Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

2. இன்ப இயல்

காமத்துப்பாலின் முதற்கண், ஒருசார் இன்பம் போலத் தோற்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொதுமகளிர் உறவினைக் கூறினார். அடுத்து முற்றவும் இன்பம் ஒன்றையே தருவதான கற்புடை மகளிரின் உறவினைக் கூறுகின்றார்.

இல்லற நூலினுள் பலபடப் பெண்களின் உறவினை வெறுத்துக் கூறப் பெற்றிருந்தும், அதனை விதந்து கூறும் பகுதியும் அமைவது முரணாகாதோ எனின், அன்று. சிற்றின்பமாகிய காமங் கூறும் வகையினாலே, பேரின்பத்தின் சிறப்பைக் காட்டி வலியுறுத்தலே இதன் கருத்தாகும் என்று அறிதல் வேண்டும்.

மேலும், உலகிற்குப் பலவகையிலும் உதவியாக அமைகின்றவன் இல்லறத்தானாகவே அந்நெறியின்றி உலகவாழ்வும் செம்மையுற அமையாதாகலின், அதனைத் திறம்பட நடத்துவதற்கு, அவன் தன் கற்புடை மனைவியோடு கூடிப் பெறும் இன்பமும் முதற்காரணமாதலின் அதனை ஆன்றோர் போற்றினர் என்றும் கொள்க

 1. கற்புடை மகளிர்

கற்புடைய பெண்களின் தன்மையினைக் கூறுவது என்பது அதிகாரப் பொருளாகும். கற்பாவது பெண்களிடத்தே தம் நாயகன் ஒருவனிடத்து மட்டுமே உண்டாகும் காதலின் உறுதியாகும்.

நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான் வகையான பெண்மைக் குணங்களினால் நிறைவுற்று மகளிர், ஊழின் வலியினால், தமக்கு உரியான் ஒருவனைக் கண்டு காதலித்துக் கடிமணமும் புரிந்த பின்னர், அவன் ஒருவனே தமக்கு எல்லாமும் என வாழும் உயரிய நிலை இது.

தன் எனவும், தனது எனவும் எழுகின்ற பொதுவான அகப்பற்றும் புறப்பற்றும் இழந்தவளாகத் தமது என்னும் உறவுப் பிணிப்பிலே ஒன்றுபட்டவளாக நிலைபெறும் பெண்ணின் கற்பினது அமைதியிலேயே உலகத்தின் நல்வாழ்வும், வளர்ச்சியும், சிறப்பும் எல்லாம் பொருந்தியிருக்கிறதென்பது ஆன்றோர் கூறும் உண்மையாகும்.

 1. அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன

பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப் 

பெருநசையாற், பின்னிற்பார் இன்மையே பேணும் 

நறுநுதலாள் நன்மைத் துணை. 

பெறுவதற்கு அரிதான கற்புச் செவ்வியை உடையவளான; அயிராணி என்பவளைப் போன்ற பெரும் புகழுடைய பெண்களே என்றாலும், தம்மைப் பெற்று இன்புற வேண்டும் என்ற ஆசையினால், தம்மை விரும்பித் தமது பின்னே சுற்றிக் கொண்டிருக்கிற வேற்றாடவர் இல்லாமையாகிய நற்குணத்தையே பேணுகின்ற அழகிய நெற்றியை உடைய பெண்களே, தம் கணவருக்கு ஏற்ற நல்ல துணைவியராவர்.

அயிராணி - இந்திராணி, பெண்ணின் பால் தளர்ச்சிக் கான குறிப்பு எதனையும் காணாமல், அவளையடைய ஒருவன் முயலான், ஆதலால் இவ்வாறு கூறினார்.

 1. குடநீர் அட்டு உண்ணும் இடுக்கட் பொழுதும்

கடனீர் அறவுண்ணும் கேளிர் வரினும்

கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி 

மாதர் மனைமாட்சி யாள். 

