Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

6. பகை இயல்

மனிதனுக்குப் பகையாவது உட்பகை என்றும், புறப்பகை என்றும் இருவகைப்படும். புறப்பகை, தன்னை ஒழிந்த பிறராலும் பிறவற்றாலும் தனக்கு எதிராக அமைவது. அது, ஊழ்வினை வசத்தாலும் பிறரின் அறியாமை வசத்தாலும் ஏற்படுதல் கூடும். ஆனால் அதுபோலன்று உட்பகை. அது, தன் உள்ளத்து உணர்வுகளை ஒருவன் ஒரு நெறிப் படுத்தாததன் விளைவாகவே ஏற்படுவது. இதனால், உலகிலே பகை கடிந்து வாழ விரும்புகிறவன் முதலிலே, தன்னுடைய உட்பகையினைக் கடிந்து ஒழித்தலிலேயே மிகுதியான கவனஞ் செலுத்துதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

அப்படிப்பட்ட உட்பகைகளுள் புல்லறிவாண்மை பேதைமை, கீழ்மை, கயமை ஆகியன பற்றிக் கூறுவது இந்த இயல் ஆகும்.

நல்லன தீயனவற்றைப் பகுத்தறிந்து, நல்லனவே கொண்டு, தீயனவெல்லாம் விலக்கி வாழும் வாழ்வின் செப்பத்திற்கு இவை கேடு விளைவிப்பனவாதலால், இவற்றை அனைவரும் அறிந்து போக்குதல் வேண்டும் என்பது தெளிவு.

 1. புல்லறிவாண்மை

ஒருவன், தான் சிற்றறிவு உடையவனாக இருந்து கொண்டே மென்மேலும் கல்வியாலும் கேள்வியாலும் அதனை முற்றறிவாக்கிக் கொள்ள நினையாமல், தன் சிற்றறிவுடை மையையே பேரறிவுடைமையாக மதித்துச் செருக்குற்று, உயர்ந்தோர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாது போதலே புல்லறிவாண்மை ஆகும்.

புன்மை + அறிவு = புல்லறிவு; அதாவது சிறுமையான அறிவு. அதனை ஆள்பவர் புல்லறிவாளர் அதாவது சிற்றறிவினர்.

அவைக்குப் புல்லறிவாளர் உரிமையான தகுதி உடையவர் அல்லர். ஆயினும், அவர் சென்று புகுந்த அந்த அவையின் தன்மையை அறியாது அதிற் பிறர் கலந்து கொள்ளுதலும் புல்லறிவாண்மையே யாகும். இது பற்றியே, அவையறிதலை அடுத்து இந்தப் பகுதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 1. அருளின் அறமுறைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர் ; - பொருளல்லா 

ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை 

மூழை சுவையுணரா தாங்கு 

பிற உயிர்களிடத்தே தமக்கு இயல்பாக உள்ள அருளின் காரணமாக அறநெறிகளை எடுத்துச் சொல்லுகின்ற அன்புடை யாளரின் வாய்ச் சொற்களை அறிவுடையோர், தமக்குப் பயன் தரும் மெய்ப்பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்வார்கள். ஒரு பொருளாகக் கருதப்படுவதற்கும் இல்லாத மூடனோ, பாற்சோற்றின் சுவையை அகப்பை அறியாதது போல், அதன் பயனை அறிந்து உணரமாட்டாத வனாக, அதனை இகழ்ந்து பேசுவான்.

‘அறிவுடையோரின் பேச்சுகளை இகழ்வாகச் சுட்டிப் பேசுவான் புல்லறிவாளன்' என்பது கருத்து.

 1. அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்

செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார். 

கல்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின் 

செவ்வி கொளல்தேற்றா தாங்கு. 

தோலை வாயினாலே கௌவித்தின்னும் இயல்பினை உடைய புலையருடைய நாயானது, பாலோடு கூடிய சோற்றினது நல்ல சுவையை அறிந்து கொள்ளுதலிலே தெளிவில்லாததாய் இருக்கும். அதைப்போலவே, பொறாமை முதலிய மனக்குற்றம் இல்லாத சான்றோர்கள் அறநெறியினை எடுத்துச் சொல்லுங் காலத்திலே, நற்குணமில்லாத புல்லறி வாளர்கள், அதனைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

‘புல்லறிவாளர், நல்ல நெறிகளிலே மனஞ்செலுத்த மாட்டார்கள் புன்மையானவற்றிலேயே மனங்கொள்ளுவர்' என்பது கருத்து.

 1. இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் ஆற்றை

எனைத்தானுந் தாங்கண் டிருந்தும் ,- தினைத்துணையும் 

நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள் 

பொன்றிலென் பொன்றாக்கால் என்

கண்ணிமைக்கின்ற அளவிலே தானே, தம்முடைய இனிய உயிரானது போய்விடும்படியான வழியுடைய தென்பதை எல்லாவகையானும் தாம் அறிந்திருந்தும், தினையளவேனும் நல்ல செய்கைகளைச் செய்தலில்லாத வெட்கமற்ற மட மனிதர்கள், இறந்தால் தான் என்ன? அன்றி, இறவாமல் இருந்தால் தான் என்ன? இரண்டும் உலகிற்கு ஒன்றேதான் என்பது முடிவு.

'புல்லறிவாளர் நன்றி புரிதலிலே மனஞ்செலுத்த மாட்டார்' என்பது கருத்து. அவரால் உலகுக்கும் பயனில்லை; அவருக்கும் பயனில்லை என்பதும் சொல்லப் பட்டது.

 1. உளநாள் சிலவால் ; உயிர்க்கேமம் இன்றால்

பலர்மன்னும் தூற்றும் பழியால்; - பலருள்ளும் 

கண்டாரோடு எல்லாம் நகாஅது, எவனொருவன் 

தண்டித் தனிப்பகை கோள்

வாழ்ந்திருக்கிற நாட்களோ மிகவும் சிலவாகும், உயிர்க்கு உடலை விட்டுப் போகவிடாது காத்து நிற்கும் காவலும் யாதொன்றும் இல்லை; இந்த உலகத்திலே பல பேர்கள் வெளியிட்டுக் கூறுகின்ற பழிச்சொற்களும் மிகுதியாகும். இப்படியிருக்கவும், உலகத்திலுள்ள பல பேர்களுக்குள்ளும், காணப்படுகிற அனைவரோடும் எல்லாம் இனிதாகக் கூடி வாழ்ந்து மகிழாமல், ஒருவன், எவரோடும் கூடாமல் விலகி நின்று, தான் தனியாகவேயிருந்து பிறரோடு பகைமை பாராட்டுதல் எதற்காகவோ?

