Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

1. அரசியல்

அரசியலாவது, அரசநெறியை நடத்தி வரும் நாட்டுத் தலைவனுக்குரிய தன்மையை விளக்கிக் கூறும் பகுதி.

உலகிலே, மக்கள் அனைவரும் பசியும் பகையும் ஒழிந்தவர்களாக வசியும் வளனும் பெற்றவர்களாக, இன்புற்று வாழ வேண்டுமானால், அவர்களைத் தலைமையேற்று நடத்திச் செல்லுவோன் ஒருவனும் வேண்டும். அவன், மக்களின் பாங்கினை நன்கு உணர்ந்தவனாகவும், தான் ஏற்றிருக்கும் தலைமையினை முறையே நிறைவேற்றிச் செல்வதற்குரிய தகுதிகளை உடையவனாகவும் விளங்குதலும் வேண்டும்,

தகுதியற்ற தலைமையின் கீழ், நாட்டின் நிலை சீர்குலைந்தே போகும். பலருடைய வாழ்வும், அந்தத் தலைவனின் தகுதியையும் ஆற்றலையும் பொறுத்தே விளங்குவதனால், அவனுடைய தகுதியை ஆராய்வதும் வகுத்துக் கூறுவதும் சான்றோர் கருத்தாயிற்று. அதனை நாமும் காணலாம்.

 1. கல்வி

‘கல்வி, என்பது, ஒருவன் தன் வாழ்வின்கண் தான் செப்பமாகத் தெளிந்த அறிவுடன் நடந்து கொள்வதற்கு உதவும், தகுதியுடைய நூல்களைக் கற்றலைக் குறிப்பதாகும். இதன் இன்றியமையாமை குறளினும் சரி, இந்நூலினும் சரி, அரசியல் தொடர்புடன் ஒட்டியே வற்புறுத்தப்படுகின்றது.

பொதுவாக, அனைவருக்குமே கல்வி இன்றியமை யாததுதான் என்றாலும், பல்வேறு மக்களையும் ஆண்டு, நாட்டைப் பேணிக்காத்து நிற்கும் பொறுப்புடையவர்களுக்கு, அது மிகவும் இன்றியமையாததாகும் என்பது தெளிவாகும்.

கல்வியாவது, தத்தம் தொழிலுக்கு ஏற்ற அறிவுகளைப் பெருக்கிக் கொள்ளலும், உண்மை உணர்வதற்கான விளக்கங்களைக் கேட்டுக் கற்றும் அறிதலும், அங்ஙனம் அறிந்தபின் அவற்றைப் பிறருக்குத் தான் வகுத்துக்கூற வல்லவனாதலும் ஆகும்.

நம் முன்னோர் வாழ்ந்த மரபுகள், அவர்களுடைய சிறந்த எண்ணங்கள், மற்றும் வாழ்வின் செப்பத்திற்கான பற்பல தெளிந்த முடிவுகள் அனைத்தும் தருவது கல்வி. ஆதலின், அனைவரும் கற்றலில் மனஞ்செலுத்துதல் சிறப்பாகும்.

 1. குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும், அழகல்ல.- நெஞ்சத்து

'நல்லம்யாம்' என்னும் நடுவு நிலைமையால் 

கல்வி அழகே அழகு. 

தம்முடைய தலைமயிரினை அழகாகப் புனைந்து கொள்வதனாலே பெறுகின்ற அழகும், உடலினை வளைந்து கொண்டதாக விளங்கும் ஆடையினது கரைகளால் ஏற்படுகின்ற அழகும், நல்ல மணக்கலவைப் பூச்சுக்களை உடலிலே பூசிக்கொள்வதனால் ஏற்படும் அழகும் உண்மையான அழகு அன்று. தம்முடைய நெஞ்சத்திலே, 'நாம் நல்லவர்கள்' என்ற உறுதியினைத் தருகின்ற நடுவுநிலைமையை ஏற்படுத்துவதனால், கல்வியினால் ஏற்படும் அழகே உண்மையான அழகாகும்.

'உடலழகுகள் நம்மைப் பார்க்கும் பிறருக்கே அழகாகத் தோன்றுவன, ஆனால் உள்ளத்துக்கு அழகு தருவது கல்வியொன்றினால் மட்டுமே அமையும்' என்பது கருத்து. குஞ்சி - ஆணின் தலைமயிர். கொடும் தானை - வளைவுடைய

ஆடை உடலை வளைத்துச் சூழ்ந்திருப்பதால் கொடுந்தானை எனப்பட்டது. மஞ்சள் - மகளிர்க்குரிய பூச்சு . இதனால் கல்வி ஆடவர் மகளிர் ஆகிய இருவருக்கும் அழகு தருவது என்பது கூறப்பட்டது.

 1. இம்மை பயக்குமால்; ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால்; தாமுளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாங்காணேம், கல்விபோல் 

மம்மர் அறுக்கும் மருந்து. 

கல்வியானது, இம்மை என்று சொல்லப்படும் இந்தப் பிறவியின் பயனாகிய உறுதிப் பொருள்களையும் தரும். செல்வத்தைப் போலல்லாமல் கொடுக்கக் கொடுக்கக் குறைவு படாமல் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகவும் செய்யும். அதனையுடைய ஒருவரைப் புகழ் என்னும் பெருமையால் நெடுந்தொலைவுக்கு விளக்கமுறச் செய்யும் சக்தியும், அதற்கு உண்டு. தாம் உயிருள்ளவராக வாழும் அளவும் கல்வி அழிதல் இல்லாது நிலைபெற்றுத் தம்முடன் விளங்கும். ஆதலால் கல்வியைப் போல அறியாமையாகிய நோயை ஒழிக்கின்ற ஒரு மருந்தினை யாம் எத்தன்மையான உலகத்தினும் காண்கின்றோ மில்லை .

கல்வி, அறியாமையைப் போக்கி அறிவை வளர்க்கும். பிற செல்வங்களோ அறிவை மறைத்து அறியாமையை வளர்ப்பன. ஆகவே, கற்றல் மிகவும் சிறப்புடையது என்பது கூறப்பட்டது.

 1. களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்

கடைநிலத்தோர் ஆயினும், கற்றறிந் தோரைத் 

தலைநிலத்து வைக்கப் படும். 

உவர் நிலத்திலே தோன்றிய உப்பினை நல்ல விளை நிலத்தின் விளைந்த நெல்லினைக் காட்டினும் சிறப்புடையதாகச் சான்றோர் கொள்வார்கள். அங்ஙனமே கடையான பகுதியிலே பிறந்தவர்கள் ஆனாலும், கற்று அறிவுடையவர்களாக விளங்கு பவர்களை, மேன்மையான பகுதியிலே வைத்துப் பெருமைப் படுத்துவார்கள் அறிவுடையோர்

உயர்வும் தாழ்வும் பிறப்பால் அமைவனவன்று கல்வியறிவால் அமைவனவே என்பது கருத்து. கடை நிலம், தலைநிலம் என்பன தாழ்ந்த நிலையிலுள்ள குடியினர், உயர்ந்த நிலையிலுள்ள குடியினர் ஆகியோரை இங்கே குறிக்கும்.

 1. வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயின் கேடில்லை

மிக்க சிறப்பின் அரசர் செறின்.- வவ்வார்

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன 

விச்சை; மற்று அல்ல,பிற. 

கல்வியானது தான் வைக்கப்பட்டுள்ள இடத்தினின்றும் பிறரால் களவாடப்பட முடியாதது. கொள்பவர் தகுதியுடை யவராக வாய்த்து, அவருக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அதனால் வளர்ச்சி உண்டேயல்லாமல் அழிவில்லை. மிகுதியான சிறப்பின் காரணமாக அரசர்களே சினங்கொண்டு வந்தாலும் கவர்ந்து சென்றுவிட மாட்டார்கள். ஆதலால் ஒருவன் தன் மக்களுக்குத் தான் விட்டுச் செல்லும் செல்வ மென்று சேர்த்துவைக்கத் தக்கவை, கல்விப் பொருள்களே யல்லாமல் பிற அல்ல என்று அறிதல் வேண்டும்.

'மக்களுக்குச் செல்வத்தைச் சேமித்து வைத்துப் போவதைவிட அவர்களைக் கல்வியறிவு உடையவர்களாக்கி வைப்பதே சிறந்ததாகும்' என்பது கருத்து. எச்சம் எஞ்சி நிற்பது. விச்சை - கல்வி

 1. கல்வி கரையில் ; கற்பவர் நாள் சில

மெல்ல நினைக்கின், பிணிபல - தெள்ளிதின் 

ஆராய்ந் தமையுடைய கற்பவே, நீர் ஒழிய 

பாலுண் குருகிற் றெரிந்து. 

வித்தையாகிய கடலோ தனக்கொரு கரையேனும் இல்லாது முடிவின்றி விளங்குவதாகும். அவற்றைக் கற்பவர்களது வாழ்நாட்களோ மிகவும் சிலவாகும். பொறுமையாக நினைத்துப் பார்த்தோமானால், அந்த வாழ்நாட்களினும் இடையிடையே வந்து வருத்தும் நோய்களும் பலவாகும். ஆதலால், நீரினைத் தனியாகப் போகுமாறு பிரித்து ஒதுக்கிவிட்டுப் பாலைமாத்திரம் தான் உண்ணுகின்ற இயல்பினையுடைய அன்னப்பறவை போலத் தெளிவாக ஆராய்ந்து தமக்குப் பொருத்தமான சிறந்த நூல்களை மட்டுமே அறிவுடையோர் படிப்பார்கள்.

'அமைவுடைய' என்றது, அறிவுக்கு வளந்தருகின்ற உண்மைப் பொருள் கூறும் நூல்களை; அவற்றை மட்டுமே கற்கவேண்டும் என்பது கருத்து.

 1. தோணி இயக்குவான், தொல்லை வருணத்துக்

காணின் கடைப்பட்டான் என்றிகழார்; - காணாய்! 

அவன்றுணையா வாறுபோ யற்றே, நூல்கற்ற 

மகன்றுணையா நல்ல கொளல். 

தோணியினைச் செலுத்துகின்றவன் பழமையான சாதிகளுள்ளும் கடைப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே என்பதை அறிந்தாலும், அவனை யாருமே இகழமாட்டார்கள். அவனைத் துணையாகக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடந்து கரைசேரவே நினைப்பார்கள். இதனைக் கருதுதல் வேண்டும். இதுபோலவே, ஒவ்வொருவரும் அறிவு நூல்களைக் கற்றவன் எந்த வகுப்பினனாயினும் அதனைக் கருதாது, அவனைத் துணையாகக் கொண்டு நல்ல நூற்பொருள்களைத் தாமும் கற்றுக் கொள்ளல் வேண்டும்.

'ஆசானாயிருக்கத் தக்கவன் கல்வியறிவு உடையவனே அல்லாமல் குலவுயர்வு உடையவன் அல்லன்' என்று கூறுவதன் மூலம், கல்வியால் குலப்பிறப்பின் இழிவும் போகும், உயர்வும் வாய்க்கும் என்பது கூறப்பட்டது.

 1. தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்.

இகலிலார், எஃகுடையார், தம்முட் குழீஇ

நகலின் இனிதாயின், காண்பாம்; அகல வானத்து 

உம்பர் உறைவார் பதி. 

