Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

5. பொது இயல்

பொதுவியலாவது, அரசியல் போன்று முன்னர்க் கூறியவற்றுள் எல்லாம் அடங்காத பொதுப்பட்ட செய்திகளைக் கூறும் பகுதி என்று பொருள்படும். இந்தப் பகுதி அறிவியல் என்னும் ஒரே அதிகாரத்தை மட்டுமே கொண்டதாகும். இதனால் ஓர் அதிகாரமும் ஓர் இயலாக அமைதல் கூடும் ! என்பதும் அறியப்படும்.

அவையானது ஒரு குறிப்பிட்ட தொடர்புடையோர் மட்டுமன்றிப் பல்வேறு நிலையினரும், கருத்தினரும், தொழிலினரும் கூடியிருப்ப தொன்றாகும். ஆட்சித் தலைவனானவன் அதன் போக்கினை அறிந்தே தன் செயல்களை வகுக்கும் கடப்பாடு உடையவனாயிருக்க வேண்டும்.

இந்தப் பொதுவான தகுதியுடைமை பற்றியும் இது பொதுவியல் என வகுக்கப்பட்டிருத்தல் பொருந்தும் எனக் கொள்ளலாம்.

 1. அவை அறிதல்

அவை அறிதலாவது, அவையிலே உள்ளவர் களினுடைய கல்வி கேள்வி தகுதி முதலியவற்றின் தராதரங்களை நுட்பமாக அறிந்து, அதற்கு ஏற்ற படியான வகையிவே அங்கு நடந்து கொள்ளுதல் ஆகும்.

அவையினை அறியாமற் சென்று, அங்கு தான் கூடியிருக்கவும் உரையாடவும் துணிபவன், பெரிதும் அவமானத்திற்கே உள்ளாகும் நிலையினை அடைவான். அவையின் போக்கினை ஆராய்ந்து, அதற்குத் தக்கபடியாகத் தான் நடந்து கொள்ளுகின்ற ஒருவனோ, அந்த அவையினரின் மதிப்பைப் பெறுவதோடு அதனால் உலகிற் பலராலும் மதிக்கப்படும் புகழையும் அடைவான். இதனைப் பற்றிய செய்திகளை இந்தப் பகுதியுள் நாம் காணலாம்.

 1. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டு, ஆங்கோர்

அஞ்ஞானம் தந்திட்டு, அதுவாங்கு அறத்துழாய்,

கைஞ்ஞானங் கொண்டொழுகும் காரறி வாளர்முன்

சொல்ஞானஞ் சோர விடல். 

மெய்ம்மையான அறிவினை உடையவர்கள் கூடியிருக்கும் அவையிலே சேருகிற முறைமையைக் கைவிட்டு அவ்விடத்திலே ஓர் அறியாமை உடைய பேச்சினைப் பேசிவிட்டு, அந்தப் பேச்சினையே அவ்விடத்திலே மிகவும் அதிகமாகப் பரப்பிக்கொண்டு, தம் அற்பமான அறிவைக் கொண்டு நடக்கின்ற, பழிக்கப்படும் அறிவுள்ளவர்களிடத்திலே, புகழ்ந்து சொல்லத்தக்க தமது அறிவுத் திட்பத்தையும் ஒருவர் வெளிப்படுத்தாது தளரவிட்டு விடல் வேண்டும்.

‘மூடர்கள் கூடியிருக்கும் கூட்டத்திலே, அறிவுடையோர் தம் அறிவுரைகளைச் சொல்லாதிருக்க வேண்டும்' என்பது கருத்து.

 1. நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்

தீப்புலவற் சேரார், செறிவுடையார்! - தீப்புலவன் 

கோட்டியுள் குன்றக் குடிபழிக்கும், அல்லாக்கால்

தோள் புடைக் கொள்ளா எழும். 

தம் வாய்க்கு வந்த பாடங்களைச் சொல்லித், தாம் சொற்களின் நயத்தினை உணர்ந்தவர்களைப் போலப் பிறரைத் தம் பக்கம் சேர்த்துக் கொள்ளுகிற தீய அறிவுள்ளவரின் கூட்டத்திலே, அறிவுச் செறிவினையுடைய நல்ல புலவர்கள் ஒருக்காலும் சேரமாட்டார்கள். தீயகுணமுள்ள அந்தப் புலவன், அவையினுள், கேட்பவர்களின் மனம் வருந்தும்படியாக நற்புலவர்களின் குடியையே பழித்துப் பேசுவான். அதுவும் இல்லாவிடத்து, தோள்களைத் தட்டிக் கொண்டு அவர்களுடன் சண்டைக்கே எழுந்தாலும் எழுந்திருப்பான்.

'அறிவுச் செப்பமின்றிப் பேச்சுக் கச்சேரி நடத்தும் போலிப் புலவர்களின் கூட்டத்திற்குச் சான்றோர் செல்ல மாட்டார்கள்' என்பது கருத்து.

