Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

3. இன்ப இயல்

புலன்கள் தாமே உணர்வு உடையன அன்று. அவற்றான் விளையும் பயன்களை எல்லாம் இன்பமாகவும் துன்பமாகவும் கருதி உணருகின்ற தன்மை, மனத்திற்கே உள்ளதாகும்.

‘இன்பம்', இவ்வாறு மனத்தினாலேயே உணரப்படும் ஒன்றாதலால் இன்பத்தினை உண்மையாக உணர்ந்து பயன் பெறுவதற்கு மனத்தின் செப்பமும் தெளிவும் இன்றியமையாததாகும்.

‘மனம் புலன்களின் கிளர்ச்சிகளுக்குத்தான் உட்பட்டு, அறியாமை வசத்ததாக விளங்குமானால், தீயனவும் நல்லனவாக உணரப்படுதலும், துயர்தருவனவும் இன்பந்தருவனவாகப் பிழைபட அறியப்படுதலும் கூடும். இதனால், இன்பத்தின் தன்மையை உள்ளபடி அறிவதற்குத் தக்க வகையிலே ஒவ்வொருவரும், தத்தம் மனத்தைத் தகுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்' என்பது தெளிவாகும்.

அந்த முறையிலே, உள்ளத்தினை இன்ப நெறிகளில் மட்டுமே செலுத்துகின்ற திட்பம் உடையதாகச் செய்வது பற்றிக் கூறும் பகுதி இதுவாகும்

  1. அறிவுடைமை

அறிவு உடைமையாவது இயல்பான நுண்ணறிவு உடைமையும், கல்வி கேள்விகளின் பயனாகப் பெற்ற செப்பமும் தெளிவும் ஆகும். இன்னவரின் உறவு நன்மை விளைப்பது, இன்னவரின் உறவு தீமை பயப்பது எனவும், இன்ன செயல் நன்மை தருவது, இன்ன செயல் தீமை தருவது எனவும் நல்லன தீயனவற்றின் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து இன்பந்தரும் நெறிகளிலே மனத்தைச் செலுத்துவதே உண்மையான அறிவுடைமை ஆகும்.

ஆகவே, அறிவு என்பது, காரிய காரணங்களின் உண்மைகளைப் பகுத்து அறிந்து கொள்ளுகின்ற தன்மை என்று கொள்க. இயற்கை அறிவெனவும், செயற்கை அறிவு எனவும் அறிவு இருவகையாகக் கூறப்படும்.

இயற்கை அறிவு, இயல்பாகவே ஒவ்வொருவரிடமும் அமைந்தது; செயற்கை அறிவோ அங்ஙனமன்றி ஒவ்வொரு வரும் தத்தம் முயற்சியினால், கண்டும் கேட்டும் கற்றும் ஈட்டிக்கொள்வது. இவற்றின் சிறப்பினை இனிக் காணலாம்.

  1. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்

தாமேயும் நாணித் தலைச்செல்லார்; - காணாய்

இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது

அணங்கருத் துப்பின் அரா. 

பகைவராயுள்ளவர், தம் வலியழிந்து பணிந்துவிடுகின்ற தளர்ந்த இடத்தை ஆராய்ந்து பார்த்துத் தகுதி உள்ளவர்கள், அவர்கள் மேல் படை கொண்டு செல்லுதலுக்குத் தாமே வெட்கப்பட்டவர்களாக, அவர்களை வெல்வதற்குப் போகமாட்டார்கள். பார்வையிலேயே வெல்லும் அரிய வலிமையினையுடைய பாம்பும், முழுநிலவாக அல்லாமல், இளம்பிறையாக ஆயின காலத்திலே, திங்களை வருத்துவதற்குச் சேராது; இதனை அறிவாயாக

'பகைவனானாலும், அவன் தளர்ந்திருக்குங் காலத்து அவனை அழித்தல் அறிவுடையவர் செயல் அன்று ' என்பது கருத்து.

  1. நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு

அணிகலம் ஆவது அடக்கம்; பணிவில்சீர் 

மாத்திரை இன்றி நடக்குமேல், வாழுமூர் 

கோத்திரங் கூறப் படும். 

பெரிய கடலினது குளிர்ச்சி பொருந்திய கரைகளை உடைய நாட்டின் தலைவனே! வறுமைப்பட்ட மக்களுக்கு எல்லாம் ஆபரணமாக விளங்குவது, அடக்கமுடன் இருத்தலே யாகும். அடக்கம் இல்லாத தன்மையுடனே, தன் எல்லை கடந்து அவர் நடப்பாரானால், அவர் வாழ்கின்ற ஊரிலே அவர்களுடைய குடும்பமே இழித்துப் பேசப்படுவதாகிவிடும்.

வறுமைக்கண், அடக்கமுடன் இருப்பதுதான் அறிவு உடைமை என்பது கருத்து.

  1. எந்நிலத்து வித்திடினும், காஞ்சிரங்காய் தெங்காகா

தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்

தன்னாற்றான் ஆகும் மறுமை ; வடதிசையும்

கொன்னாளர் சாலப் பலர். 

