Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

4. துன்ப இயல்

'இன்பமும் துன்பமும்' என்று சொல்லப்படுவன எல்லாம், அந்தந்த நிகழ்வுகளைப் பொறுத்தன அன்று; அவ்வவற்றைத் தத்தம் உள்ளத்திலே கொண்டு இன்பமாகவும் துன்பமாகவும் கருதி அனுபவிக்கும் உள்ளத்து நிலையினைப் பொறுத்ததே யாகும்' என்று ஆன்றோர் கூறுவர்.

உள்ளமே நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, நன்மையென உணர்ந்தவிடத்து இன்பமும், தீமையென உணர்ந்தவிடத்துத் துன்பமும் அனுபவிப்பதாதலால், மேற்கண்ட உண்மை, அவரவர் உள்ளத்து விளங்கும் காரிய காரணங்களின் தராதரங் களைப் பகுத்தறியும் தன்மையைப் பொறுத்ததாகவே அமையும்.

ஈயாமை, இன்மை, மானம், இரவச்சம் போன்றவை சான்றோர்களின் உள்ளத்திலே மிகுந்த துன்பத்தைத் தருவனவாம். அவை பற்றிக் கூறுவது இந்தப் பகுதி.

 1. ஈயாமை

'ஈதலே' அறங்களுள் எல்லாம் மிகவும் சிறப்புடையதாகத் கொள்ளப்படும். ஈதலினும், வறியார்க்கு ஒன்று ஈதலே மிக்க சிறப்பாகும்.

வறியவரான ஒருவர் வந்து தம்மை இரந்துநின்ற காலத்திலே அவருக்கு உதவ முடியாத நிலையிலே தாம் இருந்தனர் என்றால் சான்றோர் அதற்காக மிகவும் மனம் வருந்தித் துயரப்படுவார்கள்.

கீழ்மக்களோ, இருந்தும் ஈதலிலே மனம் ஈடுபடாத வர்களாக, வறியவர்க்கு ஏதும் தராமலே அவரைப் போக்கி விடுவர். அதனால், இரந்து வந்த எளியோரின் உள்ளம் பெரிதும் புண்படும். அப்படி மறுத்தவரும், மறுமையிலே அளவற்ற துன்பத்திற்கு ஆளாவர்.

ஈயாமை பற்றிய இப்பகுதியினை இனிக் காண்போம்.

 1. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்

அட்டது பாத்துண்டல், அட்டுண்டல்; - அட்டது 

அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு 

அடைக்குமாம், ஆண்டைக் கதவு. 

நண்பர்களுக்கும், நட்புச் செய்யாத அயலார்களுக்கும், தம்மிடத்தே உள்ள அளவினாலே சமைத்ததைப் பகுத்துக் கொடுத்து உண்பதே முறையாகச் சமைத்து உண்பதாகும். அப்படியின்றிச் சமைத்ததைக் கதவை அடைத்துத் தனியே இருந்து, தாம் மட்டுமே உண்டு ஒழுகி வருகின்ற நற்குணம் இல்லாத மனிதர்களுக்கு, மேலுலகமாகிய அவ்விடத்துக் கதவும் திறந்திராது, மூடப் பட்டிருக்கும் என்று அறிவாயாக,

'பகுத்து உண்டு வாழாதவன் மறுமையில் சுவர்க்கம் சேரான்' என்பது இது. நட்டார்' உறவினரையும், நள்ளாதார்' விருந்தினரையும் குறிக்கும். இம்மையாற் புகழையும் மறுமையில் இன்பத்தையும் கருமி இழந்து விடுகிறான் என்பதும் கூறப்பட்டது.

 1. எத்துணை யானும், இயைந்த அளவினால்

சிற்றறம் செய்தார் தலைப்படுவர்; - மற்றைப் 

பெருஞ்செல்வம் எய்தியக்கால், பின்னறிதும்' என்பார் 

அழிந்தார், பழிகடலத் துள். 

எவ்வளவேயாயினும், தத்தமக்கு இயைந்த அளவினால், சிறிய தருமங்களையாயினும் செய்து வந்தவர்கள் எக்காலத்தும் மேன்மை அடைவார்கள். அங்ஙனம் இல்லாமல், தம்மிடத்தே பெருஞ்செல்வமானது வந்து அடைந்த காலத்திலே தருமஞ் செய்யாமல், பின்னர் அதுபற்றிக் கருதுவோம்' என்றிருப்பவர் கள், உலக நிந்தனையாகிய கடலிலே சிக்கி அழிந்தவர்கள் ஆவார்கள்

'ஈபவர்கள் பெருமையும் ஈயாத உலோபிகள் சிறுமையும் அடைவார்கள்' என்பது கருத்து. தலைப்படல் - மேன்மைப் படுதல். பழிகடலம் - பழிச் சொற்களாகிய கடல்; கடலளவான பழிச்சொற்களின் மிகுதி.

 1. துய்த்துக் கழியான், துறவோர்க்கொன் றீகலான்

வைத்துக் கழியும் மடவோனை, - வைத்த 

பொருளும் அவனை நகுமே! உலகத்து 

அருளும் அவனை நகும். 

அருமையாகப் பெற்ற செல்வத்தைத் தான் அனுபவித்து வாழாமலும், அச்செல்வத்தினால் துறக்கப்பட்ட செல்வமற்ற வறியவர்களுக்குக் கொடுத்து உதவாமலும், வீணாகச் சேமித்து வைத்து இறந்து போகின்ற அறியாமை உடையவனாகிய அந்தக் கருமியைப் பார்த்து, அவன் தேடிவைத்த செல்வமும் சிரிக்கும்; உலகத்திலே விளங்கும் கருணை என்னும் பண்பும் சிரிக்கும்.

பெற்றதன் பயனைத் தான் அனுபவிக்காததனால் செல்வமும், அருளுடையவனாகும் வாய்ப்பு இருந்தும் அதனை இழந்ததனால் அருளும், அவனைப் பார்த்துச் சிரிக்கும் என்று கொள்க.

 1. கொடுத்தலும், துய்த்தலும் தேற்றா இடுக்குடை

உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம், இல்லத்து 

உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்

ஏதிலான் துய்க்கப் படும். 