தொன்றுதொட்டு வழிவழியாக வருகின்ற குற்றமற்ற நூற்கேள்விகளினது தன்மையைப் பெற்றுள்ளவர்களும், பகைமைக் குணமானது இல்லாதவர்களும், ஆயுதம் போற் கூர்மையான நுட்ப அறிவு உடையவர்களும், தம்முள் ஒன்று கூடியிருக்கும் அவையினிடத்தே கூடியிருந்து மகிழ்தலைக் காட்டினும் இன்பந் தருவதாகுமானால், யாமும், பரந்த வானுலகத்தே தேவர்கள் வாழும் நகரமாகிய அமராவதியைச் சென்று காண்போமாக.

அறிவுடையோர் அவையிலே கூடியிருக்கும் இன்பத்துக்கு வானுலகத்து இன்பமும் நிகராகாது' என்றது இது. தவல் - தவறுதல், இகல் பகைமை எஃகு - வேல்; அதுபோற் கூர்மையான நுண்ணறிவு.

 1. கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை

நுனியிற் கரும்பு தின்றற்றே;- நுனிநீக்கித் 

தூரிற்றின் றன்ன தகைத்தரோ, பண்பிலா 

ஈரம் இலாளர் தொடர்பு. 

ஒலி முழங்கும் கடலினது குளிர்ந்த கரைகளை உடைய நாட்டின் தலைவனே! நல்ல நூல்களைக் கற்று அறிவுடைய வர்களாக விளங்குபவர்களுடைய நட்பானது நுனியிலிருந்து அடி நோக்கிக் கரும்பைத் தின்பது போலத் தொடக்கத்திலே சற்று உவர்ப்பாயிருந்தாலும் வரவர இனிமை தருவதாய் இருக்கும். கரும்பை நுனியிலிருந்து தின்னுதலை விட்டு, அடியிலிருந்து நுனி நோக்கித் தின்பதைப் போன்று, முதலிலே இனிமையாக இருந்தாலும், வரவர உவர்ப்பாகப் போய்விடுவது, கல்விப் பண்பற்ற அன்பில்லாதவர்களுடைய தொடர்பு ஆகும்.

'கல்வியுடையவர் தொடர்பே நெடுங்காலம் இன்பந் தருவது என்று கூறிக் கல்வியின் சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

 1. கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு 

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

தொன்மையாகவே விளங்கும் சிறப்பினையும் பிரகாசமான நிறத்தினையும் உடைய பாதிரிப் பூவினைச் சேர்தலால், புதிதான பானையோடானதும் தன்னிடத்தேயுள்ள குளிர்ந்த நீருக்குத்தான் வாசனையைக் கொடுக்கும். அதுபோலவே படியாதவரேயானாலும் படித்தவருடன் சேர்ந்து நடப்பாரானால், அச்சேர்க்கை காரணமாக, நாள்தோறும் நல்ல அறிவு உண்டாகப் பெறுவார்கள்.

'படியாமற் போனாலும், படித்தவருடைய தொடர்பாவது வைத்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்வதன் மூலம், கல்வியின் சிறப்பைக் கூறுவது இது

 1. அலகுசால் கற்பின், அறிவு நூல் கல்லாது

உலகு நூல் ஓதுவது எல்லாம் - கலகல 

கூஉந் துணையல்லால், கொண்டு, தடுமாற்றம்

போஒந் துணையறிவார் இல். 

அளவு மிகுந்த நூற்களினுள்ளே உண்மையான அறிவைத் தருகின்ற நூற்களைப் படியாது. இவ்வுலகத்துக்கே பயன்படுகின்ற நூற்களை மட்டுமே படிப்பதெல்லாம், கலகலவென்று கூவும் அளவை உடையதேயல்லாமல், அவ்வுலக நூற்களைப் படித்ததைக் கொண்டு, பிறவித் துன்பங்களினின்றும் தடுமாற்றத்தை நீக்கிக் கொள்ளும் தன்மையை அறிந்தவர் எவரும் இல்லை.

'கற்பதினும், உயிர்க்கு உறுதிதரும் நூற்களைக் கற்பதே சிறந்தது' என்பது கருத்து.

 1. குடிப் பிறப்பு

தமிழ் அறநூல்கள், பிறப்பினால் உயர்வு தாழ்வு என்ற நிலையினை வன்மையாக மறுத்துக் கூறுவன. எனினும், அவை ஒவ்வொரு குடியின் பழக்கவழக்க வேறுபாடுகளால் அவற்றுள் சில உயர்குடியாகவும், சில உயர்குடி அல்லாததாகவும் விளங்குவதையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

சாதிக்குத் தக்க பழக்க வழக்கங்கள் சில நிலவுவது உண்மைதாம். அவை காலப்போக்கிலே அந்தக் குறிப்பிட்ட குடும்பத்தார் சமூகத்தின் பல்வகைச் சூழல்களால் நம்முடைய வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள நேரிட்ட காரணத்தால் உருவானவை. இப்படியே ஒவ்வொரு குடும்பமும் தனக்கென ஒருவகையான பண்பாட்டு ஒழுக்கத்தைப் பேணிவந்து கொண்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலையிலே பிறந்து வளரும் மனிதர்களும், அந்தந்தப் பண்பாட்டினைக் கொண்டவர் களாகவே விளங்குகின்றனர். இந்த உண்மையை மறைப்பதற்கில்லை.

உயர்ந்த குடியினரிடையே கல்வியும், நல்லொழுக்கமும் இயல்பாகவே படிந்திருக்க வேண்டும். அப்படிப் படிந்திருப்பதன் காரணமாக விளங்கும், அத்தகைய நற்குடிப்பிறப்பின் சிறப்பை இந்தப் பகுதி கூறுகிறது. நற்குடிப்பிறத்தல் ஊழ்வினைப் பயனால் வருவது என்பது சான்றோர் கொள்கை

 1. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்

குடிப்பிறப் பாளர்தம் கொள்கையிற் குன்றார்

இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா 

கொடிப்புற் கறிக்குமோ மற்று

உடுக்கப்படும் ஆடையும் கந்தலாய்ப்போன வறுமையினை அடைந்து தக்க உணவு இல்லாத காரணத்தால் தம் உடம்பும் மெலிவுற்று நலன் அழிந்துபோன காலத்தினும், உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள், தம்முடைய அந்தக் குடிக்கு உரிய கொள்கையினின்றும் குறைபடவே மாட்டார்கள். பசியினர் லாகிய துன்பமானது மிகுதியாக நேர்ந்தவிடத்தும், சிங்கமானது கொடியாகப் படர்ந்திருக்கும் புல்லைத் தின்னுமோ?

'அது தின்னாதது போலவே அவரும் குடிப்பண்பிற்குக் குறைவு நேரும் செயலிலோடு டமாட்டார்கள்' என்பது கருத்து. உடுக்கை உடை; அதுவும் உலறல், மானம் அழியும் கொடிய வறுமை நிலையை உணர்த்தும். அரிமா! அரி - சிங்கம். மா - விலங்கு, சிங்கமாகிய விலங்கு.

 1. சான்றாண்மை , சாயல், ஒழுக்கம் இவை மூன்றும்

வான்றோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது- வான்றோயும்

மைதவழ் வெற்ப! படாஅ, பெருஞ்செல்வம் 

எய்தியக் கண்ணும், பிறர்க்கு. 

வானம் அளாவியவும், மேகங்கள் தவழ்கின்றவுமான உயரமான மலைகளையுடைய அரசனே! நற்குணங்களால் நிறைவுற்று அவற்றை ஆளுகின்றவோர் தன்மையும், தம் பழக்க வழக்கங்களிலே ஒருவகையான மென்மை இயல்பும் நல்லொழுக்கமும் ஆகிய இவை மூன்றும் புகழால் மேலுலகத்தையும் அளாவியிருக்கும் உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு மட்டுமே அல்லாமல், மற்றையோருக்குப் பெருஞ்செல்வம் வந்து சேர்ந்த காலத்தும் உண்டாவன அல்ல.

'சான்றாண்மை முதலியன குடிப்பிறப்பால் வருவனவே அல்லாமல், செல்வம் முதலியவற்றின் மிகுதியால் வருவன அன்று' என்று கூறுவதன் மூலம், உயர்குடிப் பிறப்பின் உயர்வு கூறப்பட்டது.

 1. இருக்கை எழலும் எதிர்செலவும், ஏனை

விடுப்ப ஒழிதலோடு, இன்ன - குடிப்பிறந்தார்

குன்றா ஒழுக்கமாகக் கொண்டார், கயவரோடு 

ஒன்றா உணரற்பாற்று அன்று. 

சான்றாண்மை உடைய பெரியவர்களைக் கண்டபோது தம் இருக்கையை விட்டு எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்தலும், அவர்களை எதிர் கொண்டு சென்று வரவேற்றலும், அவர்கள் விடை கொடுத்த பின்பே அவர்களை விட்டுப் பிரிதலும் ஆகிய இத்தகைய பண்புகளை எல்லாம் உயர்ந்த குடியினிடத்தே பிறந்தவர்கள் தம்பாற் குறையாத ஒழுக்கங்களாக மேற்கொண்டிருக்கின்றனர். அதனால், அவர்களை அவை செய்தலில்லாத கயவர்களோடு ஒன்றாக வைத்து எண்ணுதல் பான்மையுடையது அன்று.

உருவால் ஒத்திருப்பினும் உயர்குடியினரும் கயவரும் தத்தம் ஒழுக்கத்தால் வேறுபட்டே இருப்பார்கள் என்பதற்குச் சில கூறி, உயர்குடியினரின் சிறப்புக் காட்டப் பெற்றது.

 1. நல்லவை செய்யின் இயல்பாகும்; தீயவை

பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம்

 உணருங் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ

புணரும் ஒருவர்க் கெனின்

உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் ஒரு நல்ல செயலைச் செய்தால், அது அவர்களுடைய குடிப்பிறப்பின் இயல்பு என்று கருதப்படும். அவர்கள் தீய செயலைச் செய்தாலோ பலரும் தூற்றிப் பரப்புகின்ற பெரும் பழியாகிவிடும். ஆதலால், நல்ல குடியிலே பிறத்தல் என்பது ஒருவருக்கு வந்து வாய்க்குமானால், எல்லாவற்றையும் அறியவல்லதான அந்தப் பிறப்பினால்தான் அவர் அடைந்த பயன் என்னவோ?

அந்தக் குடிப்பிறப்பும் பயன் அற்றது என்று சொல்வது போல, அந்த உயர்குடிப் பிறப்பைப் புகழ்ந்தது இது. தாம் செய்யுந் தீயவையால் எழும் பெரும்பழிக்கு அஞ்சி அவர் அவற்றின்கண் ஈடுபடமாட்டார் என்பது குறிப்பு ஊதியம் - பயன் புணரும் - வந்து பொருந்தும்.

 1. கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்

சொல்லாமை உள்ளுமோர் சோர்வச்சம்; - எல்லாம் 

இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் ; மரத்தார், இம் 

மாணாக் குடிப்பிறந்தார். 

தாம் கல்லாதவராகிவிடக் கூடாதே என்ற அச்சமும், தாம் மூடர்களின் தொழில்களுள் எதையாவது செய்து விடக் கூடாதே என்ற அச்சமும், தீய சொற்களைச் சொல்லாம லிருப்பதில் எப்போதாவது தவறிவிடுவோமோ என்ற சொல்லின் தளர்ச்சியைக் குறித்த அச்சமும், தம்மிடம் வந்து இரந்து நிற்பவர்க்கு எதுவும் கொடாமல் இருக்கக் கூடாதே என்ற அச்சமும் - இப்படிப் பல்வேறு அச்சங்களும் நல்ல குடியிலே பிறந்தவர்களுக்கு உள்ளனவாம். அதனால், இப்படி அச்சமே மிகுதியாகவுடைய மாண்பற்ற குடியிலே பிறந்தவர்கள், கடலிடையே செல்லும் மரக்கலத்திலே உள்ளவர்களைப் போன்று சதா கவலையே உடையவர்கள் ஆவார்கள்.

