மனிதன், தனித்து வாழுகின்ற தன்மை உடையவன் அல்லன். ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழுகின்ற பாசம்' என்ற பிணைப்பினால் பலருடன் கூடி வாழுகின்றவன்தான் மனிதன். அப்படி, மனிதன் கூடிவாழும் குணம் உடையவனாதலால்தான், உலகிலே நாடும் அரசும் என்ற கூட்டு அமைப்புகள் பலவும் எழுந்தன.
இயற்கையிலே இப்படிக் கூடிவாழுகின்ற இயல் புடையவனான மனிதனிடம், அப்படிக் கூடி வாழ வேண்டிய ஒரு நெருக்கடியும் இல்லாமற் போகவில்லை.
எதிலும் குறைபாடு உடையவனாக விளங்கும் மனிதன், தன்னிடமுள்ள குறையைப் போக்கிக்கொள்ள மற்றவனின் உதவியை நாடுகிறான். இப்படி அவனும் அடுத்தவனை நாடிச் செல்ல நட்பு' என்ற ஒருவகைப் பாச உறவும் வளர்கிறது.
துன்பம் நேர்ந்தவிடத்து உற்றுழி உதவியும், இன்பம் பெருகியவிடத்துக் கூடிக் களித்தும் உதவுவதற்கு நண்பர்கள் வேண்டும். அத்தகைய நண்பர்களிலே, உறவின் முறையாரின் தொடர்பினைப் பற்றிக் கூறுவது இந்தப் பகுதி.
- சுற்றம் தழால்
'உறவு முறையார்' என்போர், தாய்வழி தந்தை வழி வரும் உறவினர்களும், கொள்வினை கொடுப்பினை பற்றி வரும் உறவினர்களும் ஆவர். பொதுவான நண்பர்களைக் காட்டிலும், இவர்கள் தம்முடைய இயல்பான உறவுப்பிணிப்பின் காரணமாக அதிகமாக நட்புச் செய்வதற்கு உரியவராவர்.
வாய்ப்பும் வளனும் பெற்ற ஒருவன், தான் மட்டும் இன்புறுவதிலேயோ, அல்லது தன் இல்லத்தவரான மனைவி மக்கள் மட்டும் இன்புறுவதிலேயோ கவனஞ் செலுத்துவது போதாது. அவன், தன்னைச் சேர்ந்த உறவின் முறையினர் எல்லாருமே துன்பத்தின் நீங்கியவர்களாக இருக்கும் வண்ணம், தன்னாலியன்ற அளவுக்கு அவர்களுக்கு உதவியும், அவர்களைக் காத்தும் வருதல் வேண்டும்.
தன் குடும்பம், தன் சுற்றம், தன் நட்பு, தன் ஊர், தன் நாடு என்று படிப்படியாக அகற்சி பெற்றுக் கொண்டே போகும் உறவுப் பிணிப்பிலே, இரண்டாவதாக விளங்குவதுதான் சுற்றம் பேணுதல் ஆகும்.
- வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்,
கவா அன் மகன்கண்டு தாய்மறந் தாஅங்கு ,
அகா அத் தான் உற்ற வருத்தம் உசாஅத் தன்
கேளிரைக் காணக் கெடும்.
கருவுற்றிருக்கிற காலத்திலே உண்டாகின்ற இயல்பான பலவித நோவுகளையும், அந்த நோவுகளாலும் பிறவற்றாலும் வருகின்ற வருத்தங்களையும், கருவுயிர்த்துக் குழந்தையைப் பெறுகின்ற பிரசவ காலத்தே உண்டாகும் நோவுகளையும், தன் மடியின் மீது தன் மகனை இருத்தியதைக் கண்ட அளவாலேயே ஒரு தாயானவள் மறந்துவிடுவாள். அதனைப் போலவே பலவகையான தளர்ச்சிகளாலும் ஒருவன் அடைந்த துன்பங்கள் எல்லாம், அதனைப்பற்றிக் கேட்கவரும் தன் உறவினரைக் கண்ட அளவானே அவனை விட்டு நீங்கிப் போய்விடும்.
'மகனைக் கண்டதும், தான் முன்னர் அடைந்த நோவுகளைத் தாய் மறப்பது போலவே, உறவினரைக் கண்டதும் ஒருவன் பெற்றிருந்த எல்லா வகைத் தளர்ச்சிகளும் மறைந்து போகும். அந்த அளவுக்கு உறவுப் பாசம் இருக்க வேண்டும்' என்பது கருத்து.
- அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம் போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
வெயிலானது நெருப்பாகக் காய்கின்ற பொழுதிலே, அந்த வெம்மைக்கு ஆற்றாதவையாகத் தன்னை வந்து அடைந்தவர் களுக்கு எல்லாம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒரே தன்மையாக நிழல் தந்து உதவிக் காத்து நிற்கின்ற நிழல் தரும் மரத்தைப் போல, உறவினர் வறுமையால் வாடி வெதும்பித் தம்மை வந்து அடைந்தபோது, அவர்கள் அனைவரையுமே, அவர்களுக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் காட்டாமல் ஒரே சமநிலையிலே தாங்கிக் காத்தல் வேண்டும். அத்துடன் பழங்கள் நிரம்பிய மரத்தை போலப், பலரும் தன் பயனைப் பெற்று உண்டு களிக்கத்தான் அதனால் வருத்தமுற்றும், அதனைத் தான் பெற்ற தகுதியாகக் கருதி வாழவேண்டும். இவையே, 'நல்ல ஆண்மகன்' என்று சொல்பவர்க்கெல்லாம் உரிய சிறந்த கடமையாகும்
நிழல் மரம்போல இருப்பிடமும், பழமரம் போல உணவும் தந்து பேணவேண்டும் என்பது கருத்து. நிழன் மரம் தான் துயருறாது உதவும்; பழமரம் தான் துன்புற்றும் உதவும். அதுபோலவே இருநிலையினும் உதவுதல் வேண்டும் என்பதும் கருத்தாகும்.
- அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர் - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும், இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு?
மலையடுக்குகள் பலவற்றைக் கொண்ட நாட்டிற்கு உரியவனே! பெரியவர்கள், தம்மை நாடிவந்து புகலாக அடைந்தவர்களுக்கு உதவி, அவர்களை உயர்த்த மாட்டோம் என்று ஒருபோதும் சொல்லவே மாட்டார்கள். அடுத்தடுத்துப் பெரிதான காய்கள் மிகப் பலவாகக் காய்த்தபோதினும், தன் காய்களைத் தாங்காது தள்ளிவிடும் மரக்கிளை எதுவுமே இல்லை அல்லவா? அதுபோலத்தான், பெரியவர்களும், எவரையும் தம்மால் தாங்கமுடியாது என்று தள்ளி விடுவதில்லை .
