அத்தகைய உவகை நிரம்பிய குரலில் ரேமல்லர் மீண்டும் கேட்டார், ''யாரவள் ஸங்கா? யார் மேவாரின் அரியணையில் அமரப்போகிறவள்?'' என்று.

ஸங்கன் படுக்கையிலிருந்து தன் கண்ணை உயர்த்தவோ, மன்னர் கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்லவோ திறனில்லாத நிலையில் இருந்த படியால், அவன் சுற்றி வளைத்துப் பேச முற்பட்டு, ''தாங்களும் என் தாயும் இருக்கிற வரையில் மேவார் அரியணையில் யாரும் உட்காரப் போவதில்லை, தந்தையே'' என்றான்.

அதுவரை மகனுடன் பேசியதால் சிரமப்பட்ட ரேமல்லர், உடனே ஸங்கனுக்குப் பதில் சொல்ல முடியாமல் சிறிது திணறினார். அவர் மூச்சு மிகவும் கஷ்டப்பட்டு வெளிவந்தது. அதைக் கண்ட ஸங்கன், “தந்தையே, நீங்கள் சற்று நிம்மதியுடன் கண்ணை மூடிப் படுங்கள். பேசுவதை நாளை பேசிக் கொள்ளலாம்'' என்று கூறி விட்டு எழுந்திருக்க முயன்றான். அவனை மீண்டும் உட்காரச் சொல்லிக் கையால் சைகை செய்த ரேமல்லர். சிறிது நேரம் மௌனமாகவே இருந்தார். பிறகு, தலையை லேசாகத் திருப்பித் தம்முடைய தேவிகளில் ஒருத்தியைப் பார்த்தார். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட ஸங்கனின் தாயார் எழுந்திருந்து, சற்று தூரத்தில் மஞ்சத்திலிருந்த கிண்ணத்திலிருந்து பாலை எடுத்து வந்து, மன்னரின் வாயில் சிறிது ஊற்றினாள். அதற்குப் பின்னர் சில நொடிகள் கண்களை மூடிப் பிறகு திறந்தார் ரேமல்லர். அப்படித் திறந்தபோது அவர் சிரமம் சிறிது தணிந்ததையும். மீண்டும் அவர் கண்களில் ஒளி துலங்குவதையும் ஸங்கன் கண்டான்.

ராணா, ஸங்கனின் கையை மீண்டும் தன் கையால் பற்றிக்கொண்டு வாய்திறந்து மெள்ளச் சொன்னார், "பால் சிறிது சக்தியைக் கொடுத்திருக்கிறது, ஸங்கா! இனி நாம் பேசவேண்டியதையும் பேசி முடிக்கலாம்'' என்று.

''நாளை பேசிக்கொள்ளலாமே!'' என்று ஸங்கன் கெஞ்சினான்.

மன்னர் பதில் உறுதியுடன் வந்தது. ''ஸங்கா! நாளைக்கு நானிருப்பேனோ மாட்டேனோ, சொல்ல முடியாது. இன்று நான் சொல்லும் படிப்பினையைக் கேட்டுக்கொள். எந்தக் காரியத்தையும் நாளைக்கென்று ஒத்திப் போடாதே.''

''சரி தந்தையே'' என்றான் ஸங்கன், வேதனை நிறைந்த உள்ளத்துடன். இரும்பு நெஞ்சத்தின் விளைவாகத் தம் உணர்ச்சிகளையும் சிரமத்தையும் உள்ளடக்கிக் கொண்டு பேச முற்பட்ட தந்தையின் உறுதியைக் கண்டதால் ஏற்பட்ட பெருமிதம் அந்த வேதனையுடன் கலந்து கொண்டது.

ராணா ரேமல்லர் மீண்டும் சொன்னார்: ''ஸங்கா! நானும் உன் தாயும் இருக்கும்வரை மேவார் அரியணையில் யாரும் உட்காரப் போவதில்லை என்று சொன்னாய். உண்மை. ஆனால், நான் இன்றோ நாளையோ மறைந்து விடுவேன். நான் போன பிறகு உன் தாயும் அரியணையில் உட்கார முடியாது. உன் பேச்சு பாசத்தின் விளைவு. பாசத்தை அறுத்துவிடு, ஸங்கா. எதிலும் அதிக பாசம் அரியணையில் உட்காருபவனுக்குக் கூடாது.''