உயர்குடிப் பிறந்தோர் இவற்றுக்கெல்லாம் அஞ்சுவர்; கயவரோ அஞ்சமாட்டார்; அதனால் அச்சமுடைய இது என்ன பிறப்பு? இப்படிப் பழிப்பதன் மூலம் அவர்களுடைய உயர்வைப் போற்றுவது இது.

 1. இனநன்மை, இன்சொல், ஒன்று ஈதல், மற்றேனை

மனநன்மை, என்றிவை எல்லாம் - கனமணி 

முத்தோ டிமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப! 

இற்பிறந்தார் கண்ணே யுள. 

சிறந்த நவமணிகள் முத்துக்களோடுஞ் சேர்ந்து பிரகாசிக்கின்ற, முழங்கும் கடலினையுடைய குளிர்ச்சியான கடற்கரைக்கு உரிய தலைவனே தம்மைச் சேர்ந்தவர் நல்லவராயிருத்தலும், தாம் இனிமையான சொற்களையே சொல்லுதலும், தம்மிடம் வந்து யாசித்தவர்களுக்கு இல்லை என்னாது கொடுத்தலும், மற்றும் தம் மனம் தூய்மை யோடிருத்தலும் ஆகிய இவை எல்லாம், நல்ல குடியிற் பிறந்தவர்களிடத்திலேயே உள்ளனவாகும்.

நல்ல குடிப் பிறந்தவர்களிடமே இவை எல்லாம் உள்ளன வாதலின், அக்குடியின் சிறப்புப் போற்றப் பெற்றது.

 1. செய்கை அழிந்து, சிதன்மணிடிற் றாயினும்

பெய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்

எவ்வம் உழந்தக் கடைத்தும், குடிப்பிறந்தார். 

செய்வர், செயற்பா லவை. 

பெரிய வீடாக இருந்தால், அதன் கட்டுக்கோப்பு எல்லாம் அழிந்துபோய், எங்கும் கறையான்கள் நெருங்கிப் பிடித்திருந்தாலும், மழைநீர் உள்ளே ஒழுகாத ஒரு பக்கத்தையாயினும் அது உடையதாயிருக்கும். அதனைப் போலவே, உயர்குடியிலே பிறந்தவர்கள் தாம் துன்பத்திலே உழன்று கொண்டிருக்கும் காலத்தினும், தாம் செய்வதற்குரிய கடமைகளைத் தவறாது செய்வார்கள்.

செய்வதற்குரியவற்றையே செய்வார்கள் என்றதன் மூலம், அவர்கள் செய்யத்தகாத காரியங்களிலே ஈடுபடமாட்டார்கள் என்னும் பெருமையும் கூறப்பெற்றது.

 1. ஒருபுடை பாம்பு கொளினும், ஒருபுடை

அங்கண்மா ஞாலம் விளக்குறூஉம் - திங்கள்போல்

செல்லாமை செவ்வனேர் நிற்பினும், ஒப்புரவிற்கு 

ஒல்கார், குடிப்பிறந் தார். 

தன்னுடைய ஒரு பக்கமானது பாம்பினால் விழுங்கப் பட்டிருக்கும் காலத்தினும், தன் மற்றொரு பக்கத்தினால் அழகிய இடத்தையுடைய பெரிய பூமியைத் திங்களானது ஒளியுடைய தாகச் செய்யும். அதுபோலவே, தங்கள் முயற்சிகள் ஈடேறாமை யாகிற நிலைமையானது செவ்வையாகத் தம்மிடத்தே நேரிட் டிருப்பினும், உயர்குடியிலே பிறந்தவர்கள், தம் சக்திக்கு ஏற்றவாறு உபகாரஞ் செய்வதற்குப் பின்வாங்கவே மாட்டார்கள்.

'எடுத்த காரியம் முழுவதும் நிறைவேறாமற் போனாலும் முடிந்தமட்டும் உதவுபவர் நற்குடிப் பிறந்தவர்; பிறர் இருப்பினும் உதவார்' என்பது கருத்து.

 1. செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன்

செல்லிடத்துஞ் செய்யார். சிறியவர். - புல்வாய் 

பருமம் பொறுப்பினும், பாய்பரி மாபோல் 

பொருமுரண் ஆற்றுதல் இன்று. 

தம்முடைய வறுமை முதலியவற்றால், தாம் ஒன்றைச் செய்ய முடியாது போயின காலத்தினும் , நற்குடியிலே பிறந்தவர்கள் செய்யும் காரியங்களைத் தம்மால் செய்ய முடிந்த காலத்தினுங்கூடத் தாழ்ந்த குடியிற் பிறந்தவர் செய்ய மாட்டார்கள், மானானது சேணம் முதலிய போர்க்கோலங் களைச் சுமந்து கொண்டிருந்தாலும், பாய்ந்து செல்லும் தன்மையினை உடைய போர்க்குதிரையைப் போலப் போர் செய்ய வல்ல வலிமையை உடையதா யிருப்பதில்லை.

'கீழோர் வாய்ப்பிருந்தும் நற்செயல்களுள் ஈடுபட மாட்டார்: மேலோர் வாய்ப்பற்ற போதும் முடிந்தவரை ஈடுபடுவர் என்பது கூறி, அவரது குடிச்சிறப்புக் கூறப்பெற்றது.

 1. எற்றொன்றும் இல்லா இடத்தும், குடிப்பிறந்தார்

அற்றுதற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து - ஊற்றாவர்

அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்

தெற்றெனத் தெண்ணீர் படும்.

உயர்குடியிலே பிறந்தவர்கள், யாதொரு வசதியும் தம்மிடத்தே இல்லாத இடத்தினும், வேறு கதியற்றுத் தம்மை வந்து அடைந்தவர்களுக்குத் தளர்ச்சி நேர்ந்தவிடத்து ஊன்றுகோல் போலத் தாங்கி உதவுவார்கள். எதுபோல என்றால் - நீர் முழுவதும் வறண்டு போயின காலத்தினும், அகற்சியை உடைய ஆறானது தோண்டின விடத்துத் தெளிவான தண்ணீரை உடையதாயிருப்பது போல் - என்க.

கோடையினும் தோண்டினால் நீர் தந்து உதவும் ஆற்றைப் போல, உயர்குடிப் பிறந்தோர் தம் வறுமையினும் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு இயன்றவரை உதவுவார்கள் என்று கூறி, அத்தகைய குடியினரின் பெருமை சொல்லப் பெற்றது. தெள்+நீர் தெண்ணீர் தெளிந்த நீர்.

 1. மேன் மக்கள்

மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் எனப்படுவர். இவர்கள் செயற்கு அரியன செய்தலும், கற்று அறிவுடைமையும், நல்லனவே செய்தலன்றித் தீயன மனத்தானும் கருதாமையும், பிறருக்கு உதவும் அருளுடைமையும் ஆகிய பல்வேறு குணங்களுக்கும் உறைவிடமா யிருப்பார்கள்.

நல்ல குடிப்பிறப்பினால் நல்ல பண்புகள் அமைய அவர்கள் மேன்மக்களாக விளங்குதலும் வாய்ப்பதாகும். ஆயினும் அவருள்ளும் ஒரு சிலர் கீழோர் தொடர்பாலும் ஊழ்வினை வசத்தாலும் மேன்மக்கள் ஆகாமற் போதலும் கூடும். அதேபோலக் கீழான குடியிற் பிறந்தும், தம்முடைய தளரா முயற்சியாலும், வினைப்பயனாலும், உள்ளத்து உறுதியாலும் மேலான பண்பாளர்களாக விளங்குபவரும் பலர் உள்ளனர்.

இந்தப் பகுதி, எத்திறத்தாலும் மேன்மையான மக்கட் பண்பு உடையவர்களைப் போற்றுதல் பற்றிக் கூறுவதாகும்.

 1. அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்; - திங்கள் 

மறுவாற்றுஞ்; சான்றோரஃது ஆற்றார்; தெருமந்து 

தேய்வர், ஒருமாசு உறின். 

அழகிய இடத்தினை உடையதாகிய வானத்திலே யிருக்கும், பரந்த நிலவொளியை வீசுகின்ற திங்களும், சான்றோரும், பெரும்பாலும் தம்முள் ஒத்திருப்பார்கள். ஆனால் திங்கள் தன்பாற் சேரும் களங்கத்தைத் தான் பொறுத்துக் கொண்டு இருக்கும். சான்றோர்களோ அப்படிப் பொறுக்க மாட்டார்கள். ஒரு குற்றம் தம்பால் நேர்ந்தாலும் அதனை எண்ணி வருந்தித் தம் உயிரையே விட்டுவிடுவார்கள்.

இதனால், அகல் நிலாப் பாரிக்கும் திங்களினும் சான்றோர் சிறந்தவர் என்பது கூறப்பெற்றது. அவரும் தம் சான்றாண்மையால் உலகெங்கும் பரந்த புகழினராயிருப்பர் என்பது உணர்க,

 1. இசையும் எனினும், இசையாது எனினும்

வசைதீர எண்ணுவர், சான்றோர் - விசையின் 

நரிமா உளங்கிழித்த அம்பினிற் றீதோ

அரிமாப் பிழைப்பெய்த கோல்

பெரியவர்கள் ஒன்றைச் செய்தல் தமக்கு இயலுவது என்றாலும், இயலாதது என்றாலும் பழிப்பிற்கு இடமில்லாத சிறந்த காரியங்களைப் பற்றியே நினைப்பார்கள். வேகமாகச் சென்று நரியென்னும் விலங்கின் நெஞ்சைக் கிழித்துக் கொன்ற அம்பினைக் காட்டினும், சிங்கமானது குறிதவறலாற் பிழைத்துப்போக எய்த அம்பானது தாழ்வானதோ? (இல்லை என்பது கருத்து).

பெரியோர் உள்ளம் பெரிய காரியங்களிலேயே செல்லும் என்பதுடன், சிறியவற்றிற் செல்லாது என்பதையும் கூறிப் பெரியோர் பெருமை காட்டப் பெற்றது.

 1. நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும், சான்றோர்

குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார். - உரங்கவறா

உள்ளமெனும் நாரினாற் கட்டி, உளவரையால் 

செய்வர், செயற்பா லவை. 

உணவு இன்மை காரணமாக உடல் மெலிவடைதலால், நரம்புகள் மேலே எழுந்து தோன்றப் பெற்று மிக்க வறுமையினை உடையவர்களாக ஆனாலும், சான்றோர்கள் எல்லை கடந்து குற்றமான செய்கைகளை மேற்கொண்டு, அளவுக்கு மீறிச் செல்லவே மாட்டார்கள். தம்முடைய அறிவையே கவறாக வைத்துத் தம் முயற்சியென்னும் நாரினாலே உள்ளத்தைக் கட்டித் தம்மிடத்தே உள்ள அளவிற்கு ஏற்பச், செய்யத்தகுந்த நல்ல காரியங்களையே செய்வார்கள்.

