Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம்-13 :பரிகாரம்

சாலிவாஹன சகாப்தம் 1565-ஆம் வருஷத்தில், அதாவது கி.பி. 1509-வது வருஷத்தில் ராணா ஸங்கன் அரியணையில் ஏறினான். மேவார் முழுவதுமே மணக்கோலம் பூண்டது. மகாவீரனும் நிதானஸ்தனுமான ஸங்கன், மேவாரின் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டதால், ராஜபுதனத்துக்கு விடி மோட்சம் இருக்குமென்று கருதியதன் விளைவாக ராஜபுதனம் முழுவதிலும் குதூகலம் நிரம்பி நின்றது. ஆனால், ராணா ஸங்கன் மட்டும் மனத்தில் எந்தவித சந்துஷ்டியுமில்லாமலே இருந்தான். மகிழ்ச்சிக்கு வேண்டிய நிலை பலமாக அவனைச் சூழ்ந்துதான் கிடந்தது. ஆனால் அது சூழ்நிலையாகவே நின்று விட்டதேயொழிய அவன் இதயத்துக்குள் புகும் சக்தியை அறவே இழந்து கிடந்தது.

ராணா ரேமல்லர், ஸங்கன் தலைநகர் திரும்பிய மூன்றாவது நாள் மண்ணுலகை நீத்ததால் பதின்மூன்று நாள்கள் துக்கத்தில் ஆழ்ந்து கிடந்த சித்தூர், பதினான்காவது நாள் கூம்பிக்கிடந்த மலர் திடீரென விகசித்து விட்டது போல், முகமலர்ந்து இன்பக் கோலம் பூண்டது. எங்கும் கோலாகலத்தின் அரவமும் கேளிக்கைக் கூச்சல்களும் வானைப் பிளந்து கொண்டிருந்தன. அன்று மறுநாள் நடந்த மகுடாபிஷேகத்தின் போது ராஜபுதனத்தின் சுமார் எட்டுக் கிளை மன்னர்களின் வாட்கள் ஸங்கன் கால்களை நோக்கித் தாழ்ந்தன. அன்றே பிரமரர் நாட்டிலிருந்து, மங்கல நாண் கழுத்தில் துலங்க வந்த சொர்ணாதேவியின் விசால விழிகளும் நாணத்தாலும் இன்பத்தாலும் நிலத்தை நோக்கித் தாழ்ந்தன.

காதலி பட்டமகிஷியாகப் பக்கத்தில் வீற்றிருக்க, ராஜபுதனத்தின் பெருங்குடி வீரர்கள் வாட்களைக் காலில் தாழ்த்தி எங்கும் ஜெயவிஜயீபவ சப்தங்கள் வானைப் பிளக்க எழுப்பிய குரல்கள் சாதாரணமாக ஸங்கனுக்கு மகிழ்ச்சியைத்தான் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவை அவன் மனத்தில் மகிழ்ச்சியை விளைவிக்காதது மட்டுமல்ல; இத்தனை மகிழ்ச்சி ஒலியுடனும் ஏதோ அபஸ்வரம் ஊடுருவுவது போன்ற பிரமை அவன் மனத்தில் எழுந்து கொண்டிருந்தது. ஆகவே, மகுடம் சூடி சுமார் இருபது நாட்களுக்குப் பிறகு, உப்பரிகையில் ஏறி நின்று சித்தூரை நோக்கித் தனது ஒற்றைக்கண்ணை உலாவவிட்ட ஸங்கன் மனத்தில் விவரிக்க இயலாத வேதனையே நிறைந்து கிடந்தது.

