நற்றிணை 391,
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஆழல் மடந்தை, அழுங்குவர் செலவே,
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பில்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், 5
பொன்படு கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழில் குன்றம் பெறினும், பொருள் வயின்
யாரோ பிரிகிற்பவரே, குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின்
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே. 10
Natrinai 391,
Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her
Do not cry, oh young woman!
He will not go, making your calm,
moist eyes like bright blue waterlilies
that drip water, to drop clear tears,
the man who had planned to part to
earn wealth, even if he gets the gold
producing Ēlil Mountain of Konkānam
ruler Nannan,
where bright-bangled women decorate
themselves with leaves shirked off their
bodies by buffaloes with wide heads and
dark, huge horns, picked up while grazing
on the creepers with dew in groves,
where shade is in patches like the markings
on tigers.
Notes:
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. தலைவன் மணம் புரியும் கருத்தினன் என்பதை உணர்த்தினாள். உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – எருமை நின்றொழித்த மலைப்பச்சை மகளிர் இழையணியாகக் கூட்டும் என்றது, தலைவன் ஈட்டும் பொருள் தலைவி இல்லறம் நிகழ்த்தி எஞ்சிடஉலகத்தார்க்கு பயன்பட்டு நிற்கும் என்பதனை உள்ளுறுத்தி நின்றது. புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பில் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியினது புள்ளி போன்ற புள்ளிகள் அமைந்த நிழலுடைய மரங்கள் செறிதலினிடையே, ஒளவை துரைசாமி உரை – புலியின் பொறி போன்ற புள்ளி பொருந்திய புதர்களின்கண் படர்ந்திருக்கும். வரலாறு: கொண்கானம், நன்னன், ஏழில் குன்றம். ஏழில் குன்றம் (7) – ஒளவை துரைசாமி உரை – இதனை இந்நாளில் எலிமலை என வழங்குகின்றனர். There are references to Ēlil Mountain in Akanānūru 152-13, 345-7, 349-9, Natrinai 391-7 and Kurunthokai 138-2.
Meanings:
ஆழல் மடந்தை – do not cry oh young woman, do not sink into sorrow oh young woman (ஆழல் – நீட்டல் விகாரம்), அழுங்குவர் செலவே – he will avoid going (செலவே – ஏ அசை நிலை, an expletive), புலிப் பொறி அன்ன – like the markings on tigers, like the stripes on tigers, புள்ளி அம் பொதும்பில் – in groves with spots of shade, on the bushes with spots, பனிப் பவர் மேய்ந்த – grazed on creepers with dew, grazed on winter’s creepers, மா இரு மருப்பின் – with dark large horns, மலர்தலைக் காரான் – wide-headed buffaloes, அகற்றிய – removed, தண்ணடை – fresh leaves, green leaves, ஒண் தொடி மகளிர் – young women with bright bangles, இழை அணிக் கூட்டும் – collect to make clothing and ornaments, பொன்படு கொண்கான – Konkānam chief from gold producing country, Konkānam chief from a country with gold, நன்னன் நல் நாட்டு ஏழில் குன்றம் பெறினும் – even if he were to get king Nannan’s Ēlil Mountain, பொருள் வயின் யாரோ பிரிகிற்பவரே – who can leave you and separate to earn wealth (யாரோ – ஓ அசைநிலை, an expletive, பிரிகிற்பவரே – ஏ அசை நிலை, an expletive), குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன – eyes like the bright blue waterlilies that drip water, நின் பேர் அமர் மழைக் கண் – your large calm moist eyes, தெண் பனி கொளவே – causing clear tear drops to drip (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 392,
மதுரை மருதன் இளநாகனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை
புள் இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர்
துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின்
பணை கொள் வெம்முலை பாடு பெற்று உவக்கும், 5
பெண்ணை வேலி உழைகண் சீறூர்
நன் மனை அறியின், நன்று மன் தில்ல,
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம், பானாள்
முனி படர் களையினும் களைப, 10
நனி பேர் அன்பினர் காதலோரே.