கவறு- பிளந்த பனைமட்டை , குரம்பு எல்லை . ஏறார் - மென்மேற் செல்லார். உரம் - அறிவு. மேன் மக்கள் எப்போதும் வரம்பு கடக்கவே மாட்டார்கள். இழிவான செயல்களிலே ஈடுபடார்கள்; உபகாரம் செய்பவராயிருப்பார்கள் என்பன கூறப்பெற்றன.

 1. செல்வழிக் கண்ணொருநாள் காணினும், சான்றவர்

தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர் 

நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்

கல்வரையும் உண்டாம், நெறி. 

நல்ல மலைகள் பொருந்திய நாட்டை உடையவனே! போய்க் கொண்டிருக்கும் இடத்திலே ஒருநாள் கண்டு பழகினாலும், அவர்களைப் பழைமை வழியினாலே வந்த சிநேகம் போலத் தோன்றும்படியாக உபசரித்துத் தம்முடன் அவரை அன்புடையவராகப் பிணித்துக் கொள்வார்கள் மேன்மக்கள். சில நாட்கள் காலடி பட்டதென்றால், கல்மலையினும் வழி உண்டாகும் அல்லவோ?

'கல்லிலும் சில நாட்கள் காலடிபட்டால் வழி உண்டாகிறது. அதுபோலச் சிலநாட் பழகினால் எவரும் சினேகிதராகலாம். ஆனால் மேன்மக்களோ ஒருநாட் கண்டாலும் அவர்மீது கனிந்த அன்பு பாராட்டுவர்' என்பது கருத்து.

 1. புல்லா எழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவன் உரைப்பவும், கண்ணோடி 

நல்லோர் வருந்தியும் கேட்பாரே , மற்றவன் 

பல்லாருள் நாணல் பரிந்து. 

பொருள்களின் தன்மையை அறியும் அறிவில்லாத பயனற்ற சபையைச் சேர்ந்தவனும் , கற்கவேண்டிய நூற்களைக் கல்லாதவனுமான ஒருவன், தனக்குத் தோன்றிய ஒரு பொருளைப் பொருந்தாத சொற்களால் எடுத்துச் சொல்லவும், மேன்மக்கள், அதனைக் கேட்க நேர்ந்ததற்காக வருத்தப்பட்டு அவன் பலர் முன்பாக அவமானப்பட்டு நிற்றலைக் காண்பதற்கு மனமில்லாமல், அவன் மீது தாட்சணியம் வைத்து, அவன் அப்படிச் சொல்வதைத் தாமும் காது கொடுத்துப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

மூடர்கள் பேசுவதைப் பெரியோர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே என்றால், அது அவர்கள் மீது கொண்ட இரக்கத்தினால்' என்று பெரியோர்களின் பெருமையைக் கூறுவது இது.

 1. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி

இடித்து, நீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்

வடுப்பட வைது இறந்தக் கண்ணும், குடிப்பிறந்தார் 

மறார். தம் வாயிற் சிதைந்து. 

கரும்பினை வாயினாற் கடித்தும், கணுக்கள் நொறுங்கும் படியாக ஆலையிலிட்டுச் சிதைத்தும், உலக்கை முதலியவற்றால் இடித்தும் அதனுடைய சாற்றை எடுத்து உட்கொண்டாலும்,

அது இனிய சுவையுடையதாகவே இருக்கும். தம்மீது குற்றம் தோற்றும்படியாகப் பிறர் தம்மைத் திட்டிப்போன காலத்தும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம்முடைய நல்ல பண்பினின்றும் கெட்டுப் போனவர்களாகத் தங்கள் வாயினால் தீய சொற்களை ஒருபோதும் சொல்லவே மாட்டார்கள்.

'பிறர் வருந்திய காலத்தும் மேன்மக்கள் தம் மேன்மை யான குணத்தினைக் கைவிடமாட்டார்கள்' என்பது கருத்து.

 1. கள்ளார், கள்ளுண்ணார்; கடிவ கடிந்தொரீஇ

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார். - தள்ளியும்

வாயிற்பொய் கூறார்; வடுவறு காட்சியார்

            சாயின், பரிவ திலர். 

குற்றமற்ற அறிவினை உடையவராகிய மேன்மக்கள் எனப்படுவோர் திருடமாட்டார்கள்; கள் குடிக்கமாட்டார்கள்; தள்ளத் தகுந்தவைகளை தள்ளி நீங்கி இருப்பார்கள்; அயலாரை அவமானமாக இகழ்ந்து பேசமாட்டார்கள்; தமக்கு எதனாலாயினும் தளர்ச்சி வந்த காலத்தும் அதற்காக வருத்தப்படவும் மாட்டார்கள்.

மேன்மக்களுடைய சிறந்த ஒழுக்கங்கள் இதண்கண் கூறப்பட்டன.

 1. பிறர்மறை யின்கண் செவிடாய்த் , திறன் அறிந்து

ஏதிலார் இல் கண் குருடனாய்த் , தீய 

புறங்கூற்றின் மூகையாய், நிற்பானேல், யாதும் 

அறங்கூற வேண்டா அவற்கு. 

ஒருவன், அயலாருடைய இரகசியங்களைக் கேட்பதிலே செவிடனாகவும், அயலானது மனைவியைப் பார்க்குங் காலத்திலே குருடனாகவும், ஒருவர் மேல் தீய சொற்களை அவர்களைக் காணாத இடத்திலே சொல்லுவதிலே ஊமையாகவும், நல்லொழுக்கத்தின் தன்மையை அறிந்து நிற்பானானால், அப்படிப் பட்டவனுக்கு வேறெந்தத் தருமமும் பிறர் சொல்ல வேண்டியதில்லை.

‘மேற்சொன்னவையே சிறந்த தருமங்கள்' என்பது கருத்து. இதனால் மேன்மக்களுடைய ஒழுக்கத்தின் தகுதி கூறப்பட்டது. மறை இரகசியம். மூகை-மூங்கை ஊமை,

 1. பன்னாளும் சென்றக்கால், பண்பிலார் தம்முழை

'என்னானும் வேண்டும் என்றிகழ் - என்னானும் 

வேண்டினும் நன்றுமற்று என்று, விழுமியோர் 

காண்டொறுஞ் செய்வர். சிறப்பு. 

மேன்மையான குணம் தம்மிடத்திலே இல்லாதவர்கள், ஒருவர் அடுத்தடுத்துப் பலநாளும் அவர்களை நாடிச்சென்ற காலத்தில், இவர் யாதாயினும் ஒன்றை நம்மிடமிருந்து பெற விரும்புகின்றனரோ?' என்று கருதி, அப்படி வருபவரை இகழ்வார்கள். ஆனால், பெரியோர்களோ என்றால், தம்மிடம் வருபவர் யாதேனும் விரும்பினாலும், நல்லதென்று சொல்லி வரும் அவரைக் காணும் போதெல்லாம் அவருக்குச் சிறப்புச் செய்வார்கள்.

'கீழோர், பலநாளும் வருபவர் ஏதேனும் கேட்பரோ என அஞ்சி, அவர் கேளாமுன்னரே அவரை இகழ்ந்து பேசுவார்கள். மேலோர் அவர் எதனை விரும்பினாலும் அதனைக் கொடுத்து நன்மை செய்வார்கள்' என்பது கருத்து. இதனால் மேலோரின் மனப்பண்பாடு சொல்லப்பட்டது.

 1. உடையார் இவர்' என்று ஒருதலையாப் பற்றிக்

கடையாயார் பின் சென்று வாழ்வர்; - உடைய 

பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல 

குலந்தலைப் பட்ட இடத்து

'இவர் செல்வம் உடையவராக இருக்கின்றாரென்று' உறுதியாகப் பற்றிக்கொண்டு, கீழ் மக்களின் பின்னாகப் போய்ப் பிழைப்பார்கள் சிலர். அங்ஙனம் வாழ்பவர்கள் நல்ல குடியிற் பிறந்தவர்களைச் சேர்ந்தவிடத்து, நாம் வேண்டும் பொருள் எல்லாவற்றையும் உடையதாயிருக்கிற ஒரு சுரங்கத்தைப் போலிராதா என்று நினைக்க மாட்டார்களோ?

'செல்வம் உளதோ இல்லையோ மேன்மக்களைச் சேர்வதே சிறப்பாகும்' என்பது இது. இதனால், மேன் மக்களுடைய தொடர்பின் பயன் சொல்லப்பட்டது.

 1. பெரியாரைப் பிழையாமை

மேன்மக்களின் தொடர்பினால் மனிதர்க்குப் பலப்பல நன்மைகள் உள்ளன. தூயோரும் மேலோருமாகிய அவர்க ளிடத்து எல்லோருமே பணிவும் அன்பும் உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தொடர்பான செயல்களிலே தவறு செய்வது மிகவும் வெறுக்கத்தக்க செய்கையாகும். இதனைப் பற்றிக் கூறுவது இந்தப் பகுதி.

பெரியார் என்று பொதுப்படக் கூறியதனால், இது பல முறைகளிலும் உள்ள பெரியார் பலரையும் குறிக்கும். அரசர் அமைச்சர் போன்ற சமூகத் தலைவர்களும், ஆசான் சான்றோர் போன்ற அறிவுத்துறைத் தலைவரும், உயர்குடியினர் துறவியர் போன்றோரும் எல்லாரும் பெரியோர்களே. அவர்கள் தமக்குப் பிழை செய்பவர்களையும் பொறுக்கும் இயல்பு உடையவரே என்றாலுங் கூட அவர்கள் சினங்கொள்வதால் நேரிடுகின்ற பெருங்கேட்டிற்கு ஒவ்வொருவரும் அஞ்சுதலும் வேண்டும்.

பெரியாரைப் பிழையாமை உயர்ந்த பண்புகளை மதித்துப் போற்றும் உள்ளச் செப்பத்தையும் தருவதாதலால் அனைவரும் இதனைக் கவனமாகக் கொள்ளல் வேண்டும்.

 1. பொறுப்பர்' என்றெண்ணிப், புரைதீர்ந்தார் மாட்டும்

வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்

ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாடா 

பேர்க்குதல் யார்க்கும் அரிது. 

அருவிகள் பேரொலியோடு வீழ்ந்து கொண்டிருக்கின்ற அழகிய மலைகளையுடைய சிறந்த நாட்டின் தலைவனே! பெரியோர்கள் குற்றம் என்பதே அறவே இல்லாதவர்கள். அதனால், 'அவர்கள் எது செய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள்' என்று நினைத்துங்கூடப் பெரியோர் வெறுப்படைகிற செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் வெறுப்படைந்து விட்ட பின்னர் அந்த வெறுப்பினால் தமக்கு வரும் கேட்டினைப் போக்குதல் எவர்க்குமே அரிதாகும்.

'அவர்கள் பொறுத்தாலும் அவர்களை மனங்கலங்கச் செய்த தீவினையின் விளைவினின்று யாரும் தப்ப முடியாது' என்பது கருத்து. புரை -உள்ளே புண்பட்டிருக்கும் நிலைமை

 1. பொன்னே கொடுத்தும், புணர்தற்கு அரியாரைக்

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ

பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல 

நயமில் அறிவி னவர். 

சிறந்த மேன்மைப் பண்பில்லாத அறிவினையுடையவர்கள், அதாவது அற்பமான அறிவுடையவர்கள், பொன்னையே காணிக்கையாகக் கொடுத்தும் தொடர்பு கொள்வதற்கு அரியவர்களான பெரியவர்களை, ஒன்றும் தராமலே சேர்ந்து பழகத்தக்க வாய்ப்பைப் பெற்றிருந்துங்கூட, ஐயோ! அதனைப் பயனுள்ள பொழுதாகச் செய்து கொள்ளாமல், வீண் பொழுதாகக் கழிக்கின்றார்களே!