'மென்மையான சிறு கொம்பும், தன் பெரிய காய்கள் என்றதால் தாங்கும் சக்தியுடையதாவது போலத், தாம் தளர்ந்த நிலையினும், பெரியோர் வாடிவரும் தம் சுற்றத்தினருக்கு உள்ளன்புடன் உதவுவார்கள்' என்பது கருத்து.
- உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா ,
சிலப்பகலாம் சிற்றினத்தார் கேண்மை ;-நிலைதிரியா
நிற்கும், பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்,
ஒற்கம் இலாளர் தொடர்பு.
உலகத்தாரெல்லாம் அறியும்படியாக, முற்ற முழுக்கக் கலந்தவர்களாகப் புறத்தே விளங்கினாலும் கூடச் சிறுமைக் குணம் உடையவர்களுடைய உறவெல்லாம், சில நாட்களின் அளவே நிலைத்து நிற்கும். தம்முடைய தகுதியிலே மாறுதல் இல்லாது, நல்ல குணங்களினின்றும் பிறழாது நிலைபெற்றவர் களாயிருக்கும் பெரியோர்களுடைய தொடர்போ என்றால், யோகநெறியிலே நிலைத்து நிற்கின்றவரின் உறுதிப்பாட்டைப் போல, என்றும் நிலைமாறாது ஒரு சீராக நிலை பெற்றிருப்பதாகும்.
ஒற்கம்-நற்பண்புகளினின்றும் பிறழ்தல், நெறி-யோக நெறி. தீர-முற்ற முழுக்க. 'புறத்தே கலந்தவர் போலக் காட்டலாற் பயனில்லை; உறுதியான உள்ளத்துடன் நட்புச் செய்வதே சிறப்பு, சிற்றினத்தார் நட்பு அத்தன்மையுடையது அன்று; அதனால் அதைக் கைவிட்டுப் பெரியோரின் தொடர்புகளையே அனைவரும் நாடவேண்டும்' என்பது கருத்து.
- இன்னர்; இனையர்; எமர் பிறர்' என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரே, யார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.
'இவர் நமக்கு இன்ன வகையான தொடர்பு உடையவர் இவர் இப்படிப்பட்ட தன்மை உடையவர்; இவர் நமக்கு வேண்டியவர்; இவர் நமக்கு வேண்டாதவர்' என்றெல்லாம் வேறுபடுத்திப் பேசும் பேச்சுக்கள் யாதொன்றும் இல்லாதவர் களாக விளங்கும் தன்மையினாலே, துன்பத்தால் வருந்தியவராக வந்த கற்றத்தார் அனைவருடனும் ஒன்று பட்டு, அவர்களுடைய வருத்தத்தைப் போக்குபவர்கள் யாவரோ அவர்களே, எவரிடத்தும் மேன்மக்களாகின்ற தன்மை உடையவர்களா வார்கள்.
'தம்மை நாடிவந்த உறவினரின் தகுதி உறவு வேறு பாடுகளை மனங்கொள்ளாது, அனைவருக்கும் ஒருப்போலவே உதவுதல் வேண்டும்' என்பது கருத்து. தொலை மக்கள் - வளம் நீங்கித் தளர்ந்த மக்கள்.
- பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்,
உப்பிலிப் புற்கை, உயிர்போற் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானும் இனிது.
பொற்பாத்திரத்திலே இட்டுள்ள, புலிநகம் போன்ற வெண்மையான சோற்றைச், சர்க்கரையும் பாலும் கலந்து, அன்பில்லாதவருடைய கையினின்றும் பெற்று உண்பதைக் காட்டினும் தப்பும் இல்லாத புல்லரிசிக் கூழினை, உயிர்போல அன்பு காட்டும் உறவினரிடத்தே எந்தப் பாத்திரத்திலேனும் பெற்று உண்பதுவே இனிதாயிருக்கும்.
அக்காரம் சர்க்கரை, அமர்தல் - அன்பு காட்டுதல். உணவின் இனிமை அளிப்பவரின் அன்பின் தகுதியை நோக்கியே அமைவதாகும்; அதனால், அன்புடனேயே அனைவருக்கும் உதவுக' என்பது கருத்து.
- நாள் வாய்ப் பெறினும், தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் ;-கேளாய்;
அபரானப் போழ்தின் அடகிடுவா ரேனும்,
தமராயார் மாட்டே இனிது.
பசியுள்ள முற்பகற் காலத்தில் தானே பெற்றாலும் தமக்கு அன்பில்லாதவர்களுடைய வீட்டிலே உபகாரமாகக் கொடுக்கப்பட்ட விரும்பத்தக்க பொரிக்கறியோடு கூடிய உணவும், வேம்பு போற் கசப்புடையதாகவே இருக்கும். பிற்பகற்காலமான காலமற்ற காலத்திலே, இலைக்கறியோடு கூடிய உணவையே இடுவார்களேனும், தமக்கு அன்புடைய உறவினர்களிடத்திலே பெற்று உண்பதோ இனிதாயிருக்கும்.
நாள்வாய் - காலையும் ஆம். அபரானப்பொழுது. நண்பகலுக்குப் பின்வரும் பொழுது. காலத்தால் அன்பற்றவர் களிடமிருந்து பெறும் பெரிய உதவியை விடக் காலங் கடந்தேனும் அன்புடையாரிடமிருந்து பெறும் சிறிய உதவியே இனிதாகும்' என்பது கருத்து.
- முட்டிகை போல முனியாது, வைகலும்,
கொட்டியுண் பாரும், குறடுபோல் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல, எரியும் புகுவரே,
நட்டார் எனப்படு வார்.
சம்மட்டி என்னும் கருவியைப் போல, மீண்டும் மீண்டும் சென்று தொடர்பு கொள்வதை வெறுக்காது, நாள்தோறும் பிறர் பொருளை அடித்தடித்துப் பெற்று உண்பவர்களும், அப்படிக் கொடுத்தவர்களுக்குத் துன்பம் வந்த காலத்து உலைக்கள வெம்மை அணுகியதும் பற்றிய இரும்பை அதன்பால் விட்டுவிட்டுத் தான் மீளும் குறட்டைபோல, அவர்களைக் கைவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் உண்மையான நண்பர்கள் என்று சொல்லப்படுபவர்களோ அந்த உலையினுள்ளே புகுந்து அப்போதும் உதவுகிற சுட்டுக் கோலைப் போலத் தம் நண்பர்களின் வாட்டத்திலும் பிரியாது, அவருடன் கலந்து, அவருக்கு உதவியாயிருப்பர்.