‘           ‘அப்படித் தனித்திருந்து பகைமை பாராட்டுதல் புல்லறிவாண்மையின் விளைவு' என்பது கருத்து. தண்டி கெட்டு விலகி நின்று.

 1. எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி

வைதான் ஒருவன் ஒருவனை ;- வைய 

வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான் 

வியத்தக்கான், வாழும் எனின். 

பலபேர் கூடியிருந்த அவைக்கு முன்னே ஒருவன் சென்று அங்கிருந்த ஒருவனை இகழ்ந்து பேசி வைதான். அப்படி அவன் வையவும் அவனால் வையப்பட்டவன் பொறுமையுடன் சும்மா இருப்பானானால், வைதவன் அதன் மேல் வாழான். அங்ஙனம் இருந்த பின்னும், அவன் உயிரிழக்காது வாழ்ந்தானென்றால் அவன் வியக்கத்தக்கவனே யாவான்!

'அவையிற் சென்று ஒருவரை எள்ளி வைதல் புல்லறிவாண்மை ' என்பது கருத்து.

 1. மூப்புமேல் வாராமை முன்னே , அறவினையை

ஊக்கி, அதன்கண் முயலாதான், - நூக்கிப்

'புறத்திரு; போகு' என்னும் இன்னாச்சொல் இல்லுள் 

தொழுத்தையாற் கூறப் படும். 

தன் உடலின் மேல் மூப்பானது வந்து சேராமைக்கு முன்பாகவே, அறச்செயல்களை மேற்கொண்டு, அந்த வகையிலே முயற்சி எடுத்துக் கொள்ளாதவன், தன் வீட்டினுள்ளேயே ஒதுக்கித் தள்ளப்பட்டும், வெளியே போய் இரு. இவ்விடம் விட்டுப் போய்விடு' என்றும் சொல்கிற இனிமையில்லாத சொற்களை, வேலைக்காரியாலும் சொல்லப் படுகின்ற கேவலமான ஒரு நிலைமையே அடைவான்.

‘புல்லறிவாளன்' பொருள் தன் உரிமையிலிருக்கும் போது அறஞ் செய்யாமல், முதுமைப் பருவத்திலே அப்படிச் செய்ய நினைப்பினும், பொருள் அவன் ஆட்சியில் இல்லாததால், அவமானப்படுதலே நேரும்' என்பது கருத்து.

 1. தாமேயும் இன்புரார், தக்கார்க்கும் நன்றாற்றார்

ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார்;-தாம் மயங்கி 

ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் 

போக்குவார் புல்லறிவி னார். 

அற்பமான அறிவை உடையவர்கள், பொருள் பெற்ற காலத்துத் தாமாகிலும் இன்புறமாட்டார்கள், தகுதியுடையவர்க்குக் கொடுத்து உதவி நன்மை செய்யவும் மாட்டார்கள், உயிருக்குப் பாதுகாப்பாகப் பொருந்திய நல்ல அறநெறியினையும் அடையமாட்டார்கள், தாங்கள் மயக்கங் கொண்டு, அந்தச் செல்வத்திலே கிடந்து உறங்கித் தம் வாழ்நாளை எல்லாம் வீழ்நாளாகவே கழிப்பார்கள்

'புல்லறிவாளர் செல்வம் பெற்றாலும், அதன் பயனை அநுபவியாது சாவார்கள்' என்பது கருத்து.

 1. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி

இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் 

பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார், கைகாட்டும் 

பொன்னும் புளிவிளங்கா யாம். 

இளமைப் பருவத்திலேயே, தாம் மரணமடைந்தபின் போகும் இடத்திற்குரிய தருமப் பயனான கட்டுச் சோற்றை மிகவும் அழுத்தமாகக் கட்டித் தோள் மூட்டையாக அமைத்துக் கொள்ளாதவர்கள் எல்லாரும் புல்லறிவாளர்கள் பணத்தைச் சிக்கென அழுத்தமாகப் பற்றிக் கொண்டு, 'தருமத்தைப் பற்றி பின்னே கருதுவோம்' என்றிருக்கும் மூடர்கள், தம் சாவுக் காலத்திலே தானஞ்செய்ய நினைத்துக் கையாற் சைகை காட்டும் பொன் திரளும் கூடப் புளிப்பான விளாங்காயாகி விடும்.

'போகிற காலத்தில் அவன் தருமஞ் செய்ய | நினைத்தாலும், அவன் பழைய குணமறிந்த பிறர் அதற்கு ஏற்பன செய்யார்; அவன் எண்ணம் நிறைவேறாது போகும்' என்பது கருத்து.

 1. வெறுமை இடத்தும், விழுப்பிணிப் போழ்தும்

மறுமை மனத்தாரே யாகி, - மறுமையை 

ஐந்தை அனைத்தானும், ஆற்றிய காலத்துச் 

சிந்தியார் சிற்றறிவி னார். 

புல்லறிவாளர்கள், செல்வமில்லாத காலத்திலும், மிகுந்த நோய் வந்து பற்றிய காலத்திலும் மறுமைக்குரிய அறத்தினைச் செய்யும் கருத்தினை உடையவர்களாகி இருப்பார்கள். செய்யக் கூடிய காலத்திலோ, மறுமைக்குரிய தருமச் செயல்களைச் சிறு கடுகின் அளவாயினும் சிந்திக்கவே மாட்டார்கள்.

'தமக்குத் துன்பம் வந்த காலத்தில் தருமத்தைப்பற்றி நினைக்கும் சிற்றறிவினர், அது நீங்கிய காலத்து அந்தத் தரும் நினைவையும் அடியோடு மறந்து விடுவார்கள்' என்பது கருத்து.