''சரி தந்தையே!'' ஏதோ கிளிப்பிள்ளை பதில் சொல்வது போலச் சொன்னான் ஸங்கன், உணர்ச்சிகள் உள்ளத்தைப் பெரும் அலைகளாக வளைத்துக்கொண்ட காரணத்தால்.

''கவனமாகக் கேள், ஸங்கா! ராஜபுதனம் இன்று சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது. சிசோதயர்கள், ராதோர்கள், பட்டிகள், ஜாதர்கள், துவார்கள், பிரமரர்கள் எல்லோரும் கிளை கிளையாகப் பிரிந்து நிற்கிறார்கள். இந்தப் பல கிளைகளுக்கிடையே சதா சண்டையும் சச்சரவும் மலிந்து கிடக்கின்றன. இந்தச் சண்டைகள் நீடித்தால் ராஜபுதனம் அழிந்துவிடும். எங்கும் இஸ்லாம் கொடி பறக்கிறது; அது ராஜபுதனத்தை அழித்து விட்டால் ஸனாதன தர்மம் அழிந்துவிடும். ஸனாதன தர்மம் அழிந்துவிட்டால் ஹிந்து வர்க்கம் என்ற பெயர் அடியோடு அழிந்துவிடும்...'' என்று பேசிக்கொண்டு போன ரேமல்லர் சற்று பேச்சை நிறுத்தினார்.

மன்னருக்கு அந்த மரணப்படுக்கையிலும் ஏற்பட்ட ஆவேசத்தைக் கவனித்த ஸங்கன் பேராச்சரியமும் பெருமையும் அடைந்தான். அந்தப் பேராச்சரியத்தாலும் பெருமையாலும் ஏதும் பேச முடியாமல் மௌனமே சாதித்தான்.

ராணா ரேமல்லரே தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மேலும் பேசத் தொடங்கி, ''ஹிந்து வர்க்கமும் தர்மம் அழியாமல் காக்கப்பட வேண்டமானால் ராஜ கனம் ஒன்றுபடவேண்டும். ராஜபுதனம் ஒன்றுபட வேண்டுமானால், பிரதான அரசான மேவார்தான் அதை ஒரு கடைக்கீழ் கொண்டுவர முடியும். அப்படி மேவாரின் குடைக்கீழ் அரசைக் கொண்டுவர வேண்டுமானால், அந்த மேவார் அரியணையில் உட்காருபவன் வீரனாயிருந்தால் மட்டும் போதாது. நிதானஸ்தனாகவும் சகிப்புத்தன்மை உள்ளவனாகவும் இருக்கவேண்டும். அந்த இரண்டும் பிருத்வியிடம் இல்லை. ஆகையால்தான் அவன் மூத்தவனாயிருந்தும் அவனை விட்டுவிட்டு உன்னை இளவரசனாக்கினேன்'' என்றார்.

இதற்குப் பதில் சொல்லாமல் வாளாவிருந்த ஸங்கனை நோக்கிய ரேமல்லர் மெள்ளப் புன்முறுவல் செய்தார். ''ஸங்கா! பிருத்வியிடம் உனக்குள்ள அன்பு எனக்குத் தெரியும். உனக்கு மண்ணாசை கிடையாது. பெண்ணாசை இல்லாது போயிருந்தால் மேவாரியின் கதி எப்படிப் போயிருக்குமோ?" என்று முணுமுணுத்தார்.

அப்பொழுதுதான் குனிந்த தலையை ஸங்கன் நிமிர்த்தி, ''நான் பெண்ணாசை பிடித்தவனென்று நினைக் கிறீர்களா?'' என்று வினவினான்.

தலையணையில் ஒரு முறை தலையைத் திருப்பி மெள்ள நகைத்தார் மேவாரின் மன்னர், 'உன் வாளைக் கேள்'' என்று நகைச்சுவையும் சற்றுக் காட்டினார்.