அப்பொழுது இராக்காலம். வெண்ணிலவு எங்கும் பரந்து கிடந்தது. அந்த வெண்ணிலவு தொட்டதால் தூரத்தே தெரிந்த பவானி மாதாவின் கோயிலின் தங்கக் கலசமும் தங்கமும் வைரமும் கலந்தது போல் புத்தொளியொன்றைப் பரப்பி நின்றது. எங்கும் கண்ணுக்கு விருந்தாக இருந்தது நகரத்தின் தோற்றம். நகரத்தின் நந்தவனங்களிலிருந்த நறுமலர்களின் இன்ப மணமும் காற்றில் மிதந்து வந்தது. அவற்றைத் தொடர்ந்து வருபவள் போல் ராணி சொர்ணாதேவியும் உப்பரிகை மீது ஏறிவந்து, ஸங்கனுக்கு வெகு அருகில் நின்றாள். அப்படி வந்தவளை ஸங்கன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை, அவள் ஆச்சரியப்பட்டாள். 'என் பாத அணிகளின் சப்தங்கள் கூட கலைக்க முடியாத அத்தனை ஆழ்ந்த சிந்தனை எதற்கு?' என்று தனக்குள் எண்ணிய சொர்ணா தேவி அவன் தோள் மீது மெள்ள ஒரு கையை வைத்தாள். அப்பொழுதுதான் ராணாவுக்குச் சுரணை வந்திருக்க வேண்டும். ஏதோ தூக்கிவாரிப் போட்டது போல திரும்பி, ''யார் சொர்ணாவா?'' என்று கேட்டான் ஸங்கன்.

''ஏன், இப்படி கையை வைக்கக் கூடிய உரிமையுள்ளவர்கள் வேறு யாராவது ராணாவுக்கு ஏற்பட்டு விட்டார்களா அதற்குள்?'' என்று கேட்ட சொர்ணாதேவி கலகலவென நகைத்தாள்.

அந்த நகைப்பு சற்றே பழைய நினைவுகளைக் கலைத்து விட்டதால் அவளை நோக்கித் திரும்பித் தன் இரு கைகளாலும் அணைத்துக்கொண்ட ஸங்கன், "சொர்ணா!'' என்று குரலில் இன்பம் சொட்ட அழைத்தான்.

''ஏன்?'' ஒற்றைச் சொல்லைத்தான் அவள் பதில் கேள்வியாக வீசினாள். ஆனால், அதை எழுப்பிய குரலில் இன்பக் கதைகள் பல புதைந்து கிடந்தன.

'நீ இன்னும் தூங்கவில்லையா?'' என்று கேட்ட கன், அவள் தலையை உயர்த்தி, விழிகளைத் தன் ஒற்றைக் கண்ணால் ஆராய்ந்தான்.

அவள் கண்கள் அந்த வீரன் முகத்தில் தைரியத்துடன் பதைந்தன. ஏதோ பலப்பல அழைப்புகளையும் விடுத்தன. வாய் மட்டும் சொல்லியது, 'இல்லை '' என்ற ஒரு வார்த்தையை.

''ஏன்?"

"தூங்கக் கூடாது என்று சாஸ்திரம்.''

"அதற்கும் சாஸ்திரம் இருக்கிறதா?''

''ஆகா! இருக்கிறது.''

"இரவில் தூங்கக் கூடாதென்றா?''

“ஆமாம்.''

''எல்லோருமா?''

"இல்லை; பெண்களுக்கு மட்டும்."

“அதென்ன சாஸ்திரமாம்?"

''கற்புடைய பெண்கள் கணவன் உறங்கிய பின்பு, உறங்கி, அவன் எழுந்திருக்கும் முன்பு எழுந்திருக்க வேண்டும்."

''அப்படியானால்...?''

''நீங்கள் உறங்கவில்லை , ஆகவே நானும் உறங்கவில்லை .''

''நான் இரவு பூராவும் உறங்காமலே இருப்பேன்.''

''அது என்னாலும் முடியும்.''

சொர்ணாவின் பதில் திட்டவட்டமாக வந்தது கல்லுமிருந்த நிலவும், அணைப்பில் நின்ற சொர்ணாவின் அழகிய படம், மெள்ள மெள்ள ராணாவின் இதயத்தி விருந்த வேதனையை இறக்க முற்பட்டன. இருப்பினும் லங்கள் சொன்னான், ''சொர்ணா, நீ பள்ளியறைக்குப்போ. என் மனம் துன்பக் கடலில் மூழ்கியிருக்கிறது'' என்று.

சொர்ணா அவன் மார்பில் நன்றாகச் சாய்ந்து கொண்டாள். ''அந்தப் பழைய விஷயந்தானே?'' என்று கேட்டாள்.

"ஆம், அதேதான், சொர்ணா'' என்று பதில் சொன்னான்.

