Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

15. அகந்தை அறிவுக்கு எதிரி

நஸ்ருதீன் என்ற மேதை ஒருவர் துருக்கியில் இருந்தார். அவரது பேச்சும், செயலும் வேடிக்கை யாய் இருந்தாலும் அவற்றில் சிறந்த அறிவும் தத்துவமும் இருக்கும்.

ஒரு சமயம் வேற்று நாட்டைச் சேர்ந்த மூன்று பேரறிஞர்கள் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள அறிஞர்களுடன் வாதப்போர் புரிந்து, வெற்றிகள் பல பெற்றபின் துருக்கி நாட்டிற்கு வந்தார்கள். அவர்கள் உண்மையிலேயே திறமையான பேரறிஞர்கள்தான். ஆனால், அந்தத் திறமையே அவர்கள் தலைக் கனத்திற்கு வழி வகுத்தது. இவ்வுலகில், தங்களை அறிவாற்றலால் வெற்றி கொள்ள யாருமே இல்லை என்ற மமதை அவர்கள் மூவரையும் ஆட்டிப் படைத்தது.

அவர்கள் துருக்கி மன்னரிடம் வந்து, “உங்கள் நாட்டின் தலை சிறந்த பேரறிஞருடன் நாங்கள் வாதம் செய்ய வந்திருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்," என்று கூறினார்கள்.

மன்னரும் அதை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் போட்டியிட நஸ்ருதீனை ஏற்பாடு செய்தார்.

அன்று போட்டி நடக்கும் நாள்.

போட்டிக்கென்று அரண்மனை மைதானத்தில் மேடையும், பந்தலும் போட்டு அலங்கரித்தார்கள். போட்டியைக் காண மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தார்கள்.

மன்னரும், முக்கிய அமைச்சர் பிரதானிகளும் தங்களுக்கென்று அமைக்கப்பட்ட இருக்கைகளில் வந்து அமர, அந்த மூன்று பேரறிஞர்களும் விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிந்து, பார்ப்போர் வியக்கும் வண்ணம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்து அமர்ந்தார்கள்.

நஸ்ருதீன் ஆடம்பரத்தை எப்போதும் விரும்பாதவர். என்னதான் மன்னரின் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும், பகட்டான ஆடை, அணிகலன்கள் அணிவதை அவர் அறவே வெறுத்தார். அவர் எப்பொழுதும் எளிமையான பருத்தி ஆடைகளையே அணிவார். அன்றும் மிக எளிமையாகவே வந்து, அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார்.

"அறிஞர்களே! இதோ எங்கள் நாட்டு அறிஞர் நஸ்ருதீன். நீங்கள் கேள்விகள் கேட்கலாம்!'' என்றார் மன்னர்.

கூடியிருந்த மக்கள் அனைவரும் அந்த அறிஞர்கள் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறார்கள் அவற்றிற்கு நஸ்ருதீன் எப்படிப் பதிலளித்துத் தங்கள் நாட்டின் மானத்தைக் காப்பாற்றப் போகிறார் என்பதை அறியும் பொருட்டு, அந்த அறிஞர் களையும், நஸ்ருதீனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முதல் அறிஞர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பார்த்தார்.

"அறிஞரே! உலகத்தின் மைய இடம் எது?" என்று கேட்டார்.

ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை .

"நான் பயணம் செய்து வந்த என் கழுதை இந்த மைதானத்தின் வெளியே நிற்கிறது. அந்த இடம்தான் உலகத்தின் மைய இடம்!'' என்று நஸ்ருதீன் பதில் சொன்னார்.

"அது எப்படி மைய இடமாகும்?" என்று கேட்டார், அதே அறிஞர்.

“வேண்டுமானால் இவ்வுலகத்தை அளந்து பார்த்துக் கொள்ளுங்கள். என் கழுதை நிற்கும் இடம் மைய இடமாக இருப்பது உங்களுக்குத் தெரியும்!'' என்றார் நஸ்ருதீன்.

'உலகத்தை அளந்து பார்க்கவா! இது நடக்கக் கூடிய காரியமா? ஆசாமி எமகாதகராக இருக்கிறாரே. மிகப்பெரியபேரறிஞராகிய என்னையே அடுத்துப் பேச முடியாது வாய் மூடச் செய்து விட்டாரே!' என்று நினைத்துக் கொண்டார்.

முதலாவது அறிஞர் தோற்று விட்டதை அறிந்த இரண்டாவது அறிஞர், சற்று உஷாராகி, இந்த முறை நஸ்ருதீனை மடக்கிவிட வேண்டும் என்று நினைத்து, "வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை?" என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லப் போகிறார் என்பதை அறிய மக்களும், மன்னரும், அமைச்சர் பிரதானிகளும் நஸ்ருதீனையே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங்கினர்.

அந்த அறிஞரை மிகவும் அலட்சியமாகப் பார்த்து, "என் கழுதையின் உடம்பில் எத்தனை உரோமங்கள் உள்ளதோ, அத்தனை நட்சத்திரங்கள்தான் வானத்தில் உள்ளன!" என்றார் நஸ்ருதீன்.

''உங்கள் கழுதையின் உடம்பில் எத்தனை ரோமங்கள் உள்ளன?" என்று கேட்டார் அதே அறிஞர்.

''நான் சொல்லுவது நம்பகமாக இருக்காது. இத்தனை பேர் முன்னிலையில் நீங்களே எண்ணிப் பாருங்கள். அத்தனை நட்சத்திரங்கள் வானத்தில் உள்ளன என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!'' என்றார் நஸ்ருதீன்.

'கழுதையின் ரோமங்களை எண்ணுவதாவது. ஆசாமி அடுத்துப் பேச விடாதவாறு மிகவும் சாதுர்யமாகப் பதில் சொல்லி மடக்கி விடுகிறாரே, நம் திறமை எல்லாம் பிசுபிசுத்துப் போகிறதே!' என்று நினைத்து மவுனமானார் இரண்டாவது அறிஞர்.

நஸ்ருதீன், இரண்டு அறிஞர்களையும் வென்று விட்டதால், மக்கள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

மூன்றாவது அறிஞர் நிறையவே ஆடிப் போயி ருந்தார். தயாரித்து வைத்திருந்த கேள்விகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டுப் புதிதாக யோசித்தார்.

ஒரு புதிய கேள்வி அவருக்குப் 'பளிச்' சென்று தோன்றியது.

'அசைக்க முடியாதது எது?'' என்று கேட்டார் அவர். 'நம்பிக்கை!' என்று பளிச்சென்று பதில் சொன்னார் நஸ்ருதீன்.

மூன்றாவது அறிஞரும் தோல்வியுற்றுத் தலையைக் கவிழ்த்திக் கொள்ள, மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

துருக்கி நாட்டின் மானத்தைக் காப்பாற்றியதற்காக மன்னர், நஸ்ருதீனை ஆரத் தழுவி வாழ்த்தினார். ஏராளமான பொன்னும், பொருளும் அவருக்குப் பரிசளித்தார்.

என்னதான் அறிவும், திறமையும் இருந்தாலும், 'கான்' என்ற அகந்தை கொண்டோமானால், அந்த மூன்று அறிஞர்களுக்கு ஏற்பட்ட அவமானமே நமக்கும் ஏற்படும். இருக்கும் அறிவை முறையாகப் பயன்படுத்தினால், நம் வாழ்வு சிறக்கும். இந்த அறிவுரையைத் தவறாது கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழ்வில் வெற்றியையே என்றும் சந்திக்கலாம்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.