ஸங்கன் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான். ரேமல்லர் அன்பு வழியும் விழிகளை அவன் மீது நாட்டி, "ஸங்கா! பிரமாணம் செய்ய நான் எடுக்கச் சொன்னவுடன் நீ வாளை எடுக்கக் கையைக் கொண்டு போய், அது இல்லாததால் திகைத்தபோதே புரிந்து கொண்டேன்" என்று குரலிலும் அன்பு அமுதமாகப் பிரவாகிக்கச் சொன்னார்.

குனிந்த தலை நிமிராமலே கேட்டான் ஸங்கன், ''என்ன புரிந்து கொண்டீர்கள், தந்தையே?'' என்று.

''அது ஒரு பெண்ணிடம் போய்விட்டதென்று.'' ''பெண்ணிடம் ஏன் போக வேண்டும்?"

"ராஜபுத்ரர் வழக்கம் உனக்குத் தெரியாது, ஸங்கா. மூன்று விஷயங்கள் பிறர் கைகளுக்கு மாற ராஜபுத்ரர்கள் சம்மதிக்க மாட்டார்கள். தன் குதிரை, மனைவி, வாள் இம்மூன்றையும் அவர்கள் உயிர் உடலிலிருக்கும்போது யாரும் பறிக்க முடியாது. நீ உயிருடன் வந்திருக்கிறாய். உன் வாள் உன்னிடமில்லை ...''

"ஆகவே?"

"அதை யாரிடமோ கொடுத்திருக்கிறாய். வாளுக்கு மாலை சூடும் அவசியமிருந்தாலொழிய அது உறையி லிருந்து மறையாது. இதில் பெரும் ஊகம் ஏதுமில்லையே.''

மரணப் படுக்கையிலும் மன்னர் காரணங்களை எத்தனை கோவையாகச் சொல்கிறார் என்பதை எண்ணிப் பார்த்து வியந்த ஸங்கன், ''ஆம், தந்தையே! ஒரு பெண்ணிடந்தான் அதைக் கொடுத்து வந்திருக்கிறேன்'' என்றான், நிலத்தில் தன் ஒற்றைக் கண்ணை நாட்டி.

"யாரவள், ஸங்கா?'' என்று கேட்டார் மன்னர் ஆசையுடன்.

''பிரமரர் குல ராஜகுமாரி'' என்றான் ஸங்கன்.

"யார், கரம்சந்த்தின் மகளா?'' என்று கேட்டார் ரேமல்லர்.

''ஆம்."

"பெயர்?''

''சொர்ணாதேவி!"

''அழகாயிருப்பாளா?"

"பெயருக்குத் தக்கபடி இருக்கிறாள்'' என்று இழுத்தான் ஸங்கன், சற்று வெட்கத்தினால்.

அவன் வெட்கத்தை உடைக்க உறுதியுடன் பேசினார் ரேமல்லர். "வெட்கப்படாமல் சொல், ஸங்கா! தந்தையும் மகனும் பேசும் பேச்சல்ல இது. நீயும் நானும் சாதாரணப் பிரஜைகளாயிருந்தால் இந்தக் கேள்விகளை உன் தாயையோ அல்லது உன் நண்பர்களையோ விட்டுத்தான் விசாரித் திருப்பேன், ஆனால் நான் மன்னன்: நீ அரியணையில் உட்காரப் போகிறவன். ராஜபுதனத்தின் நலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கப் போகிறவன். ஆகவே, வெட்கத்தை துறந்துவிடு. அதற்குப் பதில் கடமை உன் உணர்ச்சிகளை ஆட்கொள்ளட்டும்'' என்றார் கண்டிப்புடன்.

''சரி, தந்தையே'' என்று கூறிய ஸங்கன், ராணாவின் முகத்தை ஏறெடுத்து நோக்கினான்.

''சொர்ணாதேவி அழகாயிருக்கிறாளா?'' என்று கேட்டார் ராணா.

"இருக்கிறாள்."

அதைப்பற்றி அத்தனை கவலையில்லை எனக்கு. கம்பீரமாயிருப்பாளா, சொல்."

"பிள்ளையாகப் பிறந்திருந்தால் இந்த மேவாரை ஆளக் கூடியவள்."

''வாள் வித்தை ?"

''வாள் சுழற்றுதலில் மட்டுமல்ல, வேலெறிவதிலும் நிகரற்றவள். வீரமகள்.''

"ரேமல்லரின் கூரிய கண்கள் ஸங்கன் கண்ணைச் சிறிது நேரம் சந்தித்தன. "ஆம், ஸங்கா. அவள் மேவார் அரியணையில் உட்காரத் தகுந்தவள்தான்'' என்றார் கடைசியில்.

ஸங்கனின் ஒற்றைக்கண் ஆச்சரியத்தால் மலர்ந்தது. "எப்படித் தெரிந்து கொண்டீர்கள், தந்தையே?" என்று கேட்ட அவன் குரலில் அந்த வியப்பு விரிந்து கிடந்தது.

''உனக்கு ஒரு கண்ணில்லை, ஸங்கா' என்று, ஏதோ புதிதாக விஷயத்தைச் சொல்லுவது போல் ஆரம்பித்தார் ராணா.

"ஆம், தந்தையே'' என்று ஒப்புக்கொண்டான் ஸங்கன்.

''ஆகவே, உன் அழகுக்காக அவள் உன்னை விரும்பியிருக்க முடியாது.''

ஸங்கன் வாய் திறந்து பதில் சொல்லவில்லை. 'சரி' என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினான்.

மன்னர் விளக்கினார்; 'ஸங்கா! நீ அழகில்லை என்று நான் சொல்லவில்லை. உன் முகத்திலிருக்கும் கம்பீரக்களை ஒன்றே எனக்குப் போதும். ஆனால், சாதாரணப் பெண்கள் கம்பீரத்தை மட்டும் விரும்பமாட்டார்கள். 'ஸர்வேந்த்ரியா நயனம் பிரதானம்' என்பது பழமொழி. நத்திரியங்களுக்குள் கண் முக்கியம். அவற்றுள் ஒன்றை இழந்து கிடக்கும் உன்னை வேண்டுபவள் அழகுக்காக வேண்டியிருக்க முடியாது. உன் அரசுக்காகவும் விரும்பி யிருக்க முடியாது. பிரமரர் நாட்டில் அரசுரிமையற்ற அநாதையாக இருந்திருக்கிறாய்! உன் குணங்களைக் கண்டுதான் உன்னை அவள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்" என்ற ரேமல்லர், ''ஸங்கா! நீ புத்திசாலியென்று எனக்குத் தெரியும். ஆனால், பெண்ணைத் தேர்ந் தெடுப்பதிலும் நீ கெட்டிக்காரன் என்பதை அறிந்து கொண்டேன்!'' என்றும் ஆசை நிறைந்த கேலிப் பேச்சை உதிரவிட்டார். பிறகு, எதையோ நினைத்துக் கொண்டு, “ஆம் ஸங்கா! இவள் தாராபாய் மாதிரி இருக்கமாட்டாளே'' என்று திடீரென்று கேட்டார், முகத்தில் கவலை படர.

"யாரது தாராபாய்?'' என்று வினவினான் ஸங்கன். ''அவள்தான் பிருத்வியின் மனைவி.'' "ஏன், அவளுக்கென்ன?''

"தாராபாய் வீர ஸ்திரீ! சதா சண்டையில் பிரியமுள்ளவள். எப்பொழுதும் வில்லையும் அம்பையும் வாளையுந் தாங்கி, பிருத்வி போகுமிடங்களுக்கெல்லாம் அவளும் சென்று சண்டையிட்டு வந்தாள். அரண்மனையில் அவள் இருந்ததே கிடையாது. இவள்...''

"இவள் அரண்மனையை விட்டுக் கிளம்புவது கடையாது. ஜலக்கிரீடை...'' என்று ஆரம்பித்த ஸங்கன், மஞ்சளாற்றை நினைத்துக்கொண்டு சட்டென்று பேச்சை நிறுத்தினான்.

ராணா ரேமல்லரின் யோசனைகள் வேறுதிசையில் ஓடிக் கொண்டிருந்தமையால், அவர் ஸங்கனின் சங்கடத்தைக் கவனிக்காமலேயே, ''ஜலக்கிரீடை, எப்பொழுதாவது கணவனுடன் வேட்டைக்குப் போவது இவை ராஜபுத்ர ஸ்திரீகளுக்கு இயற்கை. ஆனால் ஸங்கா, புருஷன் போல் சதா வெளியில் திரியும் ராணி மேவாருக்கு உதவாது. அந்தப்புரத்திலிருந்து கணவனை ஊக்குவிக்கும் ராணிதான் தேவை" என்றார்.

''அத்தகைய வீட்டுப்பறவைதான் இவள்'' என்றான் ஸங்கன்.

''தாராபாயைப் போன்ற காட்டுப்பறவையை விட இத்தகைய வீட்டுப்பறவைதான் தேவை' என்ற ரேமல்லர், ''மிகவும் மகிழ்ச்சி, ஸங்கா! எனக்குப் பெரும் நிம்மதியை அளித்துவிட்டாய். இனி நீ இரண்டு பிரமாணங்களைச் செய்ய வேண்டும், இந்தா. என்வாளை எடுத்துக் கொள்'' என்று, பக்கத்திலிருந்த தமது பட்டாக்கத்தியைச் சுட்டிக் காட்டினார்.

அந்தப் பட்டாக்கத்தியை உருவிப் பிடித்துக்கொண்டு ஸங்கன், தந்தைக்கு எதிரில் எழுந்து நின்றான்.

''ஸங்கா, முதல் ஆணை இது! உன் உயிருள்ளவரை நீ இஸ்லாமியரை ராஜபுதனத்துக்குள் நுழையவிடக் கூடாது'' என்றார் ஆவேசத்துடன்.

ஸங்கன் வாளை உயர்த்தி ஆணையிட்டான்.

"இரண்டாவது ஆணை. ஸங்கா, எக்காரணத்தை முன்னிட்டும் நீ இப்பொழுதுள்ள தளபதியை அவன் ஸ்தானத்திலிருந்து மாற்றக்கூடாது" என்றார் ராணா.

ஸங்கனுக்குத் தூக்கி வாரிப்போட்டது, "யாரை, சிலாதித்தனையா?'' என்று கேட்டான் ஸங்கன்.

"ஆம், ஸங்கா! இறக்குந்தறுவாயில் பிருத்வியின் கோரிக்கை அது, நானும் அதற்குச் சம்மதித்தேன். ஆகையால் நீயும் சம்மதிக்க வேண்டும்'' என்றார் ராணா,

ஸங்கனுக்குச் சம்மதமில்லை, சிலாதித்தனை அவன் என்றுமே நம்பியதில்லை . இருப்பினும் மரணப் படுக்கை யிலிருந்து தன் தந்தை கேட்டபடி பிரமாணம் செய்தான்.

ராணா ரேமல்லர் நிம்மதியுடன் பஞ்சணையில் புரண்டார். நீண்ட நேரம் பேசியதன் விளைவாக அவர் மூச்சு மிகவும் சிரமப்பட்டு வரத்தொடங்கியது. பக்கத்திலிருந்த ராணிகள் அவர் பணிவிடைக்கு விரைந்தனர். “ஸங்கா, நீ சென்று உடைகளை மாற்றிக்கொள்'' என்று அவன் தாய் உத்தரவிட்டாள்.

பலதரப்பட்ட உணர்ச்சிகளுடன் அந்த அறையை விட்டகன்ற ஸங்கன், தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் சென்று, உடைகளைக் களைந்து, வேறு உடைகளை மாற்றிக்கொண்டு, அங்கிருந்த பஞ்சணையில் அமர்ந்து, தந்தையிட்ட ஆணைகளை எண்ணி எண்ணிப் பார்த்தான். முதல் ஆணை அவன் மனத்துக்குப் பிடித்தது தான். இரண்டாவது ஆணை அவன் விரும்பாதது. இருப்பினும், அரசர்கள் இனிப்புடன் கசப்பையும் அனுபவிக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்தான்.

அவன் வாழ்வு பூராவையும் அந்த இரண்டு ஆணைகளும் பாதித்தன. இனிப்புடன் கசப்பும் கலந்தே புரண்டன அவன் வாழ்வில். அந்தக் கசப்பின் முதல் கருவியாக உருவெடுத்தான் சிலாதித்தன். அரசர் முன்பு இளவரசன் இட்ட ஆணையைக் கேட்ட அவன், உள்ளுறக் குதூகலித்தான். ஆனால், அந்தக் குதூகலத்தை வெளிக்கு மட்டும் காட்டவில்லை . காலம் வரட்டும் எனக் காத்திருந்தான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.