Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம்-14 :பியானா

''ராஜ்ய விஸ்தரிப்பும் புகழும் உனக்குக் கிட்டும். ஆனால், மனச்சாந்தி மட்டும் கிட்டாது" என்று சாருணீதேவி ஆலயத்தின் தபஸ்வினி சொன்னது, ராணா ஸங்கன் வாழ்வில் திட்டவட்டமாகப் பலித்துக்கொண்டிருந்தது. வருஷங்கள் பல ஓடின. அவை ஓடின வேகத்தில் மேவாரின் பலமும் செல்வாக்கும் நாற்றிசையிலும் விரிவடைந்தன. சதா எதற்கெடுத்தாலும் பொறாமையையும் பூசல்களையும் விளைவித்து ஒன்றையொன்று அழித்துக் கொண்டிருந்த ராஜபுதனத்தின் கிளைகள் எல்லாமே ஸங்கன் ஆணைக்குக் காலக்கிரமத்தில் கீழ்ப்படிந்தன. என்றுமில்லாத ஒற்றுமை ராஜபுதனத்தில் ஸங்கன் ஆட்சியில் ஏற்பட்டதைக் கண்டு டில்லியிலிருந்த லோடி வம்சத்து நவாப் இப்ராஹீம் பெரிதும் பயம் கொண்டான். ராஜபுத்ரர்களை நினைத்தபோ தெல்லாம் தாக்கிப் பெரும் சேதம் விளைவித்து வந்த டில்லிப் பேரரசு மெள்ள மெள்ளக் கலைந்து, சிறுசிறு குட்டி அரசுகளாகப் பிரிந்து கொண்டிருந்தது. லோடி வம்சத்தின் தனி ஆட்சி வெகு துரிதத்தில் பலஹீனப்பட்டுக் கொண்டிருந்ததைக் கவனிக்கத் தவறாத டில்லி நவாப் இப்ராஹீம், ஸங்கனுடைய ஆதிக்கத்தை ராஜபுதனத்தில் வெகு சீக்கிரத்தில் உடைக்காவிட்டால் ஏற்கெனவே எங்கும் துழாவிவரும் அவன் வலுவான கரம், டில்லியையும் தொடத் தயங்காது எனப் புரிந்து கொண்டான். ஆகவே, அதற்கான யத்தனத்தையும் செய்ய முற்பட்டுப் பெரும் சேனையைத் திரட்டினான்.

இப்ராஹிம் லோடியின் முயற்சி அத்தனை எளிதில் பலன் தருவதற்கான மார்க்கம் துலங்கவில்லை . ஸங்கம்ராஜ தந்திரத்தாலும், சிசோதயர்களின் கிளைக்கம் வீரர்களிடம் அவன் காட்டிய தயையாலும் யுத்தங்களில் சென்றபோதெல்லாம் போரில் முன்னணியில் நின்று பெருங்காயங்களைப் பெற்று உடல் பூராவும் தழும்பு களுடன் விளங்கிய காரணத்தாலும் ராஜபுதனம் பூராவும் அந்த மகா வீரனுக்குத் தலை தாழ்த்தியது. ''ராணா யுத்தத்திற்குப் புறப்பட்டால் அவனைச் சூழ்ந்து 80,000 குதிரை வீரர்களும் முடிசூடிய ஏழு மன்னர்களும் ஒன்பது 'ரால் 'களும் ராவுல், ராவுத் முதலிய வர்க்கங்களின் 104 தலைவர்களும், 5,000 போர் யானைகளும் சென்றன" என்று சரித்திரம் கூறுகிறது.

இத்தகைய பெரும்படையை, ராணா ஸங்கனே நேரில் அணிவகுத்து இஸ்லாமியப் படைகளை வேரறுக்கத் திட்டமிட்டான். இப்ராஹீம் லோடியும் மால்வா நவாபும் தங்கள் படைகளை அலை அலையாக ராஜபுதனத்தின் மேல் ஏவினார்கள். பதினேழு யுத்தங்கள் நடந்தன. பதினேழு யுத்தங்களிலும் ஸங்கன் இஸ்லாமியப் படைகளை ராஜபுதனத்துக்குள் நுழைய முடியாதபடி முறியடித்து விரட்டினான். பதினேழாவது யுத்தத்தோடு மால்வா நவாப மாண்டார். ஆனால், இப்ராஹீம் லோடி மாளவில்லை. மனம் மட்டும் தளர்ந்திருந்தான். எப்படியும் கடைசியாக ஒரு கை பார்த்துவிடுவதென்ற தீர்மானத்தில் மஞ்சாளற்றங் கரையிலிருந்த பியானா என்ற நகரத்தை நோக்கிப் பெரும்படையுடன் வந்தான் இப்ராஹீம் லோடி. இதைக் கேட்டதும் ராணா ஸங்கனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இப்ராஹீம் லோடி எதற்காகப் பியானாவைத் தாக்க உத்தேசிக்கிறான்? இது யார் யோசனையாயிருக்கும்?' என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பிறகு, அந்தப் புரத்தில் சொர்ணாதேவியிடமும் கேட்டான். அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லாததால் சட்டென்று பதில் சொன்னாள், ''கண்டிப்பாகச் சிலாதித்தன் யோசனையாகத் தானிருக்கும்'' என்று.