முட்டிகை - சம்மட்டி குறடு - பற்றுங் குறடு. சுட்டுக் கோல் - உலையாணிக்கோல் கொட்டியுண்பது அவர் தமக்குத் தரும்படி அவரைத் தம் வசமாக்கிப் பெற்று உண்பது.
- நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன்று உண்டோ - இறுமளவும்
இன்புறவ இன்புற்று எழீஇ, அவரொடு
துன்புறுவ துன்புறாக் கால்?
நல்ல மணமுள்ள பூக்களால் தொடுக்கப்பெற்ற தலைமாலையினை அணிந்திருப்பவளே! நண்பர்கள், தம்முடன் நட்புப் பூண்டவர்களுக்கு, அவரும் தாமும் இறந்துபோகும் காலம் வரையினும் இன்பமடையத் தக்கவற்றிற்கு அவரோடு தாமும் இன்பப்பட்டு நடந்து, துன்பமடையத் தக்கவற்றிற்கு அவரோடு தாமும் துன்பப்பட்டு நடவாமற்போனால், மறுமையிலும் அத்தகையோர் செய்யத்தக்க நல்ல செயல்தான் ஏதாவது ஒன்று உள்ளதோ?
'இம்மையிலே தான் அவர் நற்பண்புடன் நடக்க வில்லையே? மறுமையிலாவது நடக்கலாமல்லவோ? என்றால், மறுமையிலும் அவர் அப்படி நடவார் என்றனர். இதனால், நண்பர்களின் ஒழுக்க முறைமை கூறப்பட்டது. இங்கே நட்பு, சுற்றத்தாரின் உறவுப் பாசம்.'
- விருப்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
வெருக்குக் கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை,
என்போடு இயைந்த அமிழ்து.
அன்பில்லாதவர்களுடைய வீட்டிலே, தனியே இருந்து உண்ணுகின்ற, பூனைக் கண்போல விளங்கும் சூடான பொரிக்கறியோடு கூடிய உணவும், வேம்பு போலக் கசப்பு உடையதேயாகும். ஆனால், தம்மீது விருப்பமுடையவரும், தம்மோடு ஒத்தவருமான ஒருவருடைய வீட்டிலே உண்ணப்படும், தெளிந்த நீரினையுடைய குளிர்ச்சியான புல்லரிசிக் கூழானது, உடலிற்குப் பொருந்தின அமுதமாக விளங்கத் தக்கதாகும்.
வெருக்கு - வெருகுப்பூனை. 'தம் தகுதிக்கு மேற்பட்டவர்களை நாடி உண்பது கூடாது' என்பது கருத்து இதனால் சுற்றத்தினரைச் சமமாகக் கருதி அன்புடன் உபசரிக்கவேண்டிய கடமை கூறப்பட்டது.
- நட்பு ஆராய்தல்
'நண்பர்கள்' என்று சொல்லப்படுபவர் பலப்பல வகையினராக நம்முடன் தொடர்பு கொள்பவர்கள்.அவர்களுள், 'நல்ல நட்பினர் எவர்? என்று ஆராய்ந்து அறிந்து, அத்தகையவர்களை மட்டுமே நண்பர்களாகக் கொள்வதும், பிறரை எல்லாம் ஒதுக்கிவிடுவதுமே ஒருவனுக்குச் சிறந்ததாகும்.
நல்ல நண்பர்கள் என நினைத்துப் போலிகளோடு அறியாதே கொள்ளும் உறவினாலே ஏற்படும் பல தீங்குகளையும் கருதியாவது, நண்பர்களைக் கொள்வதிலே நாம் மிகவும் விழிப்புடையவர்களாக இருக்கவேண்டும்.
இன்ப துன்பங்களிலே சமமான பங்குகொண்டு, உற்றுழி உதவியாக நிற்பவரே உண்மையான நட்பினர் ஆவர். அஃதன்றி, நல்ல காலத்திலே கூடியிருந்தும், துன்பம் வந்து நேர்ந்த காலத்திலே கைவிட்டும் போய் விடுகிறவர்கள், நண்பர்கள் ஆகவே மாட்டார்கள்.
- கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை, எஞ்ஞான்றும்,
குருத்திற் கரும்புதின் றற்றே; குருத்திற்கு
எதிர்செலத் தின்றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.
நூல்களிலே சொல்லப்பட்டுள்ள உட்பொருள்களை உணர்ந்தவர்களாகக், கற்றற்கு உரியனவெல்லாம் கற்றுத் தேர்ந்தவர்களுடைய தொடர்பானது, எப்போதும் கரும்பைக் குருத்திலே தொடங்கி அடிநோக்கித் தின்பது போன்றதாக இருக்கும். எக்காலத்தும் இனிய தன்மை இல்லாதவர்களுடைய தொடர்போவென்றால், குருத்திற்கு எதிரே செல்லும்படியாக, அடியிலிருந்து கரும்பை நுனி நோக்கித் தின்பதைப் போல்வதாகும்.
‘கற்றவர் நட்பு வரவர இனிக்கும், கல்லாதவர் நட்பு வரவரக் கசக்கும்' என்று கூறிக் கற்றவர்களின் நட்பையே கொள்ளுதல் வேண்டும்' என்பது வற்புறுத்தப்பட்டது.
- இற்பிறப்பு எண்ணி, இடைதிரியார் என்பதோர்
நற்புடைக் கொண்டமை அல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட
மனமறியப் பட்டதொன் றன்று.
பொன்னிறமுள்ள நீர்ப் பெருக்கானது பெருகிவரப், பறவை இனங்கள் அதற்கு அஞ்சி ஓடுகின்ற பூங்குன்ற நாட்டை உடையவனே! ஒருவருடைய நல்ல குடிப்பிறப்பினைக் கருதி, அவர் இடையிலே மாறுபடமாட்டார்கள் என்று சொல்லப்படுவதான ஒரு நல்ல தன்மையைத் , தாம் நட்புச் செய்வதற்கு ஏதுவாகக் கொண்டதே அல்லாமல், அவருடைய மனத்தின் தன்மை அறியப்பட்டே நட்புச் செய்தனர் என்பது, இவ்வுலகத்தில் ஒருபோதும் இல்லையாகும்.