எந்த நிலத்திலே விதையை விதைத்தாலும், எட்டி விதையானது தென்னை மரமாக ஒருபோதும் வளரவே மாட்டாது. தென்திசை நாட்டவர்களும் சுவர்க்கலோகம் செல்வதனால், தத்தம் செயலாலேயே மறுமை இன்பம் என்பதும் உள்ளதாகும். வடதிசை நாட்டினுள்ளும், அந்த மறுமை இன்பத்திற்காவன செய்து ஒழுகாது வீண்காலம் கழிப்பவர்கள் பலராவர்.

'வடதிசை உடையவரே சுவர்க்கம் புகுவர்; தென் திசையார் எத்திறத்தானும் புகமாட்டார்' எனக் கூறிய சில மதவாதிகளை மறுத்து, முனிவர் உரைத்தது இது. அவரவர் ஒழுக்கமே மறுமை இன்பம் தருவது என்பது கருத்து. அவ்வொழுக்கம் அறிவுடைமையினாலேதான் அமைவது என்பதும் அறிக.

  1. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்

தீஞ்சுவை யாதும் திரியாதாம்:- ஆங்கே

இனந்தீது எனினும், இயல்புடையார் கேண்மை 

மனந்தீதாம் பக்கம் அரிது. 

வேம்பின் இலைகளுக்கு ஊடாகவே இருந்து தான் கனிந்து பழுத்தாலும், வாழைப்பழமானது தன்னுடைய இனிய சுவையினின்றும் எள்ளளவும் மாறுபடாது. அப்படியே தாம் சேர்ந்த கூட்டம் தீயதானாலும், நல்ல பண்பு உடையவர் களுடைய நட்பானது, அதனால் மனங்கொடியதாகிப் போய்விடும் தன்மை உடையதாதல் அரிதாகும்.

வேப்பந் தழைகளை இட்டு, அதனிடையே வாழைக் காய்களை வைத்துப் பழுக்கச் செய்வது உலக வழக்கம். அதனால் வாழையின் கனிச்சுவை கெடாது. அது போலவே, அறிவுடை யார், தீயவர் கூட்டத்திடைச் சில சமயம் சேர நேர்ந்தாலும் மனத்தின் பண்பு கெட்டவர்களாக ஆகமாட்டார்கள் என்பது கருத்து.

  1. கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும்; மலை சார்ந்தும்

உப்பீண்டு உவரி பிறத்தலால், தத்தம் 

இனத்தனையர் அல்லர், எறிகடல் தண்சேர்ப்ப! 

மனத்தனையர் மக்கள்என் பார். 

கடற்கரையைச் சார்ந்திருக்கும் இடமாயிருந்தாலும், அவ்விடத்தும் இனிமையான நீர் உண்டாகும். மலைப் பகுதியைச் சார்ந்திருக்கும் இடமாயிருந்தாலும், அவ்விடத்தும் உப்பு நிறைந்த உவர்நீர் உண்டாதலும் உண்டு. அதனால், அலைமோதுகின்ற கடலின் குளிர்ச்சியான கரையை உடையவனே! மக்கள் என்பவர்களும் தத்தம் இனத்தைப் போன்றவர்கள் அல்லர்; தத்தம் மனத்தை ஒத்தவர்களே யாவர் என்றறிவாயாக.

'நீர், தான் கொண்டிருக்கும் தன்மையைப் பொறுத்தே கொள்ளப்பவடுவதன்றிச் சார்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்துக் கொள்ளப்படுவதன்று. அதுபோலவே, மக்களும் அவரவர் மனத்துச் செப்பத்தைக் கருதி மதிக்கத் தக்கவர்களே யல்லாமல், அவரவர் சார்ந்திருக்கும் இனத்தைக் கருதி மதிக்கத்தக்கவரல்லர்' என்பது கருத்து.

  1. பராஅரைப் புன்னைப் படுகடல் தண்சோப்ப

ஓராஅலும் ஒட்டலும் செய்பவோ, நல்ல 

மரூஉச்செய்தி யார்மாட்டும் தங்கும் மனத்தார்

விராஅஅய்ச் செய்யாமை நன்று. 

பருத்த அடியினையுடைய புன்னை மரங்கள் சேர்ந்திருக்கின்ற, குளிர்ச்சியான கடற்கரைச் சோலைகளை உடைய நாட்டின் தலைவனே! உறுதி உடையவர்களாக ஒரு நிலையிலேயே நிலைபெற்று நிற்கும் உள்ளத்திண்மையினை உடையவர்கள், நன்மைகள் சேர்ந்திருக்கின்ற செய்கையை உடையவரான எவரிடத்திலும், நீங்குவதும் சேர்வதும் ஆகிய செயலைச் செய்வார்களோ? இப்படிச் செய்வதனைக் காட்டினும், ஒருவரோடும் நட்புச் செய்யாமல் இருப்பதே நல்ல அறிவுடைமையாகும்.

'நல்லவரோடு சேர்ந்தபின் பிரிவது அறிவுடைமை யாகாது; அப்படிச் சேர்ந்து பிரிவதைவிடச் சேராமல் இருப்பதே நல்லது' என்பது கருத்து.

