Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

11. பண்புக்கும் நேர்மைக்கும் அழிவே இல்லை

ஆனந்தும், வினோத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். இருவரும் உயிர் நண்பர்கள். நன்கு படிக்கக் கூடியவர்கள். அறிவாளிகள். மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர்கள்.

ஒரு முறை அவர்கள் இருவரும் கடைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பத்து வயதுச் சிறுவன், “சார், சார்!" என்று குரல் கொடுத்துக் கொண்டே ஓடி வந்தான்.

ஆனந்தும், வினோத்தும் திரும்பிப் பார்த்தார்கள்.

அந்தச் சிறுவன் மூச்சிரைக்க அவர்கள் முன்னே வந்து நின்றான். அவன் கையில் பல லாட்டரிச் சீட்டுகள் இருந்தன.

"சார்! பம்பர் லாட்டரி சார்.நாளை குலுக்கல் சார். முதல் பரிசு லட்சம் ரூபாய் சார். ஒரு சீட்டு வாங்குங்க சார்!" என்றான் அந்தச் சிறுவன்.

இருவரும் அந்தச் சிறுவனைக் கூர்ந்து பார்த்தார்கள்.

அவனது தோற்றத்தையும், நிலையையும் வைத்துப் பார்த்தவுடனேயே அவன் ஒரு ஏழைச் சிறுவன் என்று அவர்கள் உணர்ந்தார்கள்.

ஆனால் சோர்ந்து கிடக்கும் அவன் முகத்தில், கண்களில் மட்டும் ஏதோ ஒரு நம்பிக்கை ஒளி லேசாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

''சார்! நாளைக்கே நீங்க ஒரு லட்சாதிபதி, சார். ஒரு சீட்டு வாங்குங்க, சார். ஒரு ரூவாதான் சார்,'' என்று மேலும் வியாபார விஷயத்திற்கு வந்தான்.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ போப்பா!'' என்றான் ஆனந்த், சற்று எரிச்சலுடன்

"சார்! ஒரே ஒரு சீட்டு, சார். ஒரு லட்சம் பரிசு, சார்!'' என்று சிறுவன் கெஞ்சினான்.

"இந்தா! அதெல்லாம் நாங்க வாங்கறதில்லை. போடான்னா!" என்று அந்தச் சிறுவனை முறைத்தான் ஆனந்த்

வினோத்திற்குக் கூட லாட்டரிச் சீட்டின் மேல் அத்தனை உடன்பாடில்லை.

"இரு, ஆனந்த்! அவனை ஏன் விரட்டறே? அது அவன் பிழைப்பு," என்றான் வினோத்,

"இது ஒரு பிழைப்பா?" என்று கேட்டான் ஆனந்த் - வினோத்தைப் பார்த்து.

''ஆமாம். அவனுக்கு அது ஒரு பிழைப்புதான். நாம் அதை விமரிசிக்கக்கூடாது. ஆனந்த்! லாட்டரி சீட்டு வாங்குவது மூலமா லட்சாதிபதியாக நினைப்பது ஒரு கேவலமான, சோம்பேறித்தனமான செயல்தான். ஆனா இதை விக்கிறது மூலமா ஏதோ அவனும் கொஞ்சம் சம்பாதிக்கிறான். அவன் திருட முயற்சிக்கலை. பிச்சை யெடுக்கலை. உழைச்சுப் பிழைக்க வந்திருக்கான். அவனுக்கு இந்தத் தொழில் தெய்வம் மாதிரி. அதை நாம் தரக்குறைவாகப் பேசக் கூடாது!" என்றான் வினோத்.

"அவனை ஊக்கப்படுத்தறியா?'' என்று கேட்டான் ஆனந்த்.

''நேர்மையா உழைச்சுப் பிழைக்கணும்ங்கற அவனோட முயற்சியை ஊக்கப்படுத்தறதிலே தப்பே இல்லை. இவன் கிட்ட ஒரே ஒரு சீட்டு வாங்கினா இவனுக்கு அளவிலா சந்தோஷம் வரும். இது போல் எல்லா சீட்டும் விக்கும்ங்கிற தன்னம்பிக்கை வரும். சோம்பேறித்தனப்படாமே நாலு பக்கம் சுறுசுறுப்பா ஓடுவான். பல பேர்கிட்டே விக்க முயற்சிப்பான். பேசுவான். கெஞ்சுவான். இதெல்லாம் அவன் தன்னை இந்த சமூகத்தோட இணைச்சுக்கற ஒரு வாய்ப்புதான். இவனிடம் ஒரு சீட்டு வாங்கத்தான் போறேன்!" என்றான் வினோத்.