‘ஒருவருடைய மனநிலையறிந்தே நட்புச் செய்தல் இயல்வதன்று; ஆதலால் அவர் நற்குடிப் பிறந்தவரா என்பதை அறிந்து அவருடன் நட்புச் செய்தல் வேண்டும்' என்பது கருத்து.
- யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
கேன்மை கெழீஇக் கொளல் வேண்டும் :- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்; எறிந்தவேல்
மெய்யதா, வால்குழைக்கும் நாய்.
பலகாலம் பழகிப்பழகித் தெரிந்திருந்தாலும் தன் பாகனையே சமயத்திற் கொன்றுவிடுவது யானை. ஆனால், தன்னை உடையவனாயிருந்தவன், எறிந்த வேலானது தன் உடலிலே தைத்திருக்கவும் தன் வாலைக் குழைத்து அவனிடம் அன்பு காட்டிக் கொண்டே நிற்பது நாய். அதனால், யானையைப் போன்றவர்களது நட்பினைக் கைவிட்டு, நாய் போன்றவர்களது நட்பையே ஒவ்வொருவரும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
'தன்னைப் பலகாலம் பேணிக்காத்தவன் என்றறிந்தும் கொல்லும் யானை போல, நண்பரையே அழிக்கும் தீயவர் உறவு கூடாது; வேல் உடலிலே தைத்திருக்கவும் வால் குழைத்து நிற்கும் நாய்போலத் துன்பம் தாமே இழைத்த காலத்தும் நட்பினை மறவாது அன்பு காட்டும் ஒருவரது சிநேகமே கொள்ளத்தக்கதாகும்' என்பது கருத்து.
- பலநாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ தந்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு?
பல நாட்களும் அருகிலேயே இருப்பவர்களானாலும் உள்ளத்திலே சில நாட்களாகிலும் ஒன்றுபடாதவர்களோடு, அறிவுடையவர்கள் நட்புச் செய்யவே மாட்டார்கள். தம் உள்ளத்திலே அன்பாற் பிணிக்கப் பட்டிருப்பவர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பினை அவர்கள் பலநாட்களும் தம்மைவிட்டு நீங்கியிருக்கின்றனர் என்று கருதி, யாரும் விட்டுவிடுவது இவ்வுலகிலே உளதாகுமோ?
'உளங்கலந்த நண்பர்கள் பல நாட்களாகப் பிரிந்திருக் கிறார்கள் எனக் கருதி, எவரும் அவர் நட்பை வெறுத்து விடுவதில்லை. பல நாளும் அருகிலேயே இருந்தாலும் உள்ளம் கலவாதவரோடு அறிவுடையவர் நட்புக் கொள்வதும் இல்லை' என்பது கருத்து. உள்ளங்கலத்தலே நட்பு என்பது பொருள்
- கடையாயர் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று, இட்டஞான் றிட்டதே
தொன்மை உடையார் தொடர்பு.
கீழ்த்தரமானவர்கள் நட்புச் செய்வதிலே ஒருநாள் உபசரணை தவிர்த்தாலும் பயன் கெடுகின்ற கமுகு மரத்தைப் போன்றவர்கள். மற்றை நடுத்தரமானவர்களோ, இடையிடை உபசரணை இல்லாமற் போனால் பயன் கெடும் தென்னை மரத்தைப் போன்றவர்கள். முதற்றரமானவர்களாகிய பழமைப் பண்புகளிலே சிறந்தவர்களுடைய நட்போ எண்ணுதற்கும் அருமையான பனைமரத்தைப் போன்று நட்ட அக்காலத்தின் தன்மை போன்றே, உபசரணை செய்தாலும் செய்யா விட்டாலும் ஒரே தன்மையாக என்றும் பயன் தருவதாயிருக்கும்.
‘முதற்றரமானவரோடு கொள்ளும் நட்பே சிறந்தது' என்பது கருத்து.
- கோட்டுப்பூப் போல மலர்ந்து, பிற் கூம்பாது,
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி, தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து, பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.
மரக்கிளைகளிலே பூத்திருக்கும் மலர்களைப் போல, முன்மலர்ச்சி பெற்றது பின் குவிதல் என்றில்லாமல், முதலில் விரும்பியது போலவே என்றும் மாறாத விருப்பமுடைய தாயிருப்பதே, நட்பினை முறையே பேணிக் காத்தல் ஆகும். தோண்டப்பட்ட நீர்நிலையிலேயுள்ள நீர்ப் பூக்களைப் போல, முதலிலே முகமலர்ந்து முகம் குவிக்கின்றவர்களை விரும்பு கிறவர்களும், அவர்களோடு நட்புச் செய்கிறவர்களும் எவருமே இவ்வுலகத்தில் இல்லை.
'முதலிலே கொண்ட நட்பு என்றும் மாறாமல் இருக்க வேண்டும்; அதுவே உண்மையான நட்பு' என்பது கருத்து. கேடு - கொம்பு; கிளை கூம்புதல் - குவிதல். கயம் - குளம், நீர்நிலை.
- கழுநீருள் காரட கேனும், ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் , - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும், மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
அரிசியைக் கழுவிய கழுநீரிலே சமைத்த கறுத்த இலைக்கறியே யானாலும், ஒருவன் சிறப்புடையதாகக் கருதி ஏற்றுக் கொண்டால் அதுவே அவனுக்கு அமுதமாக விளங்கும். சிறந்த முறையிலே தாளிதஞ் செய்யப்பெற்ற கறிவகைகளோடும், துவையல்களோடும் கூடிப் பெற்ற வெண்மையான சோறே என்றாலும், அன்பில்லாதவர் கையிலிருந்து பெற்று உண்பது என்பது எட்டிக்காயைத் தின்பதுபோலக் கசப்பாகவேயிருக்கும்.
'உணவின் சுவையும் தருபவரின் நட்புத் தகுதி பற்றியே கருதியே கொள்ளப்படுவதாகும்' என்பது கருத்து, குய்-தாளிதம்.
- நாய்க்காற் சிறுவிரல் போல் நன்கணியர் ஆயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல் வேண்டும், செய்
வினைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
நாயின் காலிலேயிருக்கின்ற சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கமுடையவராக விளங்கினாலும், ஈயின் காலளவாகவாவது உதவாதவர்களுடைய நட்பு என்ன பயனுடையதாகும்? வயல்களை விளையப் பண்ணுகின்ற வாய்க்காலைப் போல, ஒருவர்க்கு உதவுபவர்களது தொடர்பானது தொலைவிலுள்ள தென்றலும் அதனையே தேடிப்போய்ப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
'நெருக்கமுடையவராயிருந்தும் சிறு உதவியும் செய்யாதவரை வெறுத்து, எட்டியிருந்தாலும் உதவும் பான்மையுடையவரின் நட்பினைத் தேடிப் பெறுக' என்பது கருத்து
- தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால்; அளிய
இகழ்தலின் கோறல் இனிதே; மற்று இல்ல
புகழ்தலின் வைதலே நன்று.