  1. உணர உணரும் உணர்வுடை யாரைப்

புணரப், புணருமாம் இன்பம்; - புணரின்

தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்

 பிரியப் பிரியுமாம் நோய். 

நன்மை தீமைகளைப் பகுத்து அறிவதற்குரிய அறிவு உடையவர்களைச் சேர்தலால், அப்படிச் சேர்பவர்களுக்குப் பலவகையான இன்பங்களும் வந்து சேர்வனவாகும். நன்மை தீமைகளைப் பகுத்தறிய வல்ல அறிவில்லாதவர்களைத் தெரியாமல் சேர்ந்து விட்டால், அவரை விட்டு நீங்கின மாத்திரத்தாலேயே, அவரால் உற்ற துன்பங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்

'அறிவுடையவரைச் சேர்வதால் இன்பமும், அறிவற்றவரைச் சேர்வதால் துன்பமும் நேரும்' என்பது கருத்து.

  1. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழிடு வானும், நிலையினும் 

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் 

தலையாகச் செய்வானும் தான். 

நல்ல நிலையிலே கொண்டு தன்னை வைக்கின்றவனும், தன்னைத் தன் நிலையினின்றும் கலங்கச் செய்து கீழ் நிலைக்குக் கொண்டு போகின்றவனும், இருக்கின்ற நிலையைக் காட்டினும் மென்மேலும் தன்னை உயர்த்தி வைக்கின்றவனும், தன்னைத் தலைமையாளனாகச் செய்கின்றவனும் எல்லாம் தானேயாவன்.

'அவனவன் அறிவுடைமையே ஒருவனுக்கு உயர்வும் தாழ்வும் தருவது; அது பிறரான் வருவதன்று என்பது கருத்து.

  1. கரும வரிசையால், கல்லாதார் பின்னும்

பெருமை உடையாரும் சேறல், - அருமரபின் 

ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப! 

பேதைமை அன்று; அது அறிவு. 

அருமையான மரபினையுடைய அலைகள் ஒலி முழங்கிக் கொண்டிருக்கும் கடலினது குளிர்ந்த கரையினையுடைய நாட்டின் தலைவனே! செயல்களின் முறைமையினாலே, படியாத மூடர்களது பின்னாலும் கற்ற பெருமை உடையவர்களும் சென்று சேர்ந்திருப்பது, அவருடைய பேதைமை அன்று அதுவே அறிவுடைமை என்று அறிவாயாக.

குறித்த செயல் காரணமாக, அறிவற்றவர்பின் அறிவுடையோர் செல்வதும் அறிவுடைமையே என்பது கருத்து

  1. கருமமும் உள்படாப், போகமும் துவ்வாத்

தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே 

முட்டின்றி மூன்றும் முடியுமேல், அஃதென்ப 

'பட்டினம் பெற்ற கலம்

அறம் பொருள்களுக்குக் காரணமான செயல்களையும் கடன்பட்டுச் செய்து, அவற்றால் வருவனவாகும் இவ்வுலக இன்பங்களையும் துய்த்துத் தகுதியுடையவர்களுக்கே தருமங்களையும் செய்து, இம் மூன்றும் ஒரு பிறப்பிலேயே தடையின்றி முடியுமானால், அதுதான் பட்டினத்தை வந்து அடைந்த மரக்கலம் போலச் சிறப்பு உடையதாகும்.

'மரக்கலம் ஒரு துறையினின்றும் புறப்பட்டுப் பல விடங்களினும் சென்று வாணிகம் செய்து ஈட்டிய பொருள்களுடன் மீண்டும் கரை வந்து சேர்வது போல, அவன் வாழ்வும் கடைத்தேறியது' என்பது கருத்து.

  1. அறிவு இன்மை

அறிவு உடைமையே மனிதனுக்குச் சிறந்த நல்வாழ்வைத் தருவதாகும் என்பது பற்றிய செய்திகளை முன்பகுதியிலே நாம் பார்த்தோம். ஆகவே, அறிவின்மை பற்பல கேடுகளுக்குக் காரணமாகும் என்பதும் சொல்லாமலே உணரப்படும். எனினும், அறிவின் சிறப்பினை நன்கு கூறும் வகையால், முதலில் உடன்பாடாகக் கூறப்பட்ட உண்மைகளே, இப்போது எதிர்மறையாகவும் கூறப்படுகின்றன.

'அறிவின்மை' என்பது இயற்கையான நுண்ணறிவு இல்லாத தன்மையையும் குறிக்கும்.

காரிய காரணங்களைப் பகுத்தறியும் தெளிவு இல்லாத காரணத்தால் இம்மை இன்பங்களை எல்லாம் பெற முடியாதவனாகி விடுவதுடன் மறுமை இன்பத்தையும் இழந்துவிடுபவன் ஆவான் ஒருவன் என்று அறிதல் வேண்டும்

  1. நுண்ணுணர்வு இன்மை வறுமை; அஃதுடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் ; - எண்ணுங்கால் 

பெண்ணவாய், ஆணிழந்த பேடி அணியாளோ

கண்ணவாத் தக்க கலம்

நுட்பமான அறிவுத்திறன் இல்லாமல் இருப்பதுதான், ஒருவனுக்கு வறுமை என்று கூறப்படுவதாகும். அந்த அறிவை உடைமையோ, மிகவும் வளர்ச்சி பெற்ற பெருஞ்செல்வமாகும். எண்ணிப் பார்ப்போமானால், பெண் தன்மையை விரும்பி, ஆண் தன்மையை இழந்து விட்ட பேடியானவள், கண்கள் விரும்பும்படியான கவர்ச்சி மிக்க ஆபரணங்களை அணியமாட்டாளோ?

