'பல் நெறி இய' லாவது ஒன்றுடன் ஒன்று தொடர் பற்றதான பல்வேறு வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும் எடுத்துச்சொல்லும் இயல் ஆகும்.
நாலடிச் செய்யுட்களை அதிகாரங்களாக வகுத்து, ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துப் பத்துச் செய்யுட்களாக அமைத்த சான்றோர், மேற்பட்ட செய்யுட்களை எல்லாம் இப்படித் தனியே ஓர் அதிகாரமாக அமைத்தனர் என்பார்கள் அறிந்தோர்.
இந்த இயலின் தலைப்பே இந்த அதிகாரத்தின் தலைப்பும் ஆகும். எனவே பல்வகையான நெறிகளையும் எடுத்துக் கூறுவது இந்த அதிகாரம் என்று கொள்க. இந்த இயல், இந்த ஓர் அதிகாரத்தை மட்டுமே கொண்டதாகும்.
- பன்னெறி
- மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்,
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் - விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு!
மேகங்கள் தவழ்ந்து செல்லும்படியான உயர்ந்த மாடிகளை உள்ளதாய், சிறப்புப் பொருந்திய காவலுள்ளதாய், ஆபரணங்களாகிய விளக்குகள் நிலைபெற்று விளங்கப் பெறுவதாய் இருந்தாலும், விரும்பும்படியான நற்குணங்களால் மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெற்றில்லாதவனுடைய அந்த மனையானது, என்ன பயனை உடையதாகும்? அது, கண்களாற் காண்பதற்கும் கூடாத ஒரு கொடிய காடேயாகும்.
எவ்வளவு சிறப்புடையதானாலும், நல்ல மனையாளற்ற வீடு, கொடிய காடேயாகும்' என்பது கருத்து.
- வழுக்கெனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும்,
இழுக்கினைத் தாம் பெறுவர் ஆயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
இயற்கையிலே கற்பொழுக்கம் இல்லாத மகளிர்கள், தளர்வேதும் இல்லாத சிறந்த வாள் வீரர்களின் சிறந்த பாதுகாவ லிலே இருந்தபோதும், எங்ஙனமாயினும் தம் ஒழுக்கத்தினின்றும் தவறுதலைப் பெறுவார்கள். அங்ஙனமாயின், அந்த இனிதாகப் பேசும் சொற்களையுடைய மகளிர்கள், சிறு குற்றத்தையாயினும் செய்யாத காலமும் சிறிதேயாகும். அவர்கள் நல்லொழுக் கத்தைக் கைக்கொள்ளாத காலமோ அதிகமாகும்.
'கீழான மகளிர், எத்துணைக் காவல் இருந்தாலும் அவற்றையும் மீறித் தம் கீழ்மையான நடத்தையிலேயே ஈடுபடுவார்கள்' என்பது கருத்து.
- எறி' என்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி;- அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை,
தான் செய்த தவறுக்காகக் கணவன் சினங்கொண்ட போது என்னை அடி, பார்க்கலாம்' என்று அவனை எதிர்த்து நிற்பவள் கூற்றத்திற்குச் சமானமாவாள் அதிகாலையிலே சமையல் அறைக்குள் போய்ச் சமையல் வேலையிலே ஈடுபடாதவள் தீராத நோய்க்குச் சமமாவாள். தான் சமைத்ததைத் தன் கணவனுக்கு உண்ணக் கொடாது தானே உண்டு விடுபவள் வீட்டிலே வசிக்கின்ற பேயாவாள். இப்படிப்பட்ட மூவரும், தம்மைக் கொண்ட கணவனைக் கொல்லும்படியான படை போன்றவர்கள் ஆவார்கள்.
'கணவனை எதிர்த்து நிற்பதும் வீட்டில் உணவு சமைக்காமலிருப்பதும், கணவனுக்கு இடாமல் தானுண்பதும் கணவன் உயிரை வாங்குவது போல்வனவாகும்' என்பது கருத்து.
- 'கடி' எனக் கேட்டும், கடியான்; வெடிபட
ஆர்ப்பது கேட்டும், அது தெளியான்;-பேர்த்துமோர்
இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல், என்பவே,
கற்கொண் டெறியும் தவறு.
இல்லற வாழ்வான துயர வாழ்வினைக் கைவிட்டு விடுவாயாக என்று சான்றோர் பலகாலுஞ் சொல்லக் கேட்டும் அதனைக் கைவிடமாட்டான். தலை வெடித்துப் போம்படியாக சாப்பறை முழங்குவதனைக் கேட்டும் வாழ்க்கை நிலையாமை யினை உடையது என்று தெளிவு கொள்ளான். மறுபடியும் ஒரு மனைவியைக் கொண்டு மகிழ்வாயிருக்கும்படி எண்ணுகின்ற தவறானது, கல்லெடுத்துத் தன்மேல் தானே எறிந்து கொள்ளும் குற்றம் போல்வதாகும் என்பர் பெரியோர்.
இது, ஒரு மனைவி இறந்த பின்னரும், மற்றொரு மனைவியை மணந்து இன்புறுவோம் என்று கருதுபவர்களைக் கண்டித்துக் கூறியதாகும்.
- தலையே, தவமுயன்று வாழ்தல்; ஒருவர்க்கு
இடையே, இனியார்கண் தங்கல் ; - கடையே,
புணரா தென் றெண்ணிப் பொருள் நசையால், தம்மை
உணரார்பின் சென்று நிலை.
