பியானா போரில் கால்பாகம் வெட்டுண்டுபோன தனது இடக்கையைக் கண்டு, "மஹாராஜா!'' என்று சொர்ணா அலறியதும் பதிலுக்குச் சிரிக்கவே செய்தான் ஸங்கன். சாதாரண சமயத்தில் அமுதமயமாயிருக்கும் கணவன் சிரிப்பு, வேதனை நிறைந்த உள்ளத்தில் விளைவாக அன்று வேப்பங்காயாக இருந்ததால், சொர்ணா தேவி வெகுண்டு, ''ஏன் சிரிக்கிறீர்கள். மஹாராஜா?'' என்று சினத்துடன் துக்கமும் கொந்தளித்த குரலில் வினவினாள்.
ஸங்கனின் வலக்கரம் சொர்ணாதேவியை முன்னை விடச் சற்று பலமாகவே அணைத்தது - "இந்தக் கை போனதற்கு எதற்காக அலறுகிறாய், சொர்ணா?'' என்று மீண்டும் சிரித்துக் கொண்டே வினவினான்.
நீர் ததும்பிய அழகிய விழிகள் அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தன. ''ஒரு கையை இழந்தது பெரும் நஷ்டமாகப் படவில்லையா உங்களுக்கு?'' என்று இதழ்கள் துடிப்புடன் சொற்களை உதிர்த்தன.
"இல்லை .'' ஸங்கன் குரல் சாதாரணமாகவே வெளிவந்தது.
“ஏன், லாபமாகப் படுகிறதா?'' - சொர்ணாதேவி கேள்வியில் கோபம் மிஞ்சியே கிடந்தது.
''ஆம்."
''உங்களுக்குக் கை மட்டுமல்ல, சித்தஸ்வாதீனமும் போய்விட்டது.'
"ஆம்."
“என்ன, ஆமாம்?''
“சித்தத்தை உன்னிடம் பறிகொடுத்துப் பல வருஷங்கள் ஓடிவிட்டன, சொர்ணா! அதற்கு அத்தாட்சி களும் இரண்டு இருக்கின்றனவே'' என்று பதில் சொன்ன ஸங்கன், ராணியின் கன்னத்தில் தன் இதழ்களைப் புதைக்கவும் செய்தான்.
சொர்ணாதேவி பற்பல உணர்ச்சிகளின் வசப் பட்டாள். இரண்டு அத்தாட்சிகள் என்று கணவன் சொன்னது தனது இரு குழந்தைகளைத்தான் என்பதை அவள் புரிந்து கொண்டதால், வெட்கம் அவளை ஒரு புறத்தில் ஆட்டி வைத்தது. கையை இழந்து நின்ற கணவனைக் கண்டதால் துன்பம் ஒருபுறம் அவளை வதைத்தது. கையை இழந்தும் அவன் வேடிக்கையாகப் பேசுவது அவளுக்கு எரிச்சலையே உண்டு பண்ணியது. இத்தனை உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட அவள், “நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள், வேறெதுவும் சொல்லமுடியாத காரணத்தால்.
''செயலில் மட்டும் நானென்ன குறைச்சலா?'' என்று கேட்டான் ஸங்கன்.
“இப்பொழுது குறைவுதான்.''
“ஏன்?''
“செயல்படும் கையொன்று போய்விட்டதே.''
"போனாலென்ன?'' ''அதைத்தான் லாபமென்று சொல்லிவிட்டீர்களே?'' ''ஆமாம், லாபந்தான்.'
' "எப்படி லாபமோ ?''
''ஒரு கை போனால் அதைவிடத் திறமையான கை கிடைக்கும்.''
"யார் கொடுப்பார்கள்?'' “யாரும் கொடுக்கத் தேவையில்லை.''
கணவன் சொல்வதன் அர்த்தம் புரியாமல் விழித்தாள் சொர்ணாதேவி. 'ஏன், புரியவில்லையா, தேவி? சொல்கிறேன். கேள். முன்பு எனக்கு ஒரு கண் போய் விட்டதல்லவா?'' என்று கேட்டான் ஸங்கன்.