அறிவுதான் சிறந்த செல்வம்; அஃதற்றோர் செல்வம் எல்லாம் பேடியின் புனைவுகள் பெண்மையாகத் தோன்றினும் பெண்மையாகாதது போலச் செல்வம் போலத் தோன்றினும் செல்வம் ஆகாது என்று அறிதல் வேண்டும்.

  1. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து

அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின் 

நாவின் கிழத்தி உறைதலாற் , சேராளே

பூவின் கிழத்தி புலந்து. 

பல்வேறு வகைப்பட்ட நூற் கேள்விகளினால் வாழ்வின் உண்மைப் பயனை உணர்ந்தவர்களுங்கூடத் தம் தகுதி அழிந்து, செல்வம் இல்லாததன் காரணமாகப் பற்பல துன்பங்களுக்கும் உட்பட்டு உழலுகின்றனர். இதன் காரணத்தை ஆராய்ந்தறிய விரும்புவீர்களானால் சொல்வேன் கேளுங்கள் ; பழமையான சிறப்பினையுடைய நாவின் கிழத்தியான கலைமகள் அவர்களிடம் கூடி வசிப்பதனால், பூவின் கிழத்தியான திருமகள் பிணக்கங் கொண்டு, அவர்களிடம் சேரமாட்டாள் என்று அறிவீர்களாக.

கலைமகளுக்குத் தொல்சிறப்புக் கூறியது, ஒருமைக் கண் தான் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து என்பது பற்றி. அதன் பயன் பிற்பிறவிகளிலும் தொடர்ந்து வரும் என்பர். கிழத்தி - உரிமையுடையவள். கல்விச் சுவையிலே தேர்ந்தவர்க்குப் பொருட்பற்றில் மனம் ஈடுபடாமைபற்றி இப்படிக் கூறினார். திருமகள் மாமியும், கலைமகள் மருமகளுமாகப் புராணங் கூறுவதால் அவர்கள் ஒன்றுபட்டு வாழார் என்ற உவமையைக் கூறிக் கருத்து விளக்கப்பட்டது.

  1. கல்லென்று தந்தை கழற, அதனையோர்

சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன், மெல்ல 

எழுத்தோலை பல்லார்முன் நீட்ட, விளியா. 

வழுக்கோலைக் கொண்டு விடும். 

தந்தை, 'படி! படி!' என்று சொல்ல, அப்படித் தந்தை சொல்லும் சொல்லைத் தன் வாழ்வுக்கு உறுதியைத் தருகின்ற ஒப்பற்ற சொல்லென்று கொள்ளாமல், தன் இளமைப் பருவத்திலே இகழ்ச்சியாகக் கருதிக் கைவிட்டவன், பலருக்கும் எதிரில், எழுத்தைக் கொண்டிருக்கும் ஓலையைப் படிப்பாயாக' என்று மெதுவாக ஒருவர் நீட்டிய காலத்திலே, உயிரிழந்தவனைப்போல ஆகி, அங்கிருந்து தப்பிப் போய் விடும்படியான நிலைமையினைக் கொண்டு விடுவான்.

‘அறிவின்மை உடையவன் பலர் கூடிய அவையின் கண் இவ்வாறு அவமதிப்பு அடைய நேரும்' என்பது கருத்து. விளிதல் - சாதல், வழுக்கோலை -தப்பிப் போகும் படியான நிலையை.

  1. கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து.

நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல 

இருப்பினும், நாயிருந் தற்றே : இராஅது 

உரைப்பினும், நாய்குரைத் தற்று. 

கல்வி கற்காமல் வளர்ந்துவிட்ட ஒருவன், உலகத்திலே, நல்ல அறிவுடையவர்கள் இடையிலே புகுந்து அவர் அறியாமலும், தான் ஏதும் வாய் திறவாமலும் மெல்லென இருந்தாலும், அது ஆன்றோர் சபையிலே நாயொன்று சென்று இருந்ததைப் போன்றதே' யாகும். அப்படிப் பேசாதிராது அவன் ஏதாவது சொன்னாலும் அது, 'அந்த நாய் குரைத்ததைப் போன்றதே' யாகும்.

'சபை நடுவே நாய் புகுந்தாலும், அது குரைத்தாலும் அதனை எவரும் மதியாது துரத்தவே முற்படுவதுபோல, அவனையும் எவரும் புறக்கணித்து ஒதுக்கவே முயல்வர்' என்பது கருத்தாகும்.

