Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

13. புத்தர் சொன்ன புத்திமதி

அகிம்சையைப் போதித்த புத்த பெருமான் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. அவருடைய அமைதியான, பொறுமை நிறைந்த, சாந்த குணத்துக்கு, அறிவாற்றலுக்கு, அன்புடை மைக்கு ஒரு விளக்கமாக இன்றும் நிலவி வருகிறது.

புத்தர் தமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாதவர். ஆசைகளை விட்டொழித்தவர். ஆயினும், உலகில் உயிருடன் வாழ உடலிலுள்ள வயிற்றுக்கு உணவளித்தாக வேண்டுமே!

புத்த பகவான் தெருக்களில் தினசரி வந்து தம் அடியார்களிடமும், அன்பர்களிடமும் பிச்சை பெற்றுச் செல்வார். அதுவும் ஒரு வேளைக்குத் தேவையான உணவுக்கு மட்டுமே பிச்சை எடுப்பார்.

தனக்கு அன்புடன் பிச்சையிடும் மக்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறுவார். அவர்கள் குறைகளைக் கவனமாகக் கேட்பார். மனச் சஞ்சலங்களைத் தீர்ப்பார். குறைகளுக்குப் பரிகாரம் சொல்வார். நோயுள்ளவர்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்.

புத்த பிரான் எல்லாரும் விரும்பும் வண்ணம் இருந்ததால் அவர் புகழ் எங்கும் பரவிற்று. எல்லாரும் அருள்பாலிக்கும் அவரது கருணை உள்ளத்தைப் பற்றியே பேசினார்கள்.

அவ்வூரில் கலிங்கன் என்று ஒருவன் இருந்தான். கலிங்கம் என்றால் வேஷ்டி என்று பொருள். கலிங்கன் வேஷ்டி மட்டும்தான் அணிவான். மேலே துண்டோ, சட்டையோ போட்டிருக்க மாட்டான்.

கஞ்சன், மகா கஞ்சன். எச்சில் கையால் காக்கை ஓட்ட மாட்டான். அவன் வீட்டு வாயிலில் தொண்டை கிழிய நின்று கத்தினாலும், ஒரு பிடி அரிசி போட மாட்டான் பிச்சைக்காரர்களுக்கு.

அவன் எவ்வளவு கஞ்சனாக இருந்தாலும். அவனிடம் திரண்ட சொத்து பத்து இருந்தது. வீடு. நிலம், தோட்டம் என்று செல்வம் பல வழியில் சேர்ந்திருந்தது.

தன் வீட்டு வாசலில் வந்து மனமுருகப் பிச்சை கேட்பவர்களைப் பிச்சை இடாமல் வாயில் வந்தபடி திட்டுவான். திட்டுவதோடு நிற்காமல் அவர்களைக் கேவலமாகப் பேசி அடிக்கவும் செய்வான். சிலர் மீது வெந்நீரைக் கொட்டுவான். மண்ணை வாரி இறைப்பான்.

புத்த பிரான் கலிங்கன் வீட்டின் வாசலுக்குச் சென்று பிச்சை கேட்பார்.

அவர் மீது நாய்களை ஏவி விடுவான் கலிங்கன். நல்லவனாக நடித்து ஊரை ஏமாற்றுகிறான் என்று குற்றம் சாட்டுவான். ஏவலாட்களைக் கொண்டு அடிக்காத குறையாகக் கடுஞ்சொற்களை வீசி அவரை விரட்டுவான்.

புத்தபிரான் அவன் பேசுவதையோ, ஏசுவதையோ சிறிதும் பொருட்படுத்த மாட்டார். அவன் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கொஞ்சமும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் மலர்ச்சியான முகத்துடன் கலிங்கன் வீட்டிற்கு வந்து பிச்சை கேட்பார். அவன் பேச்சாலும், செயலாலும் தரும் தொல்லைகளை எல்லாம் மவுனமாகச் சகித்தபடி அவன் வீட்டில் சிறிது நேரம் நிற்பார். அவர் எவ்வளவு நேரம் நின்றாலும் கலிங்கன் ஒரு கவளம் சோறு கூட அவரது திருவோட்டில் போட மாட்டான். புத்த பிரான் சிறிது நேரம் அவன் வீட்டின் முன் நின்று விட்டு அடுத்த வீட்டிற்குச் செல்வார்.