தவநெறிக்கு உரிய முயற்சிகளிலே ஈடுபட்டு வாழ்தல் ஒருவர்க்கு மேலான வாழ்வாகும்; அஃதன்றி, நற்குண நற்செய்கைகளையுடைய இனிய மனைவியுடன் கூடி வாழ்தல் நடுத்தரமான வாழ்வாகும். கிடைக்கமாட்டாது என்று எண்ணிப் பொருளின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாகத், தம் மேன்மையினை அறியாத கயவர் பின்னே சென்று அவரை ஒட்டி வாழ்தலோ கடைத் தரமானதாகும்.
'கருமிகளின் பின்னே , அவர் பொருளைப் பெற விரும்பி ஒட்டிக்கொண்டு திரிவது இழிவானதென்பது கருத்து.
- கல்லாக் கழிப்பர், தலையாயார், நல்லவை
துவ்வாக் கழிப்பர். இடைகள்; கடைகள்
'இனி துண்ணேம்! ஆரப் பெறேம் யாம்! என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
முதற்றரமான அறிவினையுடையவர்கள், நூல்களைக் கற்றறிவதிலே தம் காலத்தைக் கழிப்பார்கள், நடுத்தர மானவர்கள் நல்ல வழியாற் கிடைத்த சுகபோகங்களை எல்லாம் அனுபவிப்பதிலே காலம் கழிப்பார்கள்; கீழ்த்தரமானவர்களோ ''யாம் இனிதாக உண்ணப் பெற்றிலேமே! செல்வத்தை நிரம்பப் பெற்றிலோமே!" என்று கருதுகின்ற வெறுப்பின் காரணமாகக் கண்ணுறக்கமும் கொள்ளாமற் கடந்து வருந்திக்கொண்டே இருப்பார்கள்.
'உள்ளத்தில் நிறைவுற்று மகிழாது, பிறரைக் கண்டு, ஏக்கத்தால் தூக்கமின்றி அலைக்கழிவர் கடையர்கள்' என்பது கருத்து.
- செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வய னிறையக் காய்க்கும் வளவயல் ஊர்!
மகனறிவு, தந்தை அறிவு.
செந்நெல் வித்துக்களால் உண்டாகிய செழுமையான முளைகள், பின்னும் அச்செந்நெற் பயிராகவே ஆகி விளைவதனால், அப்படிப்பட்ட செந்நெற் பயிர்கள் வயல்கள் நிரம்பும்படியாக விளைகின்ற வளமையான வயல்களாற் சூழப்பட்ட ஊர்களை உடையவனே ! மகனுடைய அறிவுத் திறமானது தந்தையின் அறிவுத் திறம் போன்றே அமைந்திருக்கும் என்றறிவாயாக.
செந்நெல் - ஒருவகை நெல் . இதனால் பரம்பரையாக வரும் அறிவுத்திறன் கூறப்பட்டது. குடிமையின் சிறப்பும் இதனால் அறியப்படும்.
- உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்,
புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போல்
கீழ்மேலாய் நிற்கும், உலகு.
பெருஞ் செல்வம் உடையவர்களாயிருந்த குடியினர்களும், கல்வியறிவு நிறைந்த சான்றோர்களும் தங்கள் தங்கள் நிலைமைகளின்றும் மாறிப்போக, இழிகுணத்தாரான வைப்பாட்டி மக்களும், கீழ்மக்களும் எங்கும் பெருகிக், காற்புறத்திலே இருக்கவேண்டியது தலைப்புறத்திலே இருப்பதாக இடம் மாறிக், குடையினது காம்பு போல, உலகமானது கீழ்மேலாய் நிற்கின்ற தன்மையினை உடையதா யிருக்கின்றதே
உலகின் சீர்கெட்ட நிலைமையை உளங்கொண்டு கொதித்த ஒருவர் கூறியது இது. புடைப் பெண்டிர் பொருள் கொடுப்பார் பக்கம் எல்லாம் சார்ந்திருக்கும் வேசையர்.
- இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப, அந் நோய்
தணியாத உள்ளம் உடையார் , - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட
வாழ்வின், வரைபாய்தல் நன்று.
இரத்தினக் கற்களை வாரிக்கொண்டு வந்து வீழ்கின்ற அருவிகளோடு கூடிய சிறந்த மலைகளுள்ள நல்ல நாட்டையுடையவனே! சிநேகிதர்கள் தம் மனத்திலேயிருக்கும் துன்பத்தைச் சொல்ல அந்தத் துன்பங்களைப் போக்குவதற்கு எண்ணாத உள்ளத்தை உடையவர்கள், உயிர் வாழ்ந்திருப்பதைக் காட்டினும், மலையிலிருந்து கீழே வீழ்ந்து தம் உயிரை விட்டுவிடுவதே அவருக்கும் உலகிற்கும் நன்மையாகும்.
'நண்பன் துயரைப் போக்காதவர் தற்கொலை செய்து கொள்வதே சிறந்தது' என்பது கருத்து.
- புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்,
விதுப்பற நாடின், வேறு அல்ல; - புதுப்புனலும்
மாரி யறவே அறுமே, அவரன்பும்
வாரி யறவே அறும்.
மழைக் காலத்திலே பெருகி வருகின்ற புதுநீர்ப் பெருக்கமும் அழகிய காதணியணிந்த வேசை மாதர்களுடைய சிநேகமும் ஆகிய இவ்விரண்டும், பதற்றமின்றி அமைதியாக ஆராய்ந்து பார்த்தால் தம்முள் ஒரே தன்மை உடையனவேயன்றி வேறுபடுவன அல்ல புதுநீர்ப் பெருக்கமும் மழை நீங்கினால் ஒழிந்துபோம்; வேசையர் நட்பும் பொருளின் வரவு நீங்கினால் ஒழிந்துபோம்.
வேசையர் உறவைக் கண்டித்து உரைத்தது இது.
பொருட்பால் முற்றும்.