பிறருக்குக் கொடுத்து உதவுதலையும், தான் அனுபவித்து நுகர்தலையும் அறிந்து செய்யாத உலோபகுணம் பொருந்திய உள்ளத்தை உடையவன் பெற்ற பெருஞ்செல்வமானது, குடியிற் பிறந்த வடிவழகு உடைய கன்னியரைப் போல, அனுபவித்தற்கு உரிய காலம் வந்த பொழுதிலே, அயலானான ஒருவனாலே பெற்று அனுபவிக்கப் படுவதாகும்.

அநுபவியாமலும், ஈத்து உதவாமலும் வைத்திருக்கும் ஒருவனுடைய செல்வத்தைக் காலம் வரும்பொழுது அயலார் பெற்று அனுபவிப்பார் என்பது கருத்து.

 1. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்

அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த் துண்பர்

மறுமை அறியாதார் ஆக்கத்திற், சான்றோர் 

கழிநல் குரவே தலை.

கரையிலே மோதுகின்ற நீரையுடைய பெருங்கடலினை அடுத்ததாக இருந்தாலும், அற்றுப்போம்படியான நீர்ச்சுரப்பினை உடைய சிறுகிணற்று ஊற்றினையே தேடிக்கண்டு அனைவரும் நீர் உண்பார்கள்; ஆதலால், மறுமைப் பயனை அறியாதவர்களுடைய செல்வத்தைக் காட்டிலும், மறுமைப் பயனை அறிந்த சான்றோர்களுடைய மிக்க வறுமையே இவ்வுலகில் மேலானதாகும்.

'சான்றோர் இயன்ற அளவுக்குக் கரவாது உதவுபவர்; மற்றையோர் உதவார் என்பது தேற்றம். மிக்குப் பெருகியிருக்கும் கடல்நீர் உண்பதற்கு உதவாதாதலினால் அதனை நாடாது, அருகிருக்கும் உண்பதற்குக் தக்க சிறு கிணற்றையே வேட்கை உடையார் நாடுவது போலக், கருமியின் பெருஞ் செவ்வத்தைக் கண்டு மயங்கி அவனுடன் உறவு கொள்ளாது வறியவரான நல்லவரின் உறவையே சான்றோர் பேணிக் கொள்வர்' என்பது கருத்து. 

 1. எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை

எனதெனது என்றிருப்பன், யானும்; - தனதாயின்

தானும் அதனை வழங்கான், பயன் துவ்வான்

யானும் அதனை அது. 

'என்னுடையது! என்னுடையது!' என்று உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிற அறிவற்றவனின் செல்வத்தை, அதற்கு யாதொரு தொடர்பும் இல்லாத யானும் என்னுடையது என்னுடையது' என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அச்செல்வம் அவனுடையதானால், அதனை அவன் தானும் அநுபவியாமல் இருக்கிறான் பிறருக்கு அதனை வழங்கி, மகிழாமலும் இருக்கிறான்; இப்படி அவன் இருப்பானோ? யானும் அதனை அப்படியே ஏதும் செய்ய வகையின்றி இருக்கின்றேன் அல்லவோ!

'கருமியிடம் இருக்கும் செல்வம் செல்வப் பயனைத் தராததினால் இல்லாதது போலவேதான் கருதப்படும்' என்பது கருத்து.

 1. வழங்காத செல்வரின், நல்கூர்ந்தார் உயந்தார்

இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக் 

காப்புய்ந்தார்; கல்லுதல் உய்ந்தார்; தம் கைந்நோவ 

யாப்புய்ந்தார்; உய்ந்து; பல. 

தாம் பெற்றிருக்கும் பொருளைப் பிறர்க்கு வழங்கி உதவாத செல்வரைக் காட்டினும், அச்செல்வமே பெற்றிராத வறுமையாளர்கள் பழியினின்றும் தப்பியவர்கள் ஆவார்கள். அது எப்படி எனில் அவர் அதனை இழந்து விட்டனர் என்னும் அபவாதத்தினின்றும் தப்பினார்கள்; அதனை வருந்திக் காப்பதனின்றும் தப்பினார்கள், அதனைப் புதைத்து வைப்பதற்கு நிலத்தைத் தோண்டுதலினின்றும் தப்பினார்கள்; தம்கைகள் நோவும்படியாகக் கெட்டியாகப் பற்றியிருப்ப தனின்றும் தப்பினார்கள். இப்படி அவர்கள் தப்பின பலவாகும்.

'பணம் இருந்தும், உதவாதவன் இத்துணைத் தொல்லை களுக்கும் உள்ளாவான்' என்பது கருத்து.

 1. தனதாகத் தான் கொடான், தாயத் தவரும்

தமதாய போழ்தே கொடாஅர் ;- தனதாக 

முன்னே கொடுப்பின் அவர்கடியார்; தான் 

கடியான் பின்னை அவர் கொடுக்கும் போழ்து. 

பொருள் தனக்கு உரிமையுடையதாக இருக்கையிலேதான் கொடுத்து மகிழமாட்டான்; அவன் இறந்து போன பின் அவனுடைய தாயத்தார்களும் அப்பொருள் தமதாக மாறிவந்த பொழுதிலே தாமும் கொடுத்து உதவமாட்டார்கள். முதலிலேயே பெற்றிருந்தவன் கொடுத்திருந்தால், அவர்கள் அதனை விலக்க மாட்டார்கள்; அவனுக்குப்பின் அவர்கள் கொடுக்கும் பொழுதும், அவன் வந்து விலக்க மாட்டான்.

பரம்பரை பரம்பரையாகக் கருமித்தனமாக இருக்கும் ஒரு குடும்பத்தைக் குறித்துக் கூறியது இது.

 1. இரவலர் கன்றாக, ஈவார் ஆவாக

விரகிற் சுரப்பதாம் , வண்மை - விரகின்றி 

வல்லவர் ஊன்ற வடியாபோல், வாய் வைத்துக் 

கொல்லச் சுரப்பதாம் கீழ். 

இரவலர்களைத் தம் கன்றுகளைப் போலக் கருதிக் கொடுப்பவர்கள் அக் கன்றுகளின் தாயாம் பசுவினைப் போல, அவரைக் கண்டதும் உள்ளத்து மகிழ்வினாலே சுரந்து கொடுப்பதே சிறந்த வள்ளன்மையாகும். அந்த உள்ள நெகிழ்வான மகிழ்வு இல்லாமல், வலிமை உடையவர் அழுத்திக் கறக்கப் பால் தருகின்ற பசுவைப் போல, அவ்வவ் விடங்களிலே நிறுத்தித் துன்பப்படுத்தக் கொடுப்பதே கீழ்மக்களின் இயல்பாகும்.