'பெரியோர்களை அவமதிப்பது மட்டுமன்று அவர்களுடைய தொடர்பு வலியக் கிடைத்த காலத்தும் அவர்களுடைய தொடர்பின் பயனைப் பெறுவதற்கு மனமின்றி, வீண்காலம் கழிப்பது கூடப் பிழைப்பட்ட செயலாகும்' என்பது கருத்து.

 1. அவமதிப்பும், ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான் மதிக்கற் பால - நயமுணராக் 

கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்,

வையார் வடித்த நூலார்.

தாழ்வாக நினைப்பதும், மேலாக நினைப்பதும் ஆகிய இரண்டும் மேன்மக்களாலேயே மதிக்கத்தக்கவை. நற்குணத்தை உணரமாட்டாதவரும், நல்லொழுக்கத்தை மேற்கொள்ளாத வருமான கீழ்மக்களுடைய இழிவான பேச்சையும், சிறப்பித்துப் புகழும், சொற்களையும், தெளிந்தெடுத்த நூற்களைக் கற்றறிந்த பெரியோர்கள் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்

‘அற்பரின் பேச்சுப் புகழ்ச்சியானாலும் இகழ்ச்சி யானாலும் அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ள மாட்டார்கள்' என்பது கருத்து.

 1. விரிநிற நாகம் விடருள தேனும்

உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்

அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார்

பெருமை உடையார் செறின். 

மிகுந்த ஒளியுடைய படத்தைக் கொண்ட பாம்பானது வெடிப்பு நிலத்தினுள்ளே தான் பதுங்கி இருந்தாலும், இடியானது மிகுந்த கோபத்தால் எழுவது போன்ற பேரொலியானது நெடுந்தொலைவினின்று எழுந்தாலும், அதனைக் கேட்டு அச்சமடையும். அதுபோலவே, பெருமை உடையவர்கள் சினங்கொண்டால், அதற்கு ஆளானவர் பிறரால் அழிப்பதற்கும் புகுவதற்கும் அருமையுடைய கோட்டை யினுள்ளே பதுங்கியிருந்தாலும், தப்பிப் பிழைக்கவே மாட்டார்கள்.

'பெரியாரைப் பிழைத்தவர் தவறாமல் கேடடைவர்' என்பது கருத்து. விரிநிறம் பளபளப்பான நிறம். விடர் - நிலப் பிளப்பு. கருமின் - இடி செறுதல் - கோபித்தல்.

 1. எம்மை அறிந்திலார், எம்போல்வார் இல்' லென்று

தம்மைத்தாம் கொள்வது கோளன்று ; - தம்மை

அரியரா நோக்கி, அறனறியும் சான்றோர்

பெரியராக் கொள்வது கோள். 

'எம்மை நீங்கள் அறியமாட்டீர்கள் எம்மைப் போன்றவர் இவ்வுலகில் எவருமே இல்லை' என்று தம்மைத் தாமே உயர்த்துப் பேசிக்கொள்வது ஒரு பெருமையே ஆகாது. அறநெறிகளை அறியும் சான்றோர்கள் தம்மை அருமை யானவர்கள் என்று அறிந்து பெரியோர்களாக ஏற்றுக் கொள்வதே உண்மையான பெருமையாகும்.

இதனால், தற்புகழ்ச்சி செய்து கொள்பவர் பெரியவர் ஆகமாட்டார்கள்; அருமையான குணங்கள் உடையவர்களே பெரியவர்கள் என்பது அறியப்படும். பெரியோர் ஏற்றுக் கொள்பவரே பெரியவர் என்றதால் அவரைப் பழிப்பவர் கீழ்மக்கள் என்பதும் சொல்லப்பட்டது.

 1. நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல

விளியுஞ் , சிறியவர் கேண்மை ; - விளிவின்றி 

அல்கும் நிழல் போல், அகன்ற கன்று ஓடுமே 

தொல்புக ழாளர் தொடர்பு. 

பெரிய கடலின் குளிர்ச்சியான கரையினை உடைய நாட்டின் தலைவனே! அற்பர்களுடைய நட்பானது முற்பகலின் நிலைப் போல முதலில் பெரிதாகத் தோன்றினாலும், வரவரக் குறைந்து போகும். தொன்மையாக வந்து கொண்டிருக்கும் புகழினை உடையவர்களின் தொடர்போ அங்ஙனம் சுருங்காமல், சாயுங்காலத்து நிழல் போலப் பரந்து பரந்து வளர்ந்து கொண்டே போகும்.

'பெரியவர்களுடைய தொடர்பு நாளுக்குநாள் வளருவதாதலால், அவரைப் பழிப்பதின்றி, அவர் தொடர்பைப் பேணவேண்டும்' என்பது கருத்து.

 1. மன்னர் திருவும், மகளிர் எழில் நலமும்

துன்னியார் துய்ப்பர்; தகல்வேண்டா - துன்னிக் 

குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம் 

உழை, தங்கட் சென்றார்க்கு ஒருங்கு. 

அரசர்களுடைய அளவற்ற செல்வ நலத்தையும், பெண்களுடைய அழகின் நன்மையையும், அவர்களை மிகவும் நெருங்கினவர்கள் எவர்களோ அவர்களே அனுபவிப்பார்கள். அதற்கு ஒரு தகுதி வேண்டியதில்லை. எதுபோலவென்றால், நெருக்கமான தளிர்களைக் கொண்டதாகக் கிளைகள் தாழ்ந்து விளங்கும் குளிர்ந்த மரங்கள் எல்லாம், தங்களிடத்திலே அணுகி வந்தவர்களுக்கெல்லாம், தகுதி நோக்காது ஒருப்போலவே நிழல் தருவதுபோன்று என்க.

"பெரியோரும் அனைவரையும் ஒருப்போல ஆதரிப்பவர்; அதனால் அவரையும் எம்மைவிட அவரிடம் அதிக அன்பு காட்டுகின்றனரே' என்பது பழிக்க வேண்டாம்; நின் நெருக்கம் போதாது என்று உணர்க" என்பது கருத்து.

 1. தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்

பிரியப், பெரும்படர் நோய் செய்யும்; - பெரிய 

உலவா இருங்கழிச் சேர்ப்ப யார் மாட்டும் 

கலவாமை கோடி யுறும். 

எதனையும் விளக்கமாக அறிந்து தெளிகின்ற தெளிந்த அறிவு இல்லாதவர்களிடத்திலுங்கூடச் சிநேகமானது பிரிய நேருங்காலத்திலே பெரிதான வருத்தந்தரும் நோயினைச் செய்யும். ஆதலால், பெரிய, வற்றாத கரிய கழிக் கானல்களையுடைய கடற்கரைப் பகுதியின் தலைவனே! எவரிடத்திலும் நட்புடன் கலந்து பழகாமலிருப்பது கலந்தபின் பிரிவதினும் காட்டிலும் கோடி மடங்கு சிறப்புடையதாகும்.

அற்ப அறிவினரைப் பிரியவே அவ்வளவு வருத்தம் ஏற்படும் போது பெரியோரைப் பிரிவது எவ்வளவு துன்பந்தரும்? அதனால் அத்தகையோரிடத்தும் பிழை செய்தல் பிரிவதற்கு ஏதுவுமாகும். ஆதலால், செய்தல் கூடாதென்பது வலியுறுத்தப்பட்டது.

 1. கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்

செல்லாது வைகிய வைகலும் , - ஒல்வ 

கொடாஅது ஒழிந்த பகலும், உரைப்பின் 

படா அவாம், பண்புடையார் கண். 

கற்க வேண்டிய நூற்களைக் கல்லாது கழிந்து போன நாட்களும், பெரியவர்களிடத்திலே சென்று அவருடைய தொடர்பைப் பெறாது கழிந்த நாட்களும், தம்மால் இயன்றவற்றைக் கொடுத்துத் தருமஞ் செய்யாமற் கழிந்த நாட்களும், சொல்லப்போனால், நல்ல பண்பு உடையவர்கள் ளிடத்திலே விளங்காதனவாகும்.

பெரியோர் தொடர்பின் உயர்வைக் காட்டி அவரைப் பிழையாமை கூறப்பட்டது.

 1. பெரியோர் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்கு

உரியார் உரிமை அடக்கம்; - தெரியுங்கால்

செல்வம் உடையாரும் செல்வரே, தற்சேர்ந்தார் 

அல்லல் களைய வெனின். 

'பெரியோர்' எனப்படுபவர்களின் பெருமைக்குரிய குணமாவது, அவர்கள் பெருமை பாராட்டாமல் எளிமையைக் காட்டி நிற்கும் பணிவுடைமையேயாகும். கல்வி முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றிற்கு உரிமையுடையவர்களுக்கு இருக்க வேண்டிய குணம், அதனால் செருக்குக் கொள்ளாமல் அடக்கமுடன் இருப்பதாகும். ஆராய்ந்து பார்த்தால், தம்மைச் சேர்ந்தவர் களின் துன்பங்களை நீக்குவார்களே யானால்தான் பொருள் உள்ளவர்களும் உண்மையிலேயே செல்வர்கள் ஆவார்கள்.

பெரியோர்களின் சிறப்புக் கூறி, அவர்களைப் பழியாமல் உறவு கொள்ள வேண்டுமென்பது விளக்கப்பட்டது.

 1. நல்லினம் சேர்தல்

தாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது; தம்மைச் சேர்ந்த அனைவரும் தீயவர்களாயிருந்தால், தம் நல்ல பண்புகளும் விரைவிலே அழிந்துபோம்; தாமும் தீயவர்களாக நேரும். எனவே நல்லவரோடு சேர்ந்து வாழ்தலும் மிகவும் முதன்மையானதாக ஆன்றோரால் கருதப்படும்.

உன் நண்பர்கள் யாரென்று சொல்லிவிடு; உன்னைப் பற்றி நானே தெரிந்து கொள்வேன்' என்று சொல்வார்கள். இனத்தால் ஒருவன் மதிக்கப்படுதல் என்ற உண்மையை இப்படிச் சொல்வதும் வலியுறுத்தும்.

நட்பு ஆராய்தல் போன்று பின்வரும் அதிகாரங்களினும், நல்லினஞ் சேர்தல் என்னுமிது தனியான தன்மை உடையது. நாம் சேர்ந்த நல்ல கூட்டத்திலே அனைவரும் நமக்கு நண்பர்களாகவோ தெரிந்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. 'இன்னார் இந்த இனத்தைச் சேர்ந்தவர்' என்ற ஒன்றே, அந்த இனத்திற்குரிய பெருமையைத் தந்துவிடும்.

 1. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த 

நற்சார்வு சாரக், கெடுமே வெயின்முறுகப் 

புற்பனிப் பற்றுவிட் டாங்கு. 

நன்மை தருவது இதுவெனவும், தீமை விளைப்பது இதுவெனவும் அறியவியலாத இளம் பருவத்திலேயே, அடக்கமில்லாத தீயவர்களோடு சேர்ந்து திரிந்தும், முறையில்லாத செயல்களைச் செய்தும் நடந்து வந்த குற்றங்களும், நன்மையான வழியினை அறிந்த நல்லவர்களுடன் சேர்வதனால், வெயிலானது மிகுதியாகப் புல்லின் நுனியிலே யுள்ள பனியை புல்லைவிட்டு நீக்கிவிடுவது போவதுபோல நீங்கிப் போய்விடும்.

