Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம்-16 :விதி கொண்ட வெற்றி!

பியானா நகரத்துக்கு வெளியேயிருந்த கூடாரத்தின் முகப்பில் நின்று, சற்றே கவலையோடிய முகத்துடன் வடகிழக்குப் பகுதியில் தனது ஒற்றைக்கண்ணை ஓட்டிய ஸங்கன், நீண்டநேரச் சிந்தனைக்குப் பிறகு, பக்கத்திலிருந்த படைத் தலைவனை நோக்கி திடீரெனத் திரும்பி, ''மொகலாயன் கனூவாவை நோக்கி வருகிறானென்பது நிச்சயந்தானா?" என்று வினவினான்.

மற்ற படைத்தலைவர்கள் பதில் சொல்லுமுன்பு துவார் குலத் தலைவனும், மேவார் தளபதியுமான சிலாதித்தன் ராணாவை நோக்கி, "மகாராஜாவுக்கு எனது வார்த்தையில் நம்பிக்கையில்லையா?' என்று வினவினான்.

ராணாவின் ஒற்றைக் கண் அவசியத்துக்கு அதிகமாகவே சிலாதித்தன் முகத்தை ஊடுருவி நோக்கியது. பிறகு, உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களில் சந்தேகம் பெரிதும் தொனித்தது. ''நம்பிக்கை இல்லாமல் இல்லை சிலாதித்தா, ஆனால், பாபரின் போக்கு விசித்திரமாய் இல்லையா உனக்கு?'' என்று கேட்டான் ஸங்கன்.

''என்ன விசித்திரம்... மகாராஜாவுக்குத் தோன்று கிறதோ?'' என்று சிலாதித்தன் வினவினான், ராணாவின் மனத்தில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியாமல்.

"பாபர் தற்சமயம் இருக்குமிடத்திலிருந்து பியானா வுக்கு வர கனூவாவுக்குச் செல்ல வேண்டிய அவசிய மில்லை .'

''ஏன்?"

''பாபர் தளத்திலிருந்து நேர் தெற்கில் நாமிருக் கிறோம். கனூவா சற்றுத் தள்ளி இருக்கிறது, பியானாவுக்கு நேராக வரச் சௌகரியம் இருக்கும்போது, பாதையிலிருந்து விலகி இருக்கும் கனூவாவை நோக்கி ஏன் பாபர் திரும்புகிறான்?" இப்படிக் கேட்ட ராணா ஸங்கன் மீண்டும் சிலாதித்தனைக் கூர்ந்து நோக்கினான்.

சிலாதித்தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை . ஏதோ சிறிது குழப்பம் உள்ளூற ஓடுவதைக் கண்கள் மட்டும் சுட்டிக்காட்டின. அதைக் கவனித்த ஸங்கன் மீண்டும் கேட்டான், ''என்ன குழப்பம் சிலாதித்தா? காரணம் புரியவில்லையா உனக்கு?'' என்று.

சிலாதித்தன் நன்றாக ராணாவை ஏறெடுத்துப் பார்த்தே பதில் சொன்னான், ''புரிகிறது, மகாராஜா' என்று.

''என்ன புரிகிறது?''

"பாபர் நம்மைப் பியானாவில் சந்திக்க இஷ்டப்பட வில்லை என்பது புரிகிறது."

"அது மட்டுமா?" "வேறென்ன காரணம் இருக்க முடியும்?"

“மஞ்சளாற்றங்கரையை விட்டு நீண்டதூரம் நம்மை இழுக்கவும் முயலுகிறான்."

"மஞ்சளாற்றங்கரையைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்?"

''அவனுக்குத் தெரியாவிட்டாலென்ன. யாராவது சொல்லிக் கொடுத்திருக்கலாம்.''

''யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?'' என்று முகத்தில் குழப்பம் துளிர்விடக் கேட்டான் சிலாதித்தன்.

"அது கனூவாவில் தெரியும்'' என்று கூறிய ஸங்கன், மற்ற படைத்தலைவர்களை நோக்கி, "படைத் தலைவர்களே, நமக்குள்ளேயே ஒரு விஷப்பாம்பு இருக்கிறது. ஆகவே எச்சரிக்கையாயிருங்கள், எதிரிக்கு இங்கிருந்து உளவு சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, படைகள் கனூவாவை நோக்கி ஜாக்கிரதையாக நகரட்டும்'' என்று உத்தரவிட்டான்.