கொல்லுதல் - மிக்க துன்பம் செய்தல். கீழ் மக்கள், தம்மை வருத்தியும் அச்சுறுத்தியும் வாட்டுகிற தீயோருக்கே தம் பொருள்களைத் தருவார்களே அல்லாமல், தகுதியுடைய இரவலர்களுக்கு மனமுவந்து உதவமாட்டார்கள்' என்பது கருத்து.

 1. ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக்

காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் ;- காத்தல் 

குறைபடின் துன்பம்; கெடின் துன்பம், துன்பக்கு 

உறைபதி மற்றைப் பொருள். 

பொருளைத் தேடிச் சேமித்தலும் மிகவும் வருத்தமாகும்; அப்படி ஈட்டிய சிறந்த செல்வத்தைப் பேணிக் காத்தலும் அவ்வாறே பெரும் துன்பமாகும், அப்படிக் காத்தலில் குறைப்பட்டாலும் துன்பம், அச்செல்வம் அழிந்து போனாலும் துன்பம் . இப்படிச் செல்வமானது பலவகையான வருத்தங் 'களுக்கே ஓர் உறைவிடமாக இருப்பதாகும்.

ஈத்து மகிழாமல் சேமித்து வைக்கும் செல்வம் பற்றிச் சொல்லியது இது

 1. இன்மை

‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது. திருக்குறள். மனிதன் நல்வாழ்வு வாழவேண்டுமானால், உலக வாழ்விலே தானும் இன்பங்கண்டு, பிறருக்கும் உதவி வாழவேண்டுமானால் அதற்குப் பொருள் இன்றியமையாது வேண்டப்படுவதாகும். ஆகவே, இவ்வாறு மிகமிக இன்றியமை யாததான பொருளினை, தம் ஊழ்வினைப் பயனாலோ, அல்லது தம் முயற்சி இன்மையாலோ அடையப் பெறாதவர்களின் துயரங்களைக் கூறுவதன் மூலம், பொருள் தேடுவதன் இன்றியமையாமையையும், அதனை நல்ல வழிகளிலே செலவிடுவதன் சிறப்பையும் வற்புறுத்துகிறது இந்தப் பகுதி.

ஐம்புலன்களாலும் அனுபவிக்கப்படும் பொருள் யாவும் பொருள் என்றே கருதப்படும். அவை இன்றேல் ஐம்பொறிகளின் அநுபவமாம் இன்பங்களும் இல்லை. அதனால் வரும் துயரங்களும் அதிகம்.

 1. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்

பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்

ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார் 

செத்த பிணத்திற் கடை. 

காவி தோய்த்த ஆடையினை அரையிலே சுற்றிக் கொண்டு துறவியாக ஒருவன் வாழ்ந்து வந்தாலும், அவன் பத்து எட்டுப் பொருளாவது உடையவனாக இருப்பது, அப்படிப்பட்ட பலருள்ளும் அவனுக்கு ஒரு பெருமை தருவதாயிருக்கும். உலகத்தாரின் தன்மதிப்பிற்கு ஏற்ற உயரிய குடும்பத்திலே வந்து பிறந்தாலும், யாதொரு பொருளும் இல்லாதவரானால், அவர் உயிர்போன உடலைப் பார்க்கினும் கீழானவராகவே உலகத்தாரால் கருதப்படுவார்கள்.

'உலகிலே பெருமையும் சிறுமையும் பொருள் உடைமை குறித்தே ஏற்படுவது' என்பது கருத்து. அத்து - தையலுமாம். கூறை ஆடை பத்தெட்டு - சிறிதளவான பொருள். பிணத்திற்காவது, ஈமக்கிரியைகள் முதலியன செய்வர்; அவனுக்கு அதுவும் செய்யார்; ஆதலின், அதனினும் கடை என்றார்.

 1. நீரினும் நுண்ணிது நெய்யென்பர்; நெய்யினும்

யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின் 

இரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும் 

புகற்கரிய பூழை நுழைந்து. 

நீரினைக் காட்டினும் நெய்யானது நுண்மையானது. என்பார்கள். நெய்யினைக் காட்டினும் புகை நுண்மையானது என்பதை யாவருமே அறிவார்கள். ஆராய்ந்து பார்த்தால், இரந்து வாழவேண்டியவனாகிய துன்பமுள்ளவன், அந்தப் புகையும் நுழைந்து செல்லுதற்கரிய தொளையினுள்ளும் புகுந்து செல்பவன் ஆவான்.

இதனால், இரந்து வாழ்கின்ற நிலையினையுடைய வறுமையாளனின் துயரத்தின் எல்லை கூறப்பட்டது. பூழை - துவாரம்; தொளை

 1. கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்

செல்லாவாம். செம்பொறி வண்டினம் ; - கொல்லைக் 

கலாஅற் கிளிகடியும் கானக நாட!

இலா அ அர்க்கு இல்லை தமர். 

தோட்டப்புறங்களிலே கிளிகடியும் குறவர் மகளிர், தம் கவணிலே கற்களைக் கொண்டு கிளிகளை ஓட்டுகின்ற காடு சிறந்த நாட்டிற்கு உரியவனே! கற்கள் வளர்ச்சியுடன் விளங்கும் உயர்ந்த மலையின் மேலே, காந்தளானது மலராமற் போனால், சிவந்த புள்ளிகளையுடைய வண்டினம் அவ்விடத்தை நோக்கி ஒருபோதும் செல்வதில்லை. அதுபோலவே பொருள் இல்லாதவரிடத்திலே உறவு முறையாரும் செல்லாராதலினால், அவர்க்கு உறவினரும் இல்லாமற் போவர் என்று அறிவாயாக.

‘இல்லாதவனை உறவினரும் கைவிடுவர்' என்பது கருத்து.

 1. உண்டாய போழ்தின், உடைந்துழிக் காகம்போல

தொண்டா யிரவர் தொகுபவே ;- வண்டாய்த் 

திரிதரும் காலத்துத், தீதிலிரோ?' என்பார் 

ஒருவரும் இவ்வுலகத் தில். 