"வினோத்! இதென்ன பைத்தியக்காரத்தனம். இப்படித் தெருவிலே அலையற எல்லாருக்கும் வாழ்வளிக்க நாம என்ன கோடீஸ்வரங்களா?" என்று கேட்டான் ஆனந்த்.

வினோத் மெல்லப் புன்னகைத்தான். "கோடீஸ் வரங்க இது போன்ற ஏழைங்களுக்கு வாழ்வளிக்கறாங்கன்னு யார் சொன்னாங்க? நாம கூட இவனுக்கு என்ன வாழ்வளிக்கவா போறோம். ஒரு மனப்பூர்வமான உதவி செய்யப் போறோம். ஒரு ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கப் போறோம். எந்த நஷ்டமும் வந்திடாது. தற்சமயம் இவனோட சந்தோஷமே எனக்கு மேலாய்ப் படுது. தம்பி.. ஒரே ஒரு டிக்கெட் மட்டும் குடுப்பா!'' என்றான் வினோத்.

“வினோத்! வேணாம்!" என்று ஆனந்த் அவனைத் தடுத்தும் கேளாமல் பாக்கெட்டிற்குள் கையைச் செலுத்தினான் வினோத்.

அவனிடம் ஒரு ரூபாய்த் தாளோ, வேறு சில்லரை நாணயங்களோ இல்லை. எல்லாம் பத்து ரூபாய்த் தாளாக இருந்தன.

''தம்பி! ஒரு ரூபாய்த் தாளா இல்லை . ஒரு சீட்டுதான் வாங்கப் போறேன். பத்து ரூபாய்க்குச் சில்லறை இருக்கா?" என்றான் வினோத்.

சிறுவன் மிகச் சந்தோஷத்துடன் தனது சட்டைப் பையைத் துழாவி இருந்த பணத்தை எடுத்துப் பார்த்தான்,

ஐந்து ரூபாய் கூட இல்லை . "சார்! சில்லறை இல்லை சார். நோட்டைக் குடுங்க சார். யார்கிட்டேயாவது சில்லரை மாத்திட்டு வரேன்!'' என்றான் சிறுவன்.

இப்பொழுது வினோத்திற்கே சற்றுத் தயக்கம் வந்தது.

"பாய்ண்டுக்கு வந்திட்டான் பார்த்தியா, வினோத். நோட்டைக் குடுக்காதே. மீறிக் குடுத்தே பணம் திரும்பி வரவே வராது!" என்றான் ஆனந்த்.

ஆனந்தின் பேச்சு அந்தச் சிறுவனை மிகவும் வேதனைப்படுத்தியிருக்கிறது என்பதை அவன் முகம் நன்கு பிரதிபலித்தது. அதைக் கவனித்தான் வினோத்.

ஒரேயடியாக அவன் மீது அவநம்பிக்கை கொள்ளவும் வினோத் விரும்பவில்லை.

ஒரு பத்து ரூபாய் நோட்டை அவன் கையில் கொடுத்து, "சீக்கிரமாய்ச் சில்லரை மாத்திட்டு வா,'' என்றான் வினோத்.

“ஒரு நிமிடத்திலே வந்துடறேன், சார்!" என்று சொன்ன அந்தச் சிறுவன் லாட்டரி சீட்டைக் கூடக் கொடுக்காமல் விருட்டென்று துள்ளி ஓடினான்.

அருகில் இருந்த சில கடைகளில் சில்லறை கேட்பதை இருவருமே கவனித்தனர்.

யாருமே அவனுக்குச் சில்லரை கொடுக்காததால், அவன் சில்லரைக்காகப் பல இடங்களில் அலைந் தான். எங்குமே அவனுக்குச் சில்லரை கிடைக்க வில்லை . இறுதியில் ஒரு சந்திற்குள் புகுந்தான். அதன்பிறகு அவன் உருவம் தென்படவே இல்லை.