"ஆமாம்” என்றாள் சொர்ணாதேவி.
''அப்படியும் என்னை மணக்க ஒப்புக்கொண்டாய்?'' “ஆம்.''
"அப்பொழுதே நான் சொன்னேன் எனக்கு ஒரு கண் இல்லையென்று.''
''சொன்னீர்கள்.''
“அந்த இன்னொரு கண்ணாக நீ இருப்பதாகக் கூறினாய்!''
''ஆமாம்.''
"இப்பொழுது ஒரு கை போய்விட்டது. ஆனால், இன்னொரு கையாக நீ இருப்பாய். என்னுடைய ம விழிக்குப் பதில் உன் பங்கய விழி கிடைத்தது. என் முரட்டுக் கரத்துக்குப் பதில் இந்தத் தளிர்க்கரந்தால் இருக்கிறதே. இது லாபமில்லையா எனக்கு?'' என்ற ஸங்கன், அவளை ஆசையுடன் அணைத்தான்.
அவன் மொழிகளில் துலங்கிய அன்பும், குரலில் தொனித்த ஆசையும் சொர்ணாவை இந்திரலோகத்துக்குக் கொண்டு போயின. அத்துடன், கையிழந்து தன்னெதிரே சிரித்துக்கொண்டு நின்ற அந்த மண்டலாதிபதியைப் பரிதாபத்துடனேயே அவள் நோக்கினாள். "நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் என் மனம் மாறாது. மஞ்சளாற்றங்கரையைத் தாண்டியதால்தான் உங்களுக்கு இக் கை போயிற்று. அதைத் தாண்டியதற்கும் பியானாவைப் போர் அரங்கமாக அமைத்ததற்கும் அந்தப் பாதகன் சிலாதித்தன்தான் காரணம்” என்றாள் சொர்ணாதேவி.
ராணா ஸங்கன் அவளை அணைத்திருந்த வலக்கரத்தை நீக்கி, வழவழத்த கபோலங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டே சொன்னான்: “ராணி! சிலாதித்தன் இந்தப் போருக்குக் காரணமல்ல. இப்ராஹீம் லோடி என்னைச் சந்திக்கப் பியானாவில் காத்திருந்தான். ஆகவே நான் அவனை அங்கு சென்று சந்திக்க வேண்டியதாயிற்று. தபஸ்வினி சொன்னபடி மஞ்சள் காப்பை நெற்றியில் இட்டுக் கொண்டுதான் போருக்குச் சென்றேன். அதனால் பியானாவில் சரித்திரம் புகழும் வெற்றியே கிடைத்தது. இப்ராஹீம் லோடியின் மகனைச் சிறை செய்து கொண்டு வந்திருக்கிறேன். வம்சமோ தலையெடுக்க முடியாது. அத்தகைய போரில் இழந்தேன். அதுவும் தேவியினருளால் இடக்கை போயிற்று.வாளும் வேலும் ஏந்தும் வலக்கை அப்படியே தான் இருக்கிறது. போர் என்றால் லாபம், நஷ்டம், ஜெயாபஜயம் சகலத்தையுந்தானே எதிர்பார்க்க வேண்டும்? மகத்தான வெற்றி மேவாருக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றியைச் சம்பாதிக்கப் போர் அரங்கின் முகப்பில் போரிட்டவன் கைகளில் ஒன்று போவது சாதாரண நஷ்டம். இதற்காக மனம் நோவது அவசியமில்லை . அதுவும் வீர ஸ்திரீயான நீ, இந்த அற்ப நஷ்டத்திற்கு ஏங்குவதும் அழகல்ல.''
ராணா ஸங்கன் இந்த வார்த்தைகளை அமுதத்தில் குழைத்துத்தான் கொட்டினான். ஆனால் சொர்ணாதேவிக்கு மட்டும் அவற்றால் சாந்தி ஏற்படவில்லை. பியானாவில் இப்ராஹீம் லோடி வந்ததற்கும், ஸங்கன் மஞ்சளாற்றங் கரையைத் தாண்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதற்கும் சிலாதித்தனே காரணமென்று அவள் மனத்தில் ஏதோ சொல்லிக்கொண்டேயிருந்தது.