பொருளானது உண்டாயிருக்கின்ற பொழுதிலே, உடலானது அழிந்தவிடத்துக் கூடிவரும் காக்கைகளைப் போல ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவனுக்குத் தொண்டு செய்பவராக வந்து அவன்பாற் கூடுவார்கள். வண்டுகள் மலருள்ள இடங்களைத் தேடித்தேடித் அலைவது போல அவனும் வறுமையால் தனக்கு ஈவாரை நாடிநாடித் திரிகின்ற காலத்திலோ, அவனை நோக்கித் 'துன்பம் இன்றி இருக்கின்றீரோ?' என்று கேட்பவர் கூட, இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லாமற் போவார்கள்.

செல்வம் உள்ள காலத்து வந்து கூடிப், பின் கைவிடும் கயவரைப் பிணந்தின்னும் காக்கைகள் போன்றவர் என்கிறது இப்பாடல். இதனால், இன்மையாளனை எவருமே அணுகார் என்பது கூறப்பட்டது.

 1. பிறந்த குலம் மாயும், பேராண்மை மாயும்

சிறந்ததம் கல்வியும் மாயும் , - கறங்கருவி 

கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட! 

இன்மை தழுவப்பட் டார்க்கு. 

ஒலி முழங்கும் அருவிகள், கற்களின் மேல் விழுந்து ஆரவாரிக்கின்ற மலைத் தொகுதிகளை உடைய சிறந்த நாட்டை உடையவனே! வறுமையினாலே கட்டிக் கொள்ளப் பட்டவர்களுக்கு அவர்கள் பிறந்த நல்ல குலத்தின் பெருமையும் இல்லாமற் போகும்; அவர்களுடைய சிறந்த ஆண்மைக் குணங்களும் அழிந்து போய்விடும். மேன்மைப்பட்ட அவர்களுடைய கல்விச் சிறப்பும் பயனற்றதாக அழிவெய்தும்.

'வறியவர்க்குக் குடிப் பெருமையும், ஆண்மையும், கல்வியுங்கூட எச்சிறப்பும் தந்து உதவாமற் போய்விடும்' என்பது கருத்து.

 1. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு

உள்ளூர் இருந்தும், ஒன்று ஆற்றாதான் - உள்ளூர் 

இருந்து, உயிர்கொன்னே கழியாது, தான்போய் 

விருந்தினன் ஆதலே நன்று. 

வயிற்றினுள்ளே நிறைந்த மிகுந்த பசியினாலே தன்னிடத்திலே உணவினை விரும்பி வந்த இரவலர்களுக்குத் தான் உள்ளூரிலேயே இருந்து ஓர் உதவியும் செய்வதற்கு மாட்டாத வறுமையாளன், தன்னூரிலேயே இருந்து தன் வாழ்நாளை வீணாகக் கழியாமல், தான் வேற்றூர்களிற் போய் மற்றவர்க்கு விருந்தினனாக இரந்துண்டு காலங்கழிப்பதே நல்லதாகும்.

'பசியின் மிகுதியால் உணவு விரும்பி வந்தவர்களுக்கு உதவ முடியாத வறுமையைவிடப் பிச்சை எடுத்து உண்டலே சிறந்தது என்பது கருத்து

 1. நீர்மையே யன்றி, நிரம்ப எழுந்ததம்

கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர், - கூர்மையின் 

முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும் 

அல்லல் அடையப்பட் டார். 

கூர்மையின் சிறப்பினாலே முல்லை அரும்புகளின் சிறப்பினையும் வருத்துகின்ற பற்களையும் உடையவளே வறுமை என்னும் துன்பத்தினாலே சேரப்பெற்றவர்கள், தம்முடைய நற்குணங்கள் மாத்திரமேயல்லாமல், நிறைவு உடையதாகச் சிறந்து நிற்கின்ற தம்முடைய நுண்ணறிவினையும், மற்றும் தம் எல்லா நலங்களையும் ஒருங்கே இழந்து விடுவார்கள்.

'வறுமையாளரின் நற்குணமும் கல்வியறிவும் பயனின்றிக் கெடும்' என்பது கருத்து.

 1. இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க்கு ஆற்றாது

முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளூர் வாழ்தலின்

நெட்டாற்றுச் சென்று, நிரைமனையிற் கைந்நீட்டும் 

கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

வறுமையாகிற தாழ்ச்சியான வழியிலே அகப்பட்டுத் தம்மிடத்திலே வந்து யாராகிலும் ஒன்றை இரந்தவர்களுக்கு உதவ முடியாத முட்டுப்பாடான வழியிலே சிக்கி, அவர்க்குக் கொடுப்பதற்கு முயன்றும் முடியாமல் தன்னுடைய உள்ளூரிலேயே வாழ்தலைக் காட்டினும், நெடுந்தொலைவு களையும் கடந்து தூரதேசங்களிற் போய், அவ்விடத்து வரிசை வரிசையாயுள்ள வீடுகளிலே கை நீட்டித் தான் இரந்து உண்கின்ற கெட்ட வழியிலே வாழும் வாழ்க்கையே ஒருவனுக்கு நல்லதாகும்.

இட்டு - அற்பம்; இட்டாறு - வறுமை. 'நிரைமனை' 'நிறைமனை' எனவும் பாடம். பசிக்கு உணவு அளிக்கவும் இயலாத வறுமையின் கொடுமையைக் கூறிப் பொருளின் தேவை உணர்த்தப்பட்டது.

 1. கடகஞ் செறிந்த தம் கைகளால் வாங்கி

அடகு பறித்துக் கொண் டட்டுக் - குடைகலனா

உப்பிலி வெந்தைதின்று உள்ளற்று, வாழ்பவே 

துப்புரவு சென்றுலந்தக் கால். . 

அனுபவிக்கப்படும் பொருள்கள் எல்லாம் போய் வறுமைப்பட்டு வாடின காலத்தே, முன்பு கடகம் செறிந்திருந்த தம் கைகளாலே பக்கத்துள்ள தூறுகளைத் தள்ளிக் கீரைகளைப் பறித்துக் கொண்டு போய்ச் சமைத்து, வேறு உண்கலன் இன்மையால் பனையோலைக் குடைகளையே உண்கலமாகக் கொண்டு அவற்றிலே உப்பும் இல்லாமல் வெந்த அந்தக் கீரையைத் தின்று, மனவூக்கங் கெட்டு வாழ்பவராவர்கள் சிலர்.