தெளிவான அறிவு இல்லாதவர்களுடைய நட்பினைக் காட்டிலும் அவர்களுடைய பகைமையே ஒருவனுக்கு நன்மை தருவதாகும். எந்த மருந்தாலும் போகாத அரிய நோயிலே கிடந்து துன்புறுவதைக் காட்டிலும், சாதலே ஒருவனுக்கு நன்மை தருவதாகும். ஒருவனது நெஞ்சம் புண்படும் படியாக இகழ்ந்து பேசுதலைவிட, அவனைக் கொன்று விடுதலே இனியதாகும். ஒருவனிடம் இல்லாத குணங்களை எல்லாம் இருப்பதாகக் கூறிப் பொய்யாகப் புகழ்ந்து பேசுவதைவிட, அவனைவைதலே நன்மை தருவதாகும்.
'நட்புக் கொள்பவர் இவற்றை எல்லாம் ஆராய்ந்து ஏற்றவாறு நடந்து கொள்ளல் வேண்டும்' என்பது கருத்து.
- மரீஇப் பலரொடு பன்னாள் முயங்கிப்,
பொரீஇப், பொருள் தக்கார்க் கோடலே வேண்டும்;
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா ,
மரீஇய, பின்னைப் பிரிவு.
அநேகம் பேருடன் சேர்ந்து பல நாட்களாகக் கலந்து பழகி, மனநிலையிலே ஒப்பாகிப் பொருளாகக் கருதும் ஒரு தகுதி உடையவர்களையே நட்பினராகக் கொள்ளுதல் வேண்டும். சினந்து எழுந்து உயிரைப் போக்குகின்ற பாம்பினோடும் கூட முதலிலே பழகிவிட்டால், பின்னர் விட்டுப் பிரிவதென்பது மிகவும் துன்பந்தருவதாயிருக்கும் அல்லவோ?
'தீயோரின் நட்பை முதலிலேயே விலக்கிவிட வேண்டும், நீடித்துப் பழகினால் அதனை விடுவது எளிதாயிராது; அதனால், அப்படிப் பழகாமலிருப்பதே சிறந்ததாகும்' என்பது கருத்து.
- நட்பிற் பிழை பொறுத்தல்
'தகுதியுடைய நண்பர்கள்' என்று எவ்வளவுதான் ஆராய்ந்து ஆராய்ந்து உறவு கொண்டாலுங்கூட, அவரும் அறிந்தோ அறியாமலோ நம் மனம் புண்படும்படியான சிலபல பிழைகளைச் செய்து விடுதலும் இயல்பேயாகும். அப்படி அவர் பிழை செய்த காலத்திலே, சினந்து அவரை வெறுப்பதோ, அன்றிக் கடிவதோ நல்ல நட்பின் பண்பன்று. அவருடைய மனநிலை மாற்றத்துக்கு வருந்தி, அப்பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த நட்பாகும்.
நட்பு நிலையாக வளரவேண்டுமானால், இந்த நட்பிற் பிழை பொறுத்தல் என்னும் பண்பு மிகவும் இன்றியமையாததாகும். மனிதன் பலகாலமும் பல்வேறு வகையான உணர்ச்சிகளின் பிடிகளில் சிக்குண்டு, நிலை தடுமாற்றம் அடைகின்றவன். அதனால் அவன் பிழை செய்தலும் ஓரொரு சமயம் இயல்பே. அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பே சிறந்த நட்பின் இலக்கணமாகும் என்பது இது.
- நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை,
அல்லார் எனினும், அடக்கிக் கொளல் வேண்டும்,
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
'நல்லவர்கள்' என்று நாம் மிகவும் விரும்பி நண்பராகக் கொண்டவர்களை, அவர்கள் அப்படிப்பட்ட நல்லவர்கள் அல்லாதவராகவே இருந்தாலும், அதனைப் பொறுத்து உள்ளத்திலேயே அடக்கிக் கொள்ளுதல் வேண்டும். நெல்லுக்கும் உமி உண்டு; நீருக்கும் நுரையுண்டு; பூவிற்கும் புன்மையான புறவிதழ்கள் உண்டு. அதுபோலவே நல்லவர்களிடமும் சில குற்றங்குறைகள் இருக்கவே செய்யும் என்று கருதுதல் வேண்டும்.
'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்ற கருத்தைக் கூறுவது இது. இதனால் நட்பினரின் குற்றங் குறைகளைப் பொறுத்தல் கூறப்பட்டது.
- செறுத்தோறு உடைப்பினும், செம்புனலோடு ஊடார்,
மறுத்தும் சிறைசெய்வர். நீர்நசைஇ வாழ்நர்;
வெறுப்ப வெறுப்பச் செயினும், பொறுப்பரே
தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு.
அடைக்க அடைக்க அணையை உடைத்துக் கொண்டு போனாலும், நல்ல நீரோடு பிணக்கங் கொள்ளாதவர்களாக, நீர்வளத்தை விரும்பி வாழும் உழவர்கள் மீண்டும் அதனை அணையிட்டுத் தேக்கிப் பயன் பெறுவார்கள். அதுபோலவே, தாம் விரும்பி நண்பராகக் கொண்டவர்களுடைய தொடர் பினையும், அவர் வெறுக்கும்படியான செயல்களை அடுத்தடுத்துச் செய்தாலும் அவரோடு பிணங்காது, பொறுத்துக் கொண்டே பேணுவார்கள் அறிவுடையோர்.
'நீரால் வயலிலே விளைவினைப் பெருக்கிக்கொள்ள விரும்புபவர் போலவே, நட்பினால் நன்மை பெற விரும்புபவரும், நட்பினரின் பிழைகளைப் பொறுத்தல் வேண்டும்' என்பது கருத்து.
- இறப்பவே தீய செயினும், தன் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ?- நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட
ஒருவர்பொறை யிருவர் நட்பு.
தன்னுடன் நட்புக் கொண்டவர்கள், மிகுதியான தீமைகளையே தனக்குச் செய்தனரானாலும், அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியுடைய ஒரு செயல் அல்லவோ? நல்ல நிறமுள்ள கோங்கின் பூவிலே, அழகுள்ள வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கின்ற, உயரமான மலைகளையுடைய நாட்டையுடையவனே ஒருவர் பொறுத்துக் கொள்வது இருவருடைய நட்புக்கும் துணையாகின்றது அல்லவோ?
