காம இன்பத்தினும் ஒருசார் இன்பம் தருவதாகவும், மற்றொருசார் துன்பந் தருவதாகவும் விளங்கும் தன்மை பற்றிக் கூறுவது இந்தப் பகுதியாகும்.
மனமொத்த மனைவியுடன் கூடி வாழுகிற இன்பச் செவ்வியினும் மனத்தாற் கலந்து உறவாடாமல், பொன்னுக்கும் பொருளுக்குமே ஆடவர் பலருடன் கூடி வாழும்போது மகளிரின் உறவே, இந்தத் தன்மையின் முழு இயல்பையும் எடுத்துக் காட்டுவதாகும்.
பொன்னும் பொருளும் கொடுத்து அனுபவிக்கும் ஒருவன் மீதும் அவர்க்கு உள்ளார்ந்த பற்றில்லாத காரணத்தால், அப்படி அவன் தருகிற சமயங்களுள், அவர்கள் அவனுக்கு இன்பந் தருபவராக விளங்கினும், அவன் தரவியலாது போயின காலத்தும், அன்றி அவனினும் மிகுதிப்படப் பிறர் தர முன்வந்த காலத்தும், அவர் அவனை இழித்துப்பேசி ஒதுக்கி விடுவர். இப்படி இன்பமும் துன்பமும் அமைந்த தன்மையால் இது இப்பெயர் பெற்றது.
- பொது மகளிர்
பொதுமகளிர் என்போர், தமது நலத்தைத் தம் உள்ளங்கலந்த ஒருவனுக்கு மட்டுமே அளித்துத் தாமும் இன்புற்று, அவனையும் இன்புறுத்துகின்ற கற்புத் தன்மை இல்லாதவர்கள். தம் நலத்தை விரும்பி, அதற்கான விலையைக் கொடுக்கும் ஆடவர்க்கெல்லாம், இன்னார் இனியார் என்னுமோர் வரை துறையின்றி, இன்பந் தந்து வாழ்பவர்.
இவர், ஒருவனோடு ஒருத்தி என்ற சிறந்த அறநெறிக் கூறுபாட்டிற்கு எதிரானவராதலினாலும், இவர் உறவினாலே முறையாக அமைந்த பற்பல நற்குடும்பங்கள் கேட்டிற்கு உள்ளாவதனாலும் இவருடன் கொள்ளும் உறவைச் சான்றோர் தீயதென்று கடிந்து உரைப்பர்.
இப்படிப்பட்டவர் சிலர் உளதாகின்ற தன்மை, ஆடவர்களின் ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாகவே அமைவதேனும், அந்தக் குறைபாடு நீக்கப்படவேண்டும் என்னும் நல்லெண்ணத்தினால், இதனைக் கூறினர் சான்றோர் .
- விளக்கொளியும் வேசையர் நட்பும், இரண்டும்
துளக்கற நாடின், வேறல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே; அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
விளக்கினது ஒளியும் வேசையர்களுடைய நட்பும் ஆகிய இவ்விரண்டும், மயக்கமின்றி ஆராய்ந்து பார்த்தால் தம்முள் வேறுபட்ட வகையின அல்ல, ஒன்றேயாகும். நெய் வற்றிய அந்தப் பொழுதிலேயே விளக்கொளியும் இல்லாமற் போகும். அதுபோலக் கைப் பொருள் கொடுத்தல் இல்லாமற்போன அந்தப் பொழுதே வேசையரின் நட்பும் நீங்கிப் போய்விடும்.
'இதனால் உண்மை அன்பில்லாதவருடைய இன்பம் இனியதன்று; துன்பந்தருவதே' என்பது சொல்லப்பட்டது.
- அங்கோட் டகலல்குல் ஆயிழையாள், நம்மொடு
செங்கோடு பாய்துமே என்றாள் மன்;- செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே,
காற்கானோய் காட்டிக் கலுழ்ந்து.
அழகிய பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குல் தடத்தை உடையவளான, ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடையவள், 'நம்மோடு செம்மையான மலையுச்சியில் இருந்தும் ஒருசேர வீழ்ந்து உயிர்விடுவோம்' என்று, முன்னர் ஒரு காலத்தே எம்மிடத்துத் தன்னுடைய காதலுறுதி தோன்றிச் சொன்னாள். இப்போதோ, எம்மிடத்துப் பொருள் இல்லாமையினால், செம்மையான மலையுச்சியின் மேல் ஏறி வீழ்வதற்குத் துணிந்துள்ள எம்முடன் வந்து சேராமல், தன் காலிலே மலையேற முடியாத வாதநோய்' என்று கற்பித்துக் காட்டிப் பொய்யாகக் கண்கலங்கித் தன் வீட்டிலேயே தங்கி விட்டாள்.