 1. என்னே மற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்

கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ 

அளவிறந்த காதற்றம் ஆருயிர் அன்னார்க் 

கொளவிழைக்கும் கூற்றமுன் கண்டு. 

உலகத்திலே புல்லறிவாளர்கள், அறநெறிகளை இயற்றுவதற்கு உதவியான இவ்வுடலினைப் பெற்றிருந்தும், அளவு கடந்த ஆசைக்கு உரியவரான தம்முடைய ஆருயிர் அனையவரைக் கொண்டு போக முயற்சி செய்கிற கூற்றத்தின் செயலைக் கண்டும், தாம் தருமசிந்தனை இல்லாதவர்களாகித் தம் ஆயுளை வீணாகக் கழிக்கின்றார்களே? ஐயகோ? இது என்ன காரணமோ?

'யாருக்காகப் பொருள் சேர்க்கிறார்களோ அவரே போய்விட்ட பின்னும், பொருளைச் செலவிடாது உலோப ராயிருப்பவர் புல்லறிவாளர்' என்பது கருத்து.

 1. பேதைமை

பேதைமையாவது முழு மூடத்தனம் ஆகும். 'புல்லறிவு' சிறிது அறிந்தும் பெரிதும் அறியாமையும் உடைய செருக்கின் பாற் பட்டது. ஆனால், பேதைமையோ தானாக எதனையும் சிந்திக்கும் தன்மையே இல்லாத நிலைமை

இதனால், யாராயினும் ஒருவர், ஏதேனும் சொன்ன விடத்து, அதன் தராதரங்களை முற்றவும் தான் ஆராய்ந்து உணராமல் அதனையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, துன்பத்துக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படக்கூடும். ஆகவே, இத்தகையோர் நிலைமை மிகவும் ஆபத்தானது.

மனிதனின் உட்பகையாக விளங்கி அவனுடைய நற்செயல்களுக்கான முயற்சிகளிலே நடைக்கல்லாக விளங்குவது இப்பேதைமைப் பண்பாதலினால், இதனைப் பகை இயலுள் கொண்டனர்.

'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' என்னும் மாதர்க்கு அணிகலனாகிய பேதைமையும், இந்த முழு மூடத்தனமும் ஒரே தன்மையெனக் கருதுதல் வேண்டா . அது வேறு இது வேறு.

 1. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப, ஆமை

நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே - 

கொலைவல் பெருங்கூற்றங் கோட்பார்ப்ப, ஈண்டை 

வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. 

கொல்லும் தொழிலிலே வல்லமை உடையதான பெரிய கூற்றமானது, தம் உயிரைக் கொண்டு போவதற்குரிய தக்க வேளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, இவ்வுலக வாழ்வாகிய வலையினிடத்திலே சிக்கி மிகவும் களித்திருக் கிறவர்களுடைய தன்மையானது. வேடர்கள், உலைநீர்ப் பாத்திரத்தை அடுப்பின் மேல் ஏற்றித் தீமூட்ட, அப் பாத்திரத்திலே வேகுவதற்காக இடப்பட்ட ஆமையானது. தன்னுடைய ஆபத்தான நிலைமையைச் சற்றேனும் அறியாமல், அந் நீரிலேயே முழுகி முழுகி விளையாடிக் கொண்டிருப்பதைப் போன்றதாகும்.

பேதைமை உடையவரின் இயல்பு கூறப்பட்டது.

 1. பெருங்கடல் ஆடிய சென்றார், ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும்' என்றற்றால் - 

இற்செய் குறைவினை நீக்கி, அறவினை 

மற்றறிவாம்' என்றிருப்பார் மாண்பு. 

''குடும்பத்தின் நன்மைக்குச் செய்ய வேண்டிய காரியக் குறைகளை எல்லாம் முதலிலே போக்கிவிட்டு, அறவினைகளை எல்லாம் பின்னாலே கருதுவோம்" என்று கருதி இருப்பவர் களது தன்மையானது, பெருங்கடலிலே நீராடுவது குறித்துச் சென்றவர்கள், 'இக்கடலின் ஒலி முழுவதும் அடங்கிய பின்னர் நாம் நீராடுவோம்' என்று அது ஒலியடங்கக் காத்திருந்தாற் போன்றதாகும்.

'கடல் என்றும் ஒலியடங்காதது போலவே குடும்பக் காரியங்களும் என்றும் முற்றவும் நிறைவுறா . அதனால், அவ்வப்பொழுதே அறவினைகளில் மனஞ் செலுத்துக' என்பது கருத்து. செலுத்தாதார் பேதைமையாளர் என்பது தேற்றம்.

 1. குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு, ஐந்தும்

விலங்காமல் எய்தியக் கண்ணும், - நலஞ்சான்ற 

மையறு தொல்சீர் உலகம் அறியாமை 

நெய்யிலாப் பாற்சோற்றின் நேர். 

உயர்குடிப் பிறப்பும், நல்ல தவமுயற்சிகளும், கல்வியும், செல்வத்தாலாகும் குடித்தனப் பாங்கும், ஒழுக்கத்தின் முதிர்ச்சியும் ஆகிய இவ்வைந்தும் தவறாமல் ஒருவனுக்கு வந்து பொருந்திய போதும், நன்மை மிகுந்த குற்றமற்ற பழமையான சிறப்பையுடைய உலகத்துக்கு ஏற்ற செயல்களைச் செய்வதை அறியாமலிருப்பது, நெய் இல்லாத பாற்சோற்றுக்குச் சமமானதாகும்.

'இம்மையில் அவன் எல்லாம் பெற்றும் மறுமைக் காவன செய்யாததனால் பேதைமையாளனே' என்பது கருத்தாகும்.

 1. கல்நனி நல்ல, கடையாய மாக்களின்

சொல் நனி தாமுணரா வாயினும்; - இன்னினியே 

நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல், என்று 

உற்றவர்க்குத் தாமுதவ லான். 

