மலைபோல் எதற்கும் அசையாமல் நிற்கக்கூடிய நெஞ்சுரம் வாய்ந்த மகாவீரனான ஸங்கன், சிலாதித்தன் சொன்ன பதிலைக் கேட்டதும், அடியோடு நிலைகுலைந்து ஸ்தம்பித்து நின்றுவிட்டானென்றால் அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. உயிருக்கு ஆபத்து நேரிடுவதானா லும் எந்தவித உணர்ச்சியையும் காட்டும் பழக்கமில்லாத ஸங்கனுடைய முகங்கூடத் துக்கத்தின் சாயையை அதிக மாகப் பிரதிபலிக்க முற்பட்டதென்றால், சிலாதித்தன் கொண்டுவந்த செய்தி எத்தனை பயங்கரமானதாயிருக்க வேண்டுமென்பதைச் சொல்லத் தேவையில்லையல்லவா? சிலாதித்தன் வாயிலிருந்து முதலில் உதிர்ந்தவை நான்கே சொற்கள்தான். அந்த நான்கு சொற்களும் நான்கு கூரிய அம்புகளாக ஸங்கன் இதயத்தில் தைக்கவே, ஸங்கன் மகத்தில் துக்கத்தின் ரேகை பரிபூரணமாகப் படர்ந்த தன்றி வருத்தங்கலந்த பெருமூச்சொன்றும் அவன் நாசியிலிருந்து வெளிப்பட்டது. "மேவார் மன்னர் மரணப் படுக்கை யிலிருக்கிறார்'' என்ற அந்த நான்கே சொற்களைக் கேட்ட தால் மனமுடைந்த ஸங்கன், சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்று விட்டதையும், துயரம் தோய்ந்த பெருமூச்சு விட்டதையும் கவனித்த பிரமரகுல ராஜபுத்ரனான கரம்சந்த் வியப்பின் எல்லையை அடைந்தார். மேவார் சேனாதிபதி சிலாதித்தன் முதலில் பேச முற்பட்டு, “மேவார் ராஜவம்சப் புத்திரர்கள் மரணம் கண்டு அஞ்சுவதில்லை. அப்படியிருக்க மரணம் நேரிடப் போகும் செய்தியைக் கேட்டு அஞ்சுவது விரும்பத் தக்கதல்ல" என்றான். அவன் பேச்சில் ஏளனம் பெரிதும் கலந்திருந்ததைக் கண்ட கரம்சந்த் சற்றே கோபவசப்பட்டு நெருப்புப் பொறி பறக்கும் கண்களை சிலாதித்தன் மீது திருப்பினார். சிலாதித்தன் இரண்டாம் முறையாக வெளியிட்ட அறிவுரையால் சரேலெனச் சுயநிலையை அடைந்து விட்ட ஸங்கன், கோபம் வேண்டாமென்று தன் கையை உயர்த்தி கரம்சந்த்தை அடக்கிவிட்டு சிலாதித்தனை மிக நிதானத்துடன் நோக்கி, "மேவார் தளபதிகள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதுண்டா சிலாதித்தா?'' என்று ஏதோ சாதாரணமாக விசாரிப்பதுபோல் விசாரித்தான்.
''இல்லை. அஞ்சுவதில்லை '' என்று சிலாதித்தன் பதில்கூறினான்.
''மன்னர்கள் அஞ்சுவதுண்டா '' என்று மீண்டும் ஸங்கன் வினவினான்.
''இல்லை , அஞ்சுவதில்லை '' என்று சற்று குழப்பத்துடன் சொன்னான் சிலாதித்தான், இந்தக் கேள்வி களின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல்.
ஸங்கனின் இதழ்களில் இகழ்ச்சிப் புன்முறுவ லொன்று படர்ந்தது. அந்த இகழ்ச்சி, முகத்திலும் பிரதிபலிக்க சிலாதித்தனை நோக்கிக் கேட்டான், ''மன்னர் மரணப் படுக்கையிலிருக்கிறார். அவருக்கு அதைப்பற்றி அச்சமில்லை. அவர் மரணமடைவதைப்பற்றி அச்ச மில்லை. அப்படியிருக்க அந்தச் செய்தியை எதற்காக இங்கு கொண்டு வந்தாய்?''
"மன்னர் என்னை அனுப்பியதற்கு அச்சமல்ல காரணம், வேறு காரணங்கள் இருக்கின்றன'' என்றான் சிலாதித்தன்.
''மற்றவர்களுக்கும் வேறு காரணங்கள் இருக்கலா மல்லவா?''
“இருக்கலாம்''
"அப்படியிருக்க மேவார் குலத்தான் ஒருவனுக்கு, அச்சம் கற்பித்துப் பேசும் துணிவை உனக்கு யார் அளித்தது?" என்று கேட்டு, தன் நீண்ட வாளையும் நோக்கி, சிலாதித்தனையும் ஒருமுறை நோக்கினான் ஸங்கன்.
ஸங்கனின் ஒற்றைக்கண் பார்வை சென்ற இடங்களையும், அவன் நிதானமாகப் பேசினாலும் அவன் குரலில் லேசாகத் தொனித்த உஷ்ணத்தையும் கவனித்த சிலாதித்தன் உள்ளத்தில் சற்றே திகில் ஊறினாலும் அதை வெளிக்குக் காட்டிடாமல், ''ஏழை தவறு செய்துவிட்டேன். மன்னிக்க வேண்டும்'' என்று, குரலில் எந்த உணர்ச்சியை யும் காட்டாமல் கூறி, தலையை மட்டும் தாழ்த்தி ஸங்கனை வணங்கினான். அத்துடன் மேற்கொண்டும் சொன்னான், பிரபு! மேவார் நிலையை உள்ளபடியே உணர்ந்தால் என் பதற்றப் பேச்சுக்கும் குழப்பத்துக்கும் உங்களுக்கு காரணம் தெரியும்'' என்று.
ஸங்கனுடைய ஒற்றைக்கண் மீண்டும் சிலாதித்தனை நோக்கி எழுந்தது. ''மேவார் நிலையில் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது?'' என்று வினவினான் ஸங்கன்.
"ராணா ரேமல்லர் இறந்தால், மேவாரை ஆள அரச குமாரர் யாருமில்லை '' என்ற மற்றொரு வெடியை எடுத்து வீசினான் சிலாதித்தன்.
முந்திய செய்தியை விடப் பல மடங்கு அதிக அதிர்ச்சியைக் கொடுத்த இந்தச் செய்தியால், ஸங்கன் மட்டுமின்றி கரம்சந்த்தும் ஸ்தம்பித்துச் சில விநாடிகள் நின்றதுமல்லாமல், முதலில் சுயநிலையடைந்த கரம்சந்த்தே கேள்வி கேட்க முற்பட்டு, "ஜெய்மல் என்ன ஆனார்? பிருத்வி ராஜர் என்ன ஆனார்?'' என்று சற்றே நடுக்கந் தெரிந்த குரலிலும் வினவினார்.
''ஜெய்மல் இறந்து மாதம் இரண்டாகிறது," என்று பதில் சொன்னான் சிலாதித்தன்.
"எப்படி இறந்தார்?" என்று மீண்டும் ஒரு கேள்வியை வீசினார் கரம்சந்த்.
தோடாராவ், சூரதானனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?''
''அவரைப்பற்றி யார் கேள்விப்படாமலிருக்க முடியும்? ராஜஸ்தானின் மாபெரும் வீரர். இருப்பினும் பட்டாணியரால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டவா.
"அவருக்கு ஒரு மகளிருக்கிறாள். ''
"தெரியுமே! தாராபாய். சதா வில்லும் கையுமாகப் போருக்குச் செல்பவள்.''
"அவளைப் பலவந்தப்படுத்த முயன்றார் இளவரசர் ஜெய்மல்.'
''நல்ல ஜெய்மல்! மறைவிடத்திலிருந்து அண்ணன் மீது அம்பு தொடுத்து அவர் கண்ணை அழிக்கிறான். அடுத்தப்படி ராஜபுத்ர கன்னிகையைக் கற்பழிக்க முயலுகிறான்! சே சே! இவனும் ஒரு ராஜபுத்ரனா!'' என்று கரம்சந்த் அலுத்துக்கொண்டார்.
இப்படி அவர் அலுத்துக்கொண்டதிலிருந்து ஸங்கன் ஒற்றைக் கண்ணை இழந்துவிட்டதன் காரணத்தை அறிந்து கொண்ட சிலாதித்தன், “மறைவிடத்திலிருந்து அம்பெய்து அண்ணன் விழியை அழித்ததும் அவர்தானா? அப்படியா னால் அவருக்குக் கிடைத்த தண்டனை நியாயந்தான்" என்று கூறினான்.
''அப்படி என்ன தண்டனை கிடைத்தது அவருக்கு?" என்று வினவினார் கரம்சந்த், வெறுப்பு மண்டிய குரலில்.
''தாராபாயின் தந்தை, ஜெய்மல்லைக் கொன்று விட்டார்."
"என்ன, நாடிழந்து பரதேசியாயிருக்கும் சூரதானன் மேவார் இளவரசரைக் கொன்றுவிட்டாரா? அதற்கு ராண ரேமல்லர் அவரை என்ன செய்தார்?''
இதற்கு சிலாதித்தன் அளித்த பதில் கரம்சந்த், ஸங்கள் இருவரையுமே தூக்கிவாரிப் போட்டது. ''அந்த செய்கைக்கு மன்னர் தோடாராவைப் பாராட்டினார் என்றான் மிகவும் அமைதியான குரலில் சிலாதித்தன்
இந்தப் பதிலைக் கேட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்த ஸங்கன் சீக்கிரமே, உண்மையை உணர்ந்து ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினாலும் கரம்சந்த் மட்டும் ஏதும் புரியாமல், "விந்தையாயிருக்கிறது, சிலாதித்தரே! சொந்த மைந்தனைக் கொன்றவனை மன்னர் பாராட்டினாரா?' என்று வினவினார், குரலில் வியப்பு ஒலிக்க.
''ஆம், பாராட்டினார். ராணா ரேமல்லர் தம் மக்களுக்கு மட்டுமல்ல, தம் ஆட்சிக்குள்ளடங்கிய பிறர் மக்களுக்கும் தந்தை என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. ஜெய்மல் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் காரணத்தை மிகவும் நிதானமாக விசாரித்த மன்னர், 'பெண்ணைக் கற்பழிக்க முயன்று தந்தையின் இதயத்தில் ஆறாப் புண்ணை விளைவிக்க முயலுபவன் அடைய வேண்டிய தண்டனை இதுதான். அங்கு அவனுக்கு அந்தத் தண்டனை கிடைத்திராவிட்டால் இங்கு நான் அளித்திருப் பேன்' என்று கூறி, குடும்பத்தில் ஏதுமே நடக்காதது போல் ராஜரீகத்தைக் கவனித்தார்!" என்று விவரித்த சிலாதித்தன், ''கரம்சந்த், மேவார் அரசவம்சத்தின் சரித்திரம் எழுதப்படும் போது, நமது கவிஞர்கள் கவிதைகளைப் புனையும்போது, ராணா ரேமல்லரின் பெயரைப் பற்றி அமுதமழை பொழியட்டும். ரேமல்லர் வாழ்க்கை மன்னர் குல நேர்மைக்கு அழியாச் சான்றாக விளங்கும்'' என்றுகூறி, மேவார் மன்னர் குலத்தையே வணங்குபவன் போல், மேவார் இருந்த திக்கை நோக்கித் தலை தாழ்த்தினான்.
இந்தச் செய்தியின் விளைவாகச் சிறிது நேரம் அந்த அறையில் மவுனமே சூழ்ந்தது. உணர்ச்சிகள் எல்லை மீறியதால் கரம்சந்த், சிலாதித்தன், ஸங்கன் மூவருமே ஏதும் பேச சக்தியை இழந்து நின்றனர். கடைசியாக ஸங்கநே பேச்சைத் தொடங்கி, 'என் சகோதரன் பிருத்விராஜ் அந்தச் சந்தர்ப்பத்தில் எங்கிருந்தான்?'' என்று கேட்டான்.
இந்தக் கேள்வி காதில் விழுந்ததுமே சிலாதித்தன் கண்கள் திடீரெனப் பெருமைக்கறிகுறியாகப் பளிச்சிட்டன. ''ஒரு மகாவீரனின் சரித்திரத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள் இளவரசே! ஆனால், அது அத்தனை எளிதில் விவரிக்கக் கூடியதல்ல'' என்று சிலாதித்தன் குரலிலும் பெருமிதம் மண்டிக் கிடந்தது.
"சுருக்கமாகச் சொல்'' என்றான் ஸங்கன்.
சிலாதித்தன் கண்கள் கனவுலகத்தில் சஞ்சரித்தன. சுருக்கமாகத்தான் அவன் பிருத்விராஜன் வரலாற்றைச் சொன்னான். அந்தச் சுருக்கத்திலும் மண்டிக்கிடந்தது ஒரு வீர ராஜபுத்ரன் சாகஸ சரித்திரம். அதைச் சொல்ல முற்பட்ட சிலாதித்தன் குரலில் இனிமை தவழ்ந்தது. "பிருத்விராஜா வரலாறு சொல்ல ஏற்பட்டவன் நானல்ல. சரித்திர எழுத் தோவியர்கள் அதைச் சொல்ல வேண்டும். பாமாலைகளைச் சூடிய பெரிய வீரனின் கதை அது. புலிமலைக்கோயில் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். அந்தச் சம்பவத் திற்குப் பிறகு ராணா ரேமல்லர் மிகவும் வெகுண்டார். மேவார் அரியணையில் அமரத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களை வெட்டத் துணிந்ததற்காக, நீதியோ நேர்மையோ தவறாத மன்னர் ரேமல்லர், வீரரான பிருத்விராஜரை நாடு கடத்தினார். ஐந்தே புரவி வீரர் தொடர்ந்து வர, தம் வாள் பலத்தை மட்டுமே நம்பி சித்தூரை விட்டுப் புறப்பட்ட பிருத்விராஜர், மேவாரின் விரோதிகளைப் பல இடங்களில் அடியோடு அழித்து வெற்றி வாகை சூடினார். சதா மேவாரின் மேற்கு அரணான நாதோல் கோட்டையைச் சூறையாடி வந்த ஹாராவளி மலைவாசிகளுடன் போரிட்டு அவர்களை ஒடுக்கினார். மீனவம்சத்தைச் சேர்ந்தவர்களை முறியடித்தார். மாத்ரைசா ராஜபுத்ரர்களை அடக்கி. கோத்வாரத்தில் அமைதியை நிலைநாட்டினார். இப்படி எத்தனை எத்தனையோ வீரச் செயல்களை ராஜபுதனம் கண்டது, அதிசயித்தது" என்று சொல்லிக்கொண்டே போன சிலாதித்தன், உணர்ச்சிப் பெருக்கால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினான்.
ஸங்கனும் உணர்ச்சி வசப்பட்டிருந்தாலும் மௌனம் சாதிக்காமல், ''இத்தகைய மகாவீரன்தான் மேவார் அரியணையில் வீற்றிருக்கத் தகுந்தவன்'' என்று குரலிலும் உள்ளத்தின் உணர்ச்சி பூரணமாகப் பிரதிபலிக்கக் கூறினான்.
ஸங்கனின் வார்த்தைகளைக் கேட்ட சிலாதித்தன், உணர்ச்சி கரைபுரண்டு ஓடியதால் துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினான், ''அந்தப் பாக்கியம் மேவாருக்கு இல்லை '' என்று .
''ஏன்?'' ஸங்கன் கேள்வியில் சந்தேகம் ஒலித்தது.
''கரம் சந்த்தின் பெண்ணை பிருத்விராஜருக்கு மண முடிக்க நான் அவர் படத்தை அனுப்பினேன்.''
''ஆம்.'
"அது சாத்தியமில்லையென்று பதில் வந்தது.'' ''ஆம்.''
''ஆகவே, தோடாராவ் மகள் தாராபாயை பிருத்வி ராஜர் மணந்தார்.''
''சரியான திருமணந்தான். இருவரும் வீர உணர்ச்சி யுள்ளவர்கள்.''
''அதுமட்டுமல்ல, இருவரும் ஆயுதபாணிகளாக வேட்டைக்கும் போர் முனைக்கும் போய்க் கொண்டிருந் தார்கள்."
“ராஜபுத்திரிகள் வாளும் வில்லும் அம்பும் கொண்டு போரிடுவது புதிதல்ல.''
''உண்மைதான், இளவரசே. இருப்பினும் தாரா பாய்க்கும் பிருத்விராஜருக்கும் சதா சண்டை இருந்து கொண்டிருந்தது. சில வேளைகளில் மனைவியைப் புறக்கணிக்கவும் கொடுமையாக நடத்தவும் முற்பட்டார் பிருத்விராஜர். அதன் விளைவு-'' மேலே பேச முடியாமல் திணறினான் சிலாதித்தன்.
''விளைவு என்ன சிலாதித்தா? சொல்'' என்று கேட்டான் ஸங்கன், கவலை பாய்ந்தோட.
''மரணம்."
''என்ன! பிருத்விராஜனும் மாண்டுவிட்டானா?''
"ஆம்; தங்கை கொடுமைப்படுவதைக் கண்டு அவர் மைத்துனர் பிருத்விராஜருக்கு விஷம் வைத்தார்.''
இதைக் கேட்ட ஸங்கன் கால்கள் நடுங்கின. மெள்ள இருமுறை தள்ளாடி நடந்து, சற்று தூரத்திலிருந்த மஞ்சத்திற்குச் சென்று அதிலமர்ந்து, முகத்தை இரு கைகளிலும் புதைத்துக்கொண்டான். நீண்ட நேரம் அவன் பேசவில்லை! மற்ற இருவருங்கூட அவனிருந்த நிலையைக் கண்டு பேச்சிழந்து நின்றனர். சில நிமிடங்களுக்குப் பிறகு பேச்சைத் தொடங்கிய ஸங்கன், ''சிலாதித்தா, இது உண்மையா? எங்கள் குலச்செல்வங்கள் இரண்டும் மறைந்து விட்டனவா?'' என்று குரல் தழுதழுக்கக் கேட்டான்.
''ஆம், இளவரசே! மேவார் மகுடம் தங்களுக்காகக் காத்திருக்கிறது'' என்றான் சிலாதித்தன், மகிழ்ச்சி சிறிது மற்ற குரலில்.
''பிருத்விராஜன் ஆளட்டுமென்றுதானே நான் சாருணீதேவியின் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, மேவார் எல்லையைக் கடந்து இங்கு வந்தேன்! விதி இப்படியா திரும்ப வேண்டும்!'' என்றான், சோகம் பரிபூரணமாகக் குரலில் பிரதிபலிக்க.
"பிருத்விராஜருக்குச் சொர்ணாதேவியைக் கொடுக்க கரம்சந்த் ஒப்புக்கொண்டிருந்தால் அவர் தாராபாயை மணந்திருக்க மாட்டார், மரணமும் அடைந்திருக்க மாட்டார்."
"உண்மைதான்'' என்று ஸங்கனும் ஒப்புக் கொண்டான்.
இதைக் கேட்டதும் கரம்சந்த்தின் சொற்கள் உக்கிரத்துடன் எழுந்தன. “படம் வருமுன்பு சொர்ணாதேவி தன் இதயத்தை இவருக்குப் பறிகொடுத்துவிட்டாள்'' என்று உக்கிரத்தோடு உணர்த்தினார் கரம்சந்த்.
"இளவரசர் கொடுத்து வைத்தவர். இதயத்துக்குத் தகுந்த ராணி, இணையற்ற மேவாரின் மகுடம்-இரண்டுமே கிடைத்திருக்கின்றன'' என்று சிலாதித்தன் கூறினான். அவன் பேச்சில் மகிழ்ச்சி இல்லை. வெறுப்பு இருந்தது. அதைக் கவனிக்க ஸங்கனோ, கரம்சந்த்தோ தவறவில்லை .
அத்துடன் அந்தச் சம்பாஷணையை முடிக்க இஷ்டப் பட்ட ஸங்கன், மஞ்சத்திலிருந்து திடீரென எழுந்தான். "சிலாதித்தா! மேவாருக்கு உடனே புறப்பட புரவிகளையும் உன் வீரர்களையும் தயார்செய். இன்னும் கால் ஜாமத்தில் நாம் புறப்படுகிறோம்'' என்று கூறிய ஸங்கன், மேற்கொண்டு அங்கு நிற்காமல், அந்த அறையை விட்டு வெளிப்பட்டு, ஆடவர்கள் யாரும் கடக்க முடியாத சொர்ணாதேவியின் அந்தப்புரக் கட்டுக் காவலர்களைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் கடந்து, அவளிருக்கும் மக்கள் திடும் பிரவேசமாக நுழைந்தான். அப்பொழுது தான் சொர்ணாதேவி மாற்றுடை அணிந்து, அறையிலிருந்த நிலைக்கண்ணாடிக்கெதிரில் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.