'அப்படியேனும் வருந்தி வாழ்வார்களே அல்லாமல், உலோபிகள் பாற் சென்று இரவார்' என்பது கருத்து. வறுமைத் துயரத்தின் மிகுதி இதன்கண் கூறப்பெற்றது. இதனால், பொருளின் இன்றியமையாமை உணரப்படும்.

 1. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்

பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம் .-நீர்த்தருவி 

தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட! 

வாழாதார்க் கில்லை , தமர். 

நிறைந்த புள்ளிகளையுடையவும், அழகு விளங்குகின்ற வுமான வண்டின் தொகுதிகள், பூத்து நீங்கின மரக்கிளையின் மேல் ஒருபோதும் செல்லாவாகும். நல்ல தன்மையுள்ள அருவிகள் குறைவுபடாத, உயர்ந்த சிறப்பினையுடைய தண்மையான மலைகளின் வளத்தையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! அதுபோலவே, செல்வம் உடையவராக வாழாதவர்களுக்கு உறவினரும் இல்லாமற் போவர் என்று அறிவாயாக.

'பொருள் இல்லாதவனுக்கு உறவின்முறை யாரும் வந்து உதவமாட்டார்கள்' என்பது கருத்து.

 1. மானம்

'மானம்' என்பது உலகிலே ஒருவர்க்கு நிலவுகின்ற மதிப்பு ஆகும். அதனைச் சிறிதும் குலையாது பேணிக் கொள்ளவும், மென்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும் முயலுதல் வேண்டும். அந்த நிலையினின்று தாழ்வுறுகின்ற நிலைமை எப்போதாவது வருமானால், தம் மானத்தை இழப்பதினும், உயிரையே இழந்து அதனைக் காப்பதையே சிறப்பாகக் கொள்வர், சான்றோர்.

மானம் இழக்கும் நிலைகள் பெரும்பாலும் வறுமையின் காரணமாகவே ஏற்படும். வேறு சிலபல காரணங்களாலும் ஏற்படலாம். எனினும், வறுமையே பெரும்பாலும் மானமிழந்து இரந்துண்ணத் தூண்டும் கொடுமை உடையது. ஆதலால், இது இன்மையின் பின் கூறப்பெற்றது.

மானம் வேறு ; நாணம் வேறு. இதனை நன்றாகக் கவனித்தல் வேண்டும். மானமிழந்தும் உயிர் வாழாத பெருந்தகையோர் பலர் வரலாறுகளை நாம் தமிழ் இலக்கியங்களுள் காணலாம்

 1. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்

பெருமிதம் கண்டக் கடைத்தும் ;- எரிமண்டிக் 

கானந் தலைப்பட்ட தீப்போற் கனலுமே 

மானம் உடையார் மனம். 

தம்மிடத்திலே, செல்வமானது வலிமை உடையதாக இருப்பதன் காரணமாகத் தக்க நற்குணம் இல்லாதவர்கள் செய்கின்ற வரம்பு கடந்த நடத்தையைப் பார்த்த பொழுது மானம் உடையவர்களுடைய மனமானது நெருப்புப் பற்றிக் காட்டிலே மண்டிய பெருந்தியைப் போலக் கனன்று கொதிப்படையும்.

'செல்வச் செருக்கினால் தீயோர் வரம்பு கடந்து நடக்கும் போது, மானம் உள்ளவர்கள் மனக்கொதிப்பு அடைவார்கள்' என்பது கருத்து.

 1. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று

தம்பா டுரைப்பரோ, தம்முடையார்? - தம்பாடு 

உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு 

உரையாரோ, தாமுற்ற நோய்

தம்முடைய மானத்தைத் தாம் காத்துப் பேணுகின்ற தன்மையினை உடையவர்கள், வறுமையினால் தம் உடம்பு எலும்பாகப் போய் உதிர்கின்ற நிலையினையே அடைந்தாலும், நற்குணம் இல்லாத செல்வர்களின் பின்னே சென்று தமது வருத்தத்தைச் சொல்லுவார்களோ? சொல்லவே மாட்டார்கள். தம் வருத்தத்தை வாய்திறந்து சொல்வதற்கு முன்னமே குறிப்பினால் அறிந்து உதவத்தக்க நற்குணம் உடையவர்களுக்குத் தாம் உற்ற வருத்தத்தைக் கூறாமலும் இருப்பார்களோ?

‘மானமுள்ளவர்கள், தம் கொடிய வறுமைக் காலத்தும் தீயவர்களை அணுகமாட்டார்கள், நல்லவர்களையே அணுகுவார்கள்' என்பது கருத்து.

 1. யாமாயின் எம்மில்லம் காட்டுதும்; தாமாயின்

காணவே கற்பழியும் என்பார்போல்,-நாணிப் 

புறங்கடை வைத்தீவர், சோறும்; அதனால்

மறந்திடுக. செல்வர் தொடர்பு. 

நாமானால், வரும் விருந்தினர்களுக்கு நம் வீடு முழுவதையும் காட்டி உள்ளே அழைத்து வந்து உபசரிப்போம். ஆனால், செல்வச் செருக்கு உடையவர்களோ என்றால் தமது வீட்டை எளியவர் காண்கிற மாத்திரத்தாலேயே அதன் உறுதி அழிந்துவிடும் என்று நினைக்கிறவர்களைப் போலத் தம் வீட்டைக் காட்டுவதற்கு நாணங் கொண்டு, புறங்கடையிலேயே இருக்க வைத்துச் சோறிடுவார்கள்; அதனால் செல்வர்களுடைய தொடர்பை மானமுடையவர்கள் எவரும் கொள்ளாமல் மறந்துவிடுவார்களாக.

இல்லம் - மனையாள் எனவும் கூறுவர். செல்வரின் உறவு உளங்கலந்த உறவன்று' என்பது கருத்து.

 1. இம்மையும் நன்றாம்; இயனெறியும் கைவிடாது.

உம்மையும் நல்ல பயத்தலாற், செம்மையின் 

நானங் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண் , - 

மானம் உடையார் மதிப்பு. 

கத்தூரிச் சாந்தின் மணமானது நன்றாகக் கமழுகின்ற கூந்தலை உடையவளே! மானம் உடையவர்களின் பெருமையானது இவ்வுலகத்திலும் நன்மை தருவதாகும். கூடிய நல்ல வழியையும் கைவிட்டுவிடாது மறுபிறப்பிலும் நல்லவற்றையே உண்டாக்குதலால், அது மறுமைக்கும் நல்லதேயாகும். இதனை நீ அறிவாயாக!