தன் செல்வமெல்லாம் வேசையுறவால் போக்கடித்து விட்டு, இறுதியில் மலையேறி வீழ்ந்து உயிர்விடத் துணிந்த ஒருவன் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள். இதனால் வேசையர் இன்பம் உண்மை இன்பம் அன்றென்பதும் பெறப்படும்.
- அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மால் ஆயினும் ஆகமன்! - தம் கைக்
கொடுப்பதொன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார்,
விடுப்பர், தம் கையால் தொழுது.
அழகிய இடமகன்ற வானுலகத்திலேயுள்ள தேவர்களால் வணங்கப்படுகின்ற சிவந்த கண்களையுடைய திருமாலே யானாலும் ஆகட்டும்! தம் கையில் கொடுக்கும் படியான பொருள் ஒன்றும் இல்லாதவரைக் கொய்யத்தக்க தளிர் போன்ற மேனியை உடைய வேசையர்கள், தமது கையால் கும்பிட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்; அன்றி, அவர்களுடன் கூடி இன்பந் தரமாட்டார்கள்.
'அழகும் பெருமையும் முதலிய சிறப்பு வாய்ந்த ஆடவரேனும், வேசையர் தமக்குப் பொருள் தராதவரைக் கூடமாட்டார்' என்பது கருத்து
- ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணம் இல்லாதார் கடுவனையர் , - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு.
அன்பில்லாத உள்ளத்தையும் அழகிய நீலோற்பல மலர் போன்ற கண்களையும் உடைய வேசையர்களுக்குத் தம்மிடத்தே பொருளில்லாதவர்கள், எத்துணைப் பிற வகையாற் சிறந்தவரேனும், விஷம் போன்று வெறுக்கத் தக்கவர்களே ஆவார்கள். செக்காட்டுதலாகிய தொழில் உடையவரே யானாலும், அவர், தேடிய பெருஞ்செல்வம் உடையவரானால், அவரே அவர்களுக்குச் சர்க்கரை போல இனிமையாக இருப்பவ ராவார்கள்.
'செக்காடுவார் மேனியின் கசடுடைமைபற்றி அவரைச் சுட்டிக் கூறினர். தரும் பொருள் ஒன்றை வைத்தே ஆடவரை மதிப்பர்' என்பது கருத்து.
- பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வர்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
தன்னைப் பிடிக்கவரும் பாம்பினுக்குத் தானும் அதனினமே போல ஒரு தலையினைக் காட்டியும் மதுரத்தைப் பெற்றிருக்கிற தெளிந்த நீரையுடைய தடாகத்திலுள்ள மீனுக்குத் தான் அதனினமேபோல மற்றொரு தலையைக் காட்டியும் வாழும் விலங்கினையொத்த செய்கையை உடையவர்கள் வேசையர். அவர்களுடைய தோள்களைச் சேர்பவர்கள் விலங்கினத்தைப் போன்ற பகுத்தறிவற்ற மூடர்களே ஆவார்கள்.
'வேசையர், அவரவர்க்கும் இசைவார் போலக் காட்டிப் பலரையும் இன்புறுத்தும் வஞ்சனையுடையவர். அவர் உறவு, உண்மை உறவென நாடிச் செல்பவர் மூடர்கள்' என்பது கருத்து.
- பொத்த நூற் கல்லும், புணர்பிரியா அன்றிலும் போல்,
நித்தலும் நம்மைப் பிரியலம்' என் றுரைத்த
பொற்றொடியும் போர்த் தகர்க்கோடு ஆயினாள்;
நன்னெஞ்சே!
நிற்றியோ, போதியோ, நீ?
"எனது நல்ல மனமே! நூலிலே கோத்த, உள்ளே தொளையுடையதான மணியைப் போலவும் கூடியிருத்த லின்றும் பிரியாத அன்றிற் பறவைகளைப் போலவும் எப்பொழுதும் நம்மை விட்டுப் பிரியமாட்டோம்'' என்று முன்னம் நம்மிடத்தே சொன்ன பொன் வளையல் அணிந்த அந்த வேசையும், இப்போது போர் செய்யுந் தன்மையுள்ள ஆட்டுக்கடாவின் கொம்பு போல மாறுபட்ட குணமுடையவள் ஆயினாள். அவள் அவ்வாறான பின்னரும் நீ அவளிடத்தி லேயே ஈடுபட்டு நிற்கின்றாயோ? அல்லது என்னுடன் புறப்பட்டு வருகின்றாயோ?