'இருவர் நட்பு' என்றது, கலந்த இருவரும் ஒருவருக் கொருவர் நட்பாகும் நிலையைக் காட்டியதாகும். பிழை பொறுக்காவிடில் இருபாலும் நட்புக் கெடும் என்பது கருத்து.
- மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப
விடுதற்கு அறியார் இயல்பிலரேல், நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.
மோதி மடிந்து வீழ்கின்ற அலைகள் கொணர்ந்து தந்த ஒளியுடைய சிறந்த முத்துக்களை, மிகுந்த விரை வினையுடைய கப்பல்கள் கரைகளிலே அலையச் செய்து தள்ளுகின்ற கடற்கரைக்கு உரியவனே! நட்பினை விடுவதற்கு அரியவராயிருப்பவர்கள் இயற்கையான நற்குணம் இல்லாதவரானால், அவர் நம் மனத்தை எரிப்பதற்கு மூட்டிய நெருப்பாவார் என்று அறிவாயாக.
நண்பர்களின் பிழைச் செயலால், அறிஞரது உள்ளம் வருந்தும் தன்மை கூறிப் பிழை பொறுத்தலின் உயர்வை விளக்குவது இது.
- இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும் -
பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
துன்பங்களையே எந்நாளும் செய்தாலும் விட்டுப் பிரியத்தக்கவர் அல்லாதவர்களைப் பொன்னைப் போலக் கருதிப் போற்றிக் கொள்ளுதலே வேண்டும். எது போல என்றால், பொன் முதலிய நற்பொருள்களுடனே நல்ல வீட்டையும் சிதைத்துவிட்ட நெருப்பையும், வெறுத்து ஒதுக்காது விரும்பி, நாள்தோறும் தம் வீட்டிலே யாவரும் உண்டாக்குவது போல என்க,
'நெருப்பு ஒரு காலத்து வீட்டைச் சுட்டதாயினும், அதன் பயனை அறிந்து, அதனை வெறுக்காமல் மீண்டும் தம் வீட்டு அடுப்பிலே மக்கள் மூட்டுகின்றதைப் போல, நட்பினரின் பிழைகளையும் மறந்து நட்பைப் பேணவேண்டும்' என்பது கருத்து.
- இன்னா செயினும், விடுதற்கு அறியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ? - துன்னருஞ்சீர்
விண்குத்தும் நீள்வரை வெற்ப! களைபவோ,
கண்குத்திற் றென்றுதம் கை?
பிறவிடத்துச் சேர்தற்கு அருமையான சிறப்பினை உடைய, வானத்தை முட்டுவது போன்று உயரமாக வளர்ந்துள்ள மூங்கில்களை உடைய மலைகளுக்கு உரிய தலைவனே! கண்ணைக் குத்திவிட்டதென்று யாரும் தம் கையினை நீக்கிப் போடுவார்களோ! அது போலவே விடுவதற்கு அரியவராகப் பழகிவிட்டவர்களை அவர்கள் தமக்கு துன்பமே செய்தாலுங்கூட, அவருடன் சேராமல் அவரை நீக்கி விட்டுவிடுதல் தகுதி உடையதாகுமோ? (ஆகாது என்பது கருத்து.)
- இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்,
கலந்து பழிகாணார், சான்றோர் - கலந்தபின்,
தீமை எடுத்துரைக்கும் திண்ணறிவு இல்லாதார்,
தாமும், அவரிற் கடை.
விளங்குகின்ற நீரினைக் கொண்ட குளிர்ச்சியான கடற்கரையினை உடைய தலைவனே ! 'தமக்குத் துன்பமே செய்தாலும் சான்றோர்கள், ஒருவருடன் கலந்தபின்னர், அவருடைய பழியினைக் கருதிப் பார்க்கவே மாட்டார்கள். ஒருவரோடு பழகிய பின்னர், அவருடைய தீய செயல்களை வெளிப்படுத்துக் கூறுகின்ற திண்மையான அறிவு இல்லாதவர்கள், அப்படித் தீமை செய்தவர்களினும் மிகவும் இழிவானவர்கள்" என்று அறிவாயாக.
‘நண்பரின் குற்றங்களைப் பிறரிடம் கூறிப் பழிப்பவர் மிகவும் இழிந்தவர்' என்பது கருத்து.
- ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்,
நோதக்கது என்னுண்டாம், நோக்குங்கால்? - காதல்
கழுமியார் செய்த, கறங்கருவி நாட!
விழுமிதாம், நெஞ்சத்துள் நின்று.
ஒலிக்கும் மலையருவிகளையுடைய நாட்டின் தலைவனே! "அயலார் செய்தது மிகவும் தீயதே என்றாலும், ஆராய்ந்து பார்க்குமிடத்தே, அவரை வெறுக்கத் தக்கதாக என்ன இருக்கிறது? அன்பு மிகுந்தவர் ஓரொரு சமயத்திலே செய்த தீங்குகள், மனத்துள்ளாகவே அடங்கி நிலைபெற்று நின்றுவிட்டால், அதுவும் சிறந்ததாகப் பின்னர் விளங்கிவிடும்” என்று அறிவாயாக
‘அத்தீங்குகளைப் பிறரிடம் கூறாது நெஞ்சிலே அடக்கிக் கொண்டால் அதனைச் செய்தவர், தாமே பின்னர் மனம் வருந்தித் திருந்திக் கூடுவர்' என்பது கருத்து.
- தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தார் ஆயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்!
'தம்மைச் சேர்ந்தவர்கள்' என்று, தாமே விரும்பி நண்பராக்கிக் கொள்ளப்பட்டவர்களைத் தம் உறவிற்குத் தகுதியற்றவராயினமையைத் தாமே பின்னர் அறிந்து கொண்டனரேனும், அவரைத் தம்மைச் சேர்ந்த பிறரினும் சிறப்பாக மதித்து, அவரிடம் காணப்பட்ட தமரல்லாத இயல்பினைத் தம் உள்ளத்தினுள்ளேயே அடக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
'நட்பிற்குத் தகுதியற்றவர் என்று தோன்றினும், அதனை வெளிப்படக் காட்டாமல், அவரைப் பெரிதாக மதிப்பது போலக் காட்டி, அவரது பண்பற்ற செயல்களை உள்ளத்தினுள்ளேயே அடக்கிக் கொள்ளுதல் வேண்டும், புறங்கூறிப் பழித்தலாகாது' என்பது கருத்து.