பிறர் தம்மிடத்தே சொல்லும் சொற்களைத் தாம் கேட்டு உணர்ந்து கொள்ள மாட்டாதவராயினும், தம்மை அடைந்தவர் களுக்கு அப்போதே தம்மேல் நிற்பதற்கும், இருப்பதற்கும், படுப்பதற்கும் நடந்து செல்வதற்கும் என்ற காரியங்களுக்குத் தாம் உதவியாக அமைவதனால், கீழ்மையான மனிதர்களைக் காட்டினும், கற்களே ஒருவகையில் மிகவும் நல்லவைகளாகும்.

'பிறருக்கு உதவியாயிருக்கும் கற்கள், உதவாது பேதை மாக்களினும் சிறந்தவை என்று கூறுவதன் மூலம், பேதையர் கல்லினும் கடையர்' என்றனர்.

 1. பெறுவதொன்று இன்றியும், பெற்றானே போலக்

கறுவுகொண்டு, ஏலாதார் மாட்டும் - கறுவினால் 

கோத்தின்னா கூறி உரையாக்காற் பேதைக்கு 

நாத்தின்னானும், நல்ல சுனைத்து! 

தன்னாற் பெறத்தக்கதான பயன் ஒன்றேனும் இல்லாமலிருந்தும், ஏதோ ஒரு பயனைத் தான் அடைந்தவனே போலத் தன் சினத்தை ஏற்கத்தகாத எளியோரிடத்தினும் பகை கொண்டு, கோபத்தினாலே துன்பந்தரும் சொற்களைக் கூட்டிச் சொல்லி, அவர்களிடத்தே கடிந்து சொல்லாமற் போனால், பேதைமையாளனுக்கு நல்ல தினவானது அவனது நாக்கினை மிகவும் வருத்தும் போலும்.

'பயனிருக்கிறதோ இல்லையோ, பிறரைப் பழித்துப் பேசாமற் போனால் மூடனுக்கு நாத்தினவு தீராது' என்பது கருத்து.

 1. தம்கண் மரபில்லார் பின்சென்று, தாம், அவரை

எம்கண் வணக்குதும்' என்பவர் - புன்கேண்மை 

நற்றளிர்ப் புன்னை மலரும் கடற்சேர்ப்ப 

கற்கிள்ளிக் கையிழந் தற்று. 

நல்ல தளிர்களோடும் கூடிய புன்னை மரங்கள் மலர்ந்திருக்கும் படியான கடற்கரைச் சோலைகளுக்கு உரிய அரசனே! தம்மிடத்திலே எவ்வகையான ஒரு முறைமையும் இல்லாதவர்களின் பின்னே சென்று, அவர்களை எம்மிடத்தே வணங்கி நிற்கச் செய்வோம்' என்று கூறுபவர்களுடைய அற்பமான உறவானது, கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொண்டது போன்றதாகும்.

‘அற்ப குணமுள்ள மூடரை எவராலும் திருத்த முடியாது' என்பது கருத்து. அவருடைய உறவு கொள்பவருக்குத் தீங்காகவே முடியுமென்பது தேற்றம்.

 1. ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகின்

போகா தெறும்பு புறஞ்சுற்றும் ,- யாதும் 

கொடாஅர் எனினும், உடையாரைப் பற்றி 

விடாஅர், உலகத் தவர். 

ஒரு பாத்திரத்தின் உள்ளே நெய் இருக்குமானால் அது தமக்குக் கிட்டாததேயானாலும் அந்தப் பாத்திரத்தை விட்டு அகன்று போகாமல் எறும்புகள் அதன் வெளிப்புறத்திலேயே விடாமற் சுற்றிக் கொண்டிருக்கும். அதுபோலவே, செல்வம் உடையவரை அவர் எதுவும் கொடாதவரே என்றாலும், உலகத்திலுள்ள பேதை மாக்கள் அவர்களைப் பற்றிக் கொண்டிருப்பாரே யன்றி, விட்டு நீங்கவே மாட்டார்கள்.

'பேதைகள் உலோபிகளான செல்வர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்' என்பது கருத்து.

 1. நல்லவை நாள்தோறும் எய்தார்; அறஞ்செய்யார்

இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார் - எல்லாம் 

இனியார் தோள் சேரார்; இசைபட வாழார்

முனியார்கொல் தாம் வாழும் நாள்

ஒவ்வொரு நாளும் பெறத்தக்க நன்மைகளை நாடி அடையமாட்டார்கள்; தருமத்தையும் செய்யமாட்டார்கள் வறியவர்களுக்கு ஏதொன்றும் கொடுக்கவும் மாட்டார்கள் இனிமையான தம் மனைவியரது தோள்களைத் தழுவி இன்புறவும் மாட்டார்கள்; புகழ் உண்டாகும்படி வாழவும் மாட்டார்கள், இப்படிப்பட்ட மூடர்கள் தாம் வாழும் நாட்களை எல்லாம் வெறுக்கவாவது மாட்டார்களோ?

‘அப்படி வெறுக்காமலிருப்பது அதிசயமே' என்பது கருத்து. அவர்கள் வாழ்தல் பயனற்றது என்பது முடிவு.

 1. விழைந்தொருவர் தம்மை வியப்ப, ஒருவர்

விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்

பாய்திரைசூழ் வையம் பயப்பினும், இன்னாதே,

ஆய்நலம் இல்லாதார் மாட்டு. 

ஆராயப்பட்ட நற்குணங்கள் இல்லாதவர்களான மூடர்களிடத்திலே, எவராகிலும் ஒருவர் விரும்பித் தம்மைக் கொண்டாட, அப்படிக் கொண்டாடப்பட்ட மற்றொருவர், 'நாங்கள் விரும்பினோமில்லை' என்றிருக்கும் தொடர்பானது, முழங்குகின்ற ஒலியினைப் பொருந்திய பாய்ந்துவரும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த பூமி முழுவதையும் தருவதாயிருந்தாலும், சான்றோருக்கு இனிமையற்றதே யாகும்.

'மூடர் உறவு எவ்வளவு பெரிதானாலும் சான்றோர் அதனை விரும்ப மாட்டார்' என்பது கருத்து.

 1. கற்றனவும், கண்ண கன்ற சாயலும், இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின் 

மைத்துனர் பல்கி, மருந்திற் றணியாத 

பித்தன்' என்று எள்ளப்படும். 