Natrinai 392,
Mathurai Maruthan Ilanākanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
It would be nice if your lover knows
our fine house in the small village
with palmyra fences. He can embrace
your desire-yielding, large breasts
that resemble the sweet palmyra fruits
that young boys with parched heads
seize rapidly after they stop weeping
which they start when their father
leaves them in the house, refusing to
take them along to hunt sharks with
great effort in the large ocean with
noisy birds.
He has great love for you. He might be
suffering in the seaside grove where he
used to come and meet you with a noble
heart. He will remove your great distress
at midnight.
Notes:
தலைவன் இரவுக்குறி வேண்டினான். அதற்கு உடன்பட்ட தோழி தலைவியிடம் கூறியது. தலைவன் மணம் புரியக் காலம் தாழ்த்தினான் என வருந்திய தலைவியிடம் கூறியதுமாம். இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தந்தையுடன் செல்ல முயன்றும் செல்லாது, சிறார் பனை நுங்கைப் பெற்று மகிழ்வர் என்றது, தலைவனை மணந்து அவனுடன் கூடி அவன் மாளிகையில் இல்லறம் நிகழ்த்த விரும்பும் தலைவி, அதற்கு இயலாமையின் தன் மனையகத்தே அவனுடன் கூடும் இன்பத்தை பெறுவள் என்பதனைக் குறித்தது. துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19). நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
Meanings:
கடுஞ்சுறா – harsh sharks, rapid sharks, எறிந்த – caught, கொடுந்தாள் – difficult effort, தந்தை – father, புள் இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென – since he went to the huge ocean with noisy birds without taking them with him, மனை – house, அழுது ஒழிந்த – cried and then stopped, புன்தலைச் சிறாஅர் – children with dried/scanty/dirty hair on their heads (சிறாஅர் – இசைநிறை அளபெடை), துனையதின் முயன்ற – got through quick effort, தீங்கண் நுங்கின்– like the palm fruits with sweet nungu (நுங்கின் – இன் உருபு ஒப்புப் பொருளது) பணை கொள் – large, வெம்முலை பாடு பெற்று உவக்கும் – he will be happy with the privilege of your desire-yielding breasts, பெண்ணை வேலி – palmyra fence, Borassus flabellifer, உழைகண் – in that place, சீறூர் – small village, நன் மனை – fine house, அறியின் – if he knows, நன்று – it would be good, மன் – அசை நிலை, an expletive, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle that implies desire, செம்மல் நெஞ்சமொடு – with a noble heart, with a great heart, தாம் வந்து பெயர்ந்த கானலொடு – in the seashore grove where he came and went, அழியுநர் போலாம் – he might be crushed it appears (போலாம் – உரையசை), பானாள் – midnight, முனி படர் – great sorrow, களையினும் களைப – he can get rid of it, நனி பேர் அன்பினர் காதலோரே – your lover who has great love for you (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 393,
கோவூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின்
கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்கப்,
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி 5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மின்னின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் 10
நேர்வர் கொல், வாழி தோழி, நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?
Natrinai 393,
Kōvūr Kilār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
May you live long, oh friend!
The man from the country,
……….where a dark male elephant,
……….happy that his female had given
……….birth to a calf in the shade
……….of a tall bamboo on the slopes,
……….stole bent clusters of millet to feed
……….his sad partner with abundant milk
……….in her breasts,
……….and a forest dweller threw a lit torch
……….rapidly, its flame lighting up the
……….mountains dense with bamboos,
……….and appearing like lightning streaks,
is aware of the distress his nightly visits
have caused us.
He has come to marry you. If our family
is agreeable to the wedding, will they be
agreeable to him? He will be coming as a new
man. We will see your shyness and restraint!