அந்தப்புரத்தின் கட்டிலுக்கெதிரே உலாவிய ஸங்கன், அவளை உற்றுநோக்கி, "சொர்ணா, சிலாதித்தன் என் மனச்சாந்தியைக் குலைக்கும் எமன் என்பதும் உண்மை . வஞ்சகன் என்பதும் உண்மை . என்னிடம் பகைமை யுள்ளவன் என்பதும் உண்மை . ஆனால், அவனும் ராஜபுத்ரன் என்பதை மறந்துவிடாதே' என்று கூறினான்.

''அதை நான் மறக்கவில்லை , பிரபு'' என்றாள் சொர்ணாதேவி.

''எதிரிக்கு யோசனை சொல்லும் அளவுக்கு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு எந்த ராஜபுத்ரனும் இழிவடையமாட்டான், சொர்ணா!'' என்று ஸங்கன் மீண்டும் அழுத்திச் சொன்னான்.

'அத்தனை நிச்சயமா உங்களுக்கு?" சொர்ணாவின் கேள்வியில் கேலி இருந்தது.

'அந்த நிச்சயம் உனக்கில்லையா, சொர்ணா?'' என்று வினவினான் ஸங்கன்.

'இல்லை .''

''காரணம்?''

''மனிதனுடைய புத்தி விகாரத்தில் எனக்குள்ள நிச்சயம்."

''விளங்கச் சொல்."

''எப்பேர்ப்பட்ட உயர்குடியிலும் ஓர் இழிமகன் பிறப்பதுண்டு. இதற்கு அத்தாட்சிகள் மனித சரித்திரத்தில் அனந்தம்.''

"இருக்கலாம், சொர்ணா. ஆனால், ராஜபுதனத்தில் பிறந்தவன் சிலாதித்தன். அதுவும் சாதாரண வம்சத்திலல்ல, பரம்பரை பரம்பரையாக மேவார் அரியணையைக் காத்து நின்றுள்ள துவார் வம்சத்தில், ராய்சீன் தலைவன். இப்பொழுது என் படைத்தலைவன். அவன் என்னை அழித்து வாழலாம். ஆனால் ராஜபுதனத்தை அழித்து வாழ முடியாது'' என்று உறுதி நிரம்பிய குரலில் கூறினான் ஸங்கன்.

சொர்ணாதேவி இதற்கு உடனே பதில் சொல்ல வில்லை. பஞ்சணையின் ஓரத்தில் நன்றாகத் தள்ளி உட்கார்ந்து, ஸங்கனையும் பக்கத்தில் உட்காரும்படி கண்ணால் சைகை செய்தாள். அவள் கண்ணாணையை என்றும் மறுக்காத ஸங்கன், அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, இடக்கையைத் தனக்குள் சிறைப்படுத்திக் கொண்ட சொர்ணா, ''மஹாராஜா! தங்கள் படைத் தலைவரிடம் தங்களுக்கு நம்பிக்கை பலமாயிருக்கலாம். ஆனால், மஞ்சளாற்றங் கரையை உங்கள் நாட்டு எல்லையாக, அதாவது நீங்கள் தாண்டக்கூடாத எல்லையாக சாருணீதேவி வகுத்திருக்கிறாளல்லவா?'' என்று மெள்ளக் கேட்டாள்.

''ஆம், சொர்ணா .''

“இந்த மர்மம் யாருக்குத் தெரியும்?"

"தபஸ்வினிக்குத் தெரியும், உனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்.''

''அவ்வளவுதானா?''

"ஆம்."

"இல்லை , மகாராஜா! நமது சேடிகளுக்கும் தெரியும்.''