ஒருவன் கற்ற கல்விகளும், அவனிடத்திலே மிகுதியாக வுள்ள மென்மைக் குணமும், அவனுடைய உயர் குடிப்பிறப்பும் என்னும் இவைகளெல்லாம், அயலார்கள் கொண்டாடி னால்தான் பெருமை அடையும். அவைகளை உடையவன், தானே அவற்றைச் சொல்லிக் கொண்டால் மைத்துனர்கள் அதிகமாகி, மருந்தினால் தணியாத பித்தங் கொண்டவன் இவன்' என்று இகழ்ந்து நகையாடவே படுவான்.

மைத்துனக் கேண்மையினர் பரிகாசம் செய்பவராதலால், பரிகாசஞ் செய்பவர் பெருகுதலை, மைத்துனர் பெருகி' என்றார். 'மூடன் தனக்குத்தானே பெருமை பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வான்' என்பது கருத்து.

 1. கீழ்மை

'கீழ்மையாவது' கீழமையான குணமுடைய மக்களது தன்மை. இத்தகைய குணம் உடையோர் எவ்வளவுதான் அறிவுறுத்தப்பட்டாலும், செல்வம், தகுதி முதலியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம் குணத்தைக் கைவிட மாட்டார்கள்.

இத்தகைய கீழ்மைக்குணம், ஒருவனை என்றும் நல்வழிகளிலே ஈடுபடவிடாமல் கீழான செயல்களிலேயே சதா செலுத்திக் கொண்டிருப்பதாகும். அறநெறிப்பட்டு ஒழுகித் தன் ஆன்மாவிற்கான உறுதிப் பயன்களைத் தேடுவதற்காகப் பெற்ற மனிதப் பிறப்பு, இந்தக் குணத்தினால் வெறும் பாழாகிக் கழியும்.

மேலும், இந்தக் குணத்தால், இவன் செய்யும் கீழ்த்தரமான செயல்களால் வரும் பழிபாவங்கள் இவனை அடுத்துப் பிறபிற பிறவிகளிலும் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். உட்பகைகளுள் ஒன்றான இதனைப் பற்றிக் கூறுவது இப் பகுதி.

 1. கப்பி கடவதாக் காலைத்தான் வாய்ப் பெயினும்

குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க 

கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும், கீழ் தன்

மனம்புரிந்த வாறே மிகும். 

வளர்ப்பவன், தன் கடமையாகக், காலத்தால் தானியத்தைத் தன் வாயிலே போட்டான் என்றாலும் கூடத் தன் இயல்பினாலே குப்பையைக் கிளறுதலை விட்டொழியாத கோழியைப் போல, மிகுந்த மேன்மை நிறைந்திருக்கிற நூற்களின் பொருள்களை விளக்கி விளக்கித் தெரிவித்தாலும், கீழ்மைக் குணமுடையவன் தன் இயல்பினாலே தன் மனம் போனபடி யேதான் வரம்பு கடந்து நடப்பான்.

'கீழ்மையாளனின் மனம் என்றும் கீழ்மையான வற்றிலேயே செல்லும்' என்பது கருத்து.

 1. காழாய கொண்டு, கசடற்றார் தம்சாரல்

தாழாது போவாம்' என வுரைப்பின் - கீழ்தான்

உறங்குவாம் என்றெழுந்து போமால். அஃதன்றி 

மறங்குமாம். மற்றொன் றுரைத்து. 

''உறுதியான நூற்பொருள்களைத் தமதாக்கிக் கொண்டு குற்றமற்றவராக விளங்கும் பெரியோர்களின் பக்கலிலே, நாம் காலந்தாழ்த்தாது போவோம்' என்று சொன்னால், கீழ்மைக் குணம் உடையவன், 'நாம் உறங்குவோம்' என்று சொல்லி உறங்குவதற்கு எழுந்து போவான், அஃதன்றியும் வேறொரு காரணத்தைச் சொல்லியும் வரமறுத்துச் செல்வான்.

'கற்றவரிடம் போவதையே வெறுத்தும் மறுத்தும் ஒதுங்கிப் போவான் கீழ்மகன்' என்பது கருத்து.

 1. பெருநடை தாம் பெறினும், பெற்றி பிழையாது

ஒருநடையர் ஆகுவர், சான்றோர்; - பெருநடை 

பெற்றக் கடைத்தும், பிறங்கருவி நன்னாட! 

வற்றாம் ஒருநடை, கீழ். 

விளங்குகின்ற மலையருவிகளுடைய நல்ல நாட்டை உடையவனே! சான்றோர்கள் பெரிய சிறப்பினையே தாம் பெற்ற காலத்தினும், தம்முடைய தன்மையினின்றும் எள்ளளவும் மாறுபடாமல், எப்பொழுதும் ஒரே நடத்தையுடையவர்கள் ஆவார்கள். கீழ்மகனோ பெரிய சிறப்பினைத் தன் ஊழ்வினை வசத்தினால் பெற்ற காலத்திலும் தன் முந்திய நடத்தைக்கு மாறுபட்ட ஒரு நடத்தையிலேயே வல்லவனாகத் திகழ்வான்.

‘எவ்வளவு மேன்மை வந்தாலும் சான்றோர் தம் சிறந்த பண்புகளின்றும் மாறாதவர்களாயிருப்பர். கீழ் மக்களோ, பெருமை பெற்ற காலத்துச் செருக்கிக் குணம் வேறுபடுவர்' என்பது கருத்து.

 1. தினையனைத்தே ஆயினும் செய்தநன்று உண்டால்

பனையனைத்தா உள்ளுவர், சான்றோர் ;- பனையனைத்து 

என்றுஞ் செயினும், இலங்கருவி நன்னாட

நன்றில் நன்றறியார் மாட்டு 

விளங்குகின்ற மலையருவிகளையுடைய நல்ல நாட்டை உடையவனே! ஒருவன் செய்த உதவியை, அது தினைத் தானியத்தின் அளவிற்குச் சிறியதேயானாலும், சான்றோர்கள், பனையளவு பெரிதாகக் கருதுவார்கள். என்றும் பனையளவான உபகாரங்களைச் செய்து கொண்டேயிருந்தாலும் செய்த நன்றி அறியாத கீழ் மக்களிடத்திலே அவ்வுதவிகள் சிறப்பு உடையனவாக ஒருபோதும் நினைக்கப்படவே மாட்டா

'கீழோர் நன்றியறிதலும் அற்றவர்கள்' என்பது கருத்து.