Notes:
வரைவு மலிந்தது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பிடியானையின் பசியைப் போக்கவேண்டி களிறு தினைக்கதிரை அழித்தலை நோக்கிய கானவன் எறிந்த எரி கொள்ளி எங்கும் சுடர் வீசித் தோன்றும் என்றது, தலைவி படும் காம நோயை ஆற்றும்பொருட்டு தோழி தலைவனைப் பழித்துரைக்க, அதனால் ஆற்றாத தலைவன் தலைவியை பெறுமாறு தலைவியின் சுற்றத்தார்க்கு அளிக்கக் கொணர்ந்த நிதியமும் கலனும் எங்கும் விளங்கித் தோன்றும் என்பதாம். அகநானூறு 112 – கண் கொள் நோக்கி நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே. கலித்தொகை 52 – புதுவை போலும் நின் வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே. பொ. வே. சோமசுந்தரனார்உரை– ‘நிலை கிளர் மீனின் தோன்றும்’ என்றும் பாடமாம். இதுவேசிறந்தபாடமாம். தன்நிலையிலேஒளிவீசும்விண்மீன்போலத்தோன்றும்என்றவாறு.
Meanings:
நெடுங்கழை நிவந்த – tall bamboo growing, நிழல்படு சிலம்பின் – on the mountain slopes with shade, கடுஞ்சூல் வயப் பிடி – a female elephant with first pregnancy, கன்று ஈன்று – gave birth to a calf, உயங்க – saddened, பால் ஆர் – full with milk, பசும் புனிறு – gave birth recently, தீரிய – to end, களி சிறந்து – very happy, வாலா வேழம் – an elephant that is not white, a black elephant, வணர் குரல் கவர்தலின் – since it stole the bent clusters of millet, கானவன் -a forest dweller, எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி – a torch that he threw rapidly, வேய் பயில் அடுக்கம் சுடர – causing the bamboo filled ranges to shine, மின்னி – shining, நிலை கிளர் மின்னின் தோன்றும் – appears like lightning streaks that keep moving (மின்னின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நாடன் – the man from such country, இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – for us to escape the distress of his coming at night (வரூஉம் – இன்னிசை அளபெடை), வரைய வந்த வாய்மைக்கு – as he has come to marry with honesty, ஏற்ப – accordingly, நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் – if our relatives are willing to give, அவருடன் நேர்வர் கொல் – will they be agreeable with him (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நம் காதலர் – your lover, புதுவர் ஆகிய வரவும் – he will be coming as a new man, நின் வதுவை – your marriage, நாண் ஒடுக்கமும் காணுங்காலே – when your shyness and restraint can be seen (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 394,
ஒளவையார், முல்லைத் திணை – தோழி சொன்னது, அல்லது வழியில் தலைவனை கண்டோர் சொன்னது
மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப்,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந்தேர்,
வன் பரல் முரம்பின் நேமி அதிரச், 5
சென்றிசின், வாழியோ, பனிக் கடு நாளே,
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந்தண்ணியன் கொல்? நோகோ யானே.
Natrinai 394,
Avvaiyār, Mullai Thinai – What the heroine’s friend said, or what someone on the path who saw the hero said
In the wide forest dense with trees,
an owl hoots sweetly from a parched
gnemai tree, with sounds like those
rising from a goldsmith’s workshop.
He went through this path on a cold
winter day, in his chariot decorated
with ornaments, its bells ringing,
as its wheels went over pebbles on
the hilly side. May he live long!
He has returned on the wasteland path
where clouds drizzle, decorated with tiny
spots of sandal paste on his chest.
He is cool and fragrant! Will I worry?
Notes:
வினை முற்றி மீளும் தலைவனிடம் கண்டார் ஒருவர் கூறியது. தோழி உவந்து கூறியதுமாம். நோகோ யானே (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இதற்கு நோவேனா? நோவேன் அல்லேன், ஒளவை துரைசாமி உரை – ஒருதலையாகத் தெளிய மாட்டாமையின் யான் மனம் நோவாநின்றேன். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).