  1. புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்

கல்லாத சொல்லும், கடை எல்லாம் ; கற்ற 

கடாஅயினும் சான்றவர் சொல்லார், பொருள்மேல் 

படாஅ விடுபாக்கு அறிந்து. 

கீழ்மக்கள் எல்லாரும், முறையோடு கற்றறியாத போலிப் புலவர்களின் இடையிலே புகுந்து, தாம் கற்றறியாத செய்திகளைப் பற்றியும் அஞ்சாது பேசுவார்கள். கல்வி கேள்விகளினால் சிறந்த சான்றோர்களோ, தாம் கற்றறிந்த வற்றையும் கூடச் சொல்லும்படி பிறர் கேட்டாலும், அப்படிக் கேட்பவரின் அறிவானது தாம் சொல்லும் அரிய பொருளின் மேல் முழுவதும் செல்லாமல் விடுபட்டுப் போவதைத் தெரிந்து கொண்டவர்களாக, ஏதும் சொல்லாமலேயே இருப்பார்கள்.

புலவர்; இகழ்ச்சிக் குறிப்பு. 'அறிவுடையோர் கேட்கும் தகுதி உடையவர்க்கு மட்டுமே சிறந்த பொருள்களை உரைப்பார்கள்; கீழ்த்தரமான அறிவினரோ எதனையும் அறிந்தவர் போல் எங்கும் அடக்கமின்றிப் பேசத் தொடங்கிவிடுவர்' என்பது கருத்து.

  1. கற்றறிந்த நாவினார் சொல்லார், தம் சோர்வஞ்சி

மற்றையர் ஆவார் பகர்வர், பனையின்மேல் 

வற்றிய வோலை கலகலக்கும்; எஞ்ஞான்றும் 

பச்சோலைக்கு இல்லை, ஒலி. .

நூற்களைக் கற்று, உண்மைப் பொருள்களைத் தெளிவாக அறிந்த புலவர்கள், தம் சொற்களிலே ஏற்பட்டுவிடுகிற சோர்வுக்குப் பயந்து கண்டபடி பேச மாட்டார்கள். மற்றைய சிற்றறிவினரோ, அதற்கு அஞ்சாமல் கண்டவிடமெல்லாம் சொல்லுவார்கள். இவை எவை போல என்றால், பனை மரத்தின் மேலுள்ள உலர்ந்த ஓலை கலகலவென ஒலிப்பதையும் பசுமையான ஓலைக்கு அத்தகைய ஒலி செய்யும் குணம் இல்லாமையும் போல என்க.

'ஈரமற்ற ஓலை ஒலித்தல் போல, அறிவற்றோர் பிதற்றுவர்; பசுமையுள்ள ஓலை ஒலிக்காதது போல அறிவுள்ளோர் அடக்கமாக இருப்பர்' என்பது கருத்து.

  1. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்

நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்

குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலை தகர்ந்து 

சென்றிசையா ஆகும், செவிக்கு. 

நன்மை எதுவென அறிந்துணராத மனிதர்க்குத் தருமத்தின் வழியானது இப்படிப்பட்டது என்று சொல்லுங்காலத்திலே, பன்றிக்குக் கூழ்வார்க்கும் தொட்டியிலே மதுரமான மாங்கனியைச் சாறுபிழிந்து விடுவது போன்றதாகவே அது முடியும். மலையின் மேல் அடிக்கிற கட்டுத் தறியினைப் போல, அத் தருமநெறிகள், தம் தலை சிதைந்து, அவர்களின் காதுக்குச் சென்று கேளாதவைகளாகவும் போய்விடும்.

'அறிவின்மை உடையவர்களுக்கு அறம் உரைப்பது வீண்' என்பது கருத்து. தகர்ந்து - சிதறி. மலையிலே அடிக்கும் கட்டுத்தறியாகிய முளை, தன் தலை சிதறுமேயல்லாமல், மலையினுள் புகுவதில்லை. அதுபோலவே மூடனுக்குச் செய்யும் தரும் உபதேசமும் அவனுள்ளத்தில் பதியாமற் போய்விடும்.

  1. பாலாற் கழீஇப், பலநாள் உணக்கினும்

வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று

கோலாற் கடாஅய்க் குறினும், புகல் ஒல்லா

நோலா உடம்பிற்கு அறிவு. 

நாள்தோறும் வெண்மையான பாலினாலே கழுவிப் பல நாட்கள் உலர்த்தி வைத்தாலும், இயல்பாகக் கருநிறமுடைய கரிக்கு, வெண்ணிறத்தை உடையதான ஒரு தன்மை ஒருபோதும் உண்டாகவே மாட்டாது. கோல் கொண்டு அடித்து அதட்டிச் சொன்னாலும், முற்பிறப்பிலே புண்ணியம் செய்யாத உயிரையுடைய ஓர் உடம்பிற்குள் அறிவானது ஒரு போதும் நுழையவே மாட்டாது.

அறிவுரைகள் பூர்வபுண்ணியம் அற்றவர்களின் உள்ளங்களிலே என்றும் நுழைவதில்லை' என்பது கருத்து. இருந்தைக்கு- கரிக்கு. குறினும் - அடிப்பினும், நோலா-நோற்றல் இல்லாத. உடம்பிற்கு உடம்பை உடைய உயிருக்கு.