 1. சொற்றாற்றுக் கொண்டு கனைத்தெழுதல் காமுறுவர்

கற்றாற்றல் வன்மையும் தாந்தேறார். - கற்ற 

செலவுரைக்கும் ஆற்றியார், தோற்பது அறியார்

பலவுரைக்கும் மாந்தர் பலர். 

தம்மிடத்தே இருக்கின்ற சொல்லாற்றலையே பெரிதாகக் கருதிக் கொண்டு அந்தத் தினவினால் வாது செய்வதற்கு எழுந்திருப்பதை விரும்புவார்கள்; அந்த அவையிலுள்ள பிறர் கற்று ஆற்றல் உடையவர்களா யிருப்பதையும், அவர்களுடைய பேச்சு வல்லமையையும் தாம் உணர மாட்டார்கள், தாம் கற்றவற்றைப் பிறர் உள்ளத்திலே சென்று புகுமாறு தெளிவாக எடுத்துச் சொல்லும் சொல்லின் முறைமையையும் அறியார்கள், தாம் தோற்றுப்போவதையும் உணர மாட்டார்கள்; இப்படிப்பட்டவர்களாயிருந்தும், வீணாகப் பலவும் சொல்லிக் கொண்டேயிருக்கிற மாந்தர்களே இவ்வுலகத்தில் பலராக இருக்கின்றனர்.

‘அறிவுடையோர் இவர்கள் கூட்டத்தைக் கைவிடல் - வேண்டும்' என்பது கருத்து.

 1. கற்றதூஉம் இன்றிக், கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை 

நல்லா ரிடைப்புக்கு , நாணாது சொல்லித் தன் 

புல்லறிவு காட்டி விடும். 

தானாகப் படித்துத் தெரிந்தது என்பது சிறிதும் இல்லாமல், பள்ளியில் கணக்காயர் பிறருக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பாடத்தினால் ஒரு சூத்திரத்தை ஒரு பேதை பெற்றுக் கொண்டானாம்; அவன், அப்படிப் பெற்றுக் கொண்ட அந்தச் சூத்திரத்தினை, நல்ல புலவர்களின் அவையிலே புகுந்து தன் பேதைமைக்கு நாணாமல் எடுத்துச் சொல்லித் தன்னுடைய கீழ்த்தரமான அறிவையே வெளிப்படுத்தி விடுபவனாவான்!

‘அப்படிச் சொல்லவும், அவனுடைய புல்லறிவு பலரும் அறிந்ததொன்றாய்விடும்' என்பது கருத்து.

 1. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்.

கன்றிக் கறுத்தெழுந்து, காய்வாரோடு-ஒன்றி

உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள் 

சுரைவித்துப் போலுந்தம் பல். 

'பிறரை வென்றுவிட வேண்டும்' என்ற ஒரே ஒரு காரணத்தினாலே, விலங்கினைப் போன்று உண்மைப் பொருள்களை ஏற்றுக் கொள்ளாதவர்களாகி மிகவும் சினங் கொண்டு போருக்குத் தயாராக எழுந்து, மனங்கொதிப்ப வர்களோடு சேர்ந்து, தம்முடைய சொல்லின் வித்தாரத்தைக் காட்ட எழுகின்றவர், சுரையின் வித்துப் போன்ற தம்முடைய பற்கள் தம் கையில் உடனே கிடைக்கக் காண்பவராவார்கள்.

'மூடர்களுக்கு நல்லுபதேசம் செய்யப் போனால், போகிறவரின் பல் உடைவதுதான் நேரிடும்; அவர்கள் கேட்டுத் திருந்தார்' என்பது கருத்து.

 1. பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத

மூடர் முனிதக்க சொல்லுங்கால் ,- கேடருஞ்சீர்ச் 

சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை 

ஈன்றாட்கு இறப்பப் பரிந்து. 

ஒரு பாட்டின் வாய்ப்பாடத்தை மட்டுமே சொல்லிக் கொண்டு, அதன் பொருள் நுட்பத்தைக் தெளிவதிலே மனஞ் செலுத்தாத மூடர்கள், கேட்பவர் சினங்கொள்ளத்தக்க சொற்களைச் சொல்லும் பொழுது, அழிவில்லாத மேன்மையை யுடைய சான்றோர்கள், அப்படி வைதவரைப் பெற்ற தாயைக் குறித்து மிகவும் இரக்கப்பட்டு, அவர்களை அந்தவிடத்திலேயே தக்கப்படி ஒறுத்தற்குத் துணியாமல், தாம் வெட்டுன்வராகிப் பொறுமையுடன் இருப்பார்கள்.

‘மூடனின் பேச்சை மறுத்து உரையாமல் சான்றோர் வாளாவிருப்பது, அவன் தாயை நினைந்து இரக்கப்பட்டே' என்பது கருத்து.