Meanings:
மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து – in the wide forest dense with trees, அலந்தலை ஞெமையத்து இருந்த – on the parched gnemai tree top, குடிஞை – big owl, பொன் செய் கொல்லனின் – like from a goldsmith working with gold (கொல்லனின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இனிய தெளிர்ப்ப – with sweet sounds, பெய்ம் மணி ஆர்க்கும் – tied bells ringing, இழை கிளர் நெடுந்தேர் – tall chariot with bright ornaments, வன் பரல் முரம்பின் – in the gravel filled hilly area, நேமி அதிர – wheels making noises, சென்றிசின் – he went (படர்க்கை வினைமுற்றுத் திரிசொல், word with third person verbal suffix), வாழியோ – may he live long (ஓ – அசை நிலை, an expletive), பனிக் கடு நாளே – very cold winter day (ஏ – அசை நிலை, an expletive), இடைச் சுரத்து – on the wasteland path, எழிலி உறைத்தென – when clouds drizzled, மார்பின் குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு – with sandal paste spots on the chest, நறுந்தண்ணியன் கொல் – he is cool and fragrant, நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசை நிலை, an expletive),யானே – me (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 395,
அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாரை எலுவ? யாரே நீ எமக்கு,
யாரையும் அல்லை, நொதுமலாளனை,
அனைத்தால் கொண்க எம் இடையே நினைப்பின்,
கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன்
வேந்து அடு களத்து முரசு அதிர்ந்தன்ன, 5
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மரந்தை அன்ன, எம்
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. 10
Natrinai 395,
Ammoovanār, Neythal thinai – What the heroine’s friend said to the hero
Oh friend! Who are you? Who are you
to us? You are not anybody to us!
You are a mere stranger! That’s all!
Oh Lord of the shores! Since you do not
desire her whose beauty is like Maranthai
town, where the ocean is loud in the
evening when a cow moves away to its
land after it eats the many used flowers
worn by women who dive and play in the
tall waves that roar like battle drums of
Chēra King Kuttuvan with tall chariots
and fiercely arrogant elephants.
Return her virtue and leave!
Notes:
வரைவு கடாயது.
உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிர் சூடி வீசிய மலரைப் பசு தின்னும் என்றது, தலைவன் களவில் கூடிப் பின்னர்க் கைவிட்ட தலைவியை அயலவர் வந்து மணம் புரிய விரும்பி நின்றனர் என்று உணர்த்தி நிற்கும். வரலாறு: குட்டுவன், மரந்தை.
Meanings:
யாரை எலுவ – who are you oh friend (யாரை – முன்னிலைக் குறிப்புவினை), யாரே நீ எமக்கு – who are you to us, யாரையும் அல்லை – you are nobody (யாரை – முன்னிலைக் குறிப்பு வினை), நொதுமலாளனை – you are a stranger, அனைத்து ஆல் – it is of that nature, கொண்க – oh lord of the shores (ஆல் – அசைச் சொல், an expletive), எம் இடையே – among us, நினைப்பின் – if you think about it, கடும் பகட்டு யானை – fierce arrogant elephants, நெடுந்தேர்க் குட்டுவன் – King Kuttuvan with his tall chariots, Chēra king, வேந்து அடு களத்து முரசு அதிர்ந்தன்ன – like the drums of the kings in the battle field, ஓங்கல் புணரி – high waves, பாய்ந்து ஆடு மகளிர் – women who dive and play, அணிந்திடு பல் பூ – many flowers that they are wearing, மரீஇ ஆர்ந்த – ate together (மரீஇ – சொல்லிசை அளபெடை), ஆ – cow, புலம் புகுதரு – entering its land, பேர் இசை மாலைக் கடல் கெழு – with loud sounding evening ocean, மரந்தை அன்ன – like Maranthai town, எம் வேட்டனை அல்லையால் – since you do not desire her (ஆல் – அசை நிலை, an expletive), நலம் தந்து – returning her virtue/beauty, சென்மே – you leave (முன்னிலை ஏவல் வினைமுற்று, a second person command verb ending)
நற்றிணை 396,
பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பெய்து போகு எழிலி வைகு மலை சேரத்
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள்,
பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக்,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை 5
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே, பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி, 10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே?
Natrinai 396,
Unknown Poet – Kurinji Thinai, What the heroine’s friend said to the hero
Oh man from the country,
where, after raining, clouds reach the tall
mountains where honeycombs hang and
waterfalls roar, vēngai trees have decorated
the place with their new golden flowers,
a peacock makes itself beautiful playing on
the flowering branches with fragrant pollen,
and basks in the rays of the early morning
warm sun with its flock, on a boulder!
The affliction that your chest has caused
– who can I tell about this painful disease?