'ராணா கண்ணை இழந்தது சகோதரர் சண்டையால். திட்டமான ஏற்பாடு ஏதுமில்லாமல், சகோதரன் ஆத்திரத்தில் எய்த அம்பால். ஆனால் ராணாவின் கை எனது அத்தகைய எதிர்பாராத சம்பவத்தாலல்ல. ணாவின் உயிரைக் கவரச் செய்யப்பட்ட ஏற்பாடு. யின் மஞ்சள் திருக்காப்பினால் கையுடன் நின்று து. இதில் ஏதோ ஆழ்ந்த சூழ்ச்சியும் திட்டமும் இருக்கின்றன' என்று சொர்ணாதேவி அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
வருஷங்கள் ஓடின. ராணா ஸங்கனுக்கு ஏன் குழந்தைகள் பிறந்து இரண்டு தவறியும் விட்டன. மற்ற குழந்தைகளின் மலர் முகத்திலும் கணவனின் பரந்த புகழிலும் அன்பிலும் சொர்ணாதேவி தன் துயரங்களையும் உள்ளூற உறுத்திக் கொண்டிருந்த கிலியையும் ஓரளவு மறந்தே இருந்தாள். அப்படி அவள் இதயத்துக்குச் சாந்தியைக் கொடுக்கும் சூசகங்களும் நிரம்ப இருக்கவே செய்தன. இரண்டு குழந்தைகளை அவள் இழந்தாலும் மூன்றாவது மகனான ரத்னசிம்மனும் நான்காவது மகனான விக்ரமஜித்தும் இரு பெரும் சிம்மங்களாக வளர்ந்து, போரிலும் வல்லவர்களாகித் தந்தையுடன் பல போர்களில் பங்கும் எடுத்துக்கொண்டார்கள்.
கணவன் புகழிலும் மக்கள் வீரத்திலும் விரிந்து கிடந்த மேவார் சாம்ராஜ்யத்திலும், என்றுமில்லாதபடி ராஜபுத்ர ஐக்கியத்திலும் சாந்தியடைந்த அவள் உள்ளத்தைக் கலக்க, மீண்டுமொரு பெரும் பகைவன் ராஜபுதனத்துக்கு எழுந்தான்.
மொகலாய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் ஸ்தாபித்த பாபர், பர்கானா சிற்றரசிலிருந்து இத்தியாவை நோக்கிக் கிளம்பினான். இந்தியாவுக்கு வந்த பாபர், அவனுக்கு வந்த தயமூர் போலும் செங்கிஸ்கான் போலும் பெரும் படைகளுடன் வரவில்லை . சொந்த நாட்டில் அவர்களைப் போல செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவனு மலல. வறுமையின் வயிற்றில் பிறந்தவன். அதன் சோதனைகளில் சுழன்றவன். கேவலம், இரண்டாயிரம் ரேர்களைத் திரட்டிக்கொண்டுதான் ஹிந்துஸ்தானத்தின்மீது இறங்கினான். ஆனால், தயமூரும் செங்கிஸ்கானும் சாதிக்க முடியாததை பாபர் சாதித்தான். அவர்கள் நிறுவ முடியாத பேரரசை பாபர் ஹிந்துஸ்தானத்தில் நிறுவினான். அந்தப் பேரரசுக்கு விதை விதைத்தது, மஞ்சளாற்றங்கரைக்குப் பெரிதும் அப்பாலுள்ள கனூவா என்ற இடத்தில் நடந்த போர், விதை விதைத்தது பாபரின் வீரம் மட்டுமல்ல, மற்றொரு சதியும் அதில் கலந்து கொண்டது.