“அது நடந்து மாதம் ஒன்றுக்குமேல் ஆகிவிட்டதே" என்றாள்.

"மாதமென்ன, வருஷம் ஒன்றானாலும் இதயம் அதை மறக்காது, சொர்ணா. தந்தைக்கு நான் செய்து கொடுத்த இரண்டாவது சத்தியம் ராஜபுதனத்துக்குப் பெரும் கேட்டை விளைவிக்குமென்று என் உள்ளத்திலே ஏதோ சொல்கிறது. வாளின்மேல் இட்ட ஆணைப்படி சிலாதித்தனை எனது தளபதியாக்கிவிட்டேன். ஆனால் அவன் அந்தரங்க சுத்தியில் எனக்கு நம்பிக்கையில்லை. அவனை நம்பாதே என்று ஏதோ ஒன்று உள்ளே கூறிக் கொண்டிருக்கிறது'' என்று சொன்ன ஸங்கன், துன்பத்தால் பெருமூச்சு விட்டான்.

சொர்ணாவின் கரங்கள் ஸங்கனை நன்றாக இறுகத் தழுவின. "மகாவீரரான தாங்கள், பலரை ஒரே சமயத்தில் எதிர்த்துப்  போரிட்டு மடியச் செய்யும் ஆற்றல் வாய்ந்த சென். கேவலம், ஒரு மனிதனை எண்ணி இதயத்தைக் மாதிக் கொள்ளலாமா?'' என்று கேட்டாள்.

ஸங்கன் அவள் பிணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உப்பரிகையில் சற்று உலாவினான், பிறகு, அவளுக்கு முன் வந்து நின்று, ''இதயத்தை நானாகக் கசக்கவில்லை . திரும்பத் திரும்ப அதுவே அந்த இரண்டாவது ஆணையை நினைவூட்டுகிறது. 'ஏனப்படி ஆணையிட்டாய்?' என்று இதயத்தின் ஒரு பாகம் விசாரிக்கிறது. இன்னொரு பாகம் 'மெள்ள அவனை உதறிவிடு' என்று யோசனை கூறுகிறது. என் இதயம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது'' என்றான்.

சொர்ணாதேவி அவனை நன்றாக ஏறெடுத்து, நோக்கினாள். ''மகாராணா! இதயராணி ஒருத்தி இருந்தால், அவன் இதய வேதனைக்கு மருந்தாவது உண்டு. ஆனால், உங்கள் வேதனைக்கு மருந்து நானும் அல்ல. இதைத் தீர்மானிக்க வழி ஒன்றுதானிருக்கிறது'' என்று மெள்ளச் சொன்னாள்.

''என்ன வழி?'' என்று ஆவலுடன் கேட்டான் ஸங்கன்.

“உபாயம் இருக்குமிடத்திற்குப் போகவேண்டும்.''

"அந்த இடம் எது?''

''மனிதன் மனம் அல்லற்படும்போது அதற்குச் சாந்தியளிப்பது தேவாலயம் ஒன்றுதான்.''

''பவானி ஆலயத்திற்குத்தானே, அங்கு தினமும் நான் போய் வருகிறேன்.''

''அங்கல்ல.''

"வேறெங்கு"

''சாருணீதேவியின் ஆலயத்திற்கு."

மிகவும் நிதானத்துடனும் உறுதியுடனும் அந்த யோசனையைச் சொன்னாள் சொர்ணாதேவி. ஸங்கனுடைய ஒற்றைக்கண்ணில் ஆச்சரியம் தோன்றியது. ''ஆமாம், சொர்ணா! எனக்கு ஏனோ இந்த யோசனை தோன்ற வில்லை. எனது இரண்டாவது ஆணைக்கு தபஸ் வினியையே விளக்கம் கேட்கலாம்'' என்றான் ஸங்கன், துடிப்புடன்.

''அங்குதான் தங்களுக்குச் சரியான விடை கிடைக்கும். தங்களுக்குத்தான் அரியணை கிடைக்குமென்று தபஸ்வினிதானே சொன்னாள்'' என்றாள் சொர்ணா...!

"ஆமாம், சொர்ணா !''

''அதைக் குறிப்பிட்டுச் சொன்னவள், அரியணை ஏறியதும் ஏற்படும் சிக்கல்களுக்கும் பரிகாரம் சொல்லலா மல்லவா?''