You spoke enticing words for many days, but
you do not show your grace. You are confused!
Notes:
வரைவு கடாயது. வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாயச் சொல்லியதுமாம். இரவுக்குறி மறுத்ததுமாம். உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை- மயில் வேங்கை மலரின் தாதினை அளாவி, தன் இனத்துடன் ஞாயிற்றின் இளவெயிலைத் துய்க்கும் என்றது, தலைவனும் தலைவியை மணந்து இன்பம் நுகர்ந்து தன் சுற்றத்துடன் வாழ வேண்டும் என்பதனை உள்ளுறுத்தி நின்று வரைவு கடாயதாம். செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6). நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
Meanings:
பெய்து போகு எழிலி – clouds went after raining, வைகு மலை சேர – reached the mountains where they stayed before, தேன் தூங்கு – honeycombs hanging, உயர் வரை – tall mountains, அருவி ஆர்ப்ப – waterfalls roar, வேங்கை தந்த – what the vēngai trees gave, Pterocarpus marsupium, வெற்பு அணி – mountain decorated, நன்னாள் – day’s fresh, பொன்னின் அன்ன – like gold, பூஞ்சினை துழைஇ கமழ் தாது ஆடிய – played in the fragrant pollen on the flowering branches stirring them, கவின் பெறு தோகை – beautiful peacock, பாசறை மீமிசைக் கணம் கொள்பு – crowding on a boulder with its flock (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), ஞாயிற்று உறு கதிர் இள வெயில் உண்ணும் – basks in the early morning sun’s rays, நாடன் – oh man from such country, நின் மார்பு அணங்கிய செல்லல் – the disease that your chest has caused, அரு நோய் யார்க்கு நொந்து உரைக்கோ – who can I tell about the difficult pain (உரைக்கு – தன்மை வினைமுற்று, first person verb ending, ஓ – அசை நிலை, an expletive), யானே – me (ஏ – அசை நிலை, an expletive), பல் நாள் காமர் நனி சொல் சொல்லி – for many days you said many loving words, ஏமம் என்று அருளாய் – you do not show grace, நீ மயங்கினையே – you are confused (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 397,
அம்மூவனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தோளும் அழியும், நாளும் சென்றென,
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே,
நோயும் பெருகும், மாலையும் வந்தன்று, 5
யாங்கு ஆகுவென் கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே.
Natrinai 397,
Ammoovanār, Pālai Thinai – What the heroine said to her friend
My arms are ruined; promised days
have gone by; my eyes have lost their
luster and ability to see, looking at the
long wasteland path, and confusion
reigns. My intelligence has been lost.
My love affliction has increased.
Evening time has arrived to cause me
distress. What will happen to me here?
I am not afraid of death. What I fear is
if I die, will I forget my lover in my next
birth if it is different.
Notes:
குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை என்று வருந்திய தலைவியைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறுகின்றாள். அவளிடம்தலைவிசொல்லியது.
ஒளவை துரைசாமி உரை – ‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (குறுந்தொகை 49) இவ்வாசிரியரே கூறுதல் காண்க. ஆதலால் அவர் பிரிவை ஆற்றியிருப்பேன். நீ கவலற்க என்பது குறிப்பெச்சம். தோழி கேட்டு ஆற்றாமை தீர்வாளாவது பயன் என்க. செத்தால் எய்தக் கடவ பிறப்புத் தலைமகற்கும் எனக்கும் உள்ள இத்தொடர்பே நிலைபெற அமையாது வேறுபடுமாயின், என் காதலனை மறத்தல் கூடுமென அஞ்சுகின்றேன் என்பாள் ‘ அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே’ என்றும் கூறினாள்.
