உயிர்க்கு உறுதிப் பொருள்களாவன நான்கு அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. எவ்வகையானும் நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால் வீடு விளக்கப்படுவது ஆன்றோர் நூல்களின் மரபன்று. எனவே அதனை நீக்கிப் பிற மூன்றையுமே கூறுவன தமிழ் அறநூல்கள்.
அவற்றுள், அறமும் பொருளும் பற்றிய செய்திகள் இதுவரை காட்டப்பெற்றன. இனிவரும் மூன்று அதிகாரங்கள் இன்பம் பற்றிய உண்மைகளைக் கூறுவனவாம்.
பொருளால் பெற்றுத் துய்க்கப்படுவதான இன்பங்கள் பல; எனினும், அவற்றுள் எல்லாம் சிறப்புடையதாக மதிக்கத் தக்கது காம இன்பமே ஆகும். ஏனெனில் அதுவே ஐம்புலன் களாலும் ஒருங்கே ஒருசமயத்தே அனுபவிக்கத்தக்க சிறப்புடைய தாகத் திகழ்வது.
இப்பகுதியின் முதல் அதிகாரம் இன்ப துன்ப இயலாகவும், இறுதி இரண்டு அதிகாரங்கள் இன்பஇயல் ஆகவும் வகுக்கப் பட்டிருக்கின்றன.