குடத்து நீரை மட்டுமே காய்ச்சி உண்பதன்றி, வேறேதும் உண்ணுதற்கு இல்லாத வறுமைத் துன்பம் வந்த காலத்தினும், கடல் நீரும் வற்றிப்போமாறு உண்டு விடுகின்ற பெருங் கூட்டமான சுற்றத்தார் வந்தாலும், தனது கடமையாகிய குணங்களையே ஒழுக்க நெறியாகக் கொள்ளுகின்ற, சாரமான இன்சொற்களை உடைய மனைவியே இல்லற வாழ்விற்குத் தகுந்த பெருமை உடையவளாவாள்.

விருந்தோம்பலும் சுற்றம் பேணலுமாகிய மனைவியரின் கடமையிலே அவளுக்கு உறுதி வேண்டும் என்பது வலியுறுத்தப் பெற்றது.

 1. நாலாறும் ஆறாய், நனிசிறிதாய், எப்புறனும்

மேலாறு மேலுறை சோரினும் மேலாய 

வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின் 

இல்லாள் அமர்ந்ததே இல். 

நான்கு பக்கங்களினும் வழியை உடையதாகியும், மிகவும் சிறியதாகியும், எல்லாப் பக்கங்களினும் மேல்வழியினின்று தன்மேல் மழைத்துளிகள் வழிவதாகியும் இருந்தாலும், மேலான தருமங்களைச் செய்யவல்ல மனத்திட்பம் உடையவளாகத் தான் வாழ்கின்ற ஊரிலே உள்ளவர் தன்னைப் புகழும்படியான மாட்சிமைப் பட்ட கற்பினையுடைய மனைவி வாழ்கின்றதே சிறந்த மனையாகும்.

'வறுமை மிகுதிக் கண்ணும், தன் ஒழுக்கம் பிறழாமல், பிறருக்கு உதவும் கருத்துடையவளே சிறந்த மனைவியாவாள் ' என்பது கருத்து.

 1. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்.

உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள் - உட்கி 

இடனறிந்து ஊடி இனிதின் உணரும் 

மடமொழி மாதாள் பெண். 

கண்ணுக்கு இனிதான உடல் வனப்பை உடையவளாகவும், தன் காதலனது விருப்பத்திற்கு ஏற்ற வகையெல்லாம் தன்னைப் புனைந்து கொள்ளுபவளாகவும், அச்சம் உடையவளாகவும், ஊரிலுள்ள பிற ஆடவர்க்கு நாணி ஒதுங்கும் இயல்பினளாகவும், தன் கணவனுக்கு அஞ்சிக் காலமறிந்து அவனோடு பிணங்கிப் பின் இன்பமுண்டாகும்படி உடனே அறிந்து ஊடல் தீர்க்கின்ற வளாகவும், கபடமில்லாத பேச்சுக்களை உடையவளாகவும் இருப்பவளே சிறந்த மனைவியாவாள்.

 1. எஞ்ஞான்றும் , எங்கணவர் எந்தோன்மேற் சேர்ந்தெழினும்

அஞ்ஞான்று கண்டேம் போல் நாணுதுமால் - எஞ்ஞான்றும் 

என்னை கெழீஇயினர் கொல்லோ, பொருள் நசையால் 

பன்மார்பு சேர்ந்தொழுகு வார்

எந்த நாளும், எம்முடைய கணவர், எம்முடைய தோள் மேல் அணைந்து எம்மைக் கூடி எழுந்தாலும் புதிதாக உறவு கொண்ட அந்த முதல் நாளிலே யாம் கண்டது போலவே இன்றும் அவரைக் கண்டதும் நாணங் கொள்ளுகின்றோம். எம் தன்மை இவ்வாறிருக்கப் பொருள் விருப்பத்தினால் எப்பொழுதும் பலருடைய மார்புகளையும் அணைந்து நடக்கின்ற பொதுமகளிர், வெட்கமின்றி, அந்தப் பலருக்கும் உரியவராயிருக்கின்றனரே? இது என்ன பெண் தன்மையோ?

தன் கணவனின் மீது பற்றுள்ள மனைவி ஒருத்தி, பரத்தையை இவ்வாறு இகழ்கிறாள் என்று கொள்க. இதனால் கற்புடை மகளிரின் தன்மை புலப்படும்.