Meanings:
தோளும் அழியும் – arms are ruined, நாளும் சென்றென – since days have gone by, நீள் இடை அத்தம் நோக்கி – looking at the long wasteland path, வாள் அற்றுக் கண்ணும் – eyes that have lost luster, காட்சி – seeing, தௌவின – they are ruined, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – my intelligence has left me and is confused and different, நோயும் பெருகும் – love affliction has increased, மாலையும் வந்தன்று – the disease-increasing evening time has arrived, யாங்கு ஆகுவென் கொல் யானே – what will happen to me, ஈங்கோ – here, சாதல் அஞ்சேன் – I am not afraid of death, அஞ்சுவல் – I am afraid (தன்மையொருமை வினைமுற்று), சாவின் – if I die, பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் – if my birth is different, மறக்குவேன் கொல் என் காதலன் – will I forget my lover (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt), எனவே – thus (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 398,
உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உருகெழு தெய்வமும் கரந்து உறையின்றே,
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே,
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே, 5
பல் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்
சென்மோ சேயிழை என்றனம், அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல் சிலவே, நல்லகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே. 10
Natrinai 398,
Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
God who causes fear does not
remain hiding;
the sun with spreading rays
sinks in the west;
young women playing ōrai games
join together and return to the
village beating their bellies,
their hair drenched by splashing
water that they squeezed out
making their hair dry.
In the grove with flowers,
I praised her and asked her,
“You with fine jewels! Can we
go ahead and leave?”
Without responding to me, the
delicate young woman cried,
clear tears from her pretty,
flower-like eyes wetting her
budding, young breasts on her
beautiful chest.
Notes:
பகற்குறி வந்து மீளும் தலைவனிடம் தோழி கூறியது. வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 -பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே. Ōrai games are played by girls in Natrinai 68, 143, 155 and 398. The heroine’s friend is suggesting that the hero come and marry her friend. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). வடியா – வடித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
Meanings:
உருகெழு தெய்வமும் – the god who causes fear, கரந்து உறையின்றே – does not remain hidden, விரி கதிர் ஞாயிறும் – the sun with spreading rays, குடக்கு வாங்கும்மே – bends to the west (வாங்கும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), நீர் அலைக் கலைஇய – with water splashing on their hair (கலைஇய – சொல்லிசை அளபெடை), கூழை வடியா – வடித்து, squeezed and drained the water, சாஅய் – disheveled, dried (சாஅய் – இசை நிறை அளபெடை), அவ் வயிறு அலைப்ப – hit on their stomachs, உடன் இயைந்து – joining together, ஓரை மகளிரும் – the young women playing ōrai games, ஊர் எய்தினரே – they went back to town, பல் மலர் நறும் பொழில் – groves with many fragrant flowers, பழிச்சி – praised, யாம் முன் சென்மோ – let us go ahead (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), சேயிழை – oh young woman with fine jewels, oh young woman with red jewels (விளி, address, அன்மொழித்தொகை), என்றனம் – we said, அதன் எதிர் சொல்லாள் – she did not respond to that, மெல்லியல் – the delicate young woman (அன்மொழித்தொகை), சிலவே – a little, நல் அகத்து – on the beautiful chest, யாணர் – budding, new, இள முலை நனைய – her young breasts getting wet, மாண் எழில் மலர்க் கண் – esteemed beautiful flower-like eyes, தெண் பனி கொளவே – to have clear tears (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 399,
தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்துக்
குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி 5
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி, நின் திரு நுதல் கவினே? 10
Natrinai 399,
Tholkapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or what the heroine said to her friend, as the hero listened nearby
Oh friend! Will the great beauty on
your forehead express pride when
the lord of the lofty mountains,
……….where waterfalls roar
……….in the soaring mountains,
……….blossoming red glory lilies
……….are opened by bees with stripes on
……….their wings when they come to eat,
……….bananas grow on beautiful slopes,
……….a male elephant protects his female
……….that has given birth to a calf
……….in the bright light from many
……….glittering gems dug up by pigs,
comes here with desire?
Notes:
தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான் என வருந்திய தலைவியிடம் தோழி கூறியது. தலைவி தோழியிடம் கூறியதுமாம். இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வண்டு வந்து உண்ணுமாறு காந்தள் மலரும் என்றது, தலைவன் தலைவியின் நலன் நுகர வருங்காலத்துத் தலைவியும் வெறுத்திடாது மகிழ்ந்திருத்தல் வேண்டிக் குறிப்பித்ததாம். உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மணியின் விளக்கத்தில் கன்று ஈன்ற பிடி களிறு புறம் காப்ப அதனோடு வதியும் என்றது, தலைவற்கு மகட்கொடை நேர்தற்குத் தமர் நேர்ந்த உள்ளத்தராக இருப்பினும், தலைவியின் வேறுபாடு பயந்த அலர்க்கு அஞ்சி தன்னையர் புறங்காப்ப தாய் தலைவியைப் பிரியாது உடனுறைவது என்பது.
