உலகில் எவ்வளவோ முட்டாள்கள் உண்டு. ஆனால் மகா மகா முட்டாளைப் பார்த்திருக் கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள்.
அப்படி ஒரு முட்டாள் இருந்தான். அவன் பெயர் மாணிக்கம். அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவனைச் செல்லமாக வளர்த்தார்கள்.
மாணிக்கத்தின் பெற்றோர் ஏழைகள். மற்ற தனம் படைத்தவர்கள் மாதிரி நம் குழந்தைக்கு ஏதும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தில் அவர்கள் மாணிக்கம் என்ன செய்தாலும் கண்டும் காணாது இருந்தார்கள்.
மாணிக்கமோ சோம்பேறியாக வளர்ந்தான். உண்ணவும் உறங்கவுமே பிறந்திருப்பவனாக எண்ணினான். பள்ளிக்குச் செல்லவில்லை. படிக்க வேண்டுமென்று ஆர்வம் காட்டவில்லை. எல்லா வற்றையும் விட எதைப் பேசினாலும் முட்டாள் தனமாகவும், எதைச் செய்தாலும் முன் யோசனை யின்றியும், செய்து வந்தான். இதனால் அவனுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. 'இப்படியா ஒரு பிள்ளையை வளர்ப்பார்கள்?' என்று மாணிக்கத்தின் பெற்றோரைக் குறை கூறினர்.
இதனால் அவர்கள் மிகவும் மனமுடைந்து போயினர். அவனைத் திருத்தவும் நல்வழிப் படுத்தவும் அவர்கள் முயன்ற முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின. மாணிக்கமோ நாளுக்கு நாள் முட்டாள் என்று பெயரெடுப்பதிலேயே முனைப்பாக இருந்தான். ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானான்.
அவனை நல்ல பிள்ளையாக அறிவுள்ளவனாகக் காண்போம் என்ற நம்பிக்கை அற்றுப் போன அவன் பெற்றோர், ஒருவர் பின் ஒருவராகக் காலமானார்கள். மாணிக்கம் யாருமற்ற அனாதை ஆனான். பெற்றோர் இருக்கும்வரை பெற்ற கடமைக்காகவாவது வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந் தார்கள். இவனும் வேளா வேளைக்குச் சாப்பிட்டுக் கொண்டும், தூங்கிக் கொண்டும் இருந்தான். அவர்கள் காலமாகி விடவே அவனுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூட எவருமில்லை. தானே தன் உணவைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றிற்று அவனுக்கு
ஒரு பணக்காரரின் வீட்டைச் சுற்றித் தோட்டம் ஒன்று இருந்தது. நீண்ட நாட்களாகக் கவனிக்கப் படாததால் அது காடாக வளர்ந்து புதராகக் கிடந்தது. பணக்காரரின் பெண்ணின் திருமணம் சமீபத்தில் வரவே தோட்டத்தைச் சீர்படுத்தி அதில் மலர்ச் செடிகளையும், காய்கறிச் செடிகளையும் வளர்க்க விரும்பினார் அந்தப் பணக்காரர். அதற்காக ஆள் கிடைப்பானா என்று பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
அந்தச் சமயம் பார்த்து அவரிடம் போய்ச் சேர்ந்தான் மாணிக்கம். மாணிக்கம் முட்டாளாக இருந்தாலும் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆள் நல்ல உரமேறி இருந்தான். அவனைப் பார்த்தால் கரடு முரடான இடத்தைச் சீர்ப்படுத்திப் பூக்களும் காய்களும் தருகிற செடி, கொடிகளை வைத்து வளர்ப்பான் என்று தோன்றிற்று பணக்காரருக்கு. உடனே அவனை வேலையில் சேர்த்துக் கொண்டார். மண்வெட்டி, கடப்பாரை, கூடை எல்லாம் கொடுத்து, தோட்டத்தில் போய் மாணிக்கத்தை வேலை செய்யச் சொன்னார். மாணிக்கம் அவைகளை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றான். வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டினான் முண்டாசைக் கட்டினான். கையில் மண்வெட்டி எடுத்துத் தோட்டத்தைச் சீர் செய்யலானான்.