 1. உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலற்றால்

வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் ;- தெள்ளிய 

ஆண்மகன் கையில் அயில்வாள்; அனைத்தரோ

நாணுடையாள் பெற்ற நலம். 

வள்ளல் தன்மையை மேற்கொண்டவனிடத்திலேயுள்ள மிக்க செல்வமானது, உள்ளத்திலே நல்லறிவினை உடையவள் கற்றறிந்த நூற்பொருள் போலப் பலருக்கும் பயனுடைய தாயிருக்கும். அதுபோல, நாணம் உடைய குலமகள் பெற்றிருக்கும் நல்ல அழகானது மிகச் சிறந்த வீரனாகிய ஆண்மகனது கையிலுள்ள கூர்மையான வாளைப் போலப் பலரும் புகழும்படியாகப் பெருமையுடன் விளங்கும்.

தலைவன் தலைவி உரிமையை வியந்து கூறியது இது என்பர்.

 1. கருங்கொள்ளும், செங்கொள்ளும், தூணிப் பதக்கென்று

ஒருங்கொப்பக் கொண்டானாம், ஊரன் - ஒருங்கொவ்வா 

நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது 

என்னையும் தோய வரும்! 

ஊரனாகிய ஒருவன், கரிய கொள்ளையும் சிவந்த கொள்ளையும் அவற்றின் தன்மையறிந்து வேறுவேறாகக் கொள்ளாமல், கொள்ளென்னும் இயல்புபற்றியே ஒரு நீராகத் தூணிப் பதக்கென்று அளந்து வாங்கிக் கொண்டானாம். அதுபோலவே முழுவதும் ஒத்திராத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அனுபவித்த, மலை போன்ற மார்பினனான என் தலைவனும், நீராடாமல் என்னையும் தழுவுவதற்கு வருகின்றானாம்!

பரத்தையிற் சேர்ந்துவந்த தலைவனுடன் ஊடிய தலைவி, 'நீராடாது தோயவரும் என்பதன் மூலம்' அவனுக்கு இசையும் தன் கருத்தையும் உணர்த்துகின்றாள்.

 1. கொடியவை கூறாதி, பாண; நீ கூறின்

அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின் 

இடக்கண் அனையம் யாம் ஊரற்கு ; அதனால் 

வலக்கண் அனையார்க்கு உரை. 

பாணனே கொடுமையான சொற்களை எம்மிடத்தே கூறாதே; ஏனெனில், யாம் ஊரனுக்கு உடுக்கையினது இடது பக்கத்தைப் போல இப்பொழுது பயனற்றவர்களாக இருக்கின்றோம். அதனால், அப்படிப்பட்ட விடத்தை விட்டு அப்புறமாக ஒதுங்கிச் சென்று, அந்த உடுக்கையின் வலது பக்கத்தைப் போல அவனுக்கு இப்போதெல்லாம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்ற வேசியருக்குச் சென்று சொல்வாயாக.

பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணன் மூலம் தலைவியின் இசைவைப் பெற முயல, அந்தப் பாணனுக்கு அவள் கூறியது

 1. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது

ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்! - தீப்பறக்கத் 

தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம் 

நோக்கி இருந்தேனும் யான். 

கோரைப் புல்லைப் பிடுங்க, நீர் விளங்குகின்ற குளிர்ச்சியான வயல் சூழ்ந்த ஊர்களை உடையவனான என் தலைவனின் மீது ஈயானது பறக்கையிலும் அதனைக் காணவும் சகியாமல் முன்னம் நொந்தவளும் யானே, இப்போழுதோ, நெருப்புப் பொறி பறக்குமாறு வேசையர்கள் தமது தனங்களால் தாக்கிப் போர் செய்த, குளிர்ந்த சந்தனக் கலவையைத் தரித்த அவனது மார்பைப் பார்த்துப் பொறுத்திருக்கின்றவளும் யானே தான்!

'பரத்தையோடு கூடிவந்த தலைவனோடு ஊடியிராமல், நீ, கூடியதென்னடி?' என்ற தன் தோழிக்குத் தலைவி தன் மன நிலையை இப்படிக் கூறுகிறாள்.