 1. பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும், நாய் பிறர்

எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் - அச்சீர்,

பெருமை உடைத்தாக் கொளினும், கீழ் செய்யும் 

கருமங்கள் வேறு படும். 

பொற்கலத்திலே நல்ல உணவை இட்டு ஊட்டி ஊட்டி உபசரித்து வளர்த்து வந்தாலும், நாயானது, பிறருண்டு எறிந்த எச்சில் இலைக்கே கண் இமையாது எதிர்பார்த்திருக்கும். அத்தன்மை போலவே, சிறப்புள்ளவனாக ஏற்றுக் கொண்டாலும் கூடக் கீழ்மகன் செய்யும் செயல்கள் எல்லாம் அந்தச் சிறந்த தன்மைக்கு வேறுபட்டனவாகவே என்றும் இருக்கும்.

'கீழோன் கீழ்மையான செயல்களையே எப்பொழுதும் செய்வான்' என்பது கருத்து.

 1. சக்கரச் செல்வம் பெறினும், விழுமியோர்

எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்;- எக்காலும் 

முந்திரிமேற் காணி மிகுவதேல், கீழ் தன்னை

இந்திரனா எண்ணி விடும். 

பூமண்டலம் முழுவதையுமே தமக்கு உரிமையாகக் கொண்டாற் போன்ற பெருஞ் செல்வத்தையே பெற்றாலும் சான்றோர்கள், எக்காலத்தினும், வரம்பு கடந்த சொற்களைச் சொல்லவே மாட்டார்கள். முந்திரி அளவான தன் சிறு செல்வத்தின் மேல் காணியளவான மற்றொரு சிறுதொகை அதிகமாகச் சேர்ந்து விட்டாலும் கீழ்மகன், தன்னைத் தேவேந்திரனாகவே எண்ணிக் கொண்டு வரம்பு கடந்து உடனே பேசத் தொடங்கி விடுவான்.

'கீழோர், தம்மிடத்தே சிறிது செல்வம் உயர்ந்தாலும், அதனாற் செருக்குற்று வரம்பு கடந்து பேசத் தொடங்கி விடுவார்கள்' என்பது கருத்து

 1. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்

செய்த தெனினும், செருப்புத் தன் காற்கே யாம்

எய்திய செல்வத்தர் ஆயினும் கீழ்களைச் 

செய் தொழிலாற் காணப்படும். 

குற்றமற்ற மாற்றுயர்ந்த பசும்பொன்னின் மேலாக, மாட்சிமையான இரத்தினங்களைப் பதித்துச் செய்யப்பட்டதே என்றாலும், செருப்பானது காலில் அணிவதற்கே என்றும் தகுதி உடையதாகும். அதுபோலவே பொருந்திய செல்வம் உடையவர்களானாலும், கீழ் மக்கள் அவர்கள் செய்யும் இழிவான தொழில்களால் இழிவுடையவராகவே கருதப்படுவர்.

'எத்துணைச் செல்வமுடையவராயினும் சான்றோர், கீழ் களைக் கீழ்களாகவே அவர்கள் செயல்களைக் கருதி மதிப்பர்' என்பது கருத்து.

 1. கடுக்கெனச் சொல்வற்றாம்; கண்ணோட்டம் இன்றாம்

இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் :- அடுத்தடுத்து 

வேகம் உடைத்தாம்; விறன்மலை நன்னாட! 

ஏகுமாம்; எள்ளுமாம்; கீழ். 

பெருமை பொருந்திய மலைகளுள்ள நல்ல நாட்டை உடையவனே! 'கீழ்மகனது தன்மையானது கடுமையாகப் பேசவல்லதாம்; கண்ணோட்டம் இல்லாததாம், பிறரிடம் உண்டான துன்பத்திற்கு மகிழ்வடைவதாம், அடிக்கடி கோபாவேசத்தை உடையதாம்; கண்ட விடத்துச் செல்வதாம்; பிறரை இகழ்ந்து பேசுவதாம்'' என்று எல்லாம் அறிவாயாக.

கீழ்மக்களது இயல்புகள் இதன்கண் சொல்லப்பட்டன. கடுக்கென - கடுமையாக வேகம் - ஆத்திரம்; கோபாவேசம்.

 1. 'பழையர் இவர்' என்று பன்னாட்பின் நிற்பின்

உழையினியர் ஆகுவர், சான்றோர், - விழையாதே

கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண் சேர்ப்ப! 

எள்ளுவர், கீழா யவர். 

நெய்தற் பூக்கள் தேனை ஒழுக்குகின்ற, ஒலிக்கிற கடலினது குளிர்ச்சியான கரையை உடையவனே! ஒருவர், தமது பின்னாக வந்து நின்றால் இவர்கள் பலநாள் பழகியவர்' என்று எண்ணி, அவர்களிடத்திலே இனிமையானவர்களாக விளங்குவர் சான்றோர்கள். கீழ்களோ அப்படித் தம்பின் பிறர் வந்து நிற்பதையும் விரும்பாதவராக, அவரை இகழ்ந்து பேசி நிந்திப்பார்கள்.

'கீழோர்கள் நட்பின் தன்மையை அறியாத கீழ்மைக் குணம் உடையவர்கள்' என்பது கருத்து

 1. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்

வையம்பூண் கல்லா , சிறுகுண்டை - ஐயகேள்

எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச் செய் 

தொழிலாற் காணப் படும். 

அரசனே! கேள் ; கொய்யத்தக்க புல்லைக் கொய்து கொடுத்தும், கழுவுதல் முதலியவற்றால் சுத்தப்படுத்தியும் நன்றாகப் பேணினாலும், சிறிய எருதுகள், வண்டியைப் பூண்டு இழுக்க மாட்டாவாம். அது போலவே, பொருந்திய செல்வம் உடையவர்களானாலும் கீழ்களை அவர்கள் செய்யுங் காரியங்களால் பயனற்றவரென அறிதல் கூடும்.