உழைத்துப் பழக்கமில்லாத அவன் உடம்பு சில நிமிடங்கள் வேலை செய்ததுமே சோர்ந்து போயிற்று. அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான், மாணிக்கம். கை காலெல்லாம் விண் விண்ணென்று வலித்தன, தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து உடலில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். தூக்கம் கண்ணை அசத்தியது. தோட்டத்தில் ஜில்லென்று காற்று வீசியது. சிறிது நேரம் தூங்கி எழுந்து விட்டுப் பிறகு மீண்டும் வேலை செய்யலாமென்று தீர்மானித்தான்.
துண்டை மண் தரையில் விரித்து அதன் மீது படுத்துக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டான் தூக்கம்தான் அவனுடன் நெருங்கிய பழக்கம் கொண்டதாயிற்றே! மாணிக்கம் கண்களை மூடியதும் தூக்கம் அவனுடன் உறவாடத் துவங்கியது.
ஆனால் மாணிக்கத்தால் தூங்க முடியவில்லை. கீழே விரித்திருந்த துண்டின் கீழிருந்து ஏதோ ஒரு பொருள் அவன் முதுகை உறுத்திற்று. தன் தூக்கத்தைக் கெடுக்கும் அந்தப் பொருளின் மீது கோபம் கோபமாக வந்தது. அதை எடுத்துத் தூரப் போட்டு விட்டுப் படுத்தால்தான் நிம்மதியாகத் தூங்க முடியும் என்று தோன்றியது அவனுக்கு.
எழுந்து உட்கார்ந்து விரித்திருந்த துண்டின் கீழே கையை விட்டான். சற்றுக் கடினமான ஏதோ ஒன்று கையில் பட்டது. சின்னக் கல்லாக இருக்குமென்று எண்ணி அதைக் கையிலெடுத்துப் பார்த்தான்.
அது சின்னக் கல்லல்ல! ஒரு தங்க மோதிரம்.
அதைப் பார்த்ததும் மாணிக்கத்துக்கு அளவில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. தங்க மோதிரம் கிடைத்தது தான் செய்த அதிர்ஷ்டமே என்று எண்ணினான் மாணிக்கம். நல்ல கனமாக இருந்தது. ஒரு சவரன் எடை இருக்கும் போலத் தோன்றியது. விற்றால் நிறையப் பணம் கிடைக்கும் என்று தோன்றியது. சில நாட்களுக்கு வேலை செய்யாமல் சாப்பிடலாம். நன்றாகத் தூங்கலாம் என எண்ணினான்.
உள்ளங்கையில் வைத்து அதிலுள்ள மண் அழுக்கு எல்லாம் போக இரு கைகளாலும் தேய்த்தான் மாணிக்கம்.
அவன் தங்க மோதிரத்தைக் கையால் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே அதனுள்ளிருந்து புகை கிளம்பிற்று. புகை அதிகமாகி வான் நோக்கிக் கிளம்பிற்று. அப்போது அதனுள்ளிருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. அது நெடிதுயர்ந்து இருந்தாலும் கை கட்டி வாய் பொத்தி மிகவும் பணிவாக, “எஜமானரே! நான் உங்கள் அடிமை. நீங்கள் மோதிரத்தைத் தேய்த்தால் உடனே பிரசன்னமாகி விடுவேன். நீங்கள் இடுகிற கட்டளையை நிறைவேற்றுவேன்,'' என்று கூறிற்று.
அப்போது மாணிக்கம் மிகவும் பசியாயிருந்தான். நல்ல உணவாகச் சாப்பிட வேண்டுமென்று வெகு நாளாக ஆசை இருந்தது.
அதனால், "பூதமே! முதலில் எனக்கு விருந்து வை!" என்றான் மாணிக்கம்.