Meanings:
அருவி ஆர்க்கும் – waterfalls roar, பெரு வரை – lofty mountain, அடுக்கத்து – in the mountain range, குருதி ஒப்பின் – like blood, கமழ் பூங்காந்தள் – fragrant glory lily flowers, வரி அணி சிறகின் வண்டு உண மலரும் – they blossom when bees with striped wings come to eat their pollen/honey (உண உண்ண என்பதன் விகாரம்), வாழை அம் சிலம்பில் – on the beautiful mountains with bananas, கேழல் கெண்டிய – pigs dug up, நில வரை நிவந்த – raised from the land, பல உறு திரு மணி – many bright beautiful gems, ஒளி திகழ் விளக்கத்து – in that bright light, ஈன்ற மடப் பிடி – a naive female elephant that gave birth, களிறு புறங்காப்ப – the male elephant protecting, கன்றொடு வதியும் – stays with her calf, மா மலை நாடன் – the man from such huge/dark mountains, நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் என்பது – will there be pride when he comes with love for his beloved (வரூஉம் – இன்னிசை அளபெடை), தருமோ தோழி – will it express oh friend, நின் திரு நுதல் கவினே – your splendid beautiful forehead (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 400,
ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
வாழை மென் தோடு வார்புறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென் ஆயின், இவண் நின்று, 5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறங்கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. 10
Natrinai 400,
Ālankudi Vankanār, Marutham Thinai – What the concubine said to the hero
Oh man from the town
where vālai fish with thick
back fins roll where reapers
place paddy sheaves from
from lovely fields
in which rice plants grow tall
and touch and sway the delicate,
long, low leaves of banana trees.
If I have to live without you,
staying here in pain, is there any
way to survive?
We have had a great friendship.
You do not know leaving from
my heart, as justice does not
know leaving the assembly of the
the brave Chōla king at Uranthai!
Notes:
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வாழையின் பூவை அசைக்கும் நெற்கதிரை மள்ளர்கள் அரிந்திட்ட அரிச்சூட்டருகே வாளை பிறழும் என்றது, தலைவியின் நெஞ்சை வருத்தும் காதற்பரத்தையின் செயல்கள் வாயில்கள் அடக்கவும் அவள் நெஞ்சிடத்துத் தலைவன் நீங்காதே இருக்கின்றான் என்பதாம். வரலாறு: சோழர், உறந்தை.
Meanings:
வாழை மென் தோடு – delicate sheaths/leaves of the banana trees, வார்பு உறுபு – long and lowered, ஊக்கும் – touch and sway, நெல் விளை கழனி – field where paddy grows, நேர் கண் – sweet to the eyes, செறுவின் – in the fields, அரிவனர் – the reapers, இட்ட – placed, சூட்டு அயல் – near the bundles of grain sheaves, பெரிய – big, இருஞ்சுவல் – dark nape, dark neck, வாளை பிறழும் ஊர – oh man from town where vālai fish leap, oh man from town where valai fish roll, Trichiurus haumela (ஊர – அண்மை விளி), நினின்று அமைகுவென் ஆயின் – if I have to live without you, இவண் நின்று – staying here, இன்னா நோக்கமொடு – with a painful outlook, எவன் பிழைப்பு உண்டோ – how can I survive, is there any way to survive, மறம் கெழு சோழர் உறந்தை – Uranthai town of the brave Chōla king, அவையத்து – in the assembly, அறம் கெட – for justice to be ruined, அறியாதாங்கு – not knowing, சிறந்த கேண்மையொடு – with great friendship, அளைஇ – get involved (சொல்லிசை அளபெடை), நீயே கெடு அறியாய் – you do not know leaving and staying away, என் நெஞ்சத்தானே – from my heart (ஏ – அசை நிலை, an expletive)