அவர் சாந்த சொரூபியாக இருப்பது, கலிங்கனுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. தினசரி தான் அவரைத் திட்டுவதோடு, விரட்டவும் செய்தும் அவர் ஒரு நாள் கூட முகம் சுளிக்காதது, சினமடையாதது, திருப்பிப் பேசாதது கலிங்கனுக்கு வியப்பை அளித்தது.

புத்தர் பெருமான் பொறுமை காட்டக் காட்ட, சகிக்கச் சகிக்க, கலிங்கனுக்கு அவனுடைய கர்வமும், அகம்பாவமும், அலட்சியமும், ஆணவமும், எடுத்தெறிந்து பேசுதலும், ஏவலாளர்களை ஏவி விரட்டுகிற செயலும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. அவரது பொறுமை, சகிப்புத்தன்மை அவன் மனக் கண்ணைத் திறக்கச் செய்தது. அவரிடம் மதிப்பும், மரியாதையும் கொள்ள ஆரம்பித்தான்.

வழக்கம் போலப் புத்தர் பெருமான் அவன் வீட்டின் முன் வந்து நின்று பிச்சை கேட்டார்.

கலிங்கன், அவர் காலைத் தானே நீர் கொண்டு கழுவி வீட்டினுள் அழைத்து வந்து ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பகவானைப் பணிவுடன் வணங்கினான்.

பிறகு, "ஐயனே... இவ்வளவு நாட்களாக நீங்கள் என் வீட்டின் முன் நின்று பிச்சை கேட்டபோது ஒவ்வொரு நாளும் உங்களை வாயில் வந்தபடி திட்டுவேன். ஆனால், தாங்கள் அதைச் சற்றும் பொருட்படுத்தியதில்லை. அதுவுமின்றி என் வீட்டிற்கு வருவதையும் நீங்கள் நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் வந்து பிச்சை வேண்டுகிறீர்கள்... உங்களது நோக்கம் என்ன என்பதைத் தாங்கள் தயவு செய்து அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும்!'' என்று வேண்டினான்.

புத்த பிரான் புன்னகை பூத்தபடி, ''மகனே... நீ என்னை எதுவுமே சொல்லவில்லையே, செய்ய வில்லையே... உன்னை நீயே அல்லவா ஏசிக் கொண்டாய்...'' என்றார்.

''சுவாமி... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் என்னையே ஏசிக் கொண்டேனா?'' என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் கலிங்கன்.

"மகனே... நீ எனக்கு ஒரு பொருளைக் கொடுக்க விரும்புகிறாய் என்று வைத்துக் கொள்வோம். அதை ஏற்க விரும்பவில்லை நான். அப்பொழுது அப் பொருள் யாரைச் சேரும்?" என்று கேட்டார் புத்தர்.

''நான் கொடுப்பதை நீங்கள் ஏற்காவிட்டால் அது என்னைத்தான் சேரும்!" என்றான் கலிங்கன்.

"அதுபோல நீ கடுமையான வசவுகளையும், பழிச் சொற்களையும், வன்முறைச் செயல்களையும் என்னை நோக்கிப் பிரயோகித்தாய்... ஆனால் அவற்றை நான் ஏற்றுக் கொள்ளாது மறுத்து விட்டேன். அவையெல்லாம் அப்புறம் யாரைச் சேரும், மகனே?" என்று கேட்டார் புத்தர்.

"என்னைத்தான் சேரும்!'' என்ற கலிங்கன், தன் தவறை உணர்ந்து புத்தபிரான் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அதன் பிறகு, அவன் நல்லவனாக நடந்து, தான தருமங்கள் செய்து, பிறர் புகழ வாழ்ந்தான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.