- குற்றமும், ஏனைக் குணமும், ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க,
அறைகடல் சூழ் வையம் நக!
ஒருவனை நண்பனாகக் கொண்டதன் பின்னர், அவனுடைய குற்றங்களையும் மற்றைக் குணங்களையும் யான் தேடித்தேடித் திரிந்து கொண்டிருந்தேன் என்றால், நட்புச் செய்தவனுடைய இரகசியத்தைக் காக்காமல் விட்டவன் செல்கின்ற கதியிலே ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகம் எல்லாம் கைகொட்டிச் சிரிக்கும்படியாகச் சென்று, யானும் துன்புறுவேனாக
'நட்பிற் பிழைபொறுப்பேன்' என்று, ஒருவன் உரைத்த சூள் இது. இப்படியே ஒவ்வொருவரும் தமக்குள் உரைத்து உறுதி கொள்ளுதல் வேண்டும்.
- கூடா நட்பு
'கூடா நட்பு என்பது பொருத்தமற்ற சிநேகம் ஆகும். இருவர், தம் உள்ளத்துள் கலந்த கேண்மை உடையவராகித், தகுதியுடன் நட்பாயிருப்பதே உண்மையான நட்பாகும். அப்படியில்லாமல், உள்ளக் கலப்பு இல்லாதே, வெளியே நட்பினர் போல நடிப்பது எல்லாம் பொருந்தாத நட்பாகவே கருதப்படும்.
மேலும், குடிப்பிறப்பு, குணம், ஒழுக்கம், உள்ளம், அறிவுடைமை என்ற இவற்றாலும், மற்றும் பிறபிற தகுதியுடைமைகளாலும் பொருந்தாதவர்களுடன் கொள்ளும் நட்பும் கூடா நட்பே யாகும்.
நட்புச் செய்வது, உற்றுழி உதவியும் இன்பத்தும் துன்பத்தும் இணைந்து நின்றும், ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கும் பொருட்டாகவே அல்லாமல் வெற்றுரையாடி வீண்பொழுது போக்குவதற்கு மட்டுமே அன்று. இதனை மனத்துட் கொண்டே நட்பினரை ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நட்பில் பிழைபொறுத்தல் சிறப்பு என்றாலும், அதற்காகப் பொருந்தாதவருடன் நட்புக்கொண்டு, அவர் செய்யும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே போகவேண்டும் என்பதில்லை. அதனால், கூடாநட்பின் இயல்புகளைக் கூறுவதன் மூலம், அதனை விலக்குவது பற்றி இந்தப் பகுதியுள் கூறப்படுகிறது.
- செறிப்பில் பழங்கூரைச் சேறணை யாக
இறைத்தும், நீர் ஏற்றும், கிடப்பர் - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல் வரை நன்னாட!
தங்கருமம் முற்றுந் துணை.
கருமையான மலைகளிலே இருந்தும் அருவிகள் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நீர்வளத்துடன் கூடிய மலைகளைக் கொண்ட, நல்ல நாட்டிற்கு உரியவனே! கட்டுக் கோப்பு இல்லாமற்போன பழைய கூரையினையுடைய வீட்டிலே, மழைக்காலத்திலே, உள்ளே பெருகிய மழை நீரினைச் சேற்றையே அணையாக இட்டுத் தடுத்து வெளியே இறைத்துவிட்டும், மேன்மேலும் விழுந்து கொண்டிருக்கும் நீரைத் தரையிலே விழவொட்டாமல் பற்பல ஏனங்களிலே ஏந்தியும், தம்முடைய காரியமானது முழுவதும் நிறைவேறும் வரை, அந்த வீட்டுக்காரனுக்குச் சிலர் துணையாயிருப்பார்கள்.
கட்டுக் கோப்பற்ற பழைய கூரைவீட்டை முதலிலேயே செப்பஞ்செய்து உதவாமல் தம் காரியம் முடியும் வரை, ஒழுக்குக் காலத்து உதவி செய்பவர், அவனுடைய துன்பத்தை நீக்கும் உளங்கலந்த நட்பினர் ஆகார். அது பற்றி அத்தகையோரின் நட்புப் பொருந்தா நட்பு என்பது கூறப்பட்டது.
- சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்,
மாரிபோன் மாண்ட பயத்ததாம்;- மாரி
வறந்தக்காற் போலுமே, வாலருவி நாட
சிறந்தக்காற் சீரிலார் நட்பு.
வெண்மையான அருவிகள் பலவற்றையுடைய நாட்டிற்கு உரியவனே! சீர்மையான பண்பு உடையவர்களுடைய நட்பானது, மேம்பாடுடைய சிறப்பினதாக மழை வளத்தைப் போல மாட்சிமைப்பட்ட பயனை உடையதாகும். ஆனால், நீர்மை இல்லாதவர்களுடைய நட்பு மிகுதியாகுமானால், அது மழை வறண்டு போன கோடை காலத்தைப் போன்று பயனற்றதாகவும் துன்பம் தருவதாகவுமே விளங்கும்.
இதனால், சீர்மை இல்லாதவருடன் நட்புக் கொள்வது பொருந்தா நட்பு என்பது கூறப்பட்டது. சீர்மை - சிறந்த குணம்.
- நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால்; - நுண்ணூல்
உணர்விலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.
நுட்பமான அறிவுடையவர்களுடனே சேர்ந்து, அவர்களுடைய அறிவுப்பயனை அனுபவிக்கும் தன்மையானது விண்ணுலக இன்பத்தையே ஒத்ததாக விரும்பப்படும் தன்மையினை உடையதாகும். நுட்பமான நூல்களை அறிந்த அறிவினை இல்லாதவர்கள் ஆகிய பயனற்றவர்களோடு நட்புக் கொள்ளுதல் நரகத் துன்பங்களுள் ஒன்றாகவே இருக்கும்.
இதனால், நுண்ணூல் உணர்வில்லாதவரோடு கொள்ளும் கேண்மை கூடா நட்பு என்பது கூறப்பட்டது.
- பெருகுவது போலத் தோன்றி, வைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் , - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட!
பந்தம் இலாளர் தொடர்பு
அருகாமையான இடங்களிலே எல்லாம், உயர்ந்த சந்தன மரச்சோலைகளை உடைய, மலைச்சாரல்கள் மிகுந்த நாட்டிற்கு உரியவனே! உள்ளத்திலே நட்பென்னும் பிணிப்பு இல்லாதவர் களுடைய தொடர்பானது, வைக்கோலிற் பற்றிய நெருப்பைப் போல, முதலிலே பெருகுவது போலத் தோன்றினாலும், ஒருபோதும் பயன்படாமல், இறுதியில் தானாகவே கெட்டுவிடும்.