''போகலாமா, வினோத்!'' என்றான் ஆனந்த்.

"இன்னும் அவன் சில்லரை வாங்கி வரவே இல்லையே. கொஞ்சம் வெயிட் பண்ணலாம். வந்ததும் வாங்கிட்டுப் போகலாம்!'' என்றான் வினோத்.

"சில்லரை மாத்திட்டு வருவான்னு கனவு ஏதாவது கண்டியா? நான் வேணா பந்தயம் கட்டறேன். அந்தப் பையன் வரவே மாட்டான். சுளையாய்ப் பத்து ரூபாய் சம்பாதிச்சுட்டான்!" என்றான் ஆனந்த்.

''அப்படி யெல்லாம் சொல்லாதே, ஆனந்த். அவனைப் பார்த்தா ஏமாத்தறவன் மாதிரி தெரிய வில்லை. சில்லரைக்காக அலைஞ்சுட்டிருப்பான். எப்படியும் அவன் வருவான் என்று நம்பறேன்!'' என்றான் வினோத்.

"நீ எப்படி நம்பினாலும் நடக்கிறதென்னவோ அதேதான். அவன் வர மாட்டான் அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்த பத்து ரூபாயை இழக்க அவன் என்ன பைத்தியமா! வேணா இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாரு!'' என்றான் ஆனந்த்.

இருவரும் மேலும் காத்திருந்தார்கள். சிறுவன் வரவே இல்லை .

நேரம் ஆக ஆக வினோத் மனதிலும் சந்தேகம் வந்தது. மேலும் அரைமணி காத்திருந்தார்கள். போன சிறுவன் திரும்பவே இல்லை.

''இப்போதாவது புரிந்து கொண்டாயா, உலகத்தை!" என்றான் ஆனந்த்.

"ஆனந்த்! எதற்கும் இன்னும் ஒரு பத்து நிமிடம் வெயிட் பண்ணிப் பார்ப்போமே!'' என்றான் வினோத்

''பார்க்கணுமா! ஆல்ரைட்!'' என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான் ஆனந்த்.

பத்து நிமிஷம் சென்றது. சிறுவன் வரவில்லை . ஆனந்த் வினோத்தைப் பார்த்தான்.

"வா, போகலாம்!" என்று ஏமாற்றமும் சஞ்சலமும் அடைந்தவனாக மெல்ல நடந்தான் வினோத்.

பத்து ரூபாய் போனதைப் பற்றிக்கூட அவன் கவலைப்படவில்லை. மிகவும் திட்டமிட்டுத் தன்னை ஏமாற்றி விட்டானே என்ற குமுறல் அவனிடம் இருந்தது.

"ஒரு பொடியன் உன்னை ஏமாற்றி விட்டானே. எவ்வளவு சொன்னேன் கேட்டியா! இனிமேலாவது உலகத்தைப் புரிந்து கொள்!'' என்று வழியெல்லாம் புத்தி சொல்லிக் கொண்டே வந்தான் ஆனந்த்.

ஏனோ வினோத்தினால் அந்த ஏமாற்றத்தையும், அதனால் ஏற்பட்ட சஞ்சலத்தையும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒரு நிலையில் தன் மேலேயே அவனுக்கு வெறுப்பு வந்தது.

ஏறத்தாழ ஒரு மாதம் சென்று விட்டது. அந்த நாட்களில் அந்தச் சிறுவனைப் பற்றி மறந்தே போனான்.

ஒரு நாள் மாலை ஒரு புத்தகம் வாங்குவதற்காகக் கடைத் தெருப் பக்கம் சென்றான், வினோத்.

அப்பொழுது, ''சார்! சார்!'' என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பினான் வினோத்.

அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை .

அன்று பத்து ரூபாய் நோட்டுடன் காணாமல் போன அதே சிறுவன் நின்று கொண்டிருந்தான். --

"சார்! என்னைத் தெரியுதா? நான்தான் சின்னசாமி. ஒரு மாசத்துக்கு முன்னாலே உங்ககிட்டே சில்லரை தரேன்னு பத்து ரூபாய் வாங்கிட்டுப் போனேனே, ஞாபகமிருக்கா, சார்? அன்றைக்குன்னு யாருமே சில்லரை தர மாட்டேன்னுட்டாங்க, சார். பக்கத்துல தான் என் வீடு. அம்மாகிட்ட இருக்கான்னு கேட்கலான்னு போனேன் சார். எங்க அம்மாவும் அக்காவும் அழுதுகிட்டு இருந்தாங்க, சார். நோயாளி யாகக் கிடந்த எங்கப்பா செத்துப்போயிட்டார் சார். அப்ப எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல சார். நீங்க குடுத்த பத்து ரூபாயைக் கூட மறந்துட்டேன் சார்.

"கொஞ்ச நேரத்துக்குப் பின்னாலதான் சார் உங்க ஞாபகம் வந்துச்சு. உடனே பக்கத்துக் கடையில சில்லரை மாத்திக்கிட்டு இங்க ஓடிவந்து பார்த்தேன். நீங்களும் உங்க கூட வந்தவரும் இல்லை . சுத்துவட்டாரத்திலே தேடினேன் சார். எங்கேயுமே உங்களைக் காணோம் சார். அப்போதிலிருந்து டெய்லி உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நல்ல வேளையாக உங்களைப் பார்த்து விட்டேன் சார். சார்... இங்கேயே இருங்கள். ஒரு நிமிஷம், இதோ வந்துவிட்டேன்!'' என்று சொன்ன அந்தச் சின்னசாமி அந்த இடத்தை விட்டு ஓடினான்.,

ஐந்தே நிமிடத்தில் ஓடிவந்து தனது கையிலிருந்த சில்லரையை வினோத்திடம் கொடுத்தான், வினோத் அவற்றைப் பார்த்தான்.

ஒரு ஐந்து ரூபாய்த் தாளும், இரண்டு இரண்டு ரூபாய்த் தாள்களும் இருந்தன. வினோத் திகைத்துப் போய்ச் சின்னசாமியைப் பார்த்தான்.

''அன்றைக்குச் சில்லரை வாங்கப் போற அவசரத்திலே உங்க லாட்டரி டிக்கெட்டை உங்ககிட்ட குடுக்காமப் போயிட்டேன், சார். அந்த டிக்கெட்டை யும் பத்திரமா எடுத்து வச்சிருக்கேன் சார். அந்தச் சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருக்கு சார்!'' என்று சொல்லிவிட்டுக் கிழிந்த , தன் கால் சட்டைப் பையிலிருந்து ஒரு டிக்கெட்டை எடுத்து நீட்டினான்.

வினோத் பெரிய திகைப்போடு அந்த டிக்கெட்டை வாங்கினான்.

"இந்த லாட்டரிச் சீட்டுக் கடையிலே இதைக் குடுத்து ரூபாய் வாங்கிக்கங்க சார். நான் வரேன் சார்,'' என்று சொல்லிவிட்டுச் சிறுவன் சின்னசாமி ஓடினான்.

அசைவற்று நின்றிருந்த வினோத் தனது கையிலிருந்த பரிசு விழுந்த அந்த லாட்டரிச் சீட்டையும், மீதிச் சில்லரைப் பணத்தையும் பார்த்தான்.

"இந்தச் சின்ன வயதில் என்ன ஒரு நேர்மை! எனக்குச் சேர வேண்டிய ஒன்பது ரூபாயையும், பரிசு விழுந்த ஆயிரம் ரூபாயையும் அவனே எடுத்துக் கொண்டிருந்தால் அவனை என்ன செய்திருக்க முடியும்? இவற்றை உரியவரிடம் ஒப்படைத்தால் தான் மன நிம்மதி என்ற நிலையில் ஒரு மாதமாக இங்கு என்னைத் தேடியிருக்கிறான் என்றால்-"

கண்களில் மெல்ல நீர் துளிர்க்க, சுற்றிலும் சின்னசாமியைத் தேடினான்.

அவனை எங்குமே காணவில்லை.

உண்மை, பண்பு, நேர்மை இவையெல்லாம் முழுமையாகச் செத்துப் போய்விடவில்லை. இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன என்ற மன நிறைவோடு தனது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான் வினோத்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.