  1. பொழிந்தினிது நாறினும், பூமிசைதல் செல்லாது

இழிந்தவை காமுறூஉம் ஈப்போல - இழிந்தவை 

தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும், தக்கார்வாய்த் 

தேன்கலந்த தேற்றச்சொற் றேர்வு

தேனைச் சொரிந்து, இனிமையாக நறுமணம் வீசினாலும், அப்பூவிலுள்ள தேனை உண்ணுவதற்குப் போகாமல் இழிவான பொருள்களையே விரும்பிச் செல்லுகின்ற தன்மையினை யுடைய ஈயைப் போல, இழிவானவைகளே பொருந்தின மனமுள்ளவர்களுக்குத் தகுதியுடையவர் வாயினின்று வெளிப்படும் தேனின் தன்மை பொருந்திய தெளிவுண்டாக்கும் அறவுரைகளின் தெளி வெல்லாம் என்ன பயனைத் தரும்? ஏதும் பயன் தருவதில்லை என்பது முடிவு.

'அறிவற்றோரின் மனம் நல்லோர் அறவுரைகளில் ஈடுபடாது கீழானவற்றினையே நாடிச் செல்லும்' என்பது கருத்து.

  1. கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ்சு உதைத்தலான் - மற்றுமோர் 

தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானுமோர் 

புன்கோட்டி கொள்ளுமாம் கீழ். 

கற்றறிந்த சான்றோர்கள் சொல்லுகின்ற, குற்றமற்ற நுண்மையான நூற்கேள்விகளைத் தனக்கு உறுதியாகப் பற்றிக் கொள்ளாமல், தன்னுடைய உள்ளமானது அவற்றை இகழ்ந்து தள்ளி விடுதலால், கீழ்மகனாவன், தன்னைப் போன்ற மற்றொரு கீழ்மகனுடைய முகத்தைப் பார்த்துத் தானும் ஓர் அற்பமான பேச்சை நிகழ்த்தத் தொடங்கி விடுவான்.

'கற்றார் பேச்சைக் கேளாது, தான் கற்றவன் போலச் செருக்குற்றக் கீழ்மகன், தன்போற் கீழ்மக்களுக்குப் பிரசங்கம் செய்யவும் தொடங்கிவிடுவான்' என்பது கருத்து. கீழ்த்தரமான பிரசங்கிகளைக் குறித்துச் சொல்லியது இது.

  1. நன்றியில் செல்வம்

செல்வத்தின் பயன் அதனை நல்ல வழிகளிலே செலவிட்டு, ஈட்டியதானும், வறுமையால் தன்னைச் சார்ந்த பிறரும், கூடி அனுபவிப்பதேயாகும். செல்வத்தினால் வருகின்ற பயனை அனுபவியாமல் அதனைச் சேர்ப்பதில் மட்டுமே ஒருவன் மனஞ் செலுத்தினான் என்றால், அவன் உண்மையில் இரங்கத் தக்கவனே யாவான்.

செல்வம் நிலையாமை உடையது என்பதை விளக்கி, அதனால் அது உள்ளபோது பலருக்கு உதவி அறம் செய்து வாழ்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பெற்றது. இந்தப் பகுதியில் உதவி செய்யாமல் சேமித்து வைக்கிற செல்வம் எவ்வாறு பயனற்ற செல்வமாகும் என்பது கூறப் பெறுகின்றது.

மேலும், நன்மையான வழிகளிலே செலவிடப்படாத செல்வம் பயனற்றது ஆவதுமட்டுமன்று, அது தீய வழிகளிலே செலவிடப்படுவதனால் தீமை தருவதாகவும் முடியும் என்பதைக் கருதவேண்டும்.

  1. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளவினை வாவல் குறுகா

பெரிதணியர் ஆயினும், பீடிலார் செல்வம் 

கருதுங் கடப்பாட்ட தன்று. 

பொரிந்த அரையினை உடைய விளாமரத்தினை அது மிகுதியான பழங்களை உடையதாகத் தமக்கு மிகவும் அருகாமையிலேயே இருப்பதாயினும், வௌவால்கள் சென்று ஒருபோதும் சேரமாட்டா. அது போலப் பெரிதும் அருகாமையிலேயே இருப்பவராயினும், தகுதியற்றவர்களுடைய செல்வமானது எளியவர்களுக்கு உதவும் என்று நினைக்கும் முறையினை உடையதன்று.

'விளாமரத்தின் கனி பயனற்றது என்பது கருத்தன்று; பிறருக்குப் பயன்படலாம்; ஆனால், வெளவாலுக்குப் பயன்படாது. அதுபோலப் பீடிலார் செல்வமும், எளியோர்க்குப் பயன்படாது; தீயோர்க்கே பயன்படும்' என்பது கருத்து.

  1. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்

கள்ளிமேற் கைநீட்டார், சூடும்பூ அன்மையால்

செல்வம் பெரிதுடையர் ஆயினும், கீழ்களை 

நள்ளார். அறிவுடை யார்.