 1. அரும்பவிழ் தாரினான் எம் அருளும்' என்று

பெரும்பொய் உரையாதி, பாண - கரும்பின் 

கடைக்கண் அனையம் யாம் ஊரற்கு ; அதனால்

இடைக்கண் அனையார்க்கு உரை. 

பாணனே பூவரும்புகள் மலரும்படியான மாலையை அணிந்த எனது நாயகன் எனக்கு அருள் செய்வானென்று பெரிய பொய்யான சொற்களை என்னிடத்தே வந்து சொல்லாதே, ஏனெனில், ஊரனுக்கு, இப்போது யாம் கரும்பின் கடைசியிலுள்ள கணுவை ஒத்திருக்கின்றோம். அதனால், இப்பேச்சைக் கரும்பின் இடையிலுள்ள கணுக்களைப் போல் அவனுக்கு இப்போது இனிதாயிருக்கும் பரத்தையருக்குச் சென்று சொல்வாயாக.

'நாயகன் விரைந்து வருவான்' என்ற பாணனிடம், தலைவி வெகுண்டு கூறுவது இது.

 1. காமம் நுதலியல்

காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் இதுவாகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப் பாலிற் சாரும் எனவும் கொள்பவர் சிலர். அவர் முன்னிரண்டு அதிகாரங்களையும் பொருட்பாலுட் கொள்வர்.

களவுங் கற்புமாக விரிந்த அகப்பொருள் முறைமைகள் எல்லாம் செழுந்தமிழ் நூல்கள் பலவற்றுள்ளும் விரித்துரைக்கப் பட்டிருக்க, நாம் காணலாம். எனினும், இந்தப் பத்துப் பாடல்களுள்ளும் கூறப்பட்டிருக்கும் துறைகளையும் நாம் அநுபவிப்போம்.

 1. முயங்காக்கால், பாயும் பசலை; மற்று ஊடி

உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கோதம் 

நில்லாத் திரை யலைக்கும் நீள்கழித் தண் சேர்ப்ப 

புல்லாப் புலப்பதோர் ஆறு.

[தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளின் புலவி நீங்கச் சொல்லியது இது.]

விளங்குகின்ற கடலானது நிலையாக இராமல், அலைகளால் மோதி வருந்துகின்ற, நீண்ட கழிகளினது குளிர்ந்த கரையை உடைய அரசனே! ''தழுவிக் கூடாவிட்டால் உடலிலே பசலையானது மிகுதியாகப் பரவும். ஊடல் கொண்டு வருந்தாவிட்டால் காம நுகர்ச்சியானது ஒரு சுவை இல்லாமற் போய் விடும். ஆதலால், கூடுவதும் ஊடுவதுமாக அமைவதே காம இன்பத்திற்கு ஒப்பற்ற நன்னெறியாகும்" என்று அறிவாயாக

இதனால், தலைவி தன் புலவி நீங்கித் தலைவனுடன் கூடுதற்கு இசைந்தாள் என்பது பெறப்படும்.

 1. தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்

விம்ம முயங்குந் துணையில்லார்க்கு - இம்மெனப் 

பெய்ய எழிலி முழங்கும் திசை யெல்லாம் 

நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. 

[பருவங்கண்டு, ஆற்றாளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது இது.]

தம்மால் விரும்பப்பட்ட காதலருடைய மாலையணிந்த அழகிய மார்பை மகிழ்வினால் பூரிக்கும்படியாகத் தழுவுவதற்குரிய வாய்ப்பு இல்லாத மாதர்களுக்கு இம்மென்னும் ஒலியோடு மேகம் நீரைச் சொரிய முழங்கும் திசைகள் எல்லாம், சாப்பறை அடித்தாற் போன்ற கொடிய தன்மை உடையதே யாகும்.

 1. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய

மம்மர்கெநள் மாலை, மலராய்ந்து, பூத்தொடுப்பாள்

கைம்மாலை யிட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு 

இம்மாலை என் செய்வது என்று. 

[தலைமகள் செலவு உடன்படாமையைத் தலைமகற்குத் தோழி சொல்லியது இது.]