 1. பெறுவது கொள்பவர் தோள்போல், நெறிப்பட்டுக்

கற்பவர்க் கெல்லாம் எளிய, நூல் ;- மற்றம் 

முறிபுரை மேனியர் உள்ளம் போன்று, யார்க்கும் 

அறிதற்கு அரிய பொருள். 

எல்லா வகையான நூல்களும், பெறுதற்குரிய பொருளைப் பெற்றுக்கொண்டு இசைகிற வேசிமாரின் தோள்களைப் போலப் படிப்பதற்கு உரிய வழிகளிலே தலைப்பட்டுப் படிக்கிறவர்களுக்கு எல்லாம் எளிதாகவே வந்து கைகூடுவனவாகும். மற்றுத் தளிரையொத்த மேனியாரான அந்த வேசியர்களுடைய உள்ளத்தைப் போன்று எவருக்கும் எளிதிலே அறிய முடியாத பொருள் அருமையினை அவை உள்ளாக உடையனவுமாகும்.

'கற்கும் முறைமைப்படி கற்பவர்க்கு எல்லா நூல்களும் எளிதாகக் கைவரினும், அவற்றின் நுண்பொருளை உணர்தல் சிலரான அறிவுத் திட்பம் உடையவர்களுக்கே கைகூடுவதாகும்' என்பது கருத்து.

 1. புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார்,

            உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும், - மற்றவற்றைப் 

போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து 

தேற்றும் புலவரும் வேறு. 

புத்தகங்களை மாத்திரமே மிகுதியாகத் தொகுத்து வைத்திருந்தும், அவற்றின்கண் சொல்லப்பட்டிருக்கும் நுண் பொருள்களை அறியாதவராகி, அவற்றைக் கொண்டுவந்து வீடெல்லாம் நிறைத்தாலும், அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறாயிருப்பார்கள், அவற்றின் பொருள்களை அறிந்து பிறருக்குத் தெளிவிக்கும் அறிவுடையோரும் வேறாகவே இருப்பார்கள்.

'புத்தகம் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து பிறருக்கும் சொல்லித் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமையாகும்' என்பது கருத்து.

 1. பொழிப்பு. அகலம், நுட்பம், நூல் எச்சம், இந் நான்கின்

கொழித்து, அகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் 

நிரையாமா சேக்கும் நெடுங்குன்ற நாட

உரையாமோ, நூலிற்கு நன்கு

குறை சொல்வதற்கு இல்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைத் தம்மிடத்திலே சேரச் செய்கின்ற, உயர்ந்த மலைகளையுடைய நாட்டின் அரசனே! பொழிப்புரையும், அகலவுரையும், நுட்பவுரையும், எச்சவுரையும் ஆகிய இந்நான்கு உரைகளாலும், நன்றாக ஆராய்ந்து பொருள் விரிவைக் காட்டாதவருடைய சொற்கள், ஒரு நூலிற்கு நல்ல உரையாகுமோ? ஆகமாட்டாதென அறிவாயாக.

பொழிப்பு - கருத்து விள்ளும்படி தொகுத்துச் சொல்வது. அகலம் பதப் பொருள் முதலியவற்றை நியாயம் காட்டி விரித்துச் சொல்வது. நுட்பம் - சொல் நுட்பம், பொருள் நுட்பம் ஆகியவற்றைக் காட்டுவது. எச்சம் - பாடலிற் சொல்லப்படாது எஞ்சிய தொடர்புடைய செய்திகளைச் சொல்லுதல். இவையே உரையமைதியின் இலக்கணம் ஆகும்.

 1. இற்பிறப்பு இல்லார் எனைத்துநூல் கற்பினும்

சொற்பிறரைக் காக்கும் கருவியரோ?- இற்பிறந்த 

நல்லறி வாளர், நவின்ற நூல் தேற்றாதார் 

புல்லறிவு தாமறிவதில். 

நல்லகுடியிலே பிறந்த பிறப்பின் உயர்வு இல்லாதவர்கள், எவ்வளவு நூல்களைக் கற்றாலும், கல்லாத பிறரின் சொற்களை இகழாமற் காத்தற்கு உரிய அடக்கம் முதலிய கருவிகளை உடையவர்களாவார்களோ? அல்லர். நல்ல குடியிலே பிறந்த நல்ல அறிவாளர்கள், பெரியோர் சொன்ன நூல்களிலே தெளியாதவருடைய ஈனமான அறிவினைத் தாம் உன்னிப்புடன் கவனித்து அறிந்து கொள்வதே ஒருபோதும் இல்லையாகும்.

'நற்குடிப் பிறந்த நல்லறிவாளர், பிறர் புல்லறிவைக் கவனியார், அவரைத் தூற்றவும் செய்யார்' என்பது கருத்து.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.