அள்ளி எடுத்துக் கொள்ளலாம் எனும்படியான சிறிய அரும்புகளை மிகுதியாக உடையனவாக இருந்தாலும் அவை சூட்டிக் கொள்ளத்தக்க மலர்கள் இல்லாமையினாலே, யாரும் கள்ளிச் செடியின் மீது அதன் பூக்களைக் கொய்வதற்குக் கைநீட்ட மாட்டார்கள். அதுபோலவே, மிகுதியான செல்வத்தை உடையவர்களாயினும் கீழ்மக்களை அறிவுடையோர் சென்று உதவி கேட்டு ஒருபோதும் அணுகவே மாட்டார்கள்.

'கள்ளி பூத்தாற் போன்றதே, கீழ்மக்களின் பகட்டான செல்வமும், அது எவருக்கும் பயன்படாது கழியும்' என்பது கருத்து.

  1. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்

வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்

செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்று 

நல்குவார் கட்டே நசை.

மிகுந்த அலைகளையுடைய கடற்கரையிலே இருந்தாலும், வலிமையான ஊறுதலை உடையதான உப்புத் தன்மை இல்லாத கிணற்றினிடத்தே சென்றுதான், வேட்கை உடையோர் நீர் உண்பார்கள். ஈயாதவர் பெருஞ்செல்வம் உடையவர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு, நெடுந்தொலைவிற்குச் சென்றாயினும், கொடுப்பவர்களிடத்திலேதான் அறிவுடை யோரின் விருப்பமும் செல்லும்.

வல்லூற்று - அருகிச் சுரக்கும் ஊற்று, விரைவில் சுரக்கும் ஊற்றுமாம். கடலின் நிறைந்த நீரை விட்டு உவரில்லாத கிணற்று நீரை விரும்புவது போலக் கீழ்மக்களின் பெருஞ்செல்வத்தை அணுகாது ஈபவரின் சிறுகொடையையே பெரியோர் விருப்பமுடன் நாடுவர்' என்பது கருத்து.

  1. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே

உணர்வது உடையார் இருப்ப;- உணர்விலா 

வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே 

பட்டும் துகிலும் உடுத்து 

'அறிய வேண்டுவன ' எனச் சான்றோர் விதித்தவற்றை எல்லாம் அறியும் அறிவை உடையவர்கள் வறியவர்களாக இருக்கவும், அறிவே சிறிது மற்றவரும், வட்டும் வழுதுணையும் போல் உயிர்த் தன்மையற்று எங்கும் பல்கி வாழ்பவருமான கீழ்மக்கள், செல்வமிகுதியினாலே பட்டும் பிற நல்லாடைகளும் உடுத்துச் செல்வந்தராக வாழ்கின்றார்களே? நெருங்கிய கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலே, அவரவர் செய்த முன்வினைப் புண்ணியமோ இப்படி அவர்கள் நிலைமை வேறுபட்டுள்ளதன் காரணம்?

‘அற்பர் செல்வராயிருக்க, அறிவுடையோர் வறுமையுடை யவராயிருப்பது முன்வினைப் பயன் போலும்' என்பது கருத்து. 'வாழ்பவே', 'வாழ்வரே' என்பதும் பாடம்.

  1. நல்லார் நயவர் இருப்ப, நயமிலாக் 

கல்லார்க்கொன் றாகிய காரணம்,- தொல்லை 

வினைப்பயன் அல்லது, வேனெடுங் கண்ணாய்! 

நினைப்ப வருவதொன் றில். 

வேல்முனை போன்ற நீட்சியான கண்களை உடையவளே! நற்குணம் உடையவர்களும், நல்ல அறிவுடையவர்களும், வறியவர்களாக இருக்கிறார்கள். நற்குணம் இல்லாதவர் களுக்கும், கல்வியறிவு இல்லாதவர்களுக்கும் ஒப்பற்ற செல்வப் பொருள் உண்டாயிருக்கிறது. இதற்குக் காரணம், பழைய பிறப்பிலே செய்த வினையின் பயனால் வந்த விளைவு என்பது அல்லாது, வேறு ஆராய்ந்து பார்க்கத்தக்கதான காரணம் யாதொன்றும் இல்லை.

இதனால், இப்பிறப்பில் உதவுவாரும், பிற்பிறப்புகளில் செல்வம் உடையவராவர்' என்பது விளங்கும். முற்பிறப்பில், உதவாத நிலையே இப்பிறப்பில் அவர் வறியவரானது' என்பதும் கருத்தாகும்.

  1. நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!

நீறாய் நிலத்து விளியரோ - வேறாய 

புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ, பொன்போலும் 

நன்மக்கள் பக்கம் துறந்து! 

பூவின் நறுமணம் வீசாத புறவிதழ்களைப்போல, மலர்களுட் சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பொற்பாவை போன்ற திருமகளே! பொன்னைப்போல அருமையான நற்குணமுடைய மக்களிடத்திலே சென்று பொருந்தி இருப்பதைக் கைவிட்டு, அவர்களினும் மாறுபட்டவர்களாகிய கீழ்மக்களின் பக்கமே நீ சென்று சேர்பவளாவாய்; அதனால், இவ்வுலகத்திலே நீ அழிந்து சாம்பலாகக் கடவாயாக!