மதிப்பு - பிறரால் மதிக்கப்படுதல், 'மானமுடையவராக வாழ்தல் இம்மையிற் பெருமையையும், மறுமையில் புண்ணியப் பயனையும் தரும்' என்பது கருத்து. நானம் - கஸ்தூரி, அதனைச் சேர்த்துக் கூட்டிய மயிர்ச் சாந்து.

 1. பாவமும் ஏனைப் பழியும் படவருவ

சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல் 

ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம்; அவைபோல் 

அருநவை யாற்றுதல் இன்று. 

பாவச் செயல்களையும் உலகத்துப் பழி ஏற்படும் செயல்களையும் சான்றோர்கள், அவற்றைச் செய்யாத காலத்துத் தாம் சாகும்படி நேரிட்டாலும் கூட, அவை உண்டாகும்படி வரும் செயல்களைச் செய்யவே மாட்டார்கள். ஏனென்றால், சாதல், அந்த ஒரு நாளிலே, அந்த ஒரு வேளையில் மாத்திரமே துன்பந் தருவதாகும்; அந்த இழிவான செயல்களைப் போல நிரந்தரமாக மிகுந்த துன்பங்களைச் செய்வதன்று.

'மானங் கெடுகிற செயல்களிலே ஈடுபடுவதைக் காட்டிலும் உயிரிழப்பதே சிறந்தது' என்பது கருத்து.

 1. மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் 

செல்வர் எனினும், கொடாதவர் - நல்கூர்ந்தார்

நல்கூர்ந்தக் கண்ணும், பெருமுத் தரையரே

செல்வரைச் சென்றிரவா தார். 

வளப்பத்தையுடைய இப்பெரிய உலகத்திலே வாழ்பவருக்குள் எல்லாம் சிறந்த செல்வர்கள் என்றாலுங்கூட வந்து இரந்தவர்களுக்குக் கொடாத உலோபிகள் தரித்திரர்களே ஆவர். வறுமை அடைந்தபோதினும் பொருள் உடையவரிடம் போய், அவரை இரந்து நிற்காத மானம் உடையவர்களோ, பெருமுத்தரையர் போன்ற செல்வர்களே யாவார்கள்.

'ஈயாத செல்வரினும், சென்று இரவாத மானம் உடைய வறுமையாளனே மதிப்பிற்கு உரியவன்' என்பது கருத்து. பெருமுத்தரையர் - தஞ்சைப் பகுதியிலிருந்த குறுநில மன்னர் அந்நாளிலே இருந்தவர்.

 1. கடையெலாம் காய் பசி அஞ்சும்; மற்றுஏனை

இடையெலாம் இன்னாமை அஞ்சும் ;- புடையுலாம் 

விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம் 

சொற்பழி யஞ்சி விடும். 

வில்லைப் போன்ற புருவத்தையும், பக்கங்களிலே உலவுகின்ற வேலாயுதம் போன்ற நீண்ட கண்களையும் உடையவளே! "கடைத் திறமானவர்கள் எல்லாரும், தம்மை வருத்துகின்ற பசி நோயினைக் குறித்தே அஞ்சுவார்கள் மற்றைய இடைத்திறமானவர்கள் எல்லாரும் தம்மிடம் பொருள் வளம் இல்லாமையைக் குறித்து அஞ்சுவார்கள். ஆனால், மேன் மக்களோ என்றால் உலகத்தாருடைய பழிச்சொற்களுக்கே மிகவும் அஞ்சுவார்கள்" என்று அறிவாயாக

'பழிச் சொற்களால் மானக்குறைவு நேரிடுதலால், தலைமக்கள் அதற்கே பெரிதும் அஞ்சுவர்' என்பது கருத்து.

 1. நல்லர்! பெரிதளியர்! நல்கூர்ந்தார்!' என்றெள்ளிச்

செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால், - கொல்லன் 

உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ

தலையாய சான்றோர் மனம்

"இவர் மிகவும் நல்லவர் ! இவர் மிகவும் கருணை செய்யத்தக்கவர் ! இவர் வறுமை உடையவராயிருக்கிறார்" என்று இகழ்வாகப் பேசிச் செல்வர்கள் பிறரை அவமதிப்புடன் பார்க்கின்ற காலத்திலே, மேன்மக்களாகிய சான்றோர்களுடைய உள்ளமானது, கருமானின் உலைக்கூடத்திலே ஊதி எழுப்புகிற நெருப்புப்போல, உள்ளேயே கனன்று கொதித்துக் கொண்டிருக்கும்.

'உள்கனலும்' என்றது, சான்றோர் அடக்கம் உடைய வராதலால், 'மானம் அழியப் பிறரைச் செல்வர் அவமதிப்பதற்கே, மானமுடையவரான அவர் உள்ளக் கொதிப்படைவர்' என்பது கருத்து.

 1. நச்சியார்க் கீயாமை நாணன்று; நாணாளும்

அச்சத்தான் நாணுதல் நாணன்றாம் எச்சத்தின் 

மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது 

சொல்லா திருப்பது நாண். 

ஒன்றை விரும்பிவந்து அணுகியவர்களுக்கு அதனைக் கொடாமலிருப்பது வெட்கமன்று நாள் தோறும் அஞ்ச வேண்டிய காரியங்களுக்கு அஞ்சி வாழ்தலும் வெட்கமன்று; தம்மினும் குறைபாடுடைய அற்பராக இருந்து ஆராய்ச்சி இல்லாதவர் தம்பாற் செய்த எளிமையைப் பிறருக்கு வாய்விட்டுச் சொல்லாதிருக்கும் மன உறுதியே உண்மையில் நாணமாகும்.

‘அறிவற்றோர் தமக்குச் செய்த அவமதிப்பை பிறர் அறியச் செய்யாதிருத்தலே நாணம் உடைமையாகும்' என்பது கருத்து.

 1. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை

இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்; இடமுடைய 

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மானம் அழுங்க வரின். 

