ஒரு ஊரில் இரண்டு வியாபாரிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் கனகதுரை. இன்னொருவன் பெயர் ராஜதுரை. இருவரும் நகரத்துக்குச் சென்று துணிகள் வாங்கி வந்து சுற்று வட்டாரத்திலுள்ள பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று அவைகளை விற்று வியாபாரம் செய்து பிழைத்து வந்தார்கள்.
இருவருமே துணி வியாபாரிகளாதலாலும் திரும்பத் திரும்ப இருவருமே சில குறிப்பிட்ட ஊர்களுக்கே வியாபாரத்துக்குச் செல்வ தாலும் ஒருவருடைய வியாபாரம் மற்றவர் வியாபாரத்தைப் பாதிப்பதைச் சில நாட்களில் அறிந்தார்கள்
அதனால் இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து என்ன செய்தால் இருவரது வியாபாரமும் பாதிக்காமல் இருப்பதோடு, சுமுகமாகவும், கஷ்ட மில்லாமலும் நடக்கும் என்று ஆலோசித்தார்கள். யாராவது ஒருவர் துணி வியாபாரத்தை விட்டு விடலாமா என்றும் யோசித்தார்கள்.
வேறு எந்த வியாபாரமும் செய்யத் தங்களுக்குத் தெரியாததால் அந்த யோசனையை விட்டு விட்டு இருவரும் சேர்ந்தே துணி வியாபாரம் செய்வதெனத் தீர்மானித்தனர்.
இருவரும் சேர்ந்து துணி வியாபாரம் செய்ய நேர்ந்ததால் துணி மூட்டை மிகவும் பளுவாகவும், ஒருவர் தூக்கிச் செல்ல முடியாததாகவும் ஆகி விட்டது. அதனால் என்ன செய்வதென்று ஆலோசித்தார்கள். துணிகளைச் சுமந்து செல்ல ஒரு ஒட்டகம் வாங்குவதென்று தீர்மானித்தார்கள்.
ஒட்டக வியாபாரி ஒருவனிடம் சென்றார்கள். அவன் நிறைய ஒட்டகங்கள் வைத்திருந்தான். அவைகளை அவன் நிறைய விலை சொன்னான். அவ்வளவு விலையில் ஒட்டகம் வாங்கக் கனகதுரையும், ராஜதுரையும் தயங்கினார்கள். ஆளுக்குப் பாதி விலை போட்டு வாங்கிடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். ராஜதுரையிடம் பாதிக்கு மேல் போடவும் பணம் இருந்தது. கனக துரையிடமோ அவ்வளவு பணம் இல்லை. ஒட்டகத்தின் விலையில் கால் பாகப் பணம்தான் இருந்தது. என்ன செய்வது?
ராஜதுரை சொன்னான்: ''கனகதுரை! உன்னிடம் ஒட்டகத்தின் விலையில் பாதி கொடுக்கப் பணமில்லை. ஒட்டகம் வாங்க முடியாவிட்டாலோ நாம் வியாபாரம் செய்ய முடியாது. அதனால் என்ன செய்வது?'' |
'ராஜதுரை! நான் ஏழை. ஒட்டகம் வாங்கா விட்டால் நம்மால் துணிகளை எடுத்துச் சென்று விற்க முடியாது. என்னிடமோ ஒட்டகத்தின் விலையில் கால் பங்குப் பணம்தான் இருக்கிறது. அதனால் நீ என்ன சொல்கிறாயோ, அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நாம் வியாபாரம் செய்ய வேண்டும். அது தடைப்பட்டுப் போய் விடக் கூடாது!'' என்றான் கனகதுரை.
''அப்படி என்றால் நான் ஒன்று சொல்கிறேன். அதை நீ கேட்கிறாயா?"
“சொல் கேட்கிறேன்!" என்றான் கனகதுரை. ''ஒட்டகத்தின் விலையில் முக்கால் பங்கு நான் போடுகிறேன். கால் பாகம் நீ போடு!'' என்றான் ராஜதுரை.
"சரி!'' என்றான் கனகதுரை.
"ஒட்டகத்தின் மீது துணிகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்வோம். லாபத்தில் முக்கால் பங்கு எனக்கு. ஒட்டகத்தின் விலையில் நான் முக்கால் பங்கு போட்டிருக்கிறேனல்லவா, அதனால் உனக்கு லாபத்தில் கால் பங்குதான். ஏனென்றால் ஒட்டகத்தின் விலையில் நீ கால் பங்குதான் போட்டிருக்கிறாய்!'' என்றான் ராஜதுரை.