'நல்லினத்தை சேர்வதால் செய்த குற்றங்களும் இல்லாமற் போகும்' என்பது கருத்து.

 1. அறிமின், அறநெறி, அஞ்சுமின், கூற்றம்

பொறுமின், பிறர் கடுஞ்சொல், போற்றுமின், வஞ்சம் 

வெறுமின், வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும் 

பெறுமின், பெரியார் வாய்ச் சொல். 

எப்பொழுதும் அறநெறியினையே மேற்கொண்டு நடந்து வாருங்கள். கூற்றம் வரும் என்று அஞ்சி நல்லறங்களிலே எப்போதும் ஈடுபடுங்கள். பிறர் கூறுகின்ற கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். வஞ்சகமான எண்ணங்களை எல்லாம் அறவே விட்டு விடுங்கள். தீய செயல்களிலே ஈடுபடுபவரது தொடர்புகளை வெறுத்து ஒதுக்குங்கள். எப்போதும் பெரியோருடைய வாயினின்று வெளிப்படும் சொற்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

'பெரியோர் வாய்ச்சொல் பெறுமின்' என்றதால் நல்லினம் சேர்தல் கூறப்பட்டது.

 1. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும், கேடும்

உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால், - தொடங்கிப் 

பிறப்பின்னாது' என்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க, அம்மா, என் நெஞ்சு ! 

நம்முடன் சேர்ந்தவர்களைப் பிரிவதும், தீர்த்தற்கு அருமையான நோய்களும், மரணமும், உடலைப் பெற்றி ருக்கின்றவர்களாகிய நமக்கு ஒருங்கே வந்து சேர்வனவாம்.

அதனால், மிகப் பழைய காலந்தொட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற பிறப்பானது மிகவும் துன்பந்தருவது என்று அறிந்திருக்கிற பேரறிவினை உடையவர்களை என் நெஞ்சமானது உறுதியாகச் சேரக் கடவதாக!

பிறப்பால் வரும் துயரங்களைக் கண்டறிந்து அறவழிகளில் மளஞ்செலுத்தியிருக்கும் சான்றோரைச் சேர்தல் கூறப்பட்டது.

 1. இறப்ப நினையுங்கால், இன்னாது எனினும்

பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்

            பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும் 

நண்பாற்றி நட்கப் பெறின். 

ஆராய்ந்து பார்க்குங்காலத்திலே, பிறவி எடுத்தலானது மிகவும் துன்பந்தருவதே என்றாலும், அந்தப் பிறவியினுள்ளும், நல்ல பண்புடையவற்றையே செய்ய வேண்டுமென்னும் உள்ளமுடைய பெரியவர்களோடு எப்போதும் சிநேகத்தைச் செய்து, பிரியாமல் அவருடன் சேர்ந்திருக்கப்பெற்றால், அப்படிப் பிறந்த பிறப்பினையும் இன்னாததென்று எவரும் வெறுக்கமாட்டார்கள்.

'பெரியவர்களின் தொடர்பால் பிறப்பும் பயன் உடையதாகும்' என அவருடைய தொடர்பினைக் கொள்ளலின் சிறப்புக் கூறப்பெற்றது.

 1. ஊரங் கணநீர் உரவுநீர்ச் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித், தீர்த்தமாம்:- ஒரும் 

குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்

நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

ஊரிலுள்ள அங்கணங்களினின்றும் வழிந்து செல்லும் கழிவு நீரானது, சிறப்புப் பொருந்தியதொரு ஆற்று நீருடன் சென்று சேர்ந்த காலத்திலே, அதற்குப் பெயரும் அந்த ஆற்றுநீர் என்று சொல்லப்பட்டு வேறானதாகி அது தீர்த்தமாகவும் மக்களால் கொள்ளப்படும். அப்படியே ஆராய்ந்து பார்த்தால் தமக்கு இயல்பாக வந்துள்ள குடிப்பெருமை இல்லாதவர் களுங்கூட, நற்குணங்களையுடைய நல்லவர்களான பெரியோரைச் சேர்ந்த காலத்திலே, குன்றுபோலப் பெருமையுடன் விளங்குவார்கள்.

பெரியோரைச் சேர்தலால் வரும் அளவற்ற பெருமை இதன்கண் உரைக்கப்பட்டது.

 1. ஒண்கதிர் வாண்மதியஞ் சேர்தலால், ஓங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூ உம்

குன்றிய சீர்மையர் ஆயினும், சீர்பெறுவர்

குன்றன்னார் கேண்மை கொளின். 

உயர்ந்ததும், அழகிய இடத்தை உடையதுமான ஆகாயத் திலே விளங்கும், ஒளிக்கதிர்களையுடைய பிரகாசமான சந்திரனைச் சேர்ந்திருப்பதனால், அதன்பாலுள்ள முயற் கறையும் மக்களால் வணங்கப்படும். அதுபோலவே குறைவான சிறப்புகளை உடையவர்களே ஆனாலும், அவர்கள் மலை போன்ற மேன்மையுள்ளவர்களின் தொடர்பினைக் கொள்வார்களானால், தாமும் அவர்களோடு சேர்ந்து மேன்மை அடைவார்கள்.

'முயலுக்கு வணக்கஞ் செலுத்துவது தொழுவோர் கருத்தன்று ஆயினும் அதுவும் தொழப்படும். அதுபோலவே குன்றிய சீர்மையரும் குன்றன்னார் கேண்மை கொளின் சீர்பெறுவர்' என்பது கருத்து.

 1. பாலோடு அளாய நீர் பாலாகும் அல், லது

நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்;-தேரில் 

சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல 

பெரியார் பெருமையைச் சார்ந்து. 

பாலோடு கலக்கப்பட்ட நீரானது பாலுடன் சேர்ந்து தானும் பாலாகத் தோன்றுமேயல்லாமல், நீராகத் தன்னுடைய நிற வேறுபாடு அறியப்பட்டுத் தோன்றாது. அதுபோலவே, ஆராய்ந்து பார்த்தால், நல்ல பெரியோர்களது பெருமையோடு சேர்ந்துவிடுவதனால், அற்பர்களுடைய சிறுமையான குணமும் வெளியே தோன்றாமற் போகும்.

'அவர்களுடைய சிறுமைக்குணம் போகாவிட்டாலுங் கூடப் பெரியவர்களுடைய சேர்க்கையின் காரணமாக, அவர்களும் பெரியோராகப் பிறரால் மதிக்கப்படுவார்கள்' என்பது கருத்து.

 1. கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல்

ஒல்காவே ஆகும், உழவர் உழு படைக்கு;

மெல்லியரே யாயினும், நற்சார்வு சார்ந்தார்மேல் 

செல்லாவாம் செற்றார் சினம் 

தோட்டப் பகுதியைச் சார்ந்த பெரிய தினைப்புனப் பகுதிகளிலேயுள்ள மரக்குற்றியை அடுத்திருக்கும் புல்லானது,

உழவர்களுடைய உழுபடையாகிய கொழுமுனைக்கும் பெயர்த்து எறிய முடியாததாகவே இருக்கும். அதுபோலவே, ஒருவர் தம் அளவிலே வலியற்றவர்களேயானாலும், நல்லினத்தைச் சார்ந்தவர்களானால் அவரைப் பகைத்தவர் களுடைய சினமும் செல்லாமற் போய்விடும்.

 1. நிலநலத்தான் நந்திய நெல்லேபோல், தத்தம்

குலநலத்தால் ஆகுவர், சான்றோர்.-- கலநலத்தைத் 

தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை

தீயினம் சேரக் கெடும். 

நல்லினத்தைச் சார்ந்தவரைப் பகைவரின் சினமும் அழிக்கவியலாது என்று கூறுவதன் மூலம், அவரைச் சேர்தலின் சிறப்புச் சொல்லப்பட்டது. குற்றி - மரம் வெட்டியபின் எஞ்சி இருக்கும் அடிப்பகுதி.

நிலத்தினுடைய வளப்பத்தினாலே வளமுடன் வளர்கின்ற நெற்பயிரைப்போல, மனிதர்களும், தாங்கள் தாங்கள் சேர்ந்திருக்கின்ற கூட்டத்தின் நல்ல இயல்புகளாலே தாமும் சான்றாண்மையை உடையவராவர். கப்பலின் சிறப்பை எல்லாம் கடுங்காற்றானது சென்று அழித்துவிடுவது போலச் சான்றாண் மையாகிய உயர்ந்த பண்பும், தீயகுணமுள்ள கூட்டத்தினர் சேர்வதனால் கெட்டு அழிந்துவிடும்.

'சான்றாண்மை தீயினம் சேரக் கெடும்' என்றதால், அதனைச் சேராமல் நல்லினமே சேரவேண்டும் என்பது சொல்லப்பட்டது.

 1. மனத்தான் மறுவில ரேனுந் தாஞ் சேர்ந்த

இனத்தால் இகழப் படுவர் - புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே

எறிபுனம் தீப்பட்டக் கால். 

தம்முடைய மனத்தின் அளவிலே ஒருவர் குற்றமில்லா தவரே யானாலும், தாம் சேர்ந்த கீழான கூட்டத்தின் காரணமாக இகழப்படுவார். எப்படி யென்றால், வெட்டியழிக்கப்பட்ட காட்டிலே நெருப்புப் பற்றிய காலத்திலே, அக்காட்டிலுள்ள மணங்கமழும் சந்தனமும், உயர்ந்த வேங்கையும் ஆகிய மரங்களும் வெந்து போவதைப்போல என்க.

'இயற்கையிலே குற்றமற்றவர் கூடச் சேர்க்கைக் குறை பாட்டால் குறையுடையவர்களாக இகழப்படுவார்கள்' என்று கூறி நல்லினத்தைச் சேர்வதன் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.

 1. பெருமை

பெருமை என்பது பெருந்தன்மை என்று பொருள்படும். எந்தக் காலத்தினும் மனத்திலே கலக்கங் கொள்ளாமல் செய்ய வேண்டிய அறநெறிகள் முதலியவற்றைச் செய்து, தம் உயர்வை நிலைபெறுத்திக் கொள்ளலாகிய உறுதிப்பாடு இது.

இத்தகைய பெருமைதான் ஒருவனுக்கு வாழ்விலே பலரும் போற்றும் புகழ் வாழ்வையும், தன்னளவிலே தான் சிறந்த பல நல்ல செயல்களைச் செய்தோமென்னும் மன நிறைவையும் தருகின்றது. அதனால், இதனை அடைவதில் மனஞ் செலுத்துவது அனைவரின் கடமை என்பதும் விளங்கும்.

நல்லினஞ் சேர்வதனால் பெருமை வரும்; ஆதலின், அதனைக் கூறிய பின்னர், அப்படிப்பட்ட பெருமையைப் பற்றி அடுத்து விளங்கும் இந்தப் பகுதியை அமைத்துள்ளனர். மன உறுதிப்பாட்டினால் வந்து எய்தும் பெருமையினைப் பற்றி இனி நாம் காண்போம்.

 1. ஈதல் இசையாது; இளமை சேண் நீங்குதலால்

காத லவருங் கருத்தல்லர்; - காதலித்து

''ஆதுநாம்" என்னும் அவாவினைக் கைவிட்டுப் 

போவதே போலும் பொருள் ! 