"எப்படித் தெரியும்?"

'எப்படித் தெரியுமோ, எனக்குத் தெரியாது, மகாராஜா! ஆனால் ஒரு நாள் நீங்கள் கொலு மண்டபத்துக்குச் செல்லும்போது திலகமிட திலகம் கொண்டுவரச் சேடியை அனுப்பினேன்...''

"உம்.''

''அவள் என் தந்தப் பேழையிலிருந்து சாருணீ தேவியின் மஞ்சள் காப்பைக் கொண்டு வந்தாள்.''

"உம்.''

''அதே சேடியுடன் சிலாதித்தன் பல முறைகள் நந்தவனத்தில் சிரித்து விளையாடிப் பேசுவதை நான் உப்பரிகையிலிருந்து பார்த்திருக்கிறேன்.''

இதைக்கேட்ட ராணா ஸங்கன் நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். ராணியின் யோசனை எந்தத் திக்கில் ஓடுகிறது என்பதை அவன் நன்றாகப் புரிந்து கொண்டான். இருந்தாலும், அவள் வாயின் மூலமே அதை வரவழைக்கத் தீர்மானித்து, ''அப்படியானால் உன் ஊகந்தானென்ன, சொர்ணா?'' என்று வினவினான்.

சொர்ணாதேவி தன் அழகிய விழிகளை உயர்த்தி ஸங்கனை நன்றாகப் பார்த்தாள். பிறகு, மீண்டும் விழிகளை நிலத்தில் ஓட்டி, ''மகாராஜா! மஞ்சளாற்றைத் தாண்டினால் உங்களுக்குத் தீங்கு நேரிடும் என்பது தபஸ்வினியின் வாக்கு. பியானா மஞ்சளாற்றங்கரைக்கு அக்கரையி லிருக்கிறது. அங்கு உங்களைச் சந்திக்க இப்ராஹீம் லோடி தீர்மானித்திருக்கிறான். இந்த யோசனையை அவனுக்குக் கூறக்கூடியவன் சிலாதித்தன் ஒருவன்தான்'' என்றாள்.

ஸங்கன் மறுபடியும் மௌனம் சாதித்தான். கடைசியாகச் சரேலெனப் பஞ்சணைலிருந்து எழுந்து, "எப்படியும் வரும் போரைத் தவிர்க்க முடியாது, சொர்ணா! எதற்கும் தேவியின் மஞ்சள் காப்பை அணிந்து போருக்குச் செல்கிறேன். அது நெற்றிலிருக்கும் வரை யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது'' என்று கூறிவிட்டு, ராணியின் அந்தப்புரத்திலிருந்து வெளியே சென்றான்.

சொர்ணாதேவி அடுத்த சில நாட்கள் துக்கத்தின் வடிவமாக விளங்கினாள். ராணா இணையற்ற உறுதியுடன் இப்ராஹீம் லோடியைச் சந்திக்க பியானா சென்ற போது, மஞ்சள் திலகத்தைத் தன் கையாலேயே வைத்துத்தான் அனுப்பினாள். இருப்பினும், அவள் இதயத்தைப் பெரும் சோகம் சூழ்ந்து நின்றது. பிரயாண சமயத்தில் வேதியர் ஓதிய மங்கள ஸ்தோத்திரங்களும் 'ஜெயவிஜயீபவ' வாழ்த்தொலிகளும் ஓரளவு சாந்தி அளித்த போதிலும், பொதுவில் அவள் இதயத்தைத் துக்கமே சூழ்ந்து நின்றது.

சரித்திரப் பிரசித்திபெற்ற பியானா யுத்தத்தைப் பற்றிய தகவல்கள் அடுத்த பத்தாவது நாள் முதல் வரத் தொடங்கின.எல்லாம் மங்களமான செய்திகள். மனத்தில் ர்ச்சியை அள்ளித் தெளிக்கும் வீரச் செய்திகள். வீர ஸ்திரி யான சொர்ணாதேவி அவற்றைக் கேட்கக் கேட்க, செயத்தைச் சூழ்ந்திருந்த சோகத்தை ஓரளவு துறந்தாள். பிரதி தினம் விடியற்காலையில் ராணாவின் கைப்பட ஓலையொன்று சொர்ணாதேவிக்கு வந்து கொண்டிருந்தது. ''சொர்ணா! இன்று என் படைகளுடன் மஞ்சாளற்றங் கரையின் இந்தப் பக்கத்தை அடைந்துவிட்டேன். அதில் ஓரிடத்தில் நான் மட்டும் தனித்து உட்கார்ந்தேன். எந்த இடம், சொல்?- ஸங்கன்'' என்றது முதல் ஓலை.