இதைக் கேட்ட சிலாதித்தன் மெள்ள இடையே புகுந்து “மகாராஜா! எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது...!'' என்று ஆரம்பித்தான்.

"என்ன சிலாதித்தா?'' என்று வினவினான் ஸங்கன்.

"நாம் பியானாவை விட்டுப் புறப்படாமலே இருந்தால் என்ன? நாம் இங்கு தாமதித்தால் பாபர் கனூவாயை விட்டு இங்கு வந்துதானே ஆகவேண்டும்? என்றான்.

“ஆம். சிலாதித்தா, வந்துதான் ஆகவேண்டும். ஆனால், நாம் இங்கு தாமதிக்க முடியாது.''

"ஏன்?"

''மேவார் மரபில் பிறந்த தோஷம். எதிரி அறைகூவும் இடத்திற்குச் செல்வது சிசோதயர் பரம்பரை வழக்கம். கனூவாவிலேயே பாபரைச் சந்திப்போம். படைகள் புறப்படட்டும்'' என்று ஆணையிட்ட ராணா, மேற்கொண்டு சிலாதித்தனை திரும்பியும் பாராமல் கூடாரத்துக்குள் சென்று, கவசத்தை அணிந்து தன் பெரும் பட்டாக் கத்தியையும் இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, இடுப்பிலிருந்த கச்சையிலிருந்து தந்தப் பேழையை எடுத்துத் தேவியின் மஞ்சள் காப்பையும் நெற்றியிலணிந்து வெளியே வந்தான்.

அடுத்த சில நிமிஷங்களில் போர்த்தாரைகள் ஊதின. ராஜபுதனத்தின் பெரும்படைகள் சுடும் பாலைவனத்தின் மணலில் பரந்து ஊர்ந்தன. யானைகளின் பெரும்படை நடுவில் செல்ல, காலாட்கள் பின் தொடர, இரண்டு பக்கங்களிலும் அண்ட பேரண்ட பட்சியின் பெரும் இறகுகளைப் போல் குதிரைப்படைகள் விரைய, நடுவில் தன் பெரும்புரவியில் அமர்ந்து சென்ற ஸங்கன் சுற்றும் முற்றும் தன் படையமைப்பையும் அதன் சக்தியையும் கண்டு கொண்ட ஆனந்தத்தோடு, ராஜபுதனத்தின் அந்த மாபெரும் படை அழியாமல் பாதுகாக்க சாருணீதேவியை மனத்துக்குள் தியானிக்கவும் செய்தான். அந்தத் தியான சமயத்திலும் அவன் மனத்தில் சிறிது சஞ்சலமிருந்தது. தங்கச் சஞ்சலத்துக்குக் காரணம் புரியாமலே கனூவாவை அடைந்த ராணா, அங்கு கூடாரமடித்துத் தங்கினான். அன்றிரவு முழுவதும் உள்ளத்தில் சஞ்சலம் மேலிட்டதால் கூடாரத்தை விட்டுக் கிளம்பி, படை அமைப்பைப் பார்த்துச் சுற்றி வந்த ராணா, மறுநாள் போருக்குத் தயாராகிக் கிளம்பிய பொழுதுதான் சஞ்சலத்துக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டான். படைத்தலைவர்களிடம் எதிரியைத் தாக்க வேண்டிய முறையைக் கூறி அனுப்பி விட்டுக் கவசமணிந்து கச்சையை எடுத்த ஸங்கன், அதில் சொர்ணாதேவி கொடுத்த தந்தப்பேழை இல்லாததை அறிந்தான். கூடாரமெங்கும் பேழையைத் தேடிய ராணா, அது கிடைக்காததால், வெளியிலிருந்த வீரனொருவனை அழைத்து நானில்லாதபோது கூடாரத்துக்குள் யார் வந்தது?'' என்று கடுங்கோபத்துடன் வினவினான்.

"படைத்தலைவர் வந்து போனார், மகாராஜா'' என்று நடுக்கத்துடன் கூறினான் வீரன்.

''எந்தப் படைத் தலைவர்?''

''சிலாதித்தர்.''