'மணமுள்ள பூவிலிருக்கும் நறுமணமில்லாத புறவிதழ் போல், நீயும் மலர்மேலிருந்தும் நறுங்குணம் அற்றவளாயினை எனத் திருமகளைப் பழித்தனர். வறுமையால் வாடிய அறிஞன் இப்படிச் செல்வத்திற்கு அதிதேவதை எனப்படும் திருமகளைப் பழிக்கிறான் என்க.'

  1. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ

பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்

வியவாய்காண், வேற்கண்ணாய்? இவ்விரண்டும் ஆங்கே 

நயவாது நிற்கும் நிலை. 

வேல் போன்ற கண்களை உடையவளே! உதவுகின்ற குணமுடையவர்களிடத்திலே உள்ள வறுமையானது வெட்கம் இல்லாததோ? ஒருவருக்கும் உதவாதவரிடத்து உள்ள செல்வம், அவரை விட்டு விடாமல் பரவுவதற்கு ஏற்ற பிசினோ? இவ்விரண்டும், அவ்விடங்களிலே நன்மைப் படாமல் நிலை பெற்றிருக்கின்ற நிலைமையை, நீ வியப்புடன் காண்பாயாக.

பரம்புதல்-நாற்புறமும் ஓட்டுமாறு பரவுதல் பயின் - பிசின் 'செல்வத்தின் பொருந்தாது கூடியிருக்கும் தன்மை' உரைக்கப்பட்டது.

  1. வலவைகள் அல்லாதார், காலாறு சென்று

கலவைகள் உண்டு, கழிப்பர்; - வலவைகள் 

காலாறுஞ் செல்லார், கருணையால் துய்ப்பவே

மேலாறு பாய, விருந்து. 

பேய்த்தன்மையினை உடையவர்களாக இல்லாத நல்லவர்கள் தங்கள் கால் சென்ற வழியெல்லாம் நெடுந் தொலைவினைக் கடந்து சென்று அங்கங்கே கிடைத்த கலவை யான உணவுகளை உண்டு, தம் வாழ்நாளைக் கழிப்பார்கள். ஆனால் பேய்த்தன்மை உடையவர்களோ, கால்போகும் வழியும் போகமாட்டார்கள்; தம் இடத்திலேயே இருந்து, பாலாறும் நெய்யாறும் பாயும்படியாகப் பொறிக்கறியோடுங் கூடிய உணவினை உண்பார்கள். செல்வத்தின் தன்மை இதுதான்!

இப்படித் தகாதவரிடம் அமைவது நன்றியில் செல்வம் என்பது கருத்து. கலவை - பலரிடம் சிறிது சிறிதாகப் பெற்றதாற் கலவையான சோறு.

  1. பொன்னிறச் செந்நெற் பொதியோடு பீள்வாட

மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும் 

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் 

வண்மையும் அன்ன தகைத்து. 

பொன் போன்ற நிறத்தையுடைய செந்நெற் பயிர்கள் எல்லாம், பொதிந்திருக்கும் கதிர்களோடு தம் கருவும் உட்பட வாடிக்கொண்டிருக்க, மின்னல் விளங்காநின்ற மேகமானது, தன் மழைநீரைக் கடலின் இடையிலே சென்று வெளிப்படுத்திச் சொரிதலும் உண்டு. அறிவின்மை உடையவர்கள், மேலான செல்வத்தைப் பெற்ற காலத்திலே, அவர்களுடைய வள்ளன் மையும் அப்படிப்பட்டதாகப் பயனற்ற தீயவர்களுக்கே உதவியாக விளங்கும்.

'அற்பர், தம் செல்வத்தைத் தகாதவர்களுக்குத் தருவார் களேயல்லாமல், தகுதி உடையவர்களுக்குத் தரமாட்டார்கள்' என்பது கருத்து.

  1. ஓதியும் ஓதார் உணர்விலார்; ஓதாதும்

ஓதி அனையார் உணர்வுடையார்; - தூய்தாக 

நல்கூர்ந்தும் செல்வர், இரவாதார், செல்வரும் 

நல்கூர்ந்தார். ஈயார் எனின். 

பகுத்து அறியும் அறிவு இல்லாதவர்கள், எந்த நூல்களையும் படித்திருந்தாலும், அவர்கள் படியாதவர் களேயாவர். பகுத்தறிவு உடையவர்கள், படியாதிருந்தாலும் படித்தாற்போற் சிறந்தவர்கள் ஆவார்கள். மனமானது தூய்மை உடையதாயிருக்க, வறுமையுற்றும் இரந்து செல்லாதவர்கள் செல்வர்களேயாவர். செல்வம் உடையவரும், தம்பால் வந்த இரவலருக்குக் கொடாமற் போனார் என்றால், வறுமைப் பட்டவர்களே ஆவார்கள்.

உள்ளத் தூய்மையே சான்றோர் என்ற மதிப்பைத் தரும்; ஈதலே செல்வத்திற்கு உரிய மதிப்பைத் தரும்.'

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.