''சொல்லலாம், சொல்லலாம்'' என்று குதூகலப் பட்டான் ஸங்கன். அந்த குதூகலத்தால் அப்படியே சொர்ணாதேவியைக் கட்டிப்பிடித்து, ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கி, ''சொர்ணா! நீ ஏன் எனக்கு மந்திரியாக வரக்கூடாது?'' என்று கேட்டான்.

''அந்த உத்தியோகமும் மனைவிக்கு உண்டென்று சாஸ்திரம் சொல்லுகிறது'' என்று சிரித்தாள் சொர்ணா தேவி.

அவள் சிரிப்பு, இதயத்தின் வேதனையை அடியோடு துடைக்கவே, அவளைக் கைகளில் தாங்கிய வண்ணம் உப்பரிகையிலிருந்து இறங்கினான் ஸங்கன்.

"ஐயோ! விடுங்கள், மகாராஜா! சேடிகள் பார்த்தால் பரிகாசம் செய்வார்கள்'' என்று அவன் கரங்களில் தத்தளித்தாள் சொர்ணாதேவி. அதைச் சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவளைத் தூக்கியவண்ணமே பள்ளியறைக்குள் நுழைந்த ஸங்கன், அவளை முரட்டுத் தனமாக பஞ்சணையில் எறிந்து தானும் மலரணையில் புரண்டான். நாழிகைகள் ஓடின.

மறுநாட்காலையே ஸங்கன் தன் ராணியுடன் நாஹ்ரா மக்ரோவுக்குப் புறப்பட்டு, முதன்முறை போலவே மாலை வேளையில் நாஹ்ராமக்ரோவை அடைந்து, சாருணீ தேவியின் ஆலயத்தில் பிரவேசித்தான். அன்று தபஸ்வினி முதல் தினம் போல் கோவில் வாயிலில் நின்றிருக்கவில்லை . உள்ளே தேவியின் திருவுருவத்தினடியில் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் உட்கார்ந்திருந்தாள். சொர்ணாதேவி சாருணீதேவியின் உருவத்தையும் பார்த்து தபஸ்வினியின் தெய்வக்களை சொட்டும் முகத்தையும் பார்த்தாள். அந்தத் தேவாலயத்தின் சூழ்நிலை பயத்தையும் பக்தியையும் ஒருங்கே விளைவித்தன, அந்தப் பயத்திலும் பக்தியிலும் ஓர் இன்ப நினைப்பும் ஊடுருவி நின்றது.

'தேவிதானே மஞ்சளாற்றங்கரைக்கு வரும்படி இவரைப் பணித்தாள்? இல்லாவிட்டால் இவர் எனக்குக் இடைப்பாரா?' என்று, நன்றியும் இன்பமும் கலந்த பார்வையை தபஸ்வினி மீதும், தேவியின் திருவுருவத்தின் மீதும் வீசி, கீழே மண்டியிட்டு இருவரையும் வணங்கவும் செய்தாள்.

ஸங்கனும் வணங்கினான். வணங்கிய நிலையிலேயே இருக்கும்படி சொர்ணாதேவிக்கும் கட்டளையிட்டான். நீண்ட நேரம் தலைதாழ்த்திய நிலையில் கீழேயிருந்த அவ்விருவரையும் கண்விழித்துப் பார்த்த தபஸ்வினியின் இதழ்களில் இளநகை அரும்பியது. அவள் மெள்ளச் சொற்களை உதிரவிட்டு, ''மஞ்சளாற்றங்கரை பலனளித் திருக்கிறது, ஸங்கா! ராஜ்யமும் கிடைத்தது, ராணியும் கிடைத்தாள்'' என்றாள்.

"எல்லாம் தங்கள் அருள் தாயே' என்றான் ஸங்கன்.

“என் அருளல்ல, ஸங்கா! தேவியின் அருள்'' என்று அழுத்திச் சொன்னாள் தபஸ்வினி.

“இருப்பினும் தங்கள் மூலந்தானே தேவி பேசுகிறாள்'' என்றான் ஸங்கன்.