உள்ளப் பிணிப்புக் கொள்ளாதவர் தொடர்பு கூடா நட்பு என்பது கூறப்பட்டது. நந்தும் - கெடும். வை - வைக்கோல்.
- செய்யாத செய்தும் நாம்' என்றலும், செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும். - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும், அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.
தம்மால் செய்ய இயலாத காரியங்களைத் தாம் செய்து விடுவோம் என்று சொல்லுதலும், தம்மாற் செய்யக் கூடியவற்றைக் காலத்தாற் செய்யாது காலந்தாழ்த்திக் கொண்டு வீண்பொழுதாகக் கழித்தலும் ஆகிய இவ்விரண்டும், உண்மையாக உலக இன்பங்களை அனுபவிக்கும் தன்மைகளை வெறுத்த துறவு வாழ்வினர்க்குங்கூட, அந்த அளவானே துன்பந்தருகின்ற தன்மையையே கொடுப்பனவாம்.
'செய்யக் கூடாததைச் செய்வோம் என்று கூறுபவர் ஆசை காட்டி மோசம் செய்வர்; செய்யக் கூடியதை உரிய காலத்துச் செய்யாதவர் உண்மை அன்பினராகார்; இத்தகையோர், தொடர்பு கூடாது என்பது கருத்து
- ஒரு நீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்,
விரிநீர்க் குவளையை ஆம்பல் ஒக் கல்லா;
பெருநீரார் கேண்மை கொளினும், நீரல்லார்
கருமங்கள் வேறு படும்.
ஒரே தண்ணீரிற்றானே பிறந்து, ஒன்றாகவே வளர்ச்சி அடைந்த காலத்துங்கூட, மலர்ந்து விளங்கி மணங்கமழுகின்ற நீலோற்பல மலர்களை ஆம்பல் மலர்கள் ஒருபோதும் ஒப்பாவதில்லை. அதுபோலவே, மிகுதியான நற்குணம் உள்ளவர்களுடைய நட்பைப் பெற்றிருந்தாலும், குணம் அற்றவர்களுடைய செயல்கள், எப்போதும் வேறுபட்டவை களாகவே விளங்கும்.
"குணவான்களோடு கூடியிருக்கிறாரே" என்று நினைத்துங் "குணமற்றவரை நட்பினராகக் கொண்டு விடக்கூடாது” என்பது கருத்து.
- முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
பருவ முதிர்ச்சி அடையாத சின்னஞ் சிறு பெண் குரங்கு, தனக்கு முன்னரே செயலில் ஈடுபட்டுள்ள தன் தந்தையைப், பயற்ற நெற்றைக் கண்டாற்போல விளங்கும் தன் கைவிரல்களால் அப்பாலே தள்ளிவிட்டுத் தான் குற்றியைப் பெயர்த்து எடுத்துக் கொண்டிருக்கும் படியான, மலைகளை உடைய நாட்டின் தலைவனே! மனத்தால் ஒன்றுபட்டு ஒற்றுமை கொள்ளாதவர் களுடைய நட்பானது என்றும் துன்பத்தையே தருவதாகும்.
‘மன ஒற்றுமை கொள்ளாதார் நட்பு கூடாநட்பு என்பது கூறப்பட்டது.
- முட்டுற்ற போழ்தின் முடுகி; என் ஆருயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க!
நெடுமொழி வையம் நக
என்னுடைய நண்பன் ஒருவன் முட்டுப்பாடு அடைந்த பொழுதிலே, விரைந்து என் அருமையான உயிரையும், அந்த நட்புச் செய்த அவனுக்காகத் தந்து உதவாமற் போனேனாயின், மிகுந்த பேர்பெற்ற உலகத்திலுள்ளோர் எல்லாரும் !
நகையாடும் படியாக, 'நண்பனின் பாதுகாவலிலுள்ள அவன் மனையாளைக் கற்பழித்தவன் செல்லும் கொடிய தீக்கதியிலே யானும் செல்வேனாக
- ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து.
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்,
புல்லறிவி னாரொடு நட்பு.
மனை - மனைவி. கட்டு - கற்பாகிய உறுதி. நண்பனுக்கு ஆபத்தில் உதவாதவன் தீக்கதி சேர்வான் என்பதைக் கூறி, அத்தகையோர் நட்புக் கூடா நட்பு என்பது சொல்லப் பட்டது.
தேன் கூடுகள் மலிந்த நல்ல வளம் பொருந்திய மலைகளையுடைய நாட்டின் தலைவனே! நட்பினால் வரும் நன்மையை அறிகிற தன்மை உடையவர்களது தொடர்பைக் கைவிட்டு, அற்பமான புத்தியை உடையவர்களோடு கொள்ளும் நட்பானது, பசுவினிடம் உண்டாகிற நெய்யினைப் பெய்து வைத்துள்ள பாத்திரத்தினுள், அந்த நெய்யைக் கொட்டி விட்டு வேம்பைச் சேர்ந்த நெய்யாகிய வேப்ப எண்ணெயைப் பெய்துவைப்பது போல்வதாகும்.
‘நல்ல நெய்யை இழந்து, கசக்கும் வேப்ப எண்ணெயைக் கொள்வது போன்றது என்று கூறிப் புல்லறிவினாரோடு கொள்ளும் நட்புக் கூடா நட்பு என்பது வற்புறுத்தப்பட்டது.
- உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்னா,
பருகற்கு அமைந்தபால் நீர் அளா யற்றே;
தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல், நாகம்
விரிபெடையோ டாடி, விட் டற்று.
பெருமைக்குரிய சிலபல நற்குணங்களை உடையவனாகிய ஒருவனிடத்திலே, ஊராருக்கு உதவுகிற இயல்பு இல்லாமல் இருத்தல் பருகுவதற்கு என்று அமைந்த பாலிலே நீர் கலந்திருப்பது போல ஆகும். அறிவு உடையவரும் கொடியவர் களோடு சேர்ந்தவர்களாகி விடுவது, நாகப் பாம்பானது பெட்டை விரியன் பாம்போடு கலந்து உயிர் நீங்கினாற் போன்றதாகும்.
'நாகம் விரிபெடையொடு சேர்ந்தால் சாகும்' என்பார்கள். அதுபோலவே, நல்லவரும் தீயோருடன் சேர்ந்தால் கெடுவர் என்பது கூறித் தீயோருடன் நட்புக் கொள்வது கூடா நட்பு என்பது சொல்லப்பட்டது.