Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பின்னுரை

சினிமாவை முழுதும் பார்க்க முடியாமல் என்னை அழைத்துக் கொண்டு வந்த நண்பர், இவ்விதம் கதையை முடித்தார். அந்த விசித்திரமான கதையைக் குறித்துக் கடல் அலைகள் முணுமுணுப்பு பாஷையில் விமரிசனம் செய்தன.

கடற்கரையில் மனித சஞ்சாரமே கிடையாது. கடற்கரை சாலையில் நாங்கள் வந்த வண்டி மட்டுந்தான் நின்றது.

"இன்னமும் எழுந்திருக்க மாட்டீர் போலிருக்கிறதே கதை முடிந்துவிட்டது; போகலாம்!" என்றார் நண்பர்.

"உங்களுடைய மோகினித் தீவை எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. ஒரு தடவை என்னையும் அழைத்துக் கொண்டு போகிறீர்களா?" என்று கேட்டேன்.

"பேஷாக அழைத்துக் கொண்டு போகிறேன். ஆனால் என்னுடைய கதையை நீர் நம்புகிறீரா? ஆடவர்களில் அநேகம் பேர் நம்பவில்லை!" என்றார்.

"நம்பாதவர்கள் கிடக்கிறார்கள். அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நான் நிச்சயமாய் நம்புகிறேன்!" என்றேன்.

சிறிது யோசித்துப் பார்த்தால், அந்த நண்பருடைய கதையில் அவநம்பிக்கைக் கொள்ளக் காரணம் இல்லைதானே? வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மட்டுமே உண்மையானவை என்று நாம் எதற்காகக் கருதவேண்டும்? கவிஞர் ஒருவனுடைய கற்பனை உள்ளத்தில் நிகழும் அற்புத சம்பவங்களை உண்மையல்லவென்று ஏன் கொள்ள வேண்டும்?

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.