வேசை, வெறுத்துக் கைவிட்டும், அவள் மேல் ஆசைமாறாத தன் மனத்தை நோக்கி ஒருவன் கூறியது இது.
- ஆமாபோல் நக்கி, அவர்கைப் பொருள் கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென் றிருந்தார் பெறுபவே,
தாமாம் பலரால் நகை.
முதலிலே இன்பமுண்டாக நக்கிப் பின் உயிரையுண்ணும் இயல்பினையுடைய காட்டுப் பசுவைப் போலத் தம்மிடம் கூடியவர்களது கைப்பொருள் எல்லாம் முதலிலே ஆசைகாட்டிக் கவர்ந்து கொண்டு, பின் எருதைப் போலக் கவிழ்ந்து படுத்துக்கொள்ளுகிற தாழ்ந்த நடத்தையுடைய பொது மகளிடத்திலேயுள்ள அன்பினை, உண்மையென நம்பி இருந்தவர்கள், அவளால் கைவிடப்பட்ட காலத்துப், பலராலும் எள்ளி நகைத்தலுக்கு உள்ளாவார்கள்.
'வேசையர் தரும் இன்பமெல்லாம், வைப்பொருள் கவர்ந்து கொண்டு பின் கைவிடும் உட்கருத்துடனேயே' என்பது கருத்து. சேமா -எருதாகிய விலங்கு
- ஏமாந்த போழ்தின் இனியார் போன்று இன்னாராய்த்
தாமார்ந்த போதே தகர்க்கோடாம் - மானோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே
'செந்நெறிச் சேர்தும்' என் பார்.
செவ்விய வழியிலே சேர்வோம் என்று சொல்லுகிறவர்கள், தாம் மோகத்தால் மயங்கிப் பொருள் தந்தபோது, இனியவர்களைப் போலத் தம்மிடம் வலிய விரும்பி இருந்து, தாம் பொருளிழந்த காலத்திலே விரும்பிச் சென்றபோதும், அன்பில்லாதவர்களாய் ஆட்டுக்கடாவின் கொம்பைப்போல மாறுபடும்படியான, மான் போலும் பார்வையினையுடைய , தமக்குரிய பொருட்பெண்டிர் தன்மையிலேயே நடக்கும் வேசையர்களுடைய பெரிய தனங்களை ஒருபோதும் விரும்பிச் சென்று சேரவே மாட்டார்கள்.
'நல்ல வழியினை நாடுவோர், வேசையர் போகத்தை விரும்பவே மாட்டார்கள்' என்பது கருத்து
- ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி, ஒண்ணுதலார்
தேற் மொழிந்த மொழி கேட்டுத் - தேறி,
எமரென்று கொள்வாரும் கொள்பவே, யார்க்கும்
தமரல்லர், தம்முடம்பி னார்.
ஒளிபொருந்திய நெற்றியை உடையவரான பொது மகளிர், பிறருக்குத் துன்பஞ் செய்யும்படியான தம் எண்ணத்தைத் தம்முள்ளேயே மறைத்துவைத்துக், காமுகர் நிச்சயமாக நம்பும்படியாகச் சொல்லிய பசப்பு வார்த்தைகளைக் கேட்டு, அவர்கள் மேல் ந ம்பிக்கை கொண்டு அவர்களை 'எம்மவர்' என்று கூறிக்கொள்ளுகிறவர்களும் அவ்வாறே கூறிக் கொள்ளக் கடவார்கள். வேசையர் எவ்வகைப்பட்டவர்க்கும் உரியவராகார். தம் உடலைத் தமக்கே உரிமையாக உடையவர் அவர் என்பதே உண்மையாகும்.
'வேசையரின் பசப்பு மொழிகளை உண்மையென நம்புதல் கூடாது. அவர் உடல் என்றும் அவர்க்கே உரியதன்றி அதனைப் பிறருக்குக் காதலால் உரியதாக்கும் இயல்பு அவரிடம் என்றும் கிடையாது' என்பது கருத்து.
- உள்ளம் ஒருவன் உழையதா, ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும், அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.
மனமானது மற்றொருவனிடத்திலே இருக்க விளக்கமான நெற்றியினையுடைய பொதுமகளிர் கபடமாக அன்புடையவர் போற் செய்கின்ற கருத்துக்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்து அறிந்த காலத்தும் தீவினையின் மிகுதியை உடைய உடலினையுடைய பாவிகள், ஒருபோதும் அவர்கள் உறவின் கேட்டை அறியவே மாட்டார்கள்.