பொருள்வளம் இல்லாத காரணத்தினால், வந்து இரந்தவர்களுக்கு எதுவும் கொடுத்துதவவும் முடியாது; இளமைப் பருவமானது நம்மைவிட்டு நெடுந்தொலைவு போய்விட்டதனால், நம்மேல் முன்பு காதலுடையவராயிருந்த மகளிரும், இப்பொழுது நம்மைக் கருதுதலும் இல்லாதவரா னார்கள்; ஆதலால், அப்படிப்பட்ட பொருளையும் மகளிரையும் விரும்பி நாம் வாழக்கடவோம் என்ற ஆசையினைக் கைவிட்டுத் துறவு நெறியை நாடிப் போவதே இனி நல்ல காரியம் போலும்!

இல்வாழ்வில் பொருள்வளமும், இளமையுமே பெருமை தருவன; அவை நீங்கின காலத்துத் துறவே பெருமை தருவது என்பது கருத்து.

 1. இற்சார்வின் ஏமாந்தேம்; ஈங்கமைந்தேம்

என்றெண்ணிப்

பொச்சாந்து ஒழுகுவர், பேதையார் - அச்சார்வு 

நின்றன போன்று நிலையா' என வுணர்ந்தார்

என்றும் பரிவது இலர். 

தெளிவான அறிவில்லாதவர்கள், 'நாம் இல்லறமாகிய வாழ்வினை மேற்கொண்டதனால் களிப்பு அடைந்தோம்; இந்த உலகத்திலே எல்லா வகையாலும் நிறைவு உடையவர்களும் ஆயினோம்' என்று எண்ணிப் பின் வருவதை மறந்து நடப்பார்கள். அந்தப் பற்றுகள் எல்லாம் நிலைபெற்றவை போலக் காணப்பட்டுப் பின் நிலைத்திராவாய் அழிந்துபோவன என உணர்ந்த அறிவு உடையவர்கள், எக் காலத்தும் வருத்தம் அடையவே மாட்டார்கள்.

'இல்வாழ்வின் நிலையாமையான தன்மையை உணர்ந்து இளமையிலேயே துறவு பூண்டு ஒழுகுதல் பெருமை தருவதாகும்' என்பது கருத்து.

 1. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து

சிறுமைப் படாதே, நீர் வாழ்மின்-அறிஞராய்;

நின்றுழி நின்றே நிறம் வேறாம்; காரணம் 

இன்றிப் பலவும் உள. 

உலக போகங்களிலே மயக்கம் இல்லாதவர்களாக, உங்களுடைய மறுமை இன்பத்திற்கான நல்ல செயல்களைச் செய்து, ஒரு போதும் சிறுமையான செயல்களிலே ஈடுபடாது. நீங்கள் அறிவுடையவர்களாக வாழ்வீர்களாக. ஏனெனில் முன் இருந்த இடத்திலிருந்தே உடலின் நிறமானது பின்னர் வேறுபட்டுப் போய்விடும். அது மட்டுமன்று; மாறும்படியான காரணமேதும் இல்லாமலேயே வேறுபல மாறுபாடுகள் உண்டாதலும் ஏற்படும்.

உடலின் நிலையாமையும் மாறுபாடும் உணர்ந்து, மறுமை இன்பத்தை நாடி, அதற்கான செயல்களிலே ஈடுபடுவதே பெருமை என்பது இது.

 1. உறைப்பருங் காலத்தும் , ஊற்றுநீர்க் கேணி

இறைத்துணினும், ஊராற்றும்' என்பர்; - கொடைக்கடனும்

சாஅயக் கண்ணும், பெரியார் போன் மற்றையார் 

ஆஅயக் கண்ணும்

அரிது. மழை பெய்தலானது அருகிப் போய்விட்ட காலத்தினும் ஊற்றினால் நீரையுடைய கேணியானது இறைத்துக் குடித்தாலும் ஊரிலுள்ளவர்களைக் காப்பாற்றும் என்பார்கள். அதேபோலத் தானம் செய்தலாகிய கடமையும், வறுமையினால் தளர்ந்து போய்விட்ட காலத்தினுங் கூடப் பெரியோர்களால்  தகுந்த அளவு செய்யப்படும். அந்தப் பெரியோர்களைப் போல, சிறியவர்கள் தம் செல்வம் பெருகி வருகின்ற காலத்தினும் கூடப் பிறருக்கு உதவுதல் அரிதாகும்.

இதனால் கொடைக் கடனை என்றும் மறவாது போற்றும் பெரியவர்களின் பெருமை கூறப்பட்டது.

 1. உறுபுனல் தந்து, உலகு ஊட்டி, அறுமிடத்தும்

கல்லூற் றுழியூறும் ஆறே போற், செல்வம் 

பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும், சிலர்க்காற்றிச் 

செய்வர், செயற்பா லவை. 

மழை வளமானது செழிப்புற்றிருந்த காலத்திலே மிகுதியான நீரைக் கொண்டு தந்து உலகத்தாரை எல்லாம் உண்ணச் செய்து, அந்த நீர்வளமானது அற்றகாலத்தும் தோண்டும் ஊற்றுக்களிலே ஊறிச் சுரந்து உலகு ஊட்டும் ஆற்றினைப் போலப் பெரியவர்கள், தம்முடைய செல்வங்களை எல்லாம் பலருக்கும் கொடுத்து உதவியதனால் தாம் செல்வமிழந்து வாடிய காலத்தினும், தம் சக்திக்கு ஏற்றபடி சிலருக்காயினும் கொடுத்துச் செய்யும்படியான உதவுதற்

செயலிலே ஈடுபடுவார்கள்.

கொடைக் குணம் உடைய பெரியோரின் பெருமை கூறப்பட்டது.

 1. பெருவரை நாட! பெரியார்கண் தீமை

கருநரைமேற் சூடேபோல் தோன்றும் ;- கருநரையைக் 

கொன்றன்ன இன்னா செயினும், சிறியார்மேல் 

ஒன்றானும் தோன்றா கெடும்.

பெரிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! பெரியவர்களிடத்தே தோன்றிய தீமையானது. பெரிய வெள்ளை எருதின் மேலே இட்ட சூட்டின் வடுப்போல என்றும் மாறாமல் நன்கு வெளிப்படத் தோன்றும். அந்தப் பெரிய வெள்ளை எருதைக் கொன்றதைப் போன்ற தீய செயல்களைச் செய்தார் களானாலும், கீழ் மக்களிடத்தே தோன்றும் ஒரு குற்றமானாலும் வெளிப்படத் தோன்றாமல் அழிந்து போய்விடும்.

'பெரியோர் சிறுவடுவும் தம்மேற்படாதவாறு ஒழுக்க நெறியிலே நிலைத்திருக்க வேண்டும்' என்று கூறுவதன் மூலம், அத்தகையோரின் பெருமை கூறப்பட்டது.

 1. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்

பசைந்த துணையும், பரிவாம் ;- அசைந்த 

நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண் 

பகையேயும் பாடு பெறும். 

சிறுமையான குணங்களே பொருந்திய, நல்ல இயல்பே இல்லாதவர்களிடத்திலே சிநேகித்த அளவு அத்துணைக்கும் துன்பமேயாகும். நிலை தடுமாறிய தீய செயல்களை விளையாட்டாகவும் செய்யவிரும்பாத நல்ல அறிவுடையவர் களிடத்திலே கொண்ட பகைமையுங்கூடப் பெருமையைத் தருவதாகும்.

கீழோர், நண்பர்க்கும் தீங்கிழைக்கும் பண்பு கொண்டவர்கள், அறிவுடையவரோ, பகைமையையும் பொறுக்கும் இயல்பினர். அதனால், அவர்கள் தொடர்பே பெருமைதரும் என்பது கூறப்பட்டது.

 1. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து

ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம் 

சலவருட் சாலச் சலமே, நலவருள் 

நன்மை , வரம்பாய் விடல்! 

மென்மையான தன்மைகளையுடைய பெண்களிடத்திலே நாம் மென்மைத் தன்மை உடையவர்களாகவே நடந்து கொள்ளல் வேண்டும். வலிமைமிகுந்த பகைவரிடையே செல்லும் போது, அந்த மென்மைத் தன்மையைக் கைவிட்டு விட்டு, எமனும் அஞ்சும்படியான பயங்கரத்தன்மை உடையவர் களாகவே நாமும் செல்லல் வேண்டும். இப்படியே எல்லாக் காரியங்களிலும் வஞ்சகமாகப் பேசுபவர்களிடத்திலே வஞ்சகமாகப் பேசி அவர்களை வெல்வதற்கும், நற்குண முடையவர்களிடத்திலே நன்மை பொருந்த நடந்து அவர்களின் அன்பைப் பெறுவதற்கும் ஏற்ற தன்மையே, தமது பழக்கத்தின் வரம்பாக அமைந்து இருக்க வேண்டும்.

இப்படி நடப்பதே பெருமை என்பது கருத்து.

 1. கடுக்கி, ஒருவன் கடுங்குறளை பேசி

மயக்கி விடினும், மனப்பிரிப்பொன் றின்றித் 

துளக்கம் இலாதவர், தூய மனத்தார்

விளக்கினுள் ஒண்சுடரே போன்று. 

ஒருவன் தன்னுடைய முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக்கொண்டு, மற்றொருவன் மீது கடுமையான கோட்களைச் சொல்லித், தம்மை மயக்கிவிட்டாலுங் கூட அதனால் தம்முடைய மனத்திலே எவ்விதமான வொரு வேறுபாடும் இல்லாமல் கலக்கமடையாதவர்கள் எவரோ, அவர்களே விளக்கினிடத்தே விளங்கும் ஒளியுடைய சுடரைப் போன்று ஒளியுடன் விளங்கும் தூய்மையான உள்ளத்தை உடையவர் ஆவார்கள்.

புறங்கூறுவார் பேச்சைக் கேட்டுத்தாம் ஒருவித மனமாற்றமும் அடையாதவர்கள் பெருமை உடையவர் என்பது கருத்து.

 1. முற்றுத்தம் துத்தினை நாளும் அறஞ்செய்து

பிற்றுத்துத் துத்துவர், சான்றவர்; - அத்துத்து 

முக்குற்றம் நீக்கி, முடியும் அளவெல்லாம் 

துக்கத்துள் நீக்கி விடும். 

பெரியவர்கள், தாம் முதலிலே உண்ணும்படியான உணவினை, நாள்தோறும் பிறருக்குத் தானமாகக் கொடுத்து விட்டுப் பின்னரே தாம் உண்ணுதற்குரிய உணவினை உண்பார்கள். அங்ஙனம், அவர்கள் தாம் உண்பதற்கு முன்பே கொடுத்த உணவுத் தானமானது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்றங்களால் வரும் பாவங்களையும் போக்கி, அவர்கள் வாழ் நாள் முடியும் வரையும் அவர்களைத் துக்கத்தினின்று நீக்கியும் விடுவதாகும்.

இதனால் பசிக்கு உணவளிப்பதன் பெருமை சொல்லப் பட்டது.

 1. தாளாண்மை

'தாளாண்மை' என்பது உயிருக்கு உறுதி தருகின்ற நல்ல செயல்களைச் செய்வதிலே ஒருவன் தளராத முயற்சி உடையவனாக இருப்பதைப்பற்றிக் கூறுவதாகும்.

வாழ்வின் பலப்பல காலங்களையும், தன் மயக்க உணர்வின் காரணமாக உயிருக்கு நன்மை தராத பலவற்றினும் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவனே சாதாரண மனிதன். அங்ஙனமன்றி, உயிருக்கு நிலையான நன்மை தருவன இவைதாம் என உணர்ந்து, அவற்றில் மட்டுமே ஈடுபாடு உடையவராகிப் பிறவற்றை விலக்குவதற்கான உண்மை அறிவினைக் கொண்டவரே, உண்மையில் தாளாண்மை உடையவராவர்.