ஒன்றுமே இல்லாது போவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று கனகதுரை அதற்கு ஒப்புக் கொண்டான்.
இருவரும் ஒட்டகத்தின் மீது துணி மூட்டையை ஏற்றிச் சென்று ஊர் ஊராகப் போய்த் துணி வியாபாரம் செய்தனர். வியாபாரம் நடந்தது. ராஜதுரை லாபத்தில் முக்கால் பாகத்தைத் தான் எடுத்துக்கொண்டு கால் பாகத்தைக் கனகதுரையிடம் கொடுத்து வந்தான். கனகதுரையின் மனமோ மிகவும் கஷ்டப்பட்டது. துணிகள் வாங்க அவனும் பணம் போட்டிருக்கிறான். அதில் வரும் லாபமும் அநியாயமாக ராஜதுரைக்குப் போகிறதே என்று மிகவும் மனம் வருந்தினான். எப்படி இந்த வியாபாரக் கூட்டிலிருந்து விடுபடுவது என்று தெரியாமல் மனம் கலங்கினான்.
அப்போது ஒரு நாள் அவர்கள் இருவரும் ஒட்டகத்தின் மீது துணி மூட்டையை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்யச் சென்றார்கள். அது பண்டிகை ஒன்று நெருங்கும் காலம். அதனால் மக்கள் நிறையத் துணிமணிகள் வாங்கினார்கள். அவ்வளவு துணியும் விற்று நல்ல லாபம் கிடைத்தது. வழக்கம் போலக் கனகதுரைக்குக் கால் பங்கு லாபத்தைக் கொடுத்து விட்டுத் தான் முக்கால் பங்கு லாபத்தை வைத்துக் கொண்டான் ராஜதுரை.
ஒட்டகத்துடன் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு ஆற்றைக் கடக்க வேண்டி வந்தது. அவர்கள் ஒட்டகத்துடன் ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது சற்றும் எதிர்பாரா விதமாக ஆற்றில் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வந்து விட்டது. ஆற்று வெள்ளம் ஒட்டகத்தை மூழ்கச் செய்து சாகடித்து விட்டது. ஒட்டகம் இறந்து போய் விட்டது. ராஜதுரையும், கனகதுரையும் வெள்ளத்தில் நீச்சலடித்து எப்படியோ உயிர் தப்பிக் கரை சேர்ந்து விட்டார்கள். இறந்த ஒட்டகத்தின் உடல் கரை ஒதுங்கியது.
அதைப் பார்த்து அழ ஆரம்பித்தான் ராஜதுரை. அவன் தன் பங்குக்கு முக்கால் விலை போட்டு வாங்கிய ஒட்டகமாயிற்றே! ஒட்டகம் இறந்து விட்டதால் அவ்வளவு பணமும் போய் விட்டதே! இந்த நஷ்டத்தை எப்படி ஈடு செய்ய... கொஞ்சமாவது பணம் கிடைக்க என்ன செய்யலாமென்று யோசித்தான் ராஜதுரை.
கனகதுரையைப் பார்த்து, ''கனகதுரை! நாம் விலைக்கு வாங்கிய ஒட்டகம் இறந்து விட்டது பார்த்தாயா? என்ன கொடுமை...'' என்றான்.
''ராஜதுரை... ஒட்டகத்தின் விலையில் முக்கால் பங்கு நீதான் போட்டிருக்கிறாய். உன் கஷ்டமும், நஷ்டமும் எனக்குத் தெரிகிறது... நான் என்ன செய்ய?" என்றான் கனகதுரை.
''நான் முழு நஷ்டமும் அடையாமல் இருக்க நீ ஒட்டகத்தின் விலையில் கால் பங்கை எனக்குக் கொடுத்துவிடு. நஷ்டம் நம் இருவருக்கும் சரிபாதியாக விடும்!" என்றான் ராஜதுரை.
"அது எப்படி முடியும், ராஜதுரை? இதுவரை ஒட்டகத்தை வைத்து நாம் செய்து வந்த வியாபாரத்தில் லாபத்தில் முக்கால் பங்கை நீ எடுத்துக் கொண்டு கால் பங்கைத்தான் எனக்குக் கொடுத்து இருக்கிறாய்... நஷ்டத்தில் சரி பங்கை எனக்குக் கொடுக்க விரும்புகிற நீ லாபத்திலும் அரை பங்கைக் கொடுக்கவில்லையே!" என்றான் கனகதுரை.