ஸங்கன் புரிந்து கொண்டான். "சரி, வெளியே போ!'' என்று சொல்லி வீரனை வெளியே அனுப்பியதும் தலையைக் கீழே தாழ்த்திப் பெருமூச்சு விட்டான். ''மஞ்சளாற்றைத் தாண்டி நீண்ட தூரம் வந்துவிட்டேன் தாயே, உன் மஞ்சள் காப்பையும் இழந்தேன், முடிவு புரிகிறது. போரில் வெற்றி கொண்டால் இந்தச் சடலம் உன் சந்நிதிக்கு வரும். இறந்தால் என் ஆத்மா உன் சந்நிதியை அடையும். எப்படியும் உன் சந்நிதிக்கு வருகிறேன்' என்ற சாருணீதேவியை நினைத்துச் சில விநாடிகள் ஸ்மரித்த ஸங்கன், போருக்குக் கிளம்பினான்.

கனூவாவின் போர் விவரங்களை கர்னல் டாட் வெக அழகாகச் சொல்லியிருக்கிறார். இருமுறை முறியடிக்கப் பட்ட பாபர், மூன்றாம் முறை எப்படி வெற்றியடைந்தான் என்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்கிறார். ''போர் எப்படி முடியுமோ என்பதைப்பற்றி பாபர் சந்தேகப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், ராணாவின் சைன்னியங் களின் இடப்பகுதியை நடத்திக் கொண்டிருந்த துவார் வம்சத் தலைவனான சிலாதித்தன், திடீரெனத் தனது குதிரைப்படைகளுடன் சென்று, எதிரிப்படைகளுடன் சேர்ந்து கொண்டு, ராணாவின் படைகளை எதிர்த்தான். பாபரின் வீரம் சம்பாதிக்க முடியாத வெற்றியை ராஜபுத்ரனின் சதி சம்பாதித்தது'' என்கிறார் கர்னல் டாட். மகா வீரனொருவனின் கடைக்காலத்தைப் பற்றி எழுதிய அந்த ஆசிரியர், ராணா வாழ்க்கையில் கண்ட அந்த ஒரு தோல்வியிலும் அவன் புகழே ஓங்கி நின்றது என்பதையும் விவரிக்கத் தவறவில்லை .

ராணாவின் தோல்விக்குக் காரணம் சதி என்று சரித்திர ஆசிரியர்கள் சொன்னார்கள். ஆனால், தபஸ்வினி, விதியென்று அதைச் சொன்னாள். கலூவாவிலிருந்து பின்வாங்கிய ஸங்கன், ''பாபரை முறியடிக்காமல் சித்தூருக்குள் புகமாட்டேன்'' என்று பிரதிக்ஞை செய்து, மேவாரின் எல்லையிலிருந்த பஸ்வாவில் தங்கினான். பஸ்வாவில் கூடாரத்தில் தேகத்தில் எண்பது காயங்களுடன் படுத்து கிடந்த-அம்மகாவீரனைப் பார்த்து தபஸ்வினியின் கன்களில்கூட இரு நீர்த்துளிகள் எழுந்து கன்னங்களில் அருண்டோடின. அவன் பஞ்சணை ஓரமாக உட்கார்ந்திருந்த சொர்ணாதேவியின் முகத்தில் துக்கக் குறியுடன் பெருமையும் துளிர் விட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களில் ஒன்று ராணாவின் வலக்கையில் சிறைப்பட்டுக் கிடந்தது. அவர்கள் தனிமையில் இல்லை . அந்த இரு பெண்களையும் ராணாவையும் சுற்றி, கவசமணிந்த ராஜபுதனப் பெருந்தலைவர்கள் நின்றிருந்தார்கள்.

ராணாவின் கண்கள் கூடாரத்தைச் சுற்றி வளைத்தன. பிறகு உதடுகள் அசைந்து சொர்ணாதேவியின் காதில் ஏதோ முணுமுணுத்தன. அதைக் கேட்டதும் பஞ்சணைக்கு அருகில் வரும்படி சொர்ணாதேவி தபஸ்வினியை அழைத்தாள். நீர்த்துளிகள் உருண்டோடிய கபோலங் களுடன் அருகில் வந்த தபஸ்வினியை பார்த்த ஸங்கன், சற்று சக்தியை வரவழைத்துக்கொண்டு “தாயே, தபஸ்வினி யான தங்கள் கண்களில் நீர் வரக் கூடாதே!" என்றான்.

''ஆம் ஸங்கா ! வரக்கூடாது. ஆனால், நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத நேரங்களும் வாழ்க்கையில் உண்டு " என்றாள் தபஸ்வினி, தழுதழுத்த குரலில்.

''உண்டு, தாயே. அதை நான் பியானாவிலும் கனூவாவிலும் அறிந்தேன்'' என்று சொன்ன ஸங்கன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது.

''பியானாவை விட்டு நீ வெளியேற வேண்டியதா யிற்று. ஆகவே மஞ்சளாற்றைச் சுட்டி, தேவி உனக்களித்த எல்லைப் பாதுகாப்பு அகன்றது. கனூவாவில் உன் தந்தப்பேழை களவு போயிற்று. அங்கு தேவியளித்த மற்றொரு கவசமும் பிரிந்தது.''

"ஆம், தாயே, சதியால்...''

"இல்லை, ஸங்கா! விதியால் என்று சொல், சதியை விளைவித்ததும் விதிதான். விதி உந்தும் போது நம்மைப் பாதுகாக்கும் சக்திகள் நம்மை விட்டு விலகுகின்றன. விதிக்கு நீ ஆட்பட்டாய். தேவியின் திருவுள்ளம் இப்படி. இந்த நாடகத்தில் சிலாதித்தன் ஒரு கருவி. அவன் சிந்தையில் சதி உதித்ததும், ராஜபுதனத்தின் பெருந் தோல்விக்கு அவன் காரணமாயிருந்ததும் விதியின் செயல்கள்.''

சொர்ணாதேவி தபஸ்வினியை ஆச்சரியத்துடன் ஏறெடுத்துப் பார்த்தாள். தபஸ்வினி தன் கண்ணீரைத் துடைத்துக்கெண்டு சொன்னாள்: ''மகாராணி! உன் உள்ளத் தில் ஓடும் எண்ணம் எனக்குப் புரிகிறது. சிலாதித்தன் செய்கையை நான் ஆதரிப்பதாக நினைக்கிறாய். ஒரு காலுமில்லை. ஹிந்து தர்மத்தின் ஹிந்துஸ்தானத்தின் விரோதிகளை சாருணீதேவியின் அடிமையான நான் எப்படி ஆதரிக்க முடியும்? ஆதரிக்கவில்லை , ராணி. ஆனால் கேவலம், கொசுவுக்குச் சமானமான சிலாதித்தன் மேவாருக்குத் தீங்கிழைத்து விட்டான் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அவ்வளவுதான். இந்தத் தோல்வியிலும் ராணாவின் புகழ் மங்காது. சரித்திரம் இதையும் ராணாவின் வெற்றியாகவே சொல்லம் ராணாவின் வீரத்துக்குச் சாட்சிகள் எண்பது. இதோபார்!''

இதைச் சொல்லி, ராணாவின் உடல் பூராவும் இருந்த எண்பது காயங்களைச் சுட்டிக்காட்டிய தபஸ்வினி, "சொர்ணாதேவி, இத்தகைய ஒரு மகாவீரன் சிசோதயர்கள் வம்சத்தில் பிறந்தது கிடையாது. இத்தகைய வீர புருஷனை, கேவலம், சிலாதித்தனா வீழ்த்த முடியும்? முடியாது ராணி, முடியாது. தேவி விதித்தவிதி இதைச் சாதித்திருக்கிறது. அவள் சங்கல்பத்தினாலேயே சரியான சந்தர்ப்பத்தில் அவள் அளித்த பாதுகாப்பும் ராணாவை விட்டு நீங்கியது" என்று சொல்லித் தனது மடியிலிருந்து தேவியின் மஞ்சள் காப்பை எடுத்து, ராணாவின் நெற்றியில் இட்டாள். பிறகு, தலை தாழ்த்திக் கண்மூடி மந்திரங்களை ஜபித்தாள். சொர்ணா தேவியின் கண்கள் நீர்த்திரையில் மூடிக்கிடந்ததால், ராணாவின் உதடுகள் தேவி மந்திரத்தை இருமுறை உச்சரித்து நின்று விட்டதைக் கூடக் கவனிக்க முடியவில்லை அவளால். அடுத்த இரண்டு விநாடிகளுக்கு தபஸ்வினியின் உதடுகளிலிருந்து உதிர்ந்த தேவியின் தியான சுலோகங்கள் மட்டும் அந்தக் கூடாரத்தின் மௌனத்தைப் பிளந்தன. தியானத்தை முடித்து ராணாவின் முகத்தைக் கவனித்த தபஸ்வினி, "முடிந்துவிட்டது. விதியின் சாதனை முடிந்து விட்டது. மஞ்சள் காப்பு சாந்தியை அளித்து விட்டது' என்று சொல்லிக் கொண்டு மெள்ள கூடாரத்தை விட்டு வெளியேறினாள்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.