இரண்டாயிரம் வீரர்களுடன் ஹிந்துஸ்தானத்தின் மீது இறங்கிய பாபர், வெகு சீக்கிரம் இப்ராஹீம் லோடியை முறியடித்து, டில்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றி, ஆக்ராவிலிருந்து ராஜபுதனத்தை நோக்கிக் கிளம்பினான். ராணா ஸங்கன் ஆதிக்கம் ராஜபுதனத்தில் நிலைத்திருக்கும் வரையில் தான் லோடிகளிடமிருந்து கைப்பற்றிய அரசு தனது அல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட பாபர், பெரும்படை திரட்டி ராணா ஸங்கனைச் சந்திக்க மஞ்சாளற்றை நோக்கிக் கிளம்பினான். பாபரின் ஏற்பாடுகளை அவ்வப்பொழுது ஒற்றர்களால் கவனித்து வந்த ராணா ஸங்கனும், ராஜ புதனத்தின் படைகளைத் திரட்டிக்கொண்டு பியானாவுக்குக் கிளம்பத் தயாரானான். அரண்மனைக்கு வெளியேயிருந்த துந்துபிகள் ராணா புறப்படும் நேரம் நெருங்கிவிட்டதை அறிவித்தன. சங்கங்கள் சப்தித்தன.
அந்தப்புரத்தில் பூரண கவசத்துடன் விடைபெற நின்ற ராணா ஸங்கனை மிகுந்த சஞ்சலத்துடன் நோக்கிய சொர்ணாதேவி, தன் வலக்கை பெருவிரலால் அவன் நெற்றியில் சாருணீதேவியின் மஞ்சள் காப்பைப் பதித்தாள்.
“ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள். மஞ்சளாற்றின் அக்கரையிலாவது தங்குங்கள். ஆற்றங்கரையைவிட்டு நீண்ட தூரம் செல்லாதீர்கள்'' என்றும் கேட்டுக் கொண்டாள்.
அன்று ஸங்கன் பதில் சொன்னது விசித்திரமா யிருந்தது சொர்ணாதேவிக்கு. விதியே அவன் வாயின் மூலமாகச் சொற்களை உதிர்த்ததோ என்று, பின்னால் ஒரு சமயத்தில் நினைத்தாள் அவள்.
சஞ்சலத்துடன் நின்ற மனைவியை நோக்கிச் சொன்னான் ஸங்கன், ''சொர்ணா! மனிதர்கள் வாழ்வு விதியின் கரங்களால் வகுக்கப்படுகிறது. அதில் முன்னெச்சரிக்கைக்கு ஓரளவுதான் இடமுண்டு " என்று.
''அதற்காக எச்சரிக்கையைக் கைவிடுவது விவேக மல்ல'' என்றாள் சொர்ணாதேவி பதிலுக்கு.
''சரி, சொர்ணா'' என்று சொன்ன ஸங்கன் புன்முறுவல் பூத்தான்.
"இதையும் கைவிடாதீர்கள்'' என்று, தேவியின் மஞ்சள் காப்புடனிருந்த சிறிய தந்தப் பேழையையும் கணவனிடம் கொடுத்தாள் அவள்.
பயபக்தியுடன் அதை வாங்கிக்கொண்ட ஸங்கள், ''இதிருக்கும்வரை கவலைக்கு இடமில்லை. ராணி. விரைவில் சந்திப்போம்'' என்று கூறிவிட்டு வெளியே நடந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் உப்பரிகை முனைப்பு லிருந்து, ராணா ஸங்கன் செல்வதைப் பார்த்த ராணியின் மனத்தைப் பெருமிதம் ஆட்கொண்டது. புரவிப்படையின் நடுநாயகமாய்ப் பெரும் வேலைக் கையிலேந்தி மகுடத்துடன் ராணா சென்ற காட்சி அந்த ராஜபுதன கரியின் இதயத்தில் இணையற்ற பெருமையைக் கிளறி விட்டது. ''ராணாவை நேரிடையாகப் போரில் வெல்ல மொகலாய பாபரால் ஒருக்காலும் முடியாது'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் சொர்ணாதேவி.