சொர்ணாவுக்கு அந்த இடம் கண்முன் எழுந்தது. தான் நீராடிய அந்த இடம்! ஸங்கன் புரவியுடன் வந்து அரைகுறை உடையுடனிருந்த தன்னைச் சந்தித்த அதே ஆற்றங்கரைத் துறை. பக்கத்தில்தான் அந்தத் தோப்பு. அங்கேதான் அவர் என்னை... மேற்கொண்டு நினைக்கக் கூச்சமாயிருந்தது அவளுக்கு. போர்ப்பாசறையிலும் கணவன் தன் காதலை மறக்கவில்லையென்பதை உணர்ந்து பெருமிதங் கொண்டாள்.

அடுத்தநாள் ஓலை அவளுக்குச் சற்றே வேதனையைத் தந்தது. “மஞ்சளாற்றைத் தாண்டிவிட்டேன். இன்று மாலை பியானாவில் இப்ராஹீம் லோடியுடன் மோதுவேன். வெற்றி நிச்சயம். நெற்றியில் தேவியின் காப்பு இருக்கிறது. கவலைப்படாதே-ஸங்கன்.''

தேவியின் காப்பை ஸங்கன் மறக்கவில்லை யென்பதை நினைக்க ஓரளவுக்கு சொர்ணாவுக்கு ஆறுதலா யிருந்தாலும், மஞ்சளாற்றை அவன் கடந்துவிட்டதில் அவள் பெரும் கவலையே கொண்டாள். அடுத்த நாள் மற்றொரு ஓலை வந்தது. அது தந்தது கவலையார் மகிழ்ச்சியா? சொர்ணாவுக்கே புரியவில்லை.

"போர் முடிந்தது. இப்ராஹீம் லோடியை முறியடித்தாகிவிட்டது. இஸ்லாமியப் படைகள் இனித் தலையெடுக்க முடியாது. இப்ராஹீம் லோடியின் புதல் வனை ராணாவே தனிமையில் போராடிச் சிறைபிடித் திருக்கிறார், சீக்கிரம் மேவார் திரும்புகிறோம் - ராணா உத்தரவுப்படி சேனாதிபதி சிலாதித்தன்.''

டில்லி அரசு முடிந்துவிட்டதை நினைத்து ஒரு கணம் பெருமகிழ்ச்சி கொண்டாள் சொர்ணாதேவி. அடுத்த கணம் 'இந்த ஓலையை அவர் ஏன் எழுதவில்லை ? சிலாதித்தன் ஏன் எழுதவேண்டும்?' என்று எண்ணியதால், அவள் இதயத்தில் கவலையும் சூழ்ந்தது.

அந்தக் கவலையுடன் அடுத்த நான்கு தினங்களைக் கழித்தாள் சொர்ணாதேவி. ஐந்தாவது தினத்தில் நகராக்கள் பிரமாதமாக சப்திக்க, மக்கள் வெற்றி ஒலி வானைப் பிளக்கச் சித்தூருக்குள் நுழைந்த ராணா ஸங்கன், நேராகச் சொர்ணாதேவியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். அவன் வரவை எதிர்நோக்கி சர்வாபரண பூஷிதையாய் சொர்ண பிம்பம்போல் நின்றிருந்த சொர்ணாதேவி ஸங்கன் அறைக்குள் காலடி எடுத்துவைத்ததும் அவனை நோக்கி ஓடினாள். ராணாவின் வலக்கரம் அவளைச் சுற்றி வளைத்தது. இன்னொரு கரம் அவள் முதுகுப் பக்கத்திலேயே கிடந்தது. சொர்ணாதேவி ஆரம்பத்தில் அதைக் கவனிக்கவில்லை . ஸங்கன் வலக்கரத்தின் அழுத்திய பிடியில் துவண்டு இன்பமடைந்தாள். பிறகு, அந்த இன்னொரு கரத்தையும் தன்னைச் சுற்றி வளைக்கத் தன் வலக்கையால் இழுத்தாள். அவ்வளவு தான், அவள் உணர்ச்சிகள் திடீரென்று ஸ்தம்பித்தன. அவள் வெளியே இழுத்தது முக்கால் கைதான். ''மகாராஜா?'' என்று அலறினாள் சொர்ணாதேவி.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.