காட்டுப் பசுவைக் கொன்ற காட்டிலிருக்கின்ற பெரும் புலியானது, தான் கொன்ற அது இடப்புறத்தே வீழ்ந்ததாயின், அதனை உண்ணாது பசியால் தன் உயிரையும் விட்டுவிடும். விசாலமான இடத்தை உடையதாகிய சுவர்க்கத்தின் இடமே தம் கைக்கு வந்து சேர்வதானாலும் சிறந்த மேலோர்கள், அது தமது மானம் கெடுவதனாலே வருவதாயிருந்தால் அதனை விரும்பவே மாட்டார்கள்.

'மானத் தாழ்வு வருவதாயிருந்தால் எந்தப் பேரின்பத்தையும் சான்றோர்கள் விரும்பார்கள்' என்பது கருத்து. கடமா - காட்டுப்பசு. இடம் வீழ்ந்ததைப் புலி உண்பதில்லை என்பதைப் பிற சங்க நூல்களும் கூறும்.

 1. இரவு அச்சம்

இரந்து வருபவர்களுக்கு அவருடைய வறுமைத் துயரைப் போக்குவதற்குரிய யாதாயினும் கொடுத்து உதவவேண்டுவது உடையவர் கடமை என்று அற நூல்கள் வற்புறுத்துவதனால், இரத்தலையும் சான்றோர் ஒரு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர் போலும் என்று எவரும் கருதிவிடுதல் கூடாது.

இரத்தல் எவ்வளவு கொடுமையானது இழிவானது என்ற சொல்லுவதன் மூலம், அதற்கு உட்படாதிருத்தலே சிறந்த வாழ்வாகும் என்பதை இந்தப் பகுதி விளக்கிக் கூறுகிறது.

இதனால் அவ்வளவு கொடிய மனத்துயருக்கும் இழிவுக்கும் தம் வறுமையின் காரணமாக உட்பட்டு வருபவர்க்கு, இருப்பவர் தவறாது உதவவேண்டும் என்ற நியதியும் உறுதிப்படும்.

இரத்தலால் ஏற்படும் பலவகையான குறைபாடுகளை எடுத்துக் கூறி, அதற்கு அஞ்சி அதனைக் கைவிடுதலை வற்புறுத்துவதே இந்தப் பகுதியாகும்.

 1. நம்மாலே யாவர், இந் நல்கூர்ந்தார்; எஞ் ஞான்றும்

தம்மாலாம் ஆக்கம் இலர், என்று ;- தம்மை 

மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும் 

தெருண்ட அறிவி னவர்

"இந்த வறியவர்கள் நம்மாலேயே ஆக்கம் உடையவர்கள். எப்போதும், தம்முடைய முயற்சியினாலே ஆகும் ஆக்கம் உடையவரே அல்லர்" என்று, தம்மை மேலானவராக மயங்கின செருக்குடைய மனத்தினர்களின் பின்னாக, அவர்களுடைய உதவியை நாடித் தெளிந்த அறிவினை உடையவர்கள் செல்வார்களோ? ஒரு போதும் செல்லமாட்டார்கள்

'செல்வராவதும் வறியவராவதும் ஊழ்வினைப் பயனால் வருவது. கொடுத்தல் அறம் என்று கருதாமல், தன்னாலேயே அவன் வாழ்கின்றான் எனக் கருதும் செருக்குடைய செல்வரை நாடி, அறிவுடையோர் ஒருபோதும் செல்லமாட்டார்கள்' என்பது கருத்து.

 1. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்

பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?

விழித்திமைக்கும் மாத்திரை யன்றோ, ஒருவன் 

அழித்துப் பிறக்கும் பிறப்பு! 

ஒருவன், இழிவுக்குக் காரணமான செயல்களைச் செய்து வயிறார உண்டு வாழ்வதனைக் காட்டினும், பிறர் பழிக்கும்படியான செயல்களைச் செய்யாதவனாகப் பசியோடு வருந்தியிருத்தல் தவறாகுமோ? எனில் ஆகாது. ஒரு மனிதன், தன்னுடைய இந்த உடலை அழித்துவிட்டு மீண்டும் புதிய உடலெடுத்துப் பிறக்கும் பிறப்பு, கண்மூடித் திறக்கும் ஒரு மாத்திரை அளவான காலத்திற்றானே நிகழக்கூடியது அல்லவோ?

'உடல் போனால் அடுத்த நொடியே வேறு உடல் கிடைக்கும்; ஆனால், பழிச் சொற்களோ தொடர்ந்து வரும். அதனால் பழிதருகின்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது' என்பது கருத்து.

 1. இல்லாமை கந்தா இரவு துணிந்து ஒருவர்

செல்லாரும் அல்லர், சிறுநெறிர் - புல்லா

அகம்புகுமின், உண்ணுமின்' என்பவர்மாட் டல்லால்

முகம்புகுதல் ஆற்றுமோ, மேல்?

தம்மிடத்தே சூழ்ந்த வறுமையின் காரணமாகத் துணிந்து ஒருவர் இரத்தலாகிய அற்பமான வழியிலே செல்லாமலும் இருக்கமாட்டார்கள். ஆனால் அப்படி இரக்க நேரிட்டாலும், மேலானவர்கள், தம்மைத் தழுவிக் கொண்டு , வீட்டினுள் வாருங்கள், உண்ணுங்கள்' என, அன்போடு உபசரிப்பவர் களிடத்திலே அல்லாமல், மற்றவர்களிடத்திலே செல்வதைப் பொறுப்பார்களோ? பொறுக்க மாட்டார்கள் என்பது முடிவு

‘இரப்பதேயானாலும், மனமுவந்து ஈபவரிடத்திலே மட்டும் சென்று இரந்துண்க; பிறரிடத்துச் செல்லாதிருக்க' என்பது கருத்து.

 1. திருத்தன்னை நீப்பினும், தெய்வஞ் செறினும்

உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால் 

அருத்தஞ் செறிக்கும் அறிவிலார் பின்சென்று

எருத்திறைஞ்சி நில்லாதாம், மேல். 

திருவானது தன்னைக் கைவிட்டுப் போய்விட்டாலும், தெய்வமானது தன்மேற் சினந்து வந்து வருத்தினாலும், அவற்றால் தளர்ந்து விடாமல், ஊக்கங் கொண்ட உள்ளத்துடன், தம் உயர்வினைப் பெரிதாக நினைப்பதே அல்லாமல், பணத்தை ஈத்து உதவாமல் வீணே சேர்த்து வைத்திருக்கின்ற அறிவற்ற செல்வர்களின் பின்னே சென்று, மேலோர்கள் தலை குனிந்து ஒருபோதும் நிற்கவே மாட்டார்கள்.