அங்ஙனம், முயற்சிகளிலே ஈடுபடுவதற்கும் ஒரு தளராத உறுதிப்பாடு வேண்டும். அந்த முயற்சிகள் சிதறாமலும், இடையே பழுதுபடாமலும், கட்டுப்பாட்டுடன், நிறைவெய்தச் செய்யும் ஆற்றலும் வேண்டும். இத்தகைய ஆற்றலே, ஆண்மை ' எனச் சிறப்பாகக் கூறப்பட்டது.

 1. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ் போற்

கேளீவ துண்டு, கிளைகளோ துஞ்சுப

வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் 

தாளாளர்க் குண்டோ , தவறு

கொள்ளுவதற்கு உரிய நீரினை, மிகுதியாகக் கொள்ளமாட்டாமற் சிறிதளவே கொள்ளுகின்ற தன்மையினை யுடைய ஒரு குளத்தின் கீழ்ப் பகுதியிலேயுள்ள நெற்பயிரானது, அக்குளத்தில் நீருள்ள மட்டுமே வளமுடன் விளங்கி நீர் வறண்டதும் தானும் வாடிப் போய்விடுவது போல, உறவின் முறையார்கள் கொடுப்பதைப் புசித்துக் கொண்டு, அப்படிக் கொடுப்பவர்களுக்கு ஓர் உறுப்பாக வாழ்பவர்கள், அவர்களுக்கு வறுமை சேர்ந்த காலத்தில் தாமும் வருந்தி மடிவார்கள். அவ்வாறன்றி, வாளின் சுழற்சி போல் ஆடுகின்ற ஆட்டக்காரிகளின் கண்பார்வை புடை பெயர்ந்து நிற்பது போலத் தம் முயற்சியிலே கவனமாய் விழிப்புடன் முயற்சியைக் கையாள்பவர்களுக்குத் தொடங்கிய செயல் நிறைவேறாமற்போவது என்பதும் உண்டோ ?

 1. ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்

காழ்கொண்ட கண்ணே, களிறணைக்கும் கந்தாகும்

வாழ்தலும் அன்ன தகைத்தே, ஒருவன்றான் 

தாழ்வின்றித் தன்னைச் செயின்

காற்றிலே துவண்டு அசைந்து கொண்டிருக்கிற சிறிய கொம்பினையுடையதாகி வழியிலே நின்ற சிறு செடியும், தான் வயிரங்கொண்டு மரமாகிய காலத்திலே, யானையையும் கட்டும்படியான வலிய கட்டுத்தறியாக விளங்கும். ஒருவன் தன்னைத் தான் நின்ற நிலையினின்றும் கீழ்ப்பட்டுப் போதல் இல்லாமல், தன்னை முயற்சியுடையவனாகச் செய்து கொண்டானானால் அவனுடைய வாழ்க்கையும் அத்தகைய உறுதியினை உடையதாகவே விளங்கும்.

'அவன் வாழ்விலே முதலில் தளர்வு தோன்றினாலும், நாளடைவிலே அது உறுதியுடையதாகி விடும்' என்பது கருத்து.

 1. உறுபுலி ஊன் இரை இன்றி ஒருநாள்

சிறுதேரை பற்றியுந் தின்னும் - அறிவினால் 

காற்றொழில் என்று கருதற்கா கையினால் 

மேற்றொழிலும் ஆங்கே பிகும். 

மிகுந்த வலிமையுடைய புலியானது தனக்கு உரிய இறைச்சியாகிய உணவு இல்லாமல் வருந்தி, ஒருநாள் சிறிய தேரையைப் பற்றித் தின்னவும் செய்யும். ஆனது பற்றி, ஒருவன் தனக்குக் கிடைத்த யாதொரு தொழிலையும் காலாற் செய்வதற்குரிய அற்பமான செயல்தானே யென்று தன் அறிவினால் கருதாமலிருப்பானாக. அவ்விடத்திலேயே, அவனுடைய முயற்சியினால் மேலான தொழிலும் அப்படியே கிடைக்கலாம் அல்லவா?

'செயல்களை அற்பமென்றும் உயர்வென்றும் கருதாமல் சூழ்நிலைக்கு ஏற்றபடி முயற்சியுடன் செய்பவனே உயர்வடைவான்' என்பது கருத்து.

 1. இசையாது எனினும், இயற்றியோர் ஆற்றால்

அசையாது, நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால் 

கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப

பெண்டிரும் வாழாரோ மற்று

அலைகள் வந்து தாழைகளை மோதி அசையச் செய்து கொண்டிருக்கும் அழகிய கானற் சோலைகளையுடைய குளிர்ந்த கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! செய்யத் தொடங்கிய ஒரு செயலானது எளிதிலே கைகூடாது என்றாலும் அதனை ஒருவகையாலும் தளராமல் முயற்சியுடன் செய்து நிலை நிறுத்துவதே ஆண்மையாகும். செய்ய எடுத்த காரியமானது எளிதாக வந்து கைகூடினால் பெண்களுங்கூட அவற்றை எளிதாக நிறைவேற்றி மேன்மை அடைய மாட்டார்களோ?

'முடியாதெனப் பலரும் சொல்லும் செயலையும் முயற்சியுடன் செய்து முடிக்கும் உறுதியே தாளாண்மை' என்பது கருத்து.

 1. நல்ல குலமென்றும், தீய குலமென்றும்

சொல்லளவு அல்லாற் பொருளில்லை;-தொல்சிறப்பின் 

ஒண்பொருள் ஒன்றோ ? தவம், கல்வி, ஆள்வினை

என்றிவற்றான் ஆகும், குலம். 

நல்ல குலம் எனவும் தீய குலம் எனவும் சொல்லப் படுவதெல்லாம் சொல்லளவாக மாத்திரமே இருப்பதல்லாமல், அச் சொற்களுக்குரிய சிறந்த பொருள் ஏதும் இருப்பதாகக் காணவில்லை. பழைமையான சிறப்பினையுடைய தூய்மையான பொருள் மட்டுமோ, அத்துடன் தவம், கல்வி, ஆள்வினை என்று சொல்லப்படும் இவைகளாலும் கூடி அமைவதே நல்ல குலமாகும்.

'நல்ல குலம் என்பது ஆள்வினையுடையதாயிருக்கும் குலமேயாகும்' என்று, தாளாண்மையின் சிறப்புக் கூறப்பட்டது.

 1. ஆற்றுந் துணையும், அறிவினை உள்ளடக்கி

ஊக்கம் உரையார் உணர்வுடையார்; - ஊக்கம் 

உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் 

குறிப்பின்கீழ்ப் பட்டது, உலகு.

தாம் ஒரு செயலை முற்றவும் செய்து முடிக்கும் அளவும், அதனைச் செய்வதற்குத் தமக்குள்ள அறிவுத் திறனைத் தம்முள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு, தம்முடைய முயற்சியினைப் பற்றிப் பிறருக்கு அறிவுடையவர்கள் சொல்லித் திரியவே மாட்டார்கள். பிறருடைய மனவலிமையினை அவர்களுடைய உறுப்புக்களின் நிலைமையினால் ஆராய்ந்து அறிகின்ற அறிவுநுட்பம் உடையவர்களின் ஏவுதலுக்கு அடங்கியதாக இருப்பதே இந்த உலகமாகும்.

 1. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை

மதலையாய், மற்றதன் வீழுன்றி யாங்குக்

குதலைமை தந்தைகண் தோன்றில், தான்பெற்ற 

புதல்வன் மறைப்பக் கெடும். 

கறையானால் அரிக்கப்பட்டுவிட்ட ஆலமரத்தை, அதனின்றும் தோன்றி இறங்கியுள்ள விழுதானது தாங்கும் தூணாக நின்று தாங்கி நிற்பது போலத், தளர்ச்சி உடைமை தந்தையினிடத்து உண்டானால், அவன் பெற்ற புதல்வன் தன்னுடைய முயற்சியினால் அதனை மறைக்க, அது நீங்கிப் போகும்.

'தன்னையே யன்றித் தன் முன்னோர்களையும் பெருமைப் படுத்த வல்லது தாளாண்மை' என்பது கூறப்பட்டது.

 1. ஈனமாய், இல்லிருந்து, இன்றி, விளியிலும்

மானந் தலைவருவ செய்பவோ - யானை 

வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் 

அரிமா மதுகை யவர்

யானையின் புள்ளிகளையுடைய முகத்தினைப் புண்ணுண் டாகச் செய்யும் கூர்மையான நகங்களையும், வலிமையுடைய கால்களையும் உடைய சிங்கத்தினைப் போன்ற வலிமை உடையவர்கள், தம் தொழில் முயற்சிகளிலே குறைபாடு உடையவர்களாய், வீட்டிலேயே இருந்து கொண்டு ஒரு பொருளும் இல்லாமல் இறக்க நேரிட்டாலுங்கூட, மானம் இழக்க நேரும்படியான காரியங்களைச் செய்யவே மாட்டார்கள்.

‘எடுத்துக் கொண்ட முயற்சிகள் தடையுற நேர்ந்தாலும் அதனையே முயன்று முடிக்க முயல்வார்களே யல்லாமல், கீழான காரியங்களில் சிறந்தோர் ஈடுபட மாட்டார்கள்' என்பது கருத்து.

 1. தீங்கரும்பு ஈன்ற திரள்கால் உளையலரி

தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு , - ஓங்கும் 

உயர்குடி யுட்பிறப்பின் என்னாம், பெயர்பொறிக்கும் 

பேராண்மை இல்லாக் கடை

இனிமையான கரும்பானது ஈன்ற, திரட்சியான கால்களையுடைய குதிரையின் பிடரிமயிர் போன்ற பூவானது, தேனோடுங் கூடியதாகக் கமழ்கின்ற நறுமணத்தை இழந்ததைப் போலத், தன்னுடைய பெயரை நிலைநிறுத்துகின்ற பெரிய முயற்சியுடைமையானது இல்லாத விடத்து, ஒருவன் மிகவும் புகழுடைய உயர்ந்த குடியிற் பிறந்ததனால் தான் என்ன பயன்?

உயர் குடியிலே பிறந்தாலும் முயற்சியற்றவர்க்குப் பெருமை இல்லை என்பது கருத்து.

 1. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்

கருனைச் சோறு ஆர்வர் கயவர்; - கருனையைப் 

பேரும் அறியார், நனிவிரும்பு தாளாண்மை 

நீரும் அமிழ்தாய் விடும். 

ஒருவித முயற்சியும் இல்லாத கீழ்மக்கள் பெருமுத்தரையர் என்பவர் மிகவும் விருப்பமுடன் அளிக்கின்ற பொரிக்கறியோடுங் கூடிய சோற்றினை உண்டு காலங்கழிப்பார்கள். பொரிக்கறியைப் பேரும் அறியாதவர் , மிகவும் விரும்பிச் செய்த தம் முயற்சியின் பயனாகப் பெற்று உண்ட நீரும், அம் முயற்சிச் சிறப்பினால் அமுதமாக விளங்குவதாகும்.

‘தன் முயற்சியின்றி இரந்து உண்ணும் உணவினும், தன் முயற்சியால் கிடைக்கும் நீரே சிறப்புடையதாகும்' என்பது கருத்து.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.