'எவ்வளவு மேன்மைப்படுத்த முயன்றாலும், கீழோர் கீழான செயல்களையே செய்வார்கள் என்பது கருத்து.

 1. கயமை

‘கயமை என்பதும் கீழ்மை என்பதும் ஒரே மனப் பண்பினைக் குறிப்பனவேயாகும். நல்ல குணங்கள் என்று பல காலுஞ் சொல்லப்பட்டனவெல்லாம் அமையாது ஒழிந்த சிறுமைக் குணமே, பொதுவாகக் கயமை என்று சான்றோரால் கூறப்படும்.

இக்குணம் உடையோரின் தன்மைகள், அவருடைய செல்வமும் பிற தகுதிகளும் எந்த உயரிய நிலைகளிலிருந்த காலத்தினும், கீழ்த்தரமானவைகளாகவே இருக்கும் என்பது தெளிவு.

இதனை முன் அதிகாரத்து ஓரளவு தெளிவுபடுத்தியதன் பின், மேலும் வற்புறுத்துவது கருதி, இப்பகுதியுள்ளும் வகுத்து உரைக்கின்றனர்.

இக்குணம் அமையாது காப்பது நல்வாழ்விற்கு இன்றியமையாதது என்பது கருத்தாகும்.

 1. ஆர்த்த அறிவினர் , ஆண்டிளையர் ஆயினும்

காத்தோம்பித் தம்மை அடக்கும் - எருவைபோல் 

தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல் 

போத்தரார், புல்லறிவி னார். 

நிறைந்த அறிவினை உடையவர்கள், தமது பருவத்திலே இளையவர்களே யானாலும், தம் புலன்களைத் தீய வழிகளில் செல்லாமல் தடுத்து பாதுகாத்துத் தம்மை அடக்கி ஒழுகுமாறு செய்து கொள்வார்கள், சிற்றறிவினரோ, தம் வயது முதிருந்தோறும் கெட்ட காரியங்களிலேயே முதிர்ச்சியுற்று, உழன்று வருந்தித் திரிந்து, கொறுக்கையைப் போல, உள்ளே தொளையாயிருப்பதனின்றும் ஒருபோதும் நீங்கவே மாட்டார்கள்.

வயது முதிர்ந்தாலும் புல்லறிவினரின் அறிவு தெளியாது என்பது கருத்து. கொறுக்கை - மேலே வன்மையாகத் தோன்றினும் உள்ளே தொளையுடையதாய் வன்மை யற்றிருப்பது. எருவை - எருவைச் சேவலும் ஆம் : கழுகின் ஒருவகை; இப்படிக் கொண்டால், கழுகைப்போல் என்றும் தீத்தன்மையினின்றும் நீங்கார்' என்க

 1. செழும்பெரும் பொய்கையுள் வாழினும், என்றும்

வழும்பறுக்க கில்லாவாம் தேரை;- வழும்பில்சீர் 

நூல்கற்றக் கண்ணும் , நுணுக்கமொன் றில்லாதார் 

தேர்கிற்கும் பெற்றி அரிது. 

செழிப்பான பெரிய குளத்தினுள்ளேயே எந்நாளும் தாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தவளைகள், தம் மேலுள்ள வழுவழுப்பான அழுக்கினை என்றும் நீக்கிக் கொள்ள மாட்டாவாம். அது போலவே நுண்ணறிவாகிய ஓர் ஆற்றல் தம்மிடத்தே இல்லாதவர்கள் குற்றமில்லாத சிறப்பையுடைய நூல்களைப் படித்த காலத்தும், அவற்றின் நுண்மையான பொருள்களை அறியும் தன்மை உடையவராதல் அருமையாகும்.

‘அறிவுப் பக்குவமற்ற மூடன் என்ன படித்தும் தெளிவடையான்' என்பது கருத்து.

 1. கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்

குணனேயுங் கூறற்கு அரிதால்; - குணன் 

அழுங்கக் குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு 

எற்றால் இயன்றதோ, நா! 

தொகுதிகளான மலைத்தொடர்களையுடைய நல்ல நாட்டை உடையவனே! ஒருவருடைய நல்ல குணங்களையும் கூட அவர் எதிரிலே நின்று முகஸ்துதியாகச் சொல்லுவதற்கு நா எழல் நமக்கு அருமையாயிருக்கும். அப்படியிருக்க, ஒருவரது எதிரிலேயே நின்று கொண்டு, அவரது நற்குணங்கள் அழியும்படியாகக் குற்றங்களையே எடுத்துச் சொல்லுகின்ற சிற்றறிவினர்க்கு அவர்களுடைய நாக்கு எந்தப் பொருளால் செய்யப்பட்டதோ?

'கீழோர், ஒருவர் உள்ளம் புண்பட்டு ஆத்திரங் கொள்ளும்படியாகக் குறைகூறித் திரியும் இயல்பினர்' என்பது கருத்து.

 1. கோடேந்து அகலல்குல் பெண்டிர்தம் பெண்ணீர்மை

சேடியர் போலச் செயல் தேறார்;- கூடிப் 

புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி 

மதித்திறப்பர், மற்றை யவர். 

பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குல் தடத்தையுடைய குலமகளிர்கள், தம்முடைய பெண்தன்மையைத் தமக்குப் பணிவிடை செய்யும் பாங்கியர் போலத் தாமே சிறப்பாக அலங்கரித்துக் கொள்ளும் தன்மையை அறிய மாட்டார்கள். அவர்களினும் வேறான வேசையர்களோ வெனில், புதிதாக வரும் நீர் பெருக்கினைப் போலத் தம்முடைய பெண்தன்மையை நன்றாக அலங்கரித்துக் காட்டி ஆடவர்களோடு கலந்து நடப்பார்கள்.