'மேலோர், தம் உயர்வினைப் பெரிதாக மதிப்பாரே அல்லாமல், செல்வர் பின் சென்று பணிந்து வாழார்' என்பது கருத்து.

 1. கரவாத திண்ணன்பிற் கண்ணன்னார் கண்ணும்

இரவாது வாழ்வதாம் வாழ்க்கை , - இரவினை 

உள்ளுங்கால் உள்ளம் உருகுமாம்; என்கொலோ

கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு

இரந்து வருபவர்களுக்குப் பொருளை ஒளிக்காது உள்ளத்தைக் கொடுக்கின்ற உறுதியான அன்பினையுடைய கண்போன்ற மேலோர்களிடத்திலுங்கூடச் சென்று யாசியாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். யாசித்தலாகிய அந்தச் செயலை நினைக்குங் காலத்திலேயே உள்ளம் உருகிப் போகின்றது. அப்படியிருக்கவும் பிறரிடம் இரந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங் காலத்திலே அப்படிக் கொள்பவரின் நோக்கந்தான் என்னவோ?

'இரத்தலுக்கு அஞ்சி அதனைக் கைவிடல் வேண்டும்' என்பது கருத்து.

 1. இன்னா இயைக; இனிய ஒழிக' என்று

தன்னையே தானிரப்பத் தீர்வதற்கு - என்னைக்கொல்

காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்டு 

ஏதி லவரை இரவு

‘துன்பங்கள் நம்மிடத்தே வந்து சேரட்டும்; இன்பங்கள் எல்லாம் நம்மைவிட்டு நீங்கிப் போகட்டும்' என்று தன் மனத்தையே தான் நிரம்பச் செய்தலினால், தீர்ந்து போகும்படியான வறுமைக்காகப் பொருளாசை கவலைப் படுத்தும் மனத்தினாலே அறிவழிந்து, அயலாரைச் சென்று யாசித்தல் என்ன காரணத்திற்காகவோ?

‘உள்ளத்தில் உறுதியுடன் இன்ப துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல், அயலாரிடம் சென்று இரத்தல் கூடாது' என்பது கருத்து.

 1. என்றும் புதியார் பிறப்பினும், இவ்வுலகத்து.

என்றும் அவனே பிறக்கலான் - குன்றின் 

பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட! 

இரப்பாரை எள்ளா மகன்.

மலைகளின் பரந்த இடங்கள் எல்லாம் பொன்னானது ஓடும் படியான, பாய்கின்ற அருவிகளை உடைய நாட்டிற்கு உரியவனே! எக்காலத்தினும் புதிய புதிய மனிதர்கள் பிறந்து கொண்டிருந்தாலும் இவ்வுலகத்தில், என்றும் யாசகரை இகழாத மகனே மீண்டும் வந்து பிறவாதவன் என்று அறிவாயாக

‘இரப்பவரை இகழாது உதவுபவன், தொடர்ந்து வரும் பிறவித் துயரினின்றும் விடுதலை பெற்று உய்வான்' என்பது கருத்து.

 1. புறத்துத்தன் இன்மை நலிய, அகத்துத்தன்

நல்ஞானம் நீக்கி நிறீஇ . ஒருவனை

ஈயாய் எனக்கு!' என்று, இரப்பானேல், அந்நிலையே 

மாயானோ, மாற்றி விடின்! 

புறமாகிய உடலிலே தன்னுடைய வறுமையானது தன்னை வருத்த, அதனால் தன்னுடைய அகமாகிய நல்ல அறிவினைத் தள்ளி, அறியாமையை நிலைபெறச் செய்து, அயலான் ஒருவனை 'எனக்கு ஈவாயாக' என்று ஒருவன் யாசிப்பானாகில், அந்தச் செல்வன் இல்லை' யென்று மறுத்துவிட்டால், அப்படி யாசித்தவன் அவ்விடத்திலேயே இறந்துபோய்விட மாட்டானோ?

இரவினால் நேரும் மானக்கேடு கூறி, அதனை அஞ்சி ஒதுக்கும் கடமை வற்புறுத்தப்பட்டது. மாற்றுதல்-மறுத்தல்.

 1. ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி

வழிபடுதல் வல்லுதல் அல்லால், பரிசழிந்து

'செய்யீரோ, என்னானும்!' என்னுஞ் சொற்கு இன்னாதே

பையத்தாம் செல்லும் நெறி. 

ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து நடத்தலைச் செய்து வணக்கமாயிருப்பது உலகில் முறைமையே அல்லாமல், தம் பெருமை கெட்டு , "ஏதாகிலும் உதவி செய்ய மாட்டீர்களோ?'' என்று சொல்லுகிற சொல்லைக் காட்டினும், தாம் துன்பம் உண்டாகச் செல்லும் பழைய நெறியே இனிமையாய் இராதோ?

'செல்வரை அணுகி, அவர் உயர்வுக்கு இசையத் தாம் பணிவுடன் இருத்தல் பொருந்துமே யல்லாமல் அவரை இரந்து பெறமுயலுதல் பொருந்தாத ஒழுக்கம்' என்பது கருத்து.

 1. பழமை கந்தாகப் பசைந்த வழியே

கிழமைதான் யாதானும் செய்க!- கிழமை 

பொறாஅர் அவரென்னிற், பொத்தித்தம் நெஞ்சத்து 

அறாஅச் சுடுவதோர் தீ. 

பழைய காலத்து நட்பினை ஆதாரமாகக் கொண்டு வந்து சிநேகித்த விடத்திலே, தாம் யாதாகினும் ஒரு தக்க உதவியை அவருக்குச் செய்யக் கடவர். அவர், அப்படித் தக்கதாகச் செய்யும் உதவியைத் தம் கடமையாக ஏற்றுக்கொள்ளாமல் போவாராயின், அது தமக்கு மனத்திலே பதிந்து நீங்காமல் எரிக்கும் படியான ஒரு தீயாகவே விளங்கும்.

'அயலார் உதவாமற்போனால் வரும் வருத்தத்தினாலும், பழைய நண்பர்கள் உதவாதபோது வரும் வருத்தம் மிகுதியாயிருக்குமாதலால், அவர்பாற் சென்று இரத்தல் வேண்டா' மென்பது கருத்து.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.