கம்மியத் தொழிலைச் செய்கின்ற மனிதர்களாகிய கம்மாளர்கள் தமது கருவிகளை வேலையில்லாமல் அடங்கச் செய்த, மயக்கத்தைக் கொண்ட மாலைப் பொழுதிலே, மலர்களை ஆராய்ந்து எடுத்து, தன் கணவனுக்கு இடுவதற்கு மாலையாகத் தொடுப்பவள், "நாயகனில்லாதவர்களுக்கு இம்மாலை என்ன பயன் செய்வது?" என்று கையிலிருந்த மாலையைக் கீழே போட்டுவிட்டுக் கண்கலங்கி இருந்து அழுதாள்.

 1. செல்சுடர் நோக்கிச் சிதாரிக்கண் கொண்ட நீர்

மெல்விரல் ஊழ்தெறியா, விம்மித், தன் - மெல்விரலின் 

நாள்வைத்து, நம்குற்றம் எண்ணுங்கோல், அந்தோ! தன் 

தோள்வைத்து அணைமேற் கிடந்து! 

[வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன் கேட்பச் சொல்லியது இது.]

மேற்கடலை நோக்கிச் செல்லுகின்ற சூரியனைப் பார்த்துச் சிதறிய செவ்வரிகளையுடைய கண்களிலே நிறைந்துள்ள நீரைத் தன் மெல்லிய விரல்களால் முறைமையாக அடிக்கடி எடுத்தெறிந்து, விம்மி அழுது, தன் மென்மையான விரலினால் நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டு உறங்காமலே இருப்பாளோ எம் தலைவி? ஐயோ!

 1. கண்கயல் என்னும் கருத்தினால், காதலி

பின்சென்ற தம்ம, சிறுசிரல் ! - பின்சென்றும்

ஊக்கி எழுந்தும் , எறிகல்லா ஒண்புருவம் 

கோட்டிய வில்வாக்கு அறிந்து. 

(தலைமகன் தான் உற்றதைப் பாங்கற்குச் சொல்லியது இது.]

சிறிய சிச்சிலிக் குருவியானது, என் காதலியின் கண்களைக் கயல் மீன்கள் என்கிற எண்ணத்தினால் பற்றக் கருதி, அவள் பின்னே தொடர்ந்தது. அவ்வாறு பின்பற்றிச் சென்றும், முயற்சி செய்தும், அவளது ஒளியுடைய புருவமானது வளைந்த வில்லின் வளைவு போல் இருந்ததைக் கண்டு அஞ்சிப் பின்னர் ஓடிவிட்டது.

 1. அரக் காம்பல் நாறும் வாய் அம்மருங்கிற்கு , அன்னோ !

பரற்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்த 

பஞ்சிகொண் டூட்டினும், பையெனப் பையென!' என்று 

அஞ்சிப், பின் வாங்கும் அடி! 

[மகளைப் போக்கிய தாய் இரங்கியது இது.)

செவ்வாம்பலைப் போலத் தோன்றும் வாயிதழ்களையும் அழகிய இடையினையும் உடைய எம் மகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பைத் தடவினாலும் அதனையும் பொறுக்கமாட்டாமல் பயந்து, மெதுவாக ! மெதுவாக!' என்று பின்வாங்கும் இயல்புடைய பாதங்கள், இப்போது, பருக்கைக் கற்களையுடை காட்டையும் எங்ஙனம் கடக்கப் பொறுத்தனவோ?

 1. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்

மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி 

மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேல் 

கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து. 

[தலைவனது பிரிவை ஆற்றாது தலைவியின் நிலைமையைத் தோழி கூறியது இது.)

ஓலை எழுதும் கணக்கருடைய ஆரவாரமும் அடங்கிப் போயின, அற்பமான சிவப்பினையுடைய மாலைக்காலத்திலே தன்னை மணந்தவனின் பிரிவை நினைந்து, தான் சூடியிருந்த மாலையையும் பிய்த்தெறிந்து அழகிய தனங்களின் மேல் அலங்காரஞ் செய்திருந்த சந்தனச் சாந்தையும் உதிர்த்துத் தள்ளி, அழுதுகொண்டே இருந்தாள் அவள்.