குலமகளிர் அலங்காரத்தால் தம் கணவரை ஆட்கொள்ளாமல், தாம் கலந்த காதலாலேயே ஆட்கொள்வர். வேசியரோ தம்மை வெளிப்பகட்டாக அலங்கரிப்பதன் மூலமே ஆடவரைக் கவர்வர். அவர்கள் போலப் பகட்டி ஊரை ஏமாற்றித் திரிபவரே கயவர்' என்பது கருத்து.

 1. தளிர்மேலே நிற்பினும், தட்டாமல் செல்லா

உளிநீரர் மாதோ, கயவர்;-அளிநீரார்க்கு 

என்னானும் செய்யார்; எனைத்தானும் செய்பவே 

இன்னாங்கு செய்வார்ப் பெறின். 

மிகவும் மென்மையான துளிரின்மேலே நின்றாலும், ஒருவர் தட்டித் தள்ளாமல் ஊடறுத்துப் போக மாட்டாத உளியின் தன்மையை உடையவர்கள் கயவர்கள். அருளையே தம் தன்மையாகக் கொண்டிருக்கும் சான்றோர்க்கு, அவர்கள் எந்தவொரு உதவியையும் செய்யமாட்டார்கள். ஆனால், தமக்குத் துன்பம் இழைத்துக் கேட்பவரைப் பெற்றால் அவர்கட்கு எவ்வளவானாலும் உதவி செய்வார்கள்.

'கீழோரை அச்சுறுத்தினாலும் துன்புறுத்தினாலும் உதவுவாரேயன்றித் தாமாகவே அருள் கொண்டு உதவார்' என்பது கருத்து.

 1. மலைநலம் உள்ளும் குறவன்; பயந்தரு

விளைநிலம் உள்ளும், உழவன்; சிறந்தொருவர் 

செய்த நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்,தன்னை 

வைததை உள்ளி விடும். 

குறவன் எப்போதும் மலையின் வளத்தையே நினைத்துக் கொண்டிருப்பான். பயிர் செய்யும் உழவன் தனக்குப் பயன்தந்த விளைநிலத்தையே நினைத்துக் கொண்டிருப்பான் அதுபோலவே, சான்றோர், தமக்குப் பிறர் ஒருவர் செய்த உபகாரத்தையே சிறந்ததாக எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கயவனோ, ஒருவன் தன்னைத் திட்டினதையே 'எப்போதும் மறவாமல் நினைத்துக் கொண்டிருப்பான்.

'நல்லவற்றை நினைக்கவும் செய்யான் கயவன்' என்பது கருத்து.

 1. ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்;- கயவர்க்கு 

எழுநூறு நன்றிசெய்து, ஒன்றுதீ தாயின்

எழுநூறும் தீதாய் விடும். 

தமக்கு முன்னம் ஓர் உதவியைச் செய்தவர் திறத்தில், சேர்ந்து உண்டான குற்றங்கள் நூறேயானாலும் அவற்றைச் சான்றோர் பாராட்டாமல் பொறுத்துக் கொள்வார்கள். கயவர்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து, ஒன்று மட்டும் தீமையாகி விடுமானால், முன் செய்த அந்த எழுநூறு நன்மைகளும் தீமைகளாகவே அவர்களுக்குத் தோன்றும்.

இதனால், கீழோரின் இயற்கை கூறப்பெற்றது.

 1. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன

மோட்டிடத்துஞ் செய்யார். முழுமக்கள் :- கோட்டை 

வயிரஞ் செறிப்பினும், வாட்கண்ணாய்! பன்றி 

செயிர்வேழம் ஆகுதல் இன்று. 

வாள்போன்ற கண்களை உடையவளே! நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம்முடைய தளர்ச்சியான காலத்தினும் செய்கிற நல்ல செயல்களை மூடர்கள் தம்முடைய உயர்வான காலத்திலும் கூடச் செய்ய மாட்டார்கள். தனது கொம்புகளிலே பூண் கட்டினாலும், பன்றியானது வீரங்காட்டும்படியான யானையைப் போலப் போர் செய்ய வல்லதாதல் இல்லையல்லவா!

'கீழோர்க்கு உயர்வு கொடுத்தாலும், அவர், உயர்வான செயல்களிலே ஈடுபடுவராகார்' என்பது கருத்து.

 1. இன்று ஆதும், இந்நிலையே ஆதும், இனிச் சிறிது

நின்று ஆதும்' என்று நினைத்திருந்து, - ஒன்றி 

உரையின் மகிழ்ந்து, தம் உள்ளம்வே றாகி 

மரையிலையின் மாய்ந்தார், பலர். 

"இன்றைக்கு நாம் செல்வம் உடையவராவோம்; இப்பொழுதே செல்வம் உடையவராவோம்; இனிமேற் சிறிது காலங்கழித்துச் செல்வம் உடையவராவோம்" - இப்படிச் சிந்தனை செய்துகொண்டே இருந்து, இவ்வாறு மென்மேற் சொல்லும் சொற்களின் அளவாலேயே தம் உள்ளத்திலே மகிழ்வடைந்து, தம்முடைய உள்ளம் இறுதியிலே செல்வம் பெறாததனால் மாறுபட்டுத் தாமரையிலையைப் போல இறுதியில் யாதும் பயன் பெறாமலே இறந்து போனவர்கள் தாம் இவ்வுலகிற் பலராவர்.

'செல்வம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லாத போதும், வருவதாக பெருமை பேசித் திரிதல் கீழோர் இயல்பு' என்பது கருத்து.

 1. நீருட் பிறந்து, நிறம்பசியது ஆயினும்

ஈரங் கிடையகத்து இல்லாகும்;- ஓரும் 

நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் 

அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து. 

தண்ணீரின் உள்ளேயே தோன்றித் தன் நிறத்திற் பசுமையே உடையதானாலும் சடையினுள்ளே ஈரமானது ஒருபோதும் இருப்பதில்லை. அதுபோலவே, நிறைவான பெரிய செல்வத்திலே எப்போதும் நிலை பெற்றிருந்த காலத்தும், பாறையாகிய பெரிய கல்லைப் போன்ற இரக்கமற்றவர்களையும், இவ்வுலகம் உடையதாக இருக்கின்றது.

‘கயவர் கல்நெஞ்சம் உடையவராகவே இருப்பார்கள்' என்பது கருத்து.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.