பதினைந்து நாட்களுக்கெல்லாம் இதே பாடத்தை பாபரின் படைத் தலைவர்கள் திரும்பப் படித்தார்கள். முதல் மோதலில் ராணா ஸங்கனால் முறியடிக்கப்பட்ட பாபரின் பெரும்படை சிதறி ஓடியது. பின்வாங்கிப் பாபர் நிலை குலைந்து தன் கூடாரத்தில் உட்கார்ந்திருந்தான்.
“நவாப், ஸங்கனை முறியடிக்க நம்மால் முடியாது. ஆழந்தெரியாமல் காலிட்டுக்கொண்டு விட்டோம்'' என்றான் மொகலாயர் படைத்தலைவன்.
பாபரின் கூரிய விழிகள் படைத்தலைவனை நோக்கி எழுந்தன. ''ஆழந் தெரியாமல் காலிடுபவன் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் பாபர்.
"காலை மீட்க வேண்டும்.''
''சுயமரியாதையுடன் மீட்க முடியாவிட்டால்?''
''அமிழ்ந்து போக வேண்டும்.''
''கடைசியில் சொன்னதுதான் சரியான வழி. அமிழ்ந்து கீர்த்தியை நிலைநாட்டிக் கொள்வோம்.'' என்ற பாபர் சிந்தித்தான். பிறகு கேட்டான்,
''பாவிகளான ஹிந்துக்களிடம் ஏன் தோற்றோம்?'' என்று.
''அவர்கள் படைபலம் அதிகம்'' என்றான் சேனாதிபதி.
''அது ஒரு காரணம். அடுத்தபடி?"
''ஸங்கன் படைகளை நடத்துவதில் இணை யற்றவன்."
"அதுவும் ஒரு காரணம். அடுத்தபடி?''
பதில் சொல்லத் தெரியாமல் விழித்த படைத் தலைவனை நோக்கி, ஆசனத்தை விட்டெழுந்த பாபர் சொன்னான், "நமது பாபங்கள் காரணம்'' என்று.
''பாபமா, நவாப்'' ஆச்சரியத்துடன் கேட்டான் மொகலாயர் படைத்தலைவன்.
''அம். நான் குடிக்கிறேன். நீ குடிக்கிறாய், வீரர்கள் குடிக்கிறார்கள்'' என்றான் பாபர்,
''ஆமாம், நவாப்! நீண்ட நாட்களாகக் குடிக் கிறார்கள்'' என்றான் படைத்தலைவன்.
''இஸ்லாம் குடியை அனுமதிக்கிறதா?'' என்று சீறினான் பாபர்.
"இல்லை .''
“குர்ஆணை சமீபத்தில் ஓதினோமா?''
"இல்லை .''|
''அவை இரண்டுந்தான் தோல்விக்குக் காரணம். இன்று முதல் நான் தாடி வளர்க்கிறேன். குடியை நிறுத்துகிறேன். ஆண்டவனை நினைக்கிறேன். அவர்வழி காட்டுவார்'' என்றான் பாபர்.
அன்றிரவே பாபரின் பாசறையில் குடிக் கலயங்கள் உடைக்கப்பட்டன. பாபர் குர்ஆனிலும் ஆண்டவனைப் பிரார்த்திப்பதிலும் இறங்கினான். அன்றிலிருந்து ஒரே வாரத்தில் ஒளியும் கிடைத்தது. ஒளிவந்தது ஓர் ஒற்றன் மூலமாக வந்த ஒற்றன் இரவில் வந்தான், இருளைவிட கரியைப் பூசக்கூடிய போர் முறையைச் சொன்னான்.
பாபர் ஒரு விநாடிதான் சிந்தித்தான். பிறகு, அவன் கண்கள் புத்தொளி பெற்றன. ''சரி சரி! ராணாவைக் கனூவாவில் சந்திக்கிறேன்'' என்றான் திடமானகுரலில். வந்த ஒற்றன் சிரித்தான். பாபரும் பெரிதாக நகைத்தான், நகைத்தது மட்டுமல்ல, ஒற்றன் முதுகிலும் பெரிதாகத் தட்டிக்கொடுத்தான்.