இருவரும் வெகுநேரம் வாக்குவாதம் செய்தனர். ராஜதுரை ஒட்டகத்தின் விலையில் கால் பங்கைக் கனகதுரையிடம் கேட்க, கனகதுரையோ கொடுக்கவே முடியாதென்று எதிர்வாதம் செய்தான்.
ராஜதுரை நீதிபதியிடம் வழக்கை எடுத்துச் சென்றான். நீதிபதியிடம் முறையிட்டான். ''ஐயா! ஒட்டகத்தின் விலையில் நான் முக்கால் பங்கு கொடுத்து இருக்கிறேன். கனகதுரை கால் பங்குதான் கொடுத்தான். ஒட்டகம் இறந்து விட்டதால் எனக்குத்தான் பெரும் நஷ்டம். அதனால் நஷ்டத்தை இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளக் கனகதுரை எனக்கு ஒட்டகத்தின் விலையில் கால் பங்கைக் கொடுக்கும்படி உத்தரவிட வேண்டும்,'' என்றான்.
நீதிபதி கனகதுரையிடம் விசாரித்தார். 'ஐயா! ராஜதுரை ஒட்டகத்தின் விலையில் முக்கால் பங்கு கொடுத்தது உண்மைதான். ஆனால், வரும் லாபத்தில் அவன் முக்கால் பங்கு எடுத்துக் கொண்டு எனக்குக் கால் பங்குதான் கொடுத்து வந்தான். அவன் கேட்பதற்கு நான் ஒத்துக் கொள்ள முடியாது!'' என்றான் கனகதுரை.
இரண்டு பேர்களது வாதங்களையும் கேட்ட நீதிபதி எப்படித் தீர்ப்பு வழங்குவது என்று யோசித்தார்.
கடைசியில், நீங்கள் இருவரும் வியாபாரம் செய்யப் போகும்போது ஒட்டகத்தின் முதுகில் துணி மூட்டையை ஏற்றிச் சென்றீர்களா?" என்று கேட்டார்.
“ஆம், ஐயா!" என்றான் ராஜதுரை.
"வியாபாரம் முடிந்து திரும்பி வரும் பொழுது?''
"துணிகள் எல்லாம் விற்று விட்டதால் ஒட்டகத்தின் மீது சுமையே இல்லை , ஐயா!'' என்றான் கனகதுரை.
"நீங்கள் இருவரும் அதன் மீது உட்கார்ந்து சவாரி செய்து வந்தீர்களா?"
"இல்லை!"
"ஒருவராவது உட்கார்ந்து இருந்தீர்களா?''
"இல்லை ஐயா! இல்லை ...'' என்று ஒரே குரலில் சொன்னார்கள். ராஜதுரையும் கனகதுரையும்.
''அப்படி என்றால் ஒட்டகம் தன் மேலுள்ள சுமையினால் நீரில் மூழ்கி இறக்கவில்லை அல்லவா?"
"ஆமாம், ஐயா!" என்றான் ராஜதுரை.
"தன் உடல் கனம் தாளாமலே அது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கிறது, இல்லையா?''
"ஆமாம், ஐயா!" என்றான் கனகதுரை.
"அப்படி என்றால் இறந்து போன ஒட்டகத்தின் விலையில் முக்கால் பங்கு கொடுத்துள்ளதாகச் சொல்லும் ராஜதுரைக்கு ஒட்டகத்தின் உடல் கனத்தில் முக்கால் பங்கு சொந்தம். ஒட்டகம் இறப்பதற்கு இந்த முக்கால் பங்கு உடல் கனம்தான் காரணம். இவ்வளவு எடை காரணமாக ஒட்டகம் இறந்ததால் கால் பங்கு உடம்பின் சொந்தக்காரரான கலை துரைக்குத்தான் நஷ்டம் அதிகம். அதனால் ராஜது. தான் கனகதுரைக்கு ஒட்டகத்தின் விலையில் கால பங்கு கொடுக்க வேண்டும்!'' என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
அந்தத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு ராஜதுரை ஒட்டகத்தின் கால் பங்கு விலையைக் கனகதுரைக்குக் கொடுத்தான்.