என்ன ஆச்சரியம்! மாணிக்கம் சொல்லி முடிக்கும் முன்பே பெரிய பெரிய கிண்ணங்களில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், எலுமிச்சஞ் சாதம், தேங்காய்ச் சாதம், சாம்பார், கேசரி, வடை, அவியல், பொரியல் எல்லாம் கொண்டு வந்து வைத்தது பூதம். அதன் மணம் மாணிக்கத்தின் நாசியைத் துளைத்தது. நாவில் நீர் ஊறிற்று. எல்லாவற்றையும் மடமடவென்று சாப்பிட ஆரம்பித்தான். அவன் கிண்ணங்களைக் காலி செய்யச் செய்யப் பூதம் கொண்டு வந்து கொண்டு வந்து நிரப்பியது. ஒரு பருக்கை பாக்கி யில்லாமல் அவ்வளவையும் தீர்த்து விட்டான் மாணிக்கம்.
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா? மாணிக்கத்துக்குத் தூக்கம் வந்தது. அருகிலிருந்த பாழ் மண்டபத்துக்குப் போய் மோதிரத்தைத் தேய்த்தான். பூதம் வந்தது. அதனிடம் மெத்தை தலையணை போர்வை கொண்டு வரச் சொன்னான். கொண்டு வந்து கொடுத்தது பூதம். அதில் சொகுசாகப் படுத்து ஆசை தீரத் தூங்கினான் மாணிக்கம்.
தூங்கி எழுந்ததும் மீண்டும் பசித்தது. மோதிரத்தைத் தேய்த்து பூதத்தை வரவழைத்தான். அதனிடம், “ஏ அடிமைப் பூதமே! அல்வா , லட்டு , ஜாங்கிரி, போண்டா, பஜ்ஜி எல்லாம் கொண்டு வா!'' என்று கட்டளையிட்டான். பூதம் அப்படியே யாவையும் கொண்டு வந்து அவன் முன் வைத்தது. எல்லாவற்றையும் சாப்பிட்டான் மாணிக்கம்.
தங்க மோதிரம் கையிலிருக்கிறவரை தனக்குச் சாப்பாட்டுக்குக் கவலை இல்லை என்று எண்ணினான் அவன். அதைத் தான் கையில் அணிந்திருப்பதை யாராவது பார்த்துவிட்டால், பரம ஏழையான இவனுக்குத் தங்க மோதிரம் எப்படிக் கிடைக்கும் என்று கேட்பார்களே, திருடியிருப்பான் என்று எண்ணி மன்னனிடம் புகார் செய்து விட்டால்? பரம ஏழையான தனக்குக் கிடைத்த மோதிரமும் போய் விடும். சிறைவாசமும் கிடைக்கும்.
மோதிரத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்த மாணிக்கம் மோதிரத்தைத் தேய்த்தான். பூதம் வந்தது. "ஏய் பூதமே! இந்த மோதிரத்தை நீயே வைத்துக்கொள். தேவைப்படும் போது கேட்கிறேன், கொடு!" என்று சொல்லி அதனிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு பூதம் மறைந்து விட்டது. தங்க மோதிரத்தைத் தான் மிகவும் பத்திரமாக இருக்கும் இடத்தில் சேர்த்திருக்கிறோம் என்று திருப்தியடைந்தான் மாணிக்கம்.
சிறிது நேரத்தில் அவனுக்குப் பசியெடுத்தது. ததை அழைக்க மோதிரத்தைத் தேய்க்கப் பானான். விரல் காலியாக இருந்தது. 'ஏய், பூதமே! "வா!" என்று தொண்டை கிழியக் கத்தினான். பூதம் வரவில்லை எப்படி வரும்? மோதிரத்தைத் தேய்த்தால் தானே வரும்? மோதிரத்தைத்தான் பூதம் எடுத்துச் சென்று விட்டதே.
பசியால் துடிதுடித்துத் தவித்தான் மாணிக்கம்.
மாணிக்கம் எவ்வளவு பெரிய முட்டாளாக, மகா முட்டாளாக இருந்தால் இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தைச் செய்திருப்பான் பார்த்தீர்களா? அவன் படித்து நல்ல அறிவுடன் இருந்திருந்தால் அவனுக்குக் கிடைத்த வாய்ப்பை இப்படி நழுவ விட்டிருப்பானா?