''தவம் செய்தால் உன் வாயினாலும் பேசுவாள், ஸங்கா. மனத்தில் சாந்தியும் சந்துஷ்டியுமிருந்தால் உன் நாவிலும் தேவி தோன்றுவாள்'' என்றாள் தபஸ்வினி.

"அந்த இரண்டுமில்லையே தாயே'' என்றான் ஸங்கன்.

"விதி உனக்கு அரசு, பதவி, புகழ் அனைத்தையும் அளிக்கும், ஸங்கா. ஆனால், சாந்தியை அளிக்காது'' என்று திட்டமாக அறிவித்தாள் தபஸ்வினி.

"ஏன் தாயே?"

''நீ முதன் முதலாக இங்கு வந்த அன்று, நீதான் மேவாரின் ராணா என்பதை நிர்ணயித்தாள். அது மட்டுமல்ல, உன் அரசபீடம் உனக்குப் பெருந்தொல்லை என்றும் அன்று இங்கு நடந்த நிகழ்ச்சிகளால் நிரூபிக்கப் பட்டது. உன் சகோதரர்கள் உன்னைக் கொல்லப் பார்த்தார்கள். ஆகவே, நீ மகா பலமுள்ள அரசனாயிருக்கும் போது உனக்குப் பக்கத்தில் சத்துரு ஒருவன் இருப்பான் என்பது மட்டும் தீர்மானமாயிற்று.''

“இருக்கிறான், தாயே. ஆனால்...''

“அவனை நீக்க உன்னால் முடியாது. ஒரு சத்தியம் உன்னைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், அதற்கும் ஒரு பரிகாரம் இருக்கிறது.''

"என்ன பரிகாரம், தாயே?'' ஸங்கன் ஆவலுடன் கேட்டான்.

'தேவி உனக்கு மஞ்சள் பாதுகாப்பு அளித்திருக் கிறாள். ஆகவே, தேவியின் மஞ்சள் உன் நெற்றியிலிருக்கும் வரை, நீ மஞ்சளாற்றைக் கடந்து அப்புறம் செல்லாதவரை உன்னை யாரும் அடக்க முடியாது" என்றாள் தபஸ்வினி.

ஸங்கன் இதயத்தில் மீண்டும் நம்பிக்கை புகுந்தது. தபஸ்வினி கொடுத்த தேவியின் மஞ்சள் காப்பை நிரம்ப வாங்கிக்கொண்டு சொர்ணாதேவியுடன் தலைநகர் திரும்பிய ஸங்கன், அன்று முதல் கவலையை விட்டான். அடுத்த ஐந்து வருஷங்களில் ராஜபுதனத்தில் பெரும் சாகசச் செயல்களை ஸங்கன் புரிந்தான். பல்வேறு ராஜபுத்ர குறுநில மன்னர்கள் மேவாரின் குடைக்கீழ் வந்தனர். அந்த ஐந்து வருஷமும் சிலாதித்தன் ராணாவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். அதில் முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனிக்க அவன் தவறவில்லை. மேவார் வம்ச மன்னர்கள் பவானி கோவிலின் குங்குமத்தை இட்டுத்தான் அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிவார்கள். ஆனால், ஸங்கன் அரியணையில் அமர்ந்தபோதும், மற்ற நேரங்களிலும் நெற்றியில் மட்டும் மஞ்சள் திலகமொன்று பளிச்சிட்டதைக் கண்ட சிலாதித்தன், அதன் காரணத்தை அறிய முயன்றான். அரண்மனைச் சேடிகளுடன் பேசி, மெள்ள அந்த உள்ளரங்கத்தையும் அறிந்து கொண்டான். ராணாவை அழிக்க வேண்டுமானால் மஞ்சளாற்றங் கரையைக் கடக்கச் செய்ய வேண்டும் என்ற உண்மை சிலாதித்தனுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது. சாருணீதேவியளித்த அந்த மஞ்சள் பாதுகாப்பைத் துறக்கும் மார்க்கம் எது என்று எண்ணிப் பார்த்தான். பல வருஷங்கள் விடை கிடைக்கவில்லை. விடை கிடைத்த பின்பு அதை உபயோகிக்கவும், நாட்டை நாசமாக்கவும் அந்தப் பாதகன் தவறவில்லை .

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.