Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

16. உழைப்பின் பயனை உரிய நேரத்தில் அனுபவிக்க வேண்டும்!

பெருங்குடியூர் கிராமத்துப் பண்ணையார் வழக்கம் போலத் தானிய வசூலுக்குக் கிளம்பினார். விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை அவர் விலை பேசி அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்.

அந்த ஊருக்குப் புதிதாக வந்துள்ள கிராம சேவகருக்குப் பண்ணையாரின் செய்கைகள் புதுமையாகத் தெரிந்தன. பண்ணையார் என்பவர் ஊரில் உள்ள ஏழைகளுக்குப் படி அளப்பவராக இருக்க வேண்டுமே தவிர, ஊராரிடம் இருந்து வசூல் செயபவராக இருப்பது அவருக்குச் சரியெனப் படவில்லை .

அந்த ஊர்ப் பள்ளி ஆசிரியரை அழைத்து, “நம்ம ஊர்ப் பண்ணையார் பேராசை பிடித்தவராக இருக்கிறாரே! ஊர் ஜனங்கள் ஆறு மாத காலமாகப் பாடுபட்டுப் பயிரை விளைவித்து அறுவடை செய்த தானியங்களைச் சந்தைக்குக் கொண்டு போய் விற்றால் நல்ல லாபம் வரும். அதைத் தடுத்து இவர் இங்கேயே பேரம் கூடப் பண்ணாமல் ஒரு விலையை நிர்ணயம் செய்து கொடுத்து வாங்கிச் சென்று பதுக்கி வைத்துக் கொள்கிறாரே. இது எவ்வளவு பெரிய துரோகம் என்று உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர் சொன்ன பதில், "எல்லாம் போகப் போகப் புரியும்' என்பதுதான்.

கிராம சேவகர் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ளவர்களிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார். எல்லாரிடமிருந்தும் ஒரே பதில்தான் வந்தது. அது-

"எல்லாம் போகப் போகப் புரியும்!''

கிராம சேவகர் மேலும் பலரை விசாரித்தார். அவர்களிடமிருந்தும் இதே பதில்தான் வந்தது.

கிராம சேவகருக்கு எல்லாரும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்வதைக் கேட்கக் கேட்க, 'அது என்ன போகப் போகத் தெரியும்?' என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

மழைக் காலம் வந்தது. ஆனால், மழை வரவில்லை. கிராமத்து ஜனங்களெல்லாம் மழை வர வேண்டிக் கோயிலில் பிரார்த்தனை நடத்தினார்கள். அதில் பண்ணையாரும் கலந்து கொண்டார்.

காளிக்குக் காவு கொடுத்தார்கள்; குண்டம் மிதித்தார்கள்; வருண பகவானுக்குப் பொங்கல் வைத்தார்கள்.

அப்போதும் வானம் வீம்பு செய்தது. அது தன் கண்களைத் திறந்து கண்ணீரை வடிக்க மறுத்தது.

கிராமத்து ஜனங்கள் மழையின்மையால் பயிர்கள் வளராமல் பஞ்சத்திற்கு ஆளானார்கள்.

கிராம சேவகர் அவர்களது நிலையைப் பார்த்து இரக்கப்பட்டாரே தவிர அவரால் எந்தவிதத்திலும் உதவ முடியவில்லை. இந்த நிலையில், தண்டோரா முழக்கம் கேட்டது. கிராம சேவகர் உட்பட ஊர் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.

"இதனால் பெருங்குடியூர்ப் பொதுமக்களுக்குப் பண்ணையார் அறிவிப்பதாவது; 'மழை பெய்யாமல், பயிர் பச்சை விளையாமல் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பண்ணையார் தலா ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை நெல் வீதம் அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க உள்ளார். நாளை காலை எட்டு மணிக்கு அனைவரும் சென்று நெல் மூட்டையைப் பெற்றுக் கொள்ளும்படி இதனால் சகலமானவர் களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறார்!  டும்...டும்...டும்...."

கிராம சேவகருக்கு உடனே பண்ணையாரை நேரில் பார்த்துச் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியது. நேராகப் பண்ணையார் வீட்டிற்குச் சென்றார்.

பண்ணையார் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார்.

"கிராம சேவகரே! எங்கே இவ்வளவு தூரம்... உட்காருங்க!'' என்று நாற்காலியை இழுத்துப் போட்டார்.

கிராம சேவகர் அதில் அமர்ந்த பிறகு கேட்டார். ""ஐயா! நீங்கள் கிராம விவசாயிகளிடம் தானியங் களை விலைக்கு வாங்கியபோது அவர்கள் அதைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்றால் அதிகப் பணம் கிடைக்குமே! அதை இவர் வாங்கி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிகப் பணத்தை நஷ்டப்படுத்துகிறாரே என நான் எண்ணியதுண்டு. இதைப் பற்றிப் பல பேரைக் கேட்டபோது அனைவருமே சொல்லி வைத்த மாதிரி, 'எல்லாம் போகப் போகத் தெரியும்!' என்றார்கள். எனக்கு அது விளங்கவில்லை. நேற்றுத் தண்டோராவைக் கேட்டதும் புரிந்து கொண்டேன். உங்களைத் தவறாக நினைத்ததிற்கு உங்களிடம் மன்னிப்புக் கேட்கவே இன்று உங்களிடம் வந்தேன். கிராமத்தில் உண்மை யான சேவகன் நான் அல்ல, நீங்கள் தானய்யா!" என்றார்.

பண்ணையார் மீசையிலிருந்து கை எடுத்தபடியே சொன்னார், "கிராம சேவகரே! விவசாயிகள் களத்திலிருந்து தானியங்களைக் கொண்டு போய் விற்றால் வண்டிக் கூலி ஆகும். லாபம் வரும் என நிச்சயம் சொல்வதற்கில்லை. அந்தத் தானியத்தை அறுவடை செய்த அடுத்த நிமிடமே அன்றைய மார்க்கெட் நிலவர நிலையில் வாங்கி நான் சேமித்து வைப்பது, நம்ம கிராம மக்களின் உழைப்பின் பயனை, உரிய நேரத்தில் அவர்களே அனுபவிக்க வேண்டும் என்பதற்குத்தான். தானம் செய்வது கூடக் காலம் அறிந்து தக்க சமயத்தில் உதவினால் அதன் பலன் வேறு. தாகத்திற்குச் சோடா வாங்கித் தருவதற்கும், காரில் அடிபட்டு உயிருக்குப் போராடும் ஒருவனுக்குச் சோடா வாங்கித் தருவதற்கும் உள்ள வித்தியாசம்தான் இது!'' என்றார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.