இதனால், தலைவன் விரைந்து மணவினை கொள்ளலிலே நாட்டஞ் செலுத்தவேண்டும் என்பது குறிப்பு.

 1. கடக்கருங் கானத்துக் காளைபின், நாளை

நடக்கவும் வல்லையோ?' என்றி - கடர்த்தொடீஇ 

பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே 

கற்றான் அஃதூரும் ஆறு?

[உடன்போக்குப் பொருந்தின தலைமகள் தோழிக்குச் - சொல்லியது இது.]

ஒளிசிதறும் வளையல்களை உடையவளே கடத்தற்கு அரியதான காட்டிலே காளை போன்ற தலைவனின் பின்னாக நாளைக்கு நடந்து போகவும் நீ வல்லமை உடையையோ?' என்றனை, பெரியதொரு குதிரையைப் பெற்றவனாகிய ஒருவன், அந்த நிலையினாலேயே, அதனை ஏறி நடத்தும் முறைமையைக் கற்றவனுமாவான் என்று அறியலாம் அல்லவோ?

உடன் போக்கிற்குத் துணிந்த தலைவியின் பேச்சு இது. போகத் துணிந்தவள், போகும் ஆற்றலும் தனக்கு உண்டென்கின்றாள்.

 1. முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும், புல்லும்

இலக்கணம் யாதும் அறியேன்; - கலைக்கணம் 

வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும், என் 

பூம்பாவை செய்த குறி. 

[மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது.]

தன்னுடைய முலைக்கண்களும், முத்துமாலையும் நன்றாக அழுந்துமாறு என்னை உடல் முழுவதும் இறுகக் கட்டித் தழுவிக் கொண்ட அடையாளத்தை, அப்பொழுதே யான் சிறிதும் அறிந்திலேனே! என்னுடைய சித்திரப்பதுமை போன்ற மகள், அப்பொழுது செய்த அடையாளம், கலைமான் தொகுதிகள் வேங்கைப் புலிக்கு வெருவி ஓடுகின்ற காட்டுவழியிலே அவள் மறுநாள் செல்லப் போவதைக் குறித்துத்தான் போலும்

 1. கண்மூன்று உடையானும், காக்கையும் பையரவும்

என்னீன்ற யாயும் பிழைத்த தென்? - பொன்னீன்ற 

கோங்கரும்பு அன்ன முலையாய்! பொருள்வயின் 

பாங்கனார் சென்ற நெறி! 

[தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழிக்குச் சொல்லியது இது.]

பொன்போன்ற தேமல்கள் பொருந்திய கோங்கினது அரும்புகளைப் போன்று விளங்கும் முலைகளையுடைய தோழியே! மூன்று கண்களை உடைய சிவபிரானும், காக்கையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்குச் செய்த குற்றந்தான் என்னவோ? யாதும் இல்லை. குற்றமெல்லாம், என் தலைவர், பொருளினிடத்துள்ள ஆசையினாலே என்னைப் பிரிந்து போன நெறியேயாகும்.

மன்மதனாலும், குயிலாலும், சந்திரனாலும் தன் துயரம் மிகுதியாக, மதனை எரியாது மீண்டும் உயிர்ப்பித்த 'சிவன் மேலும், தன் குஞ்சு அன்று எனக் கண்டும் குயிலைக் கொல்லாதுவிட்ட காக்கையின் மீதும், முற்றவும் விழுங்காமல் சந்திரனை மீண்டும் உமிழ்ந்த ராகு கேதுக்கள் மீதும், பிறந்த ஞான்றே தன்னைக் கொன்று விடாது துயரங்களுக்கு ஆட்படுமாறு தன்னை வளர்த்த தாயின் மீதும் குறைப்பட்டு நொந்து கொள்ளுகின்றாள் தலைவி. அவன் அருகே இருந்தால் அவை துன்பஞ் செய்வன அல்லவாதலால், அவன் அருகிலில்லாமையே உள்ள குற்றம் எல்லாம் எனத், தன் ஆற்றாமை மிகுதியையும் கூறுகின்றாள் அத் தலைவி.

